உலோகம் – 11

நான் பங்களாவுக்குள் நுழையும்போதெல்லாம் என்னை துப்புரவாகச் சோதனை போடாமல் உள்ளே அனுப்ப மாட்டார்கள். ஆனால் பின்னர் நான் உள்ளே சென்றபோது புன்னகையுடன் வணக்கம் சொல்லி உள்ளே விட ஆரம்பித்தார்கள். முதல்முறை நான் அதைக் கவனித்தபோது நான் சற்றே தயங்கிவிட்டு நூலகத்துக்குச் சென்று வார இதழ்களையும் நாளிதழ்களையும் எடுத்துக்கொண்டு சூரல்நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். குளிர்காலம் மட்டுப்பட ஆரம்பித்துவிட்டது என்று சொன்னார்கள், ஆனால் என் பூமத்தியரேகைப்பகுதி உடலுக்கு அதுவே குளிராகத்தான் இருந்தது. காலையின் ஊமைவெளிச்சம் நூலகத்தின் பெரிய தேக்குமரமேஜைமேல் பளபளத்தது. தூரத்தில் எங்கோ மணியோசை கேட்டது.

எனக்கு சப்ராஸி டீ கொண்டுவந்து மெல்ல வைத்தான். நான் அதை எடுத்துப்பார்த்தபோது கோப்பை மிக உயர்தரமான பீங்கான் என்பதைக் கவனித்தேன். சப்ராஸி மிகவும் பணிவாக இருப்பதையும். இந்தமாற்றங்கள் நிகழ்ந்து சிலநாட்கள் ஆகியிருக்கலாம், நான் இப்போதுதான் இவற்றைக் கவனிக்கிறேன். புன்னகையுடன் காபியைக் குடித்துக்கொண்டு யோசித்தேன். காலை மடித்து அமர்ந்த போது என் தொடைக்குள் ஊமைவலி எழுந்தது. சிலநாட்களாகவே அந்த வலி இருக்கிறது. வலி என்று அதைச் சொல்லமுடியாது, ஒருவகை இருப்புணர்த்தல் மட்டுமே. அந்த உலோகம் என் சதைக்குள் கனப்பதை நான் கொஞ்சம் அங்கே மனத்தைத் திருப்பினால் உணர முடிகிறது. இரவு தூங்குவதற்காக நான் படுக்கும்போது கை அனிச்சையாகவே அங்கே செல்கிறது. அதையே வருடிக்கொண்டு எதையெதையோ எண்ணிக்கொண்டிருப்பேன். நூறுவயதான தாத்தாக்களுக்குத்தான் மனம் அப்படி இருக்கும்போலும், மொத்த வாழ்வே இறந்தகாலத்தில் இருக்கும்.

அந்த உலோகத்தை அறுவை சிகிழ்ச்சைசெய்து எடுத்தால் என்ன என்று நேற்று யோசித்தேன். அதை எடுப்பது அவ்வளவொன்றும் கடினமல்ல. அது மேலோட்டமான தசையில்தான் இருக்கிறது. குண்டடிபட்டபோது நான் நர்ஸிங் கூட தெரியாத இயக்கத்துப் பெண்களால்தான் அறுவைசிகிழ்ச்சை செய்யப்பட்டேன். இங்கே ஒருவேளை ஒரு நல்ல டாக்டர் முள்ளை எடுப்பதைப்போல அதை எடுத்துவிடக்கூடும். முள் சதையில்குத்தினால் சீழ்கட்டிவிடுகிறது. இந்த ஈயத்தை தன்னுடையது என்று எப்படி உடம்பு ஏற்றுக்கொண்டது?  துப்பாக்கிக்குள் இருப்பதுபோல அந்தக் குண்டு அங்கே கச்சிதமாகப்பொருந்திக்கொண்டு இருக்கிறது.  நேற்று அதை வருடிக்கொண்டிருந்தபோது நினைத்துக்கொண்டேன் அது ஒரு விதைபோல என்னுடைய சதைச்சதுப்பில் இருந்துகொண்டிருக்கிறது என. என்னைப் புதைத்தால் அது முளைத்து ஒரு செடி வெளியே வரும். ஈயத்தாலான தளிர்களும் ஈய இலைகளும் கொண்ட பளபளக்கும் உலோகச்செடி…

உடை சலசலக்கும் ஒலி கேட்டது. நான் நிமிர்வதற்குள் “ஹாய்” என்று குரலுடன் ஒரு பெண் வந்து என்னை நோக்கிச் சிரித்தாள். வெண்பட்டாலான பைஜாமாவும் ஜிப்பாவும் அணிந்திருந்தாள். அழகுநிலையங்களில் அதிகமாக திருத்தப்பட்ட முகங்களுக்கே உரிய பளிச்சிடலும் வெறுமையும் கலந்த தோற்றம். கன்னங்களில் சிவந்த பருக்கள். ஈழத்துப்பெண்தான், எங்களூரில் சிவப்பான பெண்கள் மிகவும் குறைவு. அத்தனை சிவந்தபெண்களுக்கும் ஒரே தோற்றம் இருப்பது போலிருக்கும்.  அதிலும் இவளை நான் நன்றாக அறிந்தவன்போல ஒரு பிரமை எழுந்தது. நான் “ஹாய்” என்றேன். சிரிக்காமல் அதைச் சொன்னேன் என்று உணர்ந்ததும் மீண்டும் சிரித்து “ஹவ் ஆர் யு?” என்றேன். “ஃபைன்…” என்றபடி அவள் என்னருகே வந்து அமர்ந்துகொண்டாள். “உங்களைப்பத்தி அப்பா சொன்னவர். சார்லஸ் எண்டு பெயர் சொன்னவர்…” நான் “ஓம்” என்றேன். “ஆனா அது உங்க பெயர் இல்லை… உங்களைப்பாத்தா சைவர் போல இருக்கு” நான் மென்மையாகப் புன்னகை செய்தேன்.

“என்ன சிரிப்பு?” என்று அவள் சிணுங்கினாள். முன்பின் தெரியாத ஒருவரிடம் சட்டென்று கொஞ்சிப்பேச ஆரம்பிப்பதே அவளுடைய உயர்குடித்தன்மைக்கான ஆதாரம் என்று நினைத்துக்கொண்டேன். “சைவர் தானே? சொல்லுங்கோள்” நான் “ஆமாம் எண்டு சொன்னால் என்ன கிடைக்கும் உனக்கு?” என்றேன். “சந்தோசம் கிடைக்கும்” என்றாள் சிரித்தபடி. முகத்தின் எல்லா செயற்கையான விஷயங்களையும் மீறி சிரிப்பில் இளமையும் உற்சாகமும் இருந்தன. “உங்க பேரு வைஜயந்திதானே?” “அய்யோ, கண்டுபிடிச்சிட்டியளே… வயசு தெரியுமோ?” நான் புன்னகையுடன் “இருபத்திரண்டு” என்றேன். அவளுக்கு இருபத்திஏழு என்றும் திருமணமாகி விவாகரத்தானவள் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் எனக்குத்தெரியும். அவள் கண்கள் சட்டென்று மாற்றம் பெற்றபின் சிரிப்புக்கு மீண்டன “பெட்டையளை நல்லா பழக்கமோ?  எப்டி பேசணும் எண்டு தெரிஞ்சு வச்சிருக்கிறியளே” என்றாள். நான் சிரித்தேன்.

“எங்க போயிருந்தீங்கள்? குலு மணாலியா?” என்றேன். “அய்யே… அங்க கொண்டுபோறதா சொல்லிட்டு நேரா சிம்லா கொண்டு போயிட்டவங்கள். அங்க ஒரே பனி… வங்களாவை விட்டு வெளியே போக ஏலாது… கிளவுஸும் பிளேஸரும் ஷுவும் போட்டுக்கொண்டு முற்றத்திலே நடக்கணும்… போர்… அம்மாவுக்கு அங்கயும் வீட்டுக்குள்ளதான் பூசை விரதம் எல்லாம்… போர்” நான் அந்த மணியோசை அவள் அம்மா சந்திராவுடையது என்று ஊகித்தேன். சந்திரப்பிரகாசினி என்ற அவள் அம்மா அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் பையன்கள்நடுவே மிகப்பிரபலம். எங்களூரின் மிகப்பெரிய வெங்காய வியாபாரியின் ஒரே மகள். பேரழகி. அவள் காரில் இருந்து இறங்கி பெண்கள் கல்லூரிக்குள் செல்வதைப் பார்ப்பதற்காக பையன்கள் கூடி நிற்பார்கள். அவளை நான் எப்போதுமே இருபதடி தூரத்தில் நின்றுதான் பார்த்திருக்கிறேன். அவள் முகமல்ல இவளுக்கு, ஆனால் அந்தச்சாயல்தான். ஆனால் அவள் அம்மா முகம் எனக்கு தெளிவாக நினைவுக்கும் வரவில்லை.

“உங்க அம்மா அந்தக்காலத்திலே யாஃப்னாவிலே பெரிய பியூட்டி குயின்…” என்றேன் புன்னகையுடன். “நாங்கள் அவங்களை பாக்கிறதுக்காக தெருவிலே காத்து நிப்போம்…” அவள் கிளுகிளுத்துச் சிரித்தாள் “தெரியும்… அம்மா அதைச் சொல்லாத நாளே இல்லை. அவ வாழ்க்கையிலே அதுதான் பொற்காலம்… இப்ப நூத்திப்பதினெட்டு கிலோ இருக்கிறவள். சுகர் இருக்கு, பிரஷர் இருக்கு… மூட்டிலே ரெண்டு ஆபரேசன் பண்ணினதாலே நடக்கவும் ஏலாது..” என்றாள். நான் “ஓ” என்றேன். அவள் மேஜைமேல் சற்றே சாய்ந்து “ நான் யாஃப்னாவிலே இருந்தா என்னைப்பார்க்கிறதுக்கும் தெருவிலே நிப்பியளோ?” என்றாள். அவளுடைய சிரிக்கும் கண்களைப் பார்த்தேன். ஜிப்பாவின் வட்டக்கழுத்துக்குள் மென்மையான வெண்கழுத்தில் தங்கச்சங்கிலி. அவள்மேல் முதல் பார்வையில் ஏற்பட்ட ஒரு மனவிலக்கம் மறைந்து அவள் அழகாக ஆகியபடியே இருந்தாள்.

“யாஃப்னாவிலே சிவப்பான பெட்டையள் எல்லாமே அழகுதான்…” என்றேன். “அப்ப நான் அழகு இல்லை, சும்மா சிவப்புதான்…?” என்றாள். அவளுடைய கண்களின் ஒளியைப் பார்த்தபோது சட்டென்று எனக்கு ஒன்று புரிந்தது, அவள் என்னை எதற்காகவோ கவர முயல்கிறாள். ஒரு கணம் அவள் கண்களைப் பார்த்தபின் நான் தைரியமாக அவளை உற்றுப்பார்த்தேன். குட்டையான தலைமுடிக்குச் சிவப்புச்சாயம் பூசியிருந்தாள். வட்டமான முகத்துக்கு ஏற்ப திருத்தப்பட்ட புருவங்கள். சிறிய மூக்கில் ஒரு வைரமூக்குத்தி. சிறிய உதடுகள். கண்ணுக்கு முந்தையநாள் போட்ட கருமை கொஞ்சம் கரைந்து கீழே பரவியிருந்தது. சிறிய தோள்களும் அடக்கமான மார்புகளுமாக சிறுமியின் தோற்றம் கொண்டிருந்தாள். அவளுடைய வயதையும் உற்சாகத்திற்கு அடியில் மறைந்திருக்கும் மனச்சிக்கல்களையும் எல்லாம் காட்டிக்கொடுத்தவை இரு கண்களுக்கும் கீழே பரவியிருந்த கரிய நிழல்கள்தான்.

”அம்மா என்ன பூசை எடுக்கிறவங்கள்?” என்றேன். அவள் உதடுகளுக்குள் ஒரு மென்சிரிப்பு வந்தது. “என்ன பூசை எண்டு சொல்லுங்கோ பாப்பம்” என்றாள். நான் அவள் கண்களின் குறும்பைப் பார்த்ததுமே புரிந்து கொண்டு “விபூதி கொட்டுதே?” என்றேன். அவள் தாடையை தூக்கி அழகான கழுத்து தெரிய சிரித்தாள். “அம்மாவிண்ட அண்ணன் லண்டனிலே லோயரா இருக்கிறவர். அவரு பெரிய பாபா பக்தர். அவர் இஞ்ச வந்தப்ப அம்மாவையும் கூட்டிக்கொண்டு போனவர். அதிலை இருந்து அம்மாவுக்கு பாபா விசர் பிடிச்சுப்போச்சு…” நான் அவளைக் கூர்ந்து பார்த்து “அந்த விசர் அப்பாவுக்கு உண்டா?” என்றேன். அவள் என்னை ஒருகணம் கவனித்துவிட்டு “அப்பா சொல்லயில்லயா?” என்றாள். “இல்லை” “அப்பாவுக்கும் கொஞ்சம் அந்த விசர்  கொஞ்சம் உண்டு. ஆனால் எப்பவும் இல்லை… சீசனல்…”

நான் அதை எதிர்பார்த்திருந்தேன். என்னிடம் பொன்னம்பலத்தார் ஒரு அறிவுஜீவிக்குரிய முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தார். ஆனால் உள்ளூர அவர் மிகமிக பழையவராக ஆகிக்கொண்டிருந்தார்   என்று தெரிந்திருந்தேன். காலையில் எழுந்ததும் சிவபூஜைகள் செய்து தேவாரமும் கந்தபுராணமும் வாசித்தபின்புதான் அவர் வெளியே வருவார். “அப்பாவுக்கு உயிராசை… அவரைக் கொல்ல அங்காலை இருந்து ஆள் வெளிக்கிட்டாச்சு எண்டு கேட்டா காப்பாத்துங்க பாபா எண்டு கத்திப்போடுவார்” என்றாள். அதைச் சொல்லும்போது இருந்த சிரிப்பு சொல்லிமுடித்ததும் இருக்கவில்லை. கவனம் கொண்ட கண்களுடன் “நீங்கள் இயக்கத்திலை இருந்தியளோ?” என்றாள்.

“ஓம்” என்றேன். அவள் காத்திருந்தாள். “துரோகி ஆயிட்டனான்” என்றேன். அவள் முகம் மெல்ல நெகிழ்ந்தது. புன்னகையுடன் “அப்பா சொல்லுவாங்கள் ஒருநாளைக்கு மொத்த ஈழச்சனத்தையும் அவங்கள் துரோகி எண்டு சொல்லிப்போடுவாங்கள் எண்டு” என்றாள். “இப்பவே அப்பிடித்தானே?” என்று கவனமில்லாமல் சொன்னேன். “அம்மான், நீங்கள் எனக்கு ஒரு விஷயத்தை விளங்கப்போடணும்… உண்மையிலேயே இவரைக் கொல்ல இயக்கம் ஓடர் போட்டிருக்குதோ?” அவள் அந்த  அழைப்புவழியாக நெருங்கிவந்துவிட்டதை உணர்ந்தேன். மனம் புன்னகைசெய்யும்போது முகத்தை இறுக்கமாக வைத்திருக்கக் கற்றவன் நான்.

அவள் கண்களையே பார்த்தேன். பின்பு “போடாம இருப்பினமா?” என்றேன். “போட்டா இதுக்குள்ள கொல்ல அவைகளாலே முடியாதா என்ன? இங்க காவலும் இல்லை ஒண்டும் இல்லை. இங்க உள்ள இந்தியப்போலீஸ் எல்லாம் சும்மா… அம்பது ரூபா குடுத்தா பெரியபீரங்கியை உள்ள விட்டுப்போடுவங்கள்” என்றாள். நான் என் கைகளைப்பார்த்தபடி “அவை காத்திருக்கினம்… அவைகளுக்கு ஒரு நேரம் உண்டல்லோ…” என்றேன். அவள் அயர்ந்தது போல கொஞ்ச நேரம் சும்மா இருந்தபின் “குடும்பத்தையும் கொல்லுவாங்களோ?” என்றாள். நான் அவள் கண்களை சட்டென்று சந்தித்துவிட்டேன். அந்த வெட்கமில்லாத, அசிங்கமான, சுயநலத்தை, உயிராசையைக் கண்டதும் என் மனம் திருப்தியுடன் விரிந்தது. அபாரமான வல்லமை கொண்டவனாக வெல்லமுடியாத கடவுளாக உணர்ந்தபடி “குடும்பத்தைக் கொல்ல மாட்டினம். ஆனா குடும்பத்தை கொண்டா அவரை பிடிக்கலாமெண்டால் அதையும் செய்வினம்” என்றேன்.

அவள் அதுவரை இருந்த எல்லா குதூகலத்தையும் இழந்து மெல்லமெல்ல அடங்கி குளிர்ந்தாள். தன் கைநகங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தச் சந்தர்ப்பம் பொன்னானது என்றது என் உள்ளுணர்வு. “அதுக்குத்தான் என்னைய வரச்சொல்லியிருக்கு… நான் பாத்துகிடறேன்…” என்றேன். அவள் ஆவேசமாக நிமிர்ந்து “நீங்கள் எங்கள் கூடவே இருப்பிங்களே?” என்றாள். “என்னை கொண்ட பிறவுதான் உங்கள் மேலை கையை வைப்பவங்கள்” என்றேன். அவள் பாய்ந்து மேஜைக்கு மேல் என் கையைப்பிடித்துக்கொண்டாள். கண்களில் கண்ணீர் பளபளத்தது. “அம்மான் எனக்கு பயத்தாலே ராத்திரி நித்திரை இல்லை… மாத்திரை போட்டுக்கொண்டுதான் நித்திரை கொள்ளுறன்… நான்…” என் விரல்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளுடைய சாகஸமும் அழகும் எல்லாம் மறைந்து பரிதாபமாக என் முன்னால் இருந்தாள். நான் அவள் விரல்களை நெரித்து “நான் பாத்துக்கிடுறன்” என்றேன்.

அவளுடைய தொண்டை அசைந்தது. அவளை அப்படியே அள்ளி முத்தமிட விரும்பினேன். பரிதாபத்துக்குரியவளாக நிற்கும் பெண் ஆணில் அபாரமான தன்னம்பிக்கையை உருவாக்குகிறாள். அதன் வழியாக அவனை காம எழுச்சிக்கு உள்ளாக்குகிறாள். ஒருவேளை இவள் அதன்பொருட்டே நடிக்கிறாளா? அந்த எண்ணம் எழுந்ததுமே என்னுடைய மனம் உறைந்து விட்டது. நான் மெல்ல மானசீகமாகப் பின்னால் நகர்ந்தேன், அதையொட்டி என் உடலிலும் மெல்லிய ஓர் அசைவு உருவாகியது. “அப்பா வெளிக்கிட்டவர்” என்று அவள் சொல்லி கைகளை இழுத்துக்கொண்டாள். சிறு ஒலிகளைக்கூட தவறவிடாமலிருக்கப் பயின்ற என் காதுகளுக்கே அந்த ஒலி கேட்கவில்லை. அவள் மேஜைமீது ஒரு நூலை எடுத்துப் பிரித்துக்கொண்டாள். ஒருபோதும் அப்படிச் செய்யக்கூடாது என்று சொல்ல விரும்பினேன். வாசிக்காமல் ஒரு நூலை கையில் வைத்திருப்பது கண்கள்மூலம் எளிதில் தெரிந்துவிடக்கூடியது, மேலும் சாதாரணமாக அத்தனைபேருமே செய்யக்கூடியது அது.

பொன்னம்பலத்தார் உள்ளே வந்ததும் நான் எழுந்து “வணக்கம் புரபசர்” என்றேன். அவர் “ம்ம்” என்றபடி அமர்ந்துகொண்டார் “குட்மானிங் டேட்.. யூ லுக்ஸ் ஸ்மார்ட்” என்று அவள் சொன்னாள். “மானிங் பேபி” என்றபடி தினக்குரலை எடுத்துக்கொண்டு அமர்ந்தார். “வெளியெ போறீங்களே?” என்றாள். “மே பி” என்றார் பொன்னம்பலத்தார். “தென் ஓக்கே… ஐ மே நீட் தட் ஸ்மால் கார்” என்றபடி எழுந்து சோம்பல்முறித்துக் கொண்டு வெளியே சென்றாள். நான் ஓரக்கண்ணால் பொன்னம்பலத்தாரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவர் உள்ளூரக் கடும் கோபமாக இருக்கிறார் என்று எனக்குப் புரிந்தது. ஆனால் அவரது பாவனைகளில் கோபம் சுத்தமாக இல்லை. என் மீது கோபமா என்று யோசித்தேன். அவர் ஈழமுரசு, தினமணி, தினதந்தி, இந்து, இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா என்று வாசித்துக்கொண்டே இருந்தார். மெல்ல வாசிப்பில் முகக் கோபம் ஆறி அவர் இலகுவாவது தெரிந்தது.

“உமக்கு இவன்ட முகம் தெரியுமே?” என்றபடி தினக்குரலை என் முன் தள்ளினார். நான் அந்தப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தேன். “அவன் பேரு சங்கரலிங்கம் கனகநாதன். புங்குடுதீவுக்காரன்” என்றேன். “இவன் எண்பதுகளிலே யுனிவர்சிட்டியிலை இருந்தவனோ?” என்றார். “ஓம். இவன் அப்பா அங்க ஒரு கிளப்புக்கடை வச்சிருந்தவர்” அவர் கண்களில் ஒளியும் உதடுகளில் புன்னகையும் எழுந்தன. “அப்ப நான் நினைச்சது சரிதான்… இவனுக்கும் எனக்கு ஒரு பிரச்சினை வந்தது…” என்றார். “எப்ப?” “நான் இயக்கத்திலை இருக்கிறப்ப… இவன் அப்ப இயக்கத்திலை ஒரு காப்டன்… இவனுக்கு என்னை பிடிக்கயில்லை… இவன் கனகாலமா இயக்கத்திலை ஆதரவா இருந்து உள்ளசேந்தவன் நான் குறுக்கு வழியாலை வந்துட்டனான் எண்டு கோபம்…” படத்தை விரலால் சுண்டி “கொண்டு போட்டவங்கள்” என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. சங்கரலிங்கம் மாறுவேடத்தில் யாழ்ப்பாணத்திற்குள் நுழையும்போது ராணுவ மோதலில் கொல்லப்பட்டிருந்தான். “இயக்கத்திலை உளவுத்துறையிலை இருந்தவனோ” என்றார் பொன்னம்பலத்தார். “இல்லை… இயக்கத்திலை இருந்து தப்பிக்கூட வந்திருக்கலாம்” என்றேன். அவர் சிரித்தபடி “இருக்கும்… கஷ்டப்பட்டு சாவை நோக்கி டிரவல் பண்ணி வந்திருக்கிறவன்” என்றார். அவருக்கு காபி வந்தது. அதைமெல்லக் குடித்தபடி “தம்பி, உங்க பழைய ஆக்கள் சாகிறதைப்பாத்தா என்னெண்டு நினைப்பீர்?” என்றார். “ஏன்?” “கஷ்டமா இருக்குமோ?” நான் “கஷ்டமில்லை…” என்றபின் “எல்லாரும்தான் சாகிறவங்கள்..” என்றேன்.

“ஆனா மத்தவங்க சாகிறாங்க நாம இன்னமும் இருக்கிறோம் எண்டு நினைக்கிறப்ப மனசிலே ஒரு சந்தோசம் வரத்தானே செய்யும்… இல்லையெண்டு சொல்லாதீர்” என்றார் அவர் சிரித்தபடி. நான் “அது சந்தோஷமெண்டு சொல்லமாட்டேன். இருக்கிறேன் எண்டு ஒரு உணர்ச்சி வரும்… சாத்தர் சொல்ற அந்த உணர்ச்சி… பீயிங்… அப்பதான் அது தெரியும்..”

பொன்னம்பலத்தார் உரக்கச் சிரித்தபடி “அது உம்ம கணக்கு… எனக்கெல்லாம் பீயிங் ஆண்ட் நத்திங்னெஸ்”’ என்றார். நானும் சிரித்தேன். “இண்டைக்கு வெளியே போவம்.  ஒரு வேலை இருக்கு” என்றார். அவரது முகம் மாறுபட்டது. எதையோ சொல்ல வருபவர் மாதிரி. நான் இயல்பாக “இவங்கள் எப்ப வந்தினம்?” என்றேன். “ஆர், சந்திராவும் இவளுமோ? நேத்து ராத்திரிக்கு வந்தினம்…” நான் “ஓ” என்றேன். அவரது முகம் மாறிய விதத்தில் இருந்தே கண்டுகொண்டேன், அவரது கோபம் அந்தப்பெண் மீதுதான் என்று. அவளை அவர் உள்ளூர நுட்பமாக வெறுக்கிறார். ஒரேமகளாக இருந்தாலும் அவளைக் காண்பதே அவரை எரியச் செய்கிறது.

அன்று காரில் அவருடன் வெளியே சென்றேன். நான் அவருடன் வெளியே செல்வதுண்டென்றாலும் அது அதிகமும் அருகே உள்ள சிறிய கடைகளுக்குத்தான். நான் தனியாக அருகே சென்று பக்கத்தில் இருந்த தமிழ்க்கடைகள் சிலவற்றை அறிமுகம்செய்துகொண்டிருந்தேன். எல்லாருமே அடிமட்டத்து மக்கள். அனேகமாக சேலம், திருப்பத்தூர் பகுதியினர். சினிமா தவிர எதைப்பற்றியும் தெரியாத, எதிலுமே ஆர்வமில்லாமல் வெறுமே உயிர்வாழ்கிற, மக்கள். அவர்களுக்கு பொன்னம்பலத்தாரை பற்றி என்றல்ல ஈழ விஷயங்களைப்பற்றியும் இந்திர அரசியல் விஷயங்களைப்பற்றியும்கூட  எதுவும் தெரியாது.

அன்று ஊரைவிட்டே வெளியே சென்றோம். அவர் தனக்குள் ஆழ்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னும் பின்னும் இரு காவலர் கார்கள் சென்றன. கார் சென்று கொண்டிருந்தபோது அவர் நினைவு வந்தவர் போல “சார்ல்ஸ், உம்மகிட்ட கன் இருக்கே?” என்றார். நான் “இல்லை” என்றேன். அவர் தன் முன்னால் இருந்த டாஷ்போர்டை சாவியால் திறந்து உள்ளிருந்து ஒரு பாயிண்ட் 38, ஐவர் ஜான்ஸன்  கைத்துப்பாக்கியை எடுத்து எனக்குத் தந்தார். கொஞ்சம் கனமாக கரும்பளபளப்புடன் இருந்தது. நான் அதை வாங்கித் திறந்து குண்டுகளைப் பார்த்தேன். கிளிப்பையும் டிரிக்கரையும் சிலிண்டரையும் கேரியரையும் தனித்தனியாக சோதித்தேன்.

“உமக்கு கன் பிடிக்குமே?” என்றார் பொன்னம்பலத்தார் “ஓம்” என்றேன். “எனக்குப் பிடிக்காது…“ என்றார் அவர். ”எனக்கு கன் குடுக்கிறவங்கள். நான் அதை வச்சுக்கிடுறதில்லை… கன்னைப் பாத்தாலே எனக்கு பயமா இருக்கு. பயமெண்டு சொல்லுறதை விட அருவருப்பு எண்டு சொல்லலாம். செத்த எலியைப் பாத்தா வாறது மாதிரி ஒரு அச்சம்…” நான் ஒன்றும் சொல்லவில்லை. “ஒரு துப்பாக்கி எண்டால் மரணம் எண்டு மட்டும்தானே அர்த்தம். வாள் கத்தி எல்லாத்துக்கும் வேற உபயோகம் இருக்கு. துப்பாக்கிக்கு வேற ஒரு வேலையும் இல்லை. அது மனுஷனைக் கொல்லுறதுக்கு எண்டு மட்டும் வந்திருக்கு..” நான் மிகக்குரூரமான ஒரு மனமின்னலை அடைந்தேன். என் மூளைக்குள் நியூரான்கள் துள்ளாட்டமிட்டன “உங்களுக்கு துப்பாக்கி எண்டால் உங்களைக் கொல்ல வார கருவி. எனக்கு துப்பாக்கி எண்டால் நான் கொல்லுற கருவி” என்றேன். அவர் அப்போது என் கண்களைப் பார்த்தால் மரணத்தையே தரிசித்திருப்பார்.

அவர் கவனிக்காமல் “ஆமா… நான் எண்டைக்குமே ஒரு சோல்ஜர் இல்லை. நான் வெறும் ஒரு புரபசர்… அதுக்குமேலே ஒண்டுமே இல்லை… சோல்ஜர் எண்டு சொன்னாலே மூளை இல்லாதவன், மிஷின் எண்டு எனக்கு ஒரு இளக்காரம்.. நான் எந்த ஆயுதப்பயிற்சியும் எடுத்ததில்லை.” என்றார். “கொல்லுறவனுக்கு துப்பாக்கி எண்டால் அவனிண்ட ஆண்குறி மாதிரியாக்கும்” என்றேன். “ஓ” என்று அலட்சியமாகச் சொல்லி “அந்த மாதிரி நிறைய வாசிச்சிருக்கிறன். சினிமாக்களிலே துப்பாக்கியை ஹீரோவிண்ட பீனிஸ் மாதிரித்தான் காட்டுறவன்.. அதை வச்சிருந்தா அவன் மேச்சோ மேன். ரப்பிஷ்” என்றார் அவர்.

நான் இன்னமும் அருகே சென்றேன். ”ஒருத்தனை நம்ம கையாலை கொண்ட பிறவு அவன் ரத்தத்தை பாத்துட்டு நிக்கிறப்ப நம்ம கையிலை துப்பாக்கி ஒரு பெரிய சக்தி மாதிரி இருக்கும்…” என்றேன். “ஒருத்தனைக் கொல்லுறப்ப நாம நம்மைவிட ரொம்ப பெரிய ஒருவிஷயத்தைச் செய்றோம். என்னெண்டுகேட்டா, திருப்பி சரிசெய்யவே முடியாத ஒருவிஷயத்தைச் செய்றோம்தானே..” என் மூளையில் முனைகூரிய வைரத்துகள்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவது போலிருந்தது. ”ஒரு கொலைய செஞ்சுப்போட்டு நிற்கிற நேரத்திலே ஒரு கொந்தளிப்பு வந்துபோடுது புரபசர்…”

“என்னாலை நினைக்கவே கஷ்டமா இருக்குது. என்னெண்டு ஒரு மனுஷன் கண்ணைப்பாத்து சுடுவீர்?” என்றார் பொன்னம்பலத்தார். “நாம ஒண்ணுமே செய்யவேண்டாம். ஒரு கட்டத்திலை துப்பாக்கி அதுவே எல்லாத்தையும் செய்றது மாதிரி இருக்கும். நாம அது பின்னாலே போறது மாதிரி… நாம அதிண்ட சேவகன் மாதிரி தோணும்..” அவர் அந்தச் சொற்களுக்கும் அப்பால் எங்கோ இருந்தார் “அது கேவலமில்லையா? மனுஷனுக்கு மூளையும் உணர்ச்சிகளும் எவ்வளவு இருக்கு… அவனாலே சித்திக்க ஏலுமே… அவனிண்ட சிந்தனைதானே அவன்? கொல்லுறது வழியா அவன் மிருகமா ஆயிடறானே. சிந்தனைக்கே அங்க இடமில்லையே…” என்றார்.

முட்டாள் முட்டாள் என்று என் மனம்  அரற்றியது. என்னுடைய  மூளையின் எல்லா வைரங்களிலும் ஒளி ததும்பியது. உன் நரம்புகளில் அழுத்தமான மின்சாரம் பாய்ந்தோடியது. ஆனால் நான் அதே குரலில் “அதைவிட நாம ஒருத்தரை கொல்லுறதுக்காக பொறுமையா காத்திருக்கைக்க நம்ம கையிலே இருக்கிற துப்பாக்கி இன்னும் பயங்கரமா ஆயிடுது…” என்றேன். மேலும் அரைக்காலங்குலம் முன்னேறி “அப்ப அது ஒரு கெட்ட மந்திரம் மாதிரி… எந்தப்பூதம் வரும் எண்டு சொல்ல ஏலாது” என்றேன். அவர் சாலையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு முகவாயை தடவி “எண்டைக்கு கொலையிலே இருக்கிற சந்தோசத்தை மனுஷன் விடுறானோ அண்டைக்குதான் அவனை நாகரீகமானவன் எண்டு சொல்ல முடியும்…” என்றார்.

முட்டாள்… என்று மானசீகமாகக் கூவியபடி நான் பின்னால் சாய்ந்து இருக்கையில் அமைந்தேன். என் தலையில் இருந்து குருதி மெல்ல வழிந்து காலியாகியது. மூளையின் வைரத்துணுக்குகள் மெல்லமெல்ல அணைந்து இருளுக்குள் மூழ்கின. பின்னர் மெல்ல சொற்களைத் திரட்டி “சிறி மாஸ்டரைக் கொண்டது நீங்கள் எண்டு சொன்னீங்கள்”  என்றேன் . அவர் கோணலாகச் சிரிப்பது பக்கவாட்டின் கண்ணாடியில் தெரிந்தது. “நானா? நல்ல கதை. நான் ஆரையும் கொல்ல நினைக்கயில்லை… நினைச்சாலும் கொல்ல ஏலாது. நீர் பாக்கிறீரே, நான் ஒரு பொம்மை. பொம்மைய வச்சு மத்தவங்கள் விளையாடுவாங்கள். பொம்மைக்கு அது விளையாட்டு இல்லை… சிறி என்னைக்கொல்ல பிளான் போட்டவன் எண்டு சொன்னவங்கள். பிறவு அவனை கொண்டாச்சு எண்டு சொன்னவங்கள். பொன்னம்பலத்தார் சற்றே உதடு கோணலாக, சிரித்துக்கொண்டே “உம்மை பயமுறுத்தி வைக்கலாமெண்டு நினைச்சு சொன்னனான்” என்றார்.

நான் எப்படி இவரிடம் வந்தேன். என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்ததும் இந்திய உளவுத்துறையின் திட்டம்தானா? அப்படியானால் இவரைக் கொல்வதும் அவர்களின் திட்டமா?  என் மனத்தின் திகிரி துரு உரசும் ஒலியுடன் கிரீச்சிட்டது. பின் நான் நிதானமடைந்தேன். இந்த ஆட்டத்தில் எந்த தரப்பில் நாமிருக்கிறோம் என்பதை நாம் தீர்மானிக்க முடிவதில்லை. துரோகியாவதா தியாகிவதா என்பதைக்கூட நான் தீர்மானிக்கமுடியாது.

அன்று நள்ளிரவில்தான் மீண்டு வந்தோம். பொன்னம்பலத்தார் மிதமான போதையில் சிவாஜி பாடல்களை மெல்ல முனகியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். நான் என் அறைக்குள் சென்று அந்த கைத்துப்பாக்கியை என் மேஜைடிராயருக்குள் போட்டேன். சட்டையைக் கழற்றி சாரன் அணிந்து மீண்டும் படுக்கையில் படுத்துக்கொண்டு அந்தக் கைத்துப்பாக்கியை எடுத்துப் பார்த்தேன். அதை நெடுநேரம் வருடியும் பிரித்து திரும்பப்பூட்டியும் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.

துப்பாக்கிதான் எத்தனை பவ்யமான பொருள். காமம் கொண்ட பணிவான பெண் போல. ஒப்புக்கொடுப்பதற்காகவே உடலெடுத்தது அது. அதன் ஒவ்வொரு உறுப்பும் நம் கைக்காகவே செய்யப்பட்டது. நமது கைப்பிடிக்குள் அது இருக்கும்போது கையின் வெற்றிடமொன்றை அது நிரப்புவது போலிருக்கிறது.  விரல்கள் ஒவ்வொன்றும்  அதன் உடலில் அவற்றுக்குரிய இடங்களில் சென்று படியும்போது அதுவும் தன் குறைப்பகுதிகளை நிரப்பிக்கொள்கிறதென்று படுகிறது.

ஆம், எத்தனை ஆயிரம் வருடங்களாக துப்பாக்கியை நோக்கி வந்திருக்கிறான் மனிதன்! உயிரச்சம் முற்றிய கணத்தில் அவன் தரையில் இருந்து தன் முரட்டுக்கரங்களால் பெயர்த்தெடுத்த கருங்கல். அது கற்கோடலியாகி வில்லாகி வாளாகி இன்று இதுவாகியிருக்கிறது. மனிதன் அடைந்த பரிணாமத்துக்கு சமானமாக அதுவும் பரிணாமத்தில் ஓடி வந்திருக்கிறது. நிழல் போல… இல்லை இழுத்துக்கொண்டு முன்னால் ஓடும் வேட்டைநாய் போலவா?

[மேலும்]

முந்தைய கட்டுரைகடற்கேரளம் – 2
அடுத்த கட்டுரைகேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்