வெண்முரசு ஒரு வாசகர்கடிதம்

அன்புள்ள ஜெ,

விமர்சனங்கள் உங்களுக்குப் புதிதல்ல. ஒருவிதத்தில் இந்த வெட்டி விமர்சனங்கள் வழியாக சில நல்ல வாசகர்கள் கூட வரலாம்.

ஆனால் இம்முறை விமர்சனம் என்ற பெயரில் வாசகர்களாகிய எங்கள் மேல் அந்த மேலான விமர்சகர்களின் எரிச்சல் உமிழப்பட்டிருக்கிறது. ஏன் என்று யோசித்தால், இன்று தமிழில் யாருக்கும் இவ்வளவு நுணுக்கமான வாசிப்பை நல்கும், படைப்பை ஓர் கூட்டு வாசிப்புக்குட்படுத்தும் பரந்து பட்ட வாசகர்கள் கிடையாது. நானும் அவர்களின் தளங்கள், முக நூல் பக்கங்கள் போன்றவற்றைப் பார்த்திருக்கிறேன் (ஒரு இரண்டு மாதங்கள் முன்பு வரை). பெரும்பாலும் அவர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்ளாதவர்களின் வெட்டி வாதங்கள். அல்லது அவரது கருத்து, கவிதை அல்லது கட்டுரை தான் தமிழுலகத்தையே புரட்டிப் போடப் போகும் புதுமைப் புரட்சிக்கு வித்து என்ற விதமான விதந்தோதும் பின்னூட்டங்கள். அப்படிப் பட்டவர்கள் நிச்சயமாக எங்களையும் அப்படி நினைப்பதில் ஒன்றும் வியப்பில்லை. உங்களையே வாசிக்காதவர்கள் நாங்கள் எழுதிய கடிதங்களையா வாசிக்கப் போகிறார்கள்? அப்படியே வாசித்தாலும் அதை ‘கலாய்க்கும்’ விதமாக ஓர் நிலைத்தகவலைப் பதிவதோடு ‘like’ வேட்டைக்கு சென்று விடுவார்கள்.

நான் வேலை பார்க்கும் இடத்தில், வெண்முரசை ஒருவர் கூட வாசித்ததில்லை. நான் சற்று நுண்ணுனர்வுள்ளவர்கள் என்று நம்பியவர்கள் கூட அதைப் பற்றி இந்த விழா நடைபெறும் வரை கேள்வியே படவில்லை. என்னிடம் ஒருவர் வந்து (நான் தமிழ் வலைத் தளங்களைப் பார்வையிடுவதைப் பார்த்து விட்டு) ஜெயமோகன் மகாபாரதம் எழுதுகிறார் தெரியுமா என்று கேட்டார். நான் நீங்கள் படிக்கிறீர்களா என்று கேட்டதற்கு நேரம் இல்லை அதை பொறுமையாக படிக்க வேண்டும் என்று பதிலிறுத்தார். இத்தனைக்கும் நான் அப்போது பிரயாகை தான் படித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கெல்லாம் தனக்கு இந்த தகவல்கள் தெரியும் என்ற நினைப்போடு திருப்தி அடைவது மட்டும் தான் குறிக்கோள். பின்னர் நான் அதைப் படிக்கிறேன் என்று தெரிந்ததும், ‘என்ன உங்க project ல வேலையே இல்ல போல, இதுக்கெல்லாம் நேரம் இருக்கு’ என்று ஓர் நக்கலான பதில்.

1. இவர்களுக்கு முதலில் படிக்க பொறுமை இல்லை.

2. அப்படியே படிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு தமிழ் அவ்வளவாக படிக்க வருவதில்லை

3. அப்படியே தமிழ் படிப்பவர்களும் முக நூல் மொழியைத் தாண்டி போக தயங்குவர்.

4. அதையும் தாண்டி தான் கொஞ்சம் படிப்பவர்கள். இங்கே சுஜாதா தான் தல. (அவரும் ஒப்பு நோக்க ஒரு குறுகிய வட்டத்தில் தான் இருக்கிறார்). இந்த நான்காவது நிலையை அடைந்தவர்கள் குண்டலினியை கையால் தொட்டு தூக்கிய பரவசத்தோடும், ஓர் கீழ் நோக்குப் பார்வையோடும் தான் வருவார்கள். அவர்கள் தான் என்னைப் போன்றவர்களைப் பார்த்து நக்கலடிப்பது.

பெரும்பாலானவர்கள் செறிவான எழுத்தை கடந்து போகவே விரும்புகிறார்கள். ஒன்று வடிவேல் பாணி நக்கல் மூலம். அல்லது அதை ஓர் உன்னதமான ஒன்றாக்கி வழிபடுவதன் மூலம்.

இந்நிலையில் தான் உங்களின் தளங்கள் தரும் கூட்டு வாசிப்பிற்கான வாய்ப்புகள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதன் மதிப்பை உணர்ந்தவர்கள் தங்களை ஓர் குருவின் இடத்தில் வைத்திருப்பது இயல்பான ஒன்று தானே.

எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் வெண்முரசு பலருக்கும் சென்று சேர வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால் தான் முழுக்க முழுக்க வாசகர்களாலேயே முன்னெடுக்கப் பட்டு அந்த வெளியீட்டு விழா நடத்தப் பட்டது. உண்மையில் வெண்முரசுக்கெதிரான விமர்சனங்கள் என்பது அந்த விழாவின் வெற்றியே ஆகும். கமல், ராஜா போன்ற பிரபலங்களை வைத்தும் கூட சொன்ன நேரத்திற்கு துவங்கி சொன்ன நேரத்தில் முடிப்பது என்பது சாதாரணமானதல்ல. அதைச் சாதித்து காட்டிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையில் இந்த விமர்சனங்கள் யாவும் வெண்முரசு சரியான திசையில் தனக்கான வாசகர்களுக்காக சென்று கொண்டிருக்கிறது என்றே காட்டுகின்றன. காலம் கடந்தும் நிற்க போகும் படைப்பு இது. இதைப் படிக்கும் வாசகர்களுக்கென்று ஓர் ஆளுமையை உருவாக்கித் தருவதும் இதன் சிறப்பு. ஆம். உங்களின், வெண்முரசின் வாசகன் என்பதில் எனக்கு தனி திமிர் தான். அது ஒருவிதமான பெருமிதத்தைத் தருகிறது. அதற்கு மிக மிக நன்றி ஜெ.

அன்புடன்,

அருணாச்சலம், நெதர்லாந்து

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரை’நார்மல்’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31