டெல்லிக்கு நான் மதியத்தில் வந்திறங்கினேன். அது குளிர்காலம், பன்னிரண்டுமணிக்குக்கூட விடியற்காலை மாதிரி மூட்டமாக்வே இருந்தது. நான் முதலில் அருகே எங்கேயோ தீப்பிடித்து புகைமூட்டமாக இருக்கிறதென்றுதான் முதலில் நினைத்தேன். பின்பு குளிர ஆரம்பித்தபிறகு தான் அது பனி என்றுதெரிந்தது. நான் ஸ்வெட்டர் ஏதும் கொண்டுவரவில்லை. கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நடந்து உள்ளூர் தொலைபேசியில் அழைத்து நான் வந்திருப்பதைச் சொன்னேன். மறுமுனையில் பேசிய குரல் தமிழில் “அங்கியே இருங்க… அங்க ரிலையன்ஸ் ஷோரூம் இருக்கும்… அதுக்கு முன்னாடி நில்லுங்க, வந்திருதோம்” என்றது. திருநெல்வேலிக்காரராக இருக்கலாம்.
நான் ஒரு சைக்கிள்கார டீ விற்பனையாளரிடம் சிறு மண்சட்டியில் ஒரு டீ வாங்கி குடித்தேன். எனக்கு பால்டீயே வாயில் புளிக்கும். இது டிரம் டீ. கெட்ட சுவாசத்தை உருவாக்கியது அது. கைகளைக் கட்டியபடி பனிப்படலத்திலிருந்து வந்து பனிப்படலத்துக்குள் மறைந்துகொண்டிருந்த மக்களைப் பார்த்தேன். ஒரு பெருந்திரளாக பார்க்கும்போது மக்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பது போல தெரிகின்றனர். தூரத்திலிருந்து பார்த்தால் வீடுகள் எல்லாம் அமைதியாக இருப்பது போலத்தெரிகின்றன. குளிருக்கான ஆடைகள் அணிந்திருந்தமையால் அத்தனைபேரும் மிகவும் குண்டாக இருப்பது போலிருந்தது. பெண்கள் பெரிய மூட்டைகள் போல அரக்கி அரக்கி சென்றுகொண்டிருந்தார்கள். திடீரென்று எனக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. என்னுடைய நாட்டில் குண்டானவர்களே அருகிவிட்டிருக்கிறார்கள். அத்தனைபேருமே மெலிந்து ஒட்டிய மக்கள். இந்த சதைக்குவியல்கள் அதனால்தான் என் கண்ணுக்கு விசித்திரமாகத்தெரிகின்றன.
ஒரு மணிநேரம் கழித்து ஓர் இளைஞன் என்னைத்தேடிவந்து “சார்லஸ் மாஸ்டர்?” என்றான். “ஓம்” என்றேன். இனிமேல் அப்படிச் சொல்லக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். “வாங்க” நான் அவனுடன் சென்று அங்கே நின்ற காரில் ஏறிக்கொண்டேன். நவீன வகை கார். உயர்தரமான இருக்கைகள், மெல்லிய வாசனை. கார் நீரில் வாத்து இறங்குவது போல சாலையில் இறங்கி ஒழுகிச்சென்றது. சாலையோரங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. புகைமூட்டமாகவே இருந்தது. காருக்குள் மென்மையான வெப்பம் பரவ என் கைகளும் காதுகளும் சில்லிப்பை இழந்து இதமான ரத்த ஓட்டத்தை உணர்ந்தன. அவன் எதுவுமே பேசவில்லை. அவன் ஒரு டிரைவராக இருக்க வேண்டும் என்று தோன்றியது. மென்மையாக ஏதோ இந்திப்பாட்டு ஓடியது. அதைக்கேட்டுக்கொண்டு நிதானமாக ஓட்டினான்.
கார் வெகுதூரம் சென்றதுபோல் உணர்ந்தேன். அன்று டெல்லியைப்பற்றி நான் உணர்ந்த திகைப்பு கடைசிவரை என்னிடமிருந்தது. என்னால் அந்த மாபெரும் சிதல்புற்றை புரிந்துகொள்ளவே முடியவில்லை. பிலுபிலுவென எங்கும் மக்கள், ஸ்கூட்டரும் ஆட்டோவும் இணைந்த விசித்திர வாகனங்கள். மஞ்சள்நிற முகடுடன் கூப்பாடு போட்டபடிச் செல்லும் டாக்ஸிகள். பெரிய சாலைகளின் தொடக்கங்களில் எல்லாம் மணல்மூட்டைகளுக்கு அப்பால் தெரிந்த ராணுவத்தினரின் பாசிப்பச்சை கித்தான் குடியிருப்புகள். சோம்பலான ஜவான்கள். சும்மா மணல் மூட்டைகள் மேல் வைக்கப்பட்ட எல்.எம்.ஜிக்கள். கடைகள் மீண்டும் கடைகள். தெருவில் குவித்துப்போட்டு விற்கப்படும் உள்ளாடைகள் கம்பிளித்தொப்பிகள் பெல்ட்டுகள் சாக்ஸுகள். குவிக்கப்பட்ட வெங்காயம் முள்ளங்கி விசித்திரமான கீரைகள்… நகரத்தின் பாதி மக்கள் தெருக்களில்தான் வாழ்கிறார்கள் போல. மீண்டும் உள்ளாடைகள் கம்பிளிக்குல்லாய்கள் பெல்ட்டுகள்…
நன்றாக பசியெடுக்க ஆரம்பித்த நேரத்தில்தான் நான் பொன்னம்பலத்தாரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அந்த பகுதியே வேறு மாதிரி இருந்தது. தெருக்கள் மிக அகலமாக இருபக்கமும் பெரிய மரங்கள் நிழல் விரித்தமையால் இருண்டு கிடந்தன. இருபக்கமும் சாலை வணிகர்களோ கடைகளோ வழிப்போக்கர்களோ இல்லை. சாலையின் முகப்பில் ஒரு பெரிய ராணுவமுகாமே இருந்தது. மணல்மூட்டைகளுக்கு அப்பால் நான்கு சிப்பாய்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு ரேடியோ சீனச்சாயல் கொண்ட மொழியில் பாடிக்கொண்டிருக்க ஒரு நாய் அங்கே வாலாட்டி எம்பி எம்பி குதித்தது. காரை நிறுத்த கைகாட்டியபடி கையில் ஸ்டென்மெஷின்கன்னுடன் அந்த கூர்க்கா சிப்பாய் எங்கள் காரை நோக்கி அலட்சியமாக வந்தான்.
எனக்கு அந்த காவலில் இருந்த ஒட்டுமொத்தமான அக்கறையின்மை ஆச்சரியத்தை அளித்தது. அதீத எச்சரிக்கையையே எல்லா தரப்பிலும் பார்த்தவன் நான். முதலில் அந்த மணல்மூட்டைகள். அவற்றால் எந்தப்பயனும் இல்லை. அவை இடுப்பளவு உயரம் கூட இல்லை. குப்புறவிழுந்து தரையோடுதரையாக ஒட்டிக்கொண்டாலொழிய அவை குண்டுகளைத் தடுக்காது. இன்றைய உயரமான குவாலிஸ் ரகக் கார்களில் எவரேனும் சுட்டுக்கொண்டு வந்தால் அந்த மூட்டைகளின் மறுபக்கமே நன்றாக தெரியும். ஒரு கார் வரும்போது அதை சோதனையிடுவதற்கு முன்னரே அக்கறையில்லாமல் புறம் காட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அத்தனைக்கும் மேலாக ஒரு சண்டை நிகழ வாய்ப்புள்ள இடத்தில் நாய் மிகப்பெரிய ஆபத்து. அது ஒளிந்திருப்பவனை நோக்கி வாலாட்டி காட்டிக்கொடுக்கக்கூடியது. அதன் பார்வையே போதுமானது.
எல்லாவற்றையும்விட இந்த ஸ்டென்மெஷின் கன். ஒரு பெருங்கூட்டத்தை தடுக்கவோ போர்முனையில் வேலிபோல தடுப்பை உருவாக்கவோ மட்டும்தான் ஸ்டென்மெஷின்கன் உதவும். இத்தகைய சூழலில் தொலைதூரத்துக்கு குறிதவறாமல் சுடக்கூடிய ரைஃபிள்களும் பெரிய பாயின்ட் நாற்பத்திரண்டு வகை கைத்துப்பாக்கிகளும்தான் மிக உதவிகரமானவை. இப்போது இவனை நான் தள்ளிவிட்டு விரைந்தால் இவனால் என்னை எதுவுமே செய்ய முடியாது. அது தெரிந்தவன் போல அவன் அந்த ஸ்டென் மெஷின்கன்னை மிக அலட்சியமாக இடது தோளில் தொங்கவிட்டபடி வந்து கையில் இருந்த எதையோ தட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டு காரை நிறுத்தினான். என் காரின் டிரைவர் கண்ணாடியை இறக்கி சிரித்தபடி ஏதோ இந்தியில் சொல்ல ‘ஹா ஜி’ என்று சொல்லி விட்டுவிட்டான்.
பொன்னம்பலத்தாரின் வீடு உயரமான மதில் சூழ்ந்த பெரிய வளைப்புக்குள் இருந்தது. மதில்மீது மேலும் உயரமாக முட்கம்பிகள். மின்கம்பிப்பாதுகாப்பும் இருந்தது. பெரிய தானியங்கி வாசல்கதவு. உள்ளிருந்து பாதுகாவலன் நம்மை குற்றலைத்தொலைக்காட்சியில் பார்க்கும் வசதி. கதவு திறந்ததும் உள்ளே பெரிய சிமிண்ட் சாலை வளைந்து செல்ல இருபக்கமும் குரோட்டன்ஸ் செடிகள் இடுப்பளவு உயரத்தில் கச்சிதமாக நறுக்கி விடப்பட்டிருந்தப்பதைக் கண்டேன். பங்களா கொஞ்சம் பள்ளத்துக்குள் இருப்பதுபோலிருந்தது. செங்காவிநிறமான மாடியில்லாத கட்டிடம். கட்டிடத்தின் பக்கவாட்டில் காவலர்களின் தங்குமிடமாக இருந்த ஒரு புதிய மஞ்சள் நிறமான கட்டிடம். நேர் மறுபக்கம் அதேபோல இன்னொரு கட்டிடம். அது ஏதோ அலுவலகம் போலிருந்தது. கார் நேராக பங்களாவை அணுகி பக்கவாட்டில் சென்று நின்றது. டிரைவர் இறங்கி என்னை வெளியே வரச்சொன்னான்.
உள்ளிருந்து ஒரு கரிய மனிதர் என்னை நோக்கி வந்து “சார்லஸ்?” என்றார். தலையடைத்தேன். “உள்ளே வாங்க” என்று கொண்டுசென்றான். நான் ஒரு துப்பாக்கியைக் கொண்டுவந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு என் பையுடன் உள்ளே சென்றேன். அவுட்ஹவுஸுக்குச் சென்று பூட்டை திறந்து உள்ளே ஒரு சிறிய அறையில் மரத்தாலான சோபாவில் என்னை அமரச்சொல்லி அவர் சென்றபின் இன்னொருவன் வந்தான். ஏழடி உயரமான கனமான மனிதன். அவன் என்னைப்பார்த்து பெரிய பற்களைக் காட்டி புன்னகைசெய்தபடி “குட் ஆஃப்டர்நூன்… ஐயம் ராவ்” என்றான். நான் “ஐயம் சார்ல்ஸ்” என்றேன். “குட்” என்றபடி என்னருகே நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்துகொண்டான். பெரிய கைகள் பெரிய விரல்கள் பெரிய முகம்… ஒரு மனிதசித்திரத்தை அரைப்பங்கு பெரிதுபண்ணியதுபோல் இருந்தான்.
“நல்லது… நீங்கள் இங்கேதான் தங்கப்போகிறீர்கள்…” என்றவன். “சொல்லியிருப்பார்களே?” என்று கேட்டான். நான் “இல்லை” என்றேன். “என்ன சொன்னார்கள்?” “என்னிடம் எவரும் எதுவும் சொல்லவில்லை…” என்றேன். “எதற்காக டெல்லிக்கு அனுப்பினார்கள் என்று தெரியுமா?” நான் பேசாமல் இருந்தேன். அவன் “நான் ரா விலே இருக்கிறேன். நீங்கள் யாரென்று தெரியும்” என்றான். “இயக்கவேலைகளுக்காக” என்று நான் சொன்னேன். “இயக்கவேலை… சரி, அதுதான். ஆனால் நீங்கள் இங்கே டாக்டர் பொன்னம்பலம் கனகலிங்கம் அவர்களுக்கு காவலாக இருக்கப்போகிறீர்கள்” நான் தலையசைத்தேன். “அவருக்குச் சமீபகாலமாக நெருக்கடிகள் அதிகம். அவரை நாங்கள் கவனமாக பாதுகாத்து வருகிறோம். வெளியே நீங்கள் பார்த்த தனியார் பாதுகாப்புப்படை உண்மையில் உளவுத்துறை படைதான்… ஆனாலும் எங்களுக்கு ‘அவர்களை’ப்பற்றி ஒன்றும் தெரியாது. ‘அவர்களை’ப்பற்றி தெரிந்த ஒருவர் தேவை என்று கேட்டிருந்தோம்…”
“வீரராகவன் சொன்னார்” என்றேன். “வீரா… அவரா? வீரா நேற்றுமாலை கொல்லப்பட்டார்.” அவன் என்னை கவனிக்கிறானா என்று பார்த்தேன். இல்லை. அவன் மிகவும் மோட்டாவான, கொஞ்சம் மக்கான, மனிதன் என்று தோன்றியது. நம் இனத்தில் பெரிய உருவம் கொண்டவர்களில் புத்திசாலிகள் மிக அபூர்வம். அவன் தன் பெரிய கைகளை ஒன்றுடன் ஒன்று உரசியபடி “சரி, நீங்கள் உங்கள் அறைக்குப்போய் கொஞ்சநேரம் ஓய்வெடுங்கள்… பார்ப்போம். டாக்டர் சாகேப் இப்போது இங்கே இல்லை…” நான் எழுந்தேன். “அரே பாயி…” என்றான். ஒரு வட இந்தியக் கிழவன் வந்து என்னை கூட்டிக்கொண்டு சென்றான்.
பங்களாவுக்குப் பின்னால் இருந்த அவுட்ஹவுஸில் என்னை தங்க வைத்தார்கள். மூன்று அறைகள் கொண்ட கட்டிடம் அது. ஒன்று பொருட்கள் வைப்பதற்கு. ஒன்று கட்டில் போட்ட அறை. ஒன்று கழிப்பறை. இரும்புக்கட்டிலில் மெத்தை தலையணை சுத்தமான வெண்ணிற உறைகளுடன் நாஃப்தலீன் வாசனையுடன் இருந்தன. கனமான கரும்பச்சைநிறக் கம்பிளி மடித்து வைக்கப்பட்டிருந்தது. மின்விசிறி புதியது. ஏர்கூலர் இருந்தது. சாரன் அணிந்து ஜன்னல்களை திறந்து விட்டுக்கொண்டு உடைகளுடன் கண்மூடிப்படுத்துக்கொண்டேன். பசியெடுத்தது ஆனால் ஏதாவது வரும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் நெடுநேரமாகியும் உணவு வரவில்லை. நன்றாகவே குளிரடித்தது. கம்பிளியை இழூத்துப்போர்த்திக்கொண்டு ஆழ்ந்து தூங்கிவிட்டேன்.
கண்விழித்தபோது என் மேஜைமேல் ஒரு பெரிய காசரோலில் சாப்பாடு இருந்தது. சூடு ஆறாத கோழிக்குழம்பும் சப்பாத்திகளும். நான் மூர்க்கமாகச் சாப்பிட்டேன். ரயிலில் நான் பெரும்பாலும் சாப்பிடாமலேயே படுத்துக்கிடந்தேன். கீழே மக்கள் ஏதேதோ செய்வதையே பார்த்துக்கொண்டு உதிரிச்சிந்தனைகள் வழியாக சென்றுகொண்டிருந்தேன். நாலைந்து வட இந்தியக் குழந்தைகள் குண்டுக்கன்னங்களுடன் இந்தியும் ஆங்கிலமும் கலந்து கிரீச் கிரீச்சென்று பேசிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தும் படுக்கைகளில் ஏறி இறங்கி விளையாடின.
ஒரு குழந்தை அண்ணாந்து என்னைப் பார்த்தது. நான் புன்னகை இல்லாமல் அதையே பார்த்தேன். அது என்னை நோக்கி சிறிய சுட்டுவிரலை நீட்டிக்காட்டியது, ஆனால் என்ன சொல்வதென அதற்கு தெரியவில்லை. பின்பு அது ஓடிப்போய் இன்னொரு குழந்தையை அணைத்துக்கொண்டு காதில் ஏதோ சொன்னது. அந்தப்பெண்குழந்தை மேலே பார்த்து “தேக்கோ” என்று என்னை அதன் அம்மாவுக்குச் சுட்டிக்காட்டியது. பருத்த முலைகள் கொண்ட செக்கச்சிவந்த வட இந்தியப் பெண் என்னை பார்த்துவிட்டு “நோ குலாப்… நோ” என்றாள். நான் அப்போதும் அர்த்தமில்லாமல் பார்த்துக்கொண்டுதாஜ்ன் இருந்தேன்.
கைகழுவிவிட்டு வெளியே வந்து பார்த்தேன். நன்றாகவே இருட்டிவிட்டிருந்தது. மணி நாலரைதான். ஏழுமணி போலிருந்தது. பனிக்குள் நியான் விளக்குகள் எரிந்து ஒளி சிந்தி பனிப்படலத்தில் வட்டமாக ஊறிப்பரவி தெரிந்தது. பனிவழியாக பங்களாவும் மரக்கூட்டங்களும் எல்லாமே நீர்வழியும் கண்ணாடிவழியாக பார்ப்பது போல தெரிந்தன. வெளியே நிற்க முடியவில்லை, குளிர ஆரம்பித்தது. உள்ளே சென்று மீண்டும் கம்பிளியை போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தேன். ஆச்சரியமாக எனக்கு மீண்டும் நல்ல தூக்கம் வந்தது. கண்விழித்தபோது நள்ளிரவு. நல்ல குளிரில் எனக்கு புல்லரித்தது. முழங்கும் கார்வையுடன் நாய்கள் குரைக்கும் உரத்த ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மூன்று டாபர்மான் நாய்களை பனிப்படலத்துக்கு அப்பால் பார்த்தேன். வால் வெட்டப்பட்ட, குதிரை உடல் கொண்ட, கரிய மற்றும் தவிட்டுநிற நாய்கள் முகர்ந்தபடியும் ஆங்காங்கே நின்று ஏறிட்டுப்பார்த்தபடியும் வீட்டைச்சுற்றிவந்தன. காவலர் கட்டிடத்தின் முன்னால் பளீரென்று மஞ்சள்நிறத்தில் விண்ட்சீட்டர் அணிந்த காவலன் கையில் ஸ்டென்மெஷின் கன்னுடன் நின்று கைகளால் பொத்திய சிகரெட்டை பவ்யமாக இழுத்துக்கொண்டிருந்தான். வெள்ளிக்கண்கள் கொண்ட மாந்தளிர்நிறமான டாபர்மான் நாய் என்னுடைய கட்டிடத்தருகே தான் சுற்றிச் சுற்றி வந்து என் ஜன்னலை நோக்கியே குரைத்தது. புதிதாக நான் வந்திருப்பதுதான் அதற்கு பிரச்சினை என்று தோன்றியது. நான் சிறுநீர்கழித்துவிட்டு வந்து மீண்டும் கம்பிளிக்குள் புகுந்தேன். உள்ளே என்னுடைய உடற்சூடு மிச்சமிருந்தது.
ஏழுநாட்கள் கழித்துதான் நான் டாக்டர் பொன்னம்பலத்தைப் பார்த்தேன். அதுவரை திரும்பத்திரும்ப சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தேன். மதியத்தில் வரும் கொஞ்சநேர வெயில் எத்தனை அருமையானது என்று அப்போதுதான் புரிந்தது. இளமஞ்சள் நிறமாக அது சாம்பல்குவியல்களான மேகங்களில் இருந்து இறங்கும்போது ஓர் ஆசி போல தோன்றியது. ஓர் அருவியில் நீராடுவது போல வெயிலில் நிற்பேன். உடம்பு சிலிர்த்துக்கொண்டே இருக்கும். மூன்றாவது நாள் நான் ராவிடம் கேட்டு எனக்கு ஒரு நல்ல ஸ்வெட்டர் வாங்கிக்கொண்டேன். அதன்பின் குளிரை அத்தனை அஞ்சவேண்டியதில்லை என்று தோன்றியது.
அவுட்ஹவுசில் ரேடியோ ஒன்று வேண்டும் என்று கேட்டேன். ஒரு பழைய டிரான்ஸிஸ்டரைக் கொடுத்தான். அதில் தமிழ்ப்பாடல்களை தேடித்தேடிக் கேட்டுக்கொண்டு நாளெல்லாம் என் அறையிலேயே இருந்தேன். எப்போதும் எங்காவது பாட்டு கேட்டுக்கொண்டுதான் இருந்தது. ஒரே ஒருமுறை மட்டும் பங்களா வளைப்புக்குள் சுற்றி வந்தேன். பின்பக்கம் டாபர்மன் நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கம்பிக்கூண்டு அறைகளைப் பார்த்தேன். என்னைப்பார்த்ததும் அந்தப்பிராந்தியமே குரைப்புகளால் அதிர்ந்தது. ஓடிவந்த ஒரு வட இந்தியன் போய்விடும்படி என்னிடம் சொன்னான்.
காலை எட்டரை மணிக்கு நான் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தபோது ராவ் வந்து தன் பெரிய கைகளால் கதவைத்தட்டினான். “டாக்டர் சாகேப் உன்னை பார்க்க விரும்புகிறார்” என்றான். நான் உடனே என் ஜீன்ஸையும் ஸ்வெட்டரையும் போட்டுக்கொண்டு கிளம்பினேன். அவன் என்னை அழைத்துச்சென்று ஒரு சிறிய அறையில் நிற்கச்செய்தான். அங்கே நின்றிருந்த இரு காவலர்கள் என் உடலை நன்றாகச் சோதனை செய்தார்கள். தொடர்ச்சியாக உடல்சோதனை செய்பவர்கள் என்பது அவர்களின் இயல்பான கையசைவில் தெரிந்தது. “உள்ளே போ” என்றார்கள். நான் உள்ளே சென்றேன். என் முகபாவனை எப்படி இருக்கவேண்டுமென நான் முன்னரே முடிவுசெய்துகொண்டேன். ஏனென்றால் நான் பொன்னம்பலத்தாரை ஏற்கனவே அறிவேன், அவர் எனக்கு கல்லூரியில் கணிதம் சொல்லித்தந்திருக்கிறார்.
பெரிய அறை அது. இளஞ்சிவப்பான சுவர்கள். கனமான சிவப்பு லினன் திரைச்சீலைகள். சிவந்த வெல்வெட் உறைபோட்ட சோபாக்கள். பளபளப்பான தேக்குமரத்தாலான டீபாய் ஒன்றுக்கு மேல் காபிகோப்பை இருந்தது. பொன்னம்பலத்தார் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் இலங்கையின் பெரிய வரைபடம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. காபிக்கோப்பை அருகே ஒரு பெரிய நவீன செல்போன். என் அசைவைக் கண்டதும் நிமிர்ந்து “சார்ல்ஸ்?” என்றார். நான் “ஓம்” என்றேன். “வாருங்கோ… டேக் யுவர் ஸீட்” என்றார். நான் எதிரே இருந்த மென்மையான சோபாவில் அமர்ந்துகொண்டேன். “ராஜ் உங்களைப்பத்தி சொன்னவர்” என்றார். எந்த ராஜ் என நான் கேட்கவில்லை.
கரியமனிதர் உள்ளிருந்து ஒரு கிழிக்கப்பட்ட கவருடன் வந்தார். அவர் பெயர் சிவதாசர் என்று தெரிந்திருந்தேன். என்னைப் பார்க்காமல் அந்த கவரை பொன்னம்பலத்தாரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி உள்ளிருந்த நீலத்தாள் கடிதத்தை வாசித்துவிட்டு சிவதாசரிடம் “என்னெண்டு இப்ப சொல்றது…“ என்றார். பின்பு “சந்திரா வரட்டும்… அவ கிட்ட பேசிட்டு சொல்லுறன்” என்றார். அவர் “பதில் போடணுமா?” என்றார். “அப்டி வையுங்கோள்… பாப்பம்… அம்மான் வரட்டும்” என்றார். “சரி” என்று சிவதாசர் போனார். நான் அந்தக்கணங்களிலேயே பொன்னம்பலத்தாரை மதிப்பிட்டுவிட்டேன். அவரால் எதையுமே உறுதியாக முடிவெடுத்துச் செய்ய முடியாது. எதிலும் ஒன்றுக்குமேற்பட்ட எண்ணங்கள் வரும். குழப்பத்திற்குப் பின்னர் ஒத்திப்போடுவார். அதுவே ஏதாவது வகையில் முடியட்டும் என்று நினைப்பார்.
“சார்லஸுக்கு ஊரிலே எந்த இடம்?” என்றார். “அல்லைப்பிட்டி” என்றேன். “அல்லைப்பிட்டியிலே?” நான் பேசாமல் இருந்தேன். அவர் என் முகத்தைப் பார்த்துவிட்டு “சரி, விடும். சும்மா கேட்டனான்” என்றார். அவரது தமிழ் மாறிவிட்டிருந்தது, ஈழத்தமிழை கொஞ்சம் முயன்று பேசுகிறார் என்ற எண்ணம் வந்தது. “காபி குடிக்குதியளோ?” “வேண்டாம் டீ குடிச்சனான்” என்றேன். “சரி” என்றபின் தன் மூக்குக்கண்ணாடியை கழற்றி டீபாய்மேல் வைத்தார். “நான் முதல்முதலிலே பிளாஸ்டிக் போட்டிலே ராத்திரி யாஃப்னாவிலே இருந்து மண்டபம் வந்தப்போ போட்டை சிறி தான் ஓட்டினான்” என்றார். நான் உணர்ச்சியற்ற கண்களுடன் அவரையே பார்த்தேன். “நல்லவன்… ஆனா இப்ப நல்லது கெட்டதுக்கு என்ன பொருள் இருக்கு? செத்தது சாகாம இருக்குறது ரெண்டு வகைதான் இருக்கு…” நான் புன்னகைசெய்தேன்.
பொன்னம்பலத்தார் எழுந்து கைகளை சோம்பல் முறித்தார். “எனக்கு நல்ல ஆளு வேணும்… அங்க என்ன நடக்குது எண்டு தெரிஞ்ச ஒருத்தர்… அதனாலத்தான் உம்மை அனுப்பணும்னு கேட்டனான்.” அவர் எத்தனை உயரமான மனிதர் என்று தெரிந்தது. “நான் சொப்பனம் கண்டது இது ஒண்டுமில்லை. அமெரிக்காவுக்கு போயி கணக்குலே ரிசர்ச் பண்ணவேணும் எண்டு நினைச்சனான். பல தியரிகளும் கையிலே வச்சிருந்தனான். பின்ன இந்த தேசிய அரசியலு… இதுக்குள்ள எப்ப வந்தேன் எதுக்கு வந்தேன் ஒண்டும் இப்ப தெரியயில்லை. ஒருநாளைக்கு ஒரு கூட்டத்துக்கு போனேன். ஆரோ வா எண்டு கூட்டிட்டு போயினம். நானும் சும்மா நாலு வார்த்தை பேசலாமெண்டு போனேன். என்னைமாதிரி ஒரு புரபசர் பேச வந்தப்ப பெடியள் உற்சாகமாகி சத்தம் போட்டதுகள். அதைக்கண்டு எனக்கும் வெறி வந்துபோச்சு… அப்ப பேசினது ஒண்டும் என் மனசிலே இருந்து வரயில்லை வாயிலே இருந்து வந்தது.. கால் தடுக்கி ஆத்திலே விழுறவன் மாதிரி நான் சரித்திரத்திலே விழுந்தனான்…”
நான் அன்று அந்த மாணவர்கூட்டத்தில் இருந்தேன். பொன்னம்பலத்தார் பேசியது மாணவர்களை பற்றி எரியச்செய்தது. எங்கே பார்த்தாலும் உணர்ச்சியால் உருகும் முகங்கள். அர்த்தமில்லாத வெறியோசைகள் வாழ்த்தொலிகள். அவர் அன்று ஒரு மாபெரும் வரலாற்றுமனிதனைப்போலிருந்தார். நல்ல உயரமான உடல். வலுவான தாடைகளும் பெரிய கண்களும் கொண்ட ஆண்மைமிக்க முகம். உயர்தரமான பாண்டும் சட்டையும். கையில் ராடோ வாட்ச். வகிடு இல்லாமல் வாரி பின்னுக்கு விட்ட கனத்த தலைமயிர் அவரது அசைவுகளுக்கு ஏற்ப சிலும்பியது. அடிவயிற்றை அதிரச்செய்யும் கார்வை கொண்ட கனத்த குரல். கைகளை காற்றில் வீசி அவர் முழங்கினார். அடுக்கடுக்காக அறைகூவல்கள். நுட்பமான நக்கல்கள், பகடிகள் சொல்விளையாட்டுகள். கடல் போல அலையடித்தபடி வரலாறு வந்து நம் காலடியில் ததும்புவதாகச் சில உரைகளைக் கேட்கும்போது தோன்றுமல்லவா அப்படிப்பட்ட உரை அது. அந்த உரையின் ஒவ்வொரு சொல்லையும் என்னால் திருப்பிச் சொல்லமுடியும் என்று தோன்றியது.
“புத்தியுள்ளவன் அடிமுட்டாளா ஆகிறது எங்க தெரியுமா?” என்றார் பொன்னம்பலத்தார் “புத்தி இருக்கிறதனாலேயே தான் பெரிய ஆள்னு நெனைக்க ஆரம்பிக்கிறான் பாரும் அப்பதான்… ஒரு மூண்டு வருஷம் நான் நினைச்சதெல்லாம் முட்டாத்தனத்துக்க உச்சம். ஆனா அப்ப நான் என்னை ஒரு நெப்போலியன் எண்டு நினைச்சுகொண்டு இருந்தனான். இயக்கத்திலே வேறே யாருக்குமே படிப்பு கெடையாது. இங்கிலீஷ் பேசத்தெரியாது. அமெரிக்க வரலாறோ ஐரோப்பிய வரலாறோ தெரியாது. இந்தியாவிலே இருந்து டிப்ளமேட் வந்தா சந்திச்சு பேச அவங்களால முடியாது. சும்மா கள்ளக்கடத்தலுக்கு தோணி ஓட்டி வளந்த பெடியள். ஆனா எனக்கு எல்லாமே தெரியும்… அப்ப நான்தானே தலைவன்? எல்லாரும் என்னைத்தானே ஏத்துக்கிடணும்?” என்றார் கசந்த சிரிப்புடன் “நினைச்சுப்பாத்தா ச்சீ எண்டு இருக்கு…”
ஒருவருடம் பொன்னம்பலத்தார் ஈழத்து மேடைகளை உலுக்கிய ஓர் அலையாக இருந்தார். பின்னர் அவரை அரசு கைதுசெய்து யாழ்ப்பாணத்து சிறையில் அடைத்தது. அன்று அதற்கெதிராக மொத்த தமிழ்பேசும் நிலமும் கடையடைப்பு செய்தது. கல்லூரிகள் வாரக்கணக்கில் முடங்கின. தெருக்களில் மாணவர்கள் கொடிகளுடன் ஆவேசமாக ஊர்வலம் சென்றார்கள். அவரது படங்களை சுவர்களில் வரைந்து வைத்திருந்தார்கள். எட்டுமாதம் கழித்து அவரை இயக்கம் சிறையை உடைத்து தப்பச்செய்து கூட்டிக்கொண்டு சென்றபோது அவரைப்பற்றித்தான் எல்லாருமே பேசினார்கள். அவர் காட்டில் பெரிய ஒரு படையை உருவாக்குகிறார் என்றார்கள், இல்லை சர்வதேச சமூகத்தின் ஆதரவுக்காக உலகப்பயணம் கிளம்பிவிட்டார் என்றார்கள். நேதாஜி என்றார்கள், நெப்போலியன் என்றார்கள்…
அதன்பின்னர் இரண்டுவருடம் அவரைப்பற்றிய தகவல்கள் இல்லை. சட்டென்று அவர் இந்தியாவுக்குச் சென்றதாகவும் இந்தியாவில் புதிய இயக்கத்தை ஆரம்பித்ததாகவும் செய்திகள் வந்தபோது பெரிய ஏமாற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. அவர் இந்திய உளவுத்துறையின் கையாள் என்று பிறகு இயக்கம் அறிவித்தது. அவரது சகோதரர்கள் ஏற்கனவே லண்டனுக்கும் கனடாவுக்கும் தப்பி ஓடிவிட்டிருந்தார்கள். அவரது சித்தப்பா மகனையும் அவர் மனைவியையும் கைதுசெய்து இயக்கத்தில் விசாரணைக்குக் கொண்டுசென்றார்கள். அதன்பின் அவர்கள் திரும்பி வரவில்லை. அவர் செய்த துரோகங்களின் கதைகள் பேசப்பட்டன. இயக்கத்தை பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடுத்தார். இயக்கத்தை கைப்பற்ற முயன்றார்… இன்று பொன்னம்பலத்தார் என்ற பெயரை உச்சரிக்கவே ஈழத்தில் அஞ்சுவார்கள்.
“என்னை வச்சுக்கொண்டு என்ன செய்றது எண்டு இயக்கத்துக்கு ஆரம்பத்திலேயே குழப்பம்தான். அவங்க வேற மாதிரி ஆக்கள். சின்னவயசு முதலே கடலிலே வாழ்ந்தவங்கள். கடலிலே தோணி ஓட்டி கள்ளக்கடத்தல் செய்த அனுபவம் உள்ளவங்கள். கொண்டும் செத்தும் வாழுற சனங்கள். எனக்கு ஒண்டுமே தெரியாது. எங்க அப்பா விதானையரா இருந்தவர். நான் பள்ளிக்கூடத்திலேகூட ஒண்டும் விளையாடினது கிடையாது. படிப்பு தவிர ஒண்டும் தெரியாது. கணிதத்திலே யுனிவர்சிடி ஃபர்ஸ்ட் வந்தனான். அதிலதான் எனக்கு விஷயம் தெரியும்… என்னை கொஞ்சநாள் காட்டிலே வச்சிருந்தவங்கள். என்னை லண்டனுக்கு அனுப்பறன் எண்டு சொன்னவங்கள். எனக்கு அதிலே இஷ்டமில்லை. நான் அந்த இயக்கத்துக்கு தலைவன் ஆகவேணும் எண்டு நினைச்சவன். தினசரி பெடியங்கள் கிட்ட நல்ல வீரமான உரைகள் ஆற்றினா தலைவர் ஆயிடலாம் எண்டு நினைச்சிருந்தனான். ஆனா எனக்கு ராணுவப்பயிற்சி கிடையாது. ஆயுதங்களைப்பற்றி ஒண்டுமே தெரியாது… அவை எல்லாருமே வீரன்கள். அவைக்கு இன்னொரு வீரன்தான் தலைவரா ஆக முடியும்… படிக்காதவனா இருந்தாலும் சர்வாதிகாரியா இருந்தாலும் கொடூரமானவனா இருந்தாலும் அவை வீரனைத்தான் ஏற்றுக்கொள்ளுவாங்கள். கொஞ்சநாளிலே நான் ஒரு கொமெடியனா ஆயிட்டனான்.”
உண்மைதான். அவர் சென்றபிறகும் அவரைப்பற்றிய கதைகளும் பகடிகளும் இயக்கத்தில் வாழ்ந்தன. அவற்றில் உச்சம் இரவு தூக்கத்தில் தன் கழுத்தில் கிடந்த துண்டையே பாம்பு என்று நினைத்து கதறி ஆளைக்கூட்டியது. அவர் கையில் ஒரு கைத்துப்பாக்கியை கொடுத்தால் கைநழுவி கீழே போட்டுவிடுவார் என்றும் கீழே தேங்கிக்கிடக்கும் அவரது சூடான சிறுநீரில் அந்த துப்பாக்கி விழும் என்றும் சொல்வார்கள். பயிற்சி வகுப்புகளில் அவர் சைபீரியா லெபனான் என்று தெரியாத ஊர்களைப்பற்றி பேசி முடித்ததும் அவரிடம் இலங்கையின் சிற்றூர்களைப்பற்றி கேள்விகள் கேட்டு மடக்கி உளற வைத்தார்கள் பையன்கள். அவரே ஒருகட்டத்தில் எல்லாரும் அவரை கிண்டல்செய்கிறார்கள் என்று கண்டுகொண்டார். ஆகவே அவர் சிறுவர்களை தண்டிக்க ஆரம்பித்தார். அவர் கூப்பிட்டதும் ஓடி வராத ஒரு சிறுவனுக்கு அவர் எட்டு பிரம்படித்தண்டனை விதித்தார். ஒரு முறை சூடான சாப்பாட்டை தூக்கி ஒரு சிறுவன் முகத்தில் வீசினார். ஒருகட்டத்தில் அவரை வலுக்கட்டாயமாக இந்தியா அனுப்பினார்கள்.
“நான் இங்காலை வந்தப்ப ஆரம்பத்திலே கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா கொஞ்சநாளிலே சரியாயிட்டது. தினமும் ஒரு கட்டுரை எழுதுவேன். இங்காலை உள்ள இங்கிலீஷ் மெகஸீன்களுக்கு அனுப்புவேன். கொஞ்சநேரம் புஸ்தகம் வாசிப்பேன். பெரிய விஷயம் செய்றதா நெனைப்பும் வேணும் ஒண்ணும் செய்யவும் ஏலாது. இதுதான் என் பிரச்சினை. இங்க அதுக்கேத்த வாழ்க்கை. ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது. அப்பதான் ரோ என்னை வச்சு ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கணும் எண்டு நினைச்சது. அவங்களுக்கு ஒரு ஆள் வேணுமானா அவன் மேலே சந்தேகத்தை கிளப்பிப்போடுவாங்க. இயக்கத்திலே எல்லார்மேலேயும் எப்பவும் சந்தேகத்தோடத்தான் இருப்பாங்க. சந்தேகம் வந்தா உடனே போட்டுத்தள்ள ஆளு அனுப்பிப்போடுவாங்க. என்னைக்கொல்ல இயக்கம் ஆளனுப்பியாச்சு எண்டு தெரிஞ்சபிறகு எனக்கு வேறே வழி இல்லை. நான் இவங்ககூட சேந்துகிட்டனான்… இவங்க செய்றதுக்கெல்லாம் நான் ஒரு சாட்சி. வெறும் பொம்மை, வேற ஒண்டுமே இல்லை.”
அவர் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டது போல தெரிந்தது. அவரால் உணர்ச்சிகளை அடக்கமுடியாதென நான் ஏற்கனவே கணித்திருந்தேன். என்னுடைய முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தேன். ஆனாலும் கண்கள் அவர் கண்களை சந்திப்பதை தவிர்த்தேன். அவர் இரு கைகளையும் கோர்த்து மார்பில் வைத்துக்கொண்டு “எனக்கு இப்ப ஒண்டுமே வேண்டாம்… உயிர் மட்டும் போதும். உயிர் இருந்தா எங்க போறதுக்கும் தயாரா இருக்கிறன். என்னையும் என் குடும்பத்தையும் விட்டாங்க எண்டா நான் எங்க வேணுமானாலும் ஓடிபோயிடுறன்” என்றார். அவரது கண்கள் கலங்கி நீர் நிறைந்து இமைவிளிம்பு தாண்டி உருண்டன. விரல்களால் கண்ணீர்ரை அழுத்தி ஒற்றி சில நிமிடங்கள் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
பின்பு மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்து பரிதாபகரமான சிரிப்புடன் “ஆனா அவங்க விட மாட்டாங்க… அவங்க குடுக்கிற எந்த ஒரு வாக்குறுதியையும் நம்ப முடியாது. உலகத்திலேயே நம்ப முடியாத ஒரு இயக்கமெண்டா அதுதான்… அவங்க என்னை கொல்ல பல திட்டங்கள் போட்டிருக்கினம் எண்டு கேட்டனான். அதில எது உண்மை எது இவங்க சொல்லுற கதை ஒண்டும் தெரியாது. எட்டு வருஷமா இந்த ஜெயிலுக்குள்ள இருந்திட்டு இருக்கிறன்…” மீண்டும் அவர் தனக்குள் ஆழ்ந்து மௌனமாக நான் அவரையே அர்த்தமில்லாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவர் முகம் உடல் எங்கும் விரக்தியும் துக்கமும் நிறைந்திருப்பது போல பட்டது. சிலசமயம் இலைநுனிகளில் நீர்த்துளி கனத்து நிற்குமே அதுபோல.
“இவங்களுக்கு இப்ப நான் தேவையில்லை… பெரும்பணம் செலவழிச்சு என்னை காவல் காக்கிறாங்கள். ஆனா ஏதோ ஒரு நிமிசத்திலே சலிச்சுப்போய் வேண்டாம் எண்டு விட்டுவிடுவாங்கள். அந்த நிமிசத்துக்காகத்தான் இங்க நான் காத்திருக்கிறன்…” என்றார். நான் ஏதேனும் சொல்ல வேண்டிய நேரம் என்று தோன்றியது. ஆனால் அந்த பரிதாபத்திற்குரிய மனிதரை என்ன சொல்லி தேற்றுவதென்று புரியவில்லை. அவர் “இப்ப எனக்கு ஒண்டு விளங்குது… இந்த உளவுத்துறை ஆக்களை நம்ப ஏலாது. நல்லவங்கதான். ஆனா இது ஒரு ஆள் இல்லை, இது ஒரு சின்ன சர்க்கார் மாதிரி. ஒருத்தன் நம்ம மேலே அன்பா இருப்பவன். அவன் ஒருநாளைக்கு மாறிடுவான். இன்னொருத்தன் வந்து இனிமே நாந்தான் எண்டு நிப்பவன். அவன்கிட்டே இருந்து புதிசா ஆரம்பிக்கணும்… இந்திய சர்க்காருக்கு எதிலேயும் ஒரு ஒழுங்கு இல்லை… எல்லாம் போறபோக்கிலே நடந்திட்டிருக்கும்… அதனால எனக்கு நம்மாளுகளிலே ஒருத்தன் வேணும் எண்டு தோணிட்டுது. அதனாலதான் உம்மை அனுப்பச்சொன்னனான்…”
“நான் என்ன செய்ய ஏலும்? நானும் தப்பித்தானே வந்தனான்…” என்றேன். என் குரல் நெடுநேரம் பேசாமலிருந்தமையால் கசங்கலாக இருந்தது. “உம்ம கிட்ட தைரியம் இருக்கு. நல்ல டிரையினிங் எடுத்திருத்திருக்கீர். பணமும் ஆயுதமும் நான் குடுக்கிறன்… எனக்கு நீர் சில வேலைகளைச் செய்யணும்” என்றார். “முடிஞ்சதைச் செய்யுறன்” என்றேன். அவரது முகம் மெல்ல மாறியது. கண்களில் ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது. “சிறியைக் கொல்ல நாந்தான் ஓடர் போட்டனான். அவன் என்னைக்கொல்ல ஆரையோ இஞ்ச கொண்டுவந்தவன் எண்டு செய்தி வந்தது. ஆரெண்டு தெரியயில்லை. சிறியைக் கொண்டால் அந்த திட்டம் பாதியிலே நிண்டுபோயிடும் எண்டு அவனை கொண்டனான்… இனி ஒருத்தன் உண்டு… அவனையும் கொண்டுபோட்டால் நான் இங்கிருந்து கிளம்பி யூரோப் போயிடுவேன்…”
நான் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். “நீர் அதைச்செய்தால் நான் உமக்கு யூரோப் போறதுக்கு ஒரு பாஸ்போர்ட்டும் பணமும் தருவேன். அங்க அகதி ஸ்டேட்டஸ் எடுக்கிறதுக்கு ஏற்பாடும் செய்துதருவேன்…” நான் மெல்ல தலையசைத்தேன். பொன்னம்பலத்தார் “நீர் இப்ப என்ன நினைக்கிறீர் எண்டு சொல்லட்டுமா? என்ன இவன் உயிருக்காக இந்தமாதிரி பயப்படுறான் எண்டு தானே? ஆமா. எனக்கு ஒரு வெக்கமும் இல்லை. எனக்கு உயிரோடை இருக்கணும் எண்டு மட்டும்தான் ஆசை. நான் ஒருத்தருக்கும் ஒரு தப்பும் செய்யயில்லை. நான் எதுக்கு சாகணும்? நான் வழிதவறி இதுக்குள்ள வந்தவன். எல்லாரும் என்னை வச்சு விளையாடினாங்கள். இயக்கம் விளையாடிச்சுது. பிறவு இந்தியா விளையாடிச்சுது. இந்த விளையாட்டெல்லாம் தெரியாத முட்டாளா இருந்திட்டன்… சாவ எனக்கு இஷ்டமில்லை” என்றார்.
பின்பு பெருமூச்சுடன் “நான் கண்ட சொப்பனங்கள் எல்லாம் இன்னும் என் மனசுக்குள்ளதான் இருக்கு. எப்டியாவது யூரோப்புக்கு போயி ஒரு அஞ்சு வருஷம் தலைமறைவா இருந்திட்டா என்னை மறந்திருவாங்கள். அதுக்கு பிறகு நான் எல்லாத்தையும் புதிசா ஆரம்பிக்கணும். கணிதத்திலே இன்னும் நான் செய்யவேண்டிய பல வேலைகள் இருக்கு… முருகன் அருளாலே எல்லாம் நல்லபடியா முடியும்… நான் வேண்டிகிட்டிருக்கிறன். நான் ஒரு தப்பும் பண்ணல்லை. நல்லூரான் என்னை கைவிடமாட்டான்” என்றார்.
அவரது கண்கள் மீண்டும் கலங்கின. இம்முறை ஒரு கைக்குட்டையை எடுத்து கண்களின் நீரை நன்றாகவே துடைத்துக்கொண்டு தலைகுனிந்து தன்னுள் ஆழ்ந்து பேசாமலேயே அமர்ந்திருந்தார். சற்று தூரத்தில் ஒரு கடிகாரம் டிக் டிக் டிக் என்று அடிப்பது மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. பின்பு பொன்னம்பலத்தார் எழுந்து தலையை மேலே கையால் நீவி விட்டுக்கொண்டார். அதுதான் அவர் நிலைமீள்வதன் அசைவு போல. “நீர் எனக்கு உதவிசெய்யும். உம்மை பாத்ததுமே என் மனசுக்கு தெரிஞ்சுபோச்சுது நீர் உண்மையானவர் எண்டு. சொந்த அண்ணனா என்னை நினைச்சு உதவி செய்யும். நான் உம்மை என் சொந்த தம்பியா நினைக்கிறன்…” சட்டென்று என் தோளை தன் கனத்த கரங்களால் தொட்டார். நான் அவர் கைமேல் என் கைகளை வைத்தேன். அவர் மெல்லிய உணர்ச்சி ஒலியுடன் என்னை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டார். “நீர் என் தம்பி மாதிரி… எனக்கு வேற ஆருமில்லை” என்று கம்மிய குரலில் கிசுகிசுத்தார்.
நான் அவர் கைகளுக்குள் என் உடல் அடங்குவதை உணர்ந்தேன். உடற்பயிற்சியையே அறியாத மென்மையான தசைத்திரள்களினாலான உடம்பு. உயர்தரமான சோப்பு மற்றும் வாசனைத்திரவியத்தின் வாசனை. விபூதிவாசனை. உடைகளில் இருந்து வந்த வாசனை. அவரது உடலுக்குள் ஏதோ திரவம் குலுங்கி ஓடுவதுபோல ஒரு மெல்லிய நடுக்கம் இருந்தது. நான் அவரது கைகள் மேல் என் கைகளை வைத்து இறுகப்பற்றிக்கொண்டேன்.
[மேலும்]