மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு

26-manushyaputhiran300

மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு ஏற்ப்படுத்தியது? ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவில் கடந்த இருபதாண்டுகளில் அரசியல்ரீதியாக இந்துத்துவா எழுச்சிக்கு எப்படியெல்லாம் பயன்பட்டன என்பதை மறைக்க முடியுமா?

நவீன சிந்தனா முறையின் வழியே நமது தொன்மங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அவற்றை மறுகட்டுமானம் செய்வதும்தான் ஒரு பழைய இலக்கிய பிரதி ஒரு புதிய எழுத்தாளனால் மறுபடி எழுதப்படுவதற்கான நியாயமாக இருக்க முடியும். . மாறாக அதன் மரபான கட்டுமானத்தின் புனிதங்களையும் எல்லைகளையும் மீறாமல் ஒருவர் அதை திரும்ப எழுதுவது என்பது அவரது சொந்த விருப்பத்தின் பேராலான திருப்பணி மட்டுமே.

இந்த நூற்றாண்டின் மனித வாழ்வின் அவலங்களுக்கும் ஆன்மீக நெருக்கடிகளுக்குமான பதில் பதில் மகாபாரதத்தில் மட்டுமல்ல வேறு எந்த காப்பியத்திலும் இல்லை என்பதுதான் உண்மை. இன்றைய எழுத்தாளன் தனது எலலா பண்பாட்டு வேர்களின் மண்ணையும் உதறிக்கொண்டுதான் சமகாலத்தின் குழம்பிய கனவுகளையும் உடைந்த எதார்ர்த்தங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜெயமோகனின் நோக்கங்களுக்கு நான் சந்தேகம் கற்பிக்க விரும்பவில்லை. எந்த நிலையிலும் அவர் என் அன்பிற்குரிய நண்பர். ஆனால் அவர் இன்று செய்யக் கூடிய பணிகள் யாருக்கு பயன்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த்துவாவின் மகத்தான் எழுச்சிக் காலத்தில் நவீனத்துவர்கள் அதற்கு எதிர்திசையில்கடுமையாக வேலை செய்யவேண்டிய காலம் இது.

மனுஷ்யபுத்திரன் பதிவு

gnani011-248x300

ஜெயமோகனுடன் எனக்கு அரசியல், கலாச்சார, வாழ்வியல் நேர்மை, அன்றாடம் பின்பற்றும் அறம் முதலியன தொடர்பாக கடும் கருத்து வேறுபாடுகளும் விமர்சனமும் உண்டென்றாலும், அவரது பிரமிப்பூட்டும் உழைப்பை நான் எப்போதும் வியக்கிறேன். மகாபாரதம் எனக்குப் பிடித்தமான இலக்கியம். ( ராமாயணம் அவ்வளவு உகப்பானதே அல்ல.)

எஸ்.ராமகிருஷ்ணன் முன்வைத்த யோசனைப்படி பிரபஞ்சன் போன்ற ஓர் எழுத்தாளர் சம கால இளம் வாசகர்களுக்கு மகாபாரதத்தை எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரும் உழைப்பை செலவிட்டு ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு ஒரு வியர்த்தமான முயற்சி என்பதே என் கருத்து. நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் புலவர்கள் சிலரால் பின்பற்றப்பட்டு காலாவதியாகிப் போன ஒரு இலக்கிய உரைநடையை அவர் மீட்டுருவாக்கம் செய்ய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது அதைப் படித்து ரசித்து மகிழும் மிகச்சிலரிலும் பெரும்பாலோர் இதே படைப்பு அவர் பெயருடன் வெளியாகாமல், எழுதியவர் பேரா. அருமனை வெற்றிப்பிரியனார் என்று இருந்திருந்தால் ஓரிரு பத்திகளுக்கு மேல் படிக்கக்கூட மாட்டார்கள். அவர் அவாவுவது போல இந்தப் படைப்பு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நிச்சயம் காலத்தை வென்று மதிக்கப்படும் ஒரு படைப்பாக ஆகும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. (அதை அறிய நானும அவரும் இருக்கமாட்டோம் என்பதே ஆறுதல்.)

அவருடைய படைப்பாற்றல் இதில் ஆங்காங்கே கீற்றுகளாகப் பளிச்சிட்டாலும், அவையெல்லாம் காபியில் போட்ட முந்திரிப்பருப்பு மாதிரி வீணாகின்றன. இதற்கு அவர் செலவிடும் உழைப்பை அவர் நான் பெரிதும் விரும்பும் மாடன் மோட்சம் போன்ற சிறுகதைகளை, காடு, பின்தொடரும் நிழலின் குரல் போன்ற நாவல்களை எழுத செலவிட்டிருந்தால், தரமான ஐம்பது சிறுகதைகளும் ஐந்து நாவல்களும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும். அவரிடம் இருக்கும் படைப்பாற்றலை, இந்த வெண்முரசு எழுத்துப் பணி வீணடிக்கிறது என்பதே என் வருத்தம். அ

வரிடம் தங்கள் விமர்சனத்தை , கறாராகவும் அக்கறையோடும் சொல்லக் கூடிய நண்பர் வட்டமே அவருக்கு இல்லாமல் போய்விட்டதென்றே எனக்குத் தோன்றுகிறது. இது அவருக்குப் பெரிய இழப்பேயாகும். என் கருத்து, பலருக்கும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தக் கூடுமென்றாலும், திறமைசாலியான கடும் உழைப்பாளியான ஒரு படைப்பாளியை ஒரு ரசிகர் மன்ற சூழல் வீணடிப்பதைப் பற்றி சொல்லியே தீரவேண்டும் என்பதால் சொல்லிவிட்டேன்.

ஞாநி பதிவு

ravikumar

தொலைக்காட்சித்தொடருக்கான கதையை நாவல் என்ற பெயரில் வெளியிட்டிருக்கும் ஜெயமோகனின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி ‘சித்தி’ தொடரும் நாவலாக வெளிவருமா

ரவிக்குமார்

*

மேற்கண்ட மூன்று எழுத்தாளர்களின் கருத்துக்கள் நண்பர்களால் என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன

மூன்று பேருமே வெண்முரசை வாசிக்கவில்லை என்பதை வாசித்த எவரும் உணரலாம். என் எளிய விண்ணப்பம் இலக்கியக்கருத்துக்களைச் சொல்லும்போது பேசப்படும் இலக்கியநூலை மட்டுமாவது வாசியுங்கள் என்பதே

இவர்களில் ஞாநி ரவிக்குமார் இருவரும் வெண்முரசை அல்ல எந்த இலக்கியப்படைப்பையுமே படித்து உள்வாங்கிக்கொள்பவர்கள் அல்ல. அவர்களின் தளங்கள் வேறு. எளிமையான அரசியல்வாதிகள் அவர்கள். அன்றாட அரசியலே உலகைப்புரிந்துகொள்ள போதுமானது என நம்பும் நேரடியான மனங்கள்.

ரவிக்குமார் இது தொலைக்காட்சித் தொடர் என்று சொல்கிறார். அதைப்பற்றி வெண்முரசின் ஒரு அத்தியாயத்தை வாசித்த எவரும் ஒரு புன்னகைக்கு அப்பால் பதில் சொல்லமாட்டார்கள்.

நான் சன் டிவி மகாபாரதத்தை எழுதுவதாக இருந்தது. முதல் சில பகுதிகளை எழுதினேன். அதிலிருந்து விலக நேர்ந்தது. அதை அப்போதே வாசகர்களுக்கு அறிவித்திருந்தேன். வெண்முரசுக்கான ஆராய்ச்சிகளின் பெரும்பகுதி அப்போது செய்யப்பட்டது

அந்த ஆய்வுகளையும் குறிப்புகளையும் ஒட்டி மகாபாரதத்தை நாவலாக மீண்டும் எழுதலாமென்று தோன்றுவதாக அப்போதே குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். ஏனென்றால் தொலைக்காட்சித் தொடருக்கான அமைப்பே வேறு. அது நிகழ்ச்சிகளையே காட்டமுடியும். என் உள்ளத்தில் இருந்த நாவல் செறிவான படிமங்களால் ஆனது.

பின்னர் வெண்முரசை எழுத தொடங்கியபோது நான் 10 வருடம் முன்பு எழுதிய ’இறுதிவிஷம்’ என்ற மகாபாரத குறுநாவல் சரியான தொடக்கமாகத் தோன்றியது. அதிலிருந்து வெண்முரசு தொடங்கியது. ஆனால் வெண்முரசில் அந்த குறுநாவலின் நிகழ்ச்சிகளும் மீண்டும் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை வாசகர் அறிவார்கள்.

வெண்முரசு போன்ற ஒரு நாவலை, அது எந்த வாசகரும் எளிதில் வாசிக்கக் கிடைக்கும்போதே, இப்படி அவதூறுசெய்து குதூகலிப்பவர்களின் மனநிலையை எண்ணி வியக்கிறேன்.

*

பொதுவாசகர்களுக்காக மீண்டும் சில விளக்கங்களை அளிக்கவிரும்புகிறேன். இரு காரணங்களால். இந்நூல் எழுதப்பட்டபோது எவ்வகை எதிர்வினைகள் வந்தன என்பது பதிவாகவேண்டும். இரண்டு, இன்னமும் கூட நம் புது வாசகர்கள் இம்மாதிரியான குரல்களால் குழம்பக்கூடியவர்களகாவே இருக்கிறார்கள். இத்தனை பக்கங்கள், இத்தனை தரத்தில் எழுதிய பின்னரும்கூட அதை வாசிக்காதவர்களின் ஐயங்களுக்குப் பதில் சொல்லியாகவேண்டிய கடமை இருக்கிறது

மொழிநடை, வடிவம் பற்றி

ஞாநி தன் குறிப்பில் சொன்னவற்றை வெண்முரசு வாசகர்களே புறந்தள்ளிவிடுவார்கள். பொதுவாசகர்களுக்கு ஒரு விஷயத்தை பற்றி மட்டும் விளக்க விழைகிறேன்.

வெண்முரசு பழைமையான நடையில் எழுதப்படுகிறது என்பது நாளிதழ்நடையே நவீன நடை என்ற நம்பிக்கையின் விளைவு. அதில்தான் அனைத்தும் எழுதப்படவேண்டும் என்ற விழைவு ஒருபோதும் இலக்கியவாசகனுடையதாக இருக்கமுடியாது.

உலகமெங்கும் மொழியின் அனைத்துச் சாத்தியங்களையும் கையாண்டு எழுதப்படும் ஆக்கங்கள் வந்துகொண்டிருக்கும் காலம் இது. தொன்மையோ, அறிவியல்தன்மை புனைவின் புனைவுப்பாவனைகளேயாகும். அப்படி பல பாவனைகள் வழியாகவே புனைவுகள் இயங்குகின்றன

வெண்முரசின் நடை பழமையானது அல்ல. என் நோக்கில் நவீனத்தமிழின் மிகப்புதிய புனைவுநடை அது. அதன் செறிவும் வாசகனின் கற்பனைக்கும் அறிவாற்றலுக்கும் அறைகூவல் கொடுத்துச் செல்லும் நுட்பமும் பல அர்த்த தளங்களுக்குச் செல்லும் மடிப்புகளும் நவீனத்துவகால இலக்கியங்களுக்கு பின்னர் எழுதப்படும் இன்றைய புனைவுகளுக்குரியவை.

கார்லோஸ் புயண்டஸையோ போர்ஹெஸையோ பொலானோவையோ அல்லது அதைப்போன்று சென்ற அரைநூற்றாண்டில் பேசப்பட்ட ஏதேனும் ஒரு படைப்பாளியையோ வாசித்த வாசகர் இதை எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

இந்த நடைதான் இன்று தமிழில் இளையதலைமுறை வாசகர்களால் மிக அதிகமாக வாசிக்கப்படுகிறது. வெண்முரசு வாசகர்களில் 20 சதவீதம் வாசகர்களைப்பெற்ற இலக்கியவாதி இன்று எவரும் இல்லை.

காரணம், இன்றைய நவீன வாசகன் மேலோட்டமான விரைவான உரைநடையால் சலிப்படைந்தவன் தன் மூளைக்கும் கற்பனைக்கும் சவாலைக் கொடுக்கிற நடையை அவன் எதிர்பார்க்கிறான். அதாவது ஞாநிகள் அளிக்கும் பெரும் சலிப்புதான் வெண்முரசை நோக்கி வரச்செய்கிறது

ஞாநி போன்றவர்கள் எழுதும் சராசரி நடையில், ஃபேஸ்புக் நடையில் சிக்கி நின்றுவிட்ட வாசகர்களுக்கு இது எடைமிக்கதாக, தொடரமுடியாததாகத் தோன்றும். ஆனால் அவர்களில் இருந்து மேலெழுந்துதான் தொடர்ந்து இங்கே வாசகர்கள் வந்து கொண்டிருப்பார்கள்

எளிமையான உதாரணம் சொல்கிறேன். எப்போது டிவிடிக்கள் மலிந்து மக்கள் அன்றடம் சினிமா பார்க்கத் தொடங்கினார்களோ உடனே வழக்கமான நேரடியான சினிமா மொழி அவர்களுக்குச் சலிப்பை உருவாக்கத் தொடங்கியது. தெளிவான துல்லியமான சினிமா மொழிக்குப்பதில் இன்செப்ஷன், மாட்ரிகஸ், மொமெண்டோ போன்ற சினிமாக்கள் வரத்தொடங்கின. அவை எளிய பார்வையாளர்களுக்குரியவை அல்ல. அவை சினிமாமொழியை ஒரு சவாலாக ஆக்குகின்றன. அச்சாவலை சந்திக்கும் ரசிகர்களுக்கானவை.

இது இலக்கியத்தில் நிகழத்தொடங்கி நெடுங்காலமாகிறது. ஒவ்வொரு வரியையும் வாசகனுக்கு அறைகூவலாக ஆக்கும் நடையே இன்றைய புனைவின் நடை

வெண்முரசு எழுதப்படும் நடையும் கூறுமுறையுமே எதிர்காலத்திற்குரியது. மேலும்மேலும் ஊடகங்கள் மூலம் அன்றாட மொழி எழுதப்பட்டு பேசப்பட்டு சலிப்புற்ற தலைமுறைக்குரியது. இன்று வெண்முரசின் வாசகர்களும் அவர்களே. வெண்முரசு விழாவின் கூட்டத்தைப்பார்த்து பி.ஏ.கிருஷ்ணன் சொன்னார் ‘என்னது காலேஜ் மாதிரி இருக்கு’ அதுதான் உண்மை.

அதேசமயம் இன்னும் ஞாநி போன்றவர்களின் ஃபேஸ்புக் குறிப்புகளில் சலிப்பு வராமல் அதில் உழல்பவர்களுக்கு இங்கே இடமில்லை என்பதும் உண்மை. பரவாயில்லை, வெண்முரசு காத்திருக்கும்

மதச்சார்பின்மையும் வெண்முரசும்

மனுஷ்யபுத்திரன் மகாபாரதத்தை குர்ஆன் போல நீதிகளை உரக்கச்சொல்லி வலியுறுத்தும் ஒரு நூல் என்ற மனப்பதிவில் இருப்பது தெரிகிறது. அது மேலும் சில வாசகர்களுக்கும் இருக்கக்கூடும்.. அவர்களுக்காகச் சில சொற்கள்

மகாபாரதம் நெறிகளை வலியுறுத்தும் நூல் அல்ல. விடைகளை முன்வைப்பதும் அல்ல. அதை தேடிச்செல்பவர்கள் இக்காலத்துக்கான விடைகளை அக்காலத்திலேயே சொல்லிவைத்துவிட்டார்கள் என்ற எண்ணத்துடன் செல்வதுமில்லை.

மகாபாரதம் ஒரு பெரும் கதைக் களஞ்சியம். குலக்கதைகள், புராணக்கதைகள் ,நாட்டார்க்கதைகள், நீதிக்கதைகள், சாகசக்கதைகள் ,குழந்தைக்கதைகள் என பலவகைப்பட்ட கதைகளின் பெருந்தொகுதி. அக்கதைகள் ஒரு பெரிய கட்டமைப்புக்குள் காவிய ஒருமையுடன் சொல்லப்பட்டுள்ளன

அக்கதைகளில் மானுடவாழ்க்கையின் எப்போதைக்குமான அடிப்படை வினாக்களே பேசப்பட்டுள்ளன. எப்போதுமுள்ள தர்மசங்கடங்கள், அறமோதல்கள், மெல்லுணர்ச்சிகள், குரூரங்கள், மேன்மைகள், கீழ்மைகள் உள்ளன. அதிலுள்ளது மானுட வாழ்க்கையின் ஒரு பெருஞ்சித்திரம்

உலகிலுள்ள அத்தனை பண்பாடுகளுக்கும் அப்படி காலத்தால் திரட்டப்பட்ட ஒரு கதைக்களஞ்சியம் உண்டு. ஐரோப்பாவுக்கு கிரேக்கப்புராண மரபு போல. சீனாவுக்கு அரேபியாவுக்கு ஜப்பானுக்கு அவர்களுக்கே உரிய கதைக்குவை உண்டு. அங்குள்ள நவீன இலக்கியங்களின் அடிப்படைகள் அவையே.

அவை இருவகையில் அடிப்படையாக அமைகின்றன. ஒன்று அவை வாழ்க்கைத்தருணங்களையும் கதைமாந்தரையும் அமைத்து புனைவிலக்கியத்திற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கி அளிக்கின்றன

இரண்டு அவை முன்வைக்கும் கதைமாந்தரும் கதைத்தருணங்களும் காலப்போக்கில் படிமங்களாக மாறி மொழியின் ஆழத்தில் குடிகொள்கின்றன. அவற்றைக்கொண்டுதான் அம்மொழியில் செயல்பட முடியும். அவற்றை அறிகையில் அச்செயல்பாடு மேலும் ஆழம் கொண்டதாக ஆகிறது

இலக்கியம் என்பது அந்தரத்தில் உருவாவது அல்ல. அது ஒரு தொடர்ச்சி. அந்தத் தொடர்ச்சியை எத்தனை ஆழத்தில் இருந்து எடுத்துக்கொள்வது என்பது எழுத்தாளனின் ஆழத்தப்பொறுத்தது. என் இலக்கியத்தை நேற்றைய செய்தித்தாளில் இருந்து மட்டுமே எடுத்துக்கொள்வேன் என்று சொல்பவனின் ஆழம் அவ்வளவுதான்.

பண்பாட்டின் ஆழம் நோக்கிய பயணமே பெரிய புனைவுகளை ஆக்கும் பெரிய படைப்பாளிகளை உருவாக்குகிறது. தஸ்தயேவ்ஸ்கியாக இருந்தாலும் சரி மார்க்யூஸாக இருந்தாலும் சரி ராபர்ட்டோ பொலானோவாக இருந்தாலும் சரி. அவர்கள் பண்பாட்டின் ஆழத்தை விலக்கமுடியாது.

மார்க்யூஸுக்கே மகாபாரதம் பெருந்தூண்டுதல் என்னும்போது இந்த மொழியில் பண்பாட்டில் இதை உணர்ந்து எழுதுபவர்களுக்கு அது இன்றியமையாத ஒன்றே. வரலாற்றுநோக்கும் தத்துவநோக்கும் அற்ற அந்தரங்கச்சித்தரிப்புகளாக புனைவுகளை எழுதுபவர்களின் எல்லை மிகக்குறுகியது.

செவ்வியல் படைப்பின் மீதான எந்த ஒரு மறுஆக்கமும் சமகாலத்தையே புனைகிறது. கம்பன் முதல் ஃபைரப்பா வரை அதுவே காணக்கிடைக்கிறது. எளிய விமர்சனங்களை மட்டுமே பேரிலக்கியங்களின் மேல் வைப்பவர்களே அவற்றை எளிமையாக மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். அத்தகைய ஆக்கங்களுக்கு எளிய அரசியல் முக்கியத்துவம் அன்றி வேறேதும் இலக்கிய மதிப்பு இல்லை.

பேரிலக்கியங்களின் காவியஒருமையை அடைந்தபடி அதை சமகாலப்படைப்பாக்குவதே முதன்மையான படைப்பாளிகளின் அறைகூவல். காவியத்தருணங்களை எளிமையாக மாற்றி எழுதுவதல்ல, அவற்றின் புனைவுக்குள் உள்ள இடைவெளிகளை கற்பனையால் நிறைத்து விரித்து இன்னொரு வாழ்வுக்குள் அவற்றை மீண்டும் நிகழ்த்துவதே உண்மையான கலை.

உதாரணம் சொல்கிறேன். கண்ணகி கற்புக்கரசி அல்ல, அவள் ஒரு பரத்தை என ‘நவீன’ புனைவை எழுத நக்கீரனில் கிசுகிசு எழுதுவதற்கான தகுதி போதும். ஆனால் கண்ணகி என்ற தொன்மத்தை சமகாலத்தின் பார்வையில் மீட்டுருவாக்கம் செய்து கற்பு என்ற விழுமியத்தின் வாழ்க்கைமதிப்பை ஆராய்வதற்கு அதற்கும் அப்பால் செல்லும் புனைவுத்திறனும் தரிசனமும் தேவை,.வெண்முரசு இலக்காக்குவது அதையே.

மனுஷ்யபுத்திரன் கடைசியில் சொல்வது இன்றைய எளிய அரசியல். உலகின் அத்தனை பகுதிகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இலக்கிய- பண்பாட்டுச்செயல்பாடு தமிழகத்திலும் இந்தியாவிலும் மட்டும் நிகழவேண்டாம் என்று சொல்கிறார், காரணம் அவரது அரசியலுக்கு அது உகக்கவில்லை. அவரது இன்றைய அதிகார அரசியலுக்குகந்த இலக்கியமே ஏற்கத்தக்கது என்கிறார். அந்தக்கோணத்தில் ஒட்டுமொத்த இலக்கியத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறார்.

அன்றாட அரசியல் சார்ந்த நோக்கின் குறுகிய எல்லை இது. இலக்கியம் இத்தகைய சமகால அரசியல் தேவைகளுக்கேற்ப புனையப்படுவதல்ல. அதற்கும் சமகாலத்துக்குமான உறவு நேரடியானதும் அல்ல. அதன் வாழ்நாள் அரசியலை விட மிக அதிகம். அது பேசும் வாசகர்கள் காலத்தில் வந்துகொண்டே இருப்பவர்கள். வெள்ளையானையை முன்வைத்து அதை இடதுசாரிகள் பயன்படுத்திக்கொள்வார்கள் என எழுதியவர்களுக்கும் இதுவே பதில்.

இலக்கியம் என்பது கடல். அன்றாட அரசியல் என்னும் செவிதோண்டியால் அள்ளப்படுவதோ அளக்கப்படுவதோ அல்ல.

மறுபிரசுரம்- முதற்பிரசுரம்Nov 15, 2014 


வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைதுவர்ப்பும் இனிப்பும்- அசோகமித்திரன்
அடுத்த கட்டுரைஆனந்தரங்கம்பிள்ளை- கடிதம்