கடந்துசெல்லல்

அன்பின் எழுத்தாளருக்கு,

வெண்முரசு விழா சிறப்பாக நடைபெற்றது மகிழ்சியாக இருந்தது.

சில மாதங்களாக எனக்குள் உங்களைப்பற்றியும் இந்த பெரும் முயற்சிபற்றியும் எழும் கேள்வி இது.

நீங்கள் படிக்கிற வயதில் படித்த பெரும் படைப்பாளிகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தோன்றி இருக்கிறதா? எழுத்தின் ஏதோ ஒரு உச்சம் தொடும்போது ‘அடடே இவரை கடந்து விட்டோம்’ என்று தோன்றி உள்ளதா? அந்தரங்கமான அந்த மனஅமைப்பு எந்த வகையான உணர்சிகளை தருகிறது? துள்ளல்? பெருமை? நன்றி? தனிமை? எந்த உணர்வுக்குள் அது வருகிறது? யாரை எல்லாம் கடந்து விட்டதாக உணர்கிறீர்கள்?

இப்படி காலம் தாண்டி நிற்கும் படைப்பாளிகளோடு ஓடும் ஓட்டம் பின்னோக்கி உள்ளதா அல்லது காலமற்ற முன்னோக்கி உள்ள பெருவெளியில் உள்ளதா?

இதைப் பற்றி எனக்கு பல கேள்விகளும் எண்ணங்களும் வருவதுண்டு.

interstellar திரைபடத்தை பார்த்த பின்பு இதை கேட்டாக வேண்டும் என்று தோன்றியது…

நன்றி.
சா. ராம்குமார்

***

ராம்குமார்

அந்த சினிமாவுக்கும் இந்த கேள்விக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை.

எழுதத் தொடங்கும்போது அப்போது எவர் இலக்கிய உலகை ஆள்கிறார்களோ அவர்களைக் கடந்துவிடவேண்டும் என்ற வேகம் இளம் எழுத்தாளர்களுக்கு இருக்கும். அப்படி ஒரு தலைமுறைக்கு ஒரு மொழிக்கு ஒன்றோ இரண்டோ பேர்தான் இருப்பார்கள். அவர்களையே அனைவரும் இலக்காக்குவார்கள்.

பொதுவாக எந்த எழுத்தாளர் நம்மை ஆழமாக பாதிக்கிறாரோ எவரை நாம் கூர்ந்து கவனிக்கிறோமோ அவரையே நாம் கடந்துபோகவேண்டிய இலக்காகவும் கொள்வோம்.

இலக்கியத்தில் ஓர் நுட்பமான விஷயம் உண்டு. எழுத்தாளனுக்கு எப்போதும் அந்தரங்கமாக அவன் சென்றடைந்த தொலைவு தெரியும். அடைந்த வெற்றிகள் தெரியும். வெளியே என்னதான் பாவனை செய்தாலும் உள்ளூர அதுபற்றிய அளவீடு தெளிவாகத்தான் இருக்கும்

தன் எழுத்தில் வாசகன் கண்டு கொண்டாக வேண்டும் என எழுத்தாளனே விரும்பும் சில இடங்கள் இருக்கும். அவையே அவன் வெற்றியடைந்த இடங்கள். அவை அவனுடைய அறிவை, பயிற்சியை அவனே கடந்து சென்றவையாக, நிகழ்ந்தவையாக இருக்கும். அவனே அவற்றை பிரமிப்புடன் நோக்கிக் கொண்டிருப்பான்.

அத்தகைய வெற்றிகள் நிகழ நிகழ தன்னம்பிக்கை எழுகிறது. தான் எங்கிருக்கிறோம் என்று தெரிகிறது. அது நிறைநிலையை அளிக்கிறது. அத்தகைய வெற்றிகளை அடைந்தவர்களின் மொழியும் மனநிலையுமே அவர்களை அடையாளம் காட்டிவிடும்.

கடந்துசென்றுவிட்டோம் என்று தோன்றும் இடம் இதுவே. அந்த இடத்தை அடைந்ததும் இன்னொன்றும் தோன்றத் தொடங்கும். இலக்கியம் என்பது ஒரு பெரிய பெருக்கு. அதில் நேற்றின் தொடர்ச்சியாகவே இன்று நிகழ்கிறது. கடந்துபோதல் என ஏதும் இல்லை.

மானுட ஞானம் என்ற பெரும் பிரவாகத்தின் ஒரு துளி மட்டுமே நான் என எழுத்தாளன் உணரும் இடம் ஒன்று உண்டு. அது அடக்கத்தையும் தன்னம்பிக்கையையும் ஒரே சமயம் அளிக்கும். நான் துளியே என்றும் நான் நதியல்லவா என்றும் தோன்றும் நிலை அது

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 28