உலோகம் – 15

வைஜெயந்தி என் அறையை விட்டுச் சென்றதும் நான் எதையோ உணர்ந்தேன். எதை என்று அப்போது பிரித்தறியவும் முடியவில்லை. ஆகவே நிலைகொள்ளாமல் என் அறைக்குள் சுற்றி வந்தேன். எதையோ தேடினேன். எதையென்று என்னால் உணர முடியவில்லை அப்போது. உண்மையில் என் உணர்வுகள் கலங்கிக் குழம்பியிருந்தன. கொஞ்சம் நிதானத்தில் இருந்திருந்தால் நான் தேடுவதென்ன என்று எனக்கு எளிதில் புரிந்திருக்கும் – ரகசிய ஒலிப்பதிவிகளை.

 

 

படுக்கையில் மல்லாந்துகொண்டு சொற்கள் கரைந்து ஒரு வழுக்கும் பரப்பாக மாறிவிட்டிருந்த மனத்துடன் நான் கண்ணயர்ந்துவிட்டேன். எப்போதோ விழித்துக்கொண்டபோது டாபர்மான் நாய் குரைத்துக்கொண்டிருந்தது. சாதாரணமான குரைப்பு, அது எப்போதுமே வேட்டை மனநிலையில் இருக்கிறது. வேட்டைக்கார மிருகங்களுக்கு நல்ல தூக்கம் இல்லை. ஏனென்றால் அவை தனித்தவை. பலவீனமானவையென்றாலும் வேட்டையாடப்படும் மிருகங்களே நன்றாகத் தூங்குகின்றன. காரணம் அவை மந்தையாக இருக்கின்றன. இயற்கையின் குரூரமான விதியொன்றால் அவை வேட்டைக்கார மிருகங்களைவிட குறைவான அறிவுள்ளவையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.

காலையில் கண்விழிந்த்தபோது முதலில் வந்த நினைப்பு ‘ஒலிப்பதிவிகள்’ என்ற சொல்லாக இருந்தது. ஏன் என்று குழம்பி துழாவிய மனம் நேற்றிரவை நினைத்துக்கொண்டு ஜில்லிட்டது.  வைஜெயந்தியின் சொற்களில் அதற்கான குறிப்பு இருந்தது. அதை என் ஆழம் கண்டுகொண்டிருந்தது. ஆனால் எங்கே எச்சொற்களில்? ஸோ யூ ஆர் லோடட்? ஆனால் அதை அவள் சாதாரணமாகத்தான் சொன்னாள். அவளுக்கு கண்டிப்பாக ஏதோ ஊகமிருக்கிறது. அவள் அதனால்தான் என்னைத்தேடி வந்தாள்.

நான் என் அறையைச் சோதனைபோட ஆரம்பித்தேன். அறையைச் சோதனைபோட முறைப்படிப் பயின்றவன் நான். உள்ளுணர்வு சொல்லும் இடங்களை முதலில் நிதானமாகச் சோதனையிடவேண்டும். நாம் தேடும் பொருளுக்கு ஒரு வடிவத்தை ஏற்கனவே கற்பனை செய்துகொண்டிருக்கக் கூடாது, அது வேறு வடிவில் கண்ணெதிரே இருந்தால்கூட நாம் கவனிக்க மாட்டோம்.  அதற்கும் உள்ளுணர்வையே நம்பவேண்டும், தவறாமல் அது வழக்கத்துக்கு மாறான பொருளைக் காட்டிக் கொடுத்துவிடும்.

நான் பெருமூச்சுடன் அமைதியானேன். என் அறையில் கண்டிப்பாக எந்த உளவுப்பதிவியும் இல்லை. நிதானமாக கட்டிலில் அமர்ந்து நான் பார்த்த இடங்களை மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தேன். கண் காணாத எதையாவது ஆழ்மனம் கண்டிருந்தால் அது மெல்ல உறுத்திக் கோண்டே இருக்கும். மனதை  அரைக்கவனத்துடன் பராக்குபார்க்க விட்டால் அகமனம் அதை மட்டும் காட்டிக்கொடுத்துவிடும்.

பெருமூச்சுடன் எழுந்து கழிப்பறைக்குச் சென்று அமர்ந்தேன். உடனே என் உள்ளுணர்வு சொன்னது, எங்கே ஒலிப்பதிவி இருக்கிறது என்று. நான் எழுந்து அந்த அறையை மெல்ல தேடினேன். நான் ஒவ்வொரு நாளும் கையாண்டு வந்த பொருளில், கழிப்புத்தொட்டியின் நீர்தேக்கியின் விசையின் அடியில் சிறிய பட்டாணிக்கடலை அளவுள்ள மின்னணு ஒலிவாங்கி இருந்தது.

கழிப்பறைபீங்கான்மேல் அமர்ந்து என் குடலில் இருந்து செல்போனை எடுத்து இயக்கினேன். அதில் எந்தச் செய்தியும் இல்லை. அதை திரும்ப வைக்கப்போனவன் அரைக்கணம் சிந்தித்தபின்பு அதை மீண்டும் நன்றாக உறைக்குள் கட்டி அந்தக் கழிப்பறையின் நீருக்குள் போட்டேன். . கனமான பொருள் நீரில் எம்பிச் செல்வதில்லை. கிருமிநாசினி கலந்த நீல நிற நீருக்குள் அது தெரியவுமில்லை.

கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சில கணங்கள் சிந்தித்தபின் அதை அலட்சியமாகப் போடுவது போல டிராயருக்குள்ளேயே போட்டுவிட்டேன். அதை எனக்கு பொன்னம்பலத்தார் தரும்போது காரில் டிரைவர் இருந்தான்.

எழுந்து வெளியே வந்து ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு இருந்தபோது கதவில் மெல்லிய முட்டு கேட்டது. அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்ததை கேட்டகணம் தெளிவாக உணர்ந்தேன். சட்டையை சரியாக்கி தலையை கையால் கோதியபின் கதவைதிறந்தேன். ராவ் பெரிய முகத்தில் பெரிய பற்கள் தெரிய சிரித்தபடி ”நமஸ்தே ஸாப்” என்றான். நான் ”நமஸ்தே ராவ், எப்படி இருக்கிறாய்?” என்றேன். ”நன்றாக இருக்கிறேன். எங்கள் பாஸ் உங்களை அழைத்து வரச்சொன்னார்” என்றான். என் மூளையில் மொத்த ரத்தமும் சென்று அழுந்தினாலும் முகம் இறுக்கமாகவே நீடித்தது .”ஓ” என்றேன்

”நீங்கள் உடையணிந்து வரலாம். அவசரமில்லை” என்றான் ராவ். நான் நிதானமாக உடைகளை அணிந்துகொண்டேன், நான் உடையணிவதை அவன் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு நின்றான். ”வாருங்கள்” என்று சொல்லி முன்னால் செல்ல கைகாட்டினான். நான் நடந்தபோது அவன் என் பின்னால் கால்சட்டைப்பைக்குள் கைகளை விட்டுக்கொண்டு கனத்த பூட்ஸ்கள் ஒலிக்க நடந்து வந்தான்.

அவன் என்னை பங்களாவுக்குள் கூட்டிச்செல்வான் என்று நினைத்தேன். ஆனால் பக்கவாட்டில் கொண்டுசென்று அங்கே நின்ற கருப்பு குவாலிஸ் காருக்குள் ஏறும்படிச் சொன்னான். அதற்குள் முன் இருக்கையில் டிரைவரைத்தவிர ஒருவர்  இருந்தார். சந்தன நிற முழுக்கைச் சட்டை போட்டிருந்த நடுவயது மனிதர். ராணுவ அதிகாரிக்குரிய தோற்றத்துடன் இருந்தார்.

நான் உள்ளே நுழைந்து அமர்ந்துகொண்டதும்  ராவ் என்னருகே அமர்ந்தான். கார் கிளம்பி  இரவுக்காற்று உதிர்த்த சருகுகள் குவிந்திருந்த குளிர்ந்த சாலைவழியாக மொறுமொறுவெனச் சென்றது. காவல்ராணுவத்தினரை நோக்கி டிரைவர் கையாட்டியதும் அவர்கள் மெல்ல சல்யூட் அடித்து அனுமதித்தார்கள். கார் மெல்ல வேகமெடுத்து சீறி சிறியபல சாலைகளை தாண்டி ஒரு பெரிய கேட்டை அணுகியது.

அடையாள அட்டையைக் காட்டி கேட்டைத் திறந்ததும் உள்ளே இருந்த மஞ்சளான பழைய பிரிட்டிஷ் கட்டிடம் நோக்கிச் சென்ற கார் அதன் முன்பக்கத்தை விலக்கி பக்கவாட்டில் சென்று போகன்வில்லா மரத்துக்கு அடியில் நின்றது. ”வாருங்கள்” என்றான் ராவ். நான் பேசாமல் இறங்கிக் கொண்டேன்.

என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். மரத்தட்டிகளால் பிரிக்கப்பட்ட சிறிய அறைகள். சில தட்டிகளில் அரசு அறிவிப்புகள் பசையால் ஒட்டப்பட்டு கத்தையாக தொங்கி காற்றின் ஈரப்பதத்தால் நமுத்து பின் காய்ந்து அப்பளக்கட்டுபோல விளிம்பு பிரிந்து நின்றன. நிறைய பழைய பழுப்புநிறக் கோப்புகளை தரையில் குவித்து வைத்திருந்தார்கள். துருப்பிடித்த நான்கு நாற்காலிகளில் பழைய கோப்புகள் கனத்து சரிந்திருந்தன.

என்னை கூடம்போன்ற அறைக்குள் கொண்டுசென்றார்கள். அங்கே என் உடைகளைக் கழட்டச்சொல்லி இளநீலநிறமான தொளதொளப்பான வேறு உடைகள் கொடுத்தார்கள். நான் அவற்றைப் போட்டுக்கொண்ட கணம் முதல் என்னை கைதியாக உணர ஆரம்பித்தேன். என்னை எக்ஸ்ரே கருவிக்குக் கீழே படுக்கவைத்தார்கள். ஸ்கேனரால் என் உள்ளுறுப்புகளைச் சோதனையிட்டார்கள்..

அதன்பின் ஓரு பழைய அறைக்குள் என்னைக் கொண்டு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்கள். அந்த அறையின் கூரை மிக உயரத்தில் தேக்குமர உத்தரங்களுடன் இருக்க அதிலிருந்து தொங்கிய கம்பியில் மின்விசிறி கறக் கறக் என்று சுழன்றது. அந்த அறையின் சன்னல்களின் கதவுகள் பிரிட்டிஷ்பாணியில் மேலே எம்பித்திறக்கும் பலகைச்சில்லுகள் அடுக்கப்பட்டவை. அவற்றின் மீது கட்டை அறைந்து மூடி இறுக்கியிருந்தார்கள். காற்றுப்போக்கியின் மேலே இருந்த கண்ணாடிக்கதவுகளுக்கு கரிய தாள் ஒட்டியிருந்தார்கள். தரையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புநிறமான பழைய விரிப்பு ஆங்காங்கே கிழிந்திருந்தது. தூசுவாடை, மட்கிய காகிதங்களின் வாடை. பக்கவாட்டுச் சுவரில் ஒரு பழைய இந்திராகாந்தி படம்.

ராவ் என்னருகே நின்று கொண்டிருக்க, மற்றவர் பக்கவாட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன் செல்போனை எடுத்து எதையோ பார்க்க ஆரம்பித்தார். சில நிமிடங்கள் கழித்து கதவு கிரீச்சிட்டு திறக்க ஒரு நடுவயது மனிதர் உள்ளே வந்தார். ஒல்லியான, மீசையற்ற மனிதர். அவரது கடுமையான உணர்ச்சியற்ற கண்கள் மட்டும் இல்லையென்றால் அவர் சென்னையில் ஒரு சைவ ஓட்டலில் கணக்கு எழுதுபவர் என்று சொல்லிவிட முடியும். உள்ளே செலுத்தப்பட்ட முழுக்கைச் சட்டை. கச்சிதமாக பித்தான்கள் போடப்பட்ட சட்டைக்கைகள். மடிப்பு கலையாத கால்சட்டை, சிவப்புநிறமான ஷ¥.

தன் பையில் இருந்து செல்போனை எடுத்து நேரம் பார்த்துவிட்டு நேராக இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.  விரைபபன நேரான தோள்கள். பக்கவாட்டில் இருந்த அதிகாரி செல்போனை அணைத்து சட்டைக்குள் வைத்து விட்டு முழங்கைகளை மேஜைமேல் ஊன்றிக்கொண்டார்.

”வெல், உங்க பேர் சார்லஸ் என்கிற சாந்தன் இல்லியா?” என்றார். நான் தலையை அசைத்தேன். அவர் மென்மையாகப் புன்னகை செய்து ”நான் சாந்தன்னு சொல்லிக்கிறேன். இட் இஸ் கம்பர்ட்டபிள் ·பர் மி.. ” என்றார். நான் அவரையே பார்த்தேன். அவர்தான் நான் அதுவரை நேரில் சந்தித்த மனிதர்களிலேயே அபாயகரமானவர்  என்று என் உள்ளுணர்வு சொல்லியது.

”மை நேம் இஸ் சுவாமி. சுமாமிநாதன்…” என்றார். அவர் அனேகமாக ராவின் துணைஇயக்குநர்களில் ஒருவர் என எண்ணிக்கொண்டேன். ”தமிழிலே பேசிக்குவோமே. ஸ்ரீவஸ்தவா கேன் ஆல்ஸோ ஸ்பீக் டமில்…” ஸ்ரீவஸ்தவா புன்னகை செய்தார். நான் தலையசைத்தேன்.

”நீங்க விஷயம் தெரிஞ்ச ஆள். எதனால நாம சந்திச்சிருக்கோம்னு இதுக்குள்ள ஊகிச்சிருப்பீங்க” நான் தலையசைத்தேன். வைஜெயந்தியின் உடலில், அனேகமாக ஏதேனும் நகையில், ஒலிப்பதிவி இருந்திருக்கும். என் ஊகத்தை அறிந்தவர் போல அவர் புன்னகையுடன் காதுமடலைத் தொட்டுக் காட்டினார்.

”ஸோ, இப்ப நாங்க கேக்க விரும்பற கேள்வியும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்…” என்றார். நான் பேசாமல் இருந்தேன். ”சொல்லுங்க” என்றார் மீண்டும். நான் தொண்டையைக் கனைத்து ”இந்தமாதிரி டிப்ளமாட் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல ஏலாது…என்ன கேள்வியெண்டால் கேளுங்கோ” என்றேன்.

”சரி, வைஜெயந்தி எதனாலே உங்க கிட்ட வந்து அந்த கோரிக்கையை வைச்சா? நீங்க அவள் கிட்ட சொன்னதை நாங்க பெரிசா நினைக்கலை. பொதுவா அந்த நேரத்திலே அப்டி ஒரு வார்த்தையை விடாத ஆம்பிளை கிடையாது. எங்களுக்கு தேவையான பதில் ஏன் உங்ககிட்ட அப்டி கேக்கணும்னு அவளுக்கு தோணிச்சு? நீங்க அவகிட்ட நெருக்கமா பழகியிருக்கீங்க. உங்க பேச்சிலே நடத்தையிலே ஏன் சிலசமயம் உள்ளுணர்வாக்கூட அவளுக்கு ஏதோ க்ளூ இருந்திருக்கு…”

”அதை நான் எப்டி சொல்ல ஏலும்? அவ கிட்டயே கேளுங்க” என்றேன். அவர் புன்னகை மாறாமல் ”தட் இஸ் நாட் த ஆன்ஸர்…” என்றார். ”எங்களுக்கு உங்க மேலே எப்பவுமே சந்தேகம்தான். கடல்தாண்டி வரக்கூடிய யார்மேலேயும் சந்தேகம்தான். உங்களை நாங்க சந்தேகப்பட்டதனாலத்தான் நீங்க டெல்லிக்கே வந்தீங்க…”

என்னுள் ஒரு மெல்லிய சிலிர்ப்பு ஓடியது. நான் ஒரு பொறி, மிக நுட்பமான பொறி. என்னுடன் இங்கே யார் தொடர்புகொள்கிறார்கள் என்று வேவுபார்த்திருக்கிறார்கள். அதற்காகவே என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். அதற்காக பொன்னம்பலத்தாரின் உயிரை சாதாரணமாக பணயம் வைத்து ஆடியிருக்கிறார்கள்.

நான் புரிந்துகொண்டதை அவர் புரிந்துகொண்டதுபோல ”உங்ககிட்ட யாருமே தொடர்பு வைச்சுக்கலை. இப்ப இந்தக்குட்டி. ஷி இஸ் எ பிச், தட் வி நோ வெரி வெல்… அவளுக்கு இங்கே இருந்து தப்பிப்போகணும். ஷி வாஸ் ஈவன் ஸ்லீப்பிங் வித் தட் ஓல்ட் பாஸ்டர்ட் சிவதாசன்… அவளுக்கு வேற எதுவுமே தேவையில்லை இப்ப. அதுக்காக அவள் என்ன வேணுமானாலும் செய்வாள்…”

நான் ”அவ அதுக்காகத்தான் எங்கிட்ட வந்தவள். எங்கிட்ட அதைத்தான் கேட்டவள். நான் சரி எண்டு சொன்னவன்..” அவர் கண்களைப் பார்த்து ”அவளை கூட்டிக்கொண்டு யூரோப் போகலாமெண்டு நினைச்சனான்” என்றேன். சொல்லி முடிப்பதற்குள் பின்னால் நின்றிருந்த ராவ் தன் கையில் இருந்த ஒரு சிறு கருவியை என் புஜங்களில் வைத்து அழுத்தினான். அது பழுக்கச்சூடான ஒரு ஊசியை என் தசைக்குள் செலுத்த என் தசைகள் எதிர்விசை கொண்டு துள்ள நான் பற்களைக் கிட்டித்துக்கொண்டேன். ஒருகணத்தில் என் வாயில் இருந்து ஒரு முனகல் மட்டும் வெளிவந்தது.

கையை அசைத்து அதை நிறுத்திய சுவாமி அதே பாவனையுடன் ”லூக், நாங்க ரொம்பவே டார்ச்சர் செய்வோம். உங்க இயக்கமளவுக்கே எங்களுக்கும் டார்ச்சர் தெரியும்..” மெல்ல உதடுகள் வளையும் சிரிப்புடன் ”வித்தவுட் டார்ச்சர் தேர் இஸ் நோ பவர், ஐ மீன் எனி பவர்” என்றார்.

”நான் டார்ச்சருக்கு பயப்படயில்லை” என்றேன். ”ஆனா எனக்கு வேற ஒண்டும் சொல்றதுக்கு இல்லை… நான் அங்காலை இருந்து தப்பித்தான் இங்க வந்தனான். எனக்குத்தெரிஞ்ச தொழில் இதுதான் எண்டு இதைச் செய்யுறன். நான் எப்டியாவது உயிர்பிழைச்சு வாழணும் எண்டு நினைக்கிற  ஒரு மனுஷன்…வேற ஒண்டுமே சொல்றதுக்கு இல்லை”

”இதைக் கேளுங்க” என்றபடி தன் பையில் இருந்த சிறு ஒலிப்பதிவியை எடுத்து மேஜைமேல் வைத்தார் சுவாமி. ”சில வாக்கியங்கள் சரியா வந்து விழுந்திருக்கு” என்றார். அதில் இருந்து துண்டுகளாக வைஜயந்தியின் குரல் ஒலித்தது. ”நீங்கள் இயக்கத்திலை இருந்திருக்கிறியள்.. உங்களுக்கு ஆக்களை தெரிஞ்சிருக்கும்…” இரு சொற்றொடருக்கு இடையே இருந்த தயக்கமான இடைவெளி அவள் உண்மையில் சொல்லவந்தது  அந்த இரண்டாவது சொற்றொடரை அல்ல என்று தெளிவாகவே காட்டியது.

நான் அவரது கண்களைச் சந்தித்தேன். மனிதக் கண்களை எதிர்கொள்ளாத மிருகத்தின் கண்கள் போலிருந்தன. ”நீங்க எப்டியாவது  இயக்கத்திலை இருந்து ஆரையாவது இங்காலை வர ஏற்பாடு செய்தாப்போருமே…இயக்கத்துக்கு  இங்க வாரயிக்கு நீங்க ஹெல்ப் பண்ணினா போரும்.” என்றாள் வைஜெயந்தி. அந்த இரு சொற்றொடர் நடுவிலும் மீண்டும் அந்த இடைவெளி.

”அவளுக்கு தெரியும்” என்றார் சுவாமி ”அவளுக்கு நீங்க அவள் அப்பாவைக் கொல்ல வந்தவர்னு தெரியும். ஆனா எதுக்காகவோ தயங்குறீங்கன்னு ஊகிச்சிருக்கா. அதுக்குக் காரணம் நீங்க பொன்னம்பலத்தாரை ரொம்ப நெருங்கிட்டதுதான்னு அவளுக்கு தோணியிருக்கு. அதுக்காகத்தான் அவ வந்திருக்கா. அவரைக் கொன்னா நீங்க அவளை அடைஞ்சிடலாம்னு ஆசைகாட்டியிருக்கா…”

நான் மெல்ல சிரித்து ”இப்டி ஒரு கதையச் சொன்னா நான் எதுக்கு அதைச் சம்மதிக்கணும்? நான் அவரைக் கொல்ல வந்திருந்தா ஏன் இவ்வளவுநாள் காத்திருக்கணும்?” என்றேன். ”நீங்க ஆர்டருக்காக காத்திருக்கலாம் இல்லியா” ”எப்டி…எந்தவழியா ஆர்டர் வருது?” என்றேன். ”அதை நாங்க கவனிச்சிட்டிருக்கோம்…ஏன் இந்த வைஜெயந்தியே உங்களுக்கு வந்த ஆர்டரா இருக்கலாமில்லியா” ”இவளா?” ”ஷி இஸ் எ ·பூல்…ஆனா அவளை வேற யாராவது உபயோகிச்சிருக்கலாமே”

”அதிபுத்திசாலித்தனம்…ஆனா…” என்றபின் ”சரி, நான் அவரைக் கொல்லவந்தவன் எண்டு வையுங்கோள்… அப்ப என்ன செய்வீங்கள்? கொண்டு போடுவீங்களோ?” அவர் என் கண்களை அரைக்கணம் பார்த்தபின் ”இல்லை. இவ்ளவு முக்கியமான ஆள் எங்களுக்கு பெரிய அசெட். லெட் அஸ் மேக் எ டீல்” என்றார். ”நான் இயக்கத்திலை இருந்தா டீலுக்கு வருவேன் எண்டு நினைக்கிறியளோ?” என்றேன்.

அவர் மேலும் புன்னகைத்து ” அது நீங்க சின்ன ஆளா பெரிய ஆளாங்கிறதைப் பொறுத்தது… சின்ன ஆள் யாருமே டீலுக்கு வர்ரதில்லை. பெரிய ஆள்னா டீலுக்கு பிரச்சினையே இல்லை….” புன்னகை பெரிதாக ”உங்களுக்கு தெரியாதுன்னு நெனைக்கிறேன். அந்த இயக்கத்திலே ஒரே ஒருத்தர் தவிர வேற எல்லாருமே எங்ககிட்ட எப்பவாவது பேரம் பேசினவங்கதான்”

சிலநிமிடங்கள் கழித்து ”என்ன சொல்றீங்க?” என்றார் சுவாமி. நான் ”நீங்க ரொம்ப பிரில்லியண்டான மனுஷர். ஆனா இந்த விஷயத்திலே உங்க கணக்கு தப்பு…” என்றேன் ”நான் சாதாரணமான ஒரு மனுஷன். இயக்கத்திலை இருந்தேன். காயம்பட்டது. ஒருகட்டத்திலை எனக்கு சந்தேகங்கள் வர ஆரம்பிச்சது. சந்தேகம் மனசுக்குள்ள ஓரத்திலை வந்தாக்கூட கண்டுபிடிச்சிடுவாங்கள்…துரோகியா ஆகிறதுக்குள்ள தப்பி வந்திட்டனான்…அவ்ளவுதான், அதுக்கு மேலே ஒண்டுமே இல்லை”

சட்டென்று என் மீது அறை விழுந்தது. நான் சுதாரிப்பதற்குள் ராவ் என் மீது இரு அக்குள்களிலும் அந்த கருவியைச் செருகி இருகைகளையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். என் உடம்பு அதிர்ந்தது. தொடைச்சதைகள் விதிர்விதிர்த்தன.மூச்சை இழுத்துப்பிடித்து பொசுங்கும் தசைகளின் வலியை மூளையின் எல்லா அணுக்களாலும் அனுபவித்தேன்.

சட்டென்று ஒருகட்டத்தில் வலிவேறு நான் வேறு என்றானேன். வலி ஒரு அதிர்வாக என் சிந்தனைகளை தாக்கிக்கொண்டிருக்க நான் வேறெதையோ சிந்தனைசெய்துகொண்டிருந்தேன். என் கிராமம், அலைத்துமிகள் தெறிக்கும் கடல். நான் சிறு வயதில் வளர்த்த ஒரு கரிய பூனைக்குட்டி.

ராவ் கைகளை விடுவித்தபோது குப்பென்று என் இரு அக்குள்களும் நெருப்புபோல எரிய ஆரம்பித்தன. நான் பற்களை விடுவித்து தாடையை இலகுவாக்கினேன். மூச்சை ஊதி ஊதி விட்டேன். என்கண்களில் இருந்து கண்ணீர் சொட்டிக்கொண்டே இருந்தது. தாடைகளை அசைத்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.

சுவாமி தன் செல்போனைப் பார்த்துவிட்டு ”உங்க ரூமிலே எந்த பொருளும் இல்லை… ஸோ உங்ககிட்ட எந்த தொடர்புச்சாமானும் இல்லை. அப்ப இங்கதான் உங்களுக்கு மெஸேஜ் கொண்டு வர்ரவன் இருக்கான்…”என்றபின் என்னைப் பார்த்தார். நான் சிவந்த கண்களால் அவரையே பார்த்தேன். இறுதியில் மிகச் சாதாரணமாக என்னைக் கொல்ல ஆணையிடக்கூடிய மனிதர்…

சுவாமி என்னைப்பார்த்து பிரியமாகப் புன்னகை செய்து ”ஸீ தட் இஸ் த கேம்… ” என்றபின் ”நீங்க ஒப்புக்கொண்டா நாம பேரத்தை ஆரம்பிக்கலாம்…” என்று என் கண்களைச் சந்தித்தார். பின்பு ஒரு பிரியமான ரகசியத்தைச் சொல்வதுபோல, ”வி வில் அலோ யூ டு கில் த புர·பஸர்” என்றார்

நான் அவரையே பார்த்தேன். சுவாமி ”திருப்பி தப்பிச்செல்ல விட்டுடுவோம்…அங்கே நீங்க சில வேலைகளைச் செஞ்சாப்போதும்…” என்றார். ”பெரிய விஷயங்கள் ஒண்ணுமில்லை. சின்னச்சின்ன விஷயங்கள்… அது உங்களுக்கும் பாதுகாப்பான அ·பயராத்தான் இருக்கும். உங்க பேமெண்ட் தாய்லாந்திலே இருக்கும். ஒருவருஷம் கழிஞ்சு நீங்க தாய்லாந்துக்கு போய் அங்கேருந்து பணத்தோட தப்பிப்போக முடியும்….இட் இஸ் எ பிராமிஸ்.. நீங்க என்னைந் அம்பலாம். நான் பிராமிஸ் பண்ணினா பிராமிஸ்தான்”

நான் அவரையே பார்த்துக்கொண்டு பேசாமலிருந்தேன். அவர் என் கண்களையே சந்தித்தார். அவை உறுதியாக நிலைத்திருந்தன.  எனக்கு ஒன்று அப்போது தெரிந்தது, அவர் என்னைப்பற்றி இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான எந்த தடையமும் அவர் முகத்தில் இல்லைதான் ஆனாலும் ஓர் உள்ளுணர்வு அதைச் சொன்னது.

அவர் எழுந்து ”ஸோ…நான் கிளம்பறேன். சில ·பைல் வேலைகள் இருக்கு.ராவ் வில் டேக் கேர் ஆ·ப் யூ” என்றார். நான் அவரை என் அர்த்தமற்ற பார்வையால் பின் தொடர்ந்தேன்.

ராவ் புன்னகையுடன் என் முன் வந்தான். நான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  அப்போது எந்தவிதமான சுயபிரக்ஞையும் இல்லாமல் எவ்வித தன்னகங்காரமும் இல்லாமல் வலியைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகடற்கேரளம் – 4
அடுத்த கட்டுரைஉலோகம் – 16