பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் – 4
சிந்துநிலத்தில் இருந்த மூலஸ்தானநகரிக்கு சகுனியும் அவரது படைகளும் ஒன்பதுமாதம் கழித்துத்தான் வந்துசேர்ந்தார்கள். மருத்துவர் ஊஷரர் சொன்னதுபோல ஒருவாரத்தில் சகுனியின் உடல்நிலை மேம்படவில்லை. அறுவைமருத்துவம் முடிந்தபின் ஒருமாதத்துக்கும் மேல் அவர் தன்னினைவில்லாமலேயே கிடந்தார். அஞ்சிப் பதுங்கியிருக்கும் மிருகம் போல உடம்பு அதிர்ந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது முனகியபடி ஏதோ சொன்னார். அவை சொற்களாக உருப்பெறவில்லை. அவரது உடலில் இருந்து எழுந்த வெம்மையை அருகே நிற்கையிலேயே உணரமுடிந்தது.
“புண்மேல் நான் தூவியது பாலைவனத்தின் விஷமணல். ஓநாயின் கடிவிஷத்துடன் அந்த ரசவிஷம் மோதுகிறது. இந்த உடல் இன்று ஒரு சமர்க்களம்” என்றார் ஊஷரர். கிருதரின் எண்ணத்தை அறிந்தவர்போல “எதுவெல்லும் என எண்ணுகிறீர்கள்… அந்த ஐயம் எனக்கும் உள்ளது. ஆனால் உடலே வெல்லும் என்பதற்கான சான்று இதுவே” என்றபின் குடுவையில் அக்கார நீரை அள்ளி சகுனியின் வாயருகே கொண்டுசென்றார். அன்றுபிறந்த ஓநாய்க்குட்டி அன்னைமுலைக்குத் தாவுவதுபோல உதடுகளைக் குவித்து சகுனியின் தலை மேலெழுந்தது. சிதைந்த குரலில். “நீர்! அன்னம்!” என்றார். “பார்த்தீர்களா? ஜடரை இவ்வுடலில் வாழ விரும்புகிறாள்” என்றார் ஊஷரர்.
சிலநாட்களுக்குள் சகுனியின் வெண்ணிறமான உடல் சிவந்து பருத்தது. அவரது கைவிரல்கள் வெண்பசுவின் காம்புகள் போல சிவந்து உருண்டன. புறங்கை நீரில் ஊறிய நெற்றுபோல உப்பியது. தோள் எலும்புகள் மறைந்து கழுத்தில் மடிப்புகள் விழுந்து மார்புகள் திரண்டு அவரது உடல் வீங்கிக்கொண்டே சென்றது. கன்னங்கள் பருத்து கண்கள் இடுங்கி உள்ளே சென்றன. மூக்கின் நீளம் கூட மறைந்தது. கண்ணெதிரே சகுனியின் உடல் மறைந்து அங்கே அறியாத பீதன் ஒருவனின் உடல் கிடப்பதுபோல கிருதருக்குத் தோன்றியது.
“அதெப்படி ஓர் உடல் இன்னொன்றாக ஆகமுடியும்?” என்றார் கிருதர் சகுனியை நோக்கியபடி. “துளியாக இருக்கும் நீர் வழியும்போது வேறொரு வடிவம் கொள்கிறதல்லவா? நீரில் வடிவங்களை உருவாக்குவது அதனுள் வாழும் நீர்மை. மானுட உடலை உள்ளே வாழும் ஆத்மன் உருவாக்கிக் காட்டுகிறான்” என்றார் ஊஷரர்.
“இருந்தாலும்…” என்று தத்தளித்த கிருதரை நோக்கி புன்னகைத்து “மனிதன் கொள்ளும் மாயைகளில் முதன்மையானது இதுவே. உடல் என்பது மனிதனல்ல. நம்முடன் பழகுபவன் உடலுக்கு உள்ளிருக்கும் ஆத்மன். நாமோ அவன் அவ்வுடலே என்று நம்புகிறோம். மீண்டும் மீண்டும் உள்ளிருப்பவன் அந்நம்பிக்கையை தோற்கடித்தபின்னரும் அதிலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் உள்ளிருப்பவன் மாறிக்கொண்டே இருக்கிறான் என நாமறிவோம். கணம் தோறும், தருணத்துக்கு ஏற்ப அவன் உருப்பெறுகிறான். ஆகவே கண்முன் மாறாது தெரியும் பருப்பொருளாகிய உடலை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.”
“ஆனால் உடலும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது” என்றார் ஊஷரர். “அந்த மாற்றம் மெல்ல நிகழ்வதனால் நாம் அதை மறக்க முடிகிறது. கிருதரே, ஒரு மனிதன் என்பவன் யார்? அந்த இருப்புதான் உண்மையில் என்ன? நாம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் உடலின் மாற்றங்களை நம் கற்பனைமூலம் தொகுத்துக்கொண்டு நாம் அடையும் ஒரு பொதுவான புறவடிவமே அவனுடைய தோற்றம். அந்தப்புறவடிவத்தின் ஒன்றோடொன்று தொடர்பற்ற பல்லாயிரம் செயல்களை நம் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்ப தொகுத்துக்கொண்டு நாம் அடையும் ஓர் அகவடிவமே அவனுடைய ஆளுமை. இவ்விரண்டுக்கும் நடுவே நாம் உருவாக்கிக்கொள்ளும் சமநிலையே அவன் என்னும் அறிதல். அவ்வளவுதான். நாம் மானுடரை அறிவதே இல்லை. நாமறிவது மானுடரில் நாம் உருவாக்கி எடுக்கும் சித்திரங்களை மட்டுமே.”
தனியே வாழ்பவராதலால் ஊஷரர் அவருக்குள்ளே பேசிக்கொள்வதுபோல நிறுத்தாமல் பேசிச்செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். “சகுனி என இங்கே கிடப்பது ஓர் உடல். இது இளமையில் இருந்த சகுனி அல்ல. இங்கே வரும்போதிருந்த சகுனியும் அல்ல. உள்ளே வாழ்வது ஒரு ஆத்மன். அவன் நீர்ப்பெருக்கு போல உருமாறுவதன் வழியாகவே முன்னேறிச்செல்பவன், உருமாறாதபோது தேங்கி அழிபவன்.”
பேசிப்பேசி அந்த வரியை கண்டடைந்ததும் ஊஷரரின் குரல் எழுந்தது. “நீரோடைதான் மானுட அகம். ஒவ்வொரு தடையையும் ஒவ்வொரு தடத்தையும் அது தன்னை மாற்றிக்கொள்வதன் வழியாகவே எதிர்கொண்டு கடந்து செல்கிறது. பாறைகளில் துள்ளுகிறது. பள்ளங்களில் பொழிகிறது. சமவெளிகளில் நடக்கிறது. சரிவுகளில் விரைகிறது. நாம் நமது மாயையால் அதை நதி என்கிறோம். ஓடை என்கிறோம். கங்கை என்கிறோம். யமுனை என்கிறோம். கிருதரே, அது ஒவ்வொரு கணமும் ஒன்று என நாம் அறிவதே இல்லை.”
“எத்தனையோ ஞானிகள் இதை சொல்லிவிட்டார்கள். நாம் இதை அறிவோம், ஆனால் உணர்வதில்லை. ஏனென்றால் உணரும்போது நாமறியும் வாழ்க்கையின் அனைத்து உறுதிப்பாடுகளும் இல்லாமலாகின்றன. நம்மைச்சுற்றியிருக்கும் இயற்கை நீர்ப்பாவை போல நெளியத்தொடங்குகிறது. நாம் வாழும் நகரங்கள் மேகங்கள் போல கரைந்து உருமாறத்தொடங்குகின்றன. மானுடரெல்லாம் ஆடிப்பாவைகளாக மாறிவிடுகின்றனர். சொற்கள் அத்தருணத்துக்கு அப்பால் பொருளற்றவையாகின்றன. மானுட ஞானம் என்பதே இல்லாமலாகிறது. ஏனென்றால் ஞானம் என்பது உறுதிப்பாடுக்காக மானுடன் உருவாக்கிக்கொண்டது.”
திடீரென்று அவர் திரும்பி கிருதரை நோக்கி நகைத்தார். “என்னை உளம் பிறழ்ந்தவன் என நினைக்கிறீர்கள். நினையுங்கள். அது உண்மைதான். என்னால் வெயில் பொழியும் வெளியுலகை நோக்கவே முடிவதில்லை. அது என் கட்டுப்பாட்டில் இல்லை. அதன் பெருவிரிவை நான் எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் அதற்குரிய முழுமைஞானம் என்னிடம் இல்லை. ஆகவே இரவில் மட்டும் வாழத்தொடங்கினேன். பகலில் துயில்வேன், இரவில் விழித்தெழுந்து வாழ்வேன்.”
ஊஷரர் பித்தனைப்போன்ற கண்களுடன் உரக்க நகைத்து “இரவில் என் கைவிளக்கின் ஒளியில் தெரியும் உலகை மட்டும் நான் எதிர்கொண்டால் போதும். கருணையற்றது சூரியன். அதன் விரிந்த ஒளிவெள்ளம் கட்டற்றது. என் கைவிளக்கோ சிறியது, எளியது, என்னை அறிந்தது. நான் விரும்பாததை அது எனக்குக் காட்டாது. நான் அறியாததை அதுவும் அறியாது. நான் காணவிரும்புவதை என் கண்ணுக்கேற்ப சிறிது சிறிதாக நறுக்கிக் கொடுக்கும்… எனக்குப் பிடித்தமான என் கைவிளக்கே என் தெய்வம்…”
ஊஷரர் திரும்பி சகுனியை நோக்கி “இவர் முழுமையாக மாறிவிட்டார். உடலுக்குள் வாழும் ஆத்மன் வேறு உடலை நாடுகிறான். ஆகவே இதை உருக்கி இன்னொன்றை கட்டிக்கொண்டிருக்கிறான். பாம்புபோல சட்டை உரித்துவிட்டு கடந்துசெல்லக் கற்றவன்தான் மானுடனும்…” என்றார். கிருதர் படுக்கையில் கிடந்த சகுனியை திரும்பி நோக்கவே அஞ்சினார். அந்தக் கூட்டின் உள்ளே அவர் அறியாத ஒன்று வாழ்கிறது. அவர் அறிந்த உடல் இதோ மட்கி மறைகிறது. அவர் பெருமூச்சுவிட்டார்.
சகுனி இரண்டுமாதம் வாய்மட்டும் உயிருடன் எஞ்சிய சடலமாகக் கிடந்தார். பின்னர் மெல்ல கருமைகொள்ளத் தொடங்கினார். தீப்பற்றி அணைந்த மரம்போல அவரது தோல் மாறியது. சுருங்கி வெடித்து மரப்பட்டைச்செதில்கள் போல உரிந்து எழுந்தது. உதடு கருமையான வடுவாக மாறி பின்னர் சிறிய புழுபோல தோலுரிந்து செந்நிறம் கொண்டது. தலைமுடி கொத்துக்கொத்தாக உதிர்ந்தது. இமைமுடிகளும் உதிர்ந்தன. சகுனியை சேவகர் பிடித்துத் தூக்கி அமரச்செய்து உடைமாற்றும்போது அவர்களின் கைகளில் அவரது தோலும் முடியும் கழன்று வந்து ஒட்டியிருந்தது. கைகால்களின் நகங்கள் உதிர்ந்தன. தசை முழுமையாகவே வற்றி உலர்ந்து எலும்புகள் புடைத்துக் கிடந்த அவரைப்பார்க்கையில் புதைக்கப்பட்டு மண்ணில் மட்கிய உடலொன்றை பாதியில் அகழ்ந்தெடுத்தது போலிருந்தது.
அதுவரையிலும் சகுனி அக்காரநீரையே குடித்துக்கொண்டிருந்தார். குடித்ததை உடனே சிறுநீர் கழித்து மீண்டும் வாய் திறந்து நா துழாவி விக்கல் ஓசை எழுப்பினார். உடனே சேவகர்கள் குடுவையிலிருந்த அக்கார நீரை அவருக்கு அளித்தனர். மென்மணலை குவித்துப்பரப்பி அதன் மேல் ஈச்சமரத்தின் ஓலை முடைந்து செய்த பாய் விரித்து அதில் அவரை படுக்கச்செய்திருந்தனர். சிறுநீர் மணலில் ஊறி வற்றிக்கொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் மணலை உப்புடன் சேர்த்து அள்ளி அகற்றி புதுமணல் பரப்பினர். அவரது உடலில் புல்தைலத்தை மெல்லிய இறகால் தொட்டு பூசினார் ஊஷரர். “உயிரற்ற தோல் சிற்றுயிர்களுக்கு உணவு. புல்தைல வாசனை இல்லையேல் அவரை அவை உண்டுவிடும்” என்றார்.
சகுனி முனகிக்கொண்டே இருந்தார். முதலில் அச்சொற்கள் ஏதும் கிருதருக்கு விளங்கவில்லை. ஒவ்வொருநாளும் கேட்டுக்கேட்டு அவரால் பின்னர் அதை உள்வாங்க முடிந்தது. “இருட்டு… இங்கே இருட்டு” என்றார் சகுனி. பின்னர் “பசி…” என்றார். பசி என்ற சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். “பசிக்கும். ஆனால் குடல் இப்போது உணவைத் தாளாது” என்றார் கிருதர். “வெள்ளெலும்புகள்” என்று ஒருமுறை சகுனி சொன்னார். “எல்லாம் வெள்ளெலும்புகள்.”
இரண்டுமாதம் கழித்து அவர் கண்களைத் திறந்து நோக்கியபோது கிருதர் அருகே இருந்தார். “இளவரசே” என்று குனிந்தபோது சகுனி அவரை அடையாளம் காணாமல் “யார்?” என்றார். “இளவரசே, நான் தங்கள் அணுக்கச்சேவகன், கிருதன்” என்றார் கிருதர். “யார்?” என்று சகுனி மீண்டும் கேட்டார். “என் தந்தையும் உடன்பிறந்தவர்களும் எங்கே?” என்றார். கிருதர். “அவர்கள் காந்தாரத்தில் உள்ளனர். தாங்கள் ஆணையிட்டால் நாம் திரும்பி காந்தாரத்துக்கே செல்லலாம்” என்றார் கிருதர். “இல்லை… அவர்கள் பசித்து இறந்தனர்… நூறுபேரும். பசித்து மெலிந்து…” கண்களை மூடியபடி “வெள்ளெலும்புகள்..” என்றார்.
கிருதருக்கு அவர் சொல்வது என்ன என்று புரிந்தது. அப்படியென்றால் போதமில்லாத நிலையில் கிடந்த சகுனி ஊஷரர் சொன்ன கதையை கேட்டிருக்கிறார். ஒருவேளை அவர்கள் அனைவரைவிடவும் துல்லியமாக. அவை அவரது உள்ளுக்குள் உண்மையெனவே நிகழ்ந்திருக்கும். சகுனி கண்விழித்து “உணவு கொண்டுவாருங்கள் கிருதரே” என்றார். கிருதர் “இளவரசே” என்று தத்தளித்துவிட்டு இருளில் வெளியே ஓடி பாலைமணலில் நின்றிருந்த ஊஷரரிடம் சொன்னார். “நினைவு வந்துவிட்டதென்றால் இனி உணவை அளிக்கலாம்… உடல் அதை உண்ணும்” என்றார் ஊஷரர்.
வெறிகொண்டவரைப்போல சகுனி உண்ணத்தொடங்கினார். நாழிகைக்கு ஒருமுறைவீதம் ஊனும் புல்லரிசியும் சேர்த்துச் சமைத்த சோறை கூழாக்கி அவருக்கு அளித்துக்கொண்டிருந்தனர் சேவகர். அவர் உண்ணும் விரைவைக் கண்டு கிருதர் விழிதிருப்பி ஊஷரரை நோக்கினார். “கூட்டுப்புழு” என்று சொல்லி ஊஷரர் புன்னகைத்தார். “இன்னும் சிலநாட்களில் சிறகு முளைத்துவிடும்.” குனிந்து சகுனியின் புண்ணைத் தொட்டு “உள்ளே நெருப்பு அணைந்துவருவதைக் காண்கிறேன்” என்றார்.
மேலும் ஒருமாதம் கழித்துத்தான் கட்டை அவிழ்த்தார் ஊஷரர். உள்ளே தசைகள் உருகி பொருந்தியிருந்தன. இறுகமூடப்பட்ட ஒரு வாய்போலிருந்தது புண். அதைச்சுற்றி தோல் வெண்ணிறமாக உரிந்து நின்றது. “இனி கட்டுப்போடவேண்டியதில்லை. வெளிக்காற்றை உண்டு தோல் வளரட்டும்” என்றார் ஊஷரர். “என்ன நிகழ்ந்தது?” என்று சகுனி கிருதரிடம் கேட்டார் “இந்தப் புண் ஏது?” கிருதர் ஓரக்கண்ணால் ஊஷரரை நோக்க “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றார் ஊஷரர். “என்னால் தெளிவாக நினைவுகூர முடியவில்லை. ஒரு ஆழ்ந்த இருட்குகைக்குள் என் காலை என் தந்தை கடித்து தசையை அள்ளி எடுப்பதைக் கண்டேன்… அவரது வாயின் குருதி வாசனையைக்கூட உணர்ந்தேன்” என்றார் சகுனி. ஊஷரர் புன்னகையுடன் “அதுவும் உண்மையே” என்றார்.
புண் ஆறியபின்னர் கிளம்பலாம் என்று ஊஷரர் உறுதியாகச் சொன்னதனால் மேலும் தொடர்ந்து அங்கே தங்கவேண்டியிருந்தது. மூன்று மாதங்களில் சகுனி எழுந்து அமர்ந்தார். அவரது உடல் மீண்டும் வெண்ணிறமான தோலுடன் மீண்டு வந்தது. அதே முகம், அதே கண்கள், அதே உடல். ஆனால் அது முற்றிலும் இன்னொருவர் என கிருதர் உணர்ந்தார். புன்னகையோ சொற்களோ கூட மாறவில்லை. ஆனாலும் சகுனி அல்ல அது என்று அவர் உள்ளம் மறுத்துக்கொண்டே இருந்தது.
எழுந்து நடக்கத்தொடங்கியநாளில் வலி தாளாமல் முனகியபடி சகுனி அமர்ந்துவிட்டார். “நரம்பு ஒன்று அறுந்துவிட்டது இளவரசே. அது இனி எப்போதும் இப்படித்தான் இருக்கும். எந்த மருத்துவமுறையாலும் அதை பொருத்தமுடியாது. இந்தவலியை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க அறிந்தாகவேண்டும்” என்றார் ஊஷரர். “ஆம், நான் அதை அறிவேன்” என்றபின் கண்களை மூடி “என் தந்தையின் ஆணை அது” என்றார் சகுனி. “நீங்கள் இந்த வலியுடன் நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டியதுதான். புரவியில் அமரவும் போரிடவும் பயிலவேண்டும்… வேறுவழியில்லை.”
மேலும் ஆறுமாதங்கள் அவர்கள் அந்த பாலைவனச் சிற்றூரில் தங்கியிருந்தனர். நூறு குடும்பங்களிலாக முந்நூறுபேர் மட்டுமே வாழும் ஊர் அது. பாலைவனத்தில் வேட்டையாடுவதும் வழிப்போக்கருக்கு உணவளிப்பதுமே அவர்களின் தொழிலாக இருந்தது. அந்தச் சிற்றூரைச்சூழ்ந்து நூறு காதம் தொலைவுக்கு வெறும்பாலை விரிந்துகிடந்தமையால் அவர்கள் எவரும் அங்கிருந்து வெளியே சென்றதில்லை. அவ்வழிச்செல்லும் வணிகர்கள் அன்றி எவரையும் அவர்கள் கண்டதில்லை.
“அரசு, அறம், விண்ணுலகம் எனும் மூன்று மாயைகளும் இல்லாத எளிய மக்கள். ஆகவே மகிழ்ச்சியானவர்கள்” என்றார் ஊஷரர். “நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இங்கே வந்தேன். இம்மக்களை விரும்பினேன். மானுட உள்ளம் அறிந்துகொள்ள முடியாத எதைப்பற்றியும் அவர்களுக்கு ஆர்வமில்லை. அதைப்போல வரமுள்ள வாழ்க்கை வேறில்லை. அவர்களில் ஒருவனாக வேண்டும் என்று இங்கேயே தங்கிவிட்டேன்.”
கிருதர் புன்னகைத்து “ஊஷரரே, அப்படியென்றால் அந்த மூன்று மாயைகளையும் ஏன் மானுடன் உருவாக்கிக்கொண்டான்?” என்றார். “கிருதரே, ஒவ்வொன்றையும் சிடுக்காக ஆக்கிக்கொள்ளும் மனநிலை ஒன்று மானுடனில் வாழ்கிறது. அவனுடைய பண்பாடும் ஞானமும் எல்லாம் அதற்காகப் படைக்கப்பட்டவையே.” கிருதர் “ஏன்?” என்று மீண்டும் கேட்டார். “சிக்கலான ஒன்றைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” கிருதர் “அது என்னைச் சீண்டும். அதை அவிழ்க்கவும் புரிந்துகொள்ளவும் முயல்வேன்” என்றார். “புரிந்துகொண்டபின் உங்கள் ஆணவம் நிறைவுறும். உங்கள் அகம் மகிழும்” என்ற ஊஷரர் சிரித்து “அதற்காகத்தான்” என்றார்.
சகுனி நடக்கத்தொடங்கியபோது அவரை முற்றிலும் இன்னொருவராக கண்களாலும் பார்க்க கிருதரால் முடிந்தது. அவரது நடை ஒருபக்கம் சாய்ந்ததாகவும், வலதுகாலை இரும்பாலானதுபோல முயன்று இழுத்துவைப்பதாகவும் இருந்தது. வலதுகாலில் உடலை சுமத்தலாகாது என்பதற்காக எப்போதும் இடப்பக்கமே சரிந்தமையால் இடப்பக்கம் மட்டுமே அவரது உடலாக ஆகியது. இடதுகையால் அனைத்தையும் செய்தார். இடது கையால் புரவியைப்பிடித்து இடது காலைத்தூக்கிவைத்து ஏறிக்கொண்டார். பேசும்போதுகூட வலதுகண் உயிரற்றிருப்பதாகவும் இடதுகண்ணே சொற்களை தொடுப்பதாகவும் தோன்றியது. குரல் கூட இடதுபக்கமாக எழுவதாகவும் ஒலிகளை இடதுகாதால் அவர் கேட்பதாகவும் கிருதர் எண்ணினார்.
நேருக்குநேர் அவரை பார்த்துக்கொண்டிருக்கையில் அவரது பழக்கமான உருவம் சற்றே மயங்கச்செய்யும். அவரது நிழல் தோற்றத்தில் முற்றிலும் இன்னொருவராகவே தெரிந்தார். அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் விழி தூக்கி சுவரின் நிழலை நோக்கினால் அவருடன் கன்னங்கரிய இன்னொருவர் இணையாக அமர்ந்திருப்பதாகத் தோன்றி அகம் துணுக்குற்றது. அதை அவர் மட்டுமல்ல அத்தனை வீரர்களும் உணர்ந்திருந்தனர். அவர்கள் அவரிடம் பேசும்போது அந்த அச்சத்தை கிருதர் கண்டார். அவரில் ஒரு பாலைவன தேவன் குடியேறியிருப்பதாக அவர்கள் நம்பினர். அந்தத் தேவன் ஓநாய் முகம் கொண்டவன் என்று ஒருவன் கதை சொன்னபோது மரத்துக்கு அப்பால் நின்று கிருதர் அதைக்கேட்டார்.
சகுனியை அவரது குதிரை முழுமையாகவே ஏற்க மறுத்துவிட்டது. அவர் அருகே வந்தபோதும் சேணத்தைப்பற்றியபோதும் அது தலையசைத்து, செருக்கடித்து வரவேற்றது. அவர் ஏறியமர்ந்ததுமே அஞ்சி கனைத்தபடி துள்ளி அவரை கீழே வீழ்த்த முயன்றது. வீரர்கள் அதைப்பிடித்து நிறுத்தி சகுனியை மீட்டனர். பலவகையில் முயன்றபின்னரும் அதை பழக்க முடியவில்லை. “உங்கள் உடல் மாறிவிட்டது இளவரசே, ஆகவே உங்களை அதனால் புரிந்துகொள்ளமுடியவில்லை” என்றார் கிருதர். இன்னொரு புரவியிடம் முற்றிலும் புதியவராக பழகி அதில் பயிற்சிசெய்தார் சகுனி.
ஆறுமாதம் கழித்து அவர்கள் ஊஷரரிடமும் அந்த ஊராரிடமும் விடைபெற்று கிளம்பினர். வழியெங்கும் சகுனி விழிகளால் சுற்றும் நோக்கியபடி அமைதியாகவே வந்தார். “இளவரசே, தாங்கள் ஏதோ சிந்திக்கிறீர்கள் என்று தோன்றுகிறது” என்றார் கிருதர். “என் பார்வையும் முழுமையாக மாறிவிட்டது போலிருக்கிறது கிருதரே. இந்தக் காட்சிகளை எல்லாம் நான் முற்றிலும் புதியதாகவே காண்கிறேன்” என்றார் சகுனி. “உங்கள் இடப்பக்கம் வலுப்பெற்றுவிட்டது” என்றார் கிருதர். “நாம் பார்ப்பதுதான் உலகா?” என்று சகுனி தனக்குள் என சொல்லிக்கொண்டார்.
மூலஸ்தானநகரியின் மாபெரும் சூரியதேவர் ஆலயத்தைச் சுற்றியிருந்த கடைத்தெருவில் ஒரு சத்திரத்தில் அவர்கள் தங்கினர். கிருதர் சத்திரத்துக் காவலனிடம் அவர்கள் அஸ்தினபுரிக்குச் செல்லும் காந்தாரத்து ஷத்ரியர்கள் என்று மட்டும் சொன்னார். பாலைவனப் பயணிகள் அதிகம் இல்லாத பருவம் அது என்பதனால் சூரியர்கோயிலைக் காணவந்தவர்களே சத்திரத்தில் இருந்தனர். வீரர்கள் குதிரைகளை பின்கட்டுக்குக் கொண்டுசென்று அங்கிருந்த பெரிய கல்தொட்டியில் நீர் காட்டிவிட்டு கொட்டிலில் கட்டினர். அவர்கள் தங்க அங்கேயே இடம் அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் உடனே உடைகளைக் களைந்து அங்கே நிறைக்கப்பட்டிருந்த கல்தொட்டிகளின் நீரில் குளிக்கத் தொடங்கினர்.
கிருதர் சகுனி நீராடவும் உடைமாற்றவும் வேண்டியவற்றை செய்துவிட்டு விரைந்துசென்று நீராடி உடைமாற்றிவந்தார். சகுனிக்கான உணவை சத்திரச் சேவகன் கொண்டு செல்வதைக் கண்டு “இவ்வளவு உணவு அவருக்குப் போதாது” என்றார் கிருதர். “இதுவே இருவருக்கான உணவு” என்று சேவகன் தயங்க “அவர் இதற்கு இருமடங்கு உண்பார்” என்றார் கிருதர். அவன் தலைவணங்கி திரும்பிச்சென்றான். சத்திரத்துச் சமையற்காரன் உள்ளே “அவன் என்ன மனிதனா ஓநாயா?” என்று சொல்வதைக்கேட்டு கிருதர் புன்னகை செய்துகொண்டார்.
அந்தியில் இளங்காற்று கோதுமைவயல்களின் நீர்ப்பாசிமணத்துடன் வீசத்தொடங்கியது. அறைக்குள் படுக்க சகுனி விரும்பவில்லை. கிருதர் அவருக்கு புறத்திண்ணையிலேயே ஈச்சம்பாய் விரிக்கச் சொன்னார். அங்கே காற்று நான்குபக்கமிருந்தும் சுழன்று வீசியது. கல்பலகைகள் பதித்த திண்ணை குளுமையாக இருந்தது. முன்னரே அங்கே பலர் படுத்திருந்தனர். சற்று அப்பால் கிருதர் தனக்கான பாயை விரித்துக்கொண்டார். மரக்கட்டைத் தலையணையைப்போட்டுக்கொண்டு சகுனி மெல்ல அமர்ந்து இரு கைகளையும் ஊன்றி வலியுடன் முனகியபடி பின்னால் சரிந்து படுத்தபின் மேலும் வலியுடன் வலதுகாலை நீட்டிக்கொண்டார்.
“வலி ஒரு நல்ல துணைவன்” என்றார் அப்பால் படுத்திருந்த ஒருவர். திண்ணையின் பிறையில் எரிந்த சிற்றகலின் ஒளி அவர்மேல் விழவில்லை. வெறும் குரலாகவே அவர் ஒலித்தமையால் அந்தப் பேச்சு கூரியதாக இருந்தது. “நாம் கெஞ்சினாலும் மிரட்டினாலும் விலகிச்செல்லாதது. வாழ்நாள் முழுக்க நீடிக்கும் பெரும்வலி கொண்டவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு வேறு ஏதும் தேவையில்லை. அவர்களின் வெற்றிடங்களை எல்லாம் அதுவே நிறைத்துவிடும்.”
சகுனி “உமது வலி என்ன?” என்றார். “பிறவியிலேயே என் முதுகில் சில எலும்புகள் இல்லை. என் உடலின் எடையை முதுகெலும்பால் தாங்கமுடியாது. ஆகவே எழுந்து நிற்பதே பெரும் வதை எனக்கு” என்றார் அவர். “ஆனால் நான் எப்போதும் எழுந்து நிற்பேன். முடிந்தால் தூங்கும்போதுகூட நிற்கவே விரும்புவேன்…” சகுனி சிரித்து “வலியை நீர் என்னவாக உருவகித்திருக்கிறீர்?” என்றார். “யானையாக. என்னுடன் மிகப்பெரிய நிழலாக அந்தயானை வந்துகொண்டிருக்கிறது. அதன் எடைமிக்க துதிக்கையை என் தோள்மேல் போட்டிருக்கிறது. சிலசமயம் மத்தகத்தையே என் மேல் வைத்துக்கொள்கிறது” என்றபின் “நீங்கள்?” என்றார். “ஓநாயாக… ஓசையற்ற காலடிகளுடன் எப்போதும் கூடவே வருகிறது” என்றார் சகுனி.
“காந்தார இளவரசே, என் பெயர் கணிகன். சாண்டில்ய கோத்திரத்தைச் சேர்ந்த வைதிகன். மூன்றுவேதங்களையும் அவற்றின் வேதாங்கங்களுடன் கற்றேன். உபவேதங்களையும் வேதாந்தத்தையும் கற்றுத்தேர்ந்தபின் அதர்வவேதம் கற்பதற்காக கூர்ஜரத்துக்கு வந்தேன். கற்றுமுடித்தபின் திரும்புகிறேன்” என்றார் கணிகர். “நான் காந்தார இளவரசர் என எப்படித் தெரியும்?” என்று சகுனி கேட்டார். “தங்கள் வீரர்கள் பேசிக்கொள்ளமாட்டார்களா என்ன?” என்று கணிகர் சிரித்தார். கிருதர் “அவர்களிடம் சொல்லக்கூடாதென்று விலக்கினேனே” என்றார்.
கணிகர் சிரித்து “கிருதரே, பெரியவர்கள் தங்களை எளிமையாக ஆக்கி மறைத்துக்கொள்ளமுடியும். ஏனென்றால் அவர்கள் பெரியவர்கள் என்று அவர்களுக்குத்தெரியும். சிறியவர்கள் அப்படி செய்யமுடியாது. அவர்கள் வாழ்வதே பெரியவர்களின் அடையாளங்களுடன் ஒட்டிக்கொண்டுதான். படைவீரர்கள் தாங்கள் எந்த அரசரின் வீரர்கள் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்… அவர்களை எவராலும் தடுக்கமுடியாது…” என்றார்.
சகுனி சிலகணங்கள் கழித்து “நீர் எங்கு செல்கிறீர்?” என்றார். ”நான் இங்கே சிந்துநதிக்கரையில் உள்ள தொன்மையான சாம்பவ குருகுலத்தில் அதர்வம் கற்றேன். என்னுடன் அதர்வம் கற்ற யாஜர், உபயாஜர் என்னும் இரு வைதிகரும் அங்கநாட்டில் கல்மாஷபுரி என்ற ஊரில் பெரும்சிறப்புடன் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அவர்களுடன் இருந்து நானும் செல்வமும் புகழும் பெறலாமென்று எண்ணி அவர்களை தேடிச்சென்றேன் அவர்கள் அங்கிருந்து துருபத மன்னரின் அழைப்பை ஏற்று பாஞ்சாலநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள். நானும் பாஞ்சாலநாட்டுக்குச் சென்றேன். அவர்கள் அங்கிருந்தும் சென்றுவிட்டார்கள். நான் மீண்டும் சாம்பவரின் குருகுலத்துக்கே செல்கிறேன்” என்றார் கணிகர்.
“பாஞ்சாலத்திற்கு அதர்வ வைதிகர் ஏன் சென்றனர்?” என்றார் சகுனி இயல்பாக. “துருபதன் ஸௌத்ராமணி என்னும் பூதயாகம் ஒன்றை செய்திருக்கிறார்” என்றார் கணிகர். “அது பகைமுடிக்கும் மைந்தரைப் பெறுவதற்கான யாகம்.” சகுனி வலிமுனகலுடன் புரண்டுபடுத்து “பகை முடிக்கவா? எவருடன்?” என்றார். “காந்தாரரே, தாங்கள் அறிந்திருப்பீர்கள். துரோணர் தன் வஞ்சத்தைத் தீர்க்க தன் மாணவனாகிய அர்ஜுனனை அனுப்பி துருபதனை வென்றார். அவரை அர்ஜுனன் தேர்க்காலில் கட்டி இழுத்துச்சென்று துரோணரின் காலடியில் வீழ்த்தினான். அவர் தன் காலால் துருபதனின் தலையை எட்டி உதைத்து அவமதித்தார். பாஞ்சாலநாட்டின் பாதியை பறித்து தன் மைந்தன் அஸ்வத்தாமனுக்கு அளித்தார்.”
“ஆம்” என்றார் சகுனி. கணிகர் “அவமதிக்கப்பட்ட துருபதன் அமைதிகொள்வதற்காக கங்கைக்கரையோரமாகச் சென்று தேவப்பிரயாகையில் நீராடினார். அங்கே ஒரு கங்கையன்னை தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். பகைமுடிக்க வரம்வேண்டும், அகம் அடங்க அருளவேண்டும் என்று பாஞ்சாலர் கோரினார். கங்கை தானே மகளாக வந்து அவருக்குப்பிறப்பதாகவும் அதற்காக ஸௌத்ராமணி என்னும் வேள்வியைச் செய்யும்படியும் சொன்னாள். அதைச்செய்யும் தகுதிபடைத்தவர்களைத் தேடிச்சென்று யாஜரையும் உபயாஜரையும் கண்டுபிடித்து அழைத்துச்சென்றிருக்கிறார். இதெல்லாம் பாஞ்சாலத்தின் கடைத்தெருவில் பேசப்படும் கதைகள்” என்றார்.
“வேள்வி நிறைவுற்றதா?” என்றார் சகுனி. கணிகர் “ஆம், அதை புத்ரகாமேஷ்டியாகம் என்றுதான் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறார்கள். மிகச்சில வைதிகர்களுக்கே அது என்ன என்று தெரியும்” என்றார். “வேள்வி முழுமையடைந்தபோது நெருப்பில் முதலில் இரு விழிகள் திறந்தன என்று சொல்கிறார்கள். பின்னர் கரிய நிறம் கொண்ட ஒரு பெண்முகம் தெரிந்து மறைந்தது. கங்கையே நெருப்பில் வந்து தோன்றியிருக்கிறாள் என்று யாஜர் சொன்னார்.”
“அவள் சத்வகுணம் கொண்ட கன்னியாக இருப்பாள் என்றும் அவளது சத்வகுணமே பாண்டவர்களின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்றும் யாஜர் சொன்னதும் துருபதன் ரஜோ குணம் கொண்ட ஒரு மைந்தன் தனக்கு வேண்டும் அவன் தன் கையால் துரோணரின் தலையை வெட்டி தன் காலடியில்போடவேண்டும் என்று கூவினார். அவ்வண்னமே ஆகுக என்று யாஜர் சொன்னார். நெருப்பில் மேலும் இரண்டு விழிகள் திறந்தன. பொன்னிறமான கவசகுண்டலங்கள் கொண்ட ஒரு முகம் தெரிந்தது” என்றார் கணிகர்.
“ஆனால் துருபதனின் சினம் அடங்கவில்லை. பீஷ்மரைக் கொன்று அஸ்தினபுரியின் அழிவை நிகழ்த்தும் தமோகுணம் கொண்ட ஒரு மைந்தன் தனக்கு வேண்டும் என்று மீண்டும் கேட்டார். துருபதனே, முன்னரே உன் தந்தை தமோகுணம் திரண்ட மாவீரன் ஒருவனை மைந்தனாக ஏற்றிருக்கிறான். அவன் பீஷ்மரைக் கொல்வான். அவனை நீயும் உன் மைந்தனாக இந்நெருப்பை ஆணையாக்கி ஏற்றுக்கொள்ளலாம். அப்போது முக்குணங்களும் கொண்ட மைந்தர் உன்னிடம் இருப்பார்கள்” என்றார் உபயாஜர். “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் துருபதன். நெருப்பைத் தொட்டு சிகண்டியையும் தன் மைந்தனாக ஏற்றுக்கொண்டார்” கணிகர் சொன்னார்.
சகுனி நெடுநேரம் இருட்டை நோக்கிக்கொண்டு கிடந்தார். கணிகர் சொன்னார் “சென்ற மாதம் பிருஷதரின் மகளும் துருபதனின் இளைய அரசியுமான பிருஷதி இரட்டைக்குழந்தைகளை பெற்றிருக்கிறாள். பெண்குழந்தை கரிய நிறத்தவள் என்பதனால் கிருஷ்ணை என்று பெயரிடப்பட்டாள். அவளை திரௌபதி என்றும் பாஞ்சாலி என்றும் அழைக்கிறார்கள். ஆண்குழந்தைக்கு வெல்லமுடியாத கவசங்கள் கொண்டவன் என்ற பொருளில் திருஷ்டத்யும்னன் என்று பெயரிட்டார்கள்.” பின்னர் “அஸ்தினபுரியின் பாண்டவர்களின் அழிவு அங்கே இரு மகவுகளாக பிறந்துவிட்டிருக்கிறது இளவரசே” என்றார்.
சகுனி அதன்பின் ஒன்றும் பேசவில்லை. கிருதர் தன் நெஞ்சு அடித்துக்கொள்ளும் ஒலியை இருட்டுக்குள் கேட்டார். கணிகர் “காந்தார இளவரசரின் விருப்பத்தை விதியும் கொண்டிருக்கிறது” என்றார். சகுனி சினத்துடன் திரும்பி “என்ன விருப்பம்?” என்றார். “உங்கள் உடலே அந்த விருப்பத்தை வெளிப்படுத்துகிறதே” என்று கணிகர் நகைத்தார். “வலியாக உடலை அறிந்துகொண்டே இருப்பவன் நான். ஆகவே என்னால் பிற உடல்களை அறியமுடியும். உடல் என்னும் தழல் உள்ளமெனும் நெய்யே. நானறியாத உள்ளம் என ஏதுமில்லை.”
“என்னால் பிறர் எண்ணங்களை வழிநடத்த முடியும்” என்றார் கணிகர். “எண்ணங்கள் ஆட்டுமந்தைபோல. அதில் முதன்மையான ஆடு எது என்று அறியவேண்டும்.. அந்த எண்ணத்தை நம் வசப்படுத்தி மெல்ல இட்டுச்செல்லவேண்டும். அனைத்து எண்ணங்களும் அதைத் தொடர்ந்து வரும்.” சகுனி மெல்ல நகைத்தார். வேண்டுமென்றே அந்த ஏளன ஒலியை அவர் எழுப்புகிறார் என்று கிருதர் அறிந்தார். “அதற்கு இப்போது நான் பாஞ்சாலம் பற்றி பேசியதே சான்று” என்றர் கணிகர். சகுனி ஆர்வம் தெரியாத குரலில் “எப்படி?” என்றார்.
கணிகர் “நான் யாஜரையும் உபயாஜரையும் அறியமாட்டேன். அவர்கள் என் குருகுலத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல. நான் பாஞ்சாலத்துக்குச் செல்லவுமில்லை. நான் அதர்வவேதம் பற்றிச் சொன்னதுமே நீங்கள் யாஜரைப்பற்றி எண்ணினீர்கள். அவர்களை துருபதன் தேடிச்சென்ற செய்திதான் நீங்கள் இறுதியாக அறிந்தது. அந்த எண்ணத்தை நான் தொட்டேன். அதை என் கையில் எடுத்துக்கொண்டேன். நான் கேள்விப்பட்ட கதையைச் சொன்னேன்” என்றார். “இப்போது நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் அனைத்து எண்ணங்களும் என்னால் உருவாக்கப்பட்டவை.”
சகுனி சிலகணங்கள் கழித்து “நாளை நீர் என்னுடன் வாரும்” என்றார். “என்னுடன் இரும். உமது பணி எனக்குத்தேவை” கணிகர் சிட்டுக்குருவி ஒலி போல மெல்ல நகைத்து “நான் விழைந்ததும் அதுவே” என்றார்.