கடற்கேரளம் – 1

நாகர்கோயில் இருந்து மாலைதான் கிளம்ப முடிந்தது. நொச்சு வேலைகள். நாய்களுக்கு மாட்டிறைச்சி வாங்கச் செல்வது முதல் எழுதவிட்டுப்போன கட்டுரையை முடிப்பது வரை. திருவனந்தபுரம் பேருந்தில் ஏறப்போன நேரம் செருப்பு அறுந்துவிட்டது. ‘உறுப்பறுந்து போனாலே உளம்கலங்கார் செருப்பறுந்து போனாலோ சிந்திப்பார்?’ பக்கத்திலேயே சவளையன் என்ற செருப்புத்தொழிலாளி தைத்துக் கொடுத்தார். இருள்மாலை எட்டு மணிக்கு திருவனந்தபுரம் வந்தேன். அங்கே விடுதியில் தங்கினேன்.

அதிகாலையில் கிளம்பினோம். நேராக பூவாறு. அதுதான் கேரளத்தின் கடற்கரையின் தெற்கு மூலை என்றார்கள். அங்கே ஒரு சிறிய கல்யாணம் நடந்துகொண்டிருந்தது. ஜனங்கள் பல்வேறு தென்னை மரங்களுக்கு அடியிலே கூடி நின்று கலைசலாக பேசிக்கொண்டிருக்க அருகே ஒரு பெரிய அலுமினியசட்டியில் பிரியாணி வெந்துகொண்டிருந்தது. அந்தக் கடற்கரை முழுக்க சுனாமிக்குப் பின்னர் மாதா அமிர்ந்தானந்த மயி கட்டிக்கொடுத்த வீடுகள். உறுதியான சிமிட்டி வீடுகள். ஆனால் அவற்றை அதற்குள் அழுக்கும் பிசுக்கும் குப்பையும் குவித்து கேவலமான சேரியாக ஆக்கிவிட்டிருந்தார்கள். கடலில் குப்பைகளை போட்டு கடல் அவற்றை திருப்பிக் கொண்டு வந்து குவித்து கரை பெரியதோர் குப்பைக்குவியலாக இருந்தது. டன்கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள். ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் சாக்கடைக் குளம்.

பொதுவாக சுகாதாரமின்மைக்கு வறுமையைக் காரணமாகச் சொல்வது இந்திய இடதுசாரி மரபு. ஆனால் இதைவிட வறுமை மிக்க ஆதிவாசிக் கிராமங்கள் நம்பமுடியாத அளவுக்குச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே ஒரு மலைக்கிராமம் சென்றிருந்தபோது ஆதிவாசிகள் காலையில் எழுந்ததும் மொத்த சூழலையும் கூட்டிப்பெருக்கும் கூட்டான உழைப்பைக் கண்டேன். இங்குள்ள பிரச்சினை வறுமை அல்ல. தொலைக்காட்சி இல்லாத ஒரு குடில்கூட தெரியவில்லை. மனப்பயிற்சி இல்லை என்பதே சிக்கல்.

கடலோரமாக வடக்கே நகர ஆரம்பித்தோம். கேரளக்கடற்கரை முழுக்க முஸ்லீம்களும் தீவரர் எனபடும் மீனவர்களும் கலந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கிடையே நல்லுறவு இல்லை. முஸ்லீம் பகுதிகள் முழுக்க அப்துல் நாசர் மதானியின் பி.டி.பி கட்சியின் போஸ்டர்களைக் கண்டேன். மதானி மீண்டும் இன்று கேரள சமூகத்தின் மதநல்லிணக்கத்திற்கும் ,சுமுகமான சகவாழ்வுக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிட்டிருக்கிறார். அவரை என்னசெய்வதென தெரியாமல் எல்லா அரசியல் கட்சிகளும் திணறுகின்றன.

எண்பதுகளில் இஸ்லாமிய தீவிரவாத வஹாபியத்தின் முகமாக கேரளத்தில் எழுந்து வந்த மதானி முந்நூறு வருடக்காலமாக கேரளம் உருவாக்கி வைத்திருந்த மத ஒற்றுமையை தனி ஒரு மனிதனாக நின்று உடைத்தெறிந்தார். அவரது கசப்பு உமிழும் பேச்சுகளை நானே பலமுறை கேட்டு திகிலும் துயரமும் அடைந்திருக்கிறேன். அவர் ஒரு தனி மனிதன் அல்ல. அவருக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வம் எங்கிருந்தோ வந்துகொண்டிருக்கிறது.

மதானியின் வளர்ச்சியில் இடதுசாரிகளுக்கு பெரும் பங்குண்டு.மதானி கேரளத்தின் முஸ்லீம் லீக் கட்சியை குறிவைத்து தாக்கிவந்தார். திம்மிகளுடனும் கா·பிர்களுடனும் சமரசம் செய்துகொள்ளும் பாவிகள் என்று அவர் முஸ்லீம் லீக் கட்சியைத் தாக்கினார். நெடுங்காலமாக பதவியில் இருந்து வரும் லீக் பொதுவாக பணக்கார வியாபாரிகளின் கட்சி. அந்த அதிருப்தி மதானிக்குச் சாதகமாகியது. அதை வளர்க்க கம்யூனிஸ்டுக் கட்சி முயன்றது. காரணம் கேரளத்தின் காங்கிரஸ் கட்சியின் முதல்பெரும் கூட்டாளி லீக்தான்.

கோவை குண்டு வெடிப்பில் நேரடியான தொடர்பும் முதல் பங்கேற்பும் இருந்தமையால் மதானி கைது செய்யப்பட்டார். ஆனால்மதானி உருவாக்கிய பி.டி.பி தடைசெய்யப்படவில்லை. அது கேரளத்தின் ஆகப்பெரிய வன்முறைக் கட்சியாக நீடித்தது. அதனால் மதானி மீதான குற்றச்சாட்டுகளை முறையாக நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. எவருமே சாட்சி சொல்ல வரவில்லை. வந்தவர்கள் பின்வாங்கினார்கள். மதானியைக் கண்டு காவலர்கள் நடுங்கினார்கள். அவரைக் காணவரும் பி டி பி கட்சித்தலைவியும் அவரது மனைவியுமான கையில் இருந்து செல்போனைப் பிடுங்கச் சென்று ஒரு சப் இன்ஸ்பெக்டர் அடிவாங்கினார். எந்த நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லை.

ஒரு கட்டத்தில் மதானி நிரபராதி என்று இடதுசாரிகள் ‘முடிவு’ செய்து போராட ஆரம்பித்தன. மதானியின் கட்சியுடன் இடதுசாரிகள் கூட்டணி வைத்துக்கொண்டு பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட்டார்கள். பி டி பி பல இடங்களில் தமிழகத்துப் பேருந்துகளை எரித்தது. பிரச்சினை கேரளத்துக்கும் தமிழகத்துமானதான திரிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் காங்கிரஸும் மதானியை விடுவிக்குமாறு தமிழக அரசிடம் கோரியது. மிக தெளிவான ஆதாரங்கள் இருந்தமையால் தமிழக அரசுக்கு அவரை விடுதலை செய்ய வழி இருக்கவில்லை. ஆனால் அவருக்கான எல்லா வகையான சுகபோக வசதிகளையும் சிறையில் செய்து கொடுத்தது தமிழக அரசு. மதானிக்கு சேவை செய்ய அவரது கட்சியைச் சேர்ந்த கைதிகள் நியமிக்கப்பட்டார்கள்.

ஒருகட்டத்தில் மதானியின் பணம் ஊடகங்களையும் அறிவுஜீவிகளையும் நோக்கிப் பெருகியது. அ.மார்க்ஸ் போன்ற இஸ்லாமியக்கூலிப்படையாளி தலைமையில் தமிழ் அறிவுஜீவி வர்கம் அவருக்கு நீதி கிடைப்பதற்காக கிளர்ந்தெழுந்தது. இத்தனை ‘செல்வாக்கு’ இல்லாத எவருக்காகவும் தமிழக அறிவுஜீவிகள் கிளர்ந்தெழுந்த வரலாறு கிடையாதென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மதானி நிரபராதி என்று முதலில் சொல்லப்பட்டது. பின்பு அவர் மதச்சார்பின்மையின் தூதர் என்றார்கள்.

புறநிர்ப்பந்தங்கள் வழக்குகளை பாதிப்பது மிகச்சாதாரணம் இந்த நாட்டில். அதிலும் வழக்காட வேண்டிய அரசே குற்றவாளிக்காக பரிந்து பேசும் நிலையில் இருந்தால் சொல்ல வேண்டியதில்லை.  மதானி விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை நம்முடைய வார இதழ்கள் கொண்டாடின– நெல்சன் மண்டேலா சிறை மீண்ட நிகழ்ச்சிக்கு நிகராக! அவரால் கொல்லப்பட்ட அப்பாவி கோவை மக்கள் அடையாளமில்லாத பிணக்குவியல்களாக மறக்கப்பட்டார்கள். அவர் நீதி, நேர்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கான போராளி என்று ஆனந்தவிகடன் இதழ் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது.

கேரளம் திரும்பிய மதானியை நான்கு இடதுசாரி அமைச்சரவை உறுப்பினர்கள் ரயில்நிலையம் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்கள். காங்கிரஸ்கூட அவரை வாழ்த்தி வரவேற்றது. முஸ்லீம் லீகுக்குக் கூட வேறு வழி இருக்கவில்லை. மதானி இடதுசாரிகளுடன் கூட்டு வைத்து தேர்தலில் போட்டியிட்டார்.

ஆனால் மெல்ல மெல்ல பிடிபி அதன் பழைய முகத்தை மீட்டுக்கொண்டது. மதக்காழ்ப்பும் வன்முறையும் அதன் முகமாயின. இடதுசாரிகள் நெளிய ஆரம்பித்தார்கள். அதிலிருந்த கொள்கைவாதிகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள். கடைசியாக பி.டிபியின் உறுப்பினர்கள் காஷ்மீரில் எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்கு பயிற்சிக்குப் போகும்போது கைதானார்கள். வங்கதேச தீவிரவாதிகள் சிலர் பிடிபி மறைவிடங்களில் கைதானார்கள். வேறு வழியில்லாமல் இடதுசாரிகள் உறவை முறித்துக்கொண்டார்கள்.

இன்று காங்கிரசும் இடதுசாரிகளும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றன, பிடிபியை யார் வளர்த்தது என்று. தங்களுக்கு பங்கில்லை என்று நழுவ முயல்கின்றன. இங்கே மதானியை தேசப்பிதா அளவுக்குக் கொண்டாடிய தமிழ் அறிவுஜீவிகளும் இதழ்களும் மௌனமாக இருக்கிறார்கள். பிடிபி தடைசெய்யப்படலாம் என்பதனால் மதானி பாப்புலர் ·பிராண்ட் ஆ·ப் இண்டியா என்ற ‘மதச்சார்பற்ற’ கட்சியை உருவாக்கி பதிவுசெய்திருக்கிறார். தென் தமிழகத்தில் இக்கட்சி கோடிகளைக் கொட்டி விளம்பரங்கள் செய்து வருகிறது

எங்கள் டிரைவர் ஒரு முஸ்லீம். நான் அவரிடம் ‘மதானி கடலோரங்களில் இத்தனை பெரிய சக்தியா?’ என்றேன். ஆமாம் என்றார். கடலோரங்களில் மீனவர்களிடமிருந்து மீன் வாங்கி விற்பவர்கள் முஸ்லீம்கள். கணிசமானவர்கள் சில்லறை சட்டவிரோதச் செயல்களும் செய்கிறார்கள். மீனவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பூசல்கள் உள்ளன. போலீசுக்கும் முஸ்லீம்களுக்கும் பூசல்கள் உண்டு. இப்படி பூசலிடுபவர்களுக்கு பிடிபி பெரிய பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு ஊரில் இருக்கும் எல்லா இஸ்லாமிய கேடிகளும் அந்தக் கட்சியில் சேர்ந்து விடுகிறார்கள். அவர்களை அஞ்சி சாதாரண உழைக்கும் முஸ்லீம் சும்மா இருக்க நேர்கிறது. பெரும் பணம் கொட்டுகிறது. சுவரொட்டிகள் சுவரெழுத்துக்கள் மாநாடுகள் எல்லாவற்றுக்கும் கோடிகள் செலவிடப்படுகின்றன. யாருமே எதுவுமே செய்ய முடியாத நிலை.

”நீங்கள் பிடிபியா?” என்றேன். அவர் புண்பட்டுவிட்டார். ”என்ன அப்படிகேட்டுவிட்டீர்கள்? நான் உழைத்து வாழ்பவன் சார். ஒரு தப்புதண்டாவுக்கு போகிறவன் இல்லை. எங்களூரில் ஒரு பத்துபேர் தவிர மிச்சபேரெல்லாம் என்னை மாதிரித்தான். எங்களுக்கு இந்த மதவெறி அரசிய்லில் சம்பந்தம் இல்லை. இதை நாங்கள் கொண்டுவரவில்லை. இது ஆர்.எஸ்.எஸ் எங்கள் தலைமேல் உடகார வைத்த சுமை..” நான் அதிச்சியுடன் ”ஆர்.எஸ்.எஸ்ஸா?” என்றேன். ”ஆமாம் சார், மதானியும் ஆட்களும் பேசும் பேச்செல்லாம் ஆர்.எஸ்.எஸ் சொல்லிக்கொடுத்து பேசுவது. அப்போதுதானே முஸ்லீம்களை எல்லாரும் வெறுப்பார்கள். கா·பிரின் ரத்தத்தில் கை நனைத்து சாப்பிட்டால்தான் அல்லாவுக்கு பிரியமான சோறு என்று பிடிபிக்காரன் மேடையில் பேசுகிறான். அதைக்கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் நம்மைப்பற்றி?”

பூவாறுக்கு அருகே ஒரு பெரிய மேடு. அதில் ஒரு சிவன்கோயில். அந்த இடத்திற்கு சொவ்வர என்று பெயர். சுத்த தமிழில் செவ்வரை. சிவந்த மலை,. செம்மண்ணாலான பெரிய குன்றுக்கு மேல் இருக்கும் அந்தக் கோயில் முன் அக்கேஷியாக் காட்டுக்கு கீழே நிலம் செங்குத்தாக நூறடி ஆழத்துக்கு இறங்கியது. கீழே தென்னந்தோப்புகள் அடர்ந்து உள்ளே ஒரு ஊர்வலம் செல்வதுபோல இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் கவனித்த பின்னர்தான் தெரிந்தது– அந்த தென்னை அடர்வுக்குள் நூற்றுக்கணக்கான வீடுகளுடன் மீனவக்கிராமம் இருந்தது என்று

மேலே கழுகுகள் வட்டமிட்ட வானம். அப்பால் கடலில் நீலத்துக்கு மேலே கடற்காக்கைகள் பறந்தன. தென்னைத்தோப்புக்குள் காக்கைகள் கத்திக்கொண்டே இருந்தன. கடற்கரையை அங்கே நின்றபோது ஒரு பெரிய வளைவாகப் பார்க்க முடிந்தது சுனாமிக்குப் பின்னால் கடற்கரைகளில் பெருகியிருக்கும் ·பைபர் படகுகள் கரை முழுக்க நின்றன. கடலில் இருந்து தொடர்ந்து கரைக்கு வந்துகொண்டும் இருந்தன.

கடலோரமாகவே கோவளம் சென்றோம். எழுபதுகளில் கோவளம் ஹிப்பி இயக்கத்தவரால் கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருட்களும் கட்டற்ற காமமுமாக அவர்கள் அந்த கைவிடப்பட்ட ஆழமில்லாத கடற்கரையிலும் கரையோரத்துப் பாறைவெளியிலும் குடில்கள் கட்டி தங்கினார்கள். மெல்லமெல்ல கோவளம் ஒரு சுற்றுலாத்தலமாக அறியப்படலாயிற்று. இன்று அந்தக் கடற்கரையை நம்பி ஒருநாளைக்கு ஐம்பதுகோடி ரூபாய் புழங்கும் சுற்றுலாத்தொழில் நிகழ்கிறது. மாபெரும் விடுதிகள். பலமாடிக் கட்டிடங்கள்.

ஆனாலும் கோவளம் அதன் அழகை இழக்கவில்லை. தூயவெண்மணல் விரிந்த வளைவான குடாக் கடற்கரைகள். கடலுக்குள் நீட்டியிருக்கும் பாறைமேடுகள். கரையெங்கும் பாறைகள் மண்டிய தென்னைத்தோப்புகள். நாங்கள் செல்லும்போது முன்மதிய வெயில். ஏராளமான வெள்ளையர், பெரும்பாலும் பாட்டிதாத்தாக்கள், குடைகளுக்குக் கீழே சாய்வுப்படுக்கையில் படுத்துக்கொண்டு தாளட்டை நாவல்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். சில அழகிகள் வெயிலில் காயப்போடப்பட்டிருந்தார்கள். நான்கு பேர் கடலுக்குள் சிறிய பாரச்சூட்டில் பறந்து வளையமிட கடலுக்குள் ஏராளமான வெள்ளைய தலைகள் மிதந்து தென்பட்டன.

கூட்டம் இல்லாத நாட்களில் கோவளம் ஒரு நல்ல சுற்றுலாத்தலம்தான். அங்கே இருக்குமளவுக்கு அழகான கடலை குறைவாகவே பார்க்க முடியும். சுத்தமான கடலே இந்தியாவில் அருகி வருகிறது. கோவளத்துடன் ஒப்பிட்டால் கன்யாகுமரி ஒரு குப்பைத்தொட்டி மட்டுமே. சுற்றுலா என்றால் அசிங்கமான கான்கிரீட் கட்டுமானங்களை அமைப்பது என்று நம் அரசு நினைத்திருக்கிறது. மக்கள் நாடுவது சுத்தத்தை மட்டுமே என அவர்கள் அறிவதில்லை.

கோவளம் வழியாக சங்குமுகம் கடற்கரைக்குச் சென்றோம். சங்குமுகம் திருவனந்தபுரத்திற்குரிய கடற்கரை. மகாராஜாவின் பலிமண்டபம் அங்குதான் இருக்கிறது. இப்போது கானாயி குஞ்சுராமன் மலம்புழா அணையில் உருவாக்கிய நிர்வாண யட்சியின் சிலையின் கான்கிரீட் நகல் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. சங்குமுகம் கடற்கரையும் சுத்தமாகவே இருந்தது. அந்த கொதிக்கும் வெயிலில் ஏராளமான வெள்ளையர்கள் வெண்மணலில் படுத்திருந்தார்கள். பல வெள்ளையர் நன்றாகவே சிவந்து மாநிறத்துக்கும் கீழே வந்திருந்தார்கள்.

கேரளக் கடற்கரையின் சிறப்புகளில் ஒன்று அரபிக்கடலுக்கு நல்ல நீலநிறம் உண்டு என்பதே. வங்காளவிரிகுடாவை விட இந்த நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கலாம். கிழக்குக் கடற்கரையில் பல இடங்களில் கடற்கரை மணல் கிட்டத்தட்ட சேறு போலவே இருக்கும். சுற்றுலா நோக்குடன் மீனவர் குப்பங்களுக்கு தள்ளி சுத்தமாகப் பேணப்படும் கடற்கரைகள் நமக்கு இல்லை. ஆனால் அரபிக்கடற்கரையில் நதிக்கழிமுகங்கள் தவிர பிற இடங்களில் கரைமணல் சீனி போல துல்லியமான வெண்மையுடன் இருக்கிறது. இந்தியக் கடற்கரைகளை சிறந்த சுற்றுலா தலங்களாக ஆக்கலாமென கண்டுகொண்டது கோவா. அதன்பின் இப்போது கேரளம். தமிழகம் இன்னும் இந்த எண்ணத்தை அடையவே இல்லை.

தமிழகத்தில் பொதுவாக வெள்ளையச் சுற்றுலாப்பயணிகள் அவமதிக்கபப்டுவதாக புகார்கள் உண்டு. முட்டம் கன்யாகுமரி போன்ற ஊர்களில் பல நிகழ்ச்சிகள் பதிவாகியிருக்கின்றன . கேரளத்திலும் எண்பதுகளில் அப்படி ஒரு சூழல் இருந்தது. காவல்துறையின் கடும் நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு வழியாகவே அது இல்லாமலாயிற்று. கேரளச் சுற்றுலாக் கடற்கரைகளில் இன்று குற்றச்செயல் அனேகமாக இல்லை.

அதனால்தான் போலும், எந்நேரத்திலும் கடற்கரைகள் முழுக்க காதலர்கள் நிறைந்திருந்தார்கள். தென்னை மரத்தடிகளில் அமர்ந்து மெல்ல முத்தமிடும் இணைகள். சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இணைகள். ஒன்று கவனித்தேன், பையன்கள்தான் பதறுகிறார்கள். பெண்கள் துணிச்சலாக உற்சாகமாக இருக்கிரார்கள்!

[மேலும்]

முந்தைய கட்டுரைஉலோகம் – 7
அடுத்த கட்டுரைஉலோகம் – 8