வெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை

10734185_10202946252401717_1359199130224699459_n

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.

இது ஒரு வழக்கமான புத்தக வெளியீட்டு விழா அல்ல. இது ஒரு கொண்டாட்டம். கால எந்திரத்திம் ஒன்றில் பின்னோக்கிச் சென்று கம்பனோ வியாசனோ வள்ளுவரோ இளங்கோவோ எழுதிக்கொண்டிருக்கும் காலத்திலேயே அவர்களின் படைப்பை படித்து அவர்களுடன் உரையாடுவது எத்தனை இனிமையான அனுபவமாய் இருக்குமோ அந்த அனுபவத்தை ஜெயமோகன் நவீன இலக்கிய வாசகர்களுக்கு தந்துகொண்டிருக்கிறார்.

மகாபாரதத்தை நாவல் வடிவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் எழுத திட்டமிட்டிருக்கிறார். வெண்முரசு முடிவடையும்போது கிட்டத்தட்ட 30ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக, 40க்கும் மேலான தனி நாவல்களாக உலகின் மிகப்பெரிய நாவல் வரிசையாக உருவாகியிருக்கும். இந்த கணக்குகள் என்றேனும் ஒருநாள் விஞ்சப் படலாம் ஆனால் வெண்முரசு எனும் நவீன காப்பியம் அதன் சொல்வன்மைக்காகவும், இலக்கிய நயத்துக்காகவும், தத்துவ நோக்கிற்காகவும், காம குரோத லோப மோகமெனும் நூல் நுனிகளில் தான் தான் நான் நான் என்று ஆடிக் கொண்டிருக்கும் மாந்தர்களின் கதைக்காகவுமே நினைவுகூறப்படும்.

தமிழும், தமிழ் இலக்கியமும், இந்தியாவும், இந்திய காவிய மரபும் உலக பேரிலக்கியங்களில் ஒன்றான மகாபாரதமும் கொண்டாடப்படும் இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றுவதில் மிகப் பெருமையடைகிறேன்.

1. இளையராஜா

மொசார்த் ஐரோப்பிய சிந்தனையை வடிவமைத்தார் என்பார்கள். அது எப்படி ஓர் இசைக்கலைஞன் ஒரு சிந்தனைமுறையை உருவாக்கமுடியும் என்று கேட்கலாம். புதிய இசை ஒரு புதியகாலகட்டத்தை கொண்டுவருகிறது. அதன் வழியாக, ஒரு புதிய அலையை சமூகத்தில் உருவாக்குகிறது. புதியசிந்தனைகளுக்கு வழியமைக்கிறது.

இசைஞானி திரு. இளையராஜா அப்படி தமிழ் சினிமாவில் ஒரு சிந்தனை அலையை உருவாக்கியவர். அசலான நாட்டுப்புற இசையை அவர் சினிமாவில்கொண்டுவந்தார். அதன்பின்னர்தான் உண்மையான நாட்டுப்புறம் சினிமாவில் வந்தது. பாரதிராஜா உண்மையான கிராமத்தைக் தமிழ் திரைக்கு ராஜாவின் இசையின் உதவியுடன் கொண்டுவந்தார்.

தமிழ் சினிமாவில் 70களில் உருவான நியோ ரியலிசத்தின் மையம் இளையராஜா. அந்த அலை இலக்கியத்தில்கூட எதிரொலித்தது என்கிறார் ஜெயமோகன். எழுபதுகளுக்குப்பின் உருவான கிராமிய எழுத்துக்கள் ஏராளம். ஒடுக்கப்பட்ட ஒரு சமூகப்பரப்பு தன் கதையை தானே சொல்லிப்பார்க்கத் துவங்கியது.

திரு. இளையராஜா அவர்கள் ஒரு பாலம். மேற்கிசைக்கும் இந்திய இசைமரபுக்கும். நாட்டுப்புற இசைக்கும் செவ்வியல் இசைக்கும். திரையிசைக்கும் நுண்ணிசைக்கும். அதேபோல மரபுக்கும் நவீனத்திற்கும் அவர் பாலம்.

மகாபாரத மறுஆக்கம் என்பது அப்படி ஒரு பாலத்தை அமைப்பதே. அவருக்கு இந்நூல்வரிசையின் முதல் நூல் முதற்கனல் சமர்ப்பணம் செய்யபட்டுள்ளது. அவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பிலும் உங்கள் அனைவரின் சார்பிலும் வருக வருக என வரவேற்கிறோம்.

2 கமல்

ஒரேசமயத்தில் ஒரு நட்சத்திரமாகவும் ஒரு சிறந்த நடிகனாகவும் இவர் இருக்கிறார். ஒரு இயக்குநராகவும் அல்லது எழுத்தாளராகவும் நடிகராகவும் இருக்கிறார். அவரது ஒருமுகம் தமிழ் ரசனைக்கேற்ப உருவானது. இன்னொரு முகம் தமிழ் ரசனையை விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறது. அதை மாற்றியமைக்க முயல்கிறது.

தமிழ் சிந்தனையுலகை தொடர்ந்து கவனித்து வருகிறார். உலகப் போக்குகளை உடனுக்குடன் தெரிந்துகொள்கிறார். அனைத்திலும் தனக்கெனக் கருத்து கொண்டிருக்கிறார். அதை தைரியமாக முவைக்கவும் பின்பற்றவும் அவர் தயங்குவதுமில்லை. ஆகவே அவர் நடிகர் மட்டுமல்ல. கலாச்சாரநாயகனாகவும் திகழ்கிறார். எல்லா கலாச்சார நாயகர்களையும் போல விரும்பவும் விமர்சிக்கவும் விவாதிக்கவும்படுகிறார். இந்த மேடையில் அவர் இருப்பது ஒரு கலைஞனாக மட்டுமல்ல ஒரு கலாச்சார விமர்சகராகவும்கூட.

சற்றே காலம் தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் திரு. கமல்ஹாசன் அவர்களை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பிலும் உங்கள் அனைவரின் சார்பிலும் வருக வருக என வரவேற்கிறோம்.

அசோகமித்திரன்

தமிழில் பொதுவாக‌ எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் படைப்பூக்கம் என்பது தொடக்கம் மட்டும்தான். அந்த துவக்க‌ விசையில் போகும் தூரம் தான் போவார்கள். அரை நூற்றாண்டாக தொடர்ந்து படைப்பூக்க நிலையிலேயே இருப்பவர் எழுத்தாளர் அசோகமித்திரன். 1960களில் வெளிவந்த ’வாழ்விலே ஒருமுறை’ போன்ற கதைகள் முதல் சமீபத்தில் வெளிவந்த ’இரு யுத்தங்களுக்கு நடுவே’ வரை புதுமை மாறாதவை அவரது படைப்புகள்.

மென்மை, நுண்மை, யதார்த்தம் கொண்ட படைப்புகளை எழுதியவர் ஆனால் அசோகமித்திரன் தொடர்ந்து மரபையும் புராணங்களையும் தொட்டுப்பேசி வருபவர்.

இந்திய ஞானமரபை நோக்கும் நவீனத்துவத்தின் குரல் அசோகமித்திரன். விமர்சனமும் நையாண்டியும் பிரமிப்பும் கலந்து மரபை நோக்குபவர்.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது பெரும் பாராட்டை அதற்களித்தவர். எங்கள் எழுத்தாளர் ஜெயமோகன் தனது எழுத்தாளர் என மரியாதையுடன் அழைக்கும் மதிப்புக்குரிய திரு அசோகமித்திரன் அவர்களை இந்த விழாவுக்கு வரவேற்கிறேன்.

3 பி ஏ கே

நேரு யுகம் என்ற ஒரு பொற்காலம் நமக்கு இருந்தது என்பதற்கான இறுதித் தடயமாக எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனை கருதலாம் மதச்சார்பின்மை, அறிவியல் மீதான நம்பிக்கை, நுண் கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் , மதத்தையும் மரபையும் விமர்சனங்களுடன் அணுகுவது. எல்லைக்குட்பட்ட இடதுசாரிப்பார்வை, எப்போதும் எளிய நகைச்சுவையை இவையெல்லாம் நேரு யுகத்தின் இயல்புகள். அவையெல்லாம் பி ஏ கேயின் இயல்புகளும்கூட. நாவலாசிரியராக கலை விமர்சகராக பண்பாட்டு விமர்சகராக பலமுகம் கொண்டவர் பி.ஏ கிருஷ்ணன்.

இந்த மேடையில் பாரம்பரியம் விமர்சிக்கப்படும்போது நேருவின் இருப்பு நீடிப்பதாக உணரச்செய்யும் பி ஏ கே இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

அவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பிலும் உங்கள் அனைவரின் சார்பிலும் வருக வருக என வரவேற்கிறோம்

4 நாஞ்சில்

நசுக்கப்பட்டவனின் விமர்சனக்குரல் நாஞ்சில். அவமதிக்கப்பட்டவர்களுக்கான குரல். பந்தியில் இருந்து பசியோடு எழுப்பிவிடப்பட்டவர்களின் குரல். எட்டடி அறைக்குள் இருபதுபேர் தங்கும் நகர வாழ்க்கையின் குரல். முதலில் அது நையாண்டியாக வெளிப்பட்டது. பின்னர் நேரடியான அறச்சீற்றமாக வெளிப்பட்டது.

நாஞ்சில் இன்று மெல்ல செவ்வியல் நோக்கி கனிந்துள்ளார் என்று கூறலாம். கம்பராமாயண அறிஞராக இன்று அவர் அறியப்படுகிறார். முறையாக குருவிடம் கம்பராமாயணத்தை கற்றறிந்தவர் நாஞ்சில்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நெருங்கிய வழிகாட்டிகளில் ஒருவராகவே அவரை நாங்கள் காண்கிறோம். எங்களின் எல்லா நிகழ்வுகளிலும் அவர் முக்கியமான பங்களித்துள்ளார் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பிலும் உங்கள் அனைவரின் சார்பிலும் நாஞ்சில் நாடன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்

பிரபஞ்சன்

எழுத்தாளர் பிரபஞ்சன் முற்போக்கு யதார்த்தவாத மரபைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார். செவ்வியல்கலைகளில் ஈடுபாடுள்ளவர். அது அவர் இசைபற்றி எழுதிய கதைகளில் வெளிப்படுகிறது.

விரிந்த வரலாற்று நோக்குடன் இருநாவல்களை எழுதியுள்ளார். மானுடம் வெல்லும், வானம் வசப்படும் இருநாவல்களும் தமிழின் முக்கியமான வரலாற்று நூல்கள்

இப்போது மகாபாரத மாந்தர் பற்றி தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார். எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்களை

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பிலும் உங்கள் அனைவரின் சார்பிலும் வருக வருக என வரவேற்கிறோம்

.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பிலும் உங்கள் அனைவரின் சார்பிலும் இயக்குனர். வசந்தபாலனை வருக வருக என வரவேற்கிறோம்

இந்த விழாவுக்கு வந்து எங்களை கவுரவித்திருக்கும் மகாபாரத பிரசங்கியர்

முனைவர் திரு இரா கமலகண்ணன்

திரு கிருஷ்ணமூர்த்தி

திரு எ. கே. செல்வதுரை

திரு தேவன்

திரு இராமலிங்கம்

ஆகியோரை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

மேலும் எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள நண்பர்கள், எழுத்தாளர்கள், ஊடக நண்பர்கள், திரையுலக நண்பர்கள், மிக முக்கியமாக வாசகர்கள். அனைவரையும் வருகவருகவென வரவேற்கிறோம்.

இயல் இசை நாடகம் மூன்றும் சங்கமித்திருக்கும் இந்த விழா இனிதே நடைபெற உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் கோரி முடிக்கிறேன் நன்றி.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 28
அடுத்த கட்டுரைமகாபாரதம் முன்னோடி முயற்சிகள்