’நார்மல்’

டாக்டர் மகாதேவன் தெரிசனங்கோப்பு
டாக்டர் மகாதேவன் தெரிசனங்கோப்பு

ஊரிலிருந்து அண்ணா கூப்பிட்டார். நான் சென்னையில் இருந்தேன். நலம் விசாரித்தல் முகமன் எல்லாம் அவரது வழக்கம் இல்லை ‘சாரு நிவேதிதான்னா ஆரு? ஆணா பெண்ணா?’ நான் ‘ஆண்’ என்றேன். ‘சொன்னானுக. அவன் என்ன பெரிய எழுத்தாளனா உன்னையமாதிரி?’ நான் ‘ஆமா’ என்றேன். கொலைகிலைக்கு எண்ணம்கொண்டிருக்கிறாரோ என்று ஐயம் வந்தது. சேச்சே என்றும் எண்ணிக்கொண்டேன்

‘அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கே?’ நான் சற்று முன்னர்தான் சாரு நிவேதிதாவிடம் பேசியிருந்தேன். அவர் உடல்நிலை நன்றாகவே இருந்தது. ‘அவர் நல்லாத்தான் இருக்கு’ என்றேன். ‘உனக்கும் எல்லாம் டெஸ்ட் செய்யணும். நீ எப்ப வாறே?’ நான் ‘இல்லை… அது’ என ஆரம்பிக்க ‘டெஸ்ட் செய்யணும். மாஸ்டர்செக்குன்னு ஒண்ணு இருக்கு. லாங்ரூட் பஸ்சுக்கு செய்ற மாதிரி..’ நான் ‘இப்ப எதுக்கு?’ என்றேன். கடும் சினத்துடன் ’அவனுக்கு வந்திருக்கே?’ என்றார்.

இலக்கியம் மனநோயை கொண்டுவரும் என முன்னர் நம்பியிருந்தார். அதற்கான ஆதாரங்களை அவர் என்னிடமே அடைவது சங்கடமளித்தாலும் பொதுவாக எங்கள் குடும்பங்களில் மூத்தவரை இளையவர் மறுத்தோ மாறுபட்டோ சிந்திப்பது பாவம் என்ற நம்பிக்கை உண்டு. இப்போது இலக்கியம் இதயநோயைக் கொண்டு வரும் என நினைக்கிறார் என்று தெரிந்தது.

ஞாநி உடல்நலமில்லாமல் ஆனபின்னர் நான் சென்று பார்க்கவில்லை. ஒருகுறையாகவே இருந்தது. ஆகவே நானும் செல்வேந்திரனும் சென்று பார்த்தோம். நான் காரிலிருந்து இறங்குவதைக் கண்டதுமே ‘குண்டாயிட்டீங்க’ என்றார் ‘ஆமா, இந்த நாவல் எழுத ஆரம்பிச்சது முதல் வாக்கிங் இல்லை’ என்றேன். அதைவிடப்பெரிய உண்மை, தொடர்ந்து நட்சத்திர ஓட்டல்கள் படப்பிடிப்புகள் என இருப்பது. இரு இடங்களிலுமே அசைவக் கொண்டாட்டங்கள்.

‘எப்ப உடம்ப டெஸ்ட் பண்ணிக்கிட்டீங்க?’ என்றார் ஞாநி. சென்ற வருடம் என்றேன். ‘என்ன டெஸ்ட்?’ என்றார். சொன்னேன். ‘அதெல்லாம் டெஸ்டே இல்லை. ராண்டம் டெஸ்ட்டுனால ஒண்ணுமே தெரியாது. ரத்தத்திலே யூரியா டெஸ்ட் பண்ணணும். எல்லா டெஸ்டும் எடுக்கணும். அவசியம் போனதுமே செய்ங்க..அம்பது தாண்டியாச்சுல்ல?’ என்றார்.

ஆக வேறு வழியில்லை. இவரையும் குமுதத்தில் எழுபதுகளில் ‘உருத்திராட்சப் பூனைகளே’ என்ற கட்டுரை வாசித்தநாள் முதல் ஒருவகையில் மூத்தவராகவே எண்ணி வந்திருக்கிறேன். திரும்பிவந்ததும் அருண்மொழியிடம் சொன்னேன். ‘தெரிசனங்கோப்பு மகாதேவன் டாக்டரிட்ட சொல்றேன்… என்னென்ன டெஸ்ட் பண்ணணும்னு அவரே சொல்லட்டும்’ என்றாள். பரபரப்பாக போர்க்கோலம் பூண்டு களமிறங்கினாள்.

’நேரா வந்திருங்க… மிச்சமெல்லாம் நான் பாத்துக்கறேன்’ என்றார் டாக்டர். அவர் நண்பர் என்பதற்கும் ஒரு படிமேல். என் ஆதர்சமனிதர்களில் ஒருவர். அருண்மொழியும் நானும் மாலையில் சென்றோம். ‘சொல்ற பேச்சையே கேக்கிறதில்ல டாக்டர்’ என அருண்மொழி ஆரம்பித்தாள். டாக்டர் ஒரு பெரிய கேள்விப்பட்டியலை வைத்து நூறு கேள்விகள் கேட்டு குறித்துக்கொண்டார். அங்கேயே இருபது சோதனைகள்.

மறுநாள் காலை டாக்டரின் உதவியாளர் வீட்டுக்கு வந்து சர்க்கரை எடுத்து சோதனை செய்தார். பட்டினியில் ஒருமுறை குளூக்கோஸ் குடித்து அரைமணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும். சர்க்கரை இல்லை, வர வாய்ப்பும் சமீபத்தில் இல்லை. டாக்டரின் நம்பிக்கையான உதவி டாக்டர் ஜெயலட்சுமி பத்துமணிக்கு வந்து வெவ்வேறு சோதனைச் சாலைகளுக்குக் கூட்டிச்சென்றார்.

பலவகையில் படுக்கவைக்கப்பட்டு பலவகையில் சோதனைகள் செய்யப்பட்டேன். எம்.ஆர்.ஐ ஸ்கான் வழியாக எனக்குள் தேடினர். எழுதப்போகும் வெண்முரசின் அடுத்த அத்தியாயத்தைக்கூட ஓரளவு எடுத்துப் பார்த்துவிட்டனர். ஒரு டிரெட் மில்லில் ஓடிக்கொண்டு இதயச்சோதனை. டிரெட் மில் ஓட்டம் இணைய விவாதம்போல. எத்தனை ஓடினாலும் அதே இடம். ஆனாலும் என் இதயம் எகிறவில்லை.

டாக்டர் சொன்னார். ‘எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கு. வழக்கமா புரோஸ்டிரேட் கொஞ்சம் மாறியிருக்கும், வயசு அம்பது ஆனதனால. அதுவும் நார்மல். எல்லா அளவுமே புக்ஸிலே சொல்ற மாதிரி இருக்கு’ மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழுமையின் சோர்வுடன் அமர்ந்திருந்தேன். ‘யூ ஆர் அப்சல்யூட்லி நார்மல்’. எதுக்கும் மூளைய ஒருவாட்டி பாத்திருவோம் டாக்டர் என அருண்மொழி சொல்வாளென நினைத்தேன். சொல்லவில்லை, நினைத்திருக்கலாம்.

வீடு திரும்பினோம் அருண்மொழி சொன்னாள் ‘ஜெயன், டாக்டர் சொன்னத கேட்டேல்ல? இனிமே முன்னமாதிரி வெளையாட்டுத்தனமா இருக்கக்கூடாது. தண்ணியே குடிக்காம டீ மட்டும் குடிக்கிறத முதல்ல நிறுத்து. ராத்திரி கண்முழிக்கிற ஆந்தையா இருக்காதே. சீனிய அள்ளி போட்டு டீ குடிக்கிறத இனிமே பாத்தேன், நடக்கிறதே வேற… முதல்ல சொன்ன பேச்ச கேக்க கத்துக்க…’

நான் பீதியுடன் ‘ஒண்ணுமே இல்லேன்னுதானே டாக்டர் சொன்னார்?’ என்றேன். சீற்றத்துடன் ‘அதான் நானும் சொல்றேன். ஒண்ணுமே இல்லல்ல? ஜாக்ரதையா இருந்தாத்தானே மேக்கொண்டு ஒண்ணுமே வராம இருக்கும்?’ என்றாள். ஆமாம் என்று தலையாட்டினேன் ‘நாளையிலே இருந்து நீ என்ன பண்ணணும்னு நான் சொல்றேன்… மரியாதையா அதுமாதிரி இருந்துக்கோ… என்ன?’

வேறென்ன சொல்வது?

முந்தைய கட்டுரைராஜகோபாலன் – விழா அமைப்புரை
அடுத்த கட்டுரைவெண்முரசு ஒரு வாசகர்கடிதம்