பொன்னம்பலத்தாருடன் நான் அடிக்கடி வெளியே செல்வதுண்டு. அனேகமாக வாரம் ஒருமுறை அவர் வெளியே கிளம்புவார். திடீரென்று அதிகாலையில் டெல்லியில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று கும்பிட்டு மீள்வதுமுண்டு. அவரது மகளும் மனைவியும் வந்தபின்பு அந்தப்பயணம் அதிகரித்தது. அனேகமாக தினமும் வெளியே செல்ல ஆரம்பித்தார். வீட்டில் அவர்களுடன் இருப்பது அவருக்கு ஒரு பதற்றத்தை அளிப்பதுபோல தோன்றியது. அவர் வீட்டில் இருக்கும்போதும் பெரும்பாலான நேரம் நூலகத்தில்தான் இருந்தார். நான் எப்போதும் அவருடனேயே இருந்தேன்.
வைஜயந்தி நான் அவருடன் இருந்தால் ஒரு ‘ஹாய்’ மற்றும் சிரிப்புடன் கடந்துசென்றுவிடுவாள். அவர் மதிய உணவுக்குப் பின்னால் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏதாவது வேலையாக போவதுபோல அவ்வழியாக சென்று என்னை ‘தற்செயலாக’க் கண்டு என்னிடம் ‘ஹாய்! யூ ஆர் தேர்” என்றபடி வந்து அமர்ந்துகொள்வாள். அப்போது நிறையப்பேசி நிறைய சிரிப்பாள். அவள் பொன்னம்பலத்தார் தூங்கச்செல்வதற்காக காத்து நின்று அதன்பின் வருகிறாள் என்று எனக்குப் புரிந்தது. ஆனால் அது அப்படித்தெரியக்கூடாது என்பதற்காக அவ்வப்போது வராமலிருந்து விடுவாள்.
அவளுக்குப் பேச ஆள் தேவைபப்ட்டது போல என்று நினைத்துக்கொண்டேன். பெண்களுக்குப் பேச்சு என்பது கண்ணாடிமுன் நிற்பதுபோல என்று அவளுடன் பேசும்போது தோன்றும். கண்ணாடி அவளை சுருதிசுத்தமாக பிரதிபலித்தாகவேண்டும், அவ்வளவுதான். அவள் யாழ்ப்பாணத்தில் அவளுடைய இறந்தகாலத்தைப்பற்றியே பேச விரும்பினாள். அவளுடைய பள்ளிநாட்கள் , தோழிகள், பார்த்த சினிமாக்கள், சண்டைகள்.. அவள் பேசிய அனைத்தையும் சில சொற்றொடர்களாகச் சுருக்கிவிடமுடியும் என்று தோன்றியது. ‘நான் அழகானவள். நான் நல்லவள். எனக்கு ஒன்றுமே தெரியாது, நான் ஒரு சிறுமி’ அந்தப் பாவனையை உண்மையான அங்கீகாரத்துடன் கேட்டிருக்கும் இரு கண்களும் அங்கீகரிக்கும் இரு கண்களும்தான் நான் அவளுக்கு.
நெடுங்காலத்திற்குப் பின்பு ஒரு பெண்ணுடன் பேசிப்பழகும் இன்பத்தை நான் அனுபவிக்க ஆரம்பித்தேன். அது என் வாழ்க்கையிலிருந்து எப்போதைக்குமாக நழுவிச்சென்றுவிட்டது என்று நினைத்திருந்தேன். ஆகவே அவளுடன் பேசும்போது ஆரம்பநாட்களில் இறுக்கமாகவே என்னை வைத்திருந்தேன். என்னை மிகவும் கவர்ந்த அவளுடைய மென்மையான சதைப்பற்றில்லாத கழுத்தில் கண்கள் படாமலிருக்க முயல்வேன். ஆனால் மெல்ல அவள் என்னை நெகிழச்செய்துவிட்டாள். அவளிடம் பேசும்போது அவளையே கண்கள் முழுக்க விரித்து பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்தேன்
எந்தப்பெண்ணையும் உற்றுக் கவனிக்கும் ஆண் அவளிடம் பெரும் மோகம் கொள்வான் என்று நினைக்கிறேன். அவளுடைய அசைவுகளும் பாவனைகளும் அவனுக்குப் பேரழகாக தென்பட ஆரம்பிக்கும்.மோகத்தைக் கிளறும் ஒன்றை ஒவ்வொருநாளும் கண்டுபிடிப்பான். மோகம் பெண்ணுடலில் ஓர் அசைவைக் கண்டுகொள்கிறது. தலைமயிரை தூக்கி காதோரம் செருகியபடி அவள் சொன்ன ஒரு வாக்கியம் மனதுக்குப் பிடித்திருந்தது என்றால் அதன்பின் அவள் காதோர மயிரை ஒதுக்குவதைக் காண்பதே அந்தக் குதூகலத்தை உருவாக்க ஆரம்பிக்கிறது. அசைவுகள் பெருகி அந்தப்பெண்ணே அவ்வசைவுகளின் தொடர்நிகழ்வாக ஆகிவிடுகிறாள். தன் மோகத்தைக் குழைத்து அவள்மேல் பூசி அவளை அழகியாக்குகிறான் ஆண்.
எதுவெல்லாம் பெண்ணில் ஆணுக்கு விசித்திரமாக, ஒவ்வாதனவாக இருக்கின்றனவோ அவையெல்லாம் அவனுக்கு கவற்சியை ஊட்ட ஆரம்பிக்கின்றன. அவற்றைச் சார்ந்தே அவன் மோகம் மூண்டெழுகிறது. வைஜெயந்தியின் அப்பட்டமான உலகியல்தன்மை, பரிபூரணமான அறிவு எதிர்ப்புத்தன்மை, நான் சொல்லும் எதையுமே புரிந்துகொள்ளாத மௌட்டிகம் என்னை மோகவெறிகொள்ளச் செய்தது. நான் சற்றே தீவிரமாக அல்லது நுட்பமாக எதையாவது சொன்னால் அவளில் உருவாகும் அந்த வெற்றுப்பார்வையைப் பார்க்கையில் அப்படியே அவளை அள்ளி மார்போடணைத்து முத்தமிட்டு இறுக்கவேண்டும் என்ற வெறி எழும். அவளது வெற்றுத்தன்மையை களங்கமின்மை என்றும் குழந்தைத்தனம் என்றும் நான் கற்பனை செய்துகொண்டேன். காமம் மனிதனில் உருவாக்கும் பாவனைகளை காமம் இல்லாத போது கவனித்தால் கூசிச் சிறுத்து போய்விடுவோம். காமத்தில் ஆண் மடையனாகியே தீரவேண்டும் போல…
என்னை அவள் மிக மெல்ல தள்ளித்தள்ளி கொண்டு செல்வதை உணர்ந்தேன். ஒரு வாலிபால் ஆட்டக்காரன் பந்தைக்கொண்டு போவதுபோல தட்டித்தட்டி நூற்றுக்கணக்கான எதிர்பாராத திருப்பங்களுடன், திறமை மிக்க ஏமாற்றுகளுடன் என்னைக் கொண்டுசென்றாள். அவள் கையில் அபப்டி என்னைக் கொடுத்துவிடுவதன் எல்லையில்லாத உவகையை நான் அனுபவித்தேன். எங்களுக்குள் அதற்கான பாவனைகள் உருவாகி வந்தன. அவள் நடைமுறை யதார்த்தம் அறிந்த கறாரான அம்மாபோல பேசுவாள். நான் கவைக்குதவாத அறிவார்ந்த விஷயங்களைப் பேசும் முதிரா இளைஞன். அந்த விளையாட்டை சலிக்காமல் திரும்பத் திரும்ப ஆடிக்கொண்டிருந்தோம். நான் போரையும் வரலாற்றையும் பற்றிப் பேசினால் அவள் குழந்தையை வேடிக்கைபார்க்கும் அம்மா போல புருவத்தை நெளித்தும் உதட்டைச் சுழித்தும் கேட்டபின் கிண்டலாக ஏதாவது சொல்வாள். நான் சலிப்புடன் ”ஓ” என்று சொல்லி தலையில் கை வைப்பேன்
அல்லது சிலசமயம் அந்த ஆட்டத்தை எதிர்மறையாக ஆடுவோம். நான் அறிவும் கனிவும் கொண்ட முதிர்ந்த ஆண். அவள் இன்னமும் பதின்பருவத்தைத் தாண்டாத சிறுமி. எளிய ஆசைகளும் கனவுகளும் அக்கறைகளும் கொண்டவள். அவள் வாயை உறிஞ்சி உறிஞ்சி அற்ப விஷயங்களை நீட்டி நீட்டி பேசுவாள் ”…சத்தியமா அம்மான், நல்ல பிங்ங்ங்க் கலர் ஸ்டிக்கர் பொட்டு அது. நான் அதைக் கேட்டனனான். அதுக்கு அவ சொன்னவள், அவங்கடை அப்பா சிங்கப்பூரிலை இருந்து கொண்டுவந்தது எண்டு. அவள் மதியத்திலை நித்திரைக்கொள்ளயிலே நான் மெதுவா அதை பிச்சு எடுத்துப்போட்டு வந்திட்டனான்….” கிளுகிளுத்துச் சிரித்து ” ஆனா, அந்த பொட்டை எப்டி ஒட்டுறது? வீட்டிலை இருக்கிறப்ப மட்டும் ஒட்டிட்டு திரும்பி எடுத்து கண்ணாடியிலை ஒட்டி வைப்பேன்” நான் அவளுடைய முகத்தில் விரியும் சிறுமிக்கான பாவனைகளை கண்களில் தெரியும் குதூகலத்தை தந்தைமையுடன் பார்த்திருப்பேன்.
பேசிப்பேசி ஆணும் பெண்ணும் நெருங்குவதென்பதில்தான் இயற்கையின் மாயை இருக்கிறது. இரு வேறு ஆளுமைகள், இருவேறு குணச்சித்திரங்கள். அவனுடைய ஆண்குறியும் அவளுடைய பெண்குறியும் இணைய விரும்புகின்றன அவ்வளவுதான். அதற்காக அவர்கள் உடலில் சுரப்பிகள் சுரக்கின்றன. சிந்தனைகளை சுரப்பிகள் கட்டுப்படுத்துகின்றன. இரு மென்மையான மாவுப்பொருட்களாக இருவரின் ஆளுமைகளும் ஆகிவிடுகின்றன. அவளை நானும் என்னை அவளும் பிசைந்து பிசைந்து எங்களுக்குப் பிரியமானபடி ஆக்கிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் அப்படி ஒரு மாற்றம் நிகழ்கிறதா? இல்லை. இரு ஆடிகளில் இருவரும் பார்த்துக்கொள்கிறோம். விருப்பமான கோணத்தில் விருப்பமான வண்ணத்தில். ஒருகட்டத்தில் இவளன்றி எவருமே எனக்குப் பொருத்தமானவள் இல்லை என்றே மனம் நம்ப ஆரம்பித்துவிடுகிறது.
நான் அப்படி நம்பினேன். நகையிலிருந்து விழுந்த கல் திரும்பி அந்தப்பள்ளத்தில் கச்சிதமாகப் பொருந்துவதுபோல என் மனதில் அவள் பொருந்திக்கொண்டுவிட்டாள் என்று எண்ணிக்கொண்டேன். என் அறையின் தனிமையில் அவளை எண்ணி புன்னகை புரிந்தபடியே படுத்திருப்பேன். பொன்னம்பலத்தாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட என் காதுகள் பக்கத்து அறையில் அவளுடைய கால்நடமாட்டங்களை மட்டுமே கவனிக்கும். அவளுடைய பேச்சொலிகள் அவளுடைய மெல்லிய பாட்டொலி. அவளுடைய ஒலி கேட்காமலிருக்கும்போது அவள் பக்கத்து அறையில் ஒலியில்லாமல் நடமாடுவதை நான் உணர்ந்துகொண்டிருப்பேன்.
ஏதோ ஒருகட்டத்தில் நான் என்னுடைய குளிர்ந்த ஆழங்களுக்குள் வெளிச்சம் செல்வதை உணர்ந்தேன். அவளிடம் என் பெயரையும் ஊரையும் குடும்பத்தையும் என் இளமை நாட்களையும் எல்லாம் வெட்டவெளிச்சமாக திறந்து வைத்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். என்னுடைய எதுவுமே மிச்சமிருக்கக் கூடாது. ஆனால் அந்த செல்போன். அந்த நினைப்பு வந்ததுமே அந்த மன எழுச்சி அணைந்துவிடும். தனிமையும் துயரமுமாக என் அறைக்குள் முடங்கிக் கொள்வேன். அந்த செல்போன் என் இடுப்பில் கட்டி அனுப்பப்பட்ட வெடிகுண்டு போல. அது என் நாட்களை தீர்மானித்துவிட்டிருக்கிறது. நான் அதில் இருந்து தப்பவே முடியாது. நிராசையுடன் கண்ணீர் துளிக்க என் படுக்கையில் கம்பிளியால் போர்த்துக்கொண்டு படுத்துக்கொள்வேன்.
ஆனால் காலையில் அவள் முகம் என் மனதில் முதல் எண்ணமாக விரியும்போது எல்லாம் புதிதாக இருக்கும். என் மெல்லிய சீட்டியொலியில் பழைய பாட்டுகள் எழும். குளித்து ஷேவ் செய்து தலைசீவி நல்ல ஆடைகள் அணிந்து பங்களாவுக்குக் கிளம்பிவிடுவேன். நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்து அத்தனை நேரம் நின்றதே இல்லை. அத்தனை மனத்தவிப்புடன் எந்த நேரத்தையும் எதிர்பார்த்ததே இல்லை. அவள் என் முன் வரும் வரை அந்த கணத்துக்காகவே ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருக்கும். அவளன்றி வேறெதுவுமே இல்லாமல் என் நேரம் விரிந்து ஒளிகொண்டு கிடக்கும்.
மதியத்தின் தனிமையில் புத்தக அலமாரிகள் நடுவே நான் அவளை முதல்முறையாக முத்தமிட்டேன். நான் புத்தகம் தேடிக்கொண்டிருக்க அவள் வந்து ஏதோ கேட்டாள். நான் திரும்பியபோது பாளைக்குருத்து போன்ற அவள் கழுத்தில் தங்கச்சங்கிலி திரும்புவதைக் கண்டேன். ஒருகணம் எழுந்த வேகத்தில் அவள் கைகளைப் பற்றினேன். அவள் ”ஓ…அம்மான்” என்று சிணுங்கியபோது அந்தக்குரலில் இருந்த அந்தரங்கத்தாலேயே வெறி எழுந்து அவளை இழுத்து அவள் முகத்தில் முத்தமிட்டேன்
ஒரு முதிராக் காதலனின் முதல் முத்தம் போலிருந்தது அது. குறி தவறியது முதலில். என் நெஞ்சு இட்ட பேரோசையன்றி வேறெதையும் நான் அறியவில்லை. என் கைகளும் கால்களும் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தன. அவள் முகத்தை நோக்கிக் குனிந்து மூக்கில் என் உதடுகளைப் பதித்தேன். ”விடுங்கோ” என்றபடி அவள் திமிறினாள். நான் மீண்டும் முகத்தை நீட்ட ”அய்யோ அப்பா” என்றாள். பிடிவிட்டு நான் பதறி பின்வாங்க கட்டைவிரலை ஆட்டி கிண்டல்செய்தபடி ஓடிச்சென்றாள்.
பிறகு இரண்டுநாட்கள் என்னை அவள் நெருங்கவே விடவில்லை. அலமாராக்களுக்கு நடுவே வரவேயில்லை. நான் பேச ஆரம்பித்தாலே கிண்டல்செய்து முகம் சுளித்துச் சிரித்தாள். பின்பு நான் சலித்து விட்டுவிட்டேன். அவள் என்னிடம் அவளுடைய பள்ளி நாட்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஆர்வமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் பின் அவள் விடைபெற்றுச் சென்றாள். நான் ஒரு நூலை திரும்ப வைப்பதற்காக நூலக அடுக்குகளுக்குள் சென்றேன். அப்போது மெல்லிய காலடி ஓசை கேட்டது.
அவள் தீயில் வதங்கியது போல செம்மை பரவிய முகத்துடன் நின்றிருந்தாள். நான் அவளைப்பார்த்து செயலற்று நின்றேன். என் மூச்சொலி மட்டுமே என் காதில் ஒலித்தது. அவள் சட்டென்று பாய்ந்து என்னருகே வந்து எம்பி தன் கைகளால் என் தோளை வளைத்து என் உதடுகளில் தன் உதடுகளை அழுத்தினாள். காமம் கொண்ட பெண்ணின் உதடுகளை நான் முதல்முறையாக அறிந்தேன். அவற்றின் வெம்மையை உயிர்த்துடிப்பை. ஒரு முத்தம் எங்கள் இருவரையும் ஒன்றாக்கியது. ஒரு உணர்ச்சிகரமான முத்தம் நூறு உடலுறவுகளுக்குச் சமம்.
அவள் என்னை விலக்கியபோது நான் மூச்சிரைத்து வியர்த்து விலகிக் கொண்டேன். அவள் சிரித்துக்கொண்டு என் மார்பில் தலையைச் சாய்த்தாள். நான் என் கைகளால் அவள் தலைமயிர் பிசிறுகளை ஒதுக்கினேன். அவள் காதுகளில் மெல்ல ”சூடாக இருக்கிறீர்?” என்றேன். ”ம்ம்” என்றாள். பின்பு தலைதூக்கி என்னைப் பார்த்தாள். கண்கள் கலங்கியிருப்பது போல் இருந்தன. ”அழுகிறீரோ?” என்றேன் ”ஓம்” ”என்?” என்று பதைப்புடன் கேட்டேன். ”சும்மா” என்றபின் எம்பி என் உதடுகளை மீண்டும் அழுத்தி முத்தமிட்டாள்
அவளுடைய கை என் தொடையை அழுத்தியபோது மெல்லிய வலியால் நான் அந்தக்கையைப் பிடித்தேன். ”ஏன்?” என்றபின் அவள் அந்த வடுமீது கையை வைத்தாள். அவளுக்கு நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன், அந்தக்காயம் பலாலி சண்டையில் பட்ட குண்டு என்று. அந்தவடுவை மெல்ல வருடி அழுத்தியபின் ” வலிக்குதே?” என்றாள். ”இல்லை” அவள் அதையே வருடிக்கொண்டிருந்தபின் ”அம்மான், ஒரு குண்டு உடம்புக்குள்ளே இருக்கிறது எப்பிடி இருக்கு?” என்றாள். ”ஒண்டுமே இல்லையே” என்றேன். ”எப்பவுமே ஒரு குண்டு உள்ளே இருக்கிறது…அது பயமா இல்லையோ?” ”என்ன பயம்?” என்றேன்சிரித்தபடி. ”உம்…எனக்குப் பயமா இருக்கு” நான் அவளை அள்ளி அணைத்து கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டேன்
மூச்சுத்திணறுவதுபோல திமிறி விலகி ”விடுங்கோ” என்றாள். அவள் உடலே இறுகி திமிறியது .நான் அவளைப் பிடித்து நிறுத்தி ”என்ன பயம்?” என்றேன். ”பயமெண்டு இல்லை…ஒரு விதமா இருக்கு” என்றாள். நான் அவள் கண்களுக்கு கீழே இருந்த கருமையை மெல்ல கைகளால் வருடினேன். அதை உணர்ந்ததும் அவள் கைகளைத் தட்டிவிட்டாள். ”அப்பா வருவினம்” என்றபின் விலகி திரும்பிப் பார்த்தாள். அந்த அசைவில் அவள் கழுத்தின் வளைவைக் கண்டு நான் அவளை இழுத்து மீண்டும் அழுத்தமாக முத்தமிட ஆரம்பித்தேன். என் மார்பில் பிடித்து தள்ளி விலகி உதட்டை துடைத்துக்கொண்டு விரைந்து விலகிச் சென்றாள்.
அதன்பின் அவள் என்னை தொடவே விடவில்லை. அந்த முத்தத்துக்குப் பின் ஒன்று நிகழ்ந்தது, நான் அவளை என்னவள் என்றே எண்ணிக்கொள்ள ஆரம்பித்தேன். இனி நான் அவளை அடையவேண்டியதில்லை. ஏற்கனவே அடைந்துவிட்டேன். அவள்மீதிருந்த மோகவெறி சட்டென்று இல்லாமலாகியது. அவள் எனக்கு இயல்பானவளானாள். அவளை தொடவோ முத்தமிடவோ அதன்பின் நான் முயலவேயில்லை. அதைவிட நாங்கள் அந்த பாவனைகளை எல்லாம் முற்றாகக் கைவிட்டோம். சொல்லப்போனால் எங்களுக்குள் பேச்சே குறைந்துவிட்டது. நெடுநாள் தாம்பத்திய உறவுகொண்டிருக்கும் கணவன் மனைவி போல சொல்லாமலேயே நான் நினைப்பது அவளுக்குப் புரியும் என்பது போன்ற ஒரு சாதாரணமான பேச்சில்லாத நிலை. அவசியத்திற்கு மட்டும் நான் அவளிடம் சுருக்கமாகப் பேசினேன். அந்தப்புதியமனநிலை நான் சொல்லாமலே அவளுக்கும் புரிந்து அவளும் இயல்பாக அதற்கு எதிர்வினையாற்றினாள்.
அத்துடன் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. அதுவரை நான் அவளுடைய முதல்கணவனைப்பற்றி எண்ணியதே இல்லை. இப்போது அதைப்பற்றிய நினைப்பு என் மனதில் அடிக்கடி இயல்பாக கடந்து சென்றது. யார் அவன், ஏன் அவளைப்பிரிந்தான், அவர்களுக்குள் என்னபிரச்சினை. ஆனால் அதைப்பற்றி அதுவரை நான் அவளிடம் ஏதும் பேசவில்லை என்பதனால் அதற்குப்பின் பேசுவது அனேகமாக சாத்தியமில்லாததாகப் பட்டது. பொன்னம்பலத்தாரிடம்தான் என்றாவது அதை நான் பேசமுடியும். ஆனால் அதுவும்கூட சாத்தியமில்லை என்றே தோன்றியது.
ஆனால் நான் அவள் நினைவாகவே இருந்தபோது எதையுமே உணராதிருந்த பொன்னம்பலத்தார் அவளை நான் சரியாகப் பார்க்காமல்கூட ஆனபின்னர் சட்டென்று எதையோ கண்டுகொண்டார். விழிவிரிய அவளை நான் பார்த்திருக்கும் பாவனையைவிட அப்பட்டமானது அந்த சொந்தமான பாவனை என்று கண்டுகொண்டேன். ஆகவே இன்னமும் கவனம் கொள்ள ஆரம்பித்தேன். அவளை நான் பார்ப்பதே இல்லை. அவளிடம் பேசுவது மிக அபூர்வம். அவளும் அதை நிரூபிப்பதற்கு என்பது போல அடிக்கடி எங்கள் முன் வர ஆரம்பித்தாள். ஆனால் பொன்னம்பலத்தார் மேலும் மேலும் சந்தேகப் பட ஆரம்பித்தார். அவர் மேலும் சந்தேகப்படுவதை முழுமுற்றான உதாசீனத்தை நடிப்பதன் மூலம் காட்டினார். அதற்கெதிராக எந்த பாவனையை மேற்கொள்வதென்று தெரியாமல் நான் மேலும் இறுக்கமானவனாக என்னைக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தேன்.
வைஜயந்தி என்னிடம் ”அப்பாவுக்கு உங்களை பிடிச்சிருக்கு” என்றாள். ”எப்படித்தெரியும் ?” என்று கேட்டேன். ”தெரியயில்லை…ஆனா பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்கக்கொண்டுதான் ஒண்டுமே தெரியாதவர் மாதிரி இருக்கினம்” என்றாள். அவள் முகத்தையே நான் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று எனக்கு அவளுடைய முதல்கணவனைப்பற்றிய நினைப்பு வந்தது. அதைக் கேட்டால் என்ன? ஆனால் என்னால் என் சொற்களை அதைச்சார்ந்து திரட்டிக்கொள்ளவே முடியவில்லை. நான் என் மனதை முட்டி முட்டி முன்னால் செலுத்தினேன்.
நான் கேட்டது வேறு ஒரு கேள்வி. ”…அப்ப உங்க அப்பா சம்மதிப்பார் என்ன?” என்றேன். ”எதுக்கு?” என்று அப்பாவியாகக் கேட்டாள். ”இதுக்கு” என்றேன். ”என்ன இதுக்கு?” என்றாள். இப்போது புருவம் நடுவே ஒரு மெல்லிய முடிச்சு. நான் அப்போதுதான் அந்த இடம் எத்தனைபெரிய இக்கட்டான சந்தி என்று உணர்ந்தேன். என்ன சொல்வது…கண்களை விலக்கி ”தப்பா நினைக்கமாட்டார் எண்டு சொன்னேன்” என்றேன். ‘ஓ, ஹி டோண்ட் கேர்” என்று அவள் சொன்னாள். அந்தச்சொற்கள் நான் என் மனதில் வைத்திருந்த வைஜயந்தியிடமிருந்து வரவில்லை என்று தோன்றியது. அவற்றைச் சொன்ன பெண்ணை நான் அறிந்திருக்கவேயில்லை.
அன்று முழுக்க நான் அவள் சொன்னதையே எண்ணிக்கோண்டிருந்தேன். அதற்கு என்ன அர்த்தம்? என் சிந்தனைகளை நான் அரையிருளில் இருந்து பிடித்து இழுத்து வெளிச்சத்தில் நிறுத்தினேன். நான் எதிர்பார்க்கிறேன்?நான் அவளிடம் கேட்டதற்கு என்ன அர்த்தம்? அவளை நான் திருமணம் செய்துகொள்ள பொன்னம்பலத்தார் சம்மதிப்பாரா என்றா? என்ன ஒரு முட்டாள்தனம். நானெப்படி பொன்னம்பலத்தாருக்கு மருமகனாக முடியும். என் வயதில், என் அந்தஸ்தில்… இல்லை நான் அப்படிக் கேட்கவில்லை. அப்படியானால்? நானும் வைஜயந்தியும் கள்ள உறவுகொள்ள பொன்னம்பலத்தார் ஒத்துக்கொள்வாரா என்றா? ச்சே..
தலையை தாங்கியபடி என் அறைக்குள் படுத்திருந்தேன். என்ன ஆயிற்று எனக்கு. ஏன் இத்தனை அபத்தமாகச் சிந்திக்கிறேன்? என்ன கள்ள உறவு? ஒருமுறை முத்தமிட்டால் அது கள்ள உறவா? இல்லை, இது அதற்குமேல் போகாது. அந்தச் சொற்களை என் அகமே நம்பவில்லை. இது மேலும் போகும். போகாமல் என் மனம் அமைதியடையாது. எனக்கு என்ன வேண்டும்? எதற்காக நான் ஏங்குகிறேன்? எதற்காக இந்த உயர்குடிப் பெண்ணை பைத்தியம் போல பின் தொடர்கிறேன்?
அந்த இரவில் வெளியே பனியில் குளிர்ந்த மரங்கள் காற்றில் ஓலமிடும் வேளையில் மிக அந்தரங்கமாக நான் என் தேவையை உணர்ந்தேன். என்னை அவள் என் ஆதி வடிவில் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாழ்நகர் கல்லூரியில் பெரிய தலையும் மெலிந்த உடலும் விரிந்த கண்களுமாக கணிதம் படிக்கச் சென்ற அந்த இளைஞனை. கவிதைகள் எழுதிய, கரியால் கோட்டோவியங்கள் வரைந்த, அவனை. பல்லின் ஓட்டையில் வெல்லம் படுவதுபோல மிகத்தீவிரமாகக் கூசச்செய்யும் இனிமையாக நான் உணர்ந்தேன், நான் அவளில் தேடுவது என்னை தீண்டிச்சென்ற துப்பட்டாவாக என் கனவின் ஆழத்தில் இருந்துகொண்டிருந்த அந்த இளமைக் காதலியை என்று