கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்
 
தங்கள் பயணம் பற்றிய வரைவை உங்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து வாசித்துவருகிறேன். கர்நாடக ராயலசீமைப்பகுதி பெண்ணையாற்றங்கரையில் நீங்கள் சென்ற இடங்கள், நான் பெங்களூரில் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு பத்திரிகையாளனாகப் பணியாற்றிய போது  அலைந்த இடங்கள் –  குறிப்பாகப் பெனுகொண்டா, தாட்பத்ரி,  இப்போது உங்கள் கண்வழி அவற்றைக் காண்பதில் மகிழ்ச்சியே தனி.  இதற்காக உங்களுக்கு நன்றி.
 
அங்கிருந்து பெல்லாரி, ஹாஸ்பேட் என அலைந்து அன்றைய விஜயநகர அரசின் பகுதிகளில் திரிந்தேன். ஓரிரவு
வழியிலிருந்த காவல்நிலையத்தில் தங்கி, அங்குள்ள கிணற்றில் குளித்துக் காலையில் ஒரு குக்கிராமத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குப் போனேன்.  ஒரு முதியவர் பூஜைசெய்து தெலுங்கில் பாடிக்கொண்டிருந்தார். கரஹரப்ரியா ராகம். புரிந்தது மாதிரி இருந்தது,  பிறகு முதியவர் எனக்குப் பிரசாதம் கொடுத்தபோது கேட்டேன். கிருஷ்ணதேவராயரே தெலுங்கில் இயற்றினார் என்றார்.  பெத்த ஆள்வரு என்ற பெயர் கேட்டு சட்டென்று பொறிதட்டி, தமிழிலிருந்து வந்ததாக இருக்குமோ என்று யோசித்தேன்.  பிறகு முதியவரிடம் விளக்கமாகக் கேட்டு அது கோதா தேவியின் (ஆண்டாள் கதையின்) தெலுங்கு வடிவம் என அறிந்தேன்.  பெத்த ஆள்வரு, பெரியாழ்வார்தான். அன்று ஆடிப்பூரம் – ஆண்டாள் பிறந்த நட்சத்திரம். ராயரின் அவையில் இருந்த புலவர் கோதா-தேவியின் கதையை ஆமுக்தமல்யாதா என்பதாக இயற்றி, அது அக்கால மரபுப்படி ராயரின் பெயரில் வந்திருக்கலாம் என பிறகு பெங்களூர் திரும்பி அறிந்துகொண்டேன். இருந்தாலும் அந்தக்காலையில் என்னவென்று தெரியாமல் கேட்ட தெலுங்குப்பாடலின் அபூர்வம், தானாக அது திறந்த வழி. தமிழகம் தாண்டி பிற மாநிலங்களில் பணியாற்றிய எனக்கு, இலக்கற்ற சில பயணங்களில் இப்படி வாய்த்திருக்கிறது.
 
பயணத்தின் காட்சி, மொழி விநோதங்கள் இத்தகையவை.  சிலகாலம் தாண்டி இவை தரும் தொனியும் பார்வையும் நம்மை மாற்றிவிடுவன. இவற்றில் எது நம்மில் நிற்கும் என்பதும் தெரியாது. இந்த உணர்வை உள்ளூர அனுபவிக்கிற உங்களிடம் நியாயமாகவே பொறாமைகொள்ளத் தோன்றுகிறது! 
 
ஆந்திரத்தில் நீங்கள் செய்திருக்கும் பயணத்தில் பன்னகல் பற்றி வாசிக்கிறபோது இன்னும் எவ்வளவோ நாம் செல்லவேண்டும்,  தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்கள் தென்னகத்தில் தொடங்கி நிறையச் செல்லவேண்டும் எனத் தெரிகிறது.
 
வாழ்த்துக்களுடன்
 
நாகார்ஜுனன்
லண்டன்

அன்புள்ள நாகார்ஜுனன்

தங்கள் கடிதத்துக்கு நன்றி. இங்கே காசியில் ஓர் இணைய நிலையத்தில் தங்கள் கடிதத்தை படிப்பது வினோதமான மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் லண்டனில் இருக்கிறிர்கள்…. நவீன தொழில் நுட்பத்துக்கு நன்றி.

கர்நாடகத்தில் பல இடங்களில் கோயில்களில் ஆண்டாள் பாடல்களின் தெலுகு மொழியாக்கமும் பாடுகிறார்கள். தர்மபுரியில் கொரு கோதா மா கோயில் – கோதை நாச்சி கோயில்- உள்ளது. ராமலிங்க சாமி கோயில் வட இந்தியா முழுக்க உள்ளது. எப்படி தெற்கே காசியோ அப்படி இங்கெ ராமஏஸ்வரம் இருக்கிறது என்று படுகிறது. மீனாட்சி காமாட்சி போன்ற பெயர்களை சாதாரணமாக காணமுடிகிறது. கோண்டுக்கள் நடுவே கூட!
ஜெ

8888

அன்புமிக்க திரு.ஜெயமோகன்
உங்கள் பயண அனுபவங்கள் நேர்த்தியாகவும் விபரமாகவும் அமைந்திருக்கின்றன.அகோபிலம்.ஸ்ரீசைலம் பற்றிய பதிவுகள் முக்கியமானவை.ஆலயங்களுக்குள்
நேரடியாகச் சென்று வழிபடுதல் என்ற முறை எதுவரை தமிழகத்தில் இருந்தது என்ற எண்ணத்திற்கும் இக்கட்டுரை தூண்டுகோலாய் இருக்கிறது.”போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின்புகுவேன்” என்ற திருநாவுக்கரசர் தேவாரம் இதை நேர்படச் சுட்டுகிறது.சிக்கல் என்னவெனில்,கயிலாயக் காட்சிக்காகப் போனவரை கயிலாயத்தில் ஒரு பொய்கையில் மூழ்கச் செய்து எழும்போது திருவையாற்றில் எழுந்தார் எனவும்,அப்படி எழுந்த போது பாடிய பதிகம் இது எனவும் குரிக்கப்படுகிறது.எனவே திருநாவுக்கரசர் பாடியது வடநாட்டுச் சிவாலயத்தையா திருவையாற்றையா என்கிற கேள்வியும் எழுகிறது.”யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை ” என்கிற திருமந்திரத்திற்கும் நேரே ஆலயத்தில் சென்று வழிபடுபவர்என்று பொருள் கொள்வது சிரமம்.எது எப்படியோ….அகோபிலம் நரசிம்மரும்,ஸ்ரீசைலம் சிவபெருமானும் உங்கள் காலை நேரத் தேநீருக்கு ஏற்பாடு செய்தால் இன்னும் சிக்கலில்லாமல் எழுதுவீர்களென்று தோன்றுகிறது.
காலை நேரத்தில் அருமையானதொரு காப்பிக்குப் பின்…
மரபின் மைந்தன் முத்தையா

****

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 11 – வரங்கல்
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி