‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31

பகுதி ஏழு : பூநாகம் – 1

காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம் சிம்மம்போல கர்ஜனைசெய்யத் தொடங்கியது. கோட்டைமேல் எழுந்த கொடிகளை பல்லாயிரம் கண்கள் நோக்கின. வண்ண உடைகள் அணிந்து அணிசூடி மலர்கொண்ட பெண்கள் குழந்தைகளை இடையில் தூக்கி கிழக்கு வாயிலை சுட்டிக்காட்டினர். முதியவர்களை இளையோர் கைத்தாங்கலாக அழைத்துவந்து நிறுத்தினர்.

நகரெங்கும் மலர்மாலைகளும் பட்டுப்பாவட்டாக்களும் தொங்கி காற்றிலாடின. கொன்றையும் வேங்கையும் பூக்கும் காலமாதலால் தெருக்களெல்லாம் பொன்பொலிந்திருந்தன. இல்லங்களில் தோரணங்கள் கட்டி கோலங்கள் இட்டிருந்தனர். மாளிகைகளின் மேல் கொடிகள் பறக்கும் ஒலி சிறகுகளின் ஓசையென கேட்டுக்கொண்டிருந்தது. காலையின் குளிர்காற்றில் காத்திருந்தவர்களின் ஆடைகளும் குழல்களும் அசைந்தன. இனிய சூழல் நல்ல நினைவுகளை கிளர்த்தியது. முதியவர் ஒருவர் “முன்பொருநாள் இதேபோன்று பீஷ்மர் நகர் நுழைந்தார். அன்று நான் என் அன்னையின் இடையில் அமர்ந்து அந்த ஊர்வலத்தை நோக்கினேன்” என்றார். “பாண்டவர்கள் சதசிருங்கம் விட்டு வந்த ஊர்வலத்தை நான் பார்த்தேன்…” என்று ஓர் இளைஞன் சொன்னான். “அன்று இளையவர் தீப்பந்தம்போலத் தெரிந்தார் என்று சூதன் பாடினான்.”

அரண்மனைக்கோட்டை முகப்பில் காஞ்சனம் முழங்கியது. தேர்முற்றத்தில் காத்து நின்றிருந்த அணிப்பரத்தையரும் மங்கலச்சேவகர்களும் சூதர்களும் உடல் நிமிர்ந்து நின்றனர். சேவகர்கள் இடைநாழியை நோக்கி சென்றனர். விதுரரும் சௌனகரும் ஒருவருக்கொருவர் பேசியபடி விரைந்து வந்தனர். சௌனகர் “அனைத்தும் சித்தமல்லவா?” என்றார். சேவகர்தலைவன் “கிளம்பவேண்டியதுதான் அமைச்சரே” என்றான். அப்போது வலப்பக்க இடைநாழிவழியாக திருதராஷ்டிரரின் இளம் சேவகனான சுமித்ரன் ஓடிவந்தான். “அமைச்சரே, அரசரும் எழுந்தருள்வதாக சொல்கிறார்” என்றான். “அவைக்கூடம் விட்டு அவர் கிளம்பிவிட்டிருக்கிறார்.”

விதுரர் “அது வழக்கமில்லையே… அரசர் வந்து படைத்தளபதிகளை வரவேற்கலாகாது” என்றார். “அதை மூத்த அணுக்கச்சேவகர் விப்ரர் அரசரிடம் சொன்னார். அதற்கு நான் அரசனுமில்லை, அவர்கள் படைத்தலைவர்களுமில்லை என அரசர் மறுமொழி சொன்னார்” என்றான் சுமித்ரன். விதுரர் புன்னகையுடன் “அவ்வாறெனில் வரட்டும்” என்றார். சௌனகர் மெல்லியகுரலில் “மிகையாகிச் செல்பவை எதிர்த்திசைக்கு திரும்பக்கூடும் அமைச்சரே” என்றார். “அன்பு கூடவா?” என்று புன்னகையுடன் விதுரர் கேட்டார். “ஆம், முதன்மையாக அன்புதான் எல்லை மீறலாகாது. அன்பு ஒவ்வொரு கணமும் தன் எதிரொலிக்காக செவிகூர்கிறது. நிகரான எதிரொலி எழாதபோது ஏமாற்றம் கொள்கிறது. சினமடைகிறது. அது வன்மமாகவும் வெறுப்பாகவும் திரிகிறது.”

விதுரர் “அமைச்சர்கள் இருளை நோக்கவேண்டியவர்கள்… நீர் அமைச்சராகவே பிறந்தவர்” என்றார். “ஆம், நான் கற்ற கல்வியும் அதுவே. உலகாயதத்தையே என் தந்தை முதலில் கற்பித்தார். பின்னர் வேதமும் வேதாந்தமும் கற்றுத்தெளிந்து உலகாயதமே மெய்யறிவு என்பதை உறுதிசெய்துகொண்டேன்” என்றார் சௌனகர். விதுரர் “நல்ல கல்வி” என்று சொல்லி நகைத்தார். சௌனகர் திரும்பி காத்திருந்தவர்களிடம் கையசைத்து பொறுத்திருக்கும்படி சொன்னார். திருதராஷ்டிரர் செல்வதற்குரிய அரச ரதம் அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் முற்றத்தின் நடுவே வந்து நின்றது.

சௌனகரின் சேவகன் சதுரன் வந்து பணிந்து உதடு மெல்ல அசைய “இளைய அரசி குந்திதேவியும் வாயிலுக்குச் செல்கிறார்கள்” என்றான். விதுரர் அதைக்கேட்டு புருவம் தூக்கி “இளைய அரசியா?”என்றார். “ஆம், அது மரபல்ல என்று சொல்லப்பட்டதும் வெண்திரையிடப்பட்ட பல்லக்குக்குள்தான் குந்திதேவி இருப்பார்கள் என்று அவர்களின் அணுக்கச்சேடி பத்மை சொல்லிவிட்டார்கள். ஆகவே…” என்றான் சதுரன். சௌனகர் திரும்பி “ஏதோ ஒன்று எங்கோ முறுகிக்கொண்டிருக்கிறது அமைச்சரே” என்றார். “நீர் வீண் எண்ணங்களை விட்டுவிட்டு நடக்கவேண்டியதைப் பாரும்” என்றார் விதுரர். “இங்கே தன் வளைக்குள் ஓநாய் ஒன்று காத்திருக்கிறது… அதனுடன் குள்ளநரி ஒன்று வாழ்கிறது” என்று சௌனகர் முணுமுணுத்தார்.

கொம்பும் குழல்களும் எழுந்தன. இளங்களிறின் பிளிறல்போல வலம்புரிச்சங்கின் ஓங்கிய ஓசை எழுந்தமைய குறுமுரசு ஒலியுடன் செம்பட்டுப் பாவட்டாக்களும் கொடிகளும் ஏந்திய எட்டு காவலர்கள் வந்தனர். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிக்குப்பின்னால் திருதராஷ்டிரரின் அரவக்கொடியை ஏந்திய வீரன் நடந்து வர சஞ்சயன் கைபற்றி வந்த திருதராஷ்டிரரின் தலை அனைவருக்கும் மேலாகத் தெரிந்தது. “குருகுலத்தின் பெருங்களிறு” என்றார் சௌனகர். “நிகரென இனியொரு மத்தகத்தை பாரதவர்ஷம் காணப்போவதில்லை.” விதுரர் சற்றே சிடுசிடுப்புடன் “நாமே சொல்லக்கூடாது பேரமைச்சரே. மானுடன் தருக்குவதை தெய்வங்கள் விழைவதில்லை” என்றார்.

முற்றத்தை திருதராஷ்டிரர் வந்தடைந்ததும் விதுரர் அருகே சென்று பணிந்து “அரசே, பணிகிறேன்” என்றார். “விதுரா, மூடா, உன்னை நான் காலையில் இருந்தே தேடுகிறேன்…” என்றார் திருதராஷ்டிரர். “பணிகள்…” என விதுரர் முனகினார். “உன் இளைய மைந்தனுக்கு நான்குநாட்களாக உடல்நலமில்லை, தெரியுமா உனக்கு? சப்தசிந்துவுக்குச் சென்ற இடத்தில் அவனை சுரதேவதை பற்றிவிட்டது. சுருதை வருந்துகிறாள் என்று விப்ரன் சொன்னான். நானே என் மருத்துவரை அனுப்பிவைத்தேன். நேற்றுமாலை சென்று அவனைப் பார்த்தேன். நெற்றியில் தொட்டால் எரிகலம் போல வெம்மை அடிக்கிறது. என்னைக் கண்டதும் தந்தையே என்றான். கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் அவனருகே அமர்ந்திருந்தேன். அவன் உன்னை தேடுகிறான் என்று தோன்றியது.”

“அவர்கள் என்னைத் தேடுவதில்லை அரசே” என்றார் விதுரர் புன்னகையுடன். “தங்கள் கைகள் தொட்டால் கண்ணீர்விடாத மைந்தர் எவரும் இந்த நகரில் இன்றில்லை. தங்களுக்குமேல் ஒரு தந்தையை எவரும் இங்கு வேண்டுவதுமில்லை.” எரிச்சலுடன் கையை வீசி “அப்படி என்னதான் செய்தாய் நேற்றிரவெல்லாம்?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் மெல்லியகுரலில் “அனைத்தையும் நானே வந்து சொல்லலாம் என்றிருந்தேன். நம் மைந்தர்கள் சௌவீரநாட்டின் யவன அரசர்களை வென்று மீண்டிருக்கிறார்கள். அந்த வெற்றியின் விளைவுகளென்ன என்று பழைய சுவடிகளை ஆராய்ந்து மேற்குத்திசையெங்கும் ஒற்றர்களை அனுப்பியிருந்தேன். அனைத்து பருந்தோலைகளையும் வாசித்து முடிக்கையில் விடிந்துவிட்டது.”

“வெற்றியின் விளைவு என்ன என்று நீ சொல்லி அறியவேண்டுமா?” என்று திருதராஷ்டிரர் நகைத்தார். “உண்டாட்டு! வேறென்ன? பீமன் வருவதற்காகவே நான் காத்திருக்கிறேன்.” விதுரர் “அப்படியல்ல அரசே, தோல்விகூட சற்று கால இடைவெளியை அளிக்கும். வெற்றி அதை அளிப்பதில்லை. அது நம் முதுகுக்குப்பின் ஆயிரம் ஈட்டிகளை வரச்செய்கிறது. கணநேரம் தயங்கிநிற்கக்கூட நம்மை அது விடுவதில்லை” என்றார்.

திருதராஷ்டிரர் உதட்டைச்சுழித்து “அது விடுகிறதோ இல்லையோ, நீங்கள் விடுவதில்லை. அமைச்சர்களை கையாளத்தெரிந்தவனே நல்ல அரசன். நான் அதைக் கற்றிருக்கிறேன். சஞ்சயா, மூடா!” என்றார். சஞ்சயன் “அரசே” என்றான். “எவ்வாறு தெரியுமா?” என்றார் திருதராஷ்டிரர். “சொல்லுங்கள் அரசே!” திருதராஷ்டிரர் “அவர்கள் சொல்வதை கேட்பேன். ஆனால் ஒரு சொற்றொடரைக் கேட்கையில் முந்தைய சொற்றொடரை முற்றிலும் மறந்துவிடுவேன்” என்றபின் தோளில் ஓங்கி ஒலியுடன் அறைந்து உரக்க நகைத்தார். சஞ்சயன் புன்னகையுடன் விதுரரை நோக்க அவரும் புன்னகைசெய்தார்.

“செல்வோம்” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் அவர் கைகளைப்பற்றி மெல்ல படிகளில் இறக்கினான். அவன் கண்ணும் நாவும் அவருடன் முழுமையாகவே இணைந்துவிட்டிருந்தன. அவனையறியாமலேயே அவன் அவரது பாதையை தன் விழிகளால் தொட்டு சொற்களாக்கிக் கொண்டிருந்தான். “நான்கு வாரை தொலைவில் உங்கள் கொடிரதம் நின்றுகொண்டிருக்கிறது அரசே. அதன் சாரதி வெண்பட்டாடையுடன் செந்நிறத்தலைப்பாகையுடன் கையில் சம்மட்டி ஏந்தி நின்றிருக்கிறான். வெண்குதிரைகள் நான்கு பூட்டப்பட்டிருக்கின்றன. வலக்குதிரை பொறுமையிழந்து வலது முன்னங்காலால் செங்கல்தரையை தட்டிக்கொண்டிருக்கிறது. கரியகுதிரையில் ஏழு காவலர்கள் முன்னால் நின்றிருக்கின்றனர். எழுவர் பின்னால் நின்றிருக்கின்றனர். உங்கள் கொடியேந்தியும் கொம்பூதியும் முழவுக்காரனும் அவர்களுக்கு முன்னால் தனி ரதங்களில் நின்றிருக்கின்றனர். விதுரரும் சௌனகரும் செல்வதற்கான ரதங்கள் தனியாக நின்றிருக்கின்றன….”

“விதுரா, மூடா, என் ரதத்தில் நீயும் ஏறிக்கொள்” என்றார் திருதராஷ்டிரர். ”நான் உன்னை கையால் தொட்டே நெடுநாட்களாகின்றன.” விதுரர் சௌனகரிடம் தலையசைத்துவிட்டு “ஆணை அரசே” என்றபின் அருகே வந்தார். திருதராஷ்டிரர் தன் பெரிய கையைத் தூக்கி விதுரர் தோள்மேல் வைத்து மெல்ல வருடி “எலும்புகள் தெரிகின்றன. ஏன் உன் உடலை இப்படி மெலியவைக்கிறாய்? நீ உண்பதில்லையா என்ன?” என்றார். “பசியளவுக்கு உண்கிறேன் அரசே” என்றார் விதுரர். “உடற்பயிற்சி செய்… நாள்தோறும் காலை என் ஆயுதசாலைக்கு வா… நான் உனக்குப் பசியை அளிக்கிறேன்.” விதுரர் சஞ்சயனை நோக்கி புன்னகை செய்தார். திருதராஷ்டிரர் ரதத்தில் ஏறிக்கொண்டு “சஞ்சயா” என்றார். “நாம் கிளம்பவிருக்கிறோம் அரசே” என்றான் சஞ்சயன்.

ரதங்கள் அரண்மனை எல்லையை கடந்ததும் “ஏதோ சொல்லவந்தாய் சொல்” என்றார் திருதராஷ்டிரர். “சௌவீரர்களை வெல்லலாம் என்று சொன்னவன் நீ அல்லவா?” சஞ்சயன் பேச்சை நிறுத்த “நீ சொல் மூடா. என்னால் காட்சிகளை உன் சொல்லில் பார்த்தபடி இவனிடம் உரையாடவும் முடியும்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அரசே, நான் சௌவீரர்களை வெல்லும்படி பாண்டவர்களை அனுப்பியது ஒரே காரணத்தால்தான். அவர்கள் பீதர்களின் வணிகப்பாதையை கட்டுப்படுத்துகிறார்கள். ஆகவே பிற மன்னர்கள் எவரைவிடவும் கருவூலத்தை நிறைத்திருக்கிறார்கள்” என்றார்.

“ஆனால் அதைக்கொண்டு அவர்களால் பெரிய படையை உருவாக்கமுடியவில்லை. ஏனென்றால் அவர்களின் நாடு பாரதவர்ஷத்தின் வடமேற்கே இமயமலைகளின் அடியில் உள்ளது. அங்குள்ள குளிரையும் கோடையின் வெயிலையும் தாங்கும் ஆற்றல் பிறநிலத்து மக்களுக்கு இருப்பதில்லை. கொழுத்த மிருகமே எளிய இலக்கு. அது சிறந்த உணவு, அதேசமயம் விரைவற்றது” என்றார் விதுரர். “ஆனால் சௌவீரர்களை நாம் எளிதில் மதிப்பிட்டுவிடமுடியாது. அவர்கள் செந்தழல்நிறமும் செந்நிறக்குழலும் நீலக்கண்களும் கொண்டவர்கள். அவர்களின் தோன்றிடம் மேற்கே சோனகர்களின் பெரும்பாலை நிலங்களுக்கு அப்பால் வெண்பனி சூழ்ந்த யவனநாட்டில் என்கிறது ஜனகராஜரின் ராஷ்ட்ரநீதி.”

“அவர்கள் மாமன்னர் திலீபரின் காலகட்டத்தில் வடமேற்குமலையடிவாரங்களில் வந்து குடியேறியவர்கள். ரகுவாலும் பின்னர் ரகுகுலத்து தோன்றல் லட்சுமணனாலும் வெல்லப்பட்டவர்கள். யவனர்கள் என்பதனால் இன்றுவரை பாரதவர்ஷத்தின் பதினாறு ஜனபதங்களுக்கும் ஐம்பத்தாறு அரசுகளுக்கும் வெளியே எந்த உறவுமில்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள். இதுவரை மலைகளின் பாதுகாப்பை நம்பி தங்களைக் காத்துக்கொள்வதே அவர்களின் இலக்காக இருந்தது. இன்று அவர்களின் கருவூலங்கள் வீங்கிப்பெருக்கையில் பாரதவர்ஷத்தின் கீழ்நிலங்கள் மேல் அவர்களின் விழி பதிகிறது” என்றார் விதுரர்.

சஞ்சயன் “நாம் கிழக்குவீதியை அடைந்துவிட்டோம் அரசே. கொன்றையும் வேங்கையும் உதிர்த்த மலர்களின் பொற்கம்பளம் மீது கொடிகளின் நிழல்கள் ஆடும் செங்கல் தரையில் ரதம் ஓடிக்கொண்டிருக்கிறது” என்றான். “கோட்டைமேல் பாண்டவர்களின் கொடிகள் ஆடுகின்றன. பார்த்தனின் வானரக்கொடி நடுவே ஓங்கிப் படபடக்கிறது. அப்பால் எரியம்புகள் எழுந்து வானில் வெடிக்கின்றன. படைகள் நெருங்கிக்கொண்டிருப்பதை அவை காட்டுகின்றன.” திருதராஷ்டிரர் “என் மைந்தர்கள் எங்குள்ளனர்?” என்றார். “அவர்கள் துச்சாதனர் தலைமையில் கோட்டைக்கு அப்பால் முகமுற்றத்தில் நின்றிருக்கின்றனர் என்று வாழ்த்தொலிகளில் இருந்து தெரிகிறது” என்றான் சஞ்சயன்.

“சொல்” என்று விதுரரிடம் சொன்னார் திருதராஷ்டிரர். “சௌவீரர்களுக்குத் தேவையானது கடலைத் தொடும் ஒரு நிலம். ஆகவே கூர்ஜரத்தை வெல்ல எண்ணுகிறார்கள். சிந்துவை கைப்பற்றி தேவபாலபுரம் வரை கப்பல் செல்லும் பாதையை அவர்கள் அடைந்துவிட்டார்கள் என்றால் அவர்களை நாம் நெருங்கமுடியாது. சிந்துவின் கரைமுழுக்க காவல்படைகளை அமைத்துவிடுவார்கள்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் “ஆம்” என்றார். “ஆகவேதான் அவர்களை இப்போதே வென்றுவிடவேண்டுமென எண்ணினேன்” என்றார் விதுரர்.

“யவனர்கள் என்றாலும் அவர்களுக்குள் இருவேறு இனங்கள் உள்ளன. தட்சிண சௌவீரத்தை ஆளும் ஹரஹூண குலத்தைச் சேர்ந்த விபுலன் மேற்கிலிருந்து வந்தவன். உத்தர சௌவீரத்தை ஆளும் தத்தமித்ரன் வடக்குப் பெரும்புல்வெளிகளில் வாழும் தார்த்தர்கள் என்ற இனத்தைச் சேர்ந்தவன். அவர்கள் நூறாண்டுகளாக ஒருவரை ஒருவர் விலக்கிவைத்திருக்கிறார்கள். விபுலன் தூதர்களை அனுப்பி மேற்கே பனிநாடுகளில் இருந்து தன் ஹரஹூண குலத்தைச் சேர்ந்த பெண்களைக் கொண்டுவந்தே இளவரசர்களுக்கு மணம்புரிவிக்கிறான். தத்தமித்ரன் வடக்கிலிருந்தே பெண் கொண்டு வருகிறான்.”

“இப்போது அவர்களின் அமைச்சர்கள் இருகுலங்களும் ஒன்றுடன் ஒன்று இணையவேண்டுமென பேசிவருகிறார்கள். இமயமலைச்சரிவில் பால்ஹிகநாட்டின் கபிசாபுரி என்னும் ஊரில் ஒரு சந்திப்பை ஒருங்குசெய்திருந்தார்கள். இருகுலங்களும் இணைவதற்கு முன் நான் பாண்டவர்களை அனுப்பினேன்” என்றார் விதுரர். “முதலில் தட்சிண சௌவீரநாட்டை வென்று விபுலனை களத்திலேயே கொன்றுவிடவேண்டுமென்று அர்ஜுனனிடம் சொல்லியிருந்தேன். விபுலனின் மைந்தன் இளையோன். அவன் வலுப்பெற்றுவர இருபதாண்டுகளாகும். அதன்பின் தார்த்தனாகிய தத்தமித்ரனை அர்ஜுனன் வென்றான்.”

“இனி அஞ்சுவதற்கேது உள்ளது?” என்றார் திருதராஷ்டிரர். “மகதம் இப்போது குல எல்லைகளை மீறி சௌவீரர்களுடன் மண உறவுகொள்ள முடியும். ஏனென்றால் ஜராசந்தன் ஆசுர குலத்தின் குருதி கொண்டவன். அவனை குலவிதிகள் கட்டுப்படுத்தாது. ஆகவே சௌவீரத்தின் இளவரசியர் அனைவரையும் கவர்ந்துவரச் சொல்லியிருக்கிறேன். இல்லையேல் அவர்களில் ஒருத்தியை ஜராசந்தன் மணம்புரிந்துகொள்வான். அதன்மூலம் சௌவீரத்தை தன்னுடன் சேர்த்துக்கொள்வான்… மாளவனும் கூர்ஜரனும் சௌவீரனுக்கு தெரியாத தூதுகள் அனுப்பக்கூடும்” என்றார் விதுரர். “ஆம், ஆனால் இதெல்லாமே கணிதங்கள். எண்ணி எண்ணி சிலந்தி கட்டும் வலைகள். சிறுபூச்சிகளுக்கானவை அவை. வண்டு வலையை அறுத்துச் செல்வது. என் கரியோன் ஆற்றல்மிக்க சிறகுகள் கொண்ட கருவண்டு அல்லவா?” என்றார் திருதராஷ்டிரர்.

“யாதவ அரசியின் வெண்ணிறப்பல்லக்கு முற்றத்தின் மறுபக்கம் நின்றிருக்கிறது. அங்குள்ள வெண் திரையிடப்பட்ட சிறு பந்தலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நமக்கு நேர்முன்னால் மார்த்திகாவதியின் கொடி பறக்கிறது. பந்தலுக்கு வெளியே அணுக்கச்சேடி பத்மை நின்றிருக்க அருகே முதியவளான மாலினி நின்றிருக்கிறாள்” என்றான் சஞ்சயன். “நன்று நன்று… அவள் உள்ளம் பொங்குவதை என்னால் உணரமுடிகிறது. மைந்தர் வென்றுவருவதைக் காண அவள் முறைமீறி வந்தது மிகச்சிறந்த செயல்… என்னாலேயே அரண்மனையில் அமர்ந்திருக்க இயலவில்லையே” என்றார் திருதராஷ்டிரர்.

குடிமக்களின் வாழ்த்தொலி சூழ்ந்து ஒலிக்க அவர்கள் இறங்கி அங்கே அமைக்கப்பட்டிருந்த பட்டுப்பந்தலில் சென்று நின்றுகொண்டனர். பந்தலில் முன்னதாகவே சகுனி வந்து நின்றிருந்தார். அவருக்குப்பின்னால் அணுக்கச்சேவகர் கிருதரும் அப்பால் சகுனியின் உடலின் நிழலுக்குள் ஒடுங்கியவராக கணிகரும் நின்றிருப்பதை விதுரர் கண்டார். திருதராஷ்டிரரை சகுனி முன்வந்து வணங்கி அழைத்துச்சென்றார். விதுரர் அரசருக்கு வலப்பக்கம் நின்றுகொள்ள சகுனி இடப்பக்கம் நின்றுகொண்டார். சகுனி “முறைமீறியதாக இருப்பினும் தாங்கள் வந்தது சிறப்பே” என்றார். கணிகர் மெல்லியகுரலில் “வென்றுவந்த சௌவீர நாட்டு மணிமுடியை அரசரின் கால்களில் பாண்டவர்கள் வைப்பதை அஸ்தினபுரியின் மக்களும் பார்க்கட்டுமே” என்றார். திருதராஷ்டிரர் உரக்க நகைத்து “நன்கு சொன்னீர் கணிகரே” என்றார்.

கோட்டைமேல் கொடிகள் மாறின. பெருமுரசின் தாளம் விரைவாகியது. மக்களின் வாழ்த்தொலிகள் உரத்தன. கோட்டையின் பெருவாயில் வழியாக முதலில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி ஏந்திய குதிரைவீரன் பெருநடையில் உள்ளே வந்தான். வாழ்த்தொலிகளாலும் வாத்தியமுழக்கங்களாலும் அவன் அடித்துவரப்படுவதுபோலத் தோன்றியது. அதைத்தொடர்ந்து பன்னிரு குதிரைவீரர்கள் அணிப்பட்டங்களும் பாவட்டாக்களும் கொடிகளும் ஏந்தி பாய்ந்துவந்தனர். தொடர்ந்து தருமனின் நந்தகியும் உபநந்தகியும் கொண்ட வெண்கொடியும் பீமனின் சிம்மக்கொடியும் அர்ஜுனனின் வானரக்கொடியும் ஏந்திய மூன்று குதிரைவீரர்கள் வந்தனர். நகுலனின் சரபக்கொடியும் சகதேவனின் அன்னக்கொடியும் ஏந்திய இருவர் தொடர்ந்து வந்தனர். ஒவ்வொரு கொடி தெரியும்போதும் மக்கள் அவர்களின் பெயர்களைச் சொல்லி வாழ்த்தினர்.

பாண்டவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டதும் திருதராஷ்டிரர் தன் கனத்த பெருங்கைகளை தலைக்குமேல் தூக்கியபடி தலையை ஆட்டினார். “அரசே… அரசே” என்று அருகே நின்ற சௌனகர் மெல்லக்கூவியதை அவர் பொருட்படுத்தவில்லை. விதுரர் சௌனகரை நோக்கி புன்னகை செய்தார். “பீமன் எங்கே? எங்கே பீமன்?” என்று திருதராஷ்டிரர் திரும்பி சஞ்சயனிடம் கூவினார். “அரசே, அவர்கள் இன்னும் வாயிலை கடக்கவில்லை” என்றான் சஞ்சயன். “அங்கே என்னதான் செய்கிறார்கள்?” என்றார் திருதராஷ்டிரர் எரிச்சலுடன். “அரசே, அவர்கள் நகர்நுழையும் மங்கலச்சடங்குகள் சில உள்ளன. வெளியே கௌரவர்கள் அவற்றை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் விதுரர்.

“அவர்கள் சௌவீரர்களின் மணிமுடிகளுடன் வந்திருக்கிறார்களா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “ஆம் அரசே, அவ்வாறுதான் செய்திவந்தது.” திருதராஷ்டிரர் நகைத்தபடி “என் கன்னங்கரிய உடலுக்கு ஹரஹூணர்களின் மணிமுடி எப்படி பொருந்துகிறது என்று பார்க்கவேண்டும்… அவர்கள் செங்கழுகின் இறகை சூடிக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டேன்” என்றார். விதுரர் “ஆம் அரசே” என்றார். “விதுரா, மூடா, இன்று மாலை ஒரு உண்டாட்டுக்கு ஒருங்கு செய். அதில் ஹரஹூணர்களின் மணிமுடியுடன் நான் தோன்றுகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் புன்னகைத்து “ஆணை” என்றார்.

கொம்புகள் வீரிட்டன. “வருகிறார்கள்!” என்றுகூவியபடி திருதராஷ்டிரர் பந்தலுக்கு வெளியே சென்று முற்றத்தில் நின்றார். இருகைகளையும் தூக்கி தலையைத் திருப்பியபடி “எங்கே? என் மைந்தர்கள் எங்கே?” என்று கூவினார். கோட்டைவாயில் வழியாக திறந்த தேரில் தருமன் இருபக்கமும் நகுலனும் சகதேவனும் நின்றிருக்க உள்ளே வந்தான். “எங்கே பீமன்? பீமனை இங்கே வரச்சொல்லுங்கள்!” என்றார் திருதராஷ்டிரர். அடுத்த ரதத்தில் பீமன் யானைத்தோல் கீழாடை மட்டும் அணிந்து மஞ்சள்நிறப் பெருந்தோள்களில் கூந்தல் வழிந்துகிடக்க இருகைகளையும் கூப்பியபடி நின்றான். அதைத் தொடர்ந்து அர்ஜுனனின் ரதம் வந்தது. செந்நிறப்பட்டால் கீழாடை அணிந்து வெண்பட்டு மேலாடை பறக்க அவன் தேர்த்தட்டில் நின்றிருந்தான். தலையில் செந்நிற வைரங்கள் ஒளிவிட்ட மணிமுடி சூடியிருந்தான்.

“பீமன் எங்கே?” என்று கேட்டபடி திருதராஷ்டிரர் முன்னால் நடந்து செல்லப்போக சஞ்சயன் அருகே சென்று “அவர்கள் இங்குதான் வருகிறார்கள் அரசே” என்றான். திருதராஷ்டிரன் “சௌவீரனின் மணிமுடி எவரிடமிருக்கிறது? அதை பீமனே என்னிடம் கொண்டுவரட்டும்” என்று சொல்லி “அர்ஜுனனையும் தருமனையும் பின்னால் வரச்சொல்லுங்கள்” என்றார். “ஆணை” என்றார் விதுரர்.

கோட்டைமுற்றத்தில் தருமனின் ரதம் மெல்ல நின்றது. அதிலிருந்து நகுலனும் சகதேவனும் இறங்கி குந்தி அமர்ந்திருந்த வெண்திரைப்பந்தல் நோக்கி ஓடினர். தருமன் இறங்கி அருகே நின்றிருந்த சேவகனிடம் ஏதோ சொல்வதை விதுரர் கண்டார். அவர் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. பொற்தகடுகளால் அணிசெய்யப்பட்ட செந்நிறமான பெட்டியை சேவகன் கையில் எடுத்தளிக்க தருமன் அதை இருகைகளிலும் வாங்கி நீட்டியபடி பந்தலை நோக்கிச் சென்றான். விதுரர் ஏதோ கூவிச்சொல்வதற்காக கைதூக்கிவிட்டார். பின்னர் திரும்பி திருதராஷ்டிரரை நோக்கினார். சஞ்சயனின் கண்களைச் சந்தித்து அங்கிருந்த வினாவைக் கண்டார். விழிகளை விலக்கிக் கொண்டார்.

“எங்கே பீமன்? சஞ்சயா, மூடா, நீ என்ன செய்கிறாய்?” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் தயங்கி விதுரரை நோக்கினான். அதற்குள் கணிகர் திருதராஷ்டிரரின் பின்னால் வந்து நின்று மெல்லியகுரலில் “அவர்கள் குந்திதேவியை நோக்கிச் செல்கிறார்கள் அரசே” என்றார். “யாதவ அரசியை நோக்கியா… ஆசிவாங்கவா?” என்றார் திருதராஷ்டிரர். “சஞ்சயா, என்ன நிகழ்கிறதென்று சொல்” என்று திடமான குரலில் ஆணையிட்டார். சஞ்சயன் மெல்லக் கனைத்தபடி அங்கே கண்டவற்றைச் சொன்னான். “ஆம், அதுவே முறை. அவர்கள் தங்கள் அன்னையை முதலில் வணங்கியாகவேண்டும்… அது அவள் வெற்றி பெறும் தருணம் அல்லவா? அதை அவர்கள் ஒருபோதும் இழக்கமாட்டார்கள்” என்றார் திருதராஷ்டிரர்.

தருமன் பந்தலை நெருங்கியதுமே கூட்டம் அமைதிகொண்டு அவனை நோக்கியது. ஒருவர் மேல் ஒருவர் எம்பி அவன் செய்வதைப்பார்க்க மக்கள் முண்டியடித்தனர். தருமன் வெண்திரையை விலக்கி குந்தியை வணங்கினான். அவள் பாதங்கள் வெளியே தெரிந்தன. கைகள் நடுங்க அவன் அந்தப் பெட்டியை சேவகன் கையில் வைத்து அதன் மூடியைத் திறந்து சௌவீரனின் மணிமுடியை வெளியே எடுத்தான். மெல்லிய பொற்கம்பிகளைக்கொண்டு பின்னி அதில் செங்கழுகின் இறகுகளை சீராகப் பொருத்தி செய்யப்பட்டிருந்த அந்த மணிமுடி எவரும் கண்டிராத ஒரு பறவை போலிருந்தது. அதை அவன் குந்தியின் கால்களில் வைத்தான். நகர்மக்கள் வெற்றிக்குரல் எழுப்பி மலர்களை அள்ளி அவர்கள் மேல் வீசினர்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

தேரிறங்கிய பீமன் ஒருகணம் திரும்பி திருதராஷ்டிரரை நோக்கியபின் குந்தியைச் சென்று வணங்கினான். அர்ஜுனன் திகைத்தவன் போல ரதத்தில் அங்கேயே நின்றிருந்தான். அதற்குள் கைவிரித்தபடி கூவி ஆர்த்து ஓடிவந்த மாலினி அவன் இரு கைகளையும் பற்றி தோள்களைத் தழுவி இழுத்துக்கொண்டு குந்தியின் பந்தலை நோக்கிச் சென்றாள். ஐந்து பாண்டவர்களும் திரைக்குப்பின் சென்றதைக் கண்டபின்னர்தான் விதுரர் திகைப்பிலிருந்து மீண்டார். திரும்பி சஞ்சயனை நோக்கியபின் அவர் குந்தியின் பந்தலை நோக்கி சென்றார்.

திருதராஷ்டிரரின் பந்தலுக்கும் குந்தியின் பந்தலுக்கும் நடுவே உள்ளே வந்துகொண்டிருந்த பாண்டவர்களின் அணிவரிசை சென்றுகொண்டிருந்தது. களிவெறிகொண்டு கூவி ஆர்ப்பரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த படையினர் விதுரர் எவரென அறியவில்லை. அவர் அவர்களை தள்ளிவிட்டு குதிரைகளுக்கு நடுவே புகுந்து மறுபக்கம் சென்றார். அவரை வெவ்வேறு தோள்கள் முட்டிமுட்டிச் சென்றன. குதிரையின் தலை ஒன்று அவரை மெல்ல தள்ள அவர் நிலைதடுமாறினார்.

தருமன் தன் அன்னையின் கரங்களைப்பற்றிக்கொண்டு திரையை விலக்கி வெளியே வந்தான். குந்தி அதை எதிர்பாராமையால் ஒருகணம் திகைத்து உடனே தன் வெண்ணிற மேலாடையை தலைமேல் இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். தருமன் தன் கையிலிருந்த சௌவீர மணிமுடியை குந்தியின் தலையில் சூட்ட அவள் கூச்சத்துடன் ஏதோ கூவியபடி அதை தள்ளிவிடமுயன்றாள். பீமன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். அவள் தலைகுனிந்திருக்க ஆடையின்மேல் மணிமுடி இருந்தது. பீமன் உரக்க நகைத்தபடி அதை இன்னொரு கையால் பற்றிக்கொண்டான். அவர்கள் அவளை தூக்கிச்செல்பவர்கள் போல தேர் நோக்கி கொண்டுசென்றனர்.

விதுரர் திரும்பி திருதராஷ்டிரரை பார்க்கமுயன்றார். அவரை கடந்துசென்றுகொண்டிருந்த கொப்பளிக்கும் படைவரிசையையே கண்டார். அஸ்தினபுரியின் மக்கள் இந்திரவிழவின் உச்சத்தில் ஃபாங்கம் அருந்தி தன்னிலையழிந்தவர்கள் போலிருந்தனர். மலர்மாலைகள் சுழன்றுவந்து பாண்டவர்கள்மேல் விழுந்துகொண்டே இருந்தன. மஞ்சளரிசியின் மழையில் கண்களைப்பாதுகாக்க அவர்கள் முழங்கைகளால் முகம் மறைத்து குனிந்துகொண்டனர். கூட்டத்தின் களிப்பு அவர்களையும் நிலையழியச் செய்தது. ஓசைகளின் தாளத்துக்கு ஏற்ப உடல் நடனமிட தருமன் குந்தியை ரதத்தில் ஏற்றி நிறுத்தினான். அவள் முகத்தை மறைத்த வெண்மேலாடையை பிடித்து இழுத்தான். சினந்து கடிந்து அவன் கைகளைத் தட்டிய குந்தியின் கைகளைப்பிடித்து விலக்கி முகத்திரையை விலக்கினான் பீமன்.

அவள் முகம் தெரிந்ததும் சிலகணங்கள் அப்பகுதி பெருமுரசின் உட்பகுதிபோல கார்வையால் நிறைந்தது. ஓசைகள் இணைந்து உருவான அமைதி. செவிப்பறைகள் விம்மி ரீங்கரித்தன. விதுரர் குந்தியின் முகத்தை நோக்கியபடி மெல்ல பின்னால் நகர்ந்து அலையடிக்கும் கூட்டத்துடன் இணைந்துகொண்டார். அவளுடைய விரிந்த நீள்விழிகளை அப்போதுதான் முதலில் காண்பதாக எண்ணிக்கொண்டார். அதே செவ்வெண்ணிற வட்டமுகம். சூழ்ந்து பொங்கிய உணர்ச்சிப்பெருக்கால் அவளும் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டதை அவர் கண்டார். இருகைகளையும் தூக்கி சௌவீர மணிமுடியை நெற்றிமேல் நன்றாக அணிந்து நிமிர்ந்த தலையுடன் அவள் தேர்த்தட்டின்மீது நின்றாள். மழைக்கால கங்கைபோல கொப்பளித்துச் சுழலும் கூட்டத்தில் தேர்த்தட்டு அலைப்புண்டு எழுந்தமைந்து விலகிச்சென்றது.

விதுரர் நெடுந்தூரம் வரை தேரின் பின்பக்கத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். படைத்தலைவர்களின் கொடிகள் வரத்தொடங்கின. ஒவ்வொரு குலத்தவரும் தங்கள் கொடிகளுடன் நின்று தங்களவரை வரவேற்று கூச்சலிட்டனர். விதுரரை கிருங்க குலத்துப் படைத்தலைவன் அடையாளம் கண்டான். “மறுபுறம்! மறுபுறம்” என்று விதுரர் கூவினார். அவன் உதடுகள் மட்டும் அசைய “எங்கே?” என்று கூவினான். அவர் கூவியபடி கைகளை அசைத்தார். அவன் அவர் அருகே வந்ததும் தேர்த்தட்டில் நின்றபடி ஒருகையால் அவரைப்பற்றித் தூக்கி குதிரைகள்மேல் கொண்டுசென்று இன்னொரு தேர்வீரரிடம் கொடுத்தான். அவர் பறந்து கடப்பவர் போல அந்தப் படைப்பெருக்கைக் கடந்து மறுபக்கம் வந்தார்.

திருதராஷ்டிரர் கடந்துசெல்லும் படைகளை கவனித்தபடி நின்றிருந்தார். அவரது தலை ஒருபக்கமாக சரிந்து மெல்ல அசைந்துகொண்டிருந்தது. சஞ்சயன் விதுரர் பெயரைச் சொன்னதும் திருதராஷ்டிரர் திரும்பி “விதுரா, பீமனை அழைத்துவந்துவிட்டாயா?” என்றார். “அரசே, தாங்கள் இங்கே வந்திருக்கும் செய்தி அவர்களுக்குச் சென்றிருக்காதென எண்ணுகிறேன்” என்றார் விதுரர். “சௌனகரே!” என்று திருதராஷ்டிரர் திரும்ப “முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது அரசே” என்றார் சௌனகர். “படைப்பெருக்கின் மறுபக்கம் அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களால் அதைக்கடந்து இப்பக்கம் நோக்கமுடியவில்லை” என்றார் விதுரர்.

“எப்படியும் சொல்லலாம். நதிப்பெருக்கால் கரைக்கமுடியாத பாறையைப்போல எஞ்சும் உண்மை ஒன்றே” என்றார் கணிகர். “இது பாண்டவர்களின் நாடு. யாதவர்களின் அரசு. கௌரவர்கள் அதன் இரண்டாம்நிலை குடிகள் மட்டுமே.” விதுரர் கடும்சினத்தால் உடல்நடுங்க கணிகரை நோக்கி தன்னையறியாது ஒரு காலடி எடுத்துவைத்தார். சிறிய பெருச்சாளிக் கண்கள் கொண்ட இரண்டாக ஒடிந்து விட்டதுபோல கூன் கொண்ட கரிய மனிதர். காய்ந்தபுல் போல மெல்லிய மயிர்ப்பூச்சு கொண்ட உருளைமுகத்தில் பெரிய வெண்பற்கள் தெரிய புன்னகைத்து “உலகியல் கணக்குகள்மீதுதான் எப்போதும் சூரியன் விடிகிறது. காவியங்கள்மீது அல்ல” என்றார்.

திருதராஷ்டிரர் மெல்லிய கனத்தகுரலில் “என் ரதத்தை வரச்சொல்” என்றார். சகுனியின் கண்கள் ஒருகணம் விதுரரை வந்து தொட்டுச்சென்றன. சகுனி திருதராஷ்டிரரை அணுகி மெல்லியகுரலில் ஏதோ பேசியபடி முன்னால் செல்ல விதுரர் கால்களை பெயர்க்கமுடியாதவர் போல நின்றார். பின்னர் விழிகளைத் திருப்பியபோது சௌனகரின் வருத்தம் தோய்ந்த புன்னகையைக் கண்டார்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு ஒரு வாசகர்கடிதம்
அடுத்த கட்டுரைவாசகி