‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35

பகுதி ஏழு : பூநாகம் – 5

விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என் ஆசிரியர் காலடியில் வைக்க அப்போது உயிர் மட்டுமே என்னிடம் இருந்தது. நான் சென்று ஏகலவ்யனை எதிர்கொள்கிறேன் என்றேன். ‘இல்லை, நீ என் பொறுப்பு. என் மைந்தனுக்கும் மேலானவன்’ என்று ஆசிரியர் சொன்னார்” துரியோதனன் தொடர்ந்து சொன்னான்.

குருநாதர் இமயகுருகுலத்தில் கல்விபயின்றுகொண்டிருந்த இளவல் கிருஷ்ணனுக்கு செம்பருந்தை தூதனுப்பினார். அவரிடம் எஞ்சிய ஒரே பருந்து அது. அதுவே இறுதி நம்பிக்கை. அது மீளாவிட்டால் நாம் இந்த வனத்தில் அழிவோம் என்றார். அப்போது நாங்கள் காட்டில் மலைக்குகை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தோம். கோடைகாலத்தின் நீராவியால் காடு நெளிந்துகொண்டிருந்தது. சிலநாழிகை நேரம்கூட ஓய்வெடுக்கமுடியாது. உணவு சேர்க்கவோ நீர் அள்ளிக்கொள்ளவோ முடியாது.

எங்களுக்குப்பின்னாலேயே ஆசுரப்படைகள் மலையேறிவந்தன. அவர்கள் காட்டை நன்கறிந்தவர்கள். காற்று வீசும் திசை தேர்ந்து நெருப்பு வைத்து அந்த நெருப்பால் வெந்த வெளி வழியாக எளிதில் வந்தனர். அந்நெருப்பால் அஞ்சிய விலங்குகளும் பாம்புகளும் பெருகி வந்து யாதவர்களை தாக்கின. புகையும் எரிகலந்த காற்றும் சூழ்ந்து மூச்சடைக்கச் செய்தன. காட்டுக்குள் புகுந்தபின்னர் ஒருநாழிகைகூட எவரும் துயின்றிருக்கவில்லை. இந்த நரகத்தைவிட ஆசுரர் கையால் இறக்கலாம் என்று பெண்கள் அழுதனர். கானக விலங்குகள் தாக்கியும் பாம்பு தீண்டியும் யாதவர்கள் இறந்தனர். உடல் ஓய்ந்தும் நோயுற்றும் நடக்கமுடியாமலானவர்களை அணுகிவரும் காட்டு நெருப்புக்கு இரையாக விட்டுவிட்டு முன்னேறிச்சென்றார்கள்.

ஏழுநாட்களில் செம்பருந்து செய்தியுடன் மீண்டு வந்தது. ஏகலவ்யன் செய்வது போர் அல்ல, அது அவனுடைய பெருவஞ்சம் என்று கிருஷ்ணன் சொல்லியிருந்தான். ‘ஏகலவ்யன் கருணை காட்டமாட்டான், யாதவகுடிகளை இறுதி உயிர்கூட விடாமல் அழிப்பான். ஆகவே ஆநிரைகளை கைவிட்டுவிட்டு மேலும் தெற்கே சென்றுகொண்டே இருங்கள்’ என்று அச்செய்தி சொன்னது. பலராமர் காடுகளில் ஆநிரைகளை விட்டுவிட்டு வரும்படி யாதவர்களிடம் சொன்னார். “எங்கள் மைந்தர்களை விடுகிறோம். ஆநிரைகளை விடமாட்டோம்” என்று அவற்றின் கொம்புகளைத் தழுவி யாதவர் கண்ணீர்விட்டனர். அரசாணைக்கு இணங்கி அவற்றை கட்டவிழ்த்து காட்டில் விட்டுவிட்டு திரும்பி நோக்கி அழுதபடி நடந்தனர்.

யமுனைக்கரைக் காட்டைக் கடந்து தெற்குப்பெருநிலத்தின் காடுகளை அடைந்ததும் பலராமர் ஏழு தூதுவர்களை தொடர்ந்து வரும் ஏகலவ்யனிடம் அனுப்பி தீர்வு கோரி மன்றாடினார். மதுரைக்கோ யமுனைக்கரைகளுக்கோ மீண்டும் யாதவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள் என்று உறுதிகொள்வதாகவும் தென்னிலத்துப் புல்வெளிகளில் ஆநிரை மேய்த்து வாழ விட்டுவிடும்படியும் கோரினார். எந்நிலையிலும் எதிரியை எஞ்சவிடும் பிழையை செய்யப்போவதில்லை என்றும் எங்கு சென்றாலும் யாதவர்களின் இறுதிக் குழந்தையையும் கொன்றபின்னரே ஹிரண்யபதத்துக்கு மீளவிருப்பதாகவும் ஏகலவ்யன் சொன்னான். தூதுசென்றவர்களின் காதுகளையும் மூக்கையும் வெட்டிவிட்டு திருப்பியனுப்பினான். செய்திவந்த அன்று யாதவகுடிகள் அலறியழுததை இப்போதும் மெய்சிலிர்க்க நினைவுறுகிறேன் அமைச்சர்களே!

தெற்கே மழைகுறைந்த நிலம் வரத்தொடங்கியது. அடர்வற்ற காடும் ஊடே சிறு புல்வெளிகளும் பின் வறண்ட முள்காடுகளின் வெளி. நெடுந்தூரம் விரிந்து தொடுவானை தொட்டுக்கிடந்த அந்த நிலவிரிவைக் கண்டு யாதவர்கள் அலறி அழுதனர். சிம்மம் துரத்த ஓடும் ஆடுகள் எதிரே மலைப்பாறையைக் கண்டு திகைப்பது போல தோன்றியது. சிலர் திரும்பிவிடலாமென்றுகூட கூவினார்கள். ஆறு மலைப்பாறையில் முட்டிச்சுழிப்பதுபோல யாதவகுடிகள் தேங்கி அலைப்புறுவதைக் கண்டேன.

அப்போது தன்னந்தனியனாக இளையவனாகிய கிருஷ்ணன் வந்து சேர்ந்தான். புதர்களை விலக்கி அவன் வரும் ஓசைகேட்டதும் அனைவரும் அஞ்சி ஒளிந்துகொண்டனர். ஒவ்வொரு புற ஓசையையும் இறப்பெனக் காண அவர்கள் கற்றிருந்தனர். குழந்தைகள்கூட மூச்சடக்கிப் படுக்க கற்றிருந்தன. மரத்தின் மேலிருந்த திசைகாண் வீரர்கள் வருவது யாரென்று கண்டதும் கூச்சலிட்டபடி இறங்கினர். அதைக்கேட்டதும் அத்தனை யாதவர்களும் பெருவெள்ளம் போல மரக்கிளைகளை அசைத்தபடி கூச்சலிட்டுக்கொண்டே அவனை நோக்கி ஓடினர். செல்லும் வழியிலேயே கால்தடுக்கி விழுந்து உருண்டனர். ஒரு குலமே ஒருவனை நோக்கி கைநீட்டி பாய்ந்தோடுவதை முதல்முறையாகக் கண்டேன்.

நான் அப்போதுதான் கிருஷ்ணனைக் காண்கிறேன். அமைச்சர்களே, நான் இதுவரை கண்ட மனிதர்களிலேயே அவனே அழகன் என்பேன். என் நண்பன் கர்ணனைவிடவும் அழகன் என்றால் நீங்கள் நம்பப்போவதில்லை. அவனை நீங்களும் காணும் காலம் வரும். அவனைக் கண்டதுமே அதுவரை என்னிடமிருந்த ஐயத்தையும் சஞ்சலத்தையும் இழந்து திடம்பெற்றேன். அவன் மார்பையும் தோள்களையும் நீலவிழிகளையும் நோக்கிக்கொண்டிருந்தேன். கன்னங்கரியோன். ஒளியே கருமையாக ஆனவன். முகம் புன்னகைக்கக் கண்டிருக்கிறேன், அமைச்சர்களே, உடலே புன்னகைப்பதை அவனிடமே கண்டேன்.

யாதவப்பெண்கள் கூட்டம் கூட்டமாக அலறியபடி சென்று அவன் காலடியில்  விழுந்து சுருண்டு அழுதனர். குழந்தைகள் அவனிடம் தங்கள் உடலில் இருந்த புண்களைக் காட்டி முறையிட்டன. சிறுகுழந்தைகள் அவன் ஆடைபற்றி இழுத்து தங்களை நோக்கும்படிச் சொல்லி கூவி அழுதன. முதியோர் சிலர் அவன்மேல் மண்ணை அள்ளிவீசி தீச்சொல்லிட்டனர். சிலர் அவனை வெறிகொண்டு அடித்தனர். அத்தனை உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு நடுவே அவற்றுடன் தொடர்பற்றவன் போல, இனிய தென்றலில் இசைகேட்டு நிற்பவன் போல நின்றிருந்தான். அவன் இரக்கமற்றவன் என்று ஒருகணம் எண்ணிக்கொண்டேன். கோடானுகோடி மாந்தரை அவனால் இமையசைவில்லாமல் கொல்ல முடியும். அமைச்சர்களே, அப்போது ஏகலவ்யனுக்காக இரக்கம் கொண்டேன்.

மெல்ல உணர்ச்சிகள் அவிந்தன. அவன் ஏழெட்டு சிறுகுழந்தைகளை தன்மேல் ஏற்றிக்கொண்டு அணுகி வந்தான். பிற குழந்தைகள் துள்ளிக்குதித்து நகைத்தும் கைநீட்டி எம்பியும் அவனைச்சூழ்ந்து வந்தன. அவன் அமர்ந்தபோது பெண்கள் தளர்ந்து அவன் காலடியில் வீழ்ந்தனர். அவன் ஆடைகளையும் காலடிகளையும் கிழவிகள் முத்தமிட்டுக்கொண்டே இருந்தனர். மெல்ல அழுகை ஓய்ந்தபோது அவர்கள் அவனை தொட்டுக்கொண்டே இருக்க விரும்பினர். அவன் அவர்களின் குழலைத் தடவினான். தோள்களை அணைத்தான். கன்னங்களின் ஈரத்தை துடைத்தான். கூந்தலிழைகளை காதுக்குப்பின் செருகிவைத்தான். ஒர் அன்னைப்பசு ஆயிரம் கன்றுகளை நக்குவதை அப்போது கண்டேன்.

அவனை எதிர்நோக்காமல் தேவகியும் வசுதேவரும் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் இருப்பதை அவன் காணவுமில்லை. அவன் என்னை நோக்கி “கௌரவரே, நீங்கள் இங்கிருப்பது எங்கள் நல்லூழ்” என்றான். மலர்கள் நிறைந்த தோட்டத்தில் உயிர்நண்பனைக் காணும் முதிரா இளைஞனுடையது போன்ற புன்னகை. நான் அவனருகே சென்று “நான் என் குருநாதருக்காக உயிர்கொடுக்க விழைகிறேன்” என்றேன். “ஆவதைச் செய்வோம்…” என்று அவன் சொன்னான்.

பின்னர் குருநாதரும் கிருஷ்ணனும் யாதவமூத்தோருடன் ஒரு பாறைமீது சென்று மன்று அமர்ந்தனர். நானும் இருந்தேன். கிருஷ்ணன் சொன்னான் ‘ஏகலவ்யனை நான் அறிந்துள்ளேன். அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான் என்றால் இறுதிக்குருதித் துளி எஞ்சுவதுவரை அதை நிறைவேற்றவே முயல்வான்.’ பலராமன் திகைத்து நோக்க மூத்தோர் அச்சக்குரல் எழுப்பினர். ‘அவன் அணுகமுடியாத இடத்துக்குச் செல்வதே நாம் செய்யக்கூடுவது. முடிந்தவரை இந்நிலத்தை விலகிச்செல்வோம். ஆசுரர் எவரும் அணுகமுடியாத நிலம் ஒன்றை கண்டடைவோம். யாதவர்களாகிய நமக்கு புல்லிருக்கும் நிலமெல்லாம் உணவிருக்கும்’ என்றான் கிருஷ்ணன்.

‘ஆனால் உடனே ஏகலவ்யனை நாம் தடுத்து நிறுத்தியாகவேண்டுமே’ என்று பலராமர் சொன்னார். ‘அஸ்தினபுரி நினைத்தால் முடியும் என நினைக்கிறேன். ஒரு படையை அனுப்பி அவர்கள் மதுராவை தாக்கினால் ஏகலைவன் திரும்பிச் செல்வான். நாம் நம் பயணத்தை செய்யமுடியும்.’ குலமூத்தார் அனைவரும் ஒரே குரலில் ‘ஆம்… ஆம். அது முதன்மையான வழியே’ என்றார்கள். எல்லா விழிகளும் என்னை நோக்கின,

கிருஷ்ணன் ‘மூத்தவரே, அஸ்தினபுரியினர் இன்று அதற்கு துணியமாட்டார்கள். மகதம் நாள்தோறும் பெருகும் வல்லமை பெற்றுள்ளது. அவர்கள் அஸ்தினபுரியுடன் ஒரு போருக்கான தொடக்கத்திற்கு காத்திருக்கிறார்கள்… இன்று அங்குள்ள இளவரசர்கள் இளையோர். பீஷ்மரோ முதியவர். அஸ்தினபுரியை வெல்வதற்கான சரியான தருணம் இதுவே என ஜராசந்தன் எண்ணுகிறான்’ என்றான். ‘ஆனால் நமக்கு வேறு எவர் இருக்கிறார்கள்? அஸ்தினபுரியின் உதவி இல்லையேல் நாம் அழிவோம்… இதோ இந்த எல்லைக்கு அப்பால் வறண்ட நிலம். அதற்கப்பால் எங்கே உள்ளது நாம் தேடும் புதுநிலமென்றும் அறியோம். இந்தப் பாழ்நிலத்தில் ஏகலவ்யன் நம்மைத் தொடர்ந்தான் என்றால் நாம் அழிவது உறுதி’ என்றார் குருநாதர்.

அப்போது நான் முன்சென்று நெஞ்சில் கைவைத்து சொன்னேன் ‘நான் அஸ்தினபுரியின் இளவரசன். என் தந்தையின் செங்கோலே அஸ்தினபுரியை ஆள்கிறது. நானே செல்கிறேன். அஸ்தினபுரியின் படையுடன் நான் மதுராவை தாக்குகிறேன்.’ அவர்கள் நிமிர்ந்து நோக்கினர். ‘ஏகலவ்யனை வென்று மதுராபுரியை மீட்டு அளிக்கிறேன்… இது உறுதி’ என்றேன். ‘அவ்வண்ணமெனில் முறையான தூதாகவே அது அமையட்டும். மூத்தவரே, பாட்டனாரின் பெயரால் நீங்களே திருமுகம் எழுதுங்கள்’ என்றான் கிருஷ்ணன்.

“அந்தத் தூதுடன் வந்திருக்கிறேன் அமைச்சர்களே. அஸ்தினபுரியின் வில்லவர் படைகளில் ஒன்று என்னுடன் வரட்டும். ஒரேமாதத்தில் ஏகலவ்யனை வென்றுமீள்கிறேன்” என்றான் துரியோதனன். “எனக்கு அமைச்சர்களும் அரசரும் ஒப்புதல் அளிக்கவேண்டும்.” சகுனி மெல்ல அசைந்து அமர்ந்த ஒலி கேட்டு விதுரர் நோக்கினார். அவரது விழிகள் எந்தச் சொல்லுமில்லாமல் வந்து விதுரரைத் தொட்டு மீண்டுசென்றன. விதுரர் அவையில் எழும் குரல்களுக்காகக் காத்திருந்தார்.

மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தரும் கோட்டைக்காவல் அமைச்சருமான கைடபர் “நானறிந்தவரை அத்தனை எளிதாக ஏகலவ்யனை வென்றுவிடமுடியாது இளவரசே. பாரதத்தின் மூன்று பெரும் வில்லாளிகள் என பரசுராமர், பீஷ்மர், துரோணர் பெயர் சொல்லப்பட்ட காலம் உண்டு. இன்று அர்ஜுனர், கர்ணர், ஏகலைவன் என்கிறார்கள்” என்றார். “அப்படியென்றால் கர்ணனை வரச்சொல்கிறேன். அவன் விந்தியமலையில் இருக்கிறான்…” என்றான் துரியோதனன்.

“அவ்வண்ணம் என்றாலும் வெற்றி உறுதி அல்ல” என்றார் அமைச்சர் ரிஷபர். “இது நாம் நடத்தும் முதல் போர். உண்மையில் இது மகதத்துக்கு எதிரான போரேயாகும். இதில் நாம் வென்றேயாகவேண்டும். வெற்றிகூட மிகச்சிலநாட்களில் கனிந்த பழத்தை மரத்திலிருந்து கொய்வதுபோல எளிதாக இருந்தாகவேண்டும். இந்த ஒருபோரிலேயே நம்முடைய ஆற்றல் மகதத்தை விட பலமடங்கு மேலானதென்று தெரியவேண்டும்” என்றார் சௌனகர்.“ ஆகவே அர்ஜுனரையும் அழைத்துக்கொள்ளுங்கள்.”

துரியோதனன் “அவ்வாறெனில் ஆகுக… இப்போது நாம் துணைக்குச் சென்றாகவேண்டும். அது என் வாக்கு” என்றான். கைடபர் “படைகொண்டு போவதை நாம் படகுகளில் செய்யலாகாது. ஏனென்றால் படகுகளில் இருந்து அம்பு விடும் வல்லமை நமக்கில்லை. ஆடும் இலக்குகளை தாக்கும் வல்லமை அவர்களுக்குண்டு” என்றார். ரிஷபர் “ஆசுரர்களைத் தாக்க நாம் எதற்கு மதுராசெல்லவேண்டும்? மிக எளிய இலக்கு நேராக ஹிரண்யபதத்தை தாக்குவதுதான். அதை எரியூட்டுவோம். ஏகலவ்யனின் அரண்மனையை மண்ணாக்கி எருதுகட்டி உழுவோம். ஷத்ரியர்களுக்கு எதிராக அவன் கை எழலாகாது” என்றார் அமைச்சரான சக்ரசேனர்.

சபை அவரை நோக்க சக்ரசேனர் “சினம் கொண்டு நிலையழிந்து வரும் ஏகலவ்யனை நமக்கு வசதியான திறந்தவெளியில் சந்திப்போம்… அவனை அழிப்பது எளிது” என்றார். “ஏகலவ்யனின் செயலைப்பற்றி மகதத்துக்கு ஓர் எச்சரிக்கையை அனுப்புவோம். எச்சரிக்கை சென்றால் நாம் தாக்கப்போவதில்லை என்றுதான் பொருள். மார்த்திகாவதியிடம் ஏகலவ்யனை தாக்கச் சொல்வோம். அவன் தன் படைகளில் பாதியை அத்திசை நோக்கித்திருப்புவான். அந்த நிலையில் நாம் மதுராவைத் தாக்கினால் காலையில் தொடங்கும் தாக்குதல் மாலையிலேயே முடிந்துவிடும்” என்றார் ரிஷபர்.

“முடிவுகளை நோக்கிச் செல்வதற்கு முன்பு நாம் படையெடுக்கப் போகிறோமா இல்லையா என்பதை விதுரர் சொல்லட்டுமே” என்றார் கணிகர். விதுரர் அந்தச் சொல்லாட்சியில் இருந்த கூர்மையை உணர்ந்து திரும்பி கணிகரை வணங்கி “முடிவு சொல்ல நான் யார்? நான் எளிய அமைச்சன். முடிவெடுக்கவேண்டியவர் அஸ்தினபுரியின் அரசர். பிதாமகர் பீஷ்மர் இல்லாத நிலையில் அவரே இங்கு முதல் மூதாதை” என்றபின் “என் எண்ணங்களை மட்டும் சொல்கிறேன். பிறவற்றை அவை கூடி முடிவெடுக்கட்டும். அரசர் இறுதிச்சொல்லை அளிக்கட்டும்” என்றார்.

திருதராஷ்டிரர் “மூடா, நீ சொல்வதை வைத்துத்தான் நான் முடிவெடுக்கவேண்டும் என்று தெரியாதா உனக்கு? சொல்” என்றார். விதுரர் “அவையினர் நோக்கவேண்டியது ஒன்றே. கம்சர் குழந்தைகளைக் கொன்றநாளில் இங்கே பிதாமகர் பீஷ்மர் இருந்தார். அங்கே நிகழ்வன இங்கே செய்திகளாக வந்துகொண்டுதான் இருந்தன. பிதாமகர் எத்தனையோ இரவுகளில் துயிலின்றி தவித்தார். நான் அவரிடம் சென்று உடனே நம் படைகளை மதுராவுக்கு அனுப்புவோம், இந்தப் பேரநீதி இங்கே ஒப்புதல் அளிக்கப்பட்டது என்னும் அவப்பெயர் எழலாகாது என்று கொதித்தேன். ஆனால் பீஷ்மர் என்னை தடுத்துவிட்டார்” என்றார்.

விதுரர் சொன்னார் “ஏனென்றால் அன்று நாம் மதுராவை வெல்லும் நிலையில் இல்லை. மதுராவை நாம் ஒரு நாள் பகலுக்குள் முழுமையாக வென்று அனைத்துக் காவல்மாடங்களையும் கைப்பற்றி படைகளை நிறுத்திவிட முடிந்தால் மட்டுமே அது வெற்றியென கொள்ளப்படும். தன் காவல்படைகளை திரிவேணி முனையில் நிறுத்தியிருக்கிறது மகதம். மதுராவரை வருவதற்கு அவர்களுக்கு ஒருநாள் பகலே போதுமானது. அவர்கள் வந்துவிட்டால் அதன்பின் அது சிறிய போர் அல்ல, பாரதவர்ஷத்தின் இரு சாம்ராஜ்யங்களின் போர். அது எளிதில் முடியாது. பல வருடங்கள் ஆகும். பல்லாயிரம்பேர் இறப்பார்கள் என்றார் பிதாமகர்.”

“இக்குழந்தைகள் வீரர்களாக மாறுவதற்குள் இறக்கிறார்கள் என்று கொள்வதே உடனடியாக செய்யக்கூடுவது என்று சொன்னார் பிதாமகர். சுயவெறுப்பும் கசப்பும் கொண்டிருந்தார். ஆம் அநீதியின் முன் கைகட்டி நிற்கிறோம், மேலும் பெரிய அழிவு நிகழக்கூடாதென்பதற்காக என்று சொல்லிவிட்டு தன் அம்புப்பயிற்சிக்கு சென்றுவிட்டார். நான் அங்கே திகைத்து நின்றேன். என் உணர்ச்சிகள் சரியானவை, ஆனால் தொலைநோக்கு அற்றவை. பிதாமகர் மேலும் நெடுந்தொலைவை நோக்கி அதைச் சொன்னார் என உணர்ந்தேன். இந்த அவையில் அவர் இருந்தால் என்ன உணர்வாரோ அதையே நானும் சொல்வேன்” என்றார் விதுரர்.

“அஸ்தினபுரி இன்று மகதத்துடன் போரைத் தொடங்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை” என்றார் விதுரர். “மறைந்த பேரரசி சத்யவதி செய்த பெரும்பிழை ஒன்றுண்டு. அஸ்தினபுரி பாரதவர்ஷத்தை வெல்லவேண்டும் என அவர் கனவுகண்டார். அக்கனவை ஒவ்வொருநாளும் சொல்லிக்கொண்டிருந்ததே அவரது பிழை. அது பாரதவர்ஷத்தில் பரவியது. ஒவ்வொரு நாடும் எச்சரிக்கைகொண்டு நமக்கெதிராகவே படை திரட்டி வலிமை கொள்ளத் தொடங்கியது. படைக்கூட்டுக்களை உருவாக்கிக் கொண்டன, மண உறவுகள் மூலம் வலிமையான அரசியல்கூட்டுகள் பிறந்தன.”

“ஆனால் அரசியின் இலக்கு பிழைத்தது” என்றார் விதுரர். “அவரது இரு மைந்தர்களுமே போர்புரியும் வல்லமை அற்றிருந்தனர். அவரது பெயரர்களும் போர்புரியும் நிலையில் இருக்கவில்லை. இன்றுதான் அஸ்தினபுரி படைக்கலம் எடுத்திருக்கிறது. மூன்று தலைமுறைக்குப்பின். இந்த காலகட்டத்தில் நம் எதிரிகள் அனைவருமே வல்லமை கொண்டுவிட்டனர். நமக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். எதிரியை எச்சரித்து வல்லமைகொண்டவர்களாக ஆக்கிவிட்டு வல்லமை இல்லாமல் நின்றோம் நாம். நாம் இதுவரை தப்பியதே பீஷ்மரைப்பற்றிய அச்சம் அவர்களிடமிருந்தமையால்தான்.”

“இன்றும் நாம் வல்லமைகொண்டவர்களல்ல அமைச்சர்களே” என்றார் விதுரர். “ஆம், நம்மிடம் இன்று இளஞ்சிங்கங்கள் போல இளவரசர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் படைபலம் மகதத்துடன் ஒப்பிடுகையில் பெரியதல்ல. மகதம் சென்ற மூன்று தலைமுறைக்காலமாக திருமண உறவுகள் மூலம் வலுப்பெற்றபடியே வந்துள்ளது. இன்று அதனுடன் கலிங்கம் முதல் காசி வரை உத்கலம் முதல் மாளவம் வரை துணைநாடுகள் உள்ளன. அவர்கள் அனைவருமே சென்ற நூறுவருடங்களில் கடல்வணிகம் மூலம் பெருஞ்செல்வம் ஈட்டியவர்கள். காடுதிருத்தி நாடு விரித்து படைபெருக்கியவர்கள்… போரைத்தொடங்குதல் மிக எளிது. நம் கையில் அது நிற்பது மிகமிக அரிது.”

“அரசே, நாம் இனிமேல்தான் மண உறவுகளை தொடங்கவேண்டும். நம் இளவரசர்களுக்கு முதன்மையான அரசகுலங்களில் இருந்து இளவரசியர் வரவேண்டும். அதன்பொருட்டே அவர்களின் திருமணத்தை இதுநாள் வரை தள்ளிப்போட்டுவந்தோம். அதில் முதன்மையான இக்கட்டு பட்டத்து இளவரசரின் யாதவக்குருதி. அதை தூய ஷத்ரியர் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு நாம் பிறர் அறியாத வாக்குறுதிகளை அளித்து கவர்ந்துதான் பெண்கொள்ள முடியும். ஒரு முதன்மை ஷத்ரியகுலம் நமக்குப் பெண்ணளித்தால்போதும் பிறர் வந்துவிடுவார்கள். அதற்காகவே காத்திருக்கிறோம்…” விதுரர் சொன்னார். “அப்படி சில மணமுறைகள் நிகழ்ந்துவிட்டால் நாம் நம் படைவல்லமையை பெருக்கிக் கொள்ளலாம். அதன்பின்னரே நாம் மகதத்தை உண்மையில் எதிர்த்து நிற்கமுடியும்.”

திருதராஷ்டிரர் “படைகளை இத்தருணத்தில் அனுப்புவது சரியானதல்ல என்று சொல்கிறாயா?” என்றார். “ஆம் அரசே, முற்றிலும் பிழையான முடிவு அது” என்றார் விதுரர். துரியோதனன் சினத்துடன் “நாம் அவர்கள் அழிவதை நோக்கி வாளாவிருக்கவேண்டுமா என்ன? அவர்களின் குருதிமீது நின்று நாம் வாழவேண்டுமா?” என்றான். “இளவரசே, எனக்கு உளவுச்செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன. யாதவர்கள் மென்பாலைநிலத்தைக் கடந்து கூர்ஜரத்தின் தெற்கே ஒழிந்து கிடக்கும் பெரும்புல்வெளி நோக்கிச் செல்கிறார்கள்… கிருஷ்ணன் அவர்களை வழிநடத்தி அழைத்துச்செல்கிறான். தகுதியான தலைமை கொண்டிருப்பதனால் அவர்கள் அங்குசென்று சேர்வதும் ஓர் ஊரை அமைப்பதும் உறுதி. இனிமேல் அவர்களுக்கு எந்த இக்கட்டும் இல்லை” என்றார் விதுரர் .

“ஆனால் ஏகலவ்யனின் வஞ்சினம்…” என்று துரியோதனன் சொல்லத் தொடங்க “ஆசுரநாட்டார் யாதவரைத் தொடர்ந்து அங்கே செல்ல முடியாது. ஏனென்றால் நடுவே உள்ள பாலைநிலத்தைக் கடக்க அவர்களால் இயலாது.  ஆசுரகுடிகள் மலைமக்கள். காட்டில் அவர்கள் திறன் மிக்கவர்கள். பாலையில் அவர்களால் செல்லமுடியாது. யாதவர்கள் புல்வெளியில் வாழ்ந்தவர்கள். பாலை என்பது காய்ந்த புல்வெளியே. மேலும் இது மழைமாதம். பாலைநிலம் மெல்லிய மழையுடன் இருக்கும் காலம். அவர்கள் மகிழ்ச்சியுடன் செல்வதாகவே செய்திகள் சொல்கின்றன” என்றார் விதுரர். துரியோதனன் தலையை இல்லை என்பது போல அசைத்தான்.

“நாம் யாதவர்கள் அங்கே ஒரு நகரை அமைப்பதற்கான செல்வத்தை அளிப்போம். அதை எவரும் அறியவேண்டியதில்லை. இப்போது நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி இது ஒன்றேயாகும்” என்றார் விதுரர். சௌனகர் “ஆம், அமைச்சர் சொல்வதை நானும் முழுமையாக ஏற்கிறேன். இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியது அது ஒன்றே” என்றார். முடிவுக்கு வந்துவிட்டது போல அமைச்சர் உடல்களில் ஒரு மெல்லிய அசைவு நிகழ்ந்தது. கூட்டமான மூச்சொலிகள் எழுந்தன. அவை திருதராஷ்டிரருக்கு அவர்களின் உள்ளத்தை உணர்த்தின. அவர் தன் கைகளைத் தூக்கி தலைக்குமேல் வளைத்து சோம்பல் முறித்தார்.

“குந்தி தேவியின் எண்ணமும் இதுவாகவே இருக்கும் என எண்ணுகிறேன்” என்றார் கணிகர். தொடர்பே அற்ற அந்த வரியால் திகைத்து விதுரர் திரும்பி நோக்க “மார்த்திகாவதி இனிமேல் யமுனைக்கரையின் ஒரே யாதவநாடாக அமையுமே” என்று சொல்லி மெல்ல புன்னகைத்தார் கணிகர். திருதராஷ்டிரர் சினத்துடன் “மார்த்திகாவதியை நாம் பிறகு நோக்கலாம். விதுரா மூடா… நம் படைகளை அனுப்பவேண்டாமென்றா சொல்கிறாய்?” என்றார். “ஆம் அரசே” என்றார் விதுரர்.

துரியோதனன் “அமைச்சரே, நான் யாதவர்களின் மன்றில் எழுந்து என் நெஞ்சைத்தொட்டு வாக்குறுதி அளித்தேன்… படைகளுடன் நான் வருவேன் என்று சொன்னேன்” என்றான். விதுரர் பேசுவதற்குள் கணிகர் “அது நீங்கள் தனிப்பட்ட முறையில் அளித்த வாக்குறுதி. அஸ்தினபுரியை அது கட்டுப்படுத்தாது. அஸ்தினபுரிக்கும் உங்களுக்கும் அரசியலுறவு ஏதுமில்லை அல்லவா?” என்றார். சீற்றத்துடன் துரியோதனன் திரும்ப “பலராமர் கேட்டால் என்ன சொல்வது என்று நான் சொன்னேன்… நம்மிடமும் வலுவான சொற்கள் இருக்கவேண்டும் அல்லவா?” என்றார் கணிகர் பார்வையை தாழ்த்தியவராக.

துரியோதனன் ஏதோ சொல்ல வர, திருதராஷ்டிரர் தொடையில் அறைந்து “கணிகரே, இது என் அரசு. அவன் என் மைந்தன். அது இல்லாமலாகவில்லை” என்றபின் “விதுரா, என் மைந்தனின் சொல்லை நாம் வீணாக்கலாகாது” என்றார். “அரசே, படை நீக்கம் என்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல… ஒன்றுசெய்யலாம். துரியோதனர் இங்கு வந்ததையும் படைகோரியதையும் சொல்லி படை அனுப்ப முடியாமைக்கு வருந்தி நீங்கள் ஒரு திருமுகம் அனுப்பலாம். அதில் யாதவ அரசு என்றும் அஸ்தினபுரியின் துணையரசே என்றும் நிகழ்ந்தவைக்கு மேலும் சில வருடங்களில் மும்மடங்காக பழிவாங்கப்படும் என்றும் வாக்களிக்கலாம். படைகளுக்கு நிகராக செல்வத்தை அனுப்புவதாக சொல்லலாம்” என்றார் விதுரர்.

“ஆம், அதுவே சிறந்த வழி. அக்கடிதம் படைகளை அனுப்புவதைவிட மேலானது. அது அனைத்தையும் சீரமைக்கும்” என்றார் சௌனகர். அமைச்சர்களும் ஒரே குரலில் ஆம் என்றனர். துரியோதனன் உரத்த குரலில் “தேவையில்லை… நான் என் தம்பியருடன் தனியாக செல்கிறேன். அவனுடன் போர் புரிந்து மடிகிறேன்…” என்று கூவினான். விதுரர் “இளவரசே, அரசியலில் தனிப்பட்ட உணர்ச்சிகளைக் கலப்பதை கடப்பதே அரசு சூழ்தலின் முதல் பாடம்” என்றார். திருதராஷ்டிரர் எழுந்துகொண்டு “ஆம், சிந்திக்கையில் அதுவே சரியெனப் படுகிறது. துரியோதனா, நான் உன்பொருட்டு உன் குருநாதரின் பாதங்களை வணங்கி திருமுகம் அனுப்புகிறேன்…” என்றார். சபையும் எழுந்தது.

துரியோதனன் நிமிர்ந்த தலையுடன் இறுகக் கடித்த வாயுடன் நின்றான். துச்சாதனன் வந்து அவன் அருகே நின்று பிற கௌரவர்களை நோக்கி விழியால் ஏதும் பேசவேண்டாமென்று சொன்னான். அவர்கள் மெல்ல மூத்தவனைச் சூழ்ந்து நின்றனர். விதுரரும் திருதராஷ்டிரரும் சகுனியும் முதலில் வெளியே சென்றனர். சௌனகரிடம் ஏதோ பேசியபடி கணிகர் சென்றார். அமைச்சர்கள் ஒவ்வொருவராக வெளியே செல்லத் தொடங்கினர். தருமன் வெளியே செல்லப்போகையில் துரியோதனன் சில அடிகள் முன்னகர்ந்து தொண்டையைக் கனைத்தான். தருமன் திகைப்புடன் திரும்பினான்.

துரியோதனன் இடறிய குரலில் “மூத்தவரே, தங்களிடம் கோருகிறேன். இந்நாட்டின் பட்டத்து இளவரசர் தாங்கள்… எனக்கு ஒரு படையை கொடுங்கள். நான் என் குருநாதருக்கு அளித்த ஆணையை நிறைவேற்றவேண்டும். இல்லையேல் நான் உயிர்வாழ்வதிலேயே பொருளில்லை” என்றான். தருமன் “நான் எவ்வாறு…” என்று திகைத்து அர்ஜுனனை நோக்க அர்ஜுனன் “நீங்கள் உங்கள் தனிப்பொறுப்பில் எல்லையிலுள்ள படைகளை அனுப்பமுடியும் மூத்தவரே. படைகள் சென்றுவிட்டபின் அரசரோ விதுரரோ ஏதும் சொல்லமுடியாது…’ என்றபின் “படைகளுடன் நானும் செல்கிறேன். ஏகலவ்யனை கொன்றே மீள்வேன்” என்றான்.

தருமன் “நானா… படைகளுக்கு ஆணையா?” என்றார். “உங்கள் இலச்சினைக்கு அந்த அதிகாரம் உள்ளது மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “நான் விதுரரை கேளாமல் ஆணையிடமுடியாது. அதுவும் படைகளுக்கு…” என்று தருமன் தடுமாறியபடி சொன்னான். “படைகள் தேவையில்லை மூத்தவரே… ஆயிரம்பேர் கொண்ட ஒரே ஒரு சிறு காவல்படையை மட்டும் அனுப்ப ஆணையிடுங்கள்… போரில் நான் காயம்பட்டு விழுகிறேன். அல்லது உயிர்துறக்கிறேன். செல்லாமல் இங்கிருந்தால் நான் மனிதனல்ல, சடலம்” என்றான் துரியோதனன். அவன் குரல் உடைந்து மெலிந்தது. எழுந்த விம்மலை நெஞ்சுக்குள் அடக்கிக்கொண்டு கையை ஆட்டினான். துச்சாதனன் கண்ணீருடன் தலையை குனிந்துகொண்டான். கௌரவர்கள் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் தோள்களால் தொட்டனர்.

“நான் எப்படி ஆணையிடமுடியும்?” என்றான் தருமன். அர்ஜுனனை நோக்கி “இளையவனே நீயே சொல்! அமைச்சர்களைச் சூழாமல் அரசன் படைநீக்கத்திற்கு ஆணையிடும் மரபு எங்கேனும் உண்டா? படைத்தலைவர்களிடம்கூட கேளாமல் எப்படி ஆணையிட முடியும்?” என்றான். துரியோதனனிடம் “அது பெரும்பிழை” என்று சொல்லி கைகளை வீசினான். “உன் உணர்வுகள் எனக்குப்புரிகின்றன, தார்த்தராஷ்டிரனே. ஆனால் நான் ஒருபோதும் முறைமீறமாட்டேன். விதுரர் சொன்னதை கேட்டாயல்லவா? உன் செயலால் இருசாம்ராஜ்யங்கள் நடுவே ஒரு பெரும்போர் தொடங்கி பல்லாயிரம்பேர் இறப்பார்களென்றால் அதற்கு நானல்லவா பொறுப்பேற்கவேண்டும்? நான் இந்நகர மக்களின் எதிர்கால அரசன். இம்மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொள்ளமுடியும். நீ செய்வது உன் சொல்லுக்காக. அதன் விளைவாக இம்மக்கள் அழிவார்கள் என்றால் நான் அதை ஒப்பமாட்டேன்…”

துரியோதனன் மேலும் முன்னகர்ந்து கைகளைக் கூப்பி “பட்டத்து இளவரசே, நான் உங்களிடம் சரண் அடைகிறேன். எனக்கு நூறு வீரர்களையாவது அளியுங்கள்… வெறும் நூறு வில்லாளிகளை” என்றான். தருமன் “தார்த்தராஷ்டிரா, நீ இந்நாட்டை ஆளும் அரசரின் மைந்தன். பத்துபேருடன் நீ சென்றாலும் அது அஸ்தினபுரியின் படையெடுப்பெனவே கொள்ளப்படும்… அதன் விளைவுகள் அஸ்தினபுரியை அழிக்கும். உன் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்று இந்நகரின் பல்லாயிரம் குடிமக்களை எண்ணிப்பார்” என்றான். “உன் உடன்பிறந்தோர் உன் சொல்லுக்குரியவர்கள். ஆனால் அஸ்தினபுரியின் கொடியை நீ கொண்டுசெல்லலாகாது.”

தருமனின் வாதத்தால் நிறைவடைந்தவனாக அர்ஜுனன் திரும்பி துரியோதனனிடம் அவனை அமைதிப்படுத்த ஏதோ சொல்ல கை எடுத்தான். ஆனால் தருமன் தொடர்ந்து “உன் சொற்கள் அஸ்தினபுரியின் வாக்குறுதி அல்ல என்று கணிகர் சொன்னார் அல்லவா? அது யாதவர்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் அதை கருத்தில்கொள்ள மாட்டார்கள்” என்றதும் திகைத்து கை அப்படியே நிற்க துரியோதனனை நோக்கினான். பாம்பை மிதித்தவன் போல துரியோதனன் உடலில் ஒரு அதிர்வு கடந்து சென்றது. முகம் உருகிவிடுவது போல வெம்மை கொண்டது. வாய் ஏதோ சொல்லவருவது போல இருமுறை அசைந்தது. பின் அவன் அம்புபட்ட காட்டுயானை போல வெளியே பாய்ந்துசென்றான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

துச்சாதனன் உரக்க உறுமியபடி பின்னால் சென்றான். கௌரவர்கள் அனைவரும் துரியோதனனைப் போலவே இருந்தனர். அவர்கள் செல்லச்செல்ல துரியோதனன் ஒரு பெரிய பாதாளநாகம் போல வழிந்து சென்றபடியே இருப்பதாகத் தோன்றியது அர்ஜுனனுக்கு. பெருமூச்சுடன் திரும்பி “பாதாளமூர்த்திகளை எழுப்பிவிட்டீர்கள் மூத்தவரே” என்றான். “நான் சொன்னது விதுரர் விளக்கிய நியாயத்தை…. அவனுக்காக நாம் ஒரு போரை தொடங்கி இம்மக்களை பலிகொடுக்கக் கூடாது” என்றான் தருமன். “அது நியாயம். அதை சற்றுப்பிந்தியாவது மூத்த கௌரவர் விளங்கிக்கொள்வார். இறுதியாக நீங்கள் சொன்னது அப்படி அல்ல” என்றான்.

தருமன் குழப்பமாக “என்ன சொன்னேன்? அது உண்மை அல்லவா? யாதவர்கள் அவன் சொல்லை அஸ்தினபுரியின் சொல்லாக கொண்டிருக்கமாட்டார்கள். ஆகவே அது அரசியல் ஒப்பந்தம் அல்ல” என்றான் தருமன். “மூத்தவரே, நீங்கள் சொன்னதன் உண்மையான பொருளை நீங்கள் உணரவில்லையா?” என்றான் அர்ஜுனன். “உண்மையான பொருளே அதுதானே? ஓர் அரசியல் ஒப்பந்தம் அதற்குரிய பொறுப்பு கொண்ட சிலரால் மட்டுமே….” என்று தருமன் சொல்லத் தொடங்க பீமன் உரக்க நகைத்து “இளையவனே, அறம் கற்றவர்களின் அகம் அறநூல்களை போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறது. பிற அகங்களை அது அறிவதில்லை…” என்றான். அர்ஜுனனின் தோளைத் தொட்டு “வா, கதை முடிந்துவிட்டது” என்றான்.

“நான் சொன்னதில் பிழை என்ன? யாதவசபை முறைப்படி நம்மிடம் எதையும் கோரமுடியாதென்றுதான் சொன்னேன்… அதாவது…” என்றான் தருமன். எரிச்சலுடன் இடைமறித்த அர்ஜுனன் “மூத்தவரே, உங்கள் சொல்கேட்டு இங்கே அகம் இறந்து சடலமாகச் சென்றவனும் என் மூத்தவனே. அவன் நெஞ்சின் வலியும் என்னுடையதே. இன்று அவனுடன் நானும் துயிலாதிருப்பேன்” என்றபின் வெளியே சென்றான்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…
அடுத்த கட்டுரைதோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு? இப்ப தெரிஞ்சாகணும்!