குரு நித்யா வரைந்த ஓவியம்

Guru_Nithya_Consciousness(1)

அன்புள்ள ஆசிரியருக்கு,

நலம்தானே. நான் போர்ட்லாந்து வந்ததில் இருந்து டெபோராவும் அவர் கணவர் ஸ்காட் டீட்ச்வோர்த்தும் நடத்தும் “தட் அலோன் ” வகுப்புகளில் கலந்துகொள்கிறேன். இவர்கள் இருவரும் குரு நித்யாவின் மாணவர்கள். குரு போர்ட்லாந்து பல்கலையில் தத்துவ வகுப்புகள் அளித்து வந்த பொழுது இந்திய தத்துவங்களை ஏளன நோக்குடன் காணும் அமெரிக்கர்கள் மத்தியில் இந்திய ஞானத்தை பயில முன்வந்த முதற் மாணவர்கள் இவர்கள் என்றும். சோர்வு தரக்கூடிய அமெரிக்க சூழலில் இருவரின் ஆர்வமும் தனது வகுப்புகளை தொடர மிகுந்த உக்கமளித்தாகவும் “லவ் அண்ட் ப்ளசிங்க்ஸ்” நூலில் குறிபிட்டுள்ளார். இவர்கள் தங்கள் வீட்டை குருகுலமாக மாற்றியமைத்து இந்திய தத்துவ வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.

வகுப்பில் நான் வெண்முரசு பற்றி கூறியிருந்தேன். மகாபாரதத்தை நம் காலத்தில் எழுதுவதென்பது நாராயண குருவின் “ஆத்ம உபதேச சதகத்திற்கு” நிகரானது. மேலும் அதை குருவின் மாணவர் செய்வது மகிழ்வளிப்பதாகவும் ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

வெண்முரசை வாசித்துக் கொண்டிருப்பது பல தெளிவுகள் அளிக்கின்றது. குறிப்பாக அதன் பாத்திரங்களின் உளவியல். உதாரணம் துருவனின் பெண்மைப் பேருருவங்களான சுநிதீ மற்றும் சுருசியின் வரைவு “கார்ல் யெங்” கூறும் அணிமா (anima) எனும் கூற்றை மிகத் துல்லியமாக புரிந்துகொள்ள உதவியது. மேலும் துரோணர் போன்ற குருக்களின் ஞானப் பாடங்கள் ஆத்ம உபதேச சதகத்தை உணர உதவுகின்றன. ஆனால் துரோணர் போன்றோரே ஆன்மீகத்தின் முன் தோற்று நிற்கின்றனர்!

இந்த வார வகுப்பின் பொழுது டெபோரா குரு நித்யா வரைந்த பிரக்ஞை பற்றிய ஓவியம் ஒன்றை அளித்தார். அது தங்களுக்கு உதவும் என்று எண்ணுவதால் ஓவியத்தை இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன்.

நன்றி,
பிரபு.

***

அன்புள்ள பிரபு

டெபோராவை எனக்குத்தெரியும். அதிகம் பேசியதில்லை. குருகுலத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன். அமெரிக்காவில் அப்படி ஒரு தொடர்பு உங்களுக்கு அமைந்ததில் நிறைவு

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
அடுத்த கட்டுரைஒவ்வொருநாளும்