ராஜகோபாலன் – விழா அமைப்புரை

நண்பர்களே ! அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். தமிழ் இலக்கியத்தின் ஆகப் பெரிய சாதனைகளில் ஒன்றான வெண்முரசு நாவல் வரிசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது .

உலகில் 7 சிரஞ்சீவிகள் உண்டு என்கிறது இந்திய புராணங்கள். அதில் 6 பேர் தத்தம் குண இயல்புகளால் அழிவற்ற நிலை எய்தியவர்கள். அந்த குண இயல்புகள் இருக்கும் வரை அவர்களும் இப்புவியில் இருப்பார்கள். இந்த குண இயல்புகளையும், அதைத் தாண்டி மானுட மனதின் ஆழ, உயரங்களையும் , மானுட குலத்தை ஆட்டுவிக்கும் பெருவிதியின் லீலையையும் ஜெய எனும் மகாபாரதக் காவியமாக எழுதியதன் மூலம் சிரஞ்சீவியாக இருக்கிறான் வியாசன் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயணன்.

இன்றுவரை மகாபாரதம் எங்காவது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. மண்ணில் கடைசி மனிதன் இருக்கும்வரை வியாசனும் இருப்பான். பூமியில் இன்றுவரை எழுதப்பட்ட பெரும்படைப்புகள் வியாசனின் காவியத்தை ஏதாவது ஒரு விதத்தில் ஒட்டியும், தழுவியும் இருப்பதை காண முடிகிறது. இந்தியாவின் மகத்தான படைப்பாளிகள் வியாசனின் பாரதத்தில் தங்களது பக்கக்குறிப்பை பதிக்காமல் விட்டதில்லை. அந்த விதத்தில் ஒவ்வொரு எழுத்தாளனின் பேனா முனையும் , வியாசனால் உடைக்கப் பெற்ற யானைக் கொம்பின் நுனிதான். ஒவ்வொரு மகத்தான எழுத்தாளனும் தாண்ட முயன்று , தவித்து வேதனை கலந்த மகிழ்ச்சியுடன் அயர்ந்து நிற்பது வியாசன் என்ற கிருஷ்ண த்வைபாயணன் முன்புதான். அவ்வகையில் அவனே ஆதி கதை சொல்லி மட்டுமல்லாமல் மகத்தான கதைசொல்லியும் கூட.

உலகின் மொத்தப் பொதுமைக்கும் மகத்தான் கதைசொல்லியாக விளங்கும் வியாசன் எனும் கிருஷ்ண த்வைபாயணனை பணிவுடன் வணங்கி வி.இ.வட்டம். இந்த வெண்முரசு நாவல் வரிசை வெளியீட்டு விழாவினை இனிதே துவக்குகிறோம்.

விழாவின் முதல் நிகழ்வாக இறை வாழ்த்துப் பாடல். இறை வாழ்த்துப் பாடலை பாட வருமாறு வி.இ.வட்டத்தினை சேர்ந்த செல்வி. வானதி சுரேஷ் அவர்களை மேடைக்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

*

மானுடவியலாளர்கள் மனித குலத்தை 6 அடிப்படைப் பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்கள். அதைப்போலவே தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களை வகைப்படுத்தினால் 4 பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் உடலில் ரத்தத்திற்கு பதிலாக தாமிரபரணி தண்ணீரைக் கொண்டவர்கள், இன்னொரு வகையினர் ரத்தத்திற்கு பதிலாக காவிரி தண்ணீரைக் கொண்டவர்கள். மூன்றாம் பிரிவினருக்கு நாஞ்சில் மண்ணைத் தவிர வேறெங்கு சென்றாலும் சுவாசிப்பதில் சிக்கல் உண்டு. நான்காம் பிரிவினர் நாட்டின் தலைநகரமான டில்லியில் இருந்தபடியே இலக்கியக் கடமை ஆற்றியவர்கள். அந்த தலைநகரத் தமிழிலக்கிய கர்த்தாக்கள் எனும் மரபின் தொடர்ச்சியாக நம்முன் இருப்பவர் இவர். தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் அதே வீச்சுடன் எழுதி வருபவர்.

வடகிழக்கு மாகாணங்கள் குறித்து தமிழில் எழுதப்பட்ட வெகு அரிதான படைப்புகளில் இவரது கலங்கிய நதியும் ஒன்று. தென் தமிழக கிராமத்தின் குடும்பம் ஒன்றின் வழியே ஒரு காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தியது இவரது புலிநகக் கொன்றை படைப்பு. ஒரு நாவல், சிறுகதை எழுத்தாளராக மட்டும் இவரது இடம் முடிந்து விடவில்லை. உரிய தரவுகளோடு, ஆழ்ந்த ஆராய்ச்சி நோக்கில் எழுதப்படும் செறிவான கட்டுரைகளும் இவரது அடையாளம், அதோடு மட்டுமல்ல, இன்று தமிழில் மிக அருகி வரும் கலை ரசனை சார்ந்த நுண்நோக்குப் பார்வையுடன் கூடிய கட்டுரைகள் , இவரது ஆளுமையை நமக்கு சொல்லும். சமீபத்தில் வெளியானஉலக ஓவியங்கள் குறித்த இவரது புத்தகம் தமிழின் கலை ரசனை சார்ந்த படைப்புகளில் மிக முக்கியமான ஒன்று. இன்றைய தமிழ் இலக்கிய உலகை மகாபாரதமாகக் கொண்டால் இவரே விதுரர்.

தலைநகரத் தமிழ் படைப்பாளியான திரு. பி.ஏ .கிருஷ்ணன் அவர்களை சிறப்புரை ஆற்ற அழைப்பதில் வி.இ.வட்டம் பெருமை கொள்கிறது. திரு. பி.ஏ . கிருஷ்ணன் அவர்களை சிறப்புரை ஆற்ற வரவேற்கிறோம்.

*

படைப்புகளிலே இரு வகை உண்டு. உலகம் முழுவதையும் காட்டி படைப்பின் சாரத்தை ஒற்றை குவிமுனையில் கொண்டு வந்து நிறுத்துவது. மற்றொன்று ஒற்றை தளத்தில் நின்று மேலெழுந்து உலகம் முழுமைக்கும் பொதுவான சாரத்தை முன்னிறுத்துவது . இவர் இரண்டாம் வகையில் தமிழின் மிக முக்கிய எழுத்தாளுமை. கம்ப ராமாயணத்தை முறையான விதத்தில் ஆசிரிய பாடமாக முழுதும் கற்ற தேர்ச்சி பெற்றவர். சூடிய பூ சூடற்க எனும் படைப்பிற்காக சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்று நமக்கு பெருமை சேர்த்தவர். நாஞ்சில் மண்ணின் எழுத்தை உலகு முழுவதற்கும் பொதுவாக ஆக்கிய தமிழிலக்கிய கும்ப முனி. நாவல், சிறுகதை, கட்டுரை என பல வடிவங்களிலும் தமிழில் இயங்கி வரும் மூத்த படைப்பாளி. கல்வி நிறுவனங்களில் இவரது படைப்புகள் பாடங்களாக இருப்பது மட்டுமல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் வெளியாகிஉள்ளன . கூர்மையான விமர்சனம், தரமான அங்கதம் என்ற இரு ஆழ, உயரங்களை அனாயசமாக தொட்டெழுதும் திறன் கொண்டவர். இலக்கியத்தில் மட்டுமன்றி நாஞ்சில் நாட்டு உணவு வகைகளை சமைப்பதிலும் பெயர் பெற்றவர்.

தமிழிலக்கியத்தை மகாபாரதமாகக் கொள்வோமானால் படைப்பதில் பீமசேனன் இவரே. 40 ஆண்டுகளாக ஊக்கம் குன்றாமல் தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் மூத்த படைப்பாளி திரு.நாஞ்சில் நாடன் அவர்களை சிறப்புரைக்கு அழைப்பதில் வி.இ.வட்டம் பெருமை கொள்கிறது. திரு. நாஞ்சில் நாடன் அவர்களை சிறப்புரை ஆற்ற வரவேற்கிறோம்.

*

சராசரித் தளத்தில் வாசித்து வரும் ஒரு தமிழ் வாசகர் இவரது படைப்புகளில் எதாவது ஒன்றை வாசித்து விட்டால் அவரால் திரும்பி சராசரிக்கு செல்லவே முடியாது. இலக்கியத்தின் மேம்பட்ட ரசனையை நோக்கி வாசகனை செலுத்திக் கொண்டே இருக்கும் வல்லமை கொண்டவை இவரது எழுத்துகள். பெருமரம் ஒன்று விதைக்குள் பொதிந்து இருப்பது போல ஆழமும், நுட்பமும், விரிவும் கொண்ட விஷயங்களை சிறு வாக்கியங்களில் சொல்லிச் செல்லும் எழுத்து முறை இவரிடமிருந்து தமிழுக்கு கிடைத்த கொடை . இன்று தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் பலரும் விவாதங்கள் வழியே எழுத்துலகுக்கு வந்தவர்கள். அந்த விவாத மரபை நவீன தமிழ் இலக்கிய உலகில் தொடக்கி நடத்திய சாதனையாளர்களில் இவரும் ஒருவர்.

அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது , பாரதிய பாஷா பரிஷத் விருது போன்ற பல விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் தேர்ந்த வாசிப்பை இன்றுவரை கைவிடாமல் , இரண்டிலும் இயங்க முடிந்த திறமை கொண்டவர். எழுத்து ஒன்றை மட்டுமே வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்து ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒப்பீட்டு அளவுகோலாக இருப்பவர். அந்த வகையில் தமிழிலக்கிய மகா பாரதத்தில் இவரே பீஷ்ம பிதாமகர்.

சிறுகதை, கட்டுரை, நாவல், விமர்சனம் என பல தளங்களிலும் 60 ஆண்டுகளாக ஊக்கம் குன்றாது இயங்கி வரும் மூத்த படைப்பாளி திரு. அசோகமித்திரன் அவர்களை சிறப்புரை ஆற்ற அழைப்பதில் வி.இ.வட்டம் பெருமை அடைகிறது. திரு. அசோகமித்திரன் அவர்களை சிறப்புரை ஆற்ற வரவேற்கிறோம்.

*

நவீன தமிழ் எழுத்தாளர்களில் தமிழை பாடமாகப் பயின்று எழுத வந்தவர்கள் வெகு குறைவு என்றே சொல்லலாம். அந்த வகையில் தமிழில் வித்வான் பட்டத்திற்கு படித்து வந்தவர். தமிழின் முற்போக்கு இலக்கியப் பாணியின் தொடக்க நிலை படைப்பாளி. அதே நேரம் தனது கொள்கைகளின் காரணமாக மரபின் வேர்களை அறுத்து விடாமல் பேணி வந்தவர். தனது வாசிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது கொள்கைகள் அமைவதை சமரசமின்றி முன்வைத்தவர். மரபிலக்கியத்தின் பெருமையை பேசிய முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர்.

வரலாற்று வழி புனைவெழுத்தினை நவீன தமிழிலக்கியத்தில் மறு அறிமுகம் செய்தவர். வானம் வசப்படும் என்ற படைப்பிற்காக சாகித்ய அகடமி விருது பெற்றவர். பாரதிய பாஷா பரிஷத், இலக்கிய சிந்தனை முதலான பல விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர். எழுத்தாளர் என்ற அடையாளம் மட்டுமல்லாமல் செயல்பாட்டாளராகவும் அறியப்படுபவர். தமிழ் இலக்கிய மகாபாரதத்தில் அறத்தின் பால் நிற்கும் யுதிஷ்டிரர் இவரே.

40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து குன்றா படைப்பூக்கத்துடன் சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், நாடகம் ஆகிய தளங்களில் தமிழில் இயங்கி வருவதோடு, இளம் எழுத்தாளர்களுக்கு பெரும் ஊக்குவிப்பாளராகவும் இயங்கி வரும் தமிழின் மூத்த படைப்பாளி திரு. பிரபஞ்சன் அவர்களை சிறப்புரை ஆற்ற அழைப்பதில் வி.இ.வட்டம். பெருமை அடைகிறது. திரு. பிரபஞ்சன் அவர்களை சிறப்புரை ஆற்ற வரவேற்கிறோம்.

*

மகா பாரதம் – வியாசனால் ஜெய என்று பெயரிடப்பட்டு ,வடமொழியில் இயற்றப்பட்டு , நம்மால் மகாபாரதம் என்று அழைக்கப்படும். உலகின் மிகப்பெரிய கவிதை நூல். ஒரு ஸ்லோகத்திற்கு இரண்டு அடிகள் என்ற கணக்கில் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் , இரண்டு லக்ஷம் வரிகளையும் உடையது. 18 லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகளைக் கொண்ட இப்படைப்பு 1000 க்கும் மேற்பட்ட கதை மாந்தர்களை உடையது. 19 பர்வங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இப்படைப்பு குறைந்த பட்சம் 2500 வருடப் பழமை உடையது.

தத்துவங்கள், தரிசனங்கள், மானுட உணர்வுகள், அரசியல், சமூகம், பொருளாதாரம், நகரமைப்பு, அரசாளுமை, குல வரலாறுகள், போர் முறைகள், வியூகங்கள் , நதிகள் , நகரங்கள், நிலப் பரப்புகள், வனங்கள், பயண வழிகள் , கால நிலை , பருவ மாற்றங்கள், அக்காலத்தின் சமூக விழுமியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பெரும் படைப்பு அன்றிலிருந்து இன்று வரை அனைத்து கலை வடிவங்களையும் தன்னை நோக்கி ஈர்த்தவாறே இருக்கிறது. மாபெரும் எழுத்தாளர்கள் பலரும் இப்படைப்பின் ஒவ்வொரு பகுதியைத் தொட்டு தங்களது படைப்பை எழுதியிருக்கிறார்களே தவிர இதுவரை எந்த எழுத்தாளரும் இந்த மகா காவியத்தை மீண்டும் ஒரு முறை எழுதத் துணிந்ததில்லை. அத்தகைய முயற்சியை மேற்கொண்ட வகையில் ஜெயமோகன் வியாசனின் முதன்மை சீடனாகும் இடத்தை அடைந்திருக்கிறார்.

வெண்முரசு என்ற பொதுத்தலைப்பில் மொத்த மகாபாரதமும் நாவல் வரிசையாக வெளியிடப்படும். இன்று வரை முதற்கனல் , மழைப்பாடல், வண்ணக்கடல் , நீலம் ஆகிய நான்கு தலைப்பிலான நாவல்கள் நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன. ஐந்தாவது நாவலான பிரயாகை இப்போது ஜெயமோகனது இணையத் தளத்தில் வெளிவந்துகொண்டிருக்கிறது.

மகத்தான இந்த தருணம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பெரும் பாய்ச்சல். வேறெந்த மொழியிலும் மகாபாரதம் மீண்டும் இவ்வகையில் சொல்லப்பட்டதில்லை.அந்த நூல் வரிசைகளை இப்போது இந்த அவையில் வெளியிடுவதில் வி.இ.வட்டம் வரலாற்றுப் பெருமை கொள்கிறது.
*

நண்பர்களே! தங்களது வாழ்நாள் சாதனையாக மகாபாரதத்தை நிகழ்த்து கலையாகவும், பிரசங்கம் மூலமாகவும் செய்து வரும் 5 சாதனையாளர்களை இந்த அரங்கில் கௌரவிப்பதில் வி.இ.வட்டம் பெருமை கொள்கிறது. அந்த சாதனையாளர்களை அவைக்கு அறிமுகம் செய்ய பேராசிரியர் திரு.சீனிவாசன் அவர்களை அழைக்கிறோம்.

அவர் 17 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணி புரிகிறார். பாரதம், நாட்டார் வழக்காற்றியல் , கள ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தமிழ் இலக்கண மரபுகளில் முனைவர் பட்டம் பெற்ற இவர் வடதமிழகத்தில் திரௌபதி வழிபாடு குறித்தும் , தமிழகப் பழங்குடிகள் குறித்தும் கள ஆய்வுகள் செய்துள்ளார்.

தமிழகத்தில் பாரதம், ராமாயணம் போன்ற இதிகாசக் காப்பியங்களை சொற்பொழிவு, மற்றும் நிகழ்த்து கலையாக செய்து வரும் கலைஞர்களைக் கண்டறிந்து பாராட்டு விழா நடத்திய பெருமை இவரைச் சேரும். தமிழுக்கு இவர் செய்த பெரும் சாதனை 13,949 செய்யுள்களைக் கொண்ட நல்லாப்பிள்ளை பாரதத்தை அச்சில் கொண்டு வந்ததே.

கள ஆய்வாளர், பதிப்பாசிரியர், இதழாளர், பாரத ஆய்வறிஞர் என பல தளங்களிலும் ஊக்கத்துடன் இயங்கி வரும் திரு. சீனிவாசன் அவர்களை , மாகாபாரத சொற்பொழிவு மற்றும் நிகழ்த்து கலை ஆகியவற்றில் தொடர்ந்து இயங்கி வரும் 5 அறிஞர்களை அவைக்கு அறிமுகம் செய்ய மேடைக்கு அழைப்பதில் வி.இ.வட்டம் பெரு மகிழ்ச்சி அடைகிறது. திரு. சீனிவாசன் அவர்களை மேடைக்கு அன்புடன் அழைக்கிறோம்.
*

வெண்முரசு நாவல் தொடங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு ஓவியம் என்ற ஆலோசனையை நண்பர் ராமச்சந்திர ஷர்மா முன்வைத்தார். அத்தனை பெரிய பணியை செய்து முடிக்க இடை விடாத ஊக்கமும், செயல் திறனும் தேவை என்ற நிலையில் எங்களுக்குக் கிடைத்த முத்துகள் ஓவியர்கள் மணிகண்டன் அவர்களும், ஓவியர் ஷண்முகவேல் அவர்களும்.

ஒவ்வொரு இரவும் அந்த அத்தியாயத்திற்கான ஓவியத்தை வரைகிறார்கள் என்பது மட்டும் அல்ல சாதனை. அந்த அத்தியாயத்தின் மொத்த சாரமும் வாசகனின் மனதில் சென்று தைக்கும் கூரிய முனை எதுவோ, அதையே ஓவியத்தின் தூரிகை முனையாகக் கொள்ளும் தேர்ந்த வாசகத் தன்மைதான் இவர்களது சிறப்பு. ஒரு ஓவியத்திற்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமான உழைப்பு என்று இருக்கும்போது அதை இடை விடாமல் செய்துவரும் இவர்களது செயலூக்கம் பாரட்டுக்குரியது.

அத்தியாயத்தை வாசிக்கும் அளவே இவர்களது ஓவியத்தையும் ரசிக்கும் அளவு என்பதை தொடர்ந்து வரும் வெண்முரசு வாசகர் கடிதங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. வியாசனின் ஓவிய வடிவத்தை நமக்கு அளித்து வரும் ஓவியர்கள் ஷண்முகவேல் , மணிகண்டன் ஆகிய இருவரையும் இந்த அவையில் கௌரவிப்பதில் வி.இ.வட்டம் பெரு மகிழ்ச்சி அடைகிறது. ஓவியர் மணிகண்டன், சண்முகவேல் இருவரையும் மேடைக்கு அழைக்கிறோம்.,

*
உலகின் மிகப் பெரும் கவிதை நூலான வியாச பாரதம் ஒரு தனி மனிதரின் அர்ப்பணிப்பான வாழ்நாள் உழைப்பு வழியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

நண்பர்களே ! அறிஞர் கிசாரி மோகன் கங்குலி அவர்கள் 1883 தொடக்கி 1896 வரை 13 ஆண்டுகளை செலவிட்டு வியாச பாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார் . உலகின் மகத்தான அந்தப் படைப்பு இன்று வரை தமிழில் முழுமையாக மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. ஆம், உலகின் பெரும் காவியத்தை நமது மரபில் கொண்டுள்ள நாம் அதை நம் தாய்மொழியில் கொண்டிருக்கவில்லை. ஆனால் அந்தக் குறை தீரும் வண்ணம் ஒரு தனி மனிதரின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வம் வியாசபாரதத்தை மெய்ப்ரதியில் உள்ள வண்ணம் தமிழில் தந்து கொண்டுள்ளது.

நண்பர் திரு. அருட்செல்வப் பேரரசன் அவர்கள் தனிமனிதராக மொத்த மகாபாரதத்தையும் தமிழில் மொழி பெயர்த்து இணையத்தில் இலவசமாக வெளியிட்டு வருகிறார். கூடவே ஒலி வடிவிலும் வெளியிடுகிறார். http://mahabharatham.arasan.info/ எனும் அவரது தளத்தில் இவற்றை நாம் காணலாம்.

பல்கலைக் கழகங்களும், அரசு அமைப்புகளும், கல்வி புலங்களும் செய்ய வேண்டிய கடும் உழைப்பைக் கோரும் இந்த மகத்தான பணியை தளராத ஊக்கத்துடன் தனிஒருவராக செய்து வரும் திரு.அருட்செல்வப்பேரரசன் அவர்களை இந்த அவையில் கௌரவிப்பதில் வி.இ.வட்டம் பெரு மகிழ்ச்சி அடைகிறது. திரு.அருட்செல்வப்பேரரசன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம். *

*

படைப்பாளியின் மனம் படைப்பில் ஆழமாக ஈடுபடும் நேரத்தில் அவனைக் கையாள்வது எளிதான செயலல்ல. பிடிதுணி இன்றி கொதிநீர் கலனை அடுப்பிலிருந்து இறக்குவது போலதான் . அதிலும் ஜெயமோகன் போன்ற ஒரு படைப்பாளியை நாள் முழுவதும் கையாள்வது மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் கையாள்வது என்பது இனிமையான சவாலே .

அவ்வகையில் அவரைப் பொத்தி பாதுகாத்து நமக்கு நல்ல எழுத்தாளராகத் தருவதில் அவரது மனைவி திருமதி.அருண்மொழி அவர்களின் பங்கு மகத்தானது. அவரது இல்லறத் துணையாக மட்டுமன்றி அவரது முதல் வாசகியாக, பிழை திருத்துநராக , படி எடுப்பவராக, அவரது உதவியாளராக என அனைத்துமாக செயல்பட்டு வரும் திருமதி. அருண்மொழி நங்கை அவர்களை கௌரவிப்பதில் வி.இ.வட்டம் மகிழ்ச்சி அடைகிறது. திருமதி. அருண்மொழி நங்கை அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

*

எத்தனையோ கலை வடிவங்கள் இருந்தாலும் தமிழ் மண்ணின் மக்களுக்கு காட்சி, இசை, எழுத்து எனும் மூன்று கலை வடிவங்களில்தான் அதிக ஈடுபாடு.மொழியையே இயல், இசை, நாட்டியம் என்று வகைப்படுத்தியவர்கள் நாம்தானே. இதில் நாடக வகையின் இன்றைய நிலையான திரைத் துறையில் இருப்பவர் இவர். ஒரு வாசகனுக்கு ஏற்படும் வாசிப்பனுபவம் அவன்அகத்தில் தான் வாசிக்கும் கதை மாந்தராகவே மாறி வாழ முடியும் என்பது. அவ்வகையில் அதிகம் வாசிப்பவர் அதிக வாழ்க்கைகளை உணர்ந்தவராகிறார். ஆனால் இவர் மட்டும் இந்திய மொழிகளின் திரைப்படங்களில் 200க்கும் மேற்பட்ட வாழ்க்கைகளை வாழ்ந்து காட்டியவர்.

பள்ளிக்கு செல்லும் வயதில் திரைப்படங்களில் நடிக்கச் சென்ற இவர், தேர்வுகள் பலவற்றில் தேர்ச்சி பெற்றாலும் , வாசிப்பினை இன்னும் கைவிடாத மாணவர். எந்த ஒரு கலைக்கும் அதன் தூய வடிவம் என்ற ஒன்றும், வெகுஜன பயன்பாட்டில் பொதுதள வடிவம் என்ற ஒன்றும் உண்டு. தூய வடிவில் அக்கலையை ஆராதிக்கும் கலைஞர்கள் சிலர் உண்டு. பொதுத் தள வடிவத்தில் அதனை ரசிக்கும் கலைஞர்கள், ரசிகர்கள் பலருண்டு. ஆனால் இரண்டின் எல்லையையும் உணர்ந்த கலைஞர்கள் தான் பொதுத் தளத்தின் ரசனை மட்டத்தை அதன் தூய வடிவத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவர முயன்று கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வெகு சிலரே உண்டு. ஏனெனில் இரு வடிவ ரசிகர்களிடமிருந்து வரும் விமரிசனம் இவர்களையே குறி வைக்கும். அப்படியான விமரிசனங்களைத் தாண்டி இன்னும் செயல்துடிப்புடன் நடிப்பில் மிளிர்பவர் இவர்.

திரைப்படத்துறையில் இவர் பெற்ற விருதுகளின் பட்டியலை எழுத ஜெயமோகன்தான் வர வேண்டும். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி முதலிய மொழிகளில் திரைப்படங்களுக்கான எண்ணற்ற பிலிம்பேர் விருதுகள், இந்திய ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் போன்ற பல பெருமைகளுக்கு உரியவர். தமிழில் திரைப்படங்களுக்கும், இலக்கியத்திற்குமான் தூரங்களைக் குறைக்க விடாமல் முயன்று கொண்டே இருக்கும் தேர்ந்த வாசகர். குன்றாத ஊக்கத்துடன் மேம்பட்ட ரசனையை குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வரும் வகையில் தமிழ் கலை மகாபாரதத்துக்கு இவரே அர்ஜுனன்.

6 மொழிகளில் திரைப்படம் சார்ந்து நடிகர் , இயக்குனர் , திரைக்கதை ஆசிரியர் , பாடலாசிரியர் , நடன இயக்குனர், பின்னணிப் பாடகர் என பல்முகத் திறமையை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயலூக்கத்துடன் காட்டி வரும் திரு.கமல்ஹாசன் அவர்களை வாழ்த்துரை ஆற்ற அழைப்பதில் வி.இ.வட்டம் பெருமை கொள்கிறது. திரு.கமல்ஹாசன் அவர்களை வாழ்த்துரை ஆற்ற வரவேற்கிறோம்.
*

மொழியியலாளர்களிடம் கேட்டால் உலகில் 500 லிருந்து 600 வரை மொழிகள் உண்டு என்பார்கள். ஒவ்வொரு மொழியும் ஒரு சமுதாயம் கூட்டாக உருவாக்கியது. ஆனால் இவரோ கடந்த 40 வருடங்களாக அவரும், அவரது ரசிகர்களும் பேசிக்கொள்ளும் இசை எனும் மொழியை தனி மனிதராக உருவாக்கி இருக்கிறார். இந்த 40 வருடங்களாக தமிழ் பேசும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், அவர்களது அந்தரங்கத் தனிமைத் தருணங்களிலும் , வேறெவரும் அறிய முடியாத ஊமை உணர்வுகளுக்கு மௌன சாட்சியாகவும் , என்றும் இணைபிரியாத தோழமையாகவும் துணை வருவது இவரது இசைதான்.

1000 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைப்பு செய்தது மட்டுமல்ல இவரது சாதனை. பின்ணணி இசையையும் ஒரு கதைமாந்தராகவே உருவாக்கி உலவவிடும் இசைத் திறன்தான் இவரது சாதனை. சங்கீத நாடக அகாடமி விருது, 6 மாநில அரசுகளின் பல்வேறு விருதுகள், பல மொழிகளுக்கான பிலிம்பேர் விருதுகள், மத்திய அரசின் பத்ம பூஷண் முதலான பல விருதுகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

ஒரு கலையின் மேதை எனப்படுபவன் அக்கலையின் அனைத்து வடிவங்களிலும் நிறைந்து நிற்பவன். அனைத்து வடிவங்களையும் ஒன்றாக இணைக்கும் கலை ஞானம் கை வரப் பெற்றவன். இசைக் கலையின் அனைத்து வடிவங்களின் ரசிகர்களுக்கும் இடையே ஒரு பொதுத் தன்மையை தேடினால் அவர்கள் அனைவரும் இவரது இசைக்கு ரசிகர்கள் என்ற முடிவுக்கே வர வேண்டும். இசைக் கஇன் லையின் உயர் கலைஞர்களிலிருந்து , பொதுவில் உள்ள ஒவ்வொரு இசை விரும்பியும் நேசிக்கும் உன்னதமான இசை அமைப்பாளர் இவர். கிராமிய இசை , கர்நாடக இசை , இந்துஸ்தானி இசை , மேற்கத்திய சாஸ்திரிய இசை என இசையின் பரந்து பட்ட எல்லைகள் அனைத்திலும் முத்திரை பதித்து முதன்மையாக நிற்கும் விதத்தில் இசைக் கலை மகாபாரதத்தில் இவரே மற்றொரு வியாசன் .

கடந்த நாற்பது ஆண்டுகளாக குன்றாத படைப்பூக்கத்துடன் இசையின் ஆழங்களுக்கு தான் செல்வதன் மூலம் , இசையின் உச்சங்களை நமக்கு அளித்து மகிழ்வித்து வரும் திரு.இளையராஜா அவர்களை வாழ்த்துரை வழங்க அழைப்பதில் வி.இ.வட்டம் பேருவகை கொள்கிறது. திரு.இளையராஜா அவர்களை வாழ்த்துரை வழங்க வரவேற்கிறோம்.

*
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு இந்த மேடையில் அறிமுகம் தேவையில்லை. அவரது படைப்பான வெண்முரசு குறித்து அவரது உழைப்பு இங்கே பேசப்பட வேண்டியது. கிட்டத்தட்ட 30 வருடங்களாக மகாபாரதம் குறித்த வாசிப்பு, அதாவது மூல நூல் தவிரவும், மகாபாரதத்தை ஆய்வு செய்து எழுதப்பட்ட அனைத்து கட்டுரைகள், புத்தகங்கள் மீதான வாசிப்பு , பாரதத்தில் வரும் இடங்களைக் காண இந்திய நிலப்பரப்பின் வெவ்வேறு இடங்களுக்கு 10க்கும் மேற்பட்ட விரிவான இந்தியப் பயணங்கள், உறக்கம் பிடிக்காத தொடர் சிந்தனை, ஒரு நாளைக்கு 4 -6 மணி நேரத்தைக் கோரும் தட்டச்சுப் பணி , மாறி, மாறி வரும் படைப்பூக்க மனநிலையின் சவால் என பல கட்டங்களைத் தாண்டித்தான் அவரிடமிருந்து வருகிறது வெண்முரசு எனும் படைப்பு.

நாவல், கட்டுரை , நாடகம், சிறுகதை, விமரிசனம் , திரைத்துறை என வெவ்வேறு தளங்களிலும் தொடர்ந்து செயலூக்கத்துடன் ஈடுபட்டு வருபவர் நம் ஜெயமோகன் அவர்கள். நாம் அறிந்த கதையை நாம் அறியாத அளவில் சொல்ல முடிந்த அசாதாரணமான கதை சொல்லியான திரு,ஜெயமோகன் அவர்களை ஏற்புரை வழங்க அழைப்பதில் வி.இ.வட்டம் பெரு மகிழ்வு கொள்கிறது. திரு. ஜெயமோகன் அவர்களை ஏற்புரை வழங்க வரவேற்கிறோம்.

வெண்முரசு பற்றிய அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 30
அடுத்த கட்டுரை’நார்மல்’