«

»


Print this Post

குப்பைகள்…ஒரு கடிதம்


அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் கடற்கேரளம் பழைய நினைவுகளையும், கேரளா, இந்தியா குறித்த மன வேதனைகளையும், பீதியையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. நானும் கேரளாவிலிருந்து கோவா செல்லும் வரையிலான கடற்கரைச் சாலையில் பயணிக்கும் பொழுது இந்த நிலையைக் கண்டிருக்கிறேன். கேரள மக்கள் கொஞ்சமாவது சுத்தம் குறித்த உணர்வு கொண்டிருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். உங்கள் கடற்கரைக் குப்பைகள் பற்றி படிக்கும் பொழுது அந்த நினைப்பிலும் மண். ஒரு வேளை அந்தக் குப்பைகள் நிறைந்த கடற்கரை கிராமம் கன்யாகுமரி மாவட்டத்திற்குள் வருகிறதோ? நான் சென்ற பொழுது கோவளம் கடற்கரை சுத்தமாகவும், குளிப்பதற்கும் அமைதியாக ஓய்வெடுப்பதற்கும் ஏற்ற இடமாகவே இருந்தது. மோகன்லால் நடித்த பத்மராஜனின் சீசன்ஸ் என்றொரு மலையாளப் படம் முற்றிலும் கோவளம் பின்ணணியில் எடுக்கப் பட்டிருக்கும்.  தமிழ் நாட்டில் இன்று நிலவும் மூச்சு முட்ட வைக்கும் முட்டிகளைப் பெயர்க்கும் சிக்குன் குனியா உருவாக்கும் குப்பை மலைகளைப் பற்றி தனியே எழுத வேண்டும்.

நான் சமீபத்தில் மதுரைக்குச் சென்றிருந்த பொழுது தங்கியிருந்த நகர், பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், டாக்டர்கள், எஞ்சீனீயர்கள் போன்ற மேல் தட்டு மக்களும் வாழும் ஒரு குடியிருப்புப் பகுதி. வீட்டுக்கொரு பி எச் டி இருக்கும் குடியிருப்புப் பகுதி. அந்த நகரின் வழியே போகும் நெடுஞ்சாலை வழியே அரசின் உயர் அதிகாரிகளும், மந்திரிப் பிரதானிகளும், பல்கலைக் கழக துணைவேந்தர்களும், பேராசிரியர்களும் உயர்கல்வி கற்கும் மாணவர்களும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் தினம் தினம் சென்று வருகிறார்கள். அப்படியாகப் பட்ட ஒரு இடத்தில் குப்பைகள் சிறு சிறு குன்றுகளாக குவித்து வைக்கப் பட்டிருக்கின்றன. அனைவர் பார்வையிலும் தினமும் அந்தக் குப்பை மலைகள் காட்சியளித்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் யாரையும் அந்தக் காட்சிகள் உறுத்தவேயில்லை.

மிகவும் அசுத்தமான குப்பைகள் அவை. வீட்டுக்குள் உருவாக்கப் படும் அத்தனை மாசுக்களும் பாலித்தீன் பைகளில் கட்டப் பட்டு அந்தக் குப்பை மலைகளில் ஐக்கியமாகின்றன. அழுகிய உணவுப் பொருட்கள், மாமிசங்கள், எலும்புத் துண்டுகள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள், ஊசிகள், பிளஸ்டிக் குப்பைகள், நோய் பரப்பும் கிருமிகள் நிறைந்த துணிகள், பஞ்சுகள், வீணாய்ப் போன பொருட்கள், பெண்களின் மாதவிலக்குக்குப் பயன் பட்ட துணிகள், டயப்பர்கள், மலங்கள், பாத்திரங்கள் என்று அத்தனை விதமான குப்பைகளும் எளிதில் மக்கிப் போக விடாத பாலீத்தீன் பைகளில் அடைக்கப் பட்டும், அப்படியேயாகவும் இந்த குப்பை மலைகளில் கொட்டப் பட்டு கொட்டப் பட்டு தொடர் மலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு தெருவில் இருக்கும் காலி மனைகள் இந்தக் குப்பைகள் கொட்டுவதற்காகவே படைக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் குப்பைகளுடன் மழை நீர் சேரும் பொழுது மழை நீர் வெளியே விடாமல் அடைக்கப் பட்டு அவை சாக்கடைகள் நிறைந்த குப்பை நீராக மாறுகின்றன. மெல்ல மெல்ல இந்த அசுத்தங்கள் மண்ணுக்கு அடியில் சேர்ந்து அடி மண்ணையும் அசுத்தமாக்குகின்றன. நிலத்தடி நீரிலும் கலக்கின்றன. மொத்தத்தில் மண், நீர் என்று ஒட்டு மொத்த சுற்று சூழலுமே நச்சாக மாறுகின்றன. அருகில் சென்றால் கடும் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பை மலைகளை நகராட்ச்சியினர் அப்புறப் படுத்துவதேயில்லை. மலைகள் கட்டுக்கடங்காமல் விரியும் பொழுது தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். அவை பாதி எரிந்தும் எரியாமலும் சாம்பல் குப்பைகளை உருவாக்கி நீருடன் கலக்கின்றன. அந்த நகர் முழுக்க அனைத்து வீடுகளிலும் சிக்கன் குனியா நோய் பரவியுள்ளது. கொசுக்கள் இந்த குப்பை மலைகளில் கழுகள் போலக் கொழுத்து வளர்கின்றன, கரிய மேகங்கள் போல வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. காலை, மதியம், மாலை இரவு என்று எப்பொழுதும் கொசுக்கள் கூட்டம் கூட்டமாகத் தாக்குகின்றன. நகரின் உள்ள அனைத்து வாய்க்கால் தண்ணீர் வெளியேறும் வழித்தடங்களும் குப்பைகளால் மூடப் பட்டு குப்பைகளினால் ஆன சாக்கடைகளாக மாற்றப் பட்டுள்ளன.  இந்தக் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக்களை வெளியில் எடுக்க எல்லா குப்பை மலைகளைக்கு அருகிலும் நாலைந்து பேர்கள் கை கால்களில் எவ்வித பாதுகாப்பு உறைகளும் இன்றி குப்பைகளுக்குள் நுழைந்து குடைந்து பிளாஸ்டிக் பொருட்களை வெளியில் எடுத்துச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒட்டு மொத்த நகருமே குப்பைகளின் நடுவே நச்சு மூச்சை  விட்டுக் கொண்டிருக்கின்றது. சிவகெங்கை ரோட்டில் செல்லும் பொழுது வரிசையாக மருத்துவமனைகள் இருப்பதைப் பார்த்தேன். அனைத்து மருத்துவமனைகளுமே ஒரு மாபெரும் குப்பைகள் நிறைந்த, அகழி போன்ற, பெரிய நதி போன்ற திறந்த வெளிச் சாக்கடைகள் மீது அமைந்திருக்கின்றன. அந்தச் சாக்கடைகளைத் தாண்டித்தான் இந்த மருத்துவமனைகளின் உள்ளே போக வேண்டும். நோய் தீர்க்க வேண்டிய இடங்களே நோய் உற்பத்தி ஸ்தானங்களின் மேல் அமர்ந்திருப்பது எந்தவிதமான ஒரு முரண்? மதுரையிலும் பிற நகரங்களிலும் இதே நிலைமையைக் கண்டேன். ஏறக்குறைய ஒட்டு மொத்த தமிழ் நாடுமே மாபெரும் சாகக்டையாக, மாபெரும் குப்பை மலையாக எனக்குக் காட்சியளித்தது. முன்பெல்ல்லாம் அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். இப்பொழுது நாடே பெரும் சாக்கடையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். நாங்கள் மட்டும் என்ன சாக்கடை நீயும்தான் குப்பை, நீயும்தான் சாக்கடை என்று மக்களுக்கு லஞ்சம் கொடுத்து மக்களை உணர்வில்லாத பிண்டங்களாக மாற்றி ஒட்டு மொத்த தேசத்தையுமே அழுகிச் சீரழியும் ஒரு மாபெரும் அசுத்தம் பிடித்த இடமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு இரண்டு முக்கிய பிரச்சினைகளை நான் அவதானித்தேன். ஒன்று இந்தக் குப்பைகளை அழிக்கப் போதுமான உரிய கட்டமைப்புகள் இல்லை. ஊழியர்களும் இல்லை. மேலும் வார்டு கவுன்சிலர்கள் முதல் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் வரை அனைவருமே இப்பொழுதெல்லாம் கட்சி சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு வார்டு கவுன்சிலர் பதிவிக்குக் கூட சில லட்சம் செலவு செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அக்கறையுள்ள பொது மக்கள் கூட துணிந்து அவர்களது செயலின்மையைத் தட்டிக் கேட்க முடிவதில்லை. பயப்படுகிறார்கள். ஆக உள்ளாட்சி அமைப்புகளின் அவற்றின் நிர்வாகிகளின் மெத்தனம், அலட்சியம், நிதியின்மை, நிதி வேறு தேவையற்ற திட்டங்களுக்கு மாற்றப் படுதல், ஊழியர்களின் வேலை பார்க்காமல் இருக்கும் போக்கு ஆகியவற்றை கேள்வி கேட்க்க ஆளில்லாமல் போய் அடிமட்டக் கட்டமைப்பே சீரழிந்து போய் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல அரசின் வருமானம் எல்லாமே தேவையற்ற கவர்ச்சி செலவுகளான கலர் டி வி திட்டத்திற்குப் போகின்றது.

இரண்டாவது முக்கிய பிரச்சினை: இப்படி குப்பைகளை வீசி எறிபவர்கள் சாதாரண ஆசாமிகள் அல்லர். மெத்தப் படித்தவர்கள். பல்கலைக் கழகப் பேராசிரியர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள். அரசு அதிகாரிகள். மாதம் ஒரு லட்சத்துக்கும் குறையாமல் சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு முதலில் இப்படி குப்பைகளை மலை போலக் குவித்து சாக்கடையாக்கி அசிங்கப் படுத்துவது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை புரியவில்லை. நான் சில பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது “ஏன் சார் இதையெல்லாம் அகற்ற முயற்சிக்கக் கூடாதா?” என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்ன பதில்கள் என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

“இப்படித்தானே இருக்கிறது? இதில் என்ன பிரச்சினை?”

“குப்பைகள் ஒரு ஓரமாக குவிந்திருந்தால் நமக்கு என்ன? நம் வீட்டுக்குள்ளா இருக்கிறது?”

“அதெல்லாம் பஞ்சாயத்தில சொல்ல முடியாது சார், அவன் கட்சிக்காரன் ஏதாவது நம்மை செஞ்சு போடுவான்”

“இந்தியா மாதிரி நாட்டுல இப்படித்தான் சார் குப்பை எல்லாம் இருக்கும் இதெல்லாம் ஒரு பெரிய ப்ராப்ளமே கிடையாது சார்”

”கொசு இல்லாத இடம் எது சார்?”

“சாக்கடை வெளியே தான சார் இருக்கு நம்ம நடு வீட்டுக்குள்ளயா இருக்கு இருந்தா இப்ப என்ன?”

இப்படியான ரீதியிலேயே மெத்தப் படித்த மேல் தட்டு அறிவாளிகள் பதில் சொன்னார்கள். முதலில்  இவர்கள் அனைவருக்கும் குப்பைகளும், சாக்கடைகளும், கொசுக்களும், ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. சிக்குன்குனியா போன்ற நோய்களை உருவாக்குவதும், நம் சுற்றுச் சூழல் மாசுகளை உருவாக்குவதும், குடி நீரை நச்சாக்குவதும் இந்தக் குப்பைகள்தான், இவற்றை அகற்ற வேண்டும் என்ற உணர்வே படித்த மேல் வர்க்கத்தினருக்கே இல்லை என்பதே எனக்குக் கடும் அதிர்ச்சியை அளித்தது. நான் இது குறித்து பேசியதில் பெரும்பாலானவர்கள் டாக்டர் பட்டம் படித்தவர்கள் என்பதை நான் குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

முதலில் இது ஒரு அபாயம் என்ற விழிப்புணர்வை நாம் படித்தவர்களிடம் உருவாக்க வேண்டும். அனைவருக்கும் வீட்டுக்குள் சுத்தமாக இருக்க வேண்டும், டி வீ பார்க்க வேண்டும் சீரியல் பார்க்க வேண்டும் பிள்ளைகள் படித்து ஐ டி வேலைக்குப் போக வேண்டும் ஆனால் தன் வீட்டுக் குப்பைகள் மட்டும் வெளியில் வீசி எறிய வேண்டும் என்பது அன்றாட வாழ்க்கை லட்சியங்களாக இருக்கின்றன. இந்த ஊரில் அமைப்பு குப்பைகளை தினமும் வீடுகளில் இருந்து பெற்றுக் கொண்டு அகற்றி வந்தனர். அவர்கள் மாதம் ஒரு வீட்டுக்கு இருபது ரூபாய்கள் வசூலித்து வந்தனர். இருபது ரூபாயை இவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் குப்பையைப் போடத்தான் காலி மனைகளும் தெருவோரங்களுமே இருக்கின்றனவே என்று நினைத்து பெரும்பாலான வீட்டினர் அந்த இருபது ரூபாயைக் கொடுக்க மறுத்ததின் காரணமாக அந்த தன்னார்வ அமைப்பே இப்பொழுது செயல் படவில்லை. ஹோட்டல்களில் உண்ண, சினிமாவுக்குப் போக, உல்லாசமாக இருக்க என்று ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவழிப்பவர்கள் பொது சுகாதாரம் என்று வரும் பொழுது சிக்கன உணர்வு பொங்கி வர இருபது ரூபாயை மிச்சம் பிடித்து விட்டனர். இங்கு தலையாய பிரச்சினையே “குப்பைகளும் சாக்கடைகளும் ஒரு மாபெரும் சுகாதாரப் பிரச்சினை” என்பதையே உணராத நம் மக்களே. “அதன் காரணம் எதுவென்று அறியுமிலார்” என்று பாரதி சொன்னது இதற்கும் பொருந்தும்தான். முதலில் ஒரு பிரச்சினையை அது பிரச்சினை என்று உணர்ந்தால்தானே நம் மக்கள் அதற்கு தீர்வு காண முற்படுவார்கள். மக்களுக்கே குப்பைகள் சேர்வது ஒரு பொருட்டாக இல்லாத பொழுது அரசுக்கு அதை பற்றி என்ன அக்கறை? ஆக இங்கு பொது மக்கள், அரசாங்கம் என்று யாருக்குமே இந்த மாபெரும் சுகாதாரக் கேட்டின் காரணம் குறித்து அறிவும் அக்கறையும் இல்லை. விளைவு தமிழ் நாடு ஒரு மாபெரும் குப்பை மேடாக, சாக்கடையாக மாறி வருவதுதான்.

கடந்த பத்து வருடங்களில் இந்த குப்பைகளின் அளவு பல மடங்கு வளர்ந்து பூதாகரமான ஒரு ராட்சச அசுத்தமாக உருவாகி வருவதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. என்னைப் போல வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குத்தான் இந்த அசுர வேக குப்பை மலைகளின் நிதர்சனம் புரிகிறது. அங்கேயே இருக்கும் மக்களுக்கு இது ஒரு வித்தியாசமாக இயல்பான வாழ்க்கையின் அங்கமாக மாறி விட்டிருக்கிறது. இந்தக் குப்பைகளும் சாக்கடைக் குட்டைகளும் சாக்கடைக் கால்வாய்களும் அந்த நகரில் இருக்கும் சாலைகள் போல, தண்ணீர் தொட்டிகளைப் போல, பள்ளி கல்லூரிகளைப் போல, அந்த நகரின் நிரந்தர சின்னங்களாகவே மாறி விட்டிருக்கின்றன. ஒரு வீட்டுக்கு அடையாளம் சொல்ல குப்பை மலைகளைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். யாருக்கும் இதன் விபரீதம் புரியவேயில்லை என்பதுதான் உண்மைப் பிரச்சினையே. உடலில் வலி இருப்பதை உணர்ந்தால்தானே மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போவார்கள்? அந்த உணர்ச்சியே முதலில் எழாமல் உள்ளுக்குள்ளேயே வெளியில் தெரியாத கான்சராக வளர்ந்தால் முற்றிய பின் தானே வலி தெரியும்? அப்படித் தெரிய வரும் பொழுது யார் காப்பாற்ற முடியும்? நோய் முதல் நாட வேண்டியது முக்கியம் அல்லவா?

எல்லா ஊர்களிலும் “இது உங்கள் நகரம் இதைச் சுத்தமாகப் பேணவும்” என்றொரு நோட்டீஸ் அடித்து எல்லாச் சுவர்களிலும் ஒட்டியிருக்கிறார்கள். அத்துடன் நகராட்சிகளின் சுகாதாரப் பணி முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். மக்களுக்கோ பார்வைக் கோளாறு, ”சுத்தமாகப் பேணவும்” என்பதில் இருக்கும் ”ண” கரத்தை “ள” கரமாக்கி மாற்றிப் படித்து விட்டு ஊர்களை மாபெரும் கழிப்பிடமாக மலக் குவியல்களாக மாற்றி விட்டிருக்கிறார்கள்.

நான் தமிழ் நாட்டில் பயணம் மேற்கொண்ட பல மாவட்டங்களின் நிலை இதுதான். நாகர்கோவில் நகரம் மட்டும் சற்று சுத்தமாக இருந்தது. ஒப்பீட்டளவில் நாகர்கோவில் பரவாயில்லாத சுத்த நகரம் என்று சொல்லலாம். அதையே நீங்கள் உள்ளூர்காரர்கள் மோசம் என்று நினைப்பீர்களாயின் பிற நகரங்களின் நிலையை சற்று எண்ணிப் பாருங்கள். தமிழ் நாட்டின் நதிகள் பற்றி தனியே ஒரு முறை புலம்ப வேண்டும்.

அன்புடன்
ராஜன்

அன்புள்ள ராஜன்

இன்றுதான் கேரளப்பயணம் முடிந்து திரும்பிவந்தேன். பொதுவாக கேரளத்தில் குப்பைகள் மிக அதிகமாகஏ இருக்கும் என்பது என் எண்ணம். பொது இடங்களில் மலம் கழிப்பது நகரச்சேரிகள் அல்லாத இடங்களில் குறைவு என்பது மட்டுமே வேறுபாடு. கேரள ரசின் குப்பை அள்ளும் நிர்வாகம் என்பது தொழிற்சங்க அரசியலில் முடங்கிச் சீரழிந்து கிடக்கிறது. குப்பை போட இடமே இல்லை என்ற நிலை. சொந்த வீட்டுக்குப்பையை காரில் கொண்டுவந்து சாலையோரம் வீசிவிட்டு போகிறார்கள் மக்கள். கோவளம் போன்ற சுற்றுலாத்தலங்களின் நிலை வேறு. அங்கே சுற்றுலாப்பயணிகளுக்காம்க அந்த சுத்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் இந்தமுறை என் கண்ணுக்கு குறைவாகவே குப்பை தென்பட்டது– வேறு ஒன்றுமில்லை. தமிழகம் குப்பைமலைகளை அதைவிடபலமடங்கு உருவாக்கி கண்ணை பழக்கிவிட்டிருக்கிறது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6596/

7 comments

Skip to comment form

 1. Bags

  >>>ஒரு வேளை அந்தக் குப்பைகள் நிறைந்த கடற்கரை கிராமம் கன்யாகுமரி மாவட்டத்திற்குள் வருகிறதோ?

  ராஜன், இது அபாண்டம். பிராந்திய பாராபட்சமின்றி எல்லா இடங்களிலும் அசுத்தம் காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் என்ன பாவம் பண்ணியது? (நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்ததில்லை. சினிமாக்களில் பார்ப்பதை வைத்தும் சில சொந்த அனுபவங்களை வைத்தும் சொல்கிறேன்).

  ஒருமுறை நான் கோழிக்கோடு அருகே செல்லும் பொழுது என் வாகனத்தின் ஒட்டுனர் தவறுதலாக (ஏதோ தெரியாமல் செய்த தவறல்ல. வேண்டுமென்றே சீக்கிரமாக செல்ல முயன்றார்) சாலையில் திரும்பியபோது எதிரே வந்த லாரி டிரைவர் எங்கள் வாகணத்தின் தமிழக நம்பர் பிளேட்டை பார்த்தவுடன் விண்ட்ஷீல்டின் மீது காரி உமிழ்ந்தார். (நல்லகாலம் windshield இருந்தது). என் ஓட்டுனரின் தவறேயாயினும் அந்த லாரி டிரைவர் தேவை இல்லாத உக்ரத்துடன் அநாகரிகமாக நடந்துக் கொண்டார். (இது தனிப்பட்ட ஒற்றைச்சம்பவம் என்று என்னால் நிராகரிக்க முடியவில்லை. அந்த பயணத்தின் பொழுது கலந்த அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டது). புள்ளிவிவரங்களின் படி கேரள மக்கள் அதிகம் கற்றவர்களாக இருப்பினும், நாகரிகத்திலோ, பண்பாட்டிலோ அவர்களிடம் மற்றவர்களிடமிருந்து, குறிப்பாக தமிழரிடமிருந்து, எந்த பாராட்டத்தக்க வேற்றுமையயும் என்னால் பார்க்க முடியோதோ என்ற எண்ணம் தோன்றிவிட்டது.

 2. sathiawin

  பொதுவாக மழை அதிகமான மற்றும் வெயில் குறைவான பிரதேசங்களில் குப்பை போடுதலும் அசுத்த வெளியும் குறைவாக இருப்பதும் வெயில் சுட்டெரிக்கும் பகுதிகளில் சூரிய பகவான் மேல் பாரத்தை போட்டுவிட்டு குப்பைபோடுதலும் வசமையாக உள்ளது .
  கேரளாவின் மருத்துவ மற்றும் டாக்சிக் குப்பைகள் தமிழ்நாட்டு “தொழிலதிபர்களால்” வாங்கப்பட்டு இங்குபுதைக்கப்படுவதும் நடக்கிறது.இது பிரச்னையின் மற்றொரு சிறு முகம்.

 3. venkatramanan

  //இந்த ஊரில் அமைப்பு குப்பைகளை தினமும் வீடுகளில் இருந்து பெற்றுக் கொண்டு அகற்றி வந்தனர். அவர்கள் மாதம் ஒரு வீட்டுக்கு இருபது ரூபாய்கள் வசூலித்து வந்தனர். இருபது ரூபாயை இவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் குப்பையைப் போடத்தான் காலி மனைகளும் தெருவோரங்களுமே இருக்கின்றனவே என்று நினைத்து பெரும்பாலான வீட்டினர் அந்த இருபது ரூபாயைக் கொடுக்க மறுத்ததின் காரணமாக அந்த தன்னார்வ அமைப்பே இப்பொழுது செயல் படவில்லை.//
  இது பல இடங்களில் நான் கண்ட ஓர் உதாரணம். மேலும் சென்னை போன்ற நகரங்களில் சீருடை அணிந்து பணியாற்றும் ஊழியர்களின் மெத்தனமும் கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம் (அவர்களின் மலை போன்ற பணிச்சுமை தனியே விவாதத்திற்குள்ளாகவேண்டிய ஒரு விஷயம்!)

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 4. V.Ganesh

  திரு ராஜன்/ ஜெயமோகன் அவர்களுக்கு,
  வணக்கம். என்னிடம் ஒரு கை பேசி உள்ளது. பழுதானது. மற்றும் ஒரு பழைய ரெகார்டர் உள்ளது. அதுவும் பழுதானது. ஆனால் என்னால் அதை தூரே எறிய இயலவில்லை. ஏனெனில் எனக்கு அது சேரும் இடம் தெரியாது. நான் மேல் நாடு செல்லவில்லை. ஆனால் குப்பை என்பதை மிகவும் கருத்தோடு வீட்டில் பார்க்கும் ஒரு குடும்பம். எல்லா மெட்ரோ நகரம் மற்றும் சிறு நகர்களிலும் “ஒரு குப்பையின் கதை” தெரியாததால் வரும் வினைதான் இது. துப்பினால் தவறு என்பதை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். நான் பிறந்த/ வளர்ந்த கிராமத்தில் வீட்டில் கை கழுவும் நீர் செடிகளுக்கு செல்லும், குளிpபதற்கு குளம் உண்டு. கடையில் paper ல் பொதிந்து சாமான் தருவார்கள். பை இல்லை எனில் சாமான் தரமாட்டார் கடைக்காரர். இதை எல்லாம் விட்டு நாம் gandhiyin ஸ்வராஜ்யம் காணவே முடியாது. ஜெயமோகன் ஏற்கனவே எழுதியது போல் ஒரு பிடாகை என்பது எல்லாம் அடக்கியது. அங்கே many things are reusable. நாம் இன்று தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதைதான் செய்கிறோம். இன்று சென்னையில் குப்பை என்பது ஏரிகளை/பொது இடம் நிரத்தி பிளாட் போடத்தான். சென்னை மட்டுமல்ல அனைத்து பெரு மற்றும் சிறு நகரம் கதியும் இதுதான். மறுபடியும் ஐயா ஜெயமோகன் கட்டுரைகளை படித்து நிராசை தான் வருகிறது. என்னை இவை அனைத்திற்கும் மூலம் இன்றைய அரசியல் சூழல் தான். என் குறை அரசு அல்ல அரசியல். வாழ்க பாரதம்.

 5. முஉசி

  In industries Waste Management is a specialized discipline, such kind of initiative is to be followed by individuals, Society.
  Reduce -Reuse – Recycle is the key to be built in to control waste.
  நம் வீட்டு முதியவர்கள் இன்றும் உணவருந்தும் போது சிந்தாதே என்பது போன்ற மரபுசார் அறிவுரைகளில் நம்முடன் கலந்த வழக்கங்கள் தற்போது நீர்த்து போய்விட்டதன் அடையாளமாக இதனை எடுத்துகொள்ளலாமா?!

 6. velparasu

  அன்புள்ள ராஜன்,
  நானும் மதுரையை சேர்ந்தவன் தான். இந்த குப்பை பிரச்சனையை பற்றி பல முறை என் நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன். என்னுடைய பகுதி ஜெய்ஹிந்துபுறம். இங்கே வீடுகளில் இருக்கும் குப்பைகளை தினமும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பை வண்டியில்; வந்து பெற்று செல்கின்றனர். அவர்களை குறை கூற முடியாது. ஆனால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கும் குப்பைகளுக்கு முக்கியமான பொறுப்பு அதனை சரியான நேரத்தில் அப்புறபடுத்த முயற்சிக்காத தொழிலாளர்கள் (அல்லது அதற்க்கு போதிய நேரம் இல்லாத)மற்றும் சாலை குப்பைகளுக்கு மிக முக்கியமான காரணமான சாலைஓர வணிகர்கள் தான். இதனை படித்தவர்க்க படிக்காதவர்கள் என வகை படுத்த வேண்டிய தேவை இல்லை. ஒரே காரணம் சோம்பேறித்தனம் தான். பாரபட்சம் இல்லாமல் அணைத்து இடங்களிலும் இருக்கும் இந்த சோம்பேறிதனம் தான் அனைத்து தவறான விளைவுகளுக்கும் காரணம். ஆனால் தங்கள் கூறியிருப்பது ஒரு வகையில் சரி என்றாலும் வெளி நாட்டிற்கு சென்று திரும்பும் அனைத்து இந்தியர்களின் குற்றச்சாட்டும் இதே போல இருப்பதால் உங்களின் குற்றச்சாட்டை ஏன் ஒரு தல பட்சமானது என கொள்ள கூடாது ( வெளிநாட்டு மோகம் )( நம் நாட்டை பற்றிய தாழ்வான எண்ணம் )

  பிரசன்னா

 7. Meenakshi Sundaram

  அன்புள்ள ஜெயமோகன் மற்றும் ராஜன் அவர்களுக்கு,

  http://earth911.com/news/2009/08/03/trash-planet-india/
  மேற்கண்ட இணைப்பில் உள்ள கட்டுரையைப் பாருங்கள். நன்கு ஆய்வு செய்து எழுதியது போல் உள்ளது. கழிவு மேலாண்மையில் நாம் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறாம் என்று நினைகின்றேன்.

  மீனாட்சிசுந்தரம்

Comments have been disabled.