மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
என் கடிதம் வெண் முரசும் என் மகளும் 11 வயது , பற்றியது . நான் முதற் கனல் வாங்கி சில வாரங்கள் ஆரம்பிக்காமலே இருந்தேன். அவள் என்னிடம் என்னப்பா எந்த புக் வாங்கினாலும் உடனே ஆரம்பித்து விடுவீர்கள் ,முடிக்கா விட்டாலும், ஆனால் இது ஏன் ஓரத்திலயே இருக்கிறது என்றாள். நான் இந்த அங்கிள் தமிழ் சற்று கடினமாக ஆழமாக இருக்கும், அதானால் யோசித்து கொண்டே இருக்கிறேன் என்றேன். என்ன பெரிய கஷ்டம் , தமிழ்தானே ,நான் வாசிக்கிறேன், என்று ஆரம்பித்தாள். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை வீட்டில் எந்த நேர இடைவெளியிலும் தொடர்ச்சியாக வாசித்து கொண்டே இருக்கிறாள். சில பாராக்களுக்கு மட்டுமே நான் அர்த்தம் சொல்ல வேண்டி இருக்கிறது . அந்த புத்தகம் அவளை visual ஆக ஒரு மாய உலகத்திற்கு இழுத்து செல்வதை பார்த்துகொண்டே இருக்கிறேன். அப்போதுதான் தமிழ் கடினம், வாசிக்க கஷ்டம் என்ற என் முன் முடிவுகள் எல்லாம் சட்டென முறிந்தன . இப்போது ஒரு சிறுமி வாசிக்க 5 பேர் கவனிக்க வெண்முரசு மிக வேகமாக அவர்களுக்குள் ஊடுருவி செல்கிறது . மிக ஆவலாக அறிமுக விழாவிற்கு என் குழந்தைகள் கிளம்ப தயாராகி இருக்கிறார்கள். இது என் முதல் கடிதம் . தமிழ் முன் பின்னாக இருந்தால் மன்னிக்கவும்.
அனந்த முருகன்
என் மகள் 16 வயது. பள்ளியில் ஓரளவு தமிழ் வாசித்தவள். ஆங்கிலம் சரளமாக வாசிப்பாள். வெண்முரசு மழைப்பாடல் வண்ணக்கடல் வரை எளிதாக வாசித்துவிட்டாள். நானறிந்து பல குழந்தைகள் வாசிக்கின்றன.. எவரும் இந்நாவல்களை வாசிக்கலாம் என்பதே என் எண்ணம். வாசிக்கும் மனநிலை , வழக்கம் இருக்கவேண்டும் அவ்வளவுதான்.
காரணம் நாவலில் உள்ள அடிப்படை மனநிலைகள். இது வஞ்சம் சினம் விருப்பு தியாகம் என மானுட இனத்தை ஆட்டிவைக்கும் அடிப்படை உணர்ச்சிகளால் ஆன கதை
உங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள்
ஜெ