உலோகம் – 14

நான் என் அறைக்கு வந்து எடுத்து வைத்திருந்த நாவல் ஒன்றை வாசித்துவிட்டு இரவுணவை சாப்பிட்டுவிட்டு படுக்கப்போனபோது கதவு மெல்ல தட்டப்பட்டது. ”யாரு?” என்றேன். ”நாந்தான்” அது வைஜயந்தியின் குரல். நான் கதவைத் திறந்தேன். அவள் ஒரு வெண்ணிற ஸ்வெட்டர் போட்டு கைகளை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தாள். ”என்ன?” என்றேன். ”ஐ வாண்ட் டூ டாக் டு யூ” என்று கனத்த குரலில் சொன்னாள். நான் விலகி வழிவிட்டேன். அவள் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

 

”சாப்பிட்டியளோ?” என்றாள். ”ஆச்சு” என்றேன். அவள் கைகளை மடிமீது வைத்துக்கொண்டு ஏதோ சிந்தித்தாள். மேஜைமேலிருந்த ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை எடுத்து கவனமில்லாமல் புரட்டிப்பார்த்தாள். ”கதை புக்கே?” என்றாள். நான் ஆமாம் என்று தலையாட்டினேன். ” ராத்திரியிலையும் இதையெல்லாம் படிப்பியளோ?” நான் ” ராத்திரியிலையும் பொழுது போகணுமே” என்றேன். அவள் ”ஓம், இஞ்ச எனக்கும் அதுதான் பெரிய பிரச்சினை… டிவிய எவ்ளவு நேரம் பாக்கிறது?எல்லா தமிழ்ப்படமும் பாத்திருவன்…சன் டிவி இல்லேன்னா சாகவேண்டியதுதான்…” மெல்ல சிரித்து ”படிக்க என்னாலே ஏலாது” என்றாள்

நான் ”நீங்கள் என்ன படிச்சியள்? பிஎஸ்ஸியோ?” என்றேன். அவளுடன் அத்தனைதூரம் பேசியபின்னரும்கூட இதுவரை அவளுடைய தனியுலகம் பற்றி பேச்சு நகர்ந்ததே இல்லை என்பதை அப்போது உணர்ந்தேன். அந்த அறைக்கு அந்நேரத்தில் அவள் வந்தது தடைகளை இல்லாமலாக்குகிறதா?. ”மெட்ரிக் எடுத்தனான். முடிக்கயில்லை. அப்பதான் இந்தியாவுக்கு வந்தனான். அதுக்குப்பிறவு எங்க படிக்கிறது?” புத்தகத்தை வைத்துவிட்டு ”யா·ப்னாவிலே எங்க வீடு நிறைய புஸ்தகங்கள். அம்மாவுக்கு புக்கைக் கண்டாலே பிடிக்காது. அம்மா திட்டுறதை கேட்டுக் கேட்டு நானும் வளந்தனான். எனக்கும் புக் எண்டாலே பிடிக்காது.. பேஷன் புக் மட்டும்தான் படிப்பேன்.”

வெளியே டில்லிக் குளிர்காலத்திற்குரிய காற்று வேகமாக சன்னல்களை மோதி மென்மையாக தடதடத்தது. நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். உடலை அவள் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தது குளிரினால் அல்ல என்றும் மனம் நிலையில்லாது இருந்தமையால்தான் தான் என்றும் தோன்றியது.

போதுமான அளவுக்கு ஆரம்பப்பேச்சு பேசியாகிவிட்டதென இருவருமே உணர்ந்தோம். அவள் எந்த தொடக்கமும் இல்லாமல் ”அப்பா என்ன சொன்னவர்?” என்றாள். ”என்ன?” ”என்னைப்பற்றி?” ”ஒண்டும் சொல்லயில்லை” அவள் கண்களில் மின்னிய கோபத்துடன் ”அவர் சொல்லுறதை நான் கேட்டனான். அவர் என்ன சொன்னவர்?”

நான் அவள் முகத்தை நேரிட்டு நோக்கி ” உண்மை …அவர் ஒண்டுமே சொல்லையில்லை. வேற சில விஷயங்கள் சொன்னவர். உங்களைப்பத்தி சொன்னவரெண்டு அவர் நினைச்சுப்போட்டு சொன்னவர். ஆனா ஒண்டுமே சொல்லயில்லை” என்றேன்.

மேற்கொண்டு என்ன சொல்வதென தெரியாமல் அவள் குழம்பி தன் கை நகங்களைப் பார்த்தாள். பின்பு நிமிர்ந்து ”நான் மேரி பண்ணின¨தைப்பத்தி சொன்னவரோ?” என்றாள். ”நீங்கள் மேரி பண்ணின விஷயம் நீங்கள் இண்டைக்குச் சொல்லித்தான் எனக்கு தெரியும்” அவள் என் கண்களையே பார்த்தாள். சில கணங்களுக்குப் பின் நம்பினாள். பின்பு ”டிவோர்ஸ் கிடைச்சாச்சு…” என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை.

அவள் மெல்ல ”அவன் ஒரு டிரக் டீலர். இந்திய ஏஜெண்ட். அவன்தான் அப்பாவை வந்து சந்திச்சு பேசி மனசைக் கலைச்சவன்” என்றாள். ‘அருண் எண்டு பேரு.. அருண் சென்குப்தா. பெங்காலி. ஆனா அந்தமானிலே இருந்தவன். தமிழ் நல்லா பேசுவான். எனக்கு அவன் பெங்காலி எண்டு ரொம்பநாள் கழிச்சுதான் தெரியும்…”

அவளே மேலே சொல்வதற்காக காத்திருந்தேன்.  அவள் அவற்றையெல்லாம் சொல்வதற்காகத்தான் வந்திருக்கிறாள். அதற்கான சொற்றொடர்களையும் உருவாக்கியிருப்பாள். ஆனால் எங்கோ ஒருதடை, மெல்லிய தடை. இப்போது அது அறுந்துவிடும்…அவள் முகம் பலவகையான உணர்ச்சிகளால் உருமாறுவதைக் கவனித்தேன். நிமிர்ந்து என்னைப்பார்த்தாள். நான் மெல்ல புன்னகைசெய்தேன்.

அந்த புன்னகை அவளை பேசவைத்தது. கையால் தொட்டதும் பாதையை அறியும் நீர்ப்படலம் போல. அவள் ”நான் ஒண்டுமே அறியாத பொண்ணா இருந்தனான்.. என்னை ஏமாத்திட்டவங்கள்..” என்றும் சொல்லி விசும்பினாள். கைகளால்ல் மூக்கைத்துடைத்தபின் சட்டென்று வேகம் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

இயக்கத்திற்கு ஆயுதங்களை தாய்லாந்து வழியாகக் கொண்டு வந்துகொடுப்பவன் அருண். அவனுடன் எளிய அறிமுகம்தான் இருந்தது அவளுக்கு.  இயக்கத்தவர்களிடம் அவனுக்கு பொதுவான பழக்கம் இருந்தது. நடுவே அவள் அம்மாவுக்கு கருப்பையில் பிரச்சினைவந்து நிலைக்காமல் உதிரப்போக்கு ஏற்பட்டபோது அம்மாவையும் துணைக்கு வைஜயந்தியையும் அருணுடன் ஒரு கப்பலில் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே அவள் அம்மாவுக்கு அறுவை சிகிழ்ச்சை நடந்து கருப்பை அகற்றப்பட்டது. தாய்லாந்தில் தங்கியிருக்கும்போதே அருணுடன் உறவு ஏற்பட்டுவிட்டது.

”அவனை அப்ப ஒரு ஹீரோ எண்டு நினைச்சனான். அஜித் மாதிரி இருப்பவன். நல்ல சிவப்பு நிறம்…இனிமையா பேசுவான். கி·ப்ட் குடுத்துட்டே இருந்தவன். எல்லாம் ரொம்ப காஸ்ட்லி கிப்ட். டோக்கியோ நியூயார்க் பாரீஸ் எண்டு பேசுவான். எனக்கு அப்ப அவன் என்னை கூட்டிட்டுபோக சொர்க்கத்திலை இருந்து வந்தவன் மாதிரி இருந்தவன்…”

அவளுடைய மனதை அவன் கச்சிதமாக வாசித்துவிட்டிருந்தான். சிறிய தீவில் சிறுநகரத்தில் பிறந்து வெளியுலகை கனவுகண்டே வாழ்ந்த பெண். பிரச்சினைகள் எழுந்ததும் இன்னும் சிறிய உலகுக்கு வந்து சேர்ந்தாள். வெப்பம் உமிழும் காடு. அடிப்படைவசதிகள் கூட இல்லாத தங்குமிடம். முரட்டுச் சீருடைகளில் வியர்வையும் தூசியும் படிந்த போராளிகள். எங்கும் எப்போதும் கட்டுப்பாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள்…  அவன் அவளுக்கு ஒளிமிக்க ஒரு வாக்குறுதியாக இருந்தான்

தாய்லாந்து போன இரண்டே வாரத்தில் அவன் அவளுடன் உறவு கொள்ள ஆரம்பித்துவிட்டிருந்தான். அவள் உள்மனத்தை அறிந்ததுமே அவளை சுதந்திரமாக தனக்காக இழுத்துகொண்டான். ”பிடிச்சிருந்ததா இல்லையா எண்டு கூட எனக்கு தெரியயில்லை. அவனுக்கு சம்மதிக்கயில்லை எண்டா என்னை விட்டுவிட்டு போயிடுவான் எண்டு நினைச்சனான்” .

அப்போதே அவன் தான் இந்திய உளவுத்துறை ஏஜெண்ட் என்று சொல்லிவிட்டிருந்தான். அவள் நம்பியதுபோல அவளுடன் உறவுகொண்டதும் அவளுக்கு அடிமையாக ஆகி அவளை வெளிநாட்டுக்குக் கூட்டிச்செல்லும் திட்டங்களில் அவன் இறங்கவில்லை. மாறாக பிடிகொடுக்காமல் இருந்த பொன்னம்பலத்தாரை கரைக்க அவளை பயன்படுத்திக்கொண்டான். அவள் உதவியால் அவரிடம் நெருங்கினான். ஒரு கட்டத்தில் மேற்கொண்டு ஆயுதப்பரிவர்தனைகளை அவர் வழியாக நடத்துவதாக அவரிடம் சொன்னான். மெல்ல மெல்ல அவரை  திசைதிருப்பி அவர் உளறச்செய்தான். அதை ஒவ்வொரு சொல்லையும் உளவுத்துறையும் இயக்கமும் பதிவு செய்து கொண்டிருந்தன.

சிக்கல் வந்ததும் அவரை இந்தியா கூட்டிக்கொண்டு வந்தவன் அவன்தான். எப்படியாவது காட்டில் இருந்து இந்தியாவுக்கு அவரைக் கூட்டிச் சென்றுவிடவேண்டும் என்று வைஜெயந்தி நினைத்தாள். அவள் அம்மாவுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. இந்தியாவுக்கு வந்த பிறகுதான் எல்லாமே இந்திய உளவுத்துறையின் சதி என்று பொன்னம்பலத்தாருக்கு தெரிந்தது. ஆனால் வேறுவழியில்லை. அருண் அவளை திருமணம்செய்துகொள்வதை அவரால் தடுக்க முடியவில்லை.

”அவனுக்கு போர்ட்பிளையரிலை ஏற்கனவே ஒரு குடும்பம் இருந்தது. ரெண்டு குழந்தைகள் உண்டு…அதெல்லாம் தெரிஞ்சப்போ நான் அழுது சண்டை போட்டனான். அவன் பேசத்தெரிஞ்ச ராஸ்கல். அவன் பேச ஆரம்பிச்சவன் எண்டா அவன் சொல்லுறது எல்லாத்தையும் நம்பிடுவோம். என்னாலே ஒண்டும் செய்ய ஏலாது எண்டு தெரிஞ்சது. நாங்கள் ரோவிண்ட அடிமைகள் எண்டு…பிறகு எல்லாம் வேற மாதிரி ஆயிட்டுது. எங்களை இங்க கொண்டு வந்தவங்கள். அதுக்குப்பிறகு அவன் என்னை வந்து பாக்கவேயில்லை. அவனை டிவோர்ஸ் செய்யணுமெண்டு ரோ சொன்னவங்கள். நான் டிவோர்ஸ் செய்தனான்…”

பொன்னம்பலத்தார் உருவாக்கிய அமைப்பு ஒரு வலுவான போட்டி அமைப்பாக இருக்கும்பட்சத்தில் அதன்மீது இறுக்கமான பிடி இருக்கவேண்டும் என்பதற்காக அருணுடன் வைஜெயந்திக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்கள். அது நடக்கவில்லை என்று ஆனதும் விவாகரத்து செய்து அவனை கொண்டு சென்றுவிட்டார்கள். நான்கு வருடங்களாக அவள் இங்கே காவல் வாழ்க்கையில் இருக்கிறாள். ”அப்பாவுக்கு என் மேலே கன கோபம். அவரை நான் லொக் பண்ணி விட்டனான் எண்டு சொல்லுவார். என்னை பாத்தாலே அவருக்கு பிடிக்கயில்லை”

நான் அவளுடைய முகபாவனைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுடைய எல்லா அழகுகளையும் இழந்து உபயோகித்து வீசப்பட்ட பெண்ணிடம் மட்டுமே தென்படும் பரிபூரணமான கையறு நிலையில் இருந்தாள். நான் மிக அதிகமாகப் பார்த்த முகபாவனைகளில் ஒன்று இது. பெண்கள் வேறு எதை இழந்தாலும் தாங்கள் பெண்கள் என்பதே ஒரு ஆயுதம் என்றும் அந்த ஆயுதம் ஒரு கடைசிச்சேமிப்பு என்றும் உள்ளூர நம்பிக்கொண்டிருப்பார்கள். தூக்கி வீசப்பட்ட பெண்கள் முதலில் இழப்பது அந்த தன்னம்பிக்கையைத்தான். தனக்கு ஆண்மையில்லை என்று உணரும்  ஆண் அடையும் மனவீழ்ச்சிக்குச் சமம் அது.

அப்போது நான் செய்யவேண்டியது என்ன என்பது தெளிவாகவே இருந்தது. ஆனால் நான் குளிர்ந்த கற்சிலை போல தெளிவாக அமர்ந்திருந்தேன். ”என்ற பிள்ளை இப்ப போர்டிங்கிலை படிக்குது…அதை நான் பாத்து ஒருவருஷம் ஆகுது…நான் எங்க போகவேண்டுமெண்டாலும் இவை பர்மிசன் குடுக்கணும்” என்றாள். சட்டென்று கைகளில் முகம்பொத்தி அழ ஆரம்பித்தாள். அவளுடைய விரல்கள் நடுவே இருந்து கண்ணீர் கசிந்து கொட்டிக்கொண்டிருந்தது.

நான் எழுந்தபோது என் நாற்காலி கிரீச்சிட்ட ஒலி என் நரம்புகளை அதிரச் செய்தது. நடுங்கிய கைகளால் நான் அவள் தலையை தொட்டேன். அவள் அப்படியே சாய அவள் தலையை என் தொடைமேல் அழுத்திக்கொண்டேன். அவள் என் இடுப்பைக் கட்டிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். நான்  அவளை அப்படியே தூக்கி மார்புடன் இறுக்கிக் கொண்டேன். அவளுடைய கண்ணீர் ஈரமான முகத்தில் அழுகையால் தளதளத்த உதடுகளில் முத்தமிட்டேன்.

அவள் என் உடலுடன் இணைந்துகொண்டு நடு நடுங்கினாள். என் மார்பில் தன் முகத்தை வைத்து உரசினாள். பரபரப்படைந்த நாய்க்குட்டி போல இருந்தாள். சில கணங்களில் எங்கள் உணர்ச்சிகள் கரைந்தழிய நாங்கள் ஒருவரை ஒருவர் உடலாக உணர ஆரம்பித்தோம். பின்பு இருவரும் படுக்கையில் இரு ஆதி மிருகங்கள் போல உறவுகொண்டோம். ”டோண்ட் லீவ் மீ டோண்ட் லீவ் மீ… அ யம் அலோன்” என்று அவள் புலம்பிக்கொண்டிருந்தாள்.ஒருகட்டத்தில் அவள் கண்களில் பனிப்படலம் படர மொழி குழறலாகவும் முனகலாகவும் மாற நான் என் காமத்தை மட்டுமே உணர்ந்துகொண்டிருந்தேன்.

பின்பு நான் மல்லாந்து கைகளால் துழாவி டிராயரில் இருந்து என் சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒன்றை உருவி பற்றவைத்துக்கொண்டேன். சுருண்டு குழந்தை போலப்படுத்திருந்த அவள் ”அம்மான், எனக்கும் ஒண்டு குடுங்க” என்றாள். நான் ஒரு சிகரெட்டை அவளுக்குக் கொடுத்தேன். அவள் என் சிகரெட்டில் இருந்து அதைப் பற்றவைத்துக்கொண்டாள்.

”சிகரெட் பிடிப்பீரோ?” என்றேன். ”இல்லை…சும்மா” என்றபின் புகையை வாய்க்குள் வைத்து உடனே விட்டாள். ”சிலசமயம் கிளப்பிலை இழுப்பேன்…ஆனா புகையை உள்ளே விடையிலே எனக்கு இருமல் வரும்” ”பிறகு எதுக்கு பிடிக்கிறது?” ”சும்மா…பேஷன்தானே? கிளப்பிலை எல்லா லேடீஸ¤ம் பிடிப்பவங்கள்..”

இருவரும் மௌனமாக சிகரெட் பிடித்தபடி அவரவர் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தோம். அவள் சட்டென்று ”அம்மான்,  உங்க கையிலே கன் இருக்கோ” என்றாள். நான் மன அதிர்வை முகத்தில் காட்டாமல் ”இல்லை” என்றேன். ”நான் ஒரு கன் குடுக்கிறன்” என்றாள். என் வேட்டைநாய் அவள் போட்ட தடத்தைத் தாண்டி முன்னால் பாய்ந்துவிட்டிருந்தது . இருந்தாலும் சாதாரணமாக ”எதுக்கு?” என்றேன்

அவள் என்னை பார்க்காமல் ”அம்மான், நீங்கள் அப்பாவைக் கொல்ல ஏலுமோ?” என்றாள். அச்சொற்றொடரின் அபாரமான நிர்வாணாத்தன்மையைத்தான்  நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சிகரெட் என் வயிற்றின்மீது விழுந்தது. நான் அதை திரும்ப எடுத்தேன். என் விரல்கள் நடுங்கவில்லை, முகம் சாதாரணமாக இருந்தது ”என்னெண்டு கேக்கிறீர்?” என்றேன். ”நல்லா யோசிச்சுப்போட்டுத்தான் சொல்லுறன்… நீங்கள் என்  அப்பாவைகொல்ல ஏலுமோ?”

நான் ‘கொண்டு போட்டு?” என்றேன். அவள் குழம்பி ”எங்கயாவது தப்பி ஓடிப்போயிடுங்கோள். நான் உங்களுக்கு கனக்க பணம் குடுக்கிறன்…யூரோப்புக்கு ஓடிப்போயிடுங்கோள்….” தெளிவான சிறுமிக் கண்களால் என் கண்களைப் பார்த்து ” நீங்கள் இயக்கத்திலை இருந்திருக்கிறியள்.. உங்களுக்கு ஆக்களை தெரிஞ்சிருக்கும்… ”’

”எதுக்கு கொல்லணும்?” என்றேன் சிகரெட் புகையை தட்டியபடி.  ”அப்பா சாகாம இந்த ஆட்டம் முடியாது. இது ஆரம்பிச்சு எட்டுவருஷம் ஆகுது அம்மான். ஒரு ஆயுள்தண்டனை எண்டாக்கூட அது இங்க பன்னிரண்டுவருசம்தான்… ராஜீவைக் கொலைசெய்தவங்களுக்குக்கூட இங்க ஆயுள்தண்டனைதான் குடுத்திருக்கினம். ஒண்டும் செய்யாம நாங்க ஏன் ஆயுள்தண்டனை அனுபவிக்கோணும்?”

‘அதற்காக என்ன?’ என்ற முகபாவனையுடன் நான் அவளையே பார்த்தேன். அவள் சொல்லிக்கொண்டே சென்றாள். இந்த விளையாட்டிற்கு ஒரே முடிவுதான் இருக்கமுடியும். பொன்னம்பலத்தார் கொலைசெய்யப்படுவது. அதற்காகத்தான் இயக்கம், இந்திய அரசு எல்லாருமே காத்திருக்கிறார்கள். இந்திய அரசு அவரை  அவர்கள் கொலைசெய்தால்கூட நல்லதுதானே என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டது. எல்லாருமே அர்த்தமில்லாமல் காத்திருக்கிறார்கள்.

பொன்னம்பலத்தார் அவரது முட்டாள்தனத்தின் விலையைக் கொடுக்கட்டுமே என்றாள் வைஜயந்தி. அவர் உயிர்வாழ வாய்ப்பே இல்லை. கோமாவில்கிடக்கும் நோயாளி பிழைக்கமாட்டார் என்று தெரிந்து அவரைக் கொல்வதுபோன்றதுதான் அவரை கொல்வது. நான் அவரைக் கொல்லவெண்டியதில்லை. அவரைக் கொல்வது இயக்கம் நினைத்திருப்பதுபோல கடும் சவால் அல்ல என்று அவர்களுக்கு எவ்வகையிலாவது தெரிவித்தாலே போதும்.

மிக வேகமாக நான் அவளிடமிருந்து பின்வாங்கிக் கொண்டிருந்தேன். அவளுடன் இணைந்த அந்தக் கணங்களில் நான் உணர்ந்த ஒன்று இருந்தது, அவள் எனக்குள் இருந்த பொற்புகையால் வரையப்பட்ட அந்த இளமைக்காலப் பெண்ணோவியம் அல்ல. அவள் வெறும் சதை, வெறும் பெண். அவ்வளவுதான். ஆனால் அக்கணங்களில் அந்த நினைப்பே என்னை இறுக்கமேறச்செய்திருந்தது. இப்போது ரயிலில் அல்லது திரையரங்கில் ஒவ்வாத ஒருவர் வந்து நம் தோள்தொட்டு அமர்ந்திருப்பதை உணர்ந்ததுபோலிருந்தது.

நான் எதையாவது பேசியாகவேண்டுமென்ற இடத்தை அடைந்தபோது ”அதுக்காக…அவர் உன் அப்பா இல்லியா?” என்றேன். அவள் ”நான் நல்லா யோசிச்சாச்சு. எனக்கு வேற ஒரு வழியும் தெரியயில்லை… இவர் இருக்கிற வரைக்கும் இயக்கம் எங்களை விடாது. நான் இங்காலை வந்த சமயத்திலே உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு யூரோப்புக்கு போறதுக்கு உதவிசெய்யுங்க அம்மான் எண்டு கேக்கவேண்டுமெண்டுதான் வந்தனான். ஆனா சட்டுன்னு நினைச்சப்ப நாங்க எங்கயுமே போக ஏலாது எண்டு தெரிஞ்சுபோச்சு…. ”

”கொலை செய்றதெண்டால் அவ்ளவு சின்ன விஷயமெண்டு நினைக்கிறீரோ?” என்றேன். என் குரலில் என்னையறியாமலேயே ஒரு சின்ன நக்கல் கலந்தது. அவள் ”இல்லை…நீங்க கொலைசெய்யவேண்டுமெண்டு சொல்லயில்லை. நீங்க எப்டியாவது  இயக்கத்திலை இருந்து ஆரையாவது இங்காலை வர ஏற்பாடு செய்தாப்போருமே…இயக்கத்துக்கு  இங்க வாரயிக்கு நீங்க ஹெல்ப் பண்ணினா போரும். அவை இவரை கொல்லத்தானே இருக்கினம்?”

நான் அவளைக் கூர்ந்து பார்த்தபின் ”இயக்கத்துக்கு இப்ப நான்தான் துரோகி…அவை என்னைத்தானே முதலிலே போடுவினம்?” என்றேன். அவள் முகம் கணக்குக்கு விடைதெரியாத பள்ளிக்குழந்தை போல தத்தளித்தது. பின்பு சிறிய மூளைக்காரர்கள் ஒருசிக்கலில் செய்வதைப்போல அப்படியே வந்தவழியே பின்வாங்கிச் சென்று ”தெரியயில்லை…எனக்கு சொல்லவேண்டுமெண்டு தோணிச்சு, சொன்னனான்” என்றாள்.

ஆனால் சட்டென்று விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். அவளுடைய சிறிய வெளிறியமுலைகள்  அழுகையில் அதிர அவற்றின்மேல் கண்ணீர்த்துளிகள் விழுந்தன. நான் மெல்ல அவளை அணைத்தபோது அவள் என்னை உதறி ”விமோசனமே இல்லை… இங்கேயே சாகணுமெண்டு விதியிருக்கு ….இப்டியே செத்து செத்து வாழுறதைக்காட்டிலும் சூசைட் பண்ணிக்கிட்டு போகலாம்… ஆனா என்ர பிள்ளை…” உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி அடக்க முடியாமல் விசும்பி ”என்ர பிள்ளை அனாதையா வளருது… ரோட்டிலே போறவள்லாம் பிள்ளைய நெஞ்சில அணைச்சுகிட்டு இருக்கா..என்ர பிள்ளைய என்னால தொடக்கூட முடியேல்ல….”

நான் அவளை இழுத்து என் உடலுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டேன். அவள் உதடுகளை கவ்வி அவளை அமைதிப்படுத்தினேன். இறுக்கமிழந்து மெல்ல மெல்ல அவள் தளர்ந்ததும் விட்டு விட்டு அவள் முகத்தை  கையால் தூக்கி ”எல்லாம் நான் பாத்துக்கிடுறன்… எல்லாம் சரியாயிடும்” என்றேன். ”சும்மா சொல்றியள்” என்றாள், ஆனால் திமிறவில்லை. நான் அவளிடம் மெல்ல ”செஞ்சு போடுவம்…ஆளிருக்கு” என்றேன்

அவள் சட்டென்று உலுக்கிக் கொண்டு திமிறி விலகி, உதிரம் வழிந்து வெளிறிய முகத்துடன் ”நம்ம மேலே சந்தேகம் விழுந்துபோடுமே?” என்றாள். ”நாம இங்கேயே இருந்தா எந்த சந்தேகமும் விழாது…  என்னை மட்டும் விசாரிப்பவங்கள். ஆனா என்னை இங்கே கொண்டுவந்தது ரோ. அதனாலே அதிகம் விசாரிக்க மாட்டாங்க…ஆறுமாசத்திலை எல்லாம் சரியாயிடும்” என்றேன்.

அவள் நடுங்கிக்கொண்டே இருந்தாள். முகம் மேலும் மேலும் வெளிறி ஆங்காங்கே சிவப்புத்திட்டுகள் தெரிந்தன. அவள் இதயத்தின் துடிப்பை கழுத்தின் பச்சை நரம்பில் கழுத்துக்குழியில் காண முடிந்தது. வெண்சருமத்திற்கு அடியில் கழுத்திலிருந்து முலை நோக்கிக் கிளைவிரித்து சென்ற பச்சைநரம்பில்கூட அந்தத் துடிப்பு தெரிந்தது. கண்களை மூடி ஒரு நிமிடம் சிந்தித்துவிட்டு ”ஓ, டெரிபிள்” என்றாள்.

”நீ இதை மறந்திடு…ஒண்டுமே தெரியயில்லை எண்டு நினைச்சுக்கொண்டு பேசாம இரு” என்றாள். அவள் என் மேல் மெல்ல சாய்ந்து ”அம்மான், இப்டி ஒரு வாழ்க்கை நமக்கெல்லாம் ஏன் வாய்ச்சுது? இங்காலை இருக்கிற எல்லா பெட்டையளும் எவ்வளவு ஈஸியான ¨லை·பிலே இருக்கினம்… அவைக்கு ஒண்டுமே தெரியாது…” என்றாள். நான் அவள் தலையைக் கோதினேன்.

”அம்மான் ஒண்டு சொல்லுறன், இந்த நரகத்திலை இருந்து வெளிக்கிட்டா நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வாறன்…” என்றாள். ” அப்பா இருக்கையிலை ஒண்டும் நடக்குமெண்டு நினைக்க வேண்டாம். அப்பா பழைய ஆள்.” நான் அதற்கு பதில் சொல்லாமல் அவளை முத்தமிட்டேன்.

அவள் கைகள் என்னுடைய தொடையில் இருந்த வடுவைத்தீண்டின. ”உள்ள குண்டு இருக்குதானே?” என்றபடி அவள் அந்தக் காயம் மேல் தன் மெல்லிய விரலை வைத்தாள். அவள் உடல் சிலிர்ப்பதை கழுத்தில் மயிர்க்கால்கள் புள்ளிகளாக ஆவதை உணர்ந்தேன். ”யூ ஹேவ் பெய்ன்?” நான் இல்லை என்று தலையசைத்தேன். அந்த வடுவை அழுத்தினாள். அவளுடைய நடுங்கும் விரல் அந்தவடுவை வருடியது.

நிமிர்ந்து ”ஸோ யூ ஆர் லோடட்…” என்றாள். என் கண்கள் மாறிவிட்டன. நான் நினைத்த அதே சொற்கள். அவள் நான் நினைத்ததுபோல அத்தனை தட்டையான பெண் அல்ல, அவளுக்குள் நான் இன்னமும் அறிந்திராத ஆழம் இருக்கிறது. அவளை என்னுடைய காமம் மறைத்திருக்கிறது. ஆனால் அதற்கப்பால் சென்று அவளைப்பார்க்க என்னால் இயலுமென்று படவில்லை. காமத்தை கடந்து சென்று பெண்ணைப் பார்க்க எந்த ஆணாலும் முடியாதென்று தோன்றியது. அவள் என் கண்களைக் கவனித்தாள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதும் கண்களை திருப்பிக்கொண்டேன்.

அவள் மேலே முகத்தைத்தூக்கியபோது மார்புகள் என் காலில் பட்டன. அந்த மென்மையால் கிளரப்பட்டு நான் அவளை அள்ளி எடுத்துக்கொண்டேன். பெண் தனக்குள் கொந்தளிக்கும் எந்த மனஎழுச்சியையும் காமமாக ஆக்கிக்கொள்வாள். அவள் வெறியுடன் மூச்சு சீற என்னுடன் ஒட்டிக்கொண்டாள். பெண்ணை தன் தலைக்குமேல் சென்ற வெள்ளம் என்று தன்னை சுழற்றிச்செல்லும் காட்டாறு என்று ஆண் நினைக்கும் தருணங்களில் ஒன்று அது.

பின்பு நாங்கள் அவரவர் உலகங்களில் படுத்திருந்தோம்.  மென்மையான, வெளிப்பிரக்ஞை வழுவாத தூக்கம். நான் அவளுடைய பெருமூச்சு ஒலிகேட்டு மெல்ல அசைந்தேன். அவள் எழுந்து தன் உடைகளை அணிந்துகொள்ளும் ஒலியை கேட்டுக்கொண்டு கண்களைத் திருப்பாமல் படுத்திருந்தேன். அவள் மெல்ல கதவைத்திறந்து வெளியேறினாள். ஒரு சொல்கூடப் பேசாமல் அவள் சென்றது விசித்திரமானதாகவும் இயல்பானதாகவும் ஒரேசமயம் தோன்றியது எனக்கு.

[மேலும்]

முந்தைய கட்டுரைஉலோகம் – 13
அடுத்த கட்டுரைகடற்கேரளம் – 3