‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34

பகுதி ஏழு : பூநாகம் – 4

விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா?” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள்.

விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா?” என்றார். “இல்லை” என்றான் கனகன். “மதுவனத்தில் இருந்து பலராமரே அவரை அனுப்பியிருக்கிறார். சூரசேனரின் முத்திரைத் தூதுடன் வந்திருக்கிறார்.” விதுரர் நிமிர்ந்து நோக்க “பலராமர் எந்த அரசியலிலும் ஈடுபடுவதில்லை. அவரது இளையோனுடன் இணைந்து மதுராவை வென்றபின்னர் அவர் தன் தந்தை வசுதேவரை அரசராக்கிவிட்டு மதுவனம் திரும்பிவிட்டார். அவருக்கு அவரது பாட்டனார் சூரசேனரே அண்மையானவராக இருக்கிறார். அவரது அகநிலை இன்னமும்கூட ஓர் அரசிளங்குமரருக்குரியதல்ல. ஆயர்குடி இளைஞனுக்குரியது என்கிறார்கள்” என்றான் கனகன்.

“ஆம்” என்றார் விதுரர். “அவர் மதுவனத்தின் காடுகளில் கன்று மேய்த்து எளிய ஆயர்பாடி வாழ்க்கையையே வாழ்கிறார். நம் இளவரசரும் அவருடன் கானுலாவி கதாயுத்தம் கற்றுக்கொண்டிருப்பதாகவே செய்தி வந்திருக்கிறது. இப்போது வந்திருக்கும் முத்திரைத்தூதில் இருப்பது சூரசேன அரசின் இலச்சினை அல்ல. மதுராபுரியின் இலச்சினை. மதுராபுரியின் இளவரசராக அதை பலராமர் அனுப்பியிருக்கிறார்” என்றான் கனகன்.

விதுரர் “சென்ற சில மாதங்களாகவே நான் மதுராபுரி பற்றிய செய்திகளை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். நாம் அக்கறைகொள்ளவேண்டிய சூழலே அங்குள்ளது” என்றார். கனகன் அதை அறிந்தவன் போல தலையசைத்தான். “நான் இளவரசரையும் அவரது தூதையும் பார்க்கிறேன். அதைப்பற்றிய முடிவை நான் எடுத்தபின்னர் அவர் அரசரை சந்தித்தால் போதுமானது. நீ விரைந்து சென்று இளவரசரிடம் என் அலுவலகத்தில் காத்திருக்கும்படி நான் கோரியதாக சொல்” என்றார் விதுரர். கனகன் தலைவணங்கி முன்னால் ஓடினான்.

விதுரர் அவரது அலுவலகத்தை அடைந்தபோது மூச்சிரைத்தார். அவரைக் கண்டதும் அங்கே இருந்த கனகன் எழுந்து “வணங்குகிறேன் அமைச்சரே” என்றபின் மேலே சொல்ல வாயெடுத்தான். “எங்கே இளவரசர்?” என்றார் விதுரர். “சற்றுமுன் இங்கே சகுனி வந்தார்…” என கனகன் சொல்லத் தொடங்கவும் “இங்கா?” என்றார் விதுரர். “ஆம்… இளவரசர் வந்த செய்திகேட்டு சந்திக்க ஆவல்கொண்டு வந்ததாகச் சொன்னார். கூடவே அவர் பாண்டவ இளவரசர்கள் மூவரையும் அழைத்து வந்தார்.”

விதுரர் பதற்றத்துடன் “அவர்களை எங்கே பார்த்தாராம்?” என்றார். “வரும் வழியில் அவர்கள் அரண்மனைக்கு வந்துகொண்டிருப்பதைப் பார்த்தாராம்… துரியோதனனை பார்க்க வாருங்கள் என அழைத்திருக்கிறார். அவர்களால் அதை மறுக்கமுடியாது அல்லவா?” என்றான் கனகன். “இப்போது அவர்கள் எங்கே?” என்றார் விதுரர். “அவர்களை அழைத்துக்கொண்டு அரசரைப் பார்க்க அவரே கிளம்பிச்சென்றுவிட்டார்.”

விதுரர் உரத்த குரலில் “மீண்டும் வென்றுவிட்டார்… உடனே நாம் செல்லவேண்டும். நாம் செல்வதற்குள் சகுனி பலராமரின் தூதை அரசரிடம் சொல்லிவிடாமலிருக்கவேண்டும்…” என்றார். சால்வையை சுற்றிப்போட்டுக்கொண்டு அவர் ஓட அவருடன் விரைந்தபடி “ஏன் அமைச்சரே?” என்றான் கனகன். “அந்தத் தூதில் என்ன இருக்கும்?”

“மூடா… இன்று நாம் பாண்டவர்களை அரசரை தனியாக சந்திக்கச்செய்து அவர் உள்ளத்தை ஆற்ற எண்ணியிருந்தோம். சகுனியுடன் அவர்கள் சென்றால் அது நிகழாது. சென்றதுமே துரியோதனன் கொண்டுவந்த பலராமரின் தூதை சகுனி அளித்துவிட்டால் பேச்சு முழுக்க அப்பக்கம் திரும்பிவிடும்.” விதுரர் குரல் தாழ்த்தி “மேலும் பாண்டவர் முன் அது பேசப்படுமென்றால் தானே அரசர் என்று காட்டுவதற்காக திருதராஷ்டிரர் விரைந்து பிழைமுடிவுகளையும் எடுக்கக்கூடும்” என்றார்.

அவர்கள் புஷ்பகோஷ்டத்தை அடைந்தனர். விதுரர் மூச்சுவாங்கி வியர்வையில் நனைந்திருந்தார். விப்ரர் “அரசர் படுக்கையறையில் இல்லை அமைச்சரே. மன்றறையில் அவருடன் இளவரசர் சகுனியும் நம் இளவரசர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். “அதைப்பற்றிப் பேசத்தான் வந்தேன்” என்றார் விதுரர். மன்றுசூழ் அறைக்குள் கணிகர் இருக்கிறாரா என்ற எண்ணம் விதுரர் நெஞ்சில் எழுந்தது. இருக்கிறார் என உள்ளுணர்வு சொன்னது.

உள்ளே வரும்படி ஆணை வந்ததும் தன்னுள் சொற்களை கோர்த்துக்கொண்டு விதுரர் உள்ளே சென்றார். திருதராஷ்டிரரின் முகத்தைக் கண்டதுமே தெரிந்துவிட்டது, தூது அவருக்கு சொல்லப்பட்டுவிட்டது என்று. ஓலை அவர் அருகே மூங்கில் பீடத்தில் கிடந்தது. தன்னைக் கோர்த்துக்கொண்டு அரசரை வணங்கி பீடத்தில் அமர்ந்துகொண்டார். நின்றிருந்த துரியோதனன் அவருக்குத் தலைவணங்கி புன்னகைசெய்ய சகுனியும் மெல்ல தலையசைத்து புன்னகையுடன் வணங்கினார். துரியோதனனுக்குப் பின்னால் துச்சாதனன் நின்றிருந்தான். மூத்த கௌரவர் இருபதுபேர் அப்பால் சுவரை ஒட்டி நின்றிருந்தனர். விதுரரைக் கண்டதும் அவர்களும் பாண்டவர்களும் அமைதியாக தலைவணங்கினர். சௌனகர் சற்றே எழுந்து விதுரரை வரவேற்றபின் அமர்ந்துகொண்டார்.

கணிகர் சற்று அப்பால் சிறியபீடத்தில் மின்னும் கண்களுடன் உடலை ஒடித்து வைத்திருப்பது போல அமர்ந்திருந்தார். அவர் எப்போதுமே அமர்வதற்கு அறைகளின் இருண்டபகுதிகளையே தேர்ந்தெடுக்கிறார் என்று விதுரர் எண்ணிக்கொண்டார். அத்துடன் அரசர் காதுகளில் மிகத்தெளிவாக அவரது சொற்கள் விழும் இடமாகவும் அது இருக்கும். அவர் அமர்ந்திருந்தது திருதராஷ்டிரரின் வலது பின்பக்கம். அவர் எப்போதும் தாடையை அப்பகுதி நோக்கியே தூக்குவார் என்பதை உற்று கணித்திருக்கிறார்.

மெல்லியகுரலில் இடைவெளியின்றி பேசிக்கொண்டே செல்வது கணிகரின் வழக்கம். அதை ஒரு உத்தியாகவே கொண்டிருந்தார். இடைவிடாத அந்தப்பேச்சு ஊடறுத்து விவாதிக்கவோ பிற வினாக்களுக்குச் செல்லவோ இடைவெளி அளிக்காதது. நாகத்தை மகுடி என கேட்பவர்களை மயங்கச்செய்துவிட்டிருக்கும் அது. அச்சொற்பெருக்கின் நடுவே தான் வலியுறுத்தும் சொற்றொடர்களை மட்டும் நன்றாக அழுத்தி இடைவெளிவிட்டு இன்னொருமுறை சொல்வார். சற்று கழித்து அதேவரிகளை அப்படியே மீண்டும் இருமுறை சொல்வார். அவை கேட்பவரின் உள்ளத்தில் மறு எண்ணங்கள் அற்றவையாக பதிந்துவிடும்.

கணிகர் அவரது முதன்மையான கருத்தை விவாதிப்பதே இல்லை என்பதை விதுரர் கண்டிருந்தார். அவற்றை அவர் கூரிய சொற்றொடர்களாக ஆக்கி சொற்பெருக்கின் நடுவே திரும்பத்திரும்ப வரும்படி அமைத்துக்கொள்வார். அவற்றைச் சுற்றி எளிய கூற்றுகளை அமைத்து அவற்றுக்கே வாதங்களையும் உதாரணங்களையும் அளிப்பார். அவரது பேச்சைக்கேட்பவர்கள் அந்த முதன்மைக்கருத்தை தங்களை அறியாமலேயே பெற்றுக்கொண்டிருப்பார்கள். அதை தங்கள் கருத்தாக வளர்த்துக் கொள்வார்கள். சற்று நேரம் கழித்து அவர்கள் அதை தங்கள் எண்ணமாகவே முன்வைப்பார்கள்.

கணிகர் அங்கிருப்பதே விதுரரை எரிச்சல்கொள்ளச் செய்தது. அப்பகுதியை நோக்கி திரும்பலாகாது என எண்ணிக்கொண்டார். அப்போதுதான் தான் இருக்கும் இருக்கையின் இடர் என்ன என்று அவருக்குப்புரிந்தது. திருதராஷ்டிர மன்னரின் நேர்முன்னால் அவ்விருக்கை இருந்தது. அவர் தன்னை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருப்பார். உடலசைவின் ஒலிகளைக் கொண்டு பார்வையளவுக்கே மனிதர்களை அறிய அவரால் இயலும். அந்த விழியற்ற நோக்கின் முன் அவர் பாதுகாப்பின்றி அமர்ந்திருக்கவேண்டும். கணிகர் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து அவர் தன் குரல்மூலம் அவைக்கு வந்துவிட்டு மீண்டும் மறைந்துவிடமுடியும்.

வாசலில் சேவகன் தோன்றி அமைச்சர்கள் வந்திருப்பதை அறிவித்தான். திருதராஷ்டிரர் கைகாட்டியதும் அவன் சென்று அமைச்சர்களை உள்ளே அனுப்பினான். அத்தனை அமைச்சர்களும் வந்திருப்பதை விதுரர் வியப்புடன் நோக்கியபின் சகுனியை நோக்கினார். சகுனியின் விழிகள் எண்ணங்கள் ஒழிந்தவையாக இருந்தன. அமைச்சர்கள் அமர்ந்துகொள்ளும் ஓசைகள் கேட்டன. திருதராஷ்டிரர் மோவாயில் கைவைத்துக்கொண்டு பீடத்தில் சற்று சாய்ந்தவர் போல அமர்ந்திருந்தார்.

அனைவரும் அமர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதும் திருதராஷ்டிரர் “முதன்மைத் தூது ஒன்று வந்துள்ளது அமைச்சர்களே. அதை நாம் விவாதிக்கவேண்டும் என்றார் காந்தார இளவரசர்” என்றபின் துரியோதனனிடம் “அமைச்சர்களிடம் தூதை முறைப்படி சொல்…” என்றார்.

துரியோதனன் “அமைச்சர்களே, நான் மதுராபுரியின் இளவரசர் பலராமரிடமிருந்து தூதுடன் வந்திருக்கிறேன்” என்றான். “முறைமைப்படி அங்குள்ள சூழலையும் பின்புலத்தையும் முதலில் சொல்கிறேன். நீங்களும் அவற்றை பொதுவாக அறிந்திருப்பீர்கள்.”  விதுரர் கண்களை மூடிக்கொண்டார். திருதராஷ்டிரர் தன் உடல்வழியாக வெளிப்படுத்தும் சொற்களை பாராமலிருந்தால் தன்னால் சீராக சிந்திக்கமுடியும் என்று எண்ணினார். அறைக்குள் சுவர் ஓரமாக நின்றிருந்த பாண்டவர் மூவரும் குழப்பமான உடலசைவுகளைக் காட்டினர். அவர்களை திருதராஷ்டிரர் அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.

“அமைச்சர்களே, மதுராபுரி யாதவர்கள் யயாதியின் மைந்தர் யதுவின் வழி வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யமுனைக்கரை முழுவதும் பரவி பல சிற்றரசுகளை அமைத்திருக்கிறார்கள். எண்ணிக்கையில் அதிகமானவர்கள் அல்ல என்றாலும் பசுச்செல்வத்தால் களஞ்சியம் நிறையப்பெற்றவர்கள். இந்த பாரதவர்ஷத்தின் வளர்ந்துவரும் ஆற்றல் யாதவர்களே என்பது அனைவரும் அறிந்ததே” என்று துரியோதனன் சொல்லத் தொடங்கினான்.

“எட்டு பெரும் யாதவகுலங்களில் வல்லமை வாய்ந்தவை ஹேகயகுலமும் விருஷ்ணிகுலமும். கோசலத்தை ஆண்ட இக்ஷுவாகு குலத்து அரசனான சத்ருக்னன் லவணர்களை வென்று மதுராவை அமைத்த காலம் முதல் அவர்களே மதுராவை மாறிமாறி ஆண்டுவருகிறார்கள். ஹேகயனே இன்றைய மதுராவை பெருநகராக்கியவன். சென்ற யுகத்தில் அக்குலத்தைச்சேர்ந்த மாமன்னன் கார்த்தவீரியன் மதுரா நகரை பேரரசாக ஆக்கினான். கங்கைநிலத்தையும் வென்று இமயச்சாரல் வரை சென்றது அவன் கோல்.”

துரியோதனன் தொடர்ந்தான் “நம் யுகத்தில் விருஷ்ணிகுலத்து அரசர் விடூரதர் மதுராபுரியை ஆண்டார். அவருக்குப்பின் அவர் மைந்தர் சூரசேனர் ஆட்சிக்குவந்தார். விடூரதனின் தம்பியான குங்குரர் அன்று அனைத்து படைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் அனைத்து குலநெறிகளையும் மீறி விடூரதனின் குடியை மதுராபுரியில் இருந்து துரத்திவிட்டு அரசை கைப்பற்றிக்கொண்டார். சூரசேனனின் மைந்தர் ஸினி தன் மகன் போஜனுடன் வடக்கே சென்று அமைத்ததே மார்த்திகாவதி என்ற நகர். அவர் போஜர்குலத்தில் மணம்புரிந்து போஜர்களின் ஆட்சியை அங்கே அமைத்தார். மார்த்திகாவதி இன்று நம் சமந்த நாடு. மார்த்திகாவதியின் இளவரசி நம் அரசியாக அமர்ந்திருக்கிறார்.”

“குங்குரருக்குப்பின் அவரது மைந்தர் வஹ்னியின் கொடிவழி மதுராவை ஆண்டது. அவ்வரிசையில் வந்த ஆகுகர் காலத்தில் ஆக்னேயபதங்கள் விரிவடைந்தன. மதுராபுரி வணிக மையமாகியது. வணிகப்பாதைகளுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டதனாலும் கங்கைசெல்லும் படகுகளை ஆசுரநாட்டு கொள்ளையர்களிடமிருந்து காக்கவேண்டுமென்பதனாலும் ஆகுகர் மகதத்தின் சிற்றரசாக அமைய அவரே முன்வந்து ஒப்புக்கொண்டார். மகதத்துக்கும் மதுராவுக்குமான உறவு அன்று தொடங்கியது. மகதமன்னர் மகத்ரதரின் படைகளை ஆகுகர் கொண்டுவந்து யமுனைக்கரையிலும் ஆக்னேயபதங்களிலும் நிறுத்தினார். அன்றுமுதல் மதுராபுரியை மகதம் தன்னுடைய நெய்க்களஞ்சியமாகவே எண்ணி வந்திருக்கிறது.”

“அமைச்சர்களே, யாதவப்பெருங்குலங்கள் குங்குரரின் கொடிவழியை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அந்த முறைமீறலை யாதவர்களின் தெய்வங்கள் ஒவ்வொரு பெருங்குல உண்டாட்டின்போதும் சன்னதத்தில் வந்து கண்டித்து தீச்சொல்லிட்டன. ஆனால் மகதத்தின் துணை இருக்கும்வரை யாதவர்களால் மதுராவைத் தாக்கி குங்குரரின் கொடிவழி வந்த மன்னர்களை வெல்லமுடியாது என்பதனால் வருடம்தோறும் வஞ்சினத்தை மீளுறுதி செய்துகொண்டு காத்திருந்தனர்” என்றான் துரியோதனன்.

“குங்குரரின் வழியில் வந்த உக்ரசேனர் மதுராவை ஆளும்காலத்தில் அவர் மகதத்தின் படைகளைக் கொண்டு யாதவர்களின் அரசுகளான மார்த்திகாவதியையும் மதுவனத்தையும் வென்று ஒரு பெரிய அரசை அமைக்கும் எண்ணம் கொண்டிருந்தார். பிதாமகர் பீஷ்மர் தலையிடக்கூடுமென்ற அச்சமே அவரை தயங்கச்செய்தது” என்று துரியோதனன் தொடர்ந்தான். “உக்ரசேனரின் மைந்தர் கம்சர் தந்தையை சிறையிட்டு அரசை வென்றார். அவர் அரசுசூழ்தலில் தந்தையைவிட தேர்ச்சியும் பேராசையும் கொண்டிருந்தார்.”

“கம்சர் முடிசூடிக்கொண்டபோது உத்தரமதுராபுரி உக்ரசேனரின் இளையவராகிய தேவகரால் ஆளப்பட்டது. மார்த்திகாவதி குந்திபோஜராலும் மதுவனம் சூரசேனராலும் ஆளப்பட்டது. மூன்று அரசுகளையும் வெல்வதற்கான வாய்ப்புகள் கம்சருக்கு கனிந்து வந்தன. சூரசேனரின் மைந்தர் வசுதேவர் அனைத்து குலத்தடைகளையும் உதறிவிட்டு உக்ரசேனரிடம் அமைச்சராக வந்துசேர்ந்தார். கம்சரின் இளமைக்காலத் தோழரும் பேரமைச்சரும் ஆனார். மதுவனத்துடன் மதுராபுரிக்கு இருந்த பகை அழிந்தது. உத்தரமதுராபுரியின் தேவகரின் மகள் தேவகியை வசுதேவருக்கு மணம்புரிந்துவைத்தால் உத்தரமதுராபுரியையும் தன் கொடிக்கீழ் கொண்டுவர முடியுமென கம்சர் எண்ணினார். தேவகியும் வசுதேவரும் காதல்கொண்டிருந்தனர். யாதவகுலங்களில் மணமகனை பெண் தேர்வுசெய்யும் முறையே நிலவியது. மார்த்திகாவதியின் இளவரசியான குந்திதேவியை மணந்துகொண்டால் அவ்வரசும் தன் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கம்சர் எண்ணினார்.”

“மகதத்தை மீறிச்செல்ல கம்சருக்கு எண்ணமிருந்தது என்கிறார்கள். மதுராபுரியின் செல்வம் முழுக்க மகதத்துக்கு கப்பமாகவே சென்றுகொண்டிருந்தது. எஞ்சிய செல்வம் எல்லைகளைக் காப்பதற்கு செலவாகியது. யாதவர்களின் மூன்று அரசுகளையும் போரின்றி தன்னுடன் ஒன்றாக்க முடியுமென்றால் மதுராபுரி மகதத்துக்கு கப்பம் கட்டுவதை நிறுத்திவிடமுடியும். வெறும் ஐந்தே வருடங்களில் கருவூலம் நிறையும். வல்லமை வாய்ந்த படகுப்படை ஒன்றை அமைத்தால் யமுனையின் கரைகளை முழுக்க வெல்லமுடியும் என கம்சர் எண்ணினார்.”

“கம்சரின் கனவில் கார்த்தவீரியன் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருந்தார் என்கிறார்கள். தன்னை கார்த்தவீரியரின் மறுபிறப்பு என அவரே நம்பினாராம். இமயமலையடிவாரத்தில் கார்த்தவீரியர் படைகள் எதுவரை சென்றனவோ அதை விட மேலும் ஒரு யோசனை தூரம் தன் படைகள் சென்றாகவேண்டும் என அவர் சொல்வதுண்டாம்” துரியோதனன் சொன்னான். “ஆனால் தன் கனவுகளை மகதம் அறிந்துவிடக்கூடாதென்பதற்காக மகதத்தின் அரசர் ஜராசந்தரின் மகள்முறைகொண்ட இரு இளவரசிகளை அவர் மணந்துகொண்டார்.”

“ஆம், அதில் ஒரு கணிப்பு உள்ளது. அவ்விரு இளவரசிகளுமே ஆசுரநாட்டின் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள். மூத்த அரசி ஆஸ்தி ஆசுரகுடியான சௌரத்தைச் சேர்ந்தவர். பெரும்புகழ்கொண்ட அசுர சக்ரவர்த்தியான சூரபதுமரின் குலம் அது. இளையவரான பிராப்தி ஜராசந்தரின் தாய்வழியான ஜாரத்தைச் சேர்ந்தவர். மகதம் தன்னுடன் பகைகொண்டாலும் ஆசுரகுலங்களின் பின்துணை இருக்கும் என கம்சர் எண்ணியிருக்கலாம்” என்றார் சௌனகர்.

“கம்சரின் பொறுமையின்மையால் அனைத்துக் கணிப்புகளும் பொய்த்தன என்கிறார்கள்” என்று துரியோதனன் தொடர்ந்தான். “மார்த்திகாவதியின் இளவரசி குந்திதேவியை என் சிறியதந்தையார் பாண்டு மணந்ததன் மூலம் அது அஸ்தினபுரியின் சமந்தநாடாக ஆகியது. தேவகரின் மகள் சுருதையை நம் அமைச்சர் விதுரர் மணந்ததன்மூலம் அவரும் நம்முடன் உறவுகொண்டார். சினம்கொண்ட கம்சர் தேவகரின் மகளை சிறையெடுத்து வசுதேவருக்கு மணமுடித்தார். அதன்பின்னர்தான் அவருக்கு ஒன்று தெரிந்தது, யாதவ முடி என்பது பெண்வழிச் செல்வது என. அவருக்குப்பின் தேவகியின் மைந்தனுக்கே அரசு செல்லும் என்று அறிந்ததுமே அவர் நிலைகுலைந்தார். அந்த மைந்தன் அவரைக் கொல்வான் என்று நிமித்திகர் உரைத்ததும் அவர் பித்துப்பிடித்தவராக ஆனார்.”

“கம்சர் மதுராவில் ஆடிய கொலைநடம் போன்ற ஒன்றை பாரதவர்ஷம் கண்டதில்லை என்கிறார்கள். அச்செய்திகள் வெளியே தெரியாமலேயே அவர் பார்த்துக்கொண்டார். தேவகியையும் வசுதேவரையும் அவர் சிறையிட்டார். தன் தங்கையின் ஏழு குழந்தைகளை அவர் கொன்றார். எட்டாவது மைந்தர் மட்டும் எவருமறியாமல் கொண்டுசெல்லப்பட்டு கோகுலத்தின் யாதவகுடிகளிடம் வளர்ந்தார். அம்மைந்தனைக் கொல்வதற்காக அவன் வயதுள்ள அத்தனை யாதவக்குழந்தைகளையும் கம்சர் கொன்றார். அந்த வெறியாலேயே எஞ்சிய யாதவகுடிகளையும் முழுமையாக பகைத்துக்கொண்டார். வசுதேவர் ஹேகயகுலத்து ரோகிணியை முன்னரே மணந்திருந்தார். அவளில் அவருக்குப் பிறந்தவர் என் ஆசிரியரான பலராமர்.”

“என் ஆசிரியரும் அவரது இளவல் கிருஷ்ணனும் சேர்ந்து கம்சர் கொண்டாடிய குலக்கூடல் நிகழ்வுக்குச் சென்றனர். அங்கே கம்சரையும் அவரது தம்பியரையும் மல்லர்களையும் தோள்போருக்கு இழுத்து கொன்றனர். யாதவமுறைப்படி கம்சரை தன் கைகளால் கொன்ற கிருஷ்ணனுக்கு உரியதாகியது மதுராவின் மணிமுடி. அவர் அதை சிறையில் இருந்த தன் தந்தை வசுதேவருக்கு அளித்தார். வசுதேவர் மதுராவின் அரியணையில் தன் இரு மனைவியருடன் அமர்ந்தார். கிருஷ்ணர் வேதாந்த ஞானத்தைக் கற்க குருகுலம் தேடி இமயச்சாரலுக்குச் சென்றார். என் குருநாதரான பலராமர் மதுவனத்துக்கே சென்று அங்கே யாதவகுடிகளின் தலைவரானார்.”

“சென்ற சில ஆண்டுகளாக மதுராபுரியில் நிகழ்ந்ததை நாம் கூர்ந்து அறியத் தவறிவிட்டோம் அமைச்சர்களே” என்று துரியோதனன் தொடர்ந்தான். “கம்சரின் விதவைகளான ஜராசந்தரின் இரு மகள்கள் ஆஸ்தியும் பிராப்தியும் மீண்டும் மகதத்துக்கே சென்றுவிட்டனர். அது வசுதேவர் செய்த பெரும்பிழை. என் குருநாதரும் அவர் இளவல் கிருஷ்ணனும் மீண்டும் மீண்டும் சொல்லிச்சென்ற ஒன்றை அவர் கருத்தில் கொள்ளவில்லை. அவ்விரு ஆசுரநாட்டு அரசியரும் பலராமரையும் கிருஷ்ணனையும் தங்கள் மைந்தர்களாகவே எண்ணியவர்கள். அவர்கள் மதுராபுரியில் இருக்கும் வரைதான் மதுராபுரிக்கு பாதுகாப்பு என்றும் அவர்களும் தன் அன்னையரே என்றும் கிருஷ்ணன் கிளம்புகையில் தன் அன்னையிடமும் தந்தையிடமும் பலமுறை வலியுறுத்திச் சொன்னான்.”

“ஆனால் அதிகாரம் சிலரை பெரியவர்களாக்குகிறது, சிலரை மிகச்சிறியவர்களாக்குகிறது. வசுதேவர் நாள்தோறும் அகம் குறுகிக்கொண்டே இருந்தார். ஆசுரகுலத்து அரசியரை அவர் அவமதித்து திருப்பியனுப்பியதாக சொல்கிறார்கள். அவர்களை எந்த அரசு விழாக்களுக்கும் அழைக்கவில்லை. அவையில் அமரச்செய்யவில்லை. பின்னர் அவர்களின் ஆடையணிகளுக்கும் சேவகர்களுக்கும் நிதியளிக்கப்படவில்லை. இறுதியில் அரண்மனையை விரிவாக்கிக் கட்டவிருக்கிறோம் என்றபேரில் அவர்களை சேவகர்கள் வாழும் சிறு இல்லங்களுக்குச் செல்லும்படி சொன்னாராம் வசுதேவர். கிருஷ்ணனின் சொல் மேல் கொண்ட பற்றால் அவர்கள் அங்கும் இருந்தனர்.”

“கிருஷ்ணன் கிளம்பும்போது அவர்களிடமும் அவர்கள் நகரில் வாழவேண்டும் என்றும் திரும்பி வருகையில் அவர்கள் அங்கிருக்கவேண்டும் என்றும் கோரினான். அவர்கள் தன் அன்னையர் என்பதனால் அவர்களும் மதுராபுரிக்கு அரசியரே என்றான். அச்சொற்கள் அரசி தேவகியை கசப்படையச் செய்திருக்கலாம். அரசு மீண்டபின் அவரது உள்ளம் பொறாமையால் நிறைந்துவிட்டது என்கிறார்கள். தன் மைந்தனை பிறர் எண்ணுவதைக்கூட அவரால் தாளமுடியவில்லை. கோகுலத்து யாதவர்களான நந்தனும் யசோதையும் மதுராபுரிக்கு வரக்கூடாதென்று ஆணையிட்டார். தன் மைந்தன் மீண்டும் கோகுலம் செல்வதை தடுத்தார். தன் இன்பங்கள் அனைத்தையும் பிறர் பறித்துக்கொண்டதாக எண்ணினார். இளமைந்தனை கையால் கூடத் தொடமுடியாதவளானேன் என தினமும் உடைந்து அழுதார். ஆனால் தன் ஏழுமைந்தர்களின் இறப்புக்குக் காரணமானவன் என தன் கரிய மைந்தனையும் வெறுத்தார்.”

“ஆசுர அரசியர் இருவரையும் அரண்மனைப் பணிப்பெண்களாக பணியாற்றும்படி தேவகி ஆணையிட்டார் என்கிறார்கள்” என்று துரியோதனன் சொன்னான். “அவர்கள் அதற்கு மட்டும் ஒப்பவில்லை. அது தங்கள் பெருமைமிக்க அரசகுலத்திற்கு இழுக்காகும் என்றனர். அவ்வண்ணமெனில் உணவும் அளிக்கவியலாது என்று தேவகி சொல்லியபின் அவர்கள் மதுராவில் தங்கமுடியாமலாகியது. கண்ணீருடன் அவர்கள் திரும்பிச் சென்றனர். செல்லும்வழியில் ஒரு நீலக்கடம்பு மரத்தடியில் இரு கற்களை வைத்து கிருஷ்ணன் திரும்பிவரும்போது அவர்கள் அவனுக்களித்த வாக்குறுதியின்படி மதுராவிலேயே இருப்பதகாச் சொல்லும்படி சொல்லிவிட்டுச் சென்றனர்.”

“அவர்கள் மதுராவை நீங்கியபோதே ஜராசந்தர் செய்தியறிந்து உவகை கொண்டார். மகதப்படைகள் அதுவரை மதுராவை தாக்காதிருந்ததே ஆசுரகுலங்களின் தயக்கத்தால்தான். அந்தத் தடை நீங்கியது. அரசியர் இருவரும் மதுராபுரி எல்லைகடந்ததும் தன் படைத்தலைவனாகிய ஏகலவ்யனை அனுப்பி அவர்களை வரவேற்கச் செய்தார்” என்றான் துரியோதனன். மறைந்த பலபத்ரரின் மைந்தரும் அரண்மனை புரத்தலுக்குரிய அமைச்சருமான ஸ்வேதர் “துரோணாச்சாரியாரால் கட்டைவிரல் பெறப்பட்ட ஆசுரகுலத்து இளவரசன் அல்லவா?” என்றார்.

“ஆம், அமைச்சரே. அவன் தந்தை ஹிரண்யதனுஸ் மறைந்தபின் அவன் ஹிரண்யபதத்தின் அரசனாகிவிட்டான். கட்டைவிரல் இன்றியே அம்புவிடும் சதுரங்குலி என்னும் விற்கலை ஒன்றை அவனே உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள். அவனிடம் பாரதவர்ஷத்தின் மிகத்திறன் கொண்ட விற்படை ஒன்றிருக்கிறதாம். அவனை ஆசுரகுடிகள் ஹிரண்யகசிபுவின் மறுபிறப்பு என கொண்டாடுகிறார்கள். அவன் ஜராசந்தரின் தாய் ஜரையுடன் குலமுறை உறவு கொண்டவன். அவனுடைய அத்தைமுறை கொண்டவள் கம்சரின் இரண்டாவது அரசியான பிராப்தி.”

துரியோதனன் தொடர்ந்தான் “ஆசுர அரசியரை வரவேற்க ஜராசந்தர் ஏகலவ்யனை அனுப்பியது பெரும் அரசியல் உத்தி. மகதம் நேரடியாக மதுராமேல் படைகொண்டுசெல்லமுடியாது. உடனே அஸ்தினபுரி மதுராவுக்குத் துணைவரும். ஆனால் ஆசுரகுலத்தவர் படையெடுக்கலாம், அதில் தனக்குப் பங்கில்லை என மகதம் நடிக்க முடியும். அந்த சினத்தை மதுரா மீது ஆசுரகுலத்தவரிடம் உருவாக்க ஜராசந்தர் திட்டமிட்டிருக்கிறார். அதுவே நடந்தது. மெலிந்து சோர்ந்து கந்தலாடை அணிந்து பசித்து வந்த தன் அத்தையைக் கண்ட ஏகலவ்யன் உளம்கொதித்து அங்கேயே வில்தூக்கி மதுராவை அழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்தான். அசுர அரசிகள் மகதத்தை அடைந்தபோது மறுபக்கம் ஏகலவ்யனின் பெரும்படை நான்குபக்கமும் சூழ்ந்து கொண்டு மதுராவை தாக்கத் தொடங்கியது.”

“அஸ்தினபுரியில் பீஷ்மர் இருக்கும்வரை மதுராவை மகதம் தாக்காது என எண்ணியிருந்தான் கிருஷ்ணன். ஆகவே யாதவர்கள் படைவல்லமையுடன் இருக்கவில்லை. ஏழுநாட்களில் மதுராவை ஏகலவ்யன் பிடித்துக்கொண்டான். வசுதேவர் தன் மனைவியருடன் யமுனைவழியாக தப்பி ஓடி மதுவனத்தை சென்றடைந்தார். ஏகலவ்யன் படைகள் பதினைந்துநாட்கள் மதுராவை சூறையாடின. ஏகலவ்யன் ஆயிரம் படகுகளுடன் இரு துறைமுகங்களையும் அழித்தான். கன்றுகளை எல்லாம் கொன்று அவன் படைகள் உண்டன. அமைச்சர்களே, இன்று ஆசுர குலத்தவர்கள் அல்லாதவர்கள் மீது ஆறாச்சினம் கொண்டிருக்கும் வீரன் என்றால் அது ஏகலவ்யனே. மதுராவின் அனைத்து வீடுகளையும் அவன் எரித்தான். அதற்கு மதுராவின் நெய்க்களஞ்சியத்தையே பயன்படுத்திக்கொண்டான்.”

“ஏழு நாட்கள் மதுரா நின்றெரிந்தது என்கிறார்கள். மதுராவின் தெருக்களில் மக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தமையால் குதிரைகள்கூட நடக்கமுடியாமலாயின. மதுராவின் மண் ரத்தமும் சாம்பலும் கலந்து கருமைகொண்டது. முன்பு கம்சர் குழந்தைகளைக் கொன்றபோது அதை தடுக்காமலிருந்த மதுராபுரி மக்களின் அறப்பிறழ்வு ஊழாக எழுந்து வந்து தண்டித்தது என்றனர் நிமித்திகர்” என்றான் துரியோதனன். “எவ்வண்ணமென்றாலும் மதுரா அழிந்தது. அச்செய்தியை பலராமர் அறிந்தபோது நான் அவருடன் உள்காட்டில் ஒரு மந்தையின் நடுவே இருந்தேன். நாங்கள் அங்கிருந்து நாற்பதுநாட்கள் நடந்து மதுவனம் வந்துசேர்ந்தோம்.”

“அங்குவந்தபோது கண்டகாட்சி என்னை அகம் பதறச்செய்தது. கீழுலகிலிருந்து எழுந்து வந்ததுபோன்ற மனிதர்கள். சிதைக்கப்பட்ட எரிக்கப்பட்ட உடல்கள். அழுகி நாறும் புண்கள். எங்கும் அழுகுரல்கள், பெருவலி ஓலங்கள். அவர்களுக்கு எவரை வசைபாடுவதென்றே தெரியவில்லை. சூரசேனரை, பலராமரை, கிருஷ்ணனை, குலமூத்தாரை என அனைவரையும் மண் வாரி வீசி தீச்சொல்லிட்டு கூவி அழுதனர். அமைச்சர்களே, அவர்களில் ஒருவருக்குக் கூட கம்சரின் கொலைநடத்துக்குத் துணைபோனதன் ஊழ்வினை அது என்று தோன்றவில்லை. தாங்கள் குற்றமற்ற எளியமக்கள் என்றே அவர்கள் உண்மையில் நம்பினார்கள்.”

“மறுநாள் ஏகலவ்யனின் படைகள் ஆயிரம் படகுகளில் வந்து மதுவனத்தைத் தாக்கின. கொந்தளிக்கும் யமுனைப்பெருக்கில் அலைபாயும் படகுகளில் இருந்தபடி அம்புகளை எய்து கரையில் நிற்பவர்களின் கண்ணுக்குள் அம்பைச் செலுத்தும் வில்லாளிகளை அப்போதுதான் கண்டேன். அலைபாயும் படகுகளில் நின்ற அவர்களை எங்கள் அம்புகள் ஒன்றுகூட சென்று தொடவில்லை. அது போரே அல்ல, வெறும் படுகொலை.”

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“அங்கிருந்த யாதவர் எவரும் பயின்ற படைவீரர்கள் அல்ல. வெறும் யாதவகுடிகள், நெய் வணிகர்கள். நூற்றாண்டுக்காலமாக அவர்கள் மகதவீரர்களை நம்பி வாழ்ந்தவர்கள். அவர்கள் அச்சமும் துயரமும் கொண்டிருந்தனர். நம்பிக்கை இழந்திருந்தனர். அவர்கள் கூட்டமாகச் சென்று அம்புகள் முன் விழுந்து இறக்கத்தான் எண்ணினர். என் குருநாதர் அவர்களைத் திரட்டி அனைத்துக் கன்றுகளையும் சேர்த்துக்கொண்டு மதுவனத்தின் மறுபக்கத்துக்கு காட்டுக்குள் கொண்டுசென்றார். அடர்ந்த காட்டுக்குள் செல்ல யாதவர்கள் கற்றிருக்கவில்லை. அவர்களின் ஆநிரைகளை பசுமையை மீறி கொண்டுசெல்வதும் கடினமாக இருந்தது. குழந்தைகளுடனும் உடைமைகளுடனும் அவர்கள் காட்டுமரங்கள் நடுவே திணறியும் விழுந்தும் அழுதபடி சென்றனர்.”

“ஏகலவ்யனின் படையினர் யமுனையின் கரைகளுக்கு வரமாட்டார்கள் என்றுதான் பலராமர் எண்ணினார். ஆனால் அவர்கள் மதுவனத்தில் புகுந்து அத்தனை வீடுகளையும் எரியூட்டினர். காட்டுக்குமேல் புகை எழுவதைக் கண்டோம். அதைக்கண்டு யாதவர்கள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறி அழுதனர். முதியவர்களை மதுவனத்தில் விட்டுவிட்டு வந்திருந்தனர். போர்நெறிப்படி அவர்களை ஏகலவ்யனின் படைகள் ஒன்றும் செய்யாதென்று எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் எரியும் வீடுகளுக்குள் தூக்கி வீசிவிட்டன ஏகலவ்யனின் படைகள். காடுகளுக்குள் புகுந்து தெற்கே சென்றுகொண்டே இருந்தோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. உயிர் மட்டுமே யாதவர்களுக்கு எஞ்சும் செல்வமாக இருந்தது” என்றான் துரியோதனன்.

“தனிப்போரில் வெல்லற்கரியவராகிய என் ஆசிரியர் உளம்கலங்கி கண்ணீர் விடுவதைக் கண்டேன். நான் அவரது கால்களில் முட்களை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர் “இவ்விழிவுடன் மாள்வதே என் விதியோ!” என்று சொன்னபோது நான் அவர் கைகளைத் தொட்டு “நானிருக்கையில் அது நிகழாது குருநாதரே. அஸ்தினபுரி இருக்கிறது. நூற்றுவர் தம்பியர் இருக்கிறார்கள். பாரதவர்ஷத்தின் முதல் வில்வீரனாகிய என் நண்பன் கர்ணன் இருக்கிறான் என்றேன்” என்றான் துரியோதனன்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33
அடுத்த கட்டுரைஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…