இந்தியப் பயணம் 18 – சாரநாத்

காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி காசியை நீங்கினோம். கங்கைமீது பாலத்தில் செல்லும்போது காசியின் பிறைவடிவ படித்துறைகளை உயரமான பாலத்தில் இருந்து கொண்டு பார்த்தோம். அவ்வேளையில் அங்கே நீத்தார்கடன்செய்யும் மக்கள் திரள் கரையிலிருந்து கங்கைக்கு வெள்ளம் போல இறங்க காசியே பெரிய தேனீக்கூடு போல முழங்கிக் கொண்டிருந்தது.

சாரநாத் செல்லும் பாதையிலேயே ஒரு புராதனமான ஸ்தூபியின் இடிந்த எச்சம் உள்ளது. அதுவே பத்தாள் உயரத்தில் செங்கல்லால் ஆன விசித்திரமான கட்டிடம்போல சாலையோரம் எழுந்து நின்றது. அருகே குடிசைக்கடைகள் சில இருந்தன. அசோகர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி அது.

சாரநாத் வளாகத்தை பத்து மணிக்கு அடைந்தோம். சிற்றுண்டியை அங்கேயே வைத்துக் கொண்டோம். இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கொரியா, தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த சில பிட்சுகளும் கண்ணில் பட்டனர். நம் மனதில் பிட்சு என்று இருக்கும் சித்திரம், காவி உடை , மொட்டை, கமண்டலம் ஆகியவற்றுடன் தெளிந்த கண்களும் வெண்ணிற்மான வட்ட வடிவ முகமும் அந்த மங்கோலிய முகமுள்ள பிட்சுக்களுக்கே பொருந்திச்செல்கிறது. சில கரிய பிட்சுக்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வந்திருந்தார்கள், ஆனால் மனம் அவர்களை ஏற்க மறுக்கிறது. காரணம் ஏராளமான புகைப்படங்கள் வழியாக நெடுங்காலம் முன்பே நம் மனம் பழகிவிட்டிருப்பதுதான். பல பிட்சுக்களுக்கு இருபதுகளுக்குள்தான் பிராயம் இருக்கும். இளமையானது பிட்சு உடைக்கு மிகவும் பொருந்திச் செல்கிறது.

சாரநாத் புத்தருக்கு முந்நூறு வருடம் முன்னரே– அதாவது கிமு அறுநூறிலேயே  — முக்கியமான ஞான மையமாக இருந்திருக்கிறது. சமணர்களின் தலைமையகம் அது. சமண தீர்த்தங்காரர்களில் மூவர் அங்கே இருந்திருக்கிறார்கள். ஞானம் தேடி அரசும் குடியும் குடும்பமும் துறந்து சித்தார்த்தன் அங்குதான் வந்தார். சமணர்களில் ஒருவராக அமர்ந்து ஊழ்கம் பயின்றார். பின்னர் அவர்களின் அதி உக்கிர தவத்தால் உடல்தான் நலிகிறது மனம் கூடவே நலிவடைகிறது என்று கண்டு அவர்களை விட்டு நீங்கினார். கயாவுக்குச் சென்று போதியின் அடியில் அமர்ந்து தவம்செய்து ஞானம் பெற்று புத்தராக ஆனபின்னர்  அவர் திரும்பி வந்தார். சாரநாத் வந்து அங்கிருந்த சமணர்களை தன் ஞானத்தால் வென்று பௌத்தர்களாக ஆக்கினார். கொண்டணா,வேபா,பத்தியர், மகாநாமர், அஸாஜி
ஆகியோர் முதல் சீடர்கள்.  ஆஷாட மாசம் முழுநிலவுநாளில் புத்தர் வந்தார் என்று ஐதீகம்.

அந்த வெற்றிதான் பௌத்த மதத்தின் முதல் பெரும் நிகழ்வு. சாரநாத் என்ற பெரும் கல்விமையம் பௌத்த ஞானத்துக்கு வந்தபோது அங்கிருந்து நான்குபக்கமும் புத்த பிட்சுக்கள் கிளம்பிச்சென்று கீழை உலகையே பௌத்தமயமாக்கினார்கள். சாரநாத் அதன்பின் ஐந்து நூற்றாண்டுக்காலம் பௌத்த ஞானத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது.  அசோகர் காலம் முதல் அது ஒரு பல்கலைகழகமாக வளர்ச்சி பெற்றது. இதற்கு ‘மிருகதயா நகர்’ என்ற பெயர் இருந்திருக்கிறது. காரணம் இங்கே மான்கள் பேணப்பட்டிருக்கின்றன. இசிபட்னா அல்லது ரிஷிபட்டினம் என்றும் பெயர் உண்டு.

புத்தரின் வெற்றியை நினைவுகூரும்வகையில் அமைக்கப்பட்டது அங்குள்ள ஸ்தூபி.  அசோகர் கால ஸ்தூபியை உள்ளடக்கி குப்தர் காலத்தில் அடுத்த ஸ்தூபி அமைக்கபப்ட்டது. புத்தர் தன் முதல் சீடர்களை அடைந்த இடமாதலாலும் தன் ஞானத்தை விளக்கிப் பேருரை ஆற்றிய இடம் என்பதனாலும் இங்குதான் பௌத்தமதம் பிறவிகொண்டது என்று நம்பப்படுகிறது. இதை தர்ம சக்கர பிரவர்த்தனம் — அறவாழிச் செயல் தொடக்கம்– என்று பௌத்த மெய்ஞான மரபு சொல்கிறது. இடக்கையால் சின் முத்திரை [தர்ம சக்கரத்தின் சின்னம்] காட்டி வலக்கையால் அதைச் சுட்டிக்காட்டி புத்தர் அமர்ந்திருக்கும் காட்சி இதைச் சுட்டுகிறது. 36 ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரம் பௌத்த மெய்ஞானத்தின் குறியீடு.

சாரநாத் இன்று பெரும்பாலும் இடிபாடுகளின் பரப்பு. தொடர்ச்சியான அகழ்வாய்வுகளும் பராமரிப்புகளும் இங்கே நடந்து வருகின்றன. ஆகவே அழகிய புல்வெளி நடுவே தொல் எச்சங்கள் சிறப்பாக பேணப்பட்டிருக்கின்றன. சாரநாத் பல்கலையில் வாழ்ந்த பௌத்த ஞானிகளின் உடல்கள் மேல் எழுப்பப்பட்ட சிறிய ஸ்தூபிகளின் சுட்ட செங்கல்லால் ஆன அடித்தளங்கள் வரிசையாக நிறைந்திருக்கின்றன. பெரிய விஹாரங்களின்  செங்கல் அடித்தளங்கள் வெயிலில் சிவந்து விரிந்து கிடந்தன. உண்மையில் இவை பிட்சுக்களின் உடல்கள் அடக்கம்செய்யபப்ட்ட இடங்களா என்பது ஐயத்துக்குரியது. காரணம் எங்கும் எலும்புகள் அகழ்வாய்வுகளில் கிடைக்கவில்லை. முன்னோடி ஆய்வாளர்களான அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்களின் ஊகம் மட்டுமே அது.

சாரநாத் ஸ்தூபி இப்போது ஸ்தூபி வடிவில் இல்லை. அதன் வட்டமான மாபெரும் கருங்கல் அடித்தளம்  மட்டும் முழுமையாக உள்ளது. அதில் சிறிய அளவில் அலங்கார வேலைப்பாடுகளும் புத்தர் சிலைகளும் உள்ளன. அதன் மேலே  இருந்த ஸ்தூபி செங்கல்லால் அரைக்கோள வடிவில் கட்டப்பட்டு அதன்மேல் சுதைப்பூச்சு கொடுக்கப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். இப்போது உடைந்த செங்கல் கட்டுமானத்தின் எஞ்சிய வடிவமற்ற அமைப்பு மட்டும்  பத்தாள் உயரத்துக்கு எழுந்து நிற்கிறது.

150 அடி உயரமுள்ள சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இங்கே விரிவான தொல்லியலாய்வுகளைச் செய்திருக்கிறார். ஸ்தூபிக்குள் மேலே ஒரு ஓட்டை போட்டு உள்ளே இறங்கி  நூறு அடிவரை உள்ளே சென்று ஆராய்ந்திருக்கிறார். பச்சை சலவைக்கல்லால் ஆன ஒரு பெட்டி கிடைத்திருக்கிறது. அதில் வழிபாட்டுக்குரிய புத்தர் சிலைகளும் பிராமி மொழியில் அமைந்த சில குறிப்புகள் கொண்ட சிலைகளும் கிடைத்திருக்கின்றன. எலும்புகள் ஏதும் இல்லை. உள்ளே அசோகர் காலத்து ஸ்தூபி இருக்கிறதை கன்னிங்ஹாம் கண்டுபிடித்தாராம்.

டெல்லி சுல்தான்களின் காலத்தில் சாரநாத் அழிக்கப்பட்டது. நெடுநாட்கள் இடிபாட்டுகள் காட்டுக்குள் கிடந்தன. பின்னர் அவ்விடிபாடுகளை உள்ளூர் ஆட்கள் தரமான செங்கல்லுக்காக நெடுநாள் கொண்டு சென்றிருக்கிறார்கள். 1794ல் காசி மன்னர் செட் சிங்கின் அமைச்சரான ஜெகத் சிங் என்பவர் சாரநாத் ஸ்தூபியை மேலிருந்து இடித்து செங்கல் எடுத்து கொண்டுசென்றார்.  சாரநாத்தின் கணிசமான பகுதி இவ்வாறு இல்லாமலானது.

சாரநாத் இன்று வெறும் செங்கல் மிச்சங்கள் மட்டுமே. ஆனாலும் வரலாற்றை அறிந்த ஒருவருக்கு அது அளிக்கும் மன எழுச்சி அற்புதமானது. மானுட ஞானத்தின் ஒரு மகத்தான கொந்தளிப்பின் செங்கல் தடையம் அது. நம்பிக்கைகளில் இருந்து நுண் ஞானம் நோக்கி மானுடப்பிரக்ஞ்ஞை பாய்ந்துசென்றது பௌத்தம் வழியாகவே. அதன் பின் உலகில் உருவான எல்லா மெய்ஞானமும் பௌத்தத்தில் இருந்து வேர் சத்து பெற்றுக் கொண்டவையே.

அசோகர் சாரநாத்தில் எழுப்பிய வெற்றித்தூண்  இடிந்து பல துண்டுகளாக கிடந்திருக்கிறது. அதை ஒரு சிறு மண்டபத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  அதில் பிராமி லிபிகளில் அசோகரின் செய்தி இருக்கிறது. அந்த தூணின் உச்சியில்தான் நமது தேசிய அடையாளமான நான்குசிங்கங்களும் சக்கரமும் கொண்ட சின்னம் இருந்தது.

சாரநாத் அருங்காட்சியகத்தில் அசோகரின் அந்தச் சின்னம் அதிக சேதம் இல்லாமல் வைக்கப்பட்டிருக்கிறது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட அருங்காட்சியகம் அது. முகப்பிலேயே நல்ல ஒளியமைப்பில் அச்சின்னம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மென்மையான தவிட்டு நிறம் கொண்ட ஒருவகை சலவைக்கல்லில் மழமழவென்று செதுக்கப்பட்ட நான்கு சிங்கங்கள். மேலே பீடம். கீழே 36 ஆரங்களுடன் தர்ம சக்கரம் [நமது தேசிய சின்னம் 24 ஆரம் கொண்டது]

தர்ம சக்கரம் அறத்தின் சுழற்சியை, பௌத்த்த ஞானம் உருளத்தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கிறது. நான்கு சிங்கங்களும் புத்தரையே குறிக்கின்றன. புத்தர் சாக்கிய சிங்கம் என்று சொல்வது பௌத்த மரபு. நான்கு பக்கமும் சாக்கியசிங்கம் கிளம்புவதையே அச்சிலை குறிப்பிடுகிறது. நம் தேசியக்குறியீடாக அமைவதற்கு முற்றிலும் தகுதி கொண்ட ஒரு மகத்தான சிலை அது. அதை தேர்வுசெய்ததில் நேருவுக்கு பெரும் பங்குண்டு என்பார்கள். அவரது இந்திய தரிசனத்தின் ஆழத்தை அது காட்டுகிறது. ஒரு சிக்கலான காலகட்டத்தில் மதவெறியால் பீடிக்கப்படாத நேரு நம் தேசத்தை வழிநடத்தியது நமது நல்லுழ் என்றே சொல்லவேண்டும்.

சாரநாத் அருங்காட்சியகம் மிக முக்கியமான ஒரு சேகரிப்பு. இங்குள்ள அரிய புத்தர் சிலைகளை விரிவாகவே ஆராய வேண்டும். புத்தர் அவலோகிதர், மைத்ரேயர் போன்ற அபூர்வ தோற்றங்களில் வடிக்கப்பட்டிருக்கிறார். தாராதேவி [பிஞ்ஞாதாரா] யின் பல சிலைகள் நுட்பமான அழகுகொண்டவை.

மதியம் பிகார் வழியாக கயா நோக்கிக் கிளம்பினோம். மத்தியப்பிரதேசம் வரை எங்களை மழை சூழ்ந்து வந்திருந்தது. இப்போது உக்கிரமான வெயில். இத்தனைக்கும் அப்போதும் பிகாரின் வடகிழக்கில் பெருவெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கிக் கிடந்தன. ஒப்புநோக்க மத்தியப்பிரதேசத்தை விட உத்தரப்பிரதேசமும், பிகாரும் சாலைவசதியில் மேம்பட்டவை. ஆனால் தங்கநாற்கரச்சாலை பல இடங்களில் பணிமுடியாமல் அப்படியே கைவிடப்பட்டிருந்தமையால்  அங்கெல்லாம் சேறும் குழியும் நிறைந்த சாலைகளில் இறங்கி தத்தளித்துத்தான் செல்லவேண்டியிருந்தது. வாஜ்பாய் தொடங்கிவைத்து அதிவேகமாக நகர்ந்த தங்கநாற்கர திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் உதாசீனப்படுத்த்ப்பட்டு பெரும்பாலும் முக்கால் கட்டுமானம் என்ற அளவிலேயே தேசம் முழுக்க நின்றுவிட்டிருக்கிறது.

பிகார் நாங்கள் பார்த்தவரை வரட்சியாக இல்லை. எங்கும் நெல் வயல்கள் பச்சைக்கடல்போல பரவிக்கிடந்தன. கண் எட்டும் தொலைவெல்லாம் விளைநிலங்கள். பத்து கிலோமீட்டருக்கு ஒரு முறை சாலையை வெட்டிச்செல்லும் நீர் சுழித்தோடும் ஆறுகள். ஆனால் வாழ்க்கைமுறை வருத்தமளிப்பதாகவே இருக்கிறது. வீடுகள் எந்தவிதமான தேர்ச்சியுமில்லாமல் கட்டப்பட்ட குடில்கள்தான். கூரைகளைப் பார்த்தால் அவை எப்படி மழைக்குத்தாங்கும் என்ற அச்சமே ஏற்படுகிறது. சிக்கு பிடித்த தலையும் அழுக்குடையும் பீதியுள்ள நோக்குமாக பஞ்சை மக்கள். இந்த முரண்பாடு  இப்பகுதி முழுக்க நம் மனதை உறுத்துகிறது

பிகாரில் ஒரு கிராமச்சாலையில் கள் விற்க்கப்படுவதை செந்தில் பார்த்தார். நிறுத்திவிட்டு உள்ளே சென்றொம். ஏற்கனவே நான்குபேர் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தர்கள். எங்களுக்கும் சாக்கு விரித்து அமரச்சொல்லி உபச்சாரம்செய்தார்கள். செந்திலும் வசந்த குமாரும் மர்ந்து கொண்டார்கள். பனையேறி குடிசைக்குள் சென்று கள் கொண்டுவந்தார். நல்ல கள். ஆனால் சற்று நீர் கலந்து கொடுத்துவிட்டார்.
குடித்துவிட்டு வரும் வழியில் அந்தக் குடிசைகளை பார்த்தோம். குனிந்துதான் உள்ளே நிற்க முடியும். தொட்டிலில் குழந்தை தூங்கியது. தரை சொதசொதவென சேறு குழம்பிக்கிடந்தது. சுடிதார் அணிந்த ஒரு பெண் எங்களை பார்த்தாள். அழகிய பெண். அருகே ஒரு அழகிய குழந்தை. மண்சட்டிகள் கூட குடிசைக்குள் மிகவும் குறைவாகவே இருந்தன.

பிகாரை நெருங்கியபோது ஆயுதமேந்திய கொள்ளை பற்றி கடைகளில் சில குறிப்புகள் அளித்தார்கள். நாங்கள் சீக்கிரமே அப்பகுதியை கடந்துவிடுவோம் என்பதனால் பொருட்படுத்தவில்லை. சாலையில் லாரிகள் கூட்டம் கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தன. பிகாரை நெருங்கியதுமே எங்களுக்கு ஓர் அனுபவம். நன்றாக சாலையோரத்தில் கட்டிடம்போல கட்டி செக்போஸ்ட் அமைத்து தனியார் தண்டல் வசூலித்தார்கள். ஏதோ கோயிலுக்கான நிதிவசூல் என்று ரசீது கொடுத்தார்கள். செந்தில் என்ன அடிப்படையில் வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டபோது உள்ளூர் கௌரவ மஜிஸ்டிரேட்டின் அனுமதி இருப்பதாகச் சொன்னார்கள். கூட்டமாக வரும் லாரிக்காரர்கள் அவர்களை பொருட்படுத்துவதில்லை. கார்கள்தான் இலக்கு. அந்த ஊர் தலைவருக்கான கப்பமாம். அப்படி கயா வரை  மூன்று இடங்களில் வசூல் நடந்தது!

கயாவை இரவு நெருங்கினோம். சாலை ஓரமாக ஒரு லாரி நான்கு ஆள் உயரத்துக்கு செந்தழல் விட்டு எரிந்துகொண்டிருந்தது. என்ன ஆயிற்று என்றால் யாருக்கும் தெரியவில்லை. உள்ளே ஆள் இருந்தார்களா என்றால் இருந்திருக்கலாம் என்றார்கள். சரக்குடன் அப்படியே எரிய ஆரம்பித்திருக்கிறது. இத்தனைக்கும் டோல்கேட் அருகே. ஆனால் யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. சற்று நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு நாங்களும் கிளம்பிவிட்டோம்.

இரவு எட்டு மணிக்கு புத்த கயாவை அடைந்தோம். புத்தகயாவுக்கு அது சீசன் அல்ல. ஆகவே கூட்டம் ஏதும் இல்லை. விடுதிகள் காலியகாவே கிடந்தன. வழகம்போல சிவா செந்தில் தலைமையில் பேரம்பேசும் படை புறப்பட்டு சென்றது. ஒருவிடுதியில் முந்நூறு ரூபாய்வீதம் வாடகையில் இரண்டு இரட்டை அறைகள். கிருஷ்ணனும் கல்பற்றா நாராயணனும் வேறு திசையில் சென்று இன்னொரு ஓட்டலில் எழுநூறு ரூபாய்செலவில் உயர்தரமான இரு  அறைகளை பார்த்து வந்தார்கள். ஆனால் உபரி ஆள் தங்க தலைக்கு நூறு ரூபாய் கேட்டான். ஆகவே இங்கேயே தங்கிவிட்டோம்.

ஓட்டலுக்கு பக்கவாட்டில் ஒரு சாலையோர உணவகம். அங்கே சாப்பிடலாமென விடுதிப்பையன் சொன்னான். தார்ப்பாயை கூரைபோட்டு உருவாக்கப்பட்ட அந்தக் கடையில் சூடாக சப்பாத்தியும் டாலும் செய்து தந்தார்கள். பிகாரின் மிகச்சிறந்த உணவு அது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஓட்டலில் இருந்த பையன் நன்றாக ஆங்கிலம் பேசினான். பட்டப்படிப்பு முதல்வௌடம் படிக்கிறான், பெயர் அருண்குமார். அவனது பெற்றோர்தான் ஓட்டலை நடத்துகிறார்கள். அவன் இரவு 12 மணிவரை அங்கே வேலைசெய்துவிட்டு கல்லூரி செல்கிறான்.

இத்தனை ஆச்சரியம் என்னவென்றால் மத்தியப்பிரதேசம், உத்தரபிரதேசம் , பிகார் எங்குமே  ஆங்கில ஞானமே கிடையாது என்பதே. இதை ச் சொல்லி புரிய வைப்பது கஷ்டம். தமிழ்நாட்டில் குப்பை பொறுக்கும் சிறுவன் ஒருவனுக்குத் தெரிந்த ஆங்கிலம் கூட வடக்கே சட்டை பாண்ட் போட்டு பைக்கில் வரும் ஒருவருக்கு தெரியாது. ஃபுட், ஸ்டே போன்ற அடிப்படை ஒற்றைச் சொற்கள்கூட அவர்களுக்கு பழக்கம் இல்லை. அது கூட தெரியாமலிருக்காது என்றும் அவர்கள் பிடிவாதமாக இந்திபேசுகிறார்கள் என்றும் நமக்கு தோன்றும். ஆனால் நாம் கேடதும் அவர்கள் கண்களில் வரும் தவிப்பைக் கண்டால் உண்மை புரியும். பெரிய விடுதிகளில் வரவேற்பறையில் இருப்பவர்கள் கூட ஆங்கிலம் அறியாதவர்கள். கயாவிலேயே அருண்குமாரைதவிர  ஆங்கிலம் அறிந்த எவரையுமே நாங்கள் காணவில்லை.

”பார்த்து செந்தில், அருண்குமார் சீக்கிரமே ஐ ஏ எஸ் தேறி தமிழ்நாட்டு கேடருக்கு வந்துசேர்வார்” என்றார் கிருஷ்ணன். ”அப்டி பலபேர் இருக்காங்க” என்றார் செந்தில். அருண்குமாரிடம் பேசி விடைபெற்று விடுதிக்குச் சென்றோம். ஆங்கிலம் பற்றி பேசிக்கொண்டோம். உண்மையில் ஒப்புநோக்க ராஜஸ்தான் மட்டுமே தமிழகம் கர்நாடகம் ஆந்திராவைவிட வரண்ட வடமாநிலம். மற்ற எல்லா மாநிலங்களும் நம்மைவிட நீர்வளம் கொண்டவையே. ஆனாலும் நாம் அவர்களை விட பல மடங்கு பொருளியல்மேம்பாடும் வாழ்க்கைமேம்பாடும் கொண்டவர்களாக இருக்கிறோம். காரணம் ஆங்கிலமே.

இந்த வடமாநிலங்களில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் அலைகிறார்கள். அதேசமயம் லட்சக்கணக்காக தமிழர்கள் வந்து இங்கே தங்கி சம்பாதித்து ஊர்க்கு அனுப்புகிறார்கள். ஆங்கிலக்கல்வி அளிக்கும் மேலாதிக்கம் மட்டுமே அதற்குக் காரணம். இந்தி படித்தால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் என்று ஒரு தரப்பு தமிழ்நாட்டில் சொல்கிறது. அதைவிட அபத்தம் வேறில்லை. அதிகபட்சம் மூன்றுமாதத்தில் இந்தியை படிக்க முடியும். ஆங்கிலம் நமக்கு அளிக்கும் ஞானம் என்பது மொழி ஞானம் மட்டும் அல்ல. அது இன்றைய பொருளியல் உலகத்தின் மந்திரத்திறவுகோல். நமது கல்வியின் நோக்கம் பொருளியல் மேம்பாடு என்றால் அது ஆங்கிலத்தில் இருப்பதே சிறந்தது.

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 17 – வாரணாசி
அடுத்த கட்டுரைநெய்தல் விருது