‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33

பகுதி ஏழு : பூநாகம் – 3

விதுரர் புஷ்பகோஷ்டத்தை அடைந்ததும் விப்ரர் எழுந்து வந்து “அமைச்சரே, அரசர் தங்களை பலமுறை கேட்டுவிட்டார். சினம்கொண்டிருக்கிறார்” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் விதுரர். “அவரிடம் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என நான் அறியேன். ஆனால் பாண்டவர்கள் தனக்கு அவமதிப்பை அளித்துவிட்டனர் என்று எண்ணுகிறார். அந்த எண்னத்தை விலக்குங்கள்” என்று விப்ரர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பின்பக்கம் விசுத்தன் ஓடிவந்தான். “அமைச்சரே, இளவரசர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“எங்கே?” என்றார் விதுரர் திகைத்தவராக. “அந்தப்புரத்தில் பெருங்கொடை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நகுலர் தருமரிடம் பேசி அரசாணையைச் சொல்லி வெளியே கூட்டிவந்துவிட்டார். நகுலரும் சகதேவரும் அரசியுடன் இருக்கிறார்கள். பிற மூவரும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் விசுத்தன். விதுரர் திரும்பி விப்ரரிடம் “என் வரவை அரைநாழிகை தாண்டி அறிவியுங்கள் விப்ரரே” என்றார். திரும்பி ஓடி இடைநாழியில் வந்துகொண்டிருந்த பாண்டவர்களை நோக்கிச் சென்றார். அவர் ஆடைபறக்க ஓடுவதைக் கண்டு கனகன் திகைத்து நின்றான். விப்ரரை திரும்பி நோக்கினான். விப்ரர் “இளவரசர்கள் வருவதை என்னால் அறிவிக்காமலிருக்க முடியாது அமைச்சரே… சற்று பிந்துகிறேன்” என்றார்.

விதுரர் மூச்சிரைக்கச் சென்று தருமன் அருகே நின்றார். “என்ன ஆயிற்று அமைச்சரே?” என்றான் தருமன். சினத்தால் அடைத்த குரலுடன் கை நீட்டி, “நீ என்ன மூடனா? அரசவையின் முறைமைகளை அறியாதவனா? நீங்கள் கொண்டுசென்றது அஸ்தினபுரியின் படை. அதன் அதிபர் திருதராஷ்டிர மாமன்னர். படைமீண்டதும் நீங்கள் வந்து முதலில் பாதம் பணியவேண்டியவர் அரசரே. அத்தனை படைச்செல்வங்களையும் கொண்டுவந்து அவர் காலடியில் வைக்கவேண்டும். அவர் அவற்றிலிருந்து உங்களுக்கான கொடைகளை வழங்கவேண்டும். காட்டுநாய்களுக்குக் கூட இந்நெறியே உள்ளது” என்றார்.

“அமைச்சரே, நான் எந்தையின் அகவிரிவை நம்புகிறேன். சிறுமைகளுக்கு அங்கே இடமில்லை” என்றான் தருமன். பின்னர் சற்று குரல்தாழ்த்தி “சிறுமைக்கு இடமுள்ள ஒரு நெஞ்சு என் அன்னையுடையது. அவர் உள்ளம் கோருவதுதான் என்ன என்று நான் எண்ணியிருக்கிறேன். நான் கண்டது இதுதான். சூரசேனரின் மகளாக மதுவனத்தில் கன்றுமேய்த்து வாழ்ந்த யாதவப்பெண் அவர். கையளவு நிலம் கொண்ட மார்த்திகாவதியின் குந்திபோஜரின் இளவரசி. இந்த அஸ்தினபுரிக்கு அவர்கள் அரசியாக வந்தது அவரது தகுதியால் அல்ல, என் தந்தை பாண்டுவின் தகுதியின்மையால்தான். இந்த மாநகரை முதலில் கண்டதுமே அவருக்குள் சிறுமையும் பெருவிழைவும் ஒருங்கே தோன்றியிருக்கும்.”

“இங்கே அவரது இளமையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நான் என் எண்ணங்களைப்போலவே தெளிவாகக் காண்கிறேன். நுண்ணிய அவமதிப்புகளை அவர் ஒவ்வொருநாளும் அடைந்திருப்பார். ஆணவம் மிக்க பெண் என்பதனால் அவை அவரை பெரிதும் வதைத்திருக்கும். சதசிருங்கத்தில் அவர் வாழ்ந்ததை நான் அருகிருந்து கண்டிருக்கிறேன். என் தந்தை அங்கு சென்றதுமே அஸ்தினபுரியை மறந்துவிட்டார். ஆனால் அன்னை ஒருகணம்கூட இந்நகரை மறக்கவில்லை. இங்குதான் அவர் அகத்தால் வாழ்ந்தார்” என்றான் தருமன்.

“நகர்நுழைந்தபோது நான் எந்தையின் காலடியில் இந்த மணிமுடியை வைப்பதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அன்னை கோட்டைமுகப்புக்கே வந்ததை கண்டேன். அவர் உள்ளம் விழைவதென்ன என்று புரிந்துகொண்டேன். அக்கணம் என் உள்ளம் அந்த எண்ணத்தை அடைந்தது. எந்தையின் காலடியில் எத்தனையோ மணிமுடிகள் உள்ளன. அன்னை ஒரு மணிமுடியையும் சூடவில்லை. அஸ்தினபுரியின் அரசியென அவர் சிலநாட்கள்கூட வாழவில்லை. அஸ்தினபுரியின் அத்தனை குடிகளின் கண்முன்னால் அவர் சௌவீரநாட்டின் மணிமுடியை சூடட்டும் என்று எண்ணினேன். அஸ்தினபுரியின் மணிமுடி அவர்களுக்கு கொடையளிக்கப்பட்டது. இது அவர் மைந்தர்களால் வென்றுகொண்டுவரப்பட்டது. முற்றிலும் அவருக்கே உரியது. அதை அணிகையில் அவர் மறுக்கமுடியாத அரசபதவியை அடைகிறார்.”

தருமன் தொடர்ந்தான் “அதை நீங்களே கண்டிருப்பீர்கள் அமைச்சரே. அன்னைக்குத் தேவையாக இருந்தது ஒரு சிறிய வற்புறுத்தல் மட்டுமே. ரதத்தில் அவர்கள் தலைநிமிர்ந்து நின்றதைக் கண்டபோது மிகச்சரியானதையே செய்திருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன். அரண்மனையை நெருங்க நெருங்க அவர் எங்களை விட மேலெழுந்தார். வெற்றிகொண்டு நாடுமீளும் சக்கரவர்த்தினி போல ஆனார். அந்தத் தோற்றத்தை அவர் தன் பகற்கனவுகளில் பல்லாயிரம் முறை நடித்திருக்கக் கூடும். அது நிறைவேறாமல் அவர் அமைய மாட்டார். அதை அடையாமல் அவர் இறந்தால் விண்ணுலகும் செல்லமாட்டார்.”

“அன்னையின் கொண்டாட்டத்தை சற்று அச்சத்துடன்தான் நோக்கினேன் அமைச்சரே” என்றான் அர்ஜுனன். “அவர் அனைத்து அகக்கட்டுகளையும் இழந்துவிட்டார். பித்துகொண்டவை போலுள்ளன கண்கள். சொற்கள் அவரை அறியாமலேயே வெளிவருகின்றன. சொல்லெண்ணி பேசும் குந்திதேவி அல்ல அங்கிருப்பவள். கிளர்ச்சிகொண்ட பெதும்பைப்பெண் போல முகம் சிவந்து நகைக்கிறாள். துள்ளி ஓடியும் மூச்செறிந்து விரைவுமொழி பேசியும் கொஞ்சுகிறாள். தோழியரிடம் பொய்ச்சொல் பேசுகிறாள். சௌவீரநாட்டின் அரியணையைக் கொண்டுவந்து அந்தப்புர முகப்பில் போடச்சொன்னது அவள். அதில் அமர்ந்து பெருங்கொடை அளிக்கமுடிவெடுத்தவளும் அவளே!”

“எந்தையிடம் நான் பேசிக்கொள்கிறேன் அமைச்சரே” என்றான் தருமன். “அன்னை இனிமேலேனும் அகம் அடங்கட்டும். இந்த அரசை உள்ளிருந்து எரித்துக்கொண்டிருப்பது அன்னையின் நெருப்பே” என்றான். பீமன் நகைத்தபடி “காட்டுப்புலிக்கு மானுடக்குருதியின் சுவையைக் காட்டுவதுபோன்றது அது என்றேன். தமையன் சினந்தார்” என்றான். தருமன் “மந்தா… போதும்” என்றான். விதுரர் “இளையோன் சொல்வது உண்மை. நாளைக்காலை யாதவஅரசி இன்று அடைந்த அத்தனை உவகைகளையும் கடந்திருப்பார். இந்த மணிமுடியும் அரியணையும் என்றும் தன்னிடமிருக்கிறதென்று எண்ணத் தொடங்கியிருப்பார். நாளை அடையப்போவதென்ன என்று கனவுகாண்பார்…” என்றார்.

தருமன் “ஆனால்…” என்று சொல்லத்தொடங்க “நீ செய்ததை நான் புரிந்துகொள்கிறேன். முதிரா இளைஞனின் அரசுசூழ்தல் அது. அதன் விளைவுகளை நீ சந்திக்கவேண்டும்” என்றார். தருமன் அஞ்சிய முகத்துடன் “சொல்லுங்கள் அமைச்சரே” என்றான். “அங்கே கணிகர் என்ற அதர்வ வைதிகர் அரசருடன் இருக்கிறார். அவரது சொற்கள் அரசரின் அகத்தில் விதைக்கப்பட்டுள்ளன. களைகள் விரைவில் முளைப்பவை. அவற்றை நீ இப்போதே களைந்தாகவேண்டும்” என்றார். “ஆம், அதற்காகவே வந்தேன்” என்றான் தருமன். “சென்றதுமே அரசரின் கால்களைத் தொடு. அவரைத் தொட்டுக்கொண்டே இருங்கள் மூவரும்… உங்களைத் தொட்டபடி அவரால் உங்களை வெறுக்க இயலாது” என்றார் விதுரர்.

அவர்களை அழைத்துக்கொண்டு திருதராஷ்டிரரின் சபைக்குள் நுழைந்தபோது விதுரர் மெல்ல “நான் சற்று பின்னால் வருகிறேன். அரசர் ஏதும் சொல்ல இடம்கொடுக்கவேண்டாம். நேராகச் சென்று அவரை தொட்டுவிடுங்கள்” என்று மெல்லியகுரலில் சொன்னார். “உடனே உங்கள் அன்னையை விகடம் செய்து பேசத் தொடங்குங்கள். அவர்களின் சிறுமைநிறைந்த விருப்பை நிறைவேற்றினோம் என்று சொல்லுங்கள்… இப்போது என்னிடம் சொன்னவற்றையே சொல்லலாம்” என்றார். தருமன் “இப்போது சற்று அச்சம் கொள்கிறேன் அமைச்சரே” என்றான். “வேழம் மிக எளிதில் சினம் அடங்குவது” என்றார் விதுரர்.

அரசவையில் அவர்கள் நுழைவதைக் கண்டதுமே சகுனி எழுந்து உரத்த குரலில் “வருக, மருகர்களே! உங்களைத்தான் நோக்கியிருந்தேன்” என்றார். “அரசர் உங்களை தேடிக்கொண்டிருந்தார். படைச்செல்வத்தை அஸ்தினபுரியின் கருவூலத்தில் சேர்த்தபின்னர்தான் வருவீர்கள் என்று நான் சொன்னேன்” என்றார். அவர் திருதராஷ்டிரரிடம் தருமன் பேசிவிடாமலிருக்கத்தான் அதைச் சொல்கிறார் என்று உணர்ந்துகொண்ட விதுரர் “அரசரிடம் செல்லுங்கள்” என முணுமுணுத்தார்.

ஆனால் தருமன் திரும்பி நின்று “இல்லை மாதுலரே. படைச்செல்வத்தை வேறு கருவூலமாகச் சேர்க்கவே ஆணையிட்டோம்… ஏனென்றால்…” என்று பேசத்தொடங்குவதற்குள் சகுனி உரத்த குரலில் “தனிக் கருவூலமா? அஸ்தினபுரிக்குள் தனியரசா? அதுவா யாதவ அரசியின் ஆணை?” என்று கூவினார். திருதராஷ்டிரர் “என்ன சொல்கிறாய் தருமா? தனிக்கருவூலமா?” என்றார். “அரசே, அதை பொதுக்கருவூலத்தில் சேர்க்கமுடியாது. ஏனென்றால் அதைக்கொண்டு ராஜசூயம் செய்து வைதிகர்களுக்கு நாங்களே…” என்று சொல்வதற்குள் சகுனி “காந்தாரக் கருவூலம் என ஒன்று இன்றுவரை இங்கே உருவானதில்லை. இங்குள்ளது அஸ்தினபுரியின் கருவூலம் மட்டுமே… இன்னொரு கருவூலம் உருவாவதென்பது இன்னொரு அரசு உருவாவதற்கு நிகர்” என்றார்.

“அரசே” என்று சொல்லி தருமன் கைநீட்டினான். “அருகே சென்று அவரைத் தொடு” என்று விதுரர் முணுமுணுத்தார். அதற்குள் திருதராஷ்டிரர் எழுந்து தன் இருகைகளையும் சேர்த்து ஓங்கியறைந்துகொண்டார். அந்த ஒலியில் தருமன் அஞ்சி பின்னடைந்தான். “நான் இனி ஒரு சொல்லும் கேட்கவிரும்பவில்லை… எங்கே சஞ்சயன்?” என்று கூவினார் திருதராஷ்டிரர். “அரசே” என்று சஞ்சயன் ஓடிவந்து அருகே நின்றான். “என்னை என் படுக்கையறைக்குக் கொண்டுசெல்” என்று சொல்லி திருதராஷ்டிரர் கைநீட்டினார். “தருமா, அந்தக்கையைப்பிடி… அவரை நீயே அழைத்துச்செல்” என்று விதுரர் முணுமுணுத்தார். ஆனால் திருதராஷ்டிரர் சினந்த யானையைப்போல உறுமியதைக்கேட்டு தருமன் மீண்டும் பின்னடைந்தான்.

சஞ்சயனின் கைகளைப் பற்றியபடி திருதராஷ்டிரர் திரும்பி நடக்கத்தொடங்கினார். தலையைத் திருப்பி மோவாயை சுழற்றியபடி மெல்ல முனகிக்கொண்டே சென்றார். அவர் அறையின் மறுவாயிலை அடைந்ததும் அறையில் இருந்த அத்தனை பேர் உடல்களிலும் மெல்லிய அசைவு ஒன்று குடியேறியது. சகுனி புன்னகையுடன் எழுந்து தன் சால்வையைப் போட்டுக்கொண்டு “நான் அரண்மனைக்குச் செல்கிறேன்… விப்ரரே, அரசர் என்னைப் பார்க்கவிரும்பினால் செய்தி அனுப்புங்கள். எப்போதும் காத்திருப்பேன்” என்றபின் விதுரரை நோக்கி தலையசைத்தபடி வலக்காலை மெல்லத் தூக்கி வைத்து மெல்ல நடந்தார். அவரது அணுக்கச்சேவகர் கிருதர் அருகே வந்து அவரை அழைத்துச்சென்றார்.

கணிகர் மெல்லியகுரலில் “நீங்கள் சென்று அவரைத் தொட்டிருக்கலாம் இளவரசே. உங்கள் தீண்டலில் அவர் அனைத்தையும் மறந்துவிட்டிருப்பார்…” என்றார். விதுரர் திரும்பி நோக்க கணிகர் இயல்பான புன்னகையுடன் “ஏதோ பிழைபுரிதல். அதை சொற்களை விட அண்மை எளிதில் சீரமைத்துவிட்டிருக்கும்” என்றார். விதுரர் பெருமூச்சு விட்டு “இளவரசே, சென்று ஓய்வெடுங்கள். அரசர் ஓய்வெடுத்து முடித்ததும் பேசுவோம்” என்றார். கணிகர் “நீங்கள் மட்டும் தனியாகச் சென்று அரசரிடம் பேசுங்கள்… அரசவைப்பேச்சின் முறைமை இல்லாது பேசினாலே உள்ளங்கள் தெளிவாகிவிடும்” என்றார். “நன்றி கணிகரே”என்று விதுரர் தலைவணங்கினார்.

வெளியே சென்றதும் தருமன் கவலையுடன் “என்னசெய்வது அமைச்சரே?” என்றான். “ஒன்றும் செய்யமுடியாது. காத்திருப்போம். ஒவ்வொன்றும் எழுதிவைத்து நிகழ்வதுபோல ஒருங்கு குவிகின்றன…” என்றார் விதுரர். “எழுதிவைத்து நடத்துபவர் காந்தார இளவரசர்….” என்றான் அர்ஜுனன். “அவரது காந்தாரச்செலவுக்குப் பின் உடலும் உள்ளமும் மாறிவிட்டிருக்கின்றன. அவரது கண்கள் நாமறிந்தவை அல்ல” என்றான். “நாம் வீணே பேசிக்கொள்வதில் பயனில்லை. அரண்மனைக்குச் சென்று ஓய்வெடுங்கள். மாலையில் அரசர் இசைக்கூடத்துக்கு வருவதற்கு முன் அவரது படுக்கையறையிலேயே சென்று பேசுவோம். அவர் உள்ளம் உங்களை தன் இளையோனின் வடிவங்களாகவே காண்கிறது. பேசும்போது முதலிலேயே உங்கள் தந்தையின் பெயரை சொல்லிவிடுங்கள்…” என்றார் விதுரர்.

கனகனிடம் “விப்ரரிடம் பேசு. அரசர் மாலை இசைநிகழ்ச்சிக்கு கிளம்புவதற்கு முன்னதாகவே நாம் அவரை சந்தித்தாகவேண்டும். அரைநாழிகைநேரம் போதும். விப்ரரிடம் சொல்லி ஒருங்கமை. ஆனால் நாம் சந்திக்கச்செல்வதை அவரிடம் சொல்லவேண்டியதில்லை. அவர் அறைவாயிலில் நாம் சென்ற பின்னர் அறிவித்தால் போதும்” என்றார் விதுரர் நடந்தபடி. கனகன் “ஆனால் விப்ரர் அதைச்செய்வாரா?” என்றான். “விப்ரர் அரசரின் ஆத்மாவின் துணைவர். அவரது அகம் நாடுவதையே அவர் செய்வார். அரசரின் நெஞ்சு அவரது இளையோனின் மைந்தரை ஒருபோதும் விலக்காது” என்றார் விதுரர்.

பீமன் “இத்தனை பதற்றமும் எதற்கென்றே தெரியவில்லை அமைச்சரே. சொல்லிப்புரியவைக்க முடியாத பிழை என்ன நிகழ்ந்துவிட்டது? பெரியதந்தை எப்போதும் இச்சிறியவற்றுக்கு அப்பால்தான் இருந்துவருகிறார்” என்றான். “இளையவனே, மனிதர்கள் உடலுக்குள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதே அரசு சூழ்தலின் முதல் விதி” என்றார் விதுரர். “நல்லவர்கள் பிறரை நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் பிறரை கூர்ந்துநோக்குவதில்லை. ஆகவே பிறரை அவர்கள் அறிவதுமில்லை. தீயவர்கள் பிறரை அணுவணுவாக கூர்ந்து நோக்கி அறிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை நன்கறிந்த ஒருவர் நாம் அவரை சற்றும் அறியாமலிருக்கையில் மிக எளிதாக நம் அகத்தை மாற்றிவிடமுடியும். அரசருக்கு இப்போது அதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது” .

அர்ஜுனன் மெல்லியகுரலில் “அமைச்சரே, நான் மூத்தவர் அன்னையை நோக்கி மணிமுடியுடன் சென்றதுமே அனைத்தையும் ஒரு கணத்தில் கண்டுவிட்டேன்” என்றான். “பெரியதந்தையை நான் சிறுவயது முதல் கூர்ந்து நோக்கி வருகிறேன். அவர் பெருங்களிறு. களிறு சிந்தையாலோ கல்வியாலோ ஆன உள்ளம் கொண்டது அல்ல. உடல்வல்லமையாலும் உறவாலும் ஆனது. எங்களை பெரியதந்தையார் விரும்புகிறார் என்றால் அது அவரது இளையோனின் மைந்தர்கள் நாங்கள் என்பதனால்தான். வெறும் குருதியுறவு அது. அப்படியென்றால் அவரது மைந்தர்களுடன் அவருக்கிருக்கும் உறவு இன்னும் ஆழமானது.”

“ஆம், அது உண்மை” என்றான் பீமன். “எங்களுக்கு இந்நாட்டை அளித்தபின் அரசர் மனம் உருகி அழுததை நினைவுகூர்கிறேன். ஏன் அந்தப் பேருணர்ச்சி? விதுரரே, அவர் கடந்தாகவேண்டியிருந்தது குருதியின் தடையை. அத்தனை உணர்ச்சிவல்லமை இல்லாமல் அதை அவர் கடந்திருக்கமுடியாது. அவரது கண்ணீரின் பொருள் ஒன்றே. அம்முடிவை அவர் தன்னுள் உள்ள ஆயிரம் கைகளைத் தட்டி அகற்றிவிட்டு சென்றடைகிறார்” என்றான். அர்ஜுனன் “அவரது ஆழத்தில் ஒரு விழி தவித்துத்தவித்து தேடிக்கொண்டிருக்கிறது. எங்களை உதறி தன் மைந்தர்களை நோக்கித் திரும்புவதற்கான நியாயங்களுக்காக. அவற்றை அவர் கண்டடைந்ததும் அங்குதான் செல்வார்” என்றான்.

“இளையவனே, வேண்டாம்” என்றான் தருமன். “பெரியதந்தையின் பெருந்தன்மையை எண்ணி நான் நம் குடியின் மேல் பெருமிதம் கொண்டிருக்கிறேன். அவர் நிழலில் வாழ்கிறேன் என்று எண்ணுகையிலேயே என் அகம் நிறைவடைகிறது. நீ எண்ணுவது பிழையோ சரியோ அப்படி எண்ணத்துணிவது பெரும்பிழை. நாம் நின்றிருக்கும் காலடிமண்ணை அவமதிப்பது அது.” “மூத்தவரே, இத்தருணத்தில் நாம் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்று சிந்திக்கவேண்டியிருக்கிறது” என்றான் பீமன். “பெரியதந்தையார் அவ்வண்ணம் எண்ணுகிறார் என்பதற்கு என்ன சான்று உள்ளது இளையவனே?”

அர்ஜுனன் “அவர் அறிந்து அதைச் செய்யவில்லை. ஆனால் அறியாது செய்யும் செயல்களே மானுட இயல்பை நிகழ்த்துகின்றன” என்றான். விதுரர் “இந்த வாதங்களை நான் கேட்கவிரும்பவில்லை. இளையோரே, இளமையில் மானுட அகத்தை ஆராய்ந்து வகுத்துவிடமுடியுமென்ற அக எழுச்சி அனைவருக்கும் ஏற்படுகிறது. முதுமை நெருங்க நெருங்க அது திறந்த வெளியின் தீபச்சுடர் எவ்வாறெல்லாம் நெளியும் என்று கணிப்பதற்கு நிகரான வீண்வேலை என்று தெரியவரும். ஒரு சுடரை அசைப்பவை இப்புவியின் காற்றுவெளியின் திசைமாற்றங்கள். அதை நிகழ்த்துவது வான்வெளி. வானை அறிந்தாலொழிய சுடரை அறியமுடியாது” என்றபின் “சென்று ஓய்வெடுங்கள்” என்றார்.

தன் அறைக்குச் சென்றபின் சிலகணங்கள் கண்மூடி நின்றார். பின்னர் திரும்பி நீண்ட இடைநாழி வழியாக நடந்து உள்முற்றத்தில் இறங்கி துணைக்காடு வழியாக நடந்து தன் சிறிய அரண்மனையை அடைந்தார். அவர் வருவதை சேவகர் சொன்னதும் சுருதை வாயிலுக்கே வந்தாள். புன்னகையுடன் “நீராடுகிறீர்களா?” என்றாள். அவர் அங்கே வந்து எட்டுநாட்களுக்கும் மேல் ஆகிறதென்பதையே அறியாதவள் போலிருந்தாள். அந்த பாவனையை அவள் அங்கு வந்த சிலநாட்களிலேயே கற்றுக்கொண்டிருந்தாள். விதுரர் “சுசரிதனுக்கு வெம்மை கண்டிருக்கிறது என்றார் மூத்தவர்” என்றார்.

“ஆம், ஆனால் நேற்றே அவன் தேறிவிட்டான்” என்றாள் சுருதை. விதுரர் மேலாடையை அவள் தோளில் இட்டு விட்டு மெல்ல நடந்து உள்ளறைக்குச் சென்றார். உள்ளே தாழ்வான கட்டிலில் சுசரிதன் துயின்றுகொண்டிருந்தான். “மருத்துவர் பிழிசாறு கொடுத்திருக்கிறார்…” என்று பின்னால் நின்று சுருதை சொன்னாள். அவர் மெல்ல அருகணைந்து குனிந்து அவன் தலையைத் தொட்டு “வெம்மை இல்லை” என்றார். “ஆம், அஞ்சுவதற்கேதுமில்லை. நாளைமறுநாள் எழுந்துவிடுவான் என்றார்” என்றாள். “மூத்தவனிடமிருந்து செய்தி வந்ததா?” என்றார். சுபோத்யன் கூர்ஜரத்தில் நிகழும் அரசநிகழ்ச்சி ஒன்றுக்காக அஸ்தினபுரியின் தூதனாக அனுப்பப்பட்டிருந்தான். “இல்லை… செய்தி வந்தால் அங்குதானே வரும்?” என்றாள் சுருதை.

விதுரர் நீராடி உணவுண்டு மேலே சென்று உப்பரிகையில் வடக்கு நோக்கிய சாளரம் அருகே அமர்ந்துகொண்டார். அவருடைய காலம்சென்ற அன்னை சிவை அங்குதான் அமர்ந்திருந்தாள். வருடக்கணக்காக. வரைந்த சித்திரச்சீலை போல. அவள் மறைந்தபின்னரும் நெடுங்காலம் அவளுடைய தோற்றம் அங்கிருப்பதாகத் தெரிந்தது. சேடியரும் சேவகரும் அங்கே செல்வதற்கே நெடுங்காலம் அஞ்சினர். ஆனால் தனித்திருக்கவேண்டுமென விரும்பினால் விதுரர் இயல்பாகவே அங்குதான் வந்து அமர்ந்துகொள்வார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

தாலத்தில் தாம்பூலத்துடன் சுருதை வந்து அருகே அமர்ந்தாள். அவள் வந்த அசைவை அறிந்தும் அவர் அசையாமல் அமர்ந்திருந்தார். அவள் தாம்பூலத்தை சுருட்டி நீட்டி “என்ன சிந்தனை?” என்றாள். அவர் அதை என்ன அது என்பது போல நோக்கிவிட்டு “ம்?” என்றார். “தாம்பூலம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். அவர் அதை வாங்கி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினார். அந்த அசைவு அவரது முகத்தை இளகச்செய்தது. முகம் தளர்ந்தபோது அகமும் தளர்ந்தது. பெருமூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டார்.

“என்ன இக்கட்டு?” என்றாள் சுருதை. “இக்கட்டு இல்லாமல் இப்படி வந்து அமர்ந்திருக்கமாட்டேன் என்று தெரியாதா உனக்கு?” என்றார். “ஆம், தெரியும்…” என்று அவள் புன்னகை செய்தாள். விதுரர் சினத்துடன் தலைதூக்கி “அதற்காக உன்னிடம் செல்வழி ஒன்றும் கேட்டுக்கொள்வதற்காக வரவில்லை… வெறுமனே இருந்தபோது வரவேண்டுமென்று தோன்றியது, அவ்வளவுதான்” என்றார். அவள் புன்னகைத்து “நான் செல்வழி சொல்வேன் என்று எப்போது சொன்னேன்?” என்றாள். “ஏதோ இக்கட்டில் வந்திருக்கிறேன் என்று தாம்பூலத்துடன் வந்ததைப் பார்த்தேன்…” என்றார். “சரி, நான் இக்கட்டை கேட்கவில்லை. சொல்லவும் வேண்டாம்” என்றாள் சுருதை.

“சொல்லப்போவதுமில்லை” என்ற விதுரர் தாம்பூலத்தை மென்றபடி அவளை நோக்கினார். பின்னர் அவள் காதோரத்தில் இருந்த நரையை சுட்டிக்காட்டி “அதை வெட்டி அகற்றிவிடு…” என்றார். “ஏன் நரை நல்லதுதானே? வளர்ந்த மைந்தர் இருக்கையில்?” என்றாள் அவள் சிரித்தபடி. முதுமையின் தொடக்கம் நிகழ்ந்திருந்த முகத்தில் சிரிக்கும்போது கண்கள் ஒளிவிட பழைய சுருதை வந்து சென்றாள். “எனக்கொன்றும் இல்லை… உனக்கு வேண்டுமென்றால் அப்படியே விட்டுக்கொள்” என்றார் விதுரர். “உங்களுக்கும்தான் நரைத்துவிட்டது” என்றாள் சுருதை. “ஆம்… ஆனால் நான் அமைச்சன்” என்றார். “நரையுள்ளவன் சொல்லுக்கு பழைய கள்ளின் மதிப்பு” என்று நகைத்தார்.

சுருதை “நரையை வெட்டி மறைக்கமுடியாது. கவலையை மறந்து கடக்கமுடியாது என்பார்கள்” என்றாள். விதுரர் “இன்று அரசரைப் பார்த்தேன்…” எனத் தொடங்கினார். “சொல்லப்போவதில்லை என்றீர்களே?” என்றாள். “ஆம், சொன்னேன். உன்னிடம் சொல்லாமல் இருக்கமுடியாது… நீதான் என் அகத்துயருக்கு மருந்து. ஆகவேதான் தேடிவந்திருக்கிறேன். நான் மூடன் நீ அறிவாளி, போதுமல்லவா?” என்று அவர் சிடுசிடுத்தார். “போதும்” என்று அவள் சிரித்ததும் தானும் சிரித்தார். பின்னர் ஒவ்வொன்றாக காலைமுதல் நிகழ்ந்ததை சொன்னார்.

சுருதை பெருமூச்சுடன் “நீங்கள் நினைப்பது சரிதான். பெரிய விரிசல்தான்” என்றாள். “ஏன்?” என்றார் விதுரர். “ஏனென்றால் குந்திதேவி அரசரின் இளவல் பாண்டுவின் மனைவி” என்றாள் சுருதை. “அவ்வாறெல்லாம் எளிமையாக நினைக்கமுடியாது… நீ சொல்வது ஏதோ சமையலறைப்பூசல் போல ஒலிக்கிறது” என்றார் விதுரர். “சமையலறை இல்லாத வீடு உண்டா என்ன?” என்றாள் சுருதை. “உங்கள் நூல்கள் சொல்வதைவிட மிக எளிமையானதுதான் அது. அரசருக்கும் இளவலுக்கும் நடுவே இருந்தவள் அவள். தன் இளவலுடன் தன்னைவிட அணுக்கமாக இருக்க முடிந்தவள். அந்த எண்ணத்தில் இருந்து அரசரால் விலகவே முடியாது. அது சமையலறை உணர்ச்சிதான். ஆனால் சமையலறையில்தான் அனைத்துமே சமைக்கப்படுகின்றன.”

“அவள் முடிசூடியதை அவரால் ஏற்கமுடியாது என்கிறாயா?” என்றார் விதுரர். “ஆம், ஒருபோதும் ஏற்கமுடியாது. தன் பெருந்தன்மையால் அவர் அதை கடந்துசெல்ல முயல்வார். ஆனால் அது உள்ளே இருந்துகொண்டேதான் இருக்கும். அவருக்கு குந்திதேவிமேல் இருக்கும் அந்த விலக்கத்தைத்தான் கணிகர் கையாள்கிறார்.” விதுரர் நீள்மூச்சுடன் “நான் சோர்ந்துவிட்டேன். தெய்வங்களின் ஆணை என ஒன்றன் மீது ஒன்றாக நிகழ்கின்றன. வெறும் தற்செயல்கள். ஆனால் அவை முடிவெடுத்தவைபோல வந்துகொண்டிருக்கின்றன.”

“சோர்வதற்கு ஏதுமில்லை” என்று சுருதை சொன்னாள். “குந்திதேவியின் ஆணை ஒன்று எந்த மதிப்பும் இன்றி செல்வதை அரசர் அறியும்படி செய்யுங்கள். அரசரின் ஆணை மட்டுமே இங்கே நிலைகொள்ளும் என அவருக்குக் காட்டுங்கள். குந்திதேவி அவமதிப்புக்குள்ளாவாள் என்றால் அரசர் அகம் நிறைவடையும்.” விதுரர் அரைக்கணம் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கினார். “நீங்கள் எண்ணுவதை நானறிவேன். ஆனால் எனக்கு வயதாகிவிட்டது. தோள்மேல் மைந்தர் எழுந்துவிட்டனர்” என்றாள் சுருதை. “நான் என்ன எண்ணினேன்? உனக்கு பித்துப்பிடித்திருக்கிறது” என்று விதுரர் சீறினார். “சரி” என்று சுருதை நகைத்தாள்.

“என்ன சிரிப்பு? குந்தியை அவமதிக்கும் எதையும் நான் செய்யமாட்டேன் என நினைக்கிறாயா?” என்றார் விதுரர். “அவமதிப்பு என ஏன் எண்ணவேண்டும்? அது அவர்கள் அறிந்தே நிகழும் நாடகமாகக் கூட இருக்கலாமே?” என்றாள் சுருதை. அறியாமல் விதுரர் முகம் மலர்ந்தார். அதைக்கண்டு அவள் நகைத்தபடி “இப்போது தயக்கமில்லை அல்லவா?” என்றாள். விதுரர் நகைத்தபடி துப்புவதற்காக எழுந்தார். அவள் கலத்தை எடுத்து அருகே வைத்தபடி “சற்று துயிலுங்கள். மாலைக்குள் நான் எழுப்பிவிடுகிறேன்” என்றாள்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைமாலை நேரத்து மயக்கம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34