விழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி

index
நேற்று நடந்த வெண்முரசு நாவல்கள் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். எழும்பூர் மியூசியம் தியேட்டர் வளாகத்துக்குச் செல்லும் வழியில் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் வண்டியை வழிமாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்கும் நாள். அதற்கு அனுமதி தந்தும் தராமலுமான ஒரு குழப்பமான நிலை. பலர் கைது செய்யப்பட்டிருந்தனர் போலும்.

கூட்டம் நிரம்பி, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள். பலர் நின்றுகொண்டிருந்தனர். நான் பிரசன்னாவுக்கும் ஜடாயுவுக்கு இடையில் மிக வசதியான ஓரிடத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். 5.15-க்கு சிறப்பு விருந்தினர்கள் வரிசையாக அழைக்கப்பட்டனர். போக்குவரத்துச் சிக்கல் காரணமாக இளையராஜா மட்டும் வந்துசேர்ந்திருக்கவில்லை. அசோகமித்திரனுக்கு நடுநாயகமான இடம். அவருடைய இரு பக்கங்களிலும் கமல்ஹாசன், இளையராஜா. இளையராஜா பக்கம் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன். கமல் பக்கம் ஜெயமோகன், பி.ஏ.கிருஷ்ணன்.

எனக்கு பி.ஏ.கிருஷ்ணன் பேச்சு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒருவர்தான் ஏற்பாடு செய்து எடுத்துவந்து பேசினார். எனவே அந்தப் பேச்சை விரைவில் வெளியிடுவார். மற்றவர்கள் முன்னேற்பாடு இல்லாமல் பேசினர். பிரபஞ்சன் விரிவாக ‘நீலம்’ நாவலை முன்வைத்துப் பேசினார். அசோகமித்திரனின் பேச்சு அங்கும் இங்கும் சென்றாலும் எனக்கு எப்போதுமே பிடித்தமானது. நான் எதிர்பார்த்ததுபோலவே கமல்ஹாசன் மகாபாரத கூத்துக் கலைஞர்களையும் பிரசங்கக்காரர்களையும் தொட்டுப் பேசினார்.

அசோகமித்திரன் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. இணையமும் கணினியும் கொடுத்துள்ள சாத்தியத்தினால் மட்டுமே உருவாகும் பெரும் திட்டம் இது. ஜெயமோகன் இறுதி உரையில் இதனைக் குறிப்பிட்டார். அச்சில் இது எத்தனை பிரதிகள் போகும் என்று தெரியாது. ஆனால் மிக அதிகமான பேர் இப்போதே படிக்கும் நாவல் இதுதான். குறைந்தபட்சம் இதன் பகுதிகள். கர்ணன் என்றோ, துரோணர் என்றோ அல்லது எந்தப் பெயரைப் போட்டு கூகிளில் தேடினாலும் இந்தத் தளம்தான் முதலில் வரும். வரவேண்டும்.


இந்த ஒரு விஷயத்துக்காகவே எனக்கு இந்தத் திட்டம் பிடித்திருக்கிறது. மனத்தில் ஒரு பெருங்கனவு பல்லாண்டுகளாக இருந்தபோதிலும் தொழில்நுட்பச் சாத்தியம்தான் இந்தத் திட்டத்தை இப்போது செயல்படுத்த அடித்தளம் இட்டுத்தருகிறது. அவ்வாறு செயல்படுத்தும்போது தொழில்நுட்ப வடிவத்துக்கு முதன்மை கொடுத்து உருவாக்குவதால் முன்னெப்போதும் இருந்திராதவகையில் பல லட்சம் வாசகர்களைச் சென்றடையக் காரணமாக இருக்கிறது.

பல முக்கியமான, பிரபலமான நபர்கள், சாதாரண வாசகர்கள், படிக்கவே போவதில்லை என்றாலும் இந்த வரலாற்றுத் தருணத்தின்போது நாமும் இருக்கவேண்டும் என்ற விருப்பத்தில் வந்திருப்பவர்கள், அப்படி என்னதான் இங்கே நடக்கப்போகிறது என்று கொஞ்சம் கேலியுடன் வந்திருப்பவர்கள் என்று சகலவிதமான ஆட்களையும் சுற்றிலும் பார்க்க முடிந்தது.


விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட ஆர்வலர்களின் உழைப்பு பிரமிக்கவைத்தது. இவ்வளவு சிறப்புடன் தமிழில் வேறு எந்த எழுத்தாளருக்கும் அவருடைய வாசகர்கள் விழா நடத்த முடியுமா என்பது சந்தேகமே.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைஅன்னை
அடுத்த கட்டுரைவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு