«

»


Print this Post

உலோகம் – 10


<![CDATA[நான் பொன்னம்பலத்தாரை நெருங்கிய விதம் எனக்கே ஆச்சரியமளிப்பது. மூன்றாம்நாள் நான் அவரது வாழ்க்கையின் எலல அம்சங்களையும் அவரது எல்லா பதற்றங்களையும் துக்கங்களையும் தவிப்புகளையும் தெரிந்தவனாக இருந்தேன். அவரது தனிமையில் நான் மட்டுமே கூட இருக்கமுடியும் என்று ஆகிவிட்டிருந்தது. ”சிவம் வேற மாதிரியான ஆள். அவனுக்கு இதிலே ஒண்டும் ஆர்வம் இல்லை. அவன் ரோவிண்ட ஆள். அவன் ஒரு ரொபொபோ மாதிரி..” என்று என்னிடம் அவர் சொன்னார். அவரது பங்களாவில் பெரிய ஒரு நூலகம் வைத்திருந்தார். அதில் அடுக்கடுக்காக தமிழ் ஆங்கில நூல்கள். கணிதம், இலக்கியம், ஆன்மீகம், வரலாறு, தத்துவம்… சமீபமாக அவருக்கு கர்நாடக சங்கீதத்தில் பெரிய ஈடுபாடு வந்திருந்தது. தனிமையில் ஒருவர் சங்கீதம் கேட்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

 

 

தினமும் காலையில் ஏழுமணிக்கெல்லாம் நான் குளித்துவிட்டு அவரது நூலகத்திற்குச் சென்றுவிடுவேன். அங்கே செய்தித்தாள்களை படிப்பேன். அவருக்கு ஒருநாள் தாமதத்தில் தினக்குரல் ஈழமுரசு எல்லாமே வந்துகொண்டிருந்தன. இணையத்தில் அதற்கு முன்தினமே நாளிதழ்களை வாசித்துவிட்டாலும் மறுநாள் தாளை கையில் தொட்டால்தான் நிறைவாக இருக்கும். ”செய்தியை கையாலே தொட்டுப்பாக்க வேண்டாமா? தொட்டால்தானே அது நம்ம செய்தி. இல்லையெண்டா அது வேற ஆரோட செய்தி மாதிரித்தானே?” என்பார் பொன்னம்பலத்தார்.  எல்லாவற்றிலும் அவருக்கான ரசனைகள் உண்டு. அவர் செய்தித்தாள் வாசித்தால் கையில் காபி இருக்கவேண்டும்

நான் வாசித்துக்கோண்டிருக்கும்போதே அவர் வெண்ணிறமான சட்டையும் அதன்மேல் கையில்லாத கம்பிளி ஸ்வெட்டரும் பாண்டுமாக நெற்றி நிறைய ஈரம்காயும் விபூதியுடன் வந்துவிடுவார். நான் ”வணக்கம் புரபசர்” என்று சொல்வேன். பிரகாசமான முகத்துடன் ”வணக்கம் தம்பி” என்றபடி அமர்ந்து கொள்வார். நான் எல்லா செய்தித்தாள்களையும் சீராக அடுக்கி அவர் முன்னால் வைப்பேன். அவருக்கு செய்தித்தாள்கள் புதியவையாக இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. சொல்லப்போனால் வாசித்துக் கலைந்த செய்தித்தாள்மீதுதான் பிரியம். ”எங்க அப்பா பேப்பர் வாங்கமாட்டார். காசுக்கு தெண்டம் எண்டு சொல்லுவார். நான் எங்க வீட்டுக்கு முன்னாலே ஈசன் ற்றீ ஷொப்பிலேதான் பேப்பர் படிக்கிறது. எங்க அப்பா இலங்கை கொங்கிரஸ். ஈசுவரமூர்த்தி தமிழரசு கட்சி. அதனால நான் அங்க வாசிக்கவாரதிலை அவனுக்கு ஒரு சந்தோஷம். ஒரு கொப்பி சொல்லிப்போட்டு பெஞ்சிலே உக்காந்து வாசிப்பேன்… எல்லாருக்கும் ற்றீ எண்டால் எனக்கு மட்டும் நல்லா பால்விட்ட கொப்பி…”

பொன்னம்பலத்தா நினைவில் யாழ்ப்பாணத்து மண் அதன் எல்லா கனவுகளுடனும் நினைவுகளுடனும் இருந்தது. அவர் அங்கே ஒரு நல்ல குடும்பத்து இளைஞனுக்குக் கிடைக்கக்கூடிய எல்லா இன்பங்களையும் சீராக அனுபவித்து வளர்ந்தவர். காலையில் கடற்காற்றில் சைக்கிளில் கடலோரம் சென்ரு மீன்வாங்கி வருவார். சாரன் கட்டிக்கொண்டு சென்று ஊர் நூலகத்தில் எல்லா வார மாத இதழ்களையும் நின்றபடியே வாசிப்பார். சைக்கிளிலேயே கல்லூரிக்குச் செல்வார். கேண்டீனில் சாப்பிடுவதற்கு கணக்கு உண்டு. டீக்கடைகளில் டீ குடிக்க கையில் எப்போதும் சில்லறை இருக்கும். அந்தப்பகுதியில் இருந்த எல்லா அழகான பெண்களுக்கும் அவரைப் பிடித்திருந்தது. பருத்தித்துறையில் இருந்து கிளம்பி உலகை வெல்லப்போகும் ஓர் ஆண்மகன். சைக்கிளில் பையன்களுடன் பெண்களை பின் தொடர்ந்து சக்கரத்தை அரக்கி அரக்கி செல்வார்கள். வீடுவரை கொண்டு சென்றுவிட்டுவிட்டு திரும்பி வருவார்கள். சாயங்காலம் கடலோரம் இருந்த உயரமில்லாத கல்மதில்களில் அமர்ந்து சினிமாக்களையும் பெண்களையும் பற்றி ஆவேசமாகப் பேசிக்கொள்வார்கள்.

”எனக்கு சிவாஜியை கனக்க பிடிச்சுக்கொண்டது” என்றார் பொன்னம்பலத்தார். அதை  அவரில் எவரும் அப்போதும் காணமுடியும். அவரது நடையில் பாவனைகளில் எல்லாம் கடுமையான சிவாஜிகணேசன் பாவனை இருந்தது. புருவத்தை தூக்கியபடி ஏறிட்டுப்பார்க்கும்போது அந்த காட்சியையே  உத்தமன் அல்லது அவன்தான் மனிதன் அல்லது அவன் ஒருசரித்திரம் படத்தில் பார்த்திருப்பதாகவே தோன்றும். ”அந்தக்காலத்திலை யா·ப்னாவிலை உத்தமன் நூறுநாள் ஓடிச்சுது. இங்காலை அது ஓடயில்லை. ·ப்ளாப் எண்டு சொன்னவங்கள்” என்று உற்சாகமாக சிவாஜி படங்களைப்பற்றிப்பேசுவார். அக்காலத்தின் எல்லா சிவாஜி படங்களின் ரிலீஸ் தேதிகள் வெற்றி தோல்வி நிலவரங்கள் கதாநாயகிகள் பிறநடிகர்கள் கூடவே வெளிவந்த மற்ற படங்கள் எல்லா தகவல்களும் அவருக்கு துல்லியமாக நினைவிருந்தன.

”மன்னவன் வந்தானடி எழுவத்தஞ்சு ஓகஸ்ட் ரெண்டாம்திகதி இந்தியாவிலே ரிலீஸ் ஆச்சு. யா·ப்னாவிலே ஒக்றோபர் ரெண்டாம் தேதி. பி.மாதவன் டைரக்ஷன். மஞ்சுளாதான் ஹீரோயின். அப்ப அவ மேலே எல்லாருக்கும் பெரிய கிரேஸ். சின்ன கண்ணு அவளுக்கு. சிரிக்கிறப்ப கண்ணை மூடுற ஹீரோயின் அவ ஒருத்திதான். எம்.எஸ்.விஸ்வநாதன் பாட்டு போட்டிருந்தவர். ஒரு பாட்டு ரொம்ப ·பேமஸ்.. தாலாட்டுப்பாட்டு…எங்க அம்மாவுக்கு அந்தப்பாட்டு கனக்க பிடிச்சுக்கொண்டது.” என்று உற்சாகமாக பெருங்குரலில் சொன்னார்

நான் ”நான் நாட்டை ஆளப்போறேன் அந்த கோட்டைய பிடிக்கப்போறேன்.. அதுதானே?” என்றேன். ”அது அந்தப்படத்திலே உள்ள பாட்டுதான். சிவாஜி ஒரு கழுதை மேலே ஏறி பாடிட்டே வருவார். அதிலே அவருக்கு கோமாளி மாதிரி ஒரு வேஷம்… ” . சட்டென்று பயங்கரமாக சிரித்துக்கொண்டு எழுந்துவிட்டார். ”தம்பி, கண்டியோ, நானும் அதே மாதிரி கோட்டுபோட்டுட்டு கழுதை மேலே ஏறி  அதேமாதிரி பாட்டுப்பாடிட்டு போனவன்தானே?” என்றபின் கேலியாக கைவீசி ”நான் நாட்டை ஆளப்போறேன் அந்த கோட்டைய பிடிக்கப்போறேன்..” என்றுபாடினார். நானும் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டேன். உடனே அவர் முகம் கனத்தது. ”இப்ப எனக்கு சரித்திரத்திலே என்ன இடம் சொல்லும்…ஒரு கோமாளி.. வேறே என்ன?”

நான் ”சரித்திரமெண்டு ஒண்டும் இல்லை…” என்றேன். அவர் என்னை ஏறிட்டுப்பார்த்தார். ”கனபேரு சொல்லுவினம் சரித்திரம் ஜெயிச்சவங்க எழுதறது எண்டு. அதுவும் இல்லை. வாழுறவங்க அவங்களுக்கு வேண்டியது மாதிரி நினைச்சுக்கிடறதுதான் சரித்திரம்..அதுக்குமேலே ஒண்டுமே இல்லை…” என்று மேலும் சொன்னேன்.

அவர் என்னை கூர்ந்து நோக்கி ”சனங்களுக்கு உண்மை தெரியணுமே…தெரிஞ்சாத்தானே நல்லவிதமா நினைப்பினம்?” என்றார் .நான் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று ஒரு கணம் தயங்கினேன். நான் பேசப்பேச என்னைக் காட்டிக்கொடுக்கிறேன். எத்தனை வித்தாரமாக, எத்தனை கவனமாகப் பேசினாலும் பேச்சு நம்மை காட்டிக்கொடுக்கும். நம் பேச்சுவழியாக மட்டுமல்ல, நம்முடைய பேச்சுக்கு எதிர்திசையில் சென்றும் நம்மைக் கண்டுபிடிக்க பிறரால் முடியும். அத்துடன் பொன்னம்பலத்தா அசாதாரணமான புத்திக்கூர்மை உடையவரும்கூட. ஆனால் என்னால் பேசாமலிருக்க முடியவில்லை. என்னுடைய அதுநாள்வரையிலான வாழ்க்கையில் இருந்து அச்சிந்தனைகளை நான் தொகுத்துக்கொண்டிருக்க வேண்டும். பலசமயம் முக்கியமில்லாதவையாக மேல்பார்வைக்குத் தோன்றும், ஆனால் ஒரு மனிதனால் தன் வாழ்க்கையின் சாராம்சமாக திரட்டிக்கொள்ளப்பட்ட, கருத்தை சொல்லாமல் அடக்கவே முடியாது.

நான் உரத்த குரலில் பேச ஆரம்பித்தேன். இரண்டுவகை மக்கள் இருக்கிறார்கள். ஒருதரப்பினர் மிகப்பெரும்பான்மையினர். அவர்களுக்கு தங்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அன்றாட இன்பங்கள் அன்றி வேறு எதுவும் முக்கியம் இல்லை.  இவர்களின் பகற்கனவுகள் முழுக்க எளிமையான புலன் இன்பங்கள்தான். திகட்டத்திகட்ட காமம். கொஞ்சம் வேறு சந்தோஷங்கள். மீண்டும் காமம். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்பமும் நிம்மதியும் கிடையாது. காரணம் அவர்களை ஆட்டி வைக்கும் இரண்டு பயங்கள். ஒன்று அண்டைவீட்டானைப்பற்றிய பயம். இரண்டு எதிர்காலம் பற்றிய பயம்.  தங்கள் இன்பங்களில் அண்டைவீட்டுக்காரன் பங்குக்கு வந்துவிடுவான் என்று அவர்கள் உள்ளூர அஞ்சுகிறார்கள். தாங்கள் தேடிவைத்திருப்பவற்றை அவன் பறித்துக்கொள்ளக்கூடும். அவன் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறான். அவனுடைய இருப்பே அதற்காகத்தான். அவன் அல்லும்பகலும் அதையே நினைத்துக்கொண்டிருக்கிறான். அவன் சதிசெய்தபடியே இருக்கிறான். அவன் மாற்றான். பங்காளி.  அன்னிய சாதி, அன்னியமதம், அன்னிய இனம், அன்னிய நாடு… அவனை சந்தேகத்துடன் கண்காணிக்கிறார்கள். மேலே புன்னகையை பூத்தாலும் உள்ளூர அவனை வஞ்சத்துடன் மதிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவனும் இவர்களை மதிப்பிடுபவன் ஆதலால் அந்த வஞ்சம் சிறு சிறு விஷயங்கள் வழியாக வளர்கிறது. அவர்களை மிக எளிதாக அந்த மாற்றானுக்கு எதிராக திருப்பிவிட்டுவிட முடியும். உச்சகட்ட வன்முறைக்கும் கற்பனையே செய்யமுடியாத கொடூரத்திற்கும் கொண்டுசெல்ல முடியும். அந்த பயத்தை அவர்களில் உருவாக்கினால் அவர்களை எளிதில் ஒன்று திரட்டலாம். இன்னொருபக்கம் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் ஏதாவது ஆகிவிடுமா என்ற நிரந்தரமான சந்தேகத்தில் இருக்கிறார்கள். அதற்காக தங்கள் நிகழ்காலத்துச் சந்தோஷங்களை எல்லாம் முழுமையாகவே தியாகம் செய்துவிட்டு சேமித்துக்கொண்டே இருப்பார்கள். சேமிப்பு தவிர இவர்களுக்கு வேறு இன்பம் இல்லை. சேமிப்பு வளர்வதைக் காணும்போது ஏற்படும் மெல்லிய மனநிம்மதியைத்தான் சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது வகை மக்கள் சிறுபான்மையினர். இவர்கள் புத்திசாலிகள். இவர்கள் இன்று எப்படி இருக்கிறார்களோ அது அல்ல இவர்களின் ஆளுமை என்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் இவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், ‘நீங்கள் உங்களில் ஒருவராக என்னை நினைத்துக்கொள்ளலாம். ஆனால் நான் அது அல்ல. உங்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்று உண்டு. நீங்கள் வெறுமே சோறு நிறைக்கப்பட்ட சோத்துடப்பாக்கள். நான் ஆர்.டி.எக்ஸ் நிரப்பி டைமர் அமைக்கப்பட்ட சோத்துடப்பா. நான் வெடிக்கக்காத்திருப்பவன். அந்தக் கணம்வரை நீங்கள் என்னையும் வெறும் டப்பாவாகத்தான் நினைப்பீர்கள். நான் உங்களை விட மேலானவன். உங்களை வழிநடத்துபவன் உங்களை ஆக்கக்கூடியவன் ஆகவே அழிக்கவும் உரிமை கொண்டவன்’ என்று. இவர்களின் உள்ளே அகங்காரம் புளித்து கொதித்து நுரைத்துக்கொண்டே இருக்கிறது. இவர்களின் பகற்கனவில் காமத்தைவிடவும் கிளர்ச்சியூட்டுவது இவர்களின் அகங்காரத்தின் உச்சகட்ட வெளிப்பாடுகள்தான். எந்த வெற்றியும் இவர்களுக்கு போதாது. டைம்ஸ் இதழின் அட்டையில் வரவேண்டும். நோபல் பரிசுகள் வாங்கவேண்டும்.  விண்வெளியில் பறக்கவேண்டும். உலகையே ஆளவேண்டும். உலகமே போற்றி வணங்க வேண்டும். உலகில் பிற எவருமே நிகராக இருக்கக் கூடாது. சென்றவர்களிலும் எவரும் நிகராக இருந்திருக்கலாகாது. அவர்களைப்பற்றி பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படிக்கவேண்டும். தெருவெங்கும் சிலைகள் நிற்கவேண்டும். ஆனாலும் போத

ாது. மேலே மேலே என்றே மனம் திமிறும். ஆகவே இவர்களுக்கு இன்றைய வாழ்க்கை முக்கியமே இல்லை. இன்றைய உலகில் இவர்கள் அடையும் இன்பம் ஏதுமில்லை. இங்கே இவர்களுக்கு இடமில்லை. இவர்களின் இடம் வரலாற்றில் இருக்கிறது. ஆகவே தன்னை வரலாற்று மனிதர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். வரலாற்றில் இடம்பெற என்ன செய்யவேண்டும்? சோத்துடப்பா வெடிக்க வேண்டிய இடம் எது? இளமைமுதலே இவர்களின் தேடல் இதுதான். எந்த இடம்? எப்போது? தமிழ்நாட்டில் நூற்றுக்குத்தொண்ணூறு பேருக்கு அது சினிமாதான். உலகத்தை உலுக்கி கோடிகோடியாகக் கொட்டக்கூடிய ஒரு சினிமா. அந்த சினிமாவின் திரைக்கதையும் வசனமும் காட்சிகளும் அவர்களுக்குள் இருக்கும். அவர்கள் தனியாக இருக்கும்போது கதகதப்பான நீரோடை போல அவர்களுக்குள் அது ஓடிக்கொண்டே இருக்கும். சிலருக்கு அரசியல், சிலருக்கு வியாபாரம்,சிலருக்கு அறிவியல். ஆனால் இவர்களில் மிகச் சிலர்தான் உண்மையிலேயே வரலாற்று மனிதர்களாக ஆகிறார்கள். வரலாற்று மனிதர்களிலும் பெரும்பாலானவர்கள் வரலாற்றின் பெருக்கில் சிக்கிக்கொண்ட சாதாரண மனிதர்களாகவே இருப்பார்கள். மிஞ்சியவர்கள் அதன் ஆழமும் வேகமும் தெரியாமல் குதித்துவிட்டவர்களாக இருப்பார்கள். வரலாற்றை அறிந்து உள்ளே குதித்து அதில் விரும்பியபடிப் பயணம்செய்பவர்கள் என எவருமே இல்லை. குதித்தபின்னர் ஒரே சவால்தான், மூழ்காமலிருக்கவேண்டும். மூழ்காமல் கரையொதுங்காமல் கொஞ்ச தூரம் மிதந்துவிட்டாலே வரலாற்றில் இடம் வந்துவிடுகிறது. அந்த பிரம்மாண்டமான பட்டியலில் பெயர் சேர்ந்துவிடுகிறது. அதன்பின்பு அவர்கள் தினமும் செய்தியை வாசிப்பவர்களின் பெருங்கூட்டத்தில் ஒருவர்  அல்ல, அவர்கள்தான் செய்தியே. அவர்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுகிறார்கள். அவர்களைப்போல ஆகிவிடவேண்டும் என்று கனவுகாண்கிறார்கள். மிதக்கப் பாடுபடுபவர்கள் ஒன்றைக் கண்டுகொள்கிறார்கள். வரலாற்று வெள்ளம் என்பது வரலாறாக ஆகவேண்டுமென நினைக்கும் இந்த அகங்காரக்கும்பல்தான். அவர்களை பிடித்து இழுத்துப்போட்டு அவர்கள் மேல் ஏறிக்கொண்டுதான் இவர்கள் மிதக்க முடியும். அதற்கு வரலாறு போல சிறந்த தூண்டில் ஏதுமில்லை. வரலாறு ஒரு சாகசக்கார வேசி போல. அவளுடைய ஜாலங்களுக்கு எவருமே தப்ப முடியாது. அவள் கண்ணசைவைக் கண்டு கிளர்ச்சி கொண்டு வீட்டையும் குடும்பத்தையும் உற்றார் உறவினரையும் வேலையையும் செல்வத்தைவும் எல்லாம் உதறிவிட்டு கிளம்பி வருகிறார்கள். கிளம்பி வந்து இந்த பெரும் பிரவாகத்தில் விழுந்து கலந்து கொண்டே இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வந்து இதில் மூழ்கிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தப்பிரவாகமே அவர்களால் ஆனதுதான். இன்றுவருபவர்களில் நேற்று வந்தவர்கள் மூழ்கி மறைந்துவிடுகிறார்கள். வரலாற்றில் இருக்க விரும்பி வருபவர்கள் வரலாற்றின் அடியற்ற கரிய ஆழத்திற்குச் சென்று கொண்டே இருக்கிறார்கள். எத்தனை லட்சம்பேர், எத்தனைகோடிப்பேர், அப்படி மறைந்திருப்பார்கள்! ஜெங்கிஸ்கானுடன் படையெடுத்து வந்தவர்கள் பதினெட்டுலட்சம்பேர் என்கிறார்கள். அந்தப்பதினெட்டுலட்சம்பேரும் எதற்காக வந்தார்கள்? வரலாற்றை வென்று அதில் இடம்பெறுவதற்காக. வேறு எதற்காகவும் தெரியாத நிலத்தையும் புரியாத எதிரிகளையும் நோக்கி அந்த மனிதர்கள் கிளம்பி வரமாட்டார்கள். மனிதர்களை சிரித்தபடி மரணத்தை நோக்கிச் செல்லவைக்க வரலாறு என்ற தேவடியாளால் மட்டுமே முடியும். அதற்கு அவளுக்கு ஐந்தாயிரம் வருடத்து அனுபவம் இருக்கிறது. ஜெங்கிஸ்கான் தன் வாளைத்தூக்கி என்ன சொல்லியிருப்பான்? ‘ஆகவே வரலாற்றை வெல்ல வாருங்கள்!’ என்றுதானே அறைகூவியிருப்பான். அதன்பின் பாபர். அதன்பின் அக்பர்.  அதன்பின் நெப்ப

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6510/

7 comments

Skip to comment form

 1. va.mu.murali

  அன்புள்ள ஜெ.மோ.
  எழுத்து ஒரு வரம் என்று தோன்றுகிறது. எப்படி சார்லஸ் ஆகவும் வீர்ராகவனாகவும் பொன்னம்பலத்தாராகவும் ரெஜினாவாகவும் உங்களால் கற்பனைக் குதிரையில் பயணிக்க முடிகிறது? புனைவா, உண்மைக்கதையா என்று கிள்ளிப் பார்த்துக்கொள்ளச் செய்கிற நடை. //சொர்ர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்…காதல் ராஜ்ஜியம் எனது…// என்று ஆங்காங்கே தேதிகளுடன் கதைக்க எப்படி முடிகிறது? உங்கள் எழுத்து பிரமிக்கச் செய்கிறது.
  //என்னை நீங்கள் தூக்கிலிட மாட்டீர்கள். நீங்கள் இதுவரை எவரையுமே தூக்கிலிட்டதில்லை. தனிமைச்சிறைகளைப் பற்றி எனக்குப் பயமில்லை. நான் பத்தாண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் தனிமையானவன்// என்று ஆரம்பத்திலேயே (உலோகம் -1) ‘நச்’சென்று ஆரம்பித்தீர்கள். முடிவைச் சொல்லிவிட்டு, அதை நோக்கிய துடுக்கான பயணம். பொன்னம்பலத்தாரின் கதை சீக்கிரம் முடிந்துவிடக் கூடாது என்று மனம் பதைபதைக்கிறது – கதை முடிந்து விடுமே என்பதால் தான்.
  -வ.மு.முரளி.

 2. stride

  “இரண்டாவது வகை மக்கள் சிறுபான்மையினர். இவர்கள் புத்திசாலிகள். இவர்கள் இன்று எப்படி இருக்கிறார்களோ அது அல்ல இவர்களின் ஆளுமை என்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  நான் உங்களை விட மேலானவன். உங்களை வழிநடத்துபவன் உங்களை ஆக்கக்கூடியவன் ஆகவே அழிக்கவும் உரிமை கொண்டவன்’ என்று.”

  இது ராஸ்கோல்நிகாவை ஞாபகப்படுத்தியது. அந்த “வரலாறு காத்திருக்கிறது” பகுதி மிக அருமை.

  கடைசியில் கதை சொல்லியும் பொன்னம்பலத்தாரும டி.எம்.எஸ் பாடல்களை சிலாகிக்க ஆரம்பித்தபின் எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டு டி.எம்.எஸ் பாடல்களை தேடி தேடி கேட்டு அப்படியே மூழ்கி எழுந்து பார்த்தால் பல மணி நேரம் கடந்து வேலை முடியும் நேரமாகி விட்டது. வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான். டி.எம்.எஸ் பற்றி உருப்படியாக ஒரு தகவலும் வலையில் இல்லை. கிடைத்தது http://www.tmsounderarajan.org/ தான். இதில் டி.எம்.எஸ்ஸின் ஒரு ஏ.ஐ.ஆர் பேட்டியும் உண்டு. என்னைப்பொறுத்தவரையில் தமிழின் தலை சிறந்த பின்னனி பாடகர் டி.எம்.எஸ் தான். ஏ.எம்.ராஜாவை விடவும் சிறந்த பாடகராக நான் கருதுகிறேன்.

  சிவா

 3. gomathi sankar

  சரியான அவதானிப்பு .டி எம் எஸ் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கிறார் வரலாறு வேசியை போலவே மனிதர்களின் பயன்பாடு முடிந்ததும் தூர எறிந்துவிடுகிறது ஆனாலும் நாம் தொடர்ச்சியாக வரலாறு படைக்க முயன்றுகொண்டே இருக்கிறோம் வேறு என்னதான் செய்வது ?வரலாற்றின் போக்கிற்கு எதிரான நிலை எடுத்ததால்தான் இலங்கையில் தமிழர் தோல்வியுற நேர்ந்தது

 4. Marabin Maindan

  வெடிக்காத சோத்து டப்பாக்களின் கானல் புரட்சிதான் காலங்காலமாய் நடக்கிறது.அருமையான உவமை

 5. sureshkannan

  //இரண்டுவகை மக்கள் இருக்கிறார்கள்// மிகக் கூர்மையான நுண்ணிய விவரிப்பு. தொடர் நன்றாகச் செல்கிறது. முழுமையான வாசிப்பில்தான் இதிலுள்ள பிழைகளைக் கவனிக்க முடியும். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

 6. V.Ganesh

  இன்று காலையில் தான் நினைத்தேன் (அலுவலகம் வரும் வழியில்) . உலோகம் என்ன சராசரி கதையாக செல்கிறது. ஜஸ்ட் நோர்மல் கிளின்ட் ஈஸ்ட் வூட் போல் …. ஈராறு கால் கொண்டு எழும் புரவி எங்கே இது எங்கே என்று. சரி கதை இன்னும் சென்ற பிறகு கேட்கலாம் என்றும் நினைத்தேன்.

  “இரண்டுவகை மக்கள் இருக்கிறார்கள்”…. ஜெயமோகன் முத்திரை வந்து விட்டது. ஒரு விஷயம் ஐயா. ஒரு நிலைக்கு பிறகு நீர் தோற்று போவதை உம் வாசகர்களும் விரும்ப மாட்டார்கள். ஆகவே தான் ரஜினி, கமல் என்று தனி முத்திரை வருகிறதோ?

 7. kuppan_yahoo

  அவரது பங்களாவில் பெரிய ஒரு நூலகம் வைத்திருந்தார். அதில் அடுக்கடுக்காக தமிழ் ஆங்கில நூல்கள். கணிதம், இலக்கியம், ஆன்மீகம், வரலாறு, தத்துவம்… சமீபமாக அவருக்கு கர்நாடக சங்கீதத்தில் பெரிய ஈடுபாடு வந்திருந்தது.

  இப்போது புனைவு என்பது தெளிவாக இருக்கிறது, தெரிகிறது.

Comments have been disabled.