‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 1

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள்.

துருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது. அரசாட்சியை துருபதனின் இளையவர் சத்யஜித்தும் மைந்தர் சித்ரகேதுவும் இணைந்து நடத்திவந்தனர். ஆனால் “அரசரிடமும் ஒருவார்த்தை சொல்லிவிடுங்கள்” என்று சத்யஜித் ஒவ்வொருமுறையும் சொல்வார். “அவர் கேட்பதே இல்லை அரசே” என்று அமைச்சர் கருணர் சொன்னபோது “ஆம், அதை நானும் அறிவேன். மூத்தவரின் உள்ளம் இப்போது பாஞ்சாலத்திலேயே இல்லை. ஆனாலும் அவரே அரசர். அவருடையது மணிமுடியும் செங்கோலும். அவர் வாயால் ஆம் என்று ஒரு சொல் சொல்லப்படாத எதுவும் இங்கே சட்டமாக ஆக முடியாது” என்று சத்யஜித் சொன்னார்.

அறைக்கதவு திறந்து துருபதன் வெளியே வந்ததுமே கருணர் சொல்லத்தொடங்கினார். “பாஞ்சாலபதியை வணங்குகிறேன். இன்று சில முதன்மைச்செய்திகளை தங்கள் செவிகளுக்கு கொண்டுவந்திருக்கிறேன்.” துருபதன் நடந்தபடியே “உம்” என்றார். குளித்து சரியாக தலைதுவட்டாததனால் அவரது கூந்தலிழைகளில் இருந்து நீர் சொட்டி மேலாடை நனைந்துகொண்டிருந்தது. நரையோடிய தாடியிலிருந்தும் நீர் சொட்டியது. “வணிகர்களை காம்பில்யத்துக்கு கவர்ந்திழுக்கும்படி சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிறிய படகுகளின் சுங்கத்தை பாதியாகக் குறைத்திருக்கிறோம். கப்பல்காரர்களின் கிடங்குகளுக்கு குடிப்பணம் தேவையில்லை என்றும் அறிவித்திருக்கிறோம்.”

துருபதன் விழிகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் கண்டு கருணர் குரலை மாற்றி “முன்பு படகோட்டிகள் தனியாகக் கொண்டுவந்து விற்கும் பொருட்களுக்கும் சிறு சுங்கம் வாங்கிவந்தோம். படகுகளில் இருந்து அவர்கள் திருடி விற்பதை தடுப்பதற்காக. அதையும் தேவையில்லை என்று இளையவர் சொல்லிவிட்டார்” என்றார். மேலும் குரலைத் தாழ்த்தி “சற்று திருட அவர்களை விட்டுவிட்டால் வணிகர்களிடமும் வேளாளர்களிடமும் வேடர்களிடமும் பேசி படகுகளை இங்கேயே கொண்டுவந்துவிடுவார்கள். சத்ராவதியுடன் போட்டியிட்டு வெல்ல வேறு வழியே இல்லை அரசே” என்றார்.

அதற்கும் துருபதன் முகத்தில் எந்த அசைவும் இல்லையெனக்கண்டு “உத்தரபாஞ்சாலத்தில் அஸ்வத்தாமனின் அரசு இன்று நம்மால் அணுகக்கூட முடியாத இடத்தை அடைந்துவிட்டது அரசே. அவர்களின் சுங்கப்பணம் நாம் அடைவதைவிட பன்னிருமடங்கு அதிகம் என்கின்றனர் ஒற்றர்கள்” என்றார். துருபதன் அதற்கு தலையைக்கூட அசைக்கவில்லை. கருணர் “படைபலம் நம்மை விட இருமடங்கு” என்றார். துருபதன் அதைக்கேட்டதாகத் தெரியவில்லை. கருணர் சோர்வுடன் தலையசைத்துக்கொண்டு எஞ்சிய அரசமுடிவுகளை ஓரிருவரிகளில் சொல்லிக்கொண்டே சென்றார். துருபதன் தலையசைத்துக்கொண்டு நடந்தார்.

ஒற்றர்தலைவர் சிம்மர் வணங்கி நிற்க கருணர் அவரிடம் கண்காட்டினார். “அரசே, உளவுச்செய்திகள் வந்துள்ளன. மையமானவற்றை மட்டும் சொல்கிறேன். மகத மன்னர் ஜராசந்தர் ஒரு பெரும் சபையொன்றை கூட்டவிருக்கிறார். ஆசுரநாட்டின் நூற்றெட்டு பழங்குடிகளும் அவருக்கு பின்துணை அளிக்கிறார்கள் எனறு சொல்லப்படுகிறது. அந்த சபைக்குப்பின் மகதத்தின் ஆதிக்கம் ஆசுரம் முழுக்க பரவிவிடும். தெற்கே விந்தியமலைவரை மகதக்கொடி பறக்கும்” என்றார் சிம்மர்.

துருபதன் ஒன்றும் சொல்லாமல் நடக்க கருணரின் கண்களை ஒருகணம் சந்தித்துவிட்டு “அந்தச்சபை கூட்டப்பட்டபின்னர் மேலும் ஆறுமாதம் கழித்து மகதத்தின் சிற்றரசுகளும் சமந்தமன்னர்களும் இணையும் ஒரு சபைகூட்டப்படுகிறது. அதற்கு எப்பக்கமும் சேராமல் தனித்து நிற்கும் பல சிற்றரசுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமாம். அவர்கள் அந்த அழைப்பை மறுக்கமுடியாது. ஆசுரநாட்டு குடிகளின் பின்துணை இருக்கையில் ஜராசந்தர் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய படையை வைத்திருப்பார்” என்றார்.

துருபதனை நோக்கிவிட்டு “அதன்பின்னர் அவரிடம் ஒவ்வொரு சிறுநாடாக சென்று சேர்ந்துகொண்டிருக்கும். கலிங்கத்தையும் வங்கத்தையும் வெல்வதே அவரது உடனடி எண்ணமாக இருக்கும். ஏனென்றால் மகதம் இன்று நாடுவது துறைமுகங்களையே. அவர்களின் வணிகம் பெரிதாக வளர்ந்துள்ளது. அவர்களின் செல்வத்தில் பெரும்பகுதி தாம்ரலிப்திவரை செல்வதற்குள் சுங்கமாகவே பிறரிடம் சென்றுவிடுகிறது. தாம்ரலிப்தியை கைபற்றிக்கொண்டால் மகதம் ஓரிருவருடங்களில் பெரும் வல்லமையாக வளர்ந்துவிடும். அதன்பின்னரே அது அஸ்தினபுரியை எதிர்க்கமுடியும்…”

துருபதன் நின்று திரும்பி நோக்கி “அஸ்தினபுரியின் இப்போதைய படைத்தலைவர் யார்?” என்றார். கருணர் ஊக்கம் கொண்டு முன்னகர்ந்து “அரசே, இப்போதும் முறைமைகளின்படி நான்குவகைப் படைகளும் பீஷ்மரின் தலைமையில்தான் உள்ளன. ஆனால் அவர் இப்போது அஸ்தினபுரியில் இல்லை. வழக்கம்போல காடேகிவிட்டார். மாளவத்தில் இருந்து வேசரநாட்டுக்கு அவர் சென்றதை ஒற்றர்கள் சொன்னார்கள். வேசரத்திலோ தெற்கிலோ அவர் இருக்கக்கூடும். தண்டகாரண்யக் காட்டில் அவர் தவ வாழ்க்கை வாழ்வதாக எண்ணுகிறோம்” என்றார்.

துருபதன் கூரிய நோக்குடன் தலையை அசைத்தார். அவர் உள்ளம் முழுக்க கண்களில் குவிந்து நின்றது. “அஸ்தினபுரி முள்ளம்பன்றி பாறையாகத் தெரிவதுபோல மாயம் காட்டுகிறது. அங்கே ஒன்றுமே நிகழவில்லை. காந்தாரத்துக்குச் செல்வதாக கிளம்பிச்சென்ற இளவரசர் சகுனி ஒன்றரை வருடங்கள் கழித்து திரும்பி வந்து வழக்கம்போல தன் அரண்மனையில் பகடை ஆடிக்கொண்டிருக்கிறார். விதுரர் திருதராஷ்டிரரின் பெயரால் நாடாள்கிறார்” என்றார் கருணர்.

துருபதனுக்கு செய்திகள் நினைவிருக்கிறதா என்ற ஐயம் எழவே “துரியோதனன் சூரசேன நாட்டில் மதுவனத்தில் பலராமரிடம் கதாயுதப்பயிற்சி எடுக்கிறார். அங்கே இடையர்களுடன் கன்றுமேய்த்து குருவுக்கு பாதப்பணி செய்து வாழ்கிறார் என்று சொன்னார்கள். கர்ணன் பரசுராமரைத் தேடி வேசரநாட்டுக்கோ தெற்கேயோ சென்றிருப்பதாக செய்தி” என்று தொடர்ந்து சொன்னார்.

“ஆம், அச்செய்திகளை நான் அறிவேன்” என்றார் துருபதன். “பாண்டவர்கள் ஐவகை நிலங்களைக் காண அனுப்பப்பட்டனரே, அவர்கள் மீண்டு வந்துவிட்டார்களா?” என்றார். “ஆம், அரசே. ஏழுவருட கானேகல் அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. அவர்கள் சென்ற வாரம் மீண்டும் அஸ்தினபுரிக்கே வந்துவிட்டிருக்கிறார்கள்.” அந்த இடத்தை பற்றிக்கொண்டு சிம்மர் உள்ளே நுழைந்தார். “மகதம் சில சிறிய படையெடுப்புகளை செய்யலாமென்று சொல்லப்படுகிறது. மச்சநாடும் மாளவமும் இப்போது அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றைத் தாக்கி கப்பம் கொள்ள ஜராசந்தர் முயலலாம். அங்கநாட்டின் மீதுகூட படைகொண்டு செல்லலாம். அவரது நோக்கம் சிறிய அரசர்களை அச்சுறுத்துவதே.”

“ஆம், அணிதிரட்ட அச்சமே மிகச்சிறந்த வழி” என்றார் துருபதன். “அதைத் தடுக்க பாண்டவர்களை விதுரர் அனுப்பிவைப்பார் என்று அஸ்தினபுரியில் பேச்சிருக்கிறது. இளையபாண்டவன் வில்வித்தையில் முழுமை அடைந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இதுவரை ஒரு பெரிய படையெடுப்பைச் செய்து அஸ்தினபுரிக்கு அவர் புகழ்சேர்க்கவில்லை. மச்சர்களையோ மாளவத்தையோ வென்று அவர் பெரும் செல்வத்துடன் அஸ்தினபுரிக்கு வந்தார் என்றால் அவர்கள் மேல் இன்றிருக்கும் குலக்குறை இல்லாமலாகும் என்று விதுரர் எண்ணுகிறார்” என்றார் சிம்மர்.

“குலக்குறை வெற்றிகளால் அகலாது சிம்மரே” என்றார் துருபதன். “குலக்குறையை நீக்கவேண்டியவர்கள் முதுவைதிகர் குலங்கள். அவர்கள் இதில் கூரிய கணக்குகள் கொண்டவர்கள். ராஜசூயமோ அதற்கிணையான ஒரு பெருவேள்வியோ செய்து அத்தனை வைதிக குருகுலங்களுக்கும் அரசுக்கருவூலத்தை திறந்துவிட்டாலொழிய அவர்கள் கனிய மாட்டார்கள். அஸ்தினபுரியின் கருவூலத்தில் இன்று நிறைந்திருப்பது காந்தாரத்தின் செல்வம். அதை எடுத்து ராஜசூயம் செய்ய முடியாது. ஆகவே பாண்டவர்கள் அவர்களே படைகொண்டுசென்று நிதிகொண்டு வந்தாகவேண்டும்.”

கருணர் “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன் அரசே” என்று உள்ளே புகுந்தார். “இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் நடுவே பாண்டவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் அல்ல. அவர்களின் மனக்குறைகள் தூதர்கள் வழியாக அஸ்தினபுரிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. மாளவன் மகதத்துக்கு கப்பம் கட்டியதுகூட அந்த மனக்கசப்பால்தான் என்கிறார்கள். ஆகவே பாண்டவர்கள் மாளவத்தை தாக்கக்கூடும். வரும் மாதங்களில் ஒரு பெரிய படையெடுப்பு நிகழலாம்.”

துருபதன் “அப்படி எளிமையாக நாம் உய்த்துணரும்படியா விதுரரின் எண்ணங்கள் ஓடும்?” என்றார். “இல்லை. மாளவன் அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தியதுமே காத்திருக்கத் தொடங்கியிருப்பான். அவன் கோட்டைகளும் காவல்சாவடிகளும் படைக்கலங்கள் ஏந்தி நின்றிருக்கும் இந்நேரம்” என்றார். சிம்மர் “ஆம் அரசே, தண்டகாரண்யத்தின் மலைப்பழங்குடிகளைக்கூட மாளவம் படையில் சேர்த்துக்கொள்கிறது” என்றார். “அதோடு தனக்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்ட ஒரு அரசை பாண்டவர்கள் தாக்கும்போது மகதம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கு கப்பம் கட்டும் பிற சிற்றரசர்கள் அஞ்சுவார்கள். மகதம் களத்தில் இறங்கினால் அது நேரடியான பெரும்போராக ஆகும். அதை இன்றைய நிலையில் அஸ்தினபுரி விரும்பாது.”

“அப்படியென்றால்…” என்று கருணர் பேசத்தொடங்க “பாண்டவர்கள் சௌவீரநாட்டை தாக்குவார்கள் என்று நினைக்கிறேன்” என்றார் துருபதன். “அது அனைத்துவகையிலும் நல்லது. சௌவீரன் தனியரசன். நிதிநிறைந்த கருவூலமும் கொண்டவன். அவன் கருவூலம் பாண்டவர்களுக்குத் தேவை. அத்துடன் நடுநிலையில் தயங்கிக்கொண்டிருக்கும் பிற சிற்றரசர்களுக்கும் அது பெரிய எச்சரிக்கையாக அமையும்.” கருணர் பெருமூச்சு விட்டு “ஆம், அவ்வாறு நடக்கலாம்” என்றார். “நடக்கட்டும், பார்ப்போம்” என்றார் துருபதன்.

“சகுனி என்னசெய்கிறார் அஸ்தினபுரியில்? பாண்டவர்களின் இந்த வளர்ச்சியை அவர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்?” என்று கருணர் சிம்மரிடம் கேட்டார். “அவர் ஒன்றுமே செய்யவில்லை அரசே. கணிகர் என்ற புதிய அமைச்சர் ஒருவரை காந்தாரத்துக்குச் சென்றபோது கூட்டிவந்திருக்கிறார். இடை ஒடிந்து ஒசிந்து நடக்கும் குறையுடல் கொண்ட மனிதர். தீமையே இயல்பாகக் கொண்டவர் என்கிறார்கள் அவரைப்பற்றி. அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். பகடை ஆடுகிறார். பிற எவரும் அவரை அணுகுவதேயில்லை” என்றார் சிம்மர்.

“அதுதான் விளங்கவில்லை. ஏழாண்டுகால கானேகலே பாண்டவர்களை ஆரியவர்த்தம் முழுக்க மக்கள் பேசிக்கொள்ளும் கதைமாந்தராக ஆக்கிவிட்டிருக்கிறது. இந்தப் படையெடுப்புக்கும் அதன்பின்னான பெருங்கொடைக்கும்பின் பாண்டவர்கள் மெல்ல அரசகுலத்து ஒப்புதலையும் பெறத்தொடங்குவார்கள். அதன் பின் தருமன் முடிசூட்டிக்கொள்ளமுடியும்” என்றார் கருணர். “சகுனி சோர்ந்துவிட்டாரா? அப்படியென்றால் ஏன் அஸ்தினபுரியில் இருக்கிறார்?”

துருபதன் புன்னகையுடன் “சகுனி காத்திருக்கிறார்” என்றார். “அது ஓநாயின் இயல்பு. இரை பாலைவனத்தில் அதுவே சோர்ந்து விழும்வரை ஓநாய் காத்திருக்கும். ஏழாண்டுகாலம் என்பது மிக நீண்டது. பாண்டவர்கள் என்னதான் வீரச்செயல்கள் செய்தாலும், அறவோர்பணி செய்தாலும் பிழைகளும் செய்யக்கூடும். இந்தப்படையெடுப்பில் அல்லது அதற்குப்பிறகான கொடையாடலில் அல்லது அரசுசூழ்தலில் ஒரு பெரும்பிழை நிகழ்ந்தே தீரும். அந்தப் பிழைக்காக சகுனி காத்திருக்கிறார்.”

“அக்காரணத்தால்தான் அவர் துரியோதனனை மறையவும் செய்திருக்கிறார். அவன் செய்யும் பிழைகள் எவரும் அறியாமல் போகும். பாண்டவர்கள் பாரதவர்ஷமே நோக்கும் மேடைமேல் நின்றிருக்கிறார்கள். களத்தில் யானைமேல் அமர்ந்திருப்பவனைப்போன்றவர்கள் புகழ்மிக்கவர்கள். அவர்கள் வீழ்வது மிக எளிது. அவர்களை அந்தக் களத்தின் அத்தனை படைக்கலங்களும் குறிவைக்கின்றன” என்றார் துருபதன். “சகுனி காத்திருப்பது திருதராஷ்டிரர் அவர்கள் மேல் சினம் கொள்ளும் ஒரு தருணத்துக்காக. ஆம், நான் அதை நான் உறுதியாக அறிவேன். அவரை என்னால் மிகமிக அருகே காணமுடிகிறது. இந்த பாரதவர்ஷத்தில் எனக்கு மிக அருகே இருக்கும் மனிதர் அவரே.”

துருபதன் அவர்கள் செல்லலாம் என்று தலையசைத்தபின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தார். தலைவணங்கியபின்னர் கருணரும் சிம்மரும் மெல்லியகுரலில் பேசியபடி திரும்பிச்சென்றனர். துருபதனுக்காக அந்தப்புரவாயிலில் காத்திருந்த சேடிப்பெண் தலைவணங்கி உள்ளே அழைத்துச்சென்றாள். துருபதன் அந்தப்புரத்தின் முகப்புக்கூடத்தில் பீடத்தில் அமர்ந்துகொண்டு முகமலர்ச்சியுடன் உள்வாயிலை நோக்கிக்கொண்டிருந்தார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

உள்ளே குரல்கள் கேட்டன. திருஷ்டத்யும்னன் திரைச்சீலையை விலக்கி அவரை நோக்கி ஓடிவந்தான். அவன் மேலாடை கீழே விழுந்தது. அதை திரும்பி நோக்கிவிட்டு வேண்டாம் என்று அவனே தலையசைத்துவிட்டு ஓடிவந்து அவர் முன் நின்று மூச்சிரைத்து “தந்தையே, நான் வாளேந்தத் தொடங்கிவிட்டேன். உண்மையான வாள். மூங்கில்வாள் அல்ல” என்றான். துருபதன் “ஆம், உன் ஆசிரியர் சொன்னார்” என்றார். ஆனால் அவரது செவிகள் உள்ளே ஒலிக்கும் மெல்லிய சிலம்பொலியையே செவிகூர்ந்தன.

மிகமெல்லிய ஒலி. நெஞ்சுக்குள் ஒலிக்கும் மந்திரம் போன்றது. இத்தனை மென்மையாக காலடிவைக்கும் ஒரு பெண்ணை அவர் அறிந்ததில்லை. ஒவ்வொரு காலடியையும் மண்மகள் மெல்ல கைதூக்கி ஏந்திக்கொள்கிறாள் என்பதுபோல. இடையணியும் கைவளையும் சேர்ந்து ஒலித்தன. இசையை வெல்லும் ஓசை. திரையை இடக்கையால் விலக்கி திரௌபதி வெளியே வந்து அவரை நோக்கி விரிந்த பெரியவிழிகளும் வெண்பற்களும் மின்ன புன்னகைத்தாள். அவர் கைகளை விரித்து “வருக, என் தேவி!” என்றார்.

திரௌபதியின் உடலின் கருமைநிறத்தை அவள் பிறந்த அன்று கைகளில் ஏந்தி முகத்தருகே தூக்கி நோக்கிய கணம் முதல் ஒவ்வொரு முறை நோக்கும்போதும் அவர் வியந்தார். முதல் எண்ணமே “என்ன ஒரு கருமை!” என்பதுதான். மண்ணிலுள்ள எதனுடனும் ஒப்பிடமுடியாத நிறம். கருமுத்து என்றார் அவைக்கவிஞர் சித்ரகர். ஆனால் முத்தில் இந்த உயிரின் மென்மை திகழ்வதில்லை. மென்மை என்பதே கருமையானது போல. ஒளியென்பதே இருளென்றானதுபோல. அவள் நுழையும் அறையின் அனைத்து ஒளியும் அவளை நோக்கி தாவிச்சென்று சேர்ந்துகொள்கிறது என்று தோன்றும்.

ஒருபோதும் அவள் ஓடுவதை அவர் பார்த்ததில்லை. அவளுடைய ஓங்கிய குரலை கேட்டதில்லை. கைக்குழந்தையாக இருக்கையில்கூட அவள் வீரிட்டு அழுததில்லை. பசிக்கையிலோ ஈரமாகும்போதோ இருமுறை மெல்லச் சிணுங்குவாள். அது ஓர் ஆணை. அக்கணமே அது நிறைவேற்றப்பட்டாகவேண்டும். இல்லையேல் சினம் கொண்டு கரியில் கனல் ஏறுவதுபோல சிவந்து கைகளை ஆட்டி மேலும் அழுத்தமாக குரலெழுப்புவாள். “சக்கரவர்த்தினியாக ஆனவர்கள் உண்டு. சக்கரவர்த்தினியாகவே பிறந்தவள் இவள்” என்றார் நிமித்திகரான சோணர்.

கைக்குழந்தையின் நோக்கில் கூர்மை குடிகொள்ளமுடியும் என்பதை அவர் அவளிடம்தான் கண்டார். அவரை அறிந்தபின்னர் காலடியோசை கேட்டு தொட்டிலில் திரும்பி அவரை நோக்கி ஒருமுறை கைகால்களை அசைப்பாள். இதழ்கள் விரிந்து கன்னத்தில் ஒரு மென்மடிப்பு விழும். கண்களில் ஒளி மின்னும், அவ்வளவுதான். துள்ளுவதில்லை. கைநீட்டி எம்புவதில்லை. அவர் அவளை அள்ளி எடுத்து முகத்தோடு சேர்த்து முத்தாடுகையில் தலைமேல் வைத்து நடமிடும்போது கைகளை விரித்து மெல்ல அசைவாள். சிறிய சிரிப்பொலி எழுப்புவாள். எந்நிலையிலும் அவள் தன்னை மறந்து கூவி விடுவதில்லை. அவளிடமிருந்து எதுவுமே நழுவுவதும் சிந்துவதும் தெறிப்பதும் இல்லை.

திடமாகக் கையெடுத்துவைத்து கவிழ்ந்தாள். உறுதியான கால்களுடன் எழுந்து நடந்தாள். அமர்ந்த அக்கணமே கையில் மரப்பாவையை ஏந்தி அன்னையென அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ட கருணையைக் கண்டு துருபதன் “அன்னையே!” என்று கைகூப்பினார். “புடவியைப்புரக்கும் பேரருள் தன்னை அன்னையென்று காட்டி நம்மை வாழ்த்துகிறது அரசே” என்றார் சித்ரகர். அவள் இரண்டு வயதுக்குப்பின்னரே பேசத்தொடங்கினாள். அதுவரை ஒவ்வொரு சொல்லாக கற்றுக்கொண்டிருந்தாள் என்று பேசியபோது தெரிந்தது. குரலில் மழலை இருந்தாலும் ஒருமுறைகூட சொற்கள் பொருள்பிறழவில்லை. “எண்ணிக்கோர்த்த மணிகளால் ஆன நகை அவள் பேச்சு” என்றார் சித்ரகர். “யானை எடுத்துவைக்கும் அடி. மீன்கொத்தியின் குறி.”

அவள் ஓடிவிளையாடவில்லை. சிறுமியருடன் நகையாடிக் களிக்கவில்லை. பிள்ளைச்சிறுவிளையாட்டுகள் எதிலும் ஈடுபடவில்லை. “நீராடல், அம்மானை, ஊசல் என்று பெண்மகவுக்கான பருவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவே?” என்று துருபதர் சித்ரகரிடம் கேட்டார். “அரசே, அவையெல்லாம் பெரியவர்களின் வாழ்வை நடிக்கும் சிறுகுழந்தைகளுக்குரியவை. அரசி பெரியவளாகவே பிறந்தவள்” என்றார் சித்ரகர். பார்த்திருக்கையில் சிலபோது அவளுக்கு முலைகளும் விரிந்தகைகளும் இருப்பதாக அவர் எண்ணிக்கொள்வதுண்டு.

“அன்னை என்ன செய்கிறாள்?” என்று துருபதன் கேட்டார். “அவர்களைக் காண கதைசொல்லும் சூதர்கள் வந்திருக்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் திரௌபதி. மெல்ல நடந்து வந்து பட்டுப்பாவாடையை இடக்கையால் பற்றி ஒதுக்கி வலக்கையால் நீண்ட கூந்தலை எடுத்து முன்னால் கொண்டுவந்து தொடைமேல் போட்டுக்கொண்டு பீடத்தில் அமர்ந்தாள். இளமையிலேயே அவளுடைய கூந்தல் கன்னங்கரிய நீரோடை போல ஒளியுடன் பெருகி தொடைகளை எட்டியிருந்தது. கூடவே வாழும் கருநாகத்தை கொஞ்சுவதுபோல அவள் அதைத் தொட்டு வருடிக்கொண்டிருப்பாள்.

“இது சூதர்கள் வரும் பருவம் அல்ல அல்லவா? அவர்கள் சித்திரையில்தானே திருவிழாக்களுக்கு வருவார்கள்?” என்றார் துருபதன். எப்போதுமே அவர் அவளிடம் எளிய அன்றாடப்பேச்சுக்களைத்தான் பேசுவார். அவள் அதை அறிந்தும் அதற்கு பதில் சொல்வாள். அவளுடன் பேசும்போது பக்கவாட்டில் விழிதிருப்பி வேறெதையாவது பார்ப்பது அவரது வழக்கம். “இவர்கள் வேறு சூதர்கள். வைதிகச்சூதர்கள் என்கிறார்கள். வேதங்களில் சிலபகுதிகளை பாடமாக்கியவர்கள். வேள்விகளின் கதைகளையே பெரும்பாலும் பாடுகிறர்கள்” என்றாள் திரௌபதி.

அவர் அவள் விழிகளை நோக்கிப் பேசுவது சிலவருடங்களுக்கு முன்னரே நின்றுவிட்டது. நான்கு வயதிலேயே அவள் விழிகள் விரிந்து கன்னியின் விழிகளாக ஆகிவிட்டிருந்தன. உள்ளங்களுக்குள் எளிதில் நுழையக்கூடியவை. அனைத்தையும் அறிந்தபின் கடந்து கனிந்தவை. அவள் நோக்காதபோது அவளை நோக்கி அவளுடைய நீலமலர் போன்ற கன்னங்களை கழுத்துச்சரிவின் நீர்வளைவு போன்ற ஒளியை, இளமூங்கில் போன்ற தோள்களை நோக்கி மனம் படபடக்க விழிவிலக்கிக் கொள்வார். அவர் நோக்குவதற்கென்றே அவள் தன் விழிகளை வேறுபக்கம் திருப்பிக்கொள்வாள்.

“நிறைய கதைகள் வைத்திருக்கிறார்கள் தந்தையே” என்றான் திருஷ்டத்யும்னன். ஒருசமயம் ஒரே வயிற்றில் கருக்கொண்டவர்கள். ஆனால் அவன் முற்றிலும் வேறுவகையில் இருந்தான். வெண்ணிறத் தோல். நீலவிழிகள். செந்நிறம் கலந்த தலைமயிர். சற்றே மலர்ந்த செவ்வுதடுகள். எப்போதும் பொங்கித் ததும்பிக்கொண்டே இருப்பான். அவனுடைய குரலை எங்கும் கேட்கமுடியும் என்று துருபதன் நினைப்பார். “அவர் மரங்கொத்தியைப்போல. அதன் ஒலியில்லாமல் காடு இல்லை” என்றார் சித்ரகர். “அவரது கொத்துகளுக்கு காடு நன்றாகவே பழகிவிட்டது.”

“தந்தையே” என்று திருஷ்டத்யும்னன் அவரைத் தொட்டுத்தொட்டு அழைத்தான். மரம்கொத்தி என்று துருபதன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டார். “தந்தையே, அவர்கள் வாள்வீரர்களின் கதைகளைச் சொன்னார்கள். நானும் இன்னும் சிலநாட்களில் வாளேந்தி போரிடுவேன். உடனே படைகளைக் கொண்டு காசிநாட்டுக்குச் சென்று அங்கே…” அவன் திகைத்து ஓரக்கண்ணால் தமக்கையை நோக்கியபின் “…இளவரசிகளை ஒன்றுமே செய்யமாட்டேன். அரண்மனையை மட்டும் பிடிப்பேன்” என்றான். திரௌபதி புன்னகைத்தாள். ”தந்தையே, இவள் என்னை கேலி செய்கிறாள்” என்றான் திருஷ்டத்யும்னன். திரௌபதியின் விழிகளைச் சந்தித்து விலகிய துருபதன் “அதிலென்ன பிழை? உனக்கு இளவரசியர் தேவைதானே?” என்றான்.

“இளையவனே, நீ சென்று வெளியே ரதங்களைப்பார்” என்று திரௌபதி மெல்லிய உறுதியான குரலில் சொன்னாள். அக்குரலை அறிந்த திருஷ்டத்யும்னன் வணங்கிவிட்டு வெளியே சென்றதும் அவள் இயல்பான குரலில் “மூத்த அன்னை தங்களை சந்திக்கவேண்டுமென்று சொன்னார்கள்” என்று சொன்னாள். துருபதன் அவளை விழிதூக்கி நோக்கியபின் “ஏன்?” என்றார். “மூத்தவரின் பட்டம்சூட்டலைப்பற்றி தங்களிடம் அவர் பேசவிழைகிறார் என்று எண்ணுகிறேன்” என்றாள் திரௌபதி. “நான் அவளை சந்திக்கிறேன்….” என்ற துருபதன் மெல்ல “நாளை… முடிந்தால்… இல்லையேல் நாளைமறுநாள்” என்றார். “இப்போதே சந்திக்கலாமே. நான் அவர்களை இங்கேயே வரச்சொல்லியிருக்கிறேன்” என்றாள் திரௌபதி.

“இப்போதா?” என துருபதன் எழுந்துவிட்டார். “ஏன்? இது அவர்களின் அரண்மனை அல்லவா? மேலும் பேசும்போது என் அன்னையும் இருப்பது நல்லது” என்று திரௌபதி சொன்னாள். அவள் விழிகளை நோக்கியபின் துருபதன் தவிப்புடன் மீண்டும் அமர்ந்துகொண்டார். “தந்தையே, நீங்கள் இதற்கு உடனே முடிவெடுத்தாகவேண்டும். இத்தகைய இக்கட்டுகள் ஒத்திப்போடும்போது மேலும் வளரக்கூடியவை” என்றாள் திரௌபதி.

“ஒத்திப்போடுவது பல இக்கட்டுகளை இல்லாமலாக்கும்” என்றார் துருபதன். “தந்தையே. சினத்தாலோ பிழைபுரிதல்களாலோ உருவாகும் இக்கட்டுகளை ஒத்திப்போட்டால் சிறியவையாக ஆக்கிவிடமுடியும். பொறாமையாலும் ஆசையாலும் விளைவும் இக்கட்டுகளை ஒத்திப்போட்டால் அவை பெருகும் என்று சுக்ரநீதி சொல்கிறது” திரௌபதி சொன்னாள். “நீ சுக்ரநீதியை எவரிடம் படித்தாய்?” என்று துருபதன் கேட்டார். “நானாகவேதான் வாசித்தேன். சித்ரகரிடம் எல்லா சுவடிகளும் உள்ளன” என்றாள் திரௌபதி.

சோமககுலத்தலைவர் புருஜனரின் மகள் அகல்யையை துருபதன் மணந்து பட்டத்தரசியாக ஆக்கி அவளில் நான்கு மைந்தர்களையும் பெற்றார். பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களையும் ஒன்றாக்கி பாஞ்சாலத்தை வலுப்படுத்தியபோது குலமூத்தார் ஆணைப்படி சத்ராவதியை ஆண்ட பிருஷதரின் தங்கை சினியின் முதல் மகளான பிருஷதி என்னும் கௌஸவியை மணந்தார். அவளுக்குப் பிள்ளைகள் இல்லாமலிருந்தபோதுதான் ஸௌத்ராமணி வேள்வி நிகழ்ந்தது. வேள்வியை நிகழ்த்திய வைதிகரான யாஜர் “வலுவான கருப்பை கொண்ட இளைய மனைவியிடம் இக்குழந்தைகள் விளையட்டும் அரசே” என்றார். ஆகவே வேள்வியில் அவருடைய இணையரசியாக பிருஷதியே அமர்ந்தாள். வேள்வியன்னத்தை அவளே உண்டாள்.

ஸௌத்ராமணி வேள்விக்குப்பின் மெல்ல பிருஷதியே பட்டத்தரசியாக கருதப்படலானாள். அரண்மனையின் அனைத்து அதிகாரங்களும் அவள் கைகளுக்கே சென்றன. திரௌபதி பிறந்தபின்னர் துருபதன் இரண்டாவது அந்தப்புரம் விட்டு வெளியே செல்வதே குறைந்தது. பகல் முழுக்க அவர் இருகுழந்தைகளுடன்தான் இருந்தார். அகல்யையைப் பார்த்தே நெடுநாள் ஆகின்றது என்று அவர் எண்ணிக்கொண்டார்.

அவளை எண்ணிய கணமே வடக்குநோக்கி முள் காந்தத்தைக் கண்டதுபோல உள்ளம் விலகிக்கொள்வதை எண்ணி வியந்தார். அது அவளிடமுள்ள பிழையால் அல்ல. அவருள் இருக்கும் ஒன்றை, அவர் எதிர்கொள்ள விரும்பாத ஒன்றை அவள் நினைவூட்டுகிறாள் என்பதனால்தான். அந்த விலக்கத்தை வெறுப்பாக மெல்லமெல்ல வளர்த்துக்கொண்டால் இன்னும் எளிதாகக் கையாள முடியும் என்று அகம் அறிந்திருக்கிறது. ஆகவே வெறுப்புக்கான அனைத்துக் காரணங்களையும் கண்டுகொள்கிறது. அவளை அடிக்கடி சந்திக்காமலிருப்பதனால்தான் இன்னும் முழுமையாக வெறுக்காமலிருக்கிறோம் என்று அவர் எண்ணினார்.

“நாளை நாம் இந்தச் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமே” என்றார் துருபதன். திரௌபதி புன்னகையுடன் “மூத்த அன்னையை வரச்சொல்லி சற்றுமுன்னர்தான் சேடியை அனுப்பினேன்” என்றாள். “உன் அன்னையிடம் சொல்லிவிட்டாயா?” என்றார் துருபதன். “இல்லை. அவர் வந்ததும் சேடி சென்று சொல்வாள். அன்னையே வந்துவிடுவார்கள்.”

துருபதன் அவள் விழிகளை நோக்கியபின் சிலகணங்கள் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் தலைதூக்கி “நான் உன்னைத்தவிர எவரையும் என்னைவிட முதிர்ந்தவராக எண்ணவில்லை அன்னையே. நான் என்ன செய்யவேண்டும்?” என்றார். “எது அறம் என்று நினைக்கிறீர்களோ அதை” என்றாள் திரௌபதி. “முறைப்படி அகல்யையின் மைந்தன் சித்ரகேதுதான் பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசன். அவனுக்கு முடிசூட்டுவதே முறை. ஆனால் உன் அன்னை ஒரு தடை சொல்கிறாள். ஐந்து குலங்களையும் கூட்டி விவாதித்த பின்னர் பாஞ்சாலத்துக்கு பட்டத்து இளவரசரை அறிவிப்பதுதான் முறை என்கிறாள். அதற்குத்தான் தொல்மரபின் ஆணை உள்ளது.”

“தந்தையே, என் அன்னையின் எண்ணம் எளிமையானது. மூத்த அன்னையின் சோமககுலம் தட்சிணபாஞ்சாலத்தில் தொன்மையான வல்லமைகொண்ட மக்கள். ஆனால் இப்போது சத்ராவதியில் வாழ்ந்த சிருஞ்சயர்களும் பிறரும் குடிபெயர்ந்து வந்து காம்பில்யத்தை நிறைத்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் சோமகர்களை விட கூடுதலாகிவிட்டிருக்கிறார்கள். சோமகர்களை அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள தொல்குடிகளான சோமகர்கள் பிறரை அவமதிப்பதாகவும் செய்திகள் உள்ளன. இந்நிலையில் மணிமுடிசூடுவதை குலச்சபையில் விவாதமாக்கினால் பிற நான்கு குலங்களும் சோமககுலத்தைச்சேர்ந்த சித்ரகேதுவை எதிர்ப்பார்கள். இளவரசுப்பட்டம் சூட்ட முடியாது.”

“ஆம், அதை நானும் உய்த்துள்ளேன்” என்றார் துருபதன். “என் அன்னை சிருஞ்சய குலத்தவள். அவளை நான்கு குலங்களும் பின்துணைத்தால் அவள் மைந்தன் பின்னாளில் பட்டத்து இளவரசனாக ஆகமுடியும்… அன்னை கணக்கிடுவது அதையே” என்றாள் திரௌபதி. துருபதன் தலையசைத்தபின் “…அன்னையே, குலச்சபையால் பட்டம்கட்டப்படுவதுதானே நம் மரபு? முதல்மைந்தன் ஆதிதெய்வீகமாக முடிசூடுவது இங்கில்லையே” என்றார்.

“ஆதிதெய்வீகமாக முடிசூடுவது ஷத்ரியர்களின் வழக்கம். சந்திர, சூரிய, அக்னிகுல ஷத்ரியர்கள் அதை முறைமையாகக் கொண்டிருக்கிறார்கள். தொல்குலங்களில் அவ்வழக்கம் இல்லை. ஆதிதெய்வீக முடியுரிமை கொண்டவர்களையே முதன்மை ஷத்ரியர்களாக பாரதவர்ஷம் ஏற்கும்” என்றாள் திரௌபதி. அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை துருபதன் நோக்கி இருந்தார். “ஏற்கெனவே ஒரு பெருவேள்வியை செய்துவிட்டீர்கள் அரசே. மேலும் ஒரு வேள்வியைச்செய்து உங்களை சந்திரகுலத்தவராக அறிவியுங்கள்!”

“ஆம், அதைச்செய்யலாம். சந்திரகுலத்துக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர் வரிசையும் உள்ளது” என்றார் துருபதன். “அதை சூதர்கள் பாடட்டும். பாரதவர்ஷம் அறியட்டும். அந்த வேள்வியிலேயே சித்ரகேதுவை உங்கள் பட்டத்து இளவரசராக ஆதிதெய்வீக முறைப்படி அறிவியுங்கள். நம் குலங்கள் அதை மறுக்கமுடியாது. மறுத்தால் அவர்கள் சந்திரகுலத்தவர் என்ற அடையாளத்தையும் மறுக்கவேண்டியிருக்கும். அதை குலத்தலைவர்கள் விரும்பமாட்டார்கள்.”

துருபதன் பெருமூச்சுடன் எளிதாகி கால்களை நீட்டிக்கொண்டு “ஆம், இதைவிடச் சிறந்த வழி என ஏதுமில்லை” என்றார். திரௌபதி “மேலும் ஒன்றுண்டு தந்தையே. தங்கள் இளையவர் சத்யஜித் இன்று நாடாள்கிறார். அவருக்கும் ஏழு மைந்தர்கள் உள்ளனர். குலமுறைப்படி அரசர்கள் முடிசூட்டப்படுவார்கள் என்றால் அவர்களும் அதை விரும்பலாமே?” என்றாள். “அவர்கள்…” என துருபதர் சொல்லத் தொடங்க “இன்று அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அரசியலில் நாளையைப்போல நிலையற்றது என ஏதுமில்லை” என்றாள்.

“ஆதிதெய்வீகமாக அரசுரிமையை அளிப்பது ஏன் என்று சுக்ரநீதி தெளிவாகவே விளக்குகிறது. அரசுரிமை ஒருபோதும் ஐயத்திற்குரியதாக, வாதிடுவதற்குரியதாக இருக்கலாகாது. அது மானுடரால் அளிக்கப்படுவதாக இருந்தால் மானுடரால் விலக்கவும் படலாம். அந்நிலையில் ஒவ்வொருவரும் மன்னரை விலக்க முயலமுடியும். ஒருபோதும் அரியணை நிலைத்திருக்காது. தெய்வங்களால் அளிக்கப்பட்ட மணிமுடியை மானுடர் விலக்கமுடியாதென்ற விதி இருக்கையிலேயே செங்கோல் அசைவற்றிருக்கிறது. பெரிய ஷத்ரிய நாடுகளின் வல்லமையே அவற்றின் உறுதியான மணிமுடியால் வருவதுதான்” திரௌபதி சொன்னாள்.

“ஆம், அதைச்செய்வோம். அது ஒன்றே வழி” என்றார் துருபதன். “இதைவிடச் சிறப்பாக எந்த அமைச்சரும் எனக்கு சொல்லளித்ததில்லை.” திரௌபதி புன்னகையுடன் “நீங்கள் அறிந்த நீதிதான் இது. இதைச்செய்ய உங்களைத் தடுத்தது என் அன்னைமீதிருந்த விருப்பம். அவள் உங்களிடம் சொன்ன சொற்கள்…” என்றாள். “இல்லை” என்று துருபதன் சொல்லத் தொடங்கியதும் “ஆம், அதையும் நான் அறிவேன். என் அன்னை என்பதே அவளுடைய தகுதி. ஆகவேதான் நானே இதைச் சொன்னேன். இதுவே அறம். தந்தையே எந்தப் பேரன்பின்பொருட்டும் அரசன் அறம் மீறலாகாது.”

“ஆம், ஆனால் உன்பொருட்டு எந்தப் பேரறத்தையும் நான் மீறுவேன்…” என்றார் துருபதன். திரௌபதி புன்னகைத்து “இப்போது இரு அன்னையரும் வருவார்கள். இதை உங்கள் சொற்களாக முன்வைத்து உங்கள் ஆணையை பிறப்பியுங்கள்” என்றாள். “உன் சொற்கள் என்று சொன்னால் என்ன?” என்றார் துருபதன் புன்னகைத்து. “அன்னையே ஆயினும் அவர்களும் பெண்களே” என்றாள் திரௌபதி மெல்ல நகைத்தபடி. துருபதன் உரக்க நகைத்தார்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது
அடுத்த கட்டுரைவெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை