பகுதி ஏழு : பூநாகம் – 2
விதுரர் தருமனின் அரண்மனைக்கூடத்தில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தார். பீடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து சாளரம் வழியாக வெளியே நோக்கினார். அங்கே தெரிந்த சோலையில் ஒருகணமும் சிந்தை நிலைக்கவில்லை. மீண்டும் வந்து அமர்ந்துகொண்டார். தருமனின் அணுக்கச்சேவகன் விசுத்தன் வாயிலருகே அவரை நோக்கியவண்ணம் தவித்தபடி நின்றிருந்தான். விதுரர் சித்தம் குவியாத கண்களால் அவனை சிலகணங்கள் நோக்கி சொல்லெழாமல் உதடுகளை அசைத்தபின் அவனுடைய அசைவைக்கண்டு விழித்தவர் போல உயிர்கொண்டு “என்னதான் செய்கிறார்கள்?” என்றார்.
“அன்னையும் மைந்தரும் நகையாடிக்கொண்டிருக்கின்றனர் அமைச்சரே” என்றான் விசுத்தன். “இப்போதுதான் அங்கிருந்த சேடியிடம் என் வேலையாள் கேட்டுவந்தான். அந்தப்புரத்துப்பெண்களுக்கெல்லாம் யாதவ அரசி பரிசில்கள் வழங்குகிறார். அவற்றை பட்டத்து இளவரசரே தன் கையால் அளிக்கிறார். அந்தப்புரமெங்கும் கொண்டாட்டம் நிறைந்திருக்கிறது.” விசுத்தன் புன்னகைத்து “பெண்களின் பேராசை அல்லவா? அளிக்கும் கை சலிக்குமே ஒழிய அடையும் கைகள் சலிப்பதில்லை.”
விதுரர் சற்று திகைத்து “படையெடுப்புச் செல்வத்தில் இருந்தா அப்பரிசில்களை வழங்குகிறார்?” என்றார். “ஆம், யாதவ அரசிக்கு எப்போதுமே தனிக் கருவூலம் என ஏதும் இருந்ததில்லை. அவர் எவருக்கும் பெரிய பரிசுகளை வழங்குவதில்லை என்பது சற்று கேலியாகவே அரண்மனையில் பேசப்படுவதுண்டு.” விசுத்தன் குரல் தாழ்த்தி “அதை ஈடு செய்கிறார்கள் போலும்” என்றான்.
“நான் காத்திருப்பதை சொன்னாய் அல்லவா?” என்றார் விதுரர். “முன்னரே சொல்லிவிட்டேன் அமைச்சரே… இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்று பட்டத்து இளவரசர் சொன்னார். சொல்லி மூன்றுநாழிகை ஆகிறது.” விதுரர் பொறுமையிழந்து தலையை அசைத்தபின் “மீண்டும் சென்று தருமனிடம் சொல். உடனே நானும் அவர்களும் சேர்ந்துசென்று திருதராஷ்டிர மாமன்னரைப் பார்க்கவேண்டும் என்று. ஏற்கெனவே தருமன் முறைமீறிவிட்டான். பிந்துவதென்பது மேலும் இடர்களை அளிக்கும்” என்றார்.
விசுத்தன் தலைவணங்கி “அந்தப்புரத்திற்குள் பிற ஆண்கள் நுழைய முடியாது அமைச்சரே. நான் இச்செய்தியை அரசியின் சேடியிடம் சொல்லித்தான் அனுப்பவேண்டும். எளிய பெண்களிடம் அரசச்செய்திகளைச் சொல்வது நகர்நடுவே முரசறைவது போன்றது” என்றான். “நான் ஓர் ஓலையை கொடுத்தனுப்பலாமா என்று எண்ணினேன். ஆனால் அவை நடுவே ஓலை செல்வதும் அனைவரும் பார்ப்பதற்கிடமாகும். அலர் எழும்.”
விதுரர் அவரது இயல்பை மீறி “வேறு என்னதான் செய்வது?” என்று கூவி விட்டார். “இடிந்து சரிந்துகொண்டிருக்கிறது… தெரிகிறதா? அனைத்தும் இடிந்து சரிந்துகொண்டிருக்கிறது… அடித்தளத்தில் முதல் விரிசல் விழுந்துவிட்டது.” அவர் சினத்துடன் மூச்சிரைக்க விசுத்தன் அவரை நோக்கி வியந்த விழிகளுடன் நின்றான். “ஏதாவது செய் போ… எப்படியாவது அவர்களை உடனே கூட்டி வா!” விசுத்தன் “நான் சேடியை இளவரசர்களில் ஒருவரை வெளியே அழைத்துவரச் சொல்கிறேன்… ஏதேனும் பொய்யை சொல்கிறேன்…” என்றபின் வெளியே ஓடினான்.
விதுரர் கூடத்திற்குள் முன்னும் பின்னும் மூச்சிரைக்க நடந்துகொண்டிருந்தார். வாயில் அருகே காலடியோசை கேட்டதும் திரும்பிப்பார்த்தார். வந்தது தருமன் அல்ல, தன் துணையமைச்சர்களில் அண்மையானவனாகிய கனகன் என்று கண்டு சினத்துடன் அவனை நோக்கிச் சென்று “என்ன?” என்று உரக்கக் கூவினார்.
கனகன் அந்தச்சினத்திற்கான பின்புலம் புரியாமல் “அரசவை கூடியிருக்கிறது. மாமன்னர் பீடம் கொண்டிருக்கிறார். அவர்கள் இளவரசர்களை எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றான். “இளவரசர்கள் இறந்துவிட்டார்கள்… ஒழிந்துவிட்டார்கள்… புரிகிறதா? அவர்கள் இனி இல்லை!” என்று விதுரர் கைகளை ஆட்டியபடி கூவினார். கனகன் திகைத்து வாய்திறந்தான்.
பின்னர் நிலை மீண்டு மூச்சை அடக்கியபடி “அங்கே கணிகர் இருக்கிறாரா?” என்றார். “ஆம் அமைச்சரே, கணிகர்தான் அரசரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.” விதுரர் மீண்டும் கொந்தளித்து “ஒரு வீரனை அழைத்து அவனை வெளியே இழுத்து வந்து வெட்டி வீழ்த்தச் சொல்” என்றார். கனகன் வெற்றுவிழிகளுடன் நோக்கி நின்றான்.
விதுரர் மெல்லமெல்ல தன்னை அடக்கி “அவனை எவ்வண்ணமேனும் வெளியே இழுக்கமுடியுமா? அவன் அரசரிடம் பேசமுடியாமல் தடுக்கமுடியுமா?” என்றார். “அவர் கதைகளைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். நகைச்சுவைக்கதைகள்” என்றான் கனகன். “மூடா… அவன் விரிசலில் ஆப்பு ஏற்றிக்கொண்டிருக்கிறான்” என்றார் விதுரர்.
கனகன் புரிந்துகொண்டு “ஆனால் சகுனி அவர் சொல்வதை ஒப்புக்கொள்ளாமல்…” என்று சொல்லவும் விதுரர் மீண்டும் சினம் கொண்டு “அது நாடகம்… அவன் சொற்களை அரசரே ஆதரித்து வாதாடச்செய்கிறார் சகுனி…” என்றார். “மூடன்… நானே மூடன். அரசரை நேராக படுக்கையறைக்கு அனுப்பியிருக்கவேண்டும்… இந்த மூடர்களை உடனே அழைத்துச்செல்லலாம் என எண்ணினேன்.”
பலகாத தூரம் ஓடிக் களைத்தவர் போல விதுரர் சென்று தன் பீடத்தில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கிக்கொண்டு குனிந்து அமர்ந்தார். அவரது விலா அசைந்துகொண்டிருந்தது. கனகன் மெல்லிய குரலில் “ஒன்று செய்யலாம். சகுனியின் அரண்மனையை தீவைத்தபின் சென்று அச்செய்தியை சொல்லமுடியும்…” என்றான்.
விதுரரின் விழிகள் ஒருகணம் விரிந்தன. “ஆம்…” என்றபின் உடனே “தேவையில்லை. அதை தீயகுறி என்று சொல்லிவிடுவான் கணிகன். அவனுக்கு அனைத்து வித்தைகளும் தெரியும். இது பாண்டவர்களின் முதல்வெற்றி…” என்றார். “வேறுவழியில்லை. அவன் ஏற்றவேண்டிய விஷத்தை ஏற்றட்டும். ஏதேனும் முறிமருந்து உள்ளதா என்று பார்ப்போம்… அது ஒன்றே நாம் செய்யக்கூடுவது…” தலையை அசைத்து “ஊழின் பெருவெள்ளம்… நாம் அதனெதிரே துழாவுகிறோமா என்ன?” என்றார்.
விசுத்தன் உள்ளே வந்து சுவர் ஓரமாக நின்றான். “என்ன?” என்றார் விதுரர். “இளையவர் நகுலனை வெளியே அழைத்துவந்தேன். அவரிடம் அனைத்தையும் சொன்னேன். அவர் புரிந்துகொண்டார். அவர் உள்ளே சென்று தருமரிடம் சொன்னதாக என்னிடம் மீண்டு வந்து சொன்னார். தருமர் அதை யாதவ அரசியிடம் சொன்னபோது யாதவ அரசி சினத்துடன் கடிந்துகொண்டாராம்… தருமர் அடங்கிவிட்டார்.”
விதுரர் பெருமூச்சுடன் “இன்னும் நேரமாகுமா என்ன?” என்றார். “ஆம் அமைச்சரே. இப்போது நகரின் அனைத்து விறலியரும் சூதர்களும் அந்தப்புரம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்தப்புரத்தின் வெளிமுகப்பில் அரசி அமர்ந்துகொள்வதற்காக சௌவீரத்தில் இருந்து கொண்டுவந்த மயிலிருக்கையை போட்டிருக்கிறார்கள். பெருங்கொடை நிகழப்போகிறது என்ற செய்தி பரவிவிட்டது. நகரம் முழுக்க அச்செய்தி இன்னும் சற்று நேரத்தில் சென்றுவிடும். இனி பெருங்கொடை நிகழாமலிருக்க முடியாது. இன்று மாலைவரை அங்கிருந்து அரசியும் இளவரசர்களும் எழவும் முடியாது…”
கனகன் “சௌவீரனின் அரசியின் இருக்கை அல்லவா அது… அது படையெடுப்புச்செல்வம். அது இன்னும் பேரரசருக்கு காட்டப்படவில்லை” என்றான். “வாயை மூடு” என களைத்த குரலில் சொன்னபின் விதுரர் “நான் என் அமைச்சுக்குச் செல்கிறேன். இளவரசர்கள் எழுந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்றபின் சால்வையை சுழற்றிப்போட்டபடி நடந்தார். கனகன் திரும்பி விசுத்தனை நோக்கியபின் அவருக்குப் பின்னால் சென்றான்.
தன் அறைக்குச் சென்றதும் விதுரர் சற்று நேரம் சுவடிகளை கைகளால் அளைந்துகொண்டிருந்தார். பின்னர் வியாசரின் காவியச்சுவடி ஒன்றை எடுத்துக்கொண்டு அதை வாசிக்கத் தொடங்கினார். வாசிக்க வாசிக்க அவர் முகத்தின் இறுகிய தசைகள் மெல்ல நெகிழ்ந்தன. தோள்கள் தொய்ந்தன. உடல் பீடத்தில் நன்கமைந்தது. மூச்சு சீரடைந்தது.
அது புரூரவசுக்கும் ஊர்வசிக்குமான காதலைப்பற்றிய ஊர்வசீயம் என்னும் காவியம் என்று கனகன் கண்டான். அவன் அவர் அருகிலேயே சற்று நேரம் நின்றான். பின்னர் ஓசையில்லாமல் வெளியே சென்று அரச சபையை அடைந்தான்.
அரசரின் முதுசேவகரான விப்ரர் புஷ்பகோஷ்டத்திற்கு வெளியே தன் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவரது ஆணைக்குட்பட்ட பிற சேவகர்கள் அவருக்கு செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தனர். விப்ரர் அவனைக் கண்டதும் புருவத்தைச் சுழித்து “இளவரசர்கள் எப்போது வருகிறார்கள்?” என்றார்.
“அங்கே யாதவ அரசியின் அந்தப்புரத்தில்…” என்று கனகன் பேசத்தொடங்க “அதை நான் நன்கறிவேன். சௌவீரநாட்டின் கருவூலத்தை அரசி அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கனகரே, அது யாதவக்கருவூலம் அல்ல. இன்னும்கூட இந்நாட்டுக்கு திருதராஷ்டிரரே அரசர். அவரது கருவூலம் அஸ்தினபுரிக்கு உரியது” என்றார்.
விப்ரரின் சொற்களை திருதராஷ்டிரரின் சொற்களாகவே கொள்ளவேண்டும் என்பது அஸ்தினபுரியில் நிலைபெற்றுவிட்ட புரிதல். அறுபதாண்டுகாலமாக ஒவ்வொருநாளும் இணைந்தே இருந்து விப்ரர் திருதராஷ்டிரராகவே மாறிவிட்டிருந்தார். அவரை தொலைவிலிருந்து நோக்கினால் அவர் பார்வையற்றவர் என்று தோன்றும். அவர் எவர் விழிகளையும் நோக்கி பேசுவதில்லை. பேசும்போது தலையை இடப்பக்கமாகத் திருப்பி மெல்ல சுழற்றிக்கொள்வதும் திருதராஷ்டிரரைப் போலவே.
கனகன் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான். “விதுரர் இங்கு வந்திருக்கலாம்… அவருக்கும் அந்தப்புரமே பெரிதென்று படுகிறதா?” என்றார் விப்ரர். “அவர் சில அலுவல்களை…” என்று சொல்லத்தொடங்கியவனைத் தடுத்து “அவர் யாதவர்களுக்குரிய தனிக்கருவூலத்தை ஒழுங்குசெய்கிறார்… அதுதான். நான் அறிவேன்” என்றார் விப்ரர். கனகன் “நான் அரசவைக்குச் செல்கிறேன் விப்ரரே. நானறிந்ததை சொல்லிவிட்டேன்” என்றபின் உள்ளே சென்றான். அவனுக்குள் அச்சம் மெல்லமெல்ல ஏறிக்கொண்டிருந்தது. உள்ளே செல்லும்போது கால்கள் எடைகொண்டன.
திருதராஷ்டிரர் அரசுகூடத்தில் கணிகரின் பேச்சைக்கேட்டுக்கொண்டு பீடத்தில் வலப்பக்கம் சாய்ந்தவராக அமர்ந்திருந்தார். அவர் தலைக்குமேல் பட்டுவிசிறி அசைந்துகொண்டிருக்க அதன் நிழல் முகத்தில் அலையடித்தது. சகுனி நகைத்துக்கொண்டிருந்தார். கணிகர் அரசர் முன் சிறியபீடத்தில் அமர்ந்து மின்னும் சிறிய கண்களால் நோக்கி தலையை இருபக்கமும் திருப்பித்திருப்பி பேசிக்கொண்டிருந்தார்.
“கானகத்தில் வேட்டையாடும் செந்நாய்களிடம் இருக்கிறது அந்த அரசநீதி அரசே. அங்கே தலைவனாக இருக்கும் செந்நாயின் உடலே அந்தக் கூட்டத்தின் உடலாகும். அதன் எண்ணமே அந்தக்கூட்டத்தின் எண்ணமாகும். அது சிந்தனைசெய்தால் மட்டும்போதும். முடிவெடுத்தால் மட்டும் போதும். அதன் உடலே செய்தியாகும். அந்தக்கூட்டம் அதன் உடலின் பேருருவத் தோற்றம் மட்டுமே. ஆகவே அது ஆயிரம் வாய்களும் மூக்குகளும் கொண்டதாகிறது. ஈராயிரம் விழிகளும் நாலாயிரம் கால்களும் அமைகின்றன. அந்த ஒற்றைப் பெருவிலங்கின் முன் மதவேழம் அஞ்சியோடும்.” அவர் ஒரு குறிப்பிட்ட வகையில் வாயை உறிஞ்சும் வழக்கம் கொண்டிருந்தார். “அரசனும் அத்தகையவனே. அந்த வகையிலேதான் மாவீரனாகிய கார்த்தவீரியன் ஆயிரம் கரங்கள் கொண்டவன் என்று சொல்கின்றன புராணங்கள்.”
“ஒரு செவி பிறிதைக் கேட்டால், ஒருகரம் மாறுபட்டால், ஒரு கால் இடறினால் அந்த விராடவடிவச் செந்நாய் உதிரிகளின் கூட்டமாக ஆகிவிடுகிறதென்பதை எண்ணிக்கொள்ளுங்கள். ஒற்றைச்செந்நாய்களின் பெருங்கூட்டத்தை வெல்ல ஒரு புலியே போதும். செந்நாய்களை வெல்ல விழையும் சிம்மம் அதன் ஒருமையை அழிக்கவே முயலும். வெவ்வேறு திசைகளிலிருந்து முழங்குவதுபோல எதிரொலி எழும்படி கர்ஜனை செய்யும்…” கணிகர் வாயை உறிஞ்சி “ஆகவே அரசன் எதிர்க்குரல்களையே முதல் எதிரியாகக் கருதவேண்டுமென்று சொல்கிறது சாங்கிய அரசநூல்” என்றார்.
“பெரிய முரண்பாடுகள் மிகமிக மென்மையாகவே வெளிப்படும். நடத்தைகளில். சொற்களில். பலசமயம் எளிய உடலசைவுகளில். ஏனென்றால் பெரிய முரண்பாடுகளை முரண்படுபவர்களே அஞ்சுகிறார்கள். அவற்றை முழுமையாக மறைத்துக்கொள்ள முயல்வார்கள். நாம் காண்பது அனைத்து திரைகளையும் கடந்து வரும் மெல்லிய அசைவை மட்டுமே.” திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் தன் பெரிய கைகளை மெல்ல உரசிக்கொண்டு அசைந்து அமர்ந்தார்.
“அரசே, சாங்கிய ராஷ்டிரதர்ம சூத்திரம் வகுத்துள்ளதன் சாரத்தைச் சொல்கிறேன். அரசு என்பதை இரு கோணத்தில் பார்க்கலாம். அரசவீதியில் நின்று அரண்மனையை நோக்குவது ஒருகோணம். அரண்மனைக்குள் இருந்துகொண்டு நோக்குவது இன்னொரு கோணம்” கணிகர் சொன்னார்.
“முதல்கோணத்திலேயே அறம் என்பது முதன்மையாகப் பேசப்படுகிறது. ஓர் அரசு அமைவதும் நீடிப்பதும் அறத்தின்பொருட்டே என்று நூல்களும் சூதர்களும் நிமித்திகர்களும் குலமூதாதையரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அறத்தின் வழியில் அது செயல்படுகிறது என்றும் அறத்தை நிறுவிக்கொண்டிருக்கிறது என்றும் கற்பிக்கிறார்கள். அதை மக்கள் நம்பியாகவேண்டும். நம்பாவிட்டால் அரசு நீடிக்கமுடியாது. அதை நிலைநிறுத்த அரசன் தன் கருவூலத்தைச் செலவிட்டுக்கொண்டே இருந்தாகவேண்டும்.”
“அது பொய்யல்ல அரசே. அதுவும் உண்மை. ஆனால் அது எல்லைக்குட்பட்ட உண்மை. சிறிய நலங்களை அளிக்கும் உண்மை. பேருண்மை அரண்மனையில் இருப்பவர் அறிவது. அரசு என்பது முழுக்கமுழுக்க படைக்கலங்களால் உருவாக்கி நிலைநிறுத்தப்படுவதே. அரசநீதி என்பது தண்டநீதியே என்று அறிந்த மன்னனே நாட்டை ஆள்கிறான். அவனே உண்மையில் ஒரு நாட்டில் அறத்தையும் வாழச்செய்கிறான்” என்றார் கணிகர். “நூறு வரிகளில் அரசநீதியை வகுத்துரைக்கிறது சாங்கியநூல். அதைச் சொல்கிறேன்.”
அரசன் படைக்கலத்தால் சூழப்பட்டிருக்கவேண்டும். தண்டிப்பவனாக இருக்கவேண்டும். அவனை எவரும் நெருங்கலாகாது, அவனே பிறரை நெருங்கவேண்டும். அரசனின் பிழைகள் பிறர் அறியக்கூடாது, அவை விவாதிக்கப்படக்கூடாது. அரசன் உளவாளிகளை நேரில் சந்திக்கவேண்டும். உளவாளிகளை உளவறியவேண்டும். பொய்சொன்ன உளவாளியை பிற உளவாளிகள் அறிய கொன்றுவிடுதல்வேண்டும். அரசனுக்கு நெருக்கமானவர்களாக வலிமை வாய்ந்தவர்கள் இருக்கலாகாது. எளிய சேவகர்களுக்கே அந்த இடம் அளிக்கப்படவேண்டும். அரசனுக்கு நெருக்கமானவர் என்று எவரும் நெடுங்காலம் நீடிக்கக் கூடாது.
அரசன் தனிமையில் எவரையும் சந்திக்கக் கூடாது. ஆனால் அரசனின் சொற்களுக்குச் சான்றுகள் இருக்கக் கூடாது. அரசனின் அனைத்துச் சொற்களும் வாளால் எழுதப்பட்டவையே. அரசன் சொற்கள் அரசனாலேயே மாற்றப்படவேண்டும். அரசாணைகளில் காலம் கடந்து நிற்கப்படவேண்டியவை மட்டுமே எழுத்தில் அளிக்கப்படவேண்டும். பிற வாய்மொழியாகவே அளிக்கப்படவேண்டும். அவை பிழையாகப்போகுமென்றால் அவற்றின் பொறுப்பு அரசனுக்கு வந்துவிடலாகாது. அரசனின் சொற்களுக்கு விளக்கமளிக்க எவருக்கும் உரிமையளிக்கப்படலாகாது. ஓலைகளில் முதன்மைச்செய்திகளை அனுப்பலாகாது. அவை முகமறிந்து விளக்கக் கூடிய அறிஞரிடமே சொல்லி அனுப்பப்படவேண்டும். ஆனால் எச்செய்தியும் ஒருவரிடம் முழுமையாக சொல்லி அனுப்பப்படலாகாது.
அரசனின் எண்ணம் என்ன என்பது முதலிலேயே வெளிப்பட்டுவிடக்கூடாது. அரசன் விவாதங்களில் எப்போதும் கேட்பவனாக மட்டுமே இருக்கவேண்டும். அரசனின் கருத்தை இன்னொருவரே அவையில் சொல்லவேண்டும். அவற்றை எதிர்ப்பவர்களை அரசன் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். அரச மன்றில் எல்லா தரப்பும் சொல்லப்படவேண்டும். ஒருதரப்புக்காக நெடுந்தூரம் வாதிடுபவனை குறித்துக்கொள்ளவேண்டும். அரச மன்றில் குழுசேர்பவர்கள் களைகள். அரசன் மன்றில் தன் இறுதி முடிவை அறிவிக்கலாகாது. அரசன் ஒருபோதும் தன் முடிவுக்கு காரணங்கள் சொல்லலாகாது. அரசன் வாதிடலாகாது.
அரசன் தன்னிடம் முகமன் சொல்பவர்களை ஊக்குவிக்கவேண்டும். முகமன் அரசனின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும். முகமன் சொல்பவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது. அரசன் தன்னைக் கண்டிப்பவர்களை அவையில் பேச ஒப்பக்கூடாது. அரசனுக்கு அவனுக்குக் கீழானவர்கள் அவையில் அறிவுரை சொல்லக்கூடாது. அவ்வாறு சொன்ன உறவினரோ நிகர்மன்னரோ அந்த அவையிலேயே சிறிய அளவில் அவமதிக்கவும் பட்டாகவேண்டும். தன் நெறிமீது நம்பிக்கை உள்ளவன் ஆணவம் கொண்டிருப்பான். அந்த ஆணவத்தை பாராட்டி அரசன் பயன்படுத்திக்கொள்ளமுடியும். நெறிமீது ஊன்றியவனை அவமதித்து எதிரியாக்கக் கூடாது.
அரசன் எதிரிகள் உருவாவதற்கான வாய்ப்புகளைக் கண்டடைந்து அவற்றையே அழித்துக் கொண்டிருக்கவேண்டும். நண்பர்களையும் சீண்டிக்கொண்டே இருக்கவேண்டும், நட்பே பகையாகக்கூடியது. அவர்கள் எதிரிகளாகத் தொடங்கியதுமே அழித்துவிடல் வேண்டும். நீறுபூத்த நெருப்பை விசிறிக் கண்டுபிடிப்பதுதான் அது. எதிரிகளின் சிறிய எச்சத்தைக்கூட விட்டுவைக்கக்கூடாது. ஐயம்கொண்டு பின் குற்றமற்றவன் என்று ஒருவனை விட்டோமென்றால் அவன் குற்றம் செய்பவனாகவே மாறுவான் என்பது உறுதி. அவனை அழித்துவிடுவதே சிறந்தது. எதிரியிடம் எக்காரணத்தாலும் கருணை காட்டக்கூடாது. கருணைகாட்டப்பட்ட எதிரி அவமதிக்கப்பட்டவன். தோற்கடிக்கப்பட்டவன் ஒருபோதும் நண்பனல்ல. சரண் அடைந்தவன் வன்மம் கொண்டவன். அவனை மறைமுகமாகக் கொல்லவேண்டும்.
காத்திருப்பவனே சிறந்த சூழ்ச்சியாளன். குருடனாக நடிப்பவனைப்போல கூரிய பார்வையன் வேறொருவனில்லை. செவிதிருப்பிக்கொண்டவன் அனைத்தையும் கேட்கிறான். அணுக்கமாக இருப்பவர்களில் ஒருவனேனும் கசப்புகொண்டவனே. அவன் காட்டிக்கொடுப்பவனாக மாறத்தக்கவன். எதிரிகளை நமக்குக் காட்டிக்கொடுக்கும் அவர்களின் மனிதர்களை வென்றபின் அழித்துவிடவேண்டும். எதிரிகளை எப்போதும் அச்சத்தில் வைத்திருக்கவேண்டும். எதிரியிடம் எப்போதும் பேசிக்கொண்டும் இருக்கவேண்டும். எதிரிக்கும் நமக்கும் இடையே நம்பிக்கையான நடுநிலையாளர்கள் எப்போதும் தேவை.
எதிரியின் ஆற்றலின் ஊற்றுக்கண்ணை அறியாமல் தாக்கலாகாது. ஊற்றை அடைத்தபின்னரே பெருக்கை நிறுத்த முடியும். உடனடியாக அழிக்கமுடியாத எதிரியை நண்பனாக்கி தோளிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். எதிரிக்கு எதிரியை நண்பனாகக் கருதவேண்டும். முதல் எதிரியை அழித்ததும் இரண்டாம் எதிரி அழிக்கப்பட்டாகவேண்டும். எதிரியிடம் மண உறவு கொள்வது சிறந்த தாற்காலிக அமைதியை உருவாக்கும். எதிரியின் மகள் அரசனின் முழுமையான அரசியாக ஒருபோதும் ஆவதில்லை.
அரசனின் கீழ் ஒவ்வொருவரின் அதிகாரமும் இன்னொருவரின் அதிகாரத்தால் சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும். அதிகாரம் மேலும் அதிகாரத்தை நோக்கி மனிதர்களைத் தள்ளக்கூடியது. ஒவ்வொரு முதியவரின் கீழேயும் நாளை அவரை இடநீக்கம் செய்யக்கூடிய இளையோன் ஒருவனை வளர்த்துவரவேண்டும். அதிகாரத்தில் இருந்த மூத்தவர்கள் போலிப்பதவிகளில் அமர்த்தப்படவேண்டும். அவர்கள் எதிரிகளிடம் சிக்கிவிடக்கூடாது. முதன்மைப்பதவி வகித்தவர்களின் மைந்தர்கள் பதவிக்குச் சிறந்தவர்கள். அரசனால் மட்டுமே தாங்கள் வாழமுடியுமென நினைப்பவர்கள் அரசனைச்சூழ்ந்திருக்கவேண்டும்.
ஐயத்திற்கிடமின்றி தன் வழித்தோன்றலை அரசன் அறிவிக்கவேண்டும். அந்த வழித்தோன்றலை தன் வாழ்நாள் வரை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் தன்னிடம் வைத்திருக்கவேண்டும். அரசு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டிருக்கவேண்டும். விழாக்களை நடத்தவேண்டும். மக்களின் தெய்வங்களை அரசன் வணங்கவேண்டும். குலக்குழுத்தலைவர்களாக வல்லமையற்றவர்களை அமைக்கவேண்டும். அவர்களை அரசன் வணங்கவும் வேண்டும். மக்களின் இக்கட்டுகளை மறக்கச்செய்பவை சிறிய போர் வெற்றிகள். அவற்றைத் தொடர்ந்து அடைந்துகொண்டிருக்கவேண்டும். உள்நாட்டுச்சிக்கல்களுக்கு எல்லைகளில் போரைத் தொடங்குவது சிறந்த தீர்வாகும்.
அரசனுக்கு வெற்றி ஒன்றே பொருட்படுத்தத் தக்கது. தோல்வி எத்தனை மகத்தானது எனினும் வெறுக்கத்தக்கதே. அரசன் ஆளும்போது மட்டுமே அரசன். நாடிழந்தவன் குடிமக்களைவிடக் கீழானவன். நாடுள்ளவனே அறம் செய்யமுடியும். எனவே நாட்டின் பொருட்டு அறம் மீறுதல் அரசனுக்கு உகந்ததே. அரசனின் புகழ் என்பது அரசனால் உருவாக்கப்படுவதேயாகும்.
திருதராஷ்டிரர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். கணிகர் “அரசே, அரசனின் பிழைகள் என்று நூறுபிழைகளை சாங்கிய அரசநீதி சொல்கிறது. அவற்றில் தலையாயது முழுமையான நம்பிக்கையை எவர் மீதேனும் வைப்பதுதான். அவ்வாறு நம்பிக்கை வைக்கும் அரசன் கருவுற்ற கோவேறு கழுதை போல தன் இறப்பை தன்னுள் சுமந்து வளர்க்கிறான் என்கிறது” என்றபின் தலைவணங்கினார்.
சகுனியின் கண்கள் திரும்பி கனகனை நோக்கின. கனகன் தலைவணங்க சகுனி “பாண்டவர்கள் வந்துவிட்டனரா? உள்ளே வரச்சொல்…” என்றார். அவர் தன் முகக்குறியை உணர்ந்தபின்னரே அவ்வாறு சொல்கிறார் என்று அறிந்த கனகன் அந்த நேரடித்தன்மையால் நிலைகுலைந்து “இன்னும் வரவில்லை… அங்கே அந்தப்புரத்தில்…” என்றான். அச்சொல்லாட்சி பிழையாகிவிட்டது என்று உணர்ந்து அவன் மேலே பேசுவதற்கு முன்னர் “ஆம், சௌவீர மணிமுடியை யாதவ அரசி சூடினார் என்று அறிந்தோம். மணிமுடிசூடினால் அதற்குரிய கொடைகளையும் அளித்தாகவேண்டும் அல்லவா?” என்றார் சகுனி. கனகன் பெருமூச்சுடன் அமைதியானான்.
“அரசே, பிரஹஸ்பதியின் நீதிசூக்தம் ஒரு கதையைச் சொல்கிறது. அதை இங்கே சொல்ல எனக்கு ஒப்பளிக்கவேண்டும்” என்ற பின் கணிகர் சொல்லலானார். முன்னர் காட்டில் அறநூல்களை கற்றறிந்ததும் அமைதியானது என்று பெயர்பெற்றதும் வேட்டையாடி தன் உணவை ஈட்டும் திறனற்ற கோழையுமாகிய ஒரு நரி வாழ்ந்துவந்தது. அது தன்னுடன் ஒரு விழியிழந்த புலியையும் காலிழந்த செந்நாயையும் கீரிப்பிள்ளையையும் எலியையும் சேர்த்துக்கொண்டது. அவை வேட்டையாடி உண்ணமுடியாதவையாக துயருற்றிருந்தன. நரி ஒரு சூழ்ச்சியைச் செய்தது. அங்குள்ள மான்கூட்டங்களில் கொழுத்து திரண்ட மான் ஒன்று தூங்கிக்கொண்டிருக்கையில் எலியை அனுப்பி அதன் காலை கடித்து புண்ணாக்கும்படி சொன்னது.
கால்புண்ணான மான் விரைந்தோட முடியாமல் நொண்டியபோது செந்நாய் அதை மறித்துத் துரத்தியது. கீரி அதை வழிமறித்து கண்ணற்ற புலியின் அருகே கொண்டுசென்றது. புலி அதை அடித்துக்கொன்றது. ‘அனைவரும் நீராடி வாருங்கள். அதன்பின் உணவுண்போம். அதுவரை நான் இதற்குக் காவலிருக்கிறேன். எலி நீராடும் வழக்கமில்லாதது அது எனக்குத் துணையிருக்கட்டும்’ என்றது நரி. புலி முதலில் நீராடி வந்து நரியிடம் ‘நீ சென்று நீராடி வா, நாம் உண்போம்’ என்றது. நரி பெருமூச்சுவிட்டு ‘நீங்களில்லாதபோது ஒரு சிறிய விவாதம் எழுந்தது என்றது. இந்த மானைக் கொன்ற முதல்வேட்டையாளன் நானே, எனவே இதன் ஈரல் எனக்குரியது என்று எலி சொல்கிறது. நான் அதை ஏற்கவில்லை. இந்த மானைக்கொன்ற அரசர் நீங்களே என்றேன். எலி அதை ஏற்கமறுக்கிறது’ என்றது.
சினம்கொண்ட புலி உறுமியபடி ஒரே அடியில் எலியைக் கொன்று தின்றுவிட்டது. பின்னர் ‘ஆம், எலி சொல்வதே சரி. ஒரு சிற்றெலியைத் துணைகொண்டு நான் உணவுண்டால் என் குலத்திற்கு இழுக்கு. என்னால் முடிந்தவேட்டையை ஆடுகிறேன். இல்லையேல் பட்டினி கிடந்து இறக்கிறேன்’ என்று சொல்லி அகன்றுசென்றது. அதன்பின் செந்நாய் அங்கே வந்தது. நரி அதனிடம் ‘புலி தன் மனைவியை அழைத்துவருவதற்காகச் சென்றிருக்கிறது. இருவருக்கும் இந்த உணவு போதாது. எனவே செந்நாயையும் உண்ணலாம் என்று அது சொன்னதை நான் கேட்டேன்’ என்றது. செந்நாய் அஞ்சி அக்கணமே ஓடி மறைந்தது.
இறுதியாக கீரி குளித்துவிட்டு வந்தது. கீரியிடம் நரி ‘இப்போது இவ்வுணவுக்கு நாமிருவர் மட்டுமே போட்டியிடுகிறோம். கானக முறைமைப்படி நாம் ஒருவருக்கொருவர் போரிடுவோம். எவர் வெல்கிறார்களோ அவருக்குரியது இவ்வுணவு’ என்றது. கீரி திகைத்தபின் ‘நரியுடன் கீரி போரிடமுடியுமா என்ன? என் உயிரை காத்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி விரைந்தோடி மறைந்தது. நரி அந்த மானை பலநாட்கள் வைத்திருந்து உண்டது.” கணிகர் மெல்லிய குரலில் சொல்லி நிறுத்திவிட்டு “கதைகள் நினைக்கும்தோறும் வளர்பவை அரசே” என்றார்.
திருதராஷ்டிரர் திரும்பி கனகனிடம் “விதுரன் எங்குள்ளான்?” என்றார். “அவர் தன் சுவடியறையில்…” என்றான் கனகன். “நான் ஆணையிட்டேன் என்று அவனிடம் சொல். அவனும் பாண்டவர்களும் இப்போது இங்கே வந்தாகவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர். “ஆணை” என்று தலைவணங்கிவிட்டு கனகன் வெளியே ஓடினான். இடைநாழியைக் கடந்து விதுரரின் அறையை அடைந்தான். விதுரர் ஏட்டில் மூழ்கி இருப்பதைக் கண்டான். அவர் முகம் மலர்ந்திருந்தது. சுவடியின் சொற்களுக்கேற்ப அவரது உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. காலடியோசை கேட்டு விழிதூக்கி “சொல்” என்றார். “அரசரின் ஆணை. பாண்டவர்களும் தாங்களும் உடனடியாக அவை அணையவேண்டும்” என்றான் கனகன்.
“இப்போது நான் மட்டுமே செல்லமுடியும்” என்றார் விதுரர் மேலாடையை எடுத்தபடி. “ஆனால்…” என்று கனகன் சொல்லத்தொடங்க “என்னசெய்வது? அவர்கள் இப்போது இங்கில்லை. நான் அனைத்தையும் ஊழின் ஆடலுக்கு விட்டுவிட்டேன்” என்றார். அவர் இடைநாழியில் நடக்க பின்னால் கனகன் சென்றான். “கணிகர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒரு புலிக்குகைபோல உறுமுவதைக் கேட்டேன்” என்றான் கனகன். “ஆம், குறைவாகச் சொல்லி கேட்பவரை மேலே சிந்தனைசெய்யவைப்பவன் அவன். அவ்வெண்ணங்கள் கணிகர் உருவாக்குபவை என்றறியாமல் அவர்கள் தங்கள் எண்ணங்கள் அவை என எண்ணிக்கொள்வார்கள். தாங்கள் அடைந்ததனாலேயே அவை சரியான எண்ணங்கள் என்று நம்புவார்கள்” என்றார் விதுரர்.
இடைநாழியில் அவர்கள் செல்லும்போது கனகன் “என்னசெய்வது அமைச்சரே?” என்றான். “முதல் விரிசல் நிகழ்வது எப்போதும் ஊழ்விளையாட்டு. சகுனி காத்திருந்தது அதற்காகவே. அங்கே அவர்கள் வேரோடிவிட்டனர். கரும்பாறையை பிளப்பதற்குள் நாம் நச்சுமரத்தை அழிக்கவேண்டும்… ஆனால் இப்போது விரைவுகொண்டு பயனில்லை. அவன் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டான். அந்த உளக்கொதிப்பில் அரசர் இருக்கையில் சென்று சந்திப்பதுகூட பிழையாகலாம். அவர் சென்று ஓய்வெடுக்கட்டும். சற்று இசைகேட்டால் யானை தன் கட்டுக்குள் மீண்டுவிடும். அதன் மத்தகம் குளிர்ந்துவிடும். அதன்பின் நாம் அதை அணுகுவது நலம் என்று எண்ணுகிறேன்.”
“அரசரின் பெருந்தன்மையும் கருணையும்…” என்று கனகன் பேசத்தொடங்க “ஆம், அதுவே இன்று நமக்கு பெரும் எதிரி. பால் எளிதில் திரிந்து விஷமாகும் என்பது இயற்கையின் நெறி” என்றார் விதுரர். பெருமூச்சுடன் “நீ சென்று பாண்டவர்களிடம் சொல், நல்லநேரம் கடந்துவிட்டது என்று. அவர்கள் தங்கள் அரண்மனைகளுக்குச் சென்று நீராடி ஓய்வெடுக்கட்டும். அரசர் மாலையில் இசைக்கூடத்தில் இருக்கையில் முறைப்படி ஆடையணிந்து அவர்கள் அரசரைக் காணவரட்டும். அப்போது நானும் அங்கிருப்பேன்” என்றார். “இப்போது அவர்கள் வரவேண்டியதில்லையா?” என்றான் கனகன். “வரலாகாது” என்றார் விதுரர்.