வாரணாசி என்ற குரல் காதில்விழாமல் நம்மில் பெரும்பாலானவர்களின் தினம் தொடங்குவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ‘வாரணசீ குலபதே மம சுப்ரபாதம்’ என்று கேட்டபடித்தான் காலைகள் விடிகின்றன. வாரணாசி ஆங்கிலத்தில் பனாரஸ். இன்னொரு பெயர் காசி. காலபைரவக்ஷேத்ரம் என்பதில் இருந்து வந்தது காசி என்ற சொல். வருணா மற்றும் அஸி என்ற இரு துணையாறுகளுக்கு நடுவே கங்கை பிறைவழிவில் செல்லும் 108 படித்துறைகளுக்கு மட்டும் வரணாசி என்று பெயர். பாலி மொழியில் பருணாசி என்று சொல்லப்பட்டு ஆங்கிலத்தில் பனாரஸ் ஆகியது.
இந்துக்கள் சமணர்கள் பௌத்தர்கள் சீக்கியர்கள் ஆகிய அனைவருக்குமே முக்கியமான தலம் காசி.மகாபாரதம் முதல் மீண்டும் மீண்டும் புகழப்படும் தலம். கங்கையின் கரையில் இருக்கும் நூற்றியெட்டு படிக்கட்டுகளும் காசி விஸ்வநாதரின் ஆலயமும்தான் காசியின் சிறப்புகள். நூற்றாண்டுளாக காசி முக்திக்குரிய தலமாக நம் மூதாதையரால் எண்ணப்படுகிறது. காசிக்குச் சென்று கங்கையில் நீராடினால் பாவங்கள் முற்றாக அகலும் என்ற நம்பிக்கை இந்துமதத்தின் எல்லா பிரிவுக்குள்ளும் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தீவிரமாகவே இருக்கிறது.
இந்து மரபில் காசியில் இறந்தால் மோட்சம் என்று நம்பப்படுகிறது. ஆகவே முதுமையில் காசிக்கு வருவதென்பது ஒரு முக்கியமான சடங்காக நெடுங்காலம் முதலே இருந்துள்ளது. காசியில் கங்கையில் இறந்தவர்களின் எச்சங்களைக் கரைப்பதும் கங்கை நீரில் இறந்தவர்களுக்கு நீத்தார்கடன்களைக் கழிப்பதும் தென்னாட்டில் பற்பலநூற்றாண்டுகளாக இருந்துவரும் வழக்கம். காசியிலிருந்து கங்கைநீரை கொண்டுவந்து பாதுகாத்து வைத்திருந்து இறப்பவர்களின் நாவில் இறுதியாக விடுவதுண்டு. தமிழ்நாட்டில் காசி விஸ்வநாதரின் சன்னிதி பெரும்பாலும் எல்லா சிவாலயங்களிலும் இருக்கிறது. ஆண்களுக்கு காசி என்ற பெயர் மிகமிக அதிகமாக உள்ளது.
காசிக்கு நான் முதலில் வந்தது 1981 ல். தனியாக வந்தேன். துறவி என்று சொல்லக்கூடாது, பரதேசி என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒருமாதம் கண்ட இடத்தில் தூங்கி இலவச உணவுகளை உண்டு இங்கே வாழ்ந்தேன். அதன் பின் 1984ல் ஒருமுறை வந்து எட்டுநாட்கள் இருந்தேன். அதன் பின்னர் 1986ல் ஆண்ட்ரியாவுடன் வந்து சண்டைபோட்டு விலகிச் சென்று மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டு மீண்டும் சண்டை போட்டு ஹரித்வாருக்குக் கிளம்பிச் சென்றோம்.அதன் பின்னர் 2006ல் ‘நான்கடவுள்’ படப்பிடிப்புக்காக வந்து நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருதேன். காசியின் சந்து பொந்துக்கள் எல்லாமே எனக்குத்தெரியும். காசியின் வாழ்க்கை தெரியும்.
பனாரஸ் என்று இன்று நாம் சொல்லும் ஊர் கங்கைகரைக்கு அப்பால் விரிந்து கிடக்கும் மாநகரம். பட்டுநெசவும் பாத்திரங்கள் உற்பத்தியும் பெருகிய தொழில்நகரம். அதற்கும் கங்கைகரையோரம் இருக்கும் பழைய காசிக்கும் தொடர்பில்லை. பனாரஸ் வாசிகள் பழைய காசிக்கு வருவதில்லை. இங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் வேறுபகுதியைச் சார்ந்தவர்கள். அன்றாடம் வந்து குவியும் பயணிகள். அவர்களுக்குச் சடங்குகள் செய்துவைக்கும் புரோகிதர்கள். சிறுவணிகர்கள். பெரும்பாலும் எல்லா இந்திய சாதியினருக்கும் காசியில் தனியான மடங்கள் உண்டு. அவர்கள் அங்கே வரும்போது தங்குவதற்காக. தமிழகத்தின் முக்கியமான சைவ மடங்களுக்கு காசியில் கிளைகள் உண்டு. முன்பெல்லாம் இளைய தம்புரான் காசியில்தான் இருப்பார். பெயருடன் காசிவாசி என்று போட்டுக்கொள்வார்கள். குமரகுருபரர் நெடுங்காலம் காசியில் வாழ்ந்தவர். குமரகுருபரர் மடம் என்றே தனியாக இருக்கிறது. எல்லா மாநிலத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய பிராமணர்கள் உண்டு. தமிழ் அய்யர்களின் ஒரு சமூகமே காசியில் இருக்கிறது.
காசி அழகற்ற நகரம். அதன் நெரிசலுக்கு ஈடு இணையே கிடையாது. காரணம் இன்றைய வண்டிகள் ஏதும் பழக்கத்துக்கு வராத மிகபப்ழங்காலத்தில் அதன் பெரும்பகுதி உருவாக்கப்பட்டுவிட்டது. மிக மிக குறுகலான சந்துகளான் ஆனது காசி. சந்துகள் எல்லாம் எப்படியோ கங்கையின் படிக்கட்டு ஒன்றை நோக்கி சென்று இறங்கும். தெருக்கள் கடப்பைக்கல் பாவபப்ட்டவை. பெரும்பாலான சந்துகளில் மனிதர்கள் மட்டுமே நடக்க முடியும். சற்றுப் பெரிய சந்துகளில் சைக்கிள் ரிக்ஷாக்கள் நகரும். சைக்கள் ரிக்ஷாக்கள்தான் இப்பகுதியின் அதிகமாக உள்ள வாகனங்கள்.
ஆனால் காசியளவுக்கு சுவாரஸியமான இன்னொரு நகரம் இந்தியாவில் இல்லை. பலவகையான மக்கள் வந்து குழுமியபடியே இருக்கிறார்கள். தெருக்களில் எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு விசித்திர முகம் தென்படும். சின்னச்சின்ன சந்துகளில் வாழ்க்கை நுரைத்துக் கொந்தளிக்கிறது. மக்கள்மீது பாசம் கொண்ட ஒருவன் காசியை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுவான்.
காசி மரணத்தின் நகரமும் கூட. இங்கே மரணம்தான் முக்கியமான தொழில் முக்கியமான பேசு பொருள். பொழுதுபோக்கும் மரணம்தான். காசிஎன்றாலே பிரபலமான மணிகர்ணிகா கட், அரிச்சந்திர கட் என்ற இரு பெரும் சுடலைப்படிக்கட்டுகள்தான் நினைவுக்கு வரும். காசியில் ஒருபோதும் சிதை அணையக்கூடாது என்று ஒரு வரம் உள்ளதான். காசிவாசி காலபைரவ மூர்த்திக்கு சிதைதான் பலி. அந்த வரம் இன்றுவரை இல்லாமலாகவில்லை. எப்போதும் சுடலைப்படிகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிணங்கள் எரிய பிணங்கள் மஞ்சள் சரிகை மூடி காத்து கிடக்கும். பிணங்களை சைக்கிளில் வைத்து கட்டியபடி சந்துகளில் ஓட்டிவருவார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களின் மேலே ஏற்றி வருவார்கள். சாற்றி வைத்து விட்டு அமர்ந்து டீ குடிப்பார்கள். காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.
காசி அன்னியர்களின் நகரம். இந்தியாவெங்கும் இருந்து சாமியார்களும் பைராகிகளும் காசிக்குதான் வந்துகொண்டிருக்கிறார்கள். விதவிதமான சாமியார்களை இங்கே காணாலாம். அஹோரிகள் என்று சொல்லப்படும் கரிய உடை தாந்த்ரீகர்கள், நாகா பாபாக்கள் என்று சொல்லபப்டும் நிர்வாணச் சாமியார்கள் அவர்களில் உக்கிரமானவர்கள். இதைத்தவிர உலகம் முழுக்கவிருந்து ஹிப்பிகள் நாடோடிகள் ஓரினச்சேர்க்கையாளர்கள் போதை அடிமைகள் காசிக்கு வந்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் காசியில் இடமிருக்கிறது.
காசி போதையின் நகரம். போதை என்றால் கஞ்சா அல்லது சரஸ் அல்லது ஃபாங். கஞ்சாகுடிக்கும் சிலும்பிகளை தெருவில் போட்டு விற்கிறார்கள். எங்கே கைநீட்டினாலும் கஞ்சா கிடைக்கும். மேலும் தீவிரமான போதைப்பொருட்களும் சாதாரணமாகக் கிடைக்கும் என்று சொன்னார்கள். காலையின் கடுங்குளிரில் நடகக்ச்சென்றால் படித்துறை ஓரமாக சாமியார்கள் கஞ்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். காசி வைராக்யத்தின் துறவின் நகரம். காசி பைத்தியத்தின் நகரம். காசி சுடலைச் சாம்பல் பூசிய பித்தனின் வாசஸ்தலம்.
காசியில் கலைகளும் இலக்கியமும் தத்துவமும் செழித்திருந்தன. இன்றும் காசி இவற்றின் தலைநகர்தான். கபீர் ரவிதாஸ், முன்ஷி பிரேம்சந்த் போன்ற பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் இங்கே வாழ்ந்தார்கள். உஸ்தாத் பிஸ்மில்லா கான், ரவிசங்கர் போன்ற இசைமேதைகளின் நகரம் இது. காசியின் தத்துவ சதஸுகள் புகழ்பெற்றவை. காசிவித்யாபீடம் இன்று காசி பல்கலைகழகமாக பெருகிவளர்ந்துள்ளது. பாரதி தன் தத்துவக் கல்வியை காசியிலேயே பெற்றார்.
காசியின் மொழி இந்தியாக இருந்தாலும் இங்குள்ள பூர்வீக மொழி போஜ்புரிதான். போஜ்புரி சம்ஸ்கிருதத்தின் அபப்பிரம்ஸமொழி என்பார்கள். அவிமுக்தகா, ஆனந்தகானனம், மகாமசானம், சுரந்தானனன், பிரம்ம வர்த்தம், ரய்மகம் போன்ற பல பெயர்கள் காசிக்கு புராணங்களில் உண்டு. ரிக் வேதத்திலேயே சிவருத்ரனின் இருப்பிடமாக காசி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வரணாசிமேல் படையெடுத்த முதன் அன்னிய ஆட்சியாளர் முகமது கஜினி [1033] பின்னர் முகமது கோரி. [1193] இவர்களால் இந்நகரம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறது. சிலவருடங்களுக்குள் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அக்பர் காலத்தில் இந்நகரத்தை புதுப்பிக்க நிதியுதவியும் ஊக்கமும் அளிக்கப்பட்டது. முகலாய கட்டிடக்கலை பாணியிலான படித்துறைகளும் அரண்மனைகளும் அமைந்தன. ஆனால் ஔரங்கஜீப் இந்நகரை அழித்து இதன் பெயரையும் முகம்மதாபாத் என்று மாற்றினார்.
பின்னர் மராட்டியர்கள் காசியைக் கைப்பற்றினார்கள். இன்றுள்ள காசி மராட்டியர் காலத்தில் இடிபாடுகளில் இருந்து மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. மராட்டிய வம்சத்தவரான மன்னர் காசியின் சிற்றரசரானார். இவர்கள் காசியின் மறுகரையில் ராம்நகர் என்ற ஊரை நிறுவி காசியை ஆண்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்து சுதந்திரம் கிடைப்பதுவரை நீடித்தனர்.
காலை பத்து மணிக்கு காசிப் படித்துறைகளுக்குச் சென்றோம். ராஜேந்திரபிர்சாத் கட்டில் இறங்கி அஸ்ஸி நோக்கிந் அடந்தோம். உயர்ந்த கோட்டை முகப்புகள் போன்று ராஜஸ்தானி, முகலாய பாணிகளில் சிவந்த கற்களால் உப்பரிகைகள் மற்றும் பெரும் தூண்களுடன் கட்டப்பட்ட படித்துறைகள் காசிக்கு தொன்மையின் கம்பீரத்தை அளிக்கின்றன. விஜயநகர் கட் வேறு வகையில் கம்பீரமானது. காசியின் ஏராளமான கட்டிடங்கள் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் கிடந்து உள்ளூர் வாசிகளால் கைப்பற்றப்பட்டு இன்று விடுதிகளாக உள்ளன.
வெயில் கொளுத்தியது. வசந்தகுமாரும் கல்பற்றா நாராயணனும் அவர்களால் நடக்கமுடியவில்லை என்று சொல்லி அறைக்குக் கிளம்பிவிட்டார்கள். செந்திலும் சிவாவும் ராணாகட்டில் இறங்கி குளித்தார்கள். 15 நாள் முன் கங்கையில் பெருவெள்ளம் வந்திருக்கிறது. மேலே உள்ள விடுதிகள் வரை வெள்ளம். அதனால் மலைமலையாக சேறு படித்துறைகளை மூடியிருந்தது
நாங்கள் அரிச்சந்திரா கட்டை அடைந்தோம். அங்கே நான்கு பிணங்கள் இருந்தன. இரண்டு பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. காசியில் சிதை உடலின் முக்கால் பங்குக்கு மட்டுமே அடுக்கப்படும். தலையும் கால்களும் வெளியே கிடக்கும். உடல் எரிந்து வயிறு பிளந்து நீர் பொருள் வெளியேறியதும் உடலை அப்படியே அமுக்கி எரிந்து உருகிக்கொண்டிருக்கும் கால்களை குச்சியால் மடித்து உள்ளே தள்ளுவார்கள்.
எரிந்த கால் மடிக்கப்பட்டபோது சிவா ”அய்யோ” என்று கூவிவிட்டார். தலை ஒரு துணியால் மூடப்பட்டிருந்தது. வெப்பத்தில் அது மெல்ல உருகி மண்டை ஓட்டு வடிவை காட்டியது. காசியில் பிணங்கள் அரைகுறையாக நீரில் விடப்படும் என்பது பொய். எரிந்த சாம்பலின் சிறு பகுதி மட்டும் உறவினருக்கு வழங்கப்பட்ட பின் மிச்சம் படகுகளில் ஏற்றி மறுகரையில் உள்ள மயானத்துக்கு செல்லும். அதற்கான படகுகள் கங்கையில் அசைந்து நின்றன.
காசியில் சிதைக்கு பயங்கரம் இல்லை. கூட்டம் கூட்டமாக நின்று சிதையை வேடிக்கை பார்த்தார்கள். சாதாரணமாக சிரித்துப் பேசிக்கொண்டு வேர்க்கடலை தின்றார்கள். நாங்கள் ஒரு தண்ணீர் புட்டி வாங்கச் சென்றோம். குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பிணம் ஆடோரிக்ஷாவின் மீது கட்டப்பட்டு வந்தது.
அஸ்ஸி கட்டுக்கு வந்தபோது மழை பிடித்துக் கொண்டது. சற்றுநேரம் ஒதுங்கி நின்றோம். ஒரு மாபெரும் எருமை வந்து கிருஷ்ணனிடம் ம்ரே? என்று கேட்டது. அது வழக்கமாக ஒதுங்கி நிற்கும் இடமாக இருக்கலாம். அங்கிருந்து ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி புதிய பாலம் வழியாக கங்கையை கடந்து ராம்நகர் சென்றோம். காசி மகாராஜா குதிரை ஓடுவதற்காக போட்ட செங்கல் சாலையில் கடக்டவென ரிக்ஷா சென்றது.
ராம்நகர் அரண்மனை கங்கை கரையில் ஒரு பெரிய கோட்டைபோல எழுந்து நிற்கிறது. கோட்டைக்குள் ஒரு பெரிய அருங்காட்சியகம் உள்ளது. மகாராஜாவின் பழைய கார்கள் சாரட் வண்டிகள் பல்லக்குகள் அம்பாரிகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன. இப்பொருட்களின் பரிணாமத்தை அறிய உதவும் மிகசிறந்த சேகரிப்பு இது. சாரட் போலவே இருக்கும் பழைய ஃபோர்டு கார்கள், ஸ்டூடிபேகர் கார்கள். சாரட் வண்டிகள் மெல்ல மெல்ல அதிர்வுசமனிகள் சேர்க்கப்பட்டு பிரம்மாண்டமாக மாறி வந்திருப்பதைக் காணலாம். பழைய கார்கள் அனைத்துமே அரச கம்பீரத்துடன் தான் உள்ளன. அவை அவசியப்பொருட்கள் என்பதற்குமேலாக ஆடம்பரப்பொருட்களாகவே இருந்திருக்கிறன. வெள்ளியில் தந்தத்தில் பித்தளையில் மூங்கில்ல் மரத்தில் செய்யப்பட்ட விதவிதமான பல்லக்குகள்…
மகாராஜா துப்பாக்கிசுடுவதில் நிபுணர். நாணயங்களை மேலே எறிந்து சுடுவாராம். சுட்ட நாணயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் 1800 கள் முதல் ஸ்மித் ஆன் வெஸ்சன், கோல்ட் வகை வரை. அதேபோல உலகம் முழுக்க உள்ள பலவகையான வாட்கள். ஜப்பானிய கொரிய சீப டச்சு வாட்கள். கலைப்பொருள் என்றாகும்போது கொலைக்கருவிகள் கூட அழகானவையாக ஆகிவிடுகின்றன.
மதியம் மூன்று மணிக்கு அறைக்கு திரும்பி உடனே படுத்து தூங்கிவிட்டோம்.நான் சாப்பிடவேயில்லை. அத்தனை களைப்பு. ஐந்து மணிக்குத்தான் எழுந்தேன். உடனே கிளம்பி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது. சிவப்புச்சாயமிடப்பட்ட சிறிய கோயில் அப்பகுதி இடிபாடுகளாகக் கிடந்து தன்னிச்சையாக உருவாகி வந்ததாகையால் மிகமிக நெரிசலானது. கோயிலுக்கு இருவர் மட்டுமே இடிக்காமல் செல்லக்கூடிய சந்து வழியாகவே செல்லவேண்டும். கடுமையான போலீஸ் சோதனை. செல் ஃபோன்கள் அனுமதி இல்லை
அதிக கூட்டம் இல்லை என்றாலும் நெரிசல் இருந்தது. காசியில் நாமே லிங்கத்துக்கு நேராக பூஜை செய்யலாம் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் எந்தவிதமான ஒழுங்கும் முறையும் இல்லாத இடம் இது. நெடுங்காலம் இடிபாடுகளாகக் கிடந்த பின் மீட்கப்பட்டு தன்போக்கில் உருவாகிவந்தது. இந்த இடத்தை கைப்பற்றி வைத்திருந்த படகோட்டும் குகா சாதியினருக்கு இப்பகுதி மீது மேலாதிக்கம் உள்ளது. பாரம்பரியமான சடங்குகள் முறைகள் எல்லாம் மறைந்துவிட்டன. நாடெங்கும் இருந்து வந்த பல்வேறு இன மக்கள் அவர்களுக்கு தோன்றிய வகையில் வழிபடுகிறார்கள். தொட்டு வணங்குவது தழுவ முற்படுவது மேலேயே விழுந்துவிடுவது எல்லாம் உண்டு.
காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஔரங்கஜீப் பழைய கோயிலை இடித்துக் கட்டிய பழைய மசூதியின் கும்பம் உள்ளது. அதற்கு கடுமையான போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது. அருகே விசாலாட்சி அன்னபூரணி ஆலயங்களைக் கண்டுவிட்டு தஸாஸ்வமேத கட்டுக்கு சென்றோம்.
ஏழரை மணிக்கு அங்கே கங்கா ஆர்த்தி சடங்கு உண்டு. கங்கையை தெய்வமாக உருவகித்து அப்படித்துறையை கருவறையாக ஆக்கி செய்யபபடும் விரிவான பூஜைதான் அது. சங்கு ஊதி மலரும் தூபமும் காட்டி விளக்கால் ஆரத்தி எடுப்பார்கள். ஐந்து இளம் பூசாரிகள் ஒரு நடனம் போல நிதானமாக ஒத்திசைவுடன் செய்யும் இந்த பூஜை ஒரு அழகிய கலைநிகழ்ச்சி போலவும் இருக்கும். ஏராளமான பேர் கூடுவார்கள். கங்கையின் பழைமையும் அதன் மாட்சியும் நம் நினைவில் இருந்தால் இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்ச்சியே.
எட்டரை மணிக்கு கூட்டம் கலைந்தபின் நாங்கள் ஒரு படகு அமர்த்திக் கொண்டு கங்கையில் உலவினோம். பௌர்ணமிக்கு ஒருநால் முந்திய நிலவு வானில். நல்ல காற்று. கரையில் ஒளியுடன் சூழ்ந்த ஓங்கிய படித்துறை கட்டிடங்கள். ”நல்லாத்தான் இருக்கு ஜெயன்”என்று வசந்தகுமார் அவரது உச்சகட்ட பரவசத்தை பதிவுசெய்தார்.
மணிகர்ணிகா கட்டில் பிணங்கள் எரியும் செவ்வெளிச்சம் . அங்கிருந்து எதிர் ஓட்டத்தில் சென்று அரிச்சந்திரா கட்டத்தை பார்த்தோம். அங்கும் சிதைகள் செவ்விதழ்களாக நெளிந்தன. மீண்டும் கரைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றோம். நல்ல தூக்கம்.
காலையில் நான் சிவா செந்தில் மூவரால் மட்டுமே எழ முடிந்தது. மற்றவர்களுக்கு களைப்பு. நாங்கள் கங்கைக்குச் சென்று ஒரு படகு அமர்த்தி மறுகரைக்குச் சென்று அங்கே தெளிவாக ஓடிய கங்கை நீரில் நீந்திக் குளித்தோம். இந்தப்பயணம் காவேரிக்கரையில் தொடங்கி கங்கையில் உச்சம் கொண்டிருக்கிறது. நடுவே கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை போன்ற நதிகள். தீர்த்தாடனம் என்று பழையவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். நம் மண்ணுக்கு ஆத்மா போல ஓடும் இப்பெருநதிகள் அன்றி கண்முன் தெரியும் தெய்வங்கள் பிறிதில்லை என்று உணர்ந்திருந்தார்கள் முன்னோர்.