வெண்முரசு- வாசகர்களின் விடை

அன்புள்ள ஜெ,

வெண்முரசு தொடர்பான அற்ப விவாதங்களை அங்கிங்காக வாசித்தேன். ஒன்று தெரிந்தது, எழுதுபவர்களும் சரி ஆர்வமாக வந்து பின்னூட்டம் இடுபவர்களும் சரி வெண்முரசை வாசிக்கவில்லை. அவர்களின் எழுத்தின் தொனியை வைத்துப்பார்த்தால் அவர்களால் வெண்முரசை அல்ல இந்தத் தரத்தில் உள்ள எந்த ஒரு பெரிய நூலையும் வாசிக்க முடியாது. அதற்கான அறிவுத்தளமோ நுண்ணுணர்வோ இல்லை பொறுமையோ அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பலவகை. காலை எழுந்ததும் இணையத்தில் அன்றைய வம்பு என்ன என்று தேடி அலைபவர்கள் பெரும்பாலானவர்கள். இந்த அலையில் எங்காவது தன் பெயரையும் சேர்த்துவிட்டுவிடமாட்டோமா என்று ஏங்கும் எளிமையான எழுத்தாளர்கள் இன்னொரு வகை. அற்ப எழுத்துக்கள் என்று வகைப்படுத்தவேண்டிய சிலவற்றை எழுதிவிட்டு அதெல்லாம் இந்த பிரம்மாண்டமான எழுத்தின்முன் சில்லறைகளாக மாறிவிடும் என்று நினைத்து பீதி அடைபவர்கள் சிலர். பொறாமை மட்டுமே கொண்டவர்கள் சிலர்.

என்ன வேடிக்கை என்றால் பொறாமைகொள்வதற்கே ஒரு யோக்கியதை வேண்டும். ஏதேனும் கொஞ்சம் எழுதிச் சாதித்திருக்கவேண்டும். உருப்படியாக நாலுவரி எழுதாதவர்கள்கூட பொறாமைகொள்ளும்போது நீங்கள் முன்னாடி சொன்னதைப்போல ‘டேய் நீங்கள்லாம் யாரு? உங்களப்பத்தி என்னடா நெனைச்சிட்டிருக்கீங்க?’ என்றுதான் வடிவேலு மாதிரி கத்தத் தோன்றுகிறது. என்ன செய்ய? வேடிக்கையாக சிரிப்பதா நொந்துகொள்வதா என்றே தெரியவில்லை.

இதிலே ஒரு மாபெரும் வேடிக்கை என்னவென்றால் இந்தக்கூட்டம் தொடர்ந்து வெண்முரசின் வாசகர்களை மட்டம்தட்டி இழிவாகப் பேசிக்கொண்டே இருக்கிறது. சுரணை உள்ள ஒரு எழுத்தாளன் வாசகர்களை, அதுவும் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களை மட்டம்தட்டி எழுதமாட்டான். பொறாமையாலோ மூடத்தனத்தாலோ அத்தனை சுரணைகளையும் இழந்துவிட்டு சட்டையைக்கிழித்துக்கொண்டு லபோதிபோ என்று முச்சந்தியில் நின்று கத்துபவர்களால்தான் அதற்கு முடியும்

இத்தனை செறிவான, நுட்பமான ஒரு படைப்பை இத்தனை பக்கங்களை தொடர்ந்துவாசிப்பவர்கள் சாதாரண வாசகர்கள் இல்லை. இதற்கு வரும் வாசகர்களின் கடிதங்களைப் பார்க்கிறென். இந்த இணைய உலகில் எந்த எழுத்துக்கும் இத்தனை தரமான இத்தனை பலதரப்பட்ட நுட்பமான வாசகர்கடிதங்களைக் காணமுடியாது. எங்கு வேண்டுமென்றாலும் போய் பின்னூட்டங்களைப் பாருங்கள். இந்தக்கடிதங்கள் என்னென்ன தளங்களையெல்லாம் தொட்டுத்தொட்டுச் செல்கின்றன. ஒரு நுட்பம்கூட எஞ்சாதோ என்றெல்லாம் என்னைப்போன்றவர்கள் நினைப்பதுண்டு. இத்தனை அற்புதமான வாசிப்பு ஒரு நாவலுக்கு உடனுடன் நிகழ்வது தமிழில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறதா என்றே நம்பமுடியாது

என் அலுவலகத்தில் பன்னிரண்டுபேர் வெண்முரசை வாசிக்க ஆரம்பித்தோம். பன்னிரண்டுபேரும் இன்றும் வாசிக்கிறோம். நாங்கள் பன்னிரண்டுபேரும் ’சாதாரண’ வாசகர்கள் இல்லை. கணக்கியல் துறையில் உயர்படிப்பு படித்தவர்கள். தமிழிலே நிறையப் படித்ததில்லை என்றாலும் ஆங்கிலத்திலே தொடர்ந்து இன்றுவரை வாசிப்பவர்கள். இரண்டுபேர் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை கரைத்துக்குடித்தவர்கள். ஏன் தமிழிலே அதிகம் வாசிக்கவில்லை என்றால் பல அடுக்குகள் உள்ள எழுத்துக்களே இங்கே இல்லை என்பதனால்தான். கண்டதையும் கேட்டதையும் அப்படியே எழுதிவைக்கும் எழுத்துக்கள். அப்புறம் சாதாரண யதார்த்த எழுத்துக்கள். அதையெல்லாம் ஏன் வாசித்து நேரவிரயம் செய்யவேண்டும் என்ற என்ணம்தான்.

வரிக்குவரி வாசிக்கவேண்டிய நூல் என்றால் அது வெண்முரசு. தொடந்து கண்டுபிடித்துக்கொண்டே இருக்கவேண்டும். மூளைக்கும் கற்பனைக்கும் மிகப்பெரிய சவால் அது. இன்னும் ஒருசில தலைமுறைக்காலம் யாரும் அதைக் கடந்துபோய்விடவே முடியாது அத்தகைய படைப்பைத்தான் வாசிக்கமுடியும். பேசிக்கொள்ள முடியும். அதுதான் வெண்முரசின் வெற்றி. எங்களுக்கே ஆச்சரியம் அளிக்கும் வாசிப்புகளை வெண்முரசு கடிதங்கள் தளத்திலே பார்த்தோம். துரியோதனனை உளவியல் சார்ந்து ஆரய்ந்து ஒருவர் எழுதிய கடிதம் எங்களை பிரமிக்கவைத்தது

இத்தகைய வாசகர்களுக்கு அறிவில்லை, இவர்களெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று இந்த அற்ப எழுத்தாளர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சரி இவர்கள் என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் சரியான அசட்டு அரசியல் விமர்சனங்கள். சில்லறைத்தனமான வம்புகள். சிலர் எழுதி வைத்திருக்கும் கதைகளை பார்த்தோம். அய்யய்யோ. அசட்டுத்தனத்தின் உச்சம். அதையெல்லாம் வாசிப்பவர்கள் மேதைகளாம். அவர்களைப்போல வெண்முரசு வாசகர்கள் இருக்கவேண்டுமாம். தலைதலையாக அடித்துக்கொண்டு சிரித்தோம். என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்? மூடத்தனம் இருக்கலாம். அதற்கு ஒரு எல்லை வேண்டாமா? முட்டாள்தனத்தில் அப்படியே நீந்தி விளையாடுகிறார்கள்.

தமிழகத்தின் பிரச்சினையே இதுதான். ஒரு சின்ன வட்டத்துக்குத்தான் இலக்கியம் புரிகிறது. மற்றவர்களுக்கு இந்த வட்டத்தையே புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒன்றுமே தெரியாமலிருக்கும்போது வரும் தன்னம்பிக்கை இருக்கிறதே அதை ஒன்றுமே செய்யமுடியாது.

இந்த கடிதத்தை எழுதுவதற்கான காரணம் ஒன்றுதான். தயவுசெய்து இனிமேல் இந்த அசடுகளுக்கு விளக்கம் அளிக்காதீர்கள். அவர்களையெல்லாம் ஆளாக நினைத்து நீங்கள் அளிக்கும் விளக்கம்கூட எங்களைப்போன்று வாசிப்பவர்களை அவமதிப்பதுபோல இருக்கிறது

ஜெயராமன்

பிகு: மகாபாரத காலகட்டத்தின் விரிவான அரசியல் உள்மோதல்களை வெண்முரசில் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார். இன்றைக்கும் கூட அந்த அரசியலே வட இந்தியாவில் நீடிக்கிறது என்று. அந்த அரசியல் சித்திரம் வியாசரால் எழுதப்பட்டிருக்கிறதா என்று வாசித்தொம். வியாசரிடம் அந்த அரசியல் இருந்தது என்று ஊகிப்பதற்கான சில ஒற்றைவரிக்குறிப்புகள்தான் உள்ளன. அவற்றை நீங்கள் இன்றைய சூழலை வைத்து ஊகித்து விரிவாக்கியிருக்கிறீர்கள் என்று தோன்றியது. சரியா? நீங்கள் கொடுக்கும் சித்திரம் பெரும்பாலும் ஆர்..எஸ்.சர்மா, ரொமீலா தாப்பர் போன்றவர்களின் மார்க்ஸிய ஆய்வுகளுக்கு நெருக்கமாக உள்ளது இல்லையா?

அன்புள்ள ஜெயராமன்

வியாசர் அன்றைய ஒட்டுமொத்த அரசியலின் சித்திரத்தை மிகச்சுருக்கமாகவே அளிக்கிறார். அவரது பார்வை அரசர்களைச் சார்ந்தது.ஆனால் இன்றைய நோக்கில் அரசியல்- பொருளியல் பிரச்சினைகளாக அதை விரித்துக்காட்ட நிறைய வாய்ப்புகள் மகாபார்தத்தில் உள்ளன. இந்தியாவைப் புரிந்துகொள்ள இத்தனை பிரம்மாண்டமான வரலாற்றுப்புலம் மிக அவசியம். வெண்முரசு முதற்கனல் முதலே மெல்லமெல்ல அரசியல் அதிகாரத்தின் வலையை உருவாக்கிக் காட்டுகிறது

இந்தச் சித்திரம் எம்.என்ராய், அம்பேத்கர் முதல் டி.டி.கோசாம்பி,தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய வரையிலான பலநூறு ஆய்வாளர்களால் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பெருஞ்சித்திரத்தை மகாபாரதத்தில் போட்டுப்பார்ப்பதன் விளைவு. இதை மேலும் விவாதிக்க இன்றைய வரலாற்றாசிரியர்கள்- அரசியல் ஆய்வாளர்களையே மேற்கொண்டு நீங்கள் அணுகவேண்டும்.

அதிகார அரசியலை பொருளியல் உள்ளடக்கத்துடன் இணைத்து நோக்கும் பார்வையை இவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டேன் என்று சொல்லமுடியும். மகாபாரதக் காலகட்டத்தின் பொருளியல்-அரசியலை விரிவாக நோக்காமல் அந்தப்போரின் பின்புலத்தை புரிந்துகொள்ளமுடியாது.

நீங்கள் சொன்னது சரி. இவர்களை மேற்கொண்டு பொருட்படுத்தவேண்டாமென்றிருக்கிறேன்

ஜெ

*

அன்புள்ள ஜெ

வெண்முரசுக்கு வந்த எதிர்வினைகளை வாசித்தேன்

உங்கள் பல தீவிர வாசகர்களைப்போல எனக்கும் ஒரு ரகசிய வழக்கம் உண்டு. நான் உங்களுக்கு எதிராக என்னென்ன எழுதப்பட்டிருக்கிறதோ எல்லாவற்றையும் போய் வாசிப்பேன். உங்கள் பலமே உங்களுக்கு எதிராக வரும் எதிர்வினைகள் மிகுந்த அளவுக்கு ஆழமற்ற மேலோட்டமான எதிர்வினைகள் என்பதுதான்.

இளம்எழுத்தாளர்கள் மூத்தஎழுத்தாளர்கள் அரசியல் எழுத்தாளர்கள் எல்லாரும் எழுதுகிறார்கள். எவருக்கும் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் திறனோ பொறுமையோ இல்லை. ஆகவே கைக்குக் கிடைத்த எதையாவது எடுத்து வீசுகிறார்கள். அதெல்லாம் பெரும்பாலும் எளிமையான பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் சார்ந்த மறுப்புகள்தான். உங்கள் எழுத்துக்களை அப்படி இப்படி வியாக்கியானம் செய்து அவை பாப்புலர் பொலிடிக்கல் கரெக்ட்னெஸுடன் இல்லை என்று சொல்லி ஒரு கட்டுரையை எழுதிவிடுகிறார்கள். இலக்கியத்தின்மேல் இந்த விமர்சனம் ஒரு கீறலைக்கூட விழச்செய்யாது என்று தெரியாத அப்பாவிகள்.

அத்தனை விமர்சனமும் இந்த ஒரே ஃபார்முலாவுக்குள்தான். உங்கள் அழகியலை, கருத்தியலை இவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆகவே அதைப்பற்றி ஒரு சின்ன விமர்சனத்தைக்கூட உருவாக்கமுடியவில்லை. அகவே கிட்டத்தட்ட விமர்சிக்கப்படாதவராகவே இருந்துகொண்டிருக்கிறீர்கள். இது பலம் மட்டும் கிடையாது. பலவீனமும் கூட

ஒரு எழுத்தாளரை கொஞ்சமேனும் கடந்துசென்றவரால்தான் நல்ல விமர்சனத்தை உருவாக்கமுடியும். உங்களை விமர்சிப்பவர்களெல்லாம் உங்களுக்கு ரொம்பப்பின்னால் எங்கோ சர்வசாதாரணமான அன்றாட அரசியலையும் வம்பையும் பேசிக்கொண்டு இருப்பவர்கள். எதையாவது வாசித்து அதேமாதிரி திரும்ப எழுதமுயலும் சின்ன எழுத்தாளர்கள். உங்கள் வாசகர்கள் பொருட்படுத்தும் ஒரு நல்ல விமர்சனத்தை உருவாக்க அவர்களால் முடியாது. அதர்கு இன்னும் கூர்ந்த வாசிப்பும் அறிவும் தேவை.

இந்த எதிர்வினைகளைப் பாருங்கள். எதிர்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் எவ்வளவு அபத்தமாக சின்னப்பிள்ளைத்தனமாக எழுதுகிறார்கள். அரசியல்கூட எவ்வளவு சின்னத்தனமாக இருக்கிறது. பாவம் என்றுதான் தோன்றுகிறது

சொல்லப்போனால் நானே உக்கார்ந்து உங்களுக்கு ஒரு நல்ல எதிர்விமர்சனத்தை எழுதிவிடுவேன் என்று நினைக்கிறேன். ஜாக்ரதை

சிவம்

 

[மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Nov 18, 2014 ]

வெண்முரசு பற்றிய அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3
அடுத்த கட்டுரைநூறுகதைகள் பற்றி