உலோகம் – 8

நான் அலுவலகத்திற்கு நெடுந்தூரம் முன்னரே ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி சிறுசந்துகள் வழியாக நடந்து அலுவலகத்தை அடைந்தேன். உள்ளே நான் நுழையும் ஒலியில் அத்தனைபேரும் திடுக்கிடுவதைக் கண்டேன். என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியும் என்று  ஊகித்தேன். பேசாமல் உள்ளே சென்று மாடிக்கு ஏறினேன். ஆண்டனி பின்னால் வந்து அறைவாசலில் நான் சட்டையைக் கழற்றுவதை பார்த்தபடி நின்றான். ஜீன்ஸை கழற்றாமல் பாயைப்போட்டு அப்படியே படுத்துக்கொண்டேன். நன்றாகவே வேர்த்தது. ஆண்டனி மின்விசிறியைப் போட்டான். நான் என்ன என்பது போலப் பார்த்தேன். “அரை மணிநேரத்திலே வண்டி வந்திரும்னு சொன்னவர்…”

நான் தலையசைத்ததும் அவன் பின்வாங்கிச்சென்றான். கண்ணைமூடிக்கொண்டு நான் விட்ட இடத்தில் இருந்து நடந்தவற்றை கோர்வையாக யோசிக்க ஆரம்பித்தேன். படகில் ஏறியது, படகிலிருந்த ஒவ்வொருவருடைய முகங்கள். படகில் எழுதப்பட்டிருந்த பெயர். ‘செயிண்ட் செபாஸ்டின்’ அதன் எண். அதில் தொங்கிய நைலான் கயிறுச் சுருள்களின் எண்ணிக்கை. நான் சற்றுநேரத்திலேயே நன்றாகத் தூங்கிவிட்டேன். எங்கோ ஒரு நாயின் குரைப்பொலி கேட்டது. நான் சிறுவர்களுடன் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தேன். வேலியில் ஓணான்கள் மேல் கற்களை வீசி  அடிபட்டு ஓணான் துள்ளி கிறங்கி விழுந்து வட்டம் சுற்றி வால் விரைத்து கிடக்கும்போது வால்நுனியைப்பிடித்து தூக்கி இருப்பதிலேயே பயந்தாங்குளிப் பையனாகிய கனகன் மேல் போடுவதற்காக துரத்திச் சென்றேன். சிரிப்புகள், தூசுமணம், வெயில்மணம்… தூரத்தில் தெரிந்த கடலின் ஒளி…

கதவு ஒலித்ததைக் கேட்டு எழுந்து அமர்ந்தேன். ஆண்டனி “மாஸ்டர் கார் வந்திருக்கு” என்றான். நான் எழுந்து என் ஜீன்ஸை போட்டுக்கொண்டு சாரனை மட்டும் ஒரு செய்தித்தாளில் பொதிந்து எடுத்துக்கொண்டேன். வேறு உடைகளாக நான்கு சட்டைகளும் இரு ஜீன்ஸ்களும் இருந்தன. அவை அழுக்கில் கிடந்தன. எதுவுமே சொல்லாமல் கூடத்திற்கு வந்தேன். பையன்கள் வந்து கூடி நின்றார்கள். சிலர் தலைகுனிந்து சிலர் ஓரக்கண்ணால் பார்த்தபடி. ”வாரேன்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு நான் வெளியே சென்றேன். அவர்களிடம் உருவான உணர்ச்சி எது என ஊகிக்க முடியவில்லை. உடல் வியர்த்திருந்தது, இன்னொரு குளியல் போட்டிருந்திருக்கலாம். ஆனால் நேரமில்லை. சாலை முனையில் இருந்த அம்பாசிடர் காரின் கதவு திறந்து போலீஸ் முகம் ஒன்று உணர்ச்சியில்லாமல் என்னைப் பார்த்தது. நான் ஏறிக்கொண்டதும் கார் ’ஹாங் ஹாங்’ என ஆரனடித்தபடி கூட்டத்தினுள் மூழ்கி மூழ்கிச் சென்றது.

நகரத்திற்கு நடுவே ஒரு பழைய நடுத்தர தங்கும்விடுதிக்கு என்னைக் கொண்டுசென்றார்கள். கட்டிடம் பழையதாக இருந்தாலும் அதற்கு விசாலமான கார்பார்க்கிங் இடம் இருந்தது. கீழே ஒரு சைவ ஒட்டல் பழைய கனமான தேக்கு மேஜைநாற்காலிகளுடன் இருக்க அதன் முதலாளிதான் விடுதிக்கும் பொறுப்பு என அவருக்குப் பின்னால் சாவிகள் தொங்கவிடப்பட்ட பலகை காட்டியது. என்னை இட்டுச்சென்றவன் சென்று எண்ணைச்சொன்னதும் அவர் ஒரு சாவியை நீட்டினார். அவருக்குப் பின்னால் சென்ற சிமிண்ட் பொளிந்த படிகளில் ஏறி மேலே பால்கனிக்கு சென்று நான்காவது அறையின் பூட்டை திறந்து உள்ளே சென்றோம். மின்விசிறியை போட்டுக்கொண்டு கட்டிலில் அமர்ந்தேன். கட்டிலில் விரிப்பு சலவைசெய்யப்பட்டதாக இருந்தாலும் மெத்தை உள்ளே கரடு முரடாக இருப்பது தெரிந்தது. வைக்கோல்மேல் போர்வையை போர்த்தியது போல. சுவரில் ஏரளமான ஆணித்துளைகள்.

காவலர் ஒன்றுமே சொல்லாமல் மெல்ல தலையை அசைத்துவிட்டு வெளியே சென்றார். நான் சட்டையையும் ஜீன்ஸையும் கழட்டி ஸ்டேண்டில் மாட்டிவிட்டு சாரனைக் கட்டியபின்பு  கட்டிலில் கால்நீட்டி படுத்துக்கொண்டேன். நகர்த்தக்கூடிய வகையிலான ஸ்டாண்டில் ஒரு போர்ட்டபிள் கலர் டிவி இருந்தது. அதை போட்டுவிட்டு ரிமோட் கண்டிரோலுக்காக தேடி கண்டுபிடித்தேன். அதுவரை அது இந்தியில் கூச்சலிட்டபடி செய்தி சொல்லிக்கொண்டிருந்தது. நான் இடங்களை மாற்றி சன் டிவியில் பாடல்களைக் கண்டுகொண்டு அவற்றை வைத்தேன்.  எழுபதுகளின் பாடல்கள். ”இதயம் போகுதெ எனையே பிரிந்தே” ரத்தியின் நெடுநெடு உடம்பு கனத்த மூக்கு மேல் மூக்குத்தி சிரிக்கும் கண்கள். மடியில் தலையணையை வைத்துக்கொண்டு டிவியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பின்னர் ’புத்தம்புதுக் காலை பொன்னிற வேளை.’

பொழுது முறுகுவது என என் அம்மா சொல்வாள். வெளியே வெயிலின் நிறம் மாறிவிட்டிருந்ததை உள்ளேயே தெரிந்துகொண்டேன். நிழல்கள் சுவரிலும் கூரையிலும் அசைந்தன. பக்கத்து அறையில் டிவியில் ஏதோ சினிமா ஓடிக்கொண்டிருந்தது. பின்னணி இசை இரைச்சலாக ஏதோ சண்டைக் காட்சியை பின் தொடர்ந்தது. நான் எழுந்து கழிப்பறைக்குள் சென்று முகம் கழுவிக்கொண்டேன். எப்படி விடுதிப்பையனை அழைப்பதென்று தெரியவில்லை. தேடியபோது கதவருகே ஒரு பித்தானைக் கண்டேன். அதை அழுத்தியபின் மெத்தையில் அமர்ந்துகொண்டேன். கருப்பு நிறமுள்ள துடிப்பான பதினைந்து வயதுப் பையன் வந்து “என்ன சார்?” என்றான். “டீ” என்றேன். “டீ வெளியே வாங்கணும் சார்… காபின்னா இங்கியே கெடைக்கும்…” என்றான். நான் தயங்க “இங்க காப்பி நல்லா இருக்கும் சார்.”

காபி வந்தது, டபரா கறையாக இருந்தாலும் காபி கெட்டியாகவும் கசப்பாகவும் சுவையாகவே இருந்தது. குடித்துவிட்டு  கழிப்பறைக்குச் சென்று வாஷ் பேசினில் வாயைக் கழுவிக்கொண்டேன். மீண்டும் டிவியைப் போட்டால் பாடல்கள் முடிந்துவிட்டிருந்தன. புள்ளிகளை மாற்றி மாற்றி தேடியபோது கருப்பாக நீளமுகமுள்ள ஒரு பெண் செய்தி வாசிக்கும் உள்ளூர் சேனலைக் கண்டேன். அவள் கற்றுக்குட்டித்தனமாக தாள்களை புரட்டியபடி கரிய முகத்தில் அவ்வப்போது மட்டும் வெண்விழிகள் எழுந்து தெரிய காமிராவைப் பார்த்து பற்றற்ற குரலில் வாசித்துச் சென்றாள். அமைச்சரின் வருகை. கட்சிக்காரர்கள் நடுவே கொடி கட்டுவதில் தகராறு. மஞ்சப்பள்ளம் அருகே ஒரு எருமை கிணற்றில் விழுந்து அதை தீயணைக்கும்படையினர் கயிறு கட்டி தூக்குவதை நெடுநேரம் காட்டினார்கள். உள்ளூர் கம்ப்யூட்டர் பையன்கள் வடிவமைத்த சேனலின் எம்ப்ளமும் கத்துக்குட்டித்தனமாக வந்து சுற்றி ஒலித்துவிட்டுச் சென்றது. அவ்வளவுதான்.

மீண்டும் செய்தி வந்தபோது கொலைகளைக் காட்டினார்கள். அதிகநேரம் இல்லை. சரசரவென காட்சிகள் மறைந்தத. ரியல் எஸ்டேட் தகராறில் வரதராஜ அய்யர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அவரது ஒருகாவலர் மரணம், இரண்டு காவலர்களுக்கு குண்டுக்காயம். ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடம். குற்றவாளிகளை தேடிப்பிடித்துவிடுவோம் என சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கண்களைச் சுருக்கியபடிச் சொன்னார்.

வெளியே நன்றாக இருட்டி தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்தன. மாலைக்கே  உரிய ஒலிமயக்கம். வரான்டாவில் கேட்ட காலடிச்சத்தமே வீரராகவனின் வருகையை காட்டியது எனக்கு. நான் எழுந்து டிவியை அணைத்துவிட்டு சட்டையைப் போட்டுக்கொண்டேன். வீரராகவன் என் அறை வாசலில் ஒருகணம் நின்று கதவை தட்டினார் “வாருங்க” என்றேன். அவர் உள்ளே வந்தார். சாதாரணமாக கதர்சட்டையும் பேண்டும் அணிந்து கையில் ஒரு தோல்பை வைத்திருந்தார். உள்ளே வந்து “கதவைத் திறக்கப்படாது?  இந்தப்புழுக்கம் புழுங்குது?” என்றபடி நாற்காலியில் அமர்ந்துகொண்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை.

“மேலே கேட்டாங்க… சொன்னேன். உன்னைப்பத்தி விரிவா கேட்டாங்க… போட்டோ ஃபிங்கர்பிரிண்ட் எல்லாமே அனுப்பியாச்சு… டெல்லிக்கு அனுப்பிடுன்னு சொன்னாங்க” என்றார் என்னை கூர்ந்து பார்த்தபடி. நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் “நல்ல வேலை… கச்சிதமா… ஆனால் மூணுபேர் செத்தது கொஞ்சம் ஜாஸ்தி… பரவால்லை” என்றார். “மூணுபேரா?” “ஆமா… வாசலிலே நின்னவன் வயித்துக்குள்ள குண்டுபோய் பாங்கிரியாசை கிழிச்சுட்டுது… எல்லாம் அமுக்கியாச்சு.. பப்ளிக்குக்கு எதுனா அடிபட்டிருந்தா வம்பாயிருந்திருக்கும்…” “நான் பாத்துத்தான் சுட்டேன்…” “நீ பாத்து சுட்டிருப்பே… அவனுக கண்மூடித்தனமால்ல சுட்டிருக்காங்க” நான் தலையசைத்தேன்.

“பரவால்ல, ஒரு மாதிரி முடிஞ்சது… இங்க அவன் எட்டு வருஷமா இருந்திட்டிருக்கான்… அவன் எங்காளா அவங்காளான்னு சந்தேகம்…” நான் அரைக்கணம் விழி தூக்கிவிட்டேன். வீரராகவன் சிரித்து, “அதை இதிலே உள்ள எல்லாரைப்பத்தியும் சொல்லலாம். டபுள்கேம் ஆடாம இதிலே இருக்கவே முடியாது. டபுள் கேமுக்கு டபுள்கேம்.. அப்டியே போகும். கடைசியிலே எங்க இருக்கோம்னு அவனுக்கே தெரியாதுன்னு நெனைக்கிறேன்” என் முகம் நான் விரும்பியபடி இருந்தது.

பெருமூச்சுடன் வீரராகவன், “அப்ப இந்த பையிலே மத்த விஷயங்க இருக்கு. வடக்கே போறதுக்கான டிக்கெட்டு ஐடி கார்டு புதுசெல்போன்… எல்லாம். அங்க உன்னை நம்மாளு வந்து பாத்துக்குவான்….” அவர் பையை நீட்டினார். நான் அதைத் திறந்தேன். அதற்குள் பணம் இருந்தது. ”எழுவத்தஞ்சாயிரம் ரூபா இருக்கு… கூடவே இருக்கிற டெபிட் கார்டுலே மேக்கொண்டு நாலு லட்சம்… தாளிலே பாஸ்வேர்ட் எழுதியிருக்கேன்… எந்த ஏடியெம்மிலேயும் எடுத்துக்கிடலாம்…” சரி என்று நான் தலையசைத்தேன். “துப்பாக்கி வச்சிருக்கியா?” நான் தலையசைத்தேன். “குடுத்திரு… ரயிலிலே எவனாம் செக் பண்ணப்போய் புடிச்சான்னா வம்பு.” நான் அவர் தந்த துப்பாக்கியைக் கொடுத்தேன். அவர் அதை வாங்கியபடி “அந்த இன்னொரு கன்னு?” என்றார். பிணங்களில் வேறு குண்டை பார்த்திருப்பார். நான் அதையும் நீட்டினேன். அவர் வாங்கிக்கொண்டு “சரி..” என்றார்.

இருவரும் ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் “காலம்பற நாலு அம்பதுக்கு ரயில்… ரைட் டைமுக்கு வந்திரும்…” என்றார். நான் “சரி” என்றேன். அவர் சட்டென்று எழுந்துகொண்டு “வெல்… பாப்பம்…” என்றபடி கைநீட்டினார். நான் அவருக்குக் கைகொடுத்தேன். அவர் கிளம்பும்போது சாதாரணமாக “கார்டிரிட்ஜை எங்க வச்சிருந்தே?” என்றார். “புஜத்திலே” “ஓ…” என்றபடி ஒரு சிறு ஏப்பம் விட்டு “நல்ல வேளை அவனுக சரியா செக் பண்ணலை… லக்குதான்… வரேன்” என்றபின் கிளம்பிச் சென்றார். நான் கதவை மூடிக்கொண்டு கட்டிலில் படுத்து மீண்டும் டிவியைப் போட்டேன். அந்தி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டிருந்தன. அறையின் இருளில் டிவி இன்னமும் ஒளியுடன் தெரிவது போலிருந்தது.

எட்டரை மணிக்கு நான் பையனை அழைத்து தோசையும் வடையும் கொண்டுவரச் சொல்லி சாப்பிட்டேன். பையைத்திறந்து அதற்குள் இருந்த பணத்தைப் பார்த்தேன். கட்டுகட்டாக பச்சை நோட்டுகள்.  வழவழவென்று அவற்றை தொட்டபோது ஒரு சிறு கிளர்ச்சி ஏற்பட்டது. ஜீன்ஸை போட்டுக்கொண்டு பையுடன் வெளியே சென்றேன். கடைக்குச் சென்று இன்னொரு சாரனும்  இரு ஜீன்ஸுகளும் நான்கு சட்டைகளும் ஒரு நல்ல சிறுபெட்டியும்  வாங்கிக்கொண்டேன். ஒரு டூத்பிரஷ், டூத் பேஸ்ட், சோப்பு, சவரப்பொருட்கள், ஒரு பேனா ஆகியவற்றையும் வாங்கிக்கொண்டு குமுதம் விகடன் இந்தியாடுடே ஜூனியர்விகடன் என கையிலகப்பட்ட அனைத்தையும் வாங்கி அறைக்கு திரும்பினேன். எல்லாவற்றையும் பெட்டிக்குள் வைத்தபின் சட்டையைக் கழற்றும்போது அந்த ஆணுறை கிழே விழுந்தது.

அதை கையில் எடுத்து ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டு நின்றேன். பின்பு கைப்பையை எடுத்துக்கொண்டு படிகளில் இறங்கி ஓர் ஆட்டோவை நிறுத்தி ஏறி ரெஜினாவின் வீட்டுக்குச் சென்றேன். செல்லும் வழி முழுக்க சீட் நுனியிலேயே கம்பியைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். ஆட்டோவை அனுப்பியபின்பு  அவள் கேட் வாசலை நெருங்கினேன். அதைச் சாத்தியிருப்பார்களா என்று ஐயப்பட்டேன், ஆனால் அதற்கு கொக்கியே இல்லை. படிகளில் ஏறிச்செல்லும்போது வீரராகவன் இருப்பாரா என்ற எண்ணம் அரைக்கணம் மின்னிச் சென்றது. கதவை திடமாகத் தட்டினேன். “யாரு?” என்று ரெஜினாவின் குரல். “நாந்தான்…” மேலும் ஒரு நிமிட தயக்கம். “நாளைக்கு வாங்க” “கதவ தெறடீ…” “போங்க…” “திறக்கயில்லைன்னா ஒடைப்பேன்” என்று நிதானமான குரலில் சொன்னேன்.

கதவு திறந்தது. அந்த தாழ்விலகியதுமே நான் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டேன். அவளை வாரி என்னுடன் சேர்த்துக்கொண்டு வெறியுடன் அவள் இதழ்களைக் கவ்விக்கொண்டேன். அவள் அதை எதிர்பார்த்தவள் போல சிறிய விரைப்புக்குப் பின் தளர்ந்து எனக்கு உடலைக் கொடுத்தாள். அவளை நான் இரையைக் கிழித்து உண்ணும் மிருகம் போல கையாண்டேன். என்னுடைய உறுமல்களையும் மூச்சிளைப்பையும் சிலகணங்களில் நானே கேட்க முடிந்தது. அந்த ஆணுறையை நான் அணிந்தபோது என் முதுகெலும்பு பனிக்கட்டியாலானது போல, என் மூளைக்குள் அந்தச் சில்லிப்பு பரவுவது போல, இருந்தது. அவளிடம் முலைப்பாலின் ருசி இருந்தது. அசட்டுத்தித்திப்பு கொண்ட பச்சைப்பால். அவள் உடைகளிலும் அக்குளிலும் திரிந்த முலைப்பாலின் வீச்சம்.

அவளுடைய கனத்த முலைகள் மேல் கிடந்தபடி நான் அந்த ஆணுறையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பின்பு எழுந்து சப்பணமிட்டு அமர்ந்தபடி எட்டி என் ஜீன்சை எடுத்தேன். பீடியை பற்றவைத்தபடி அவளை பார்த்தேன். முலைகள் மேல் முலைகள் அமர்ந்திருக்க ஒருக்களித்து படுத்திருந்தாள். பெரிய இடுப்பு உருண்டு எழுந்து தெரிந்தது. மென்மையாக சப்பிய புஜங்கள், கலைந்த தலைமுடி. அவளிடம் அந்த ஆணுறையைப் பற்றிச் சொன்னால் என்ன? ஆனால் அவளுக்குப் புரியாது. அவள் நிச்சிந்தையாகப் படுத்திருப்பது போலிருந்தது. உடலுக்கு இன்னமும் மெருகு வந்திருந்தது. வீட்டுக்குள் ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் புதிதாக வந்திருந்தது.  அவளை புண்படுத்த விரும்பினேன், ஒரு நிமிடம் அவள் மனமுடைந்து கண்ணீர் விட்டால் போதும் நான் கிளம்பிவிட முடியும்.

எழுந்து சோம்பல் முறித்தபடி “பிரிட்ஜ் புதிசா?” என்றேன். அவள் எழுந்து அமர்ந்து முலைகள் அசைய தலைமயிரை சுருட்டிக் கட்டியபடி “ம்ம்” என்றாள். “வீரராகவன் வாங்கிக் கொடுத்தாரா?” “பணம் குடுத்தவர்” அவளை அது ஒன்றுமே செய்யாது. என்ன செய்வது? நான் அறைக்குள் திரும்பியபோது படுக்கையறையின் சுவரில் ஜோர்ஜின் படத்தைப்பார்த்தேன். அதற்கு ஒரு சவ்வாதுமாலை போடப்பட்டிருந்தது. அருகே இன்னொரு படம். அதில் ஜோர்ஜும் ரெஜினாவும் அந்தக்குழந்தையும் இருந்தார்கள். ஜோர்ஜ் உற்சாகமாகச் சிரித்துக்கொண்டு கண்களைச் சுருக்கி காமிராவைப் பார்த்தான். அவன் தலைமுடி நுரைபோல பம்மியிருக்க குழந்தையின் தலைமயிரும் என் மூளை சற்று அதிர்ந்தது. அந்தக்குழந்தை இப்போதிருக்கும் படம் அது. எங்கோ ஸ்டுடியோவில் கொடுத்து ஒட்டுவேலை செய்திருக்கிறாள்.

“பிள்ளைக்கு பால்குடுக்குறியோ?” என்றேன். அவள் கண்களில் ஒளி தெரிந்து மறைய உதடுகள் அழுந்தின. “வேறே நல்ல சைல்ட் ஃபுட் குடுக்கணும்… பத்தாம போயிடும்” என்றபின் கழிப்பறை நோக்கிச் சென்றேன். அவளுடைய நிழல் என் முன்னால் சுவரில் தெரிந்தது. அவள் கைகளை அசைத்தபோது என் அகம் திடுக்கிட்டது, அவள் ஒரு துப்பாக்கியை எடுக்கப்போவதுபோல. அப்படி அவள் சுட்டால்கூட நன்றாகத்தான் இருக்கும். அந்த நிழலின் அசைவில் தெரிந்த மனவேதனை என் மனத்தை இலகுவாக்கியது. கழிப்பறைக்குள் சென்று சாத்திவிட்டு  அந்த ஆணுறையை எடுத்து போட்டு பிளஷ் செய்தபோது கழிப்பறைக்குள் வீரராகவன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்ற எண்ணம் வந்தது. அக்கணம்  இன்னொரு மூளை மின்னல். டெல்லிக்கு என்னை அனுப்புவதைப் பற்றி என்னிடம் சொன்னபோது வீரராகவனின் கண்களில் கூரிய சிறு ஊசிமுனை தெரிந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். நான் டெல்லிக்குச் செல்வதில் என்ன வகையான ஆர்வம் காட்டுகிறேன் என்று கவனித்திருக்கிறார்.

அவரது சொற்களை ஒவ்வொன்றாக முகபாவனைகளுடன் நினைவில் மீட்டினேன். கிளம்பும்போது அவர் பேசியது மிக அப்பட்டமாக தெரிந்து அடச்சே எப்படி அதை கவனிக்க விட்டேன் என்று என் நெற்றியை நானே அறைந்துகொண்டேன். ஒர் உரையாடலுக்குப் பின்னர் ஒருவர் கடைசியாக கிளம்பும்போது பேசும் சொற்கள் மிக முக்கியமானவை. அவர் அவற்றைச் சொல்லத்தான் வந்திருக்கிறார். அவற்றை அவர் உருவாக்க முடியாமலிருந்திருக்கலாம், சந்தர்ப்பம் தேடி அமையாது போயிருந்திருக்கலாம், தயங்கியிருக்கலாம், ஆனால் சொல்லாமல் போகவும் முடியாதவை அவை. என் கண்களை கவனிக்காமல் அவர் பேசியது இன்னமும் முக்கியமானது. என்னை அவர்கள் சரியாக சோதிக்காமல் விட்டதற்கு ஏதாவது காரணம் இருக்குமா என்று நினைக்கிறார். அந்த வரியில் இருந்து பின்னால் சென்றபோது டபுள்கேம் பற்றி அவர் சொன்ன வரிகள் இன்னமும் தெளிவாக அமைந்தன.

ஆனால் அவருக்கு இன்னும் உறுதி இல்லை. கொஞ்சமாவது உறுதி இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் எதுவுமே கேட்டிருக்கமாட்டார். அவர் குழம்பியிருக்கிறார். அனேகமாக இன்றிரவுக்குள் அவர் ஒரு முடிவை அடைந்துவிடுவார். நான் டெல்லி சென்றுசேர்வேனா இல்லையா என இன்றிரவு முடிவாகிவிடும். நான் எனக்குள் இருந்து செல்போனை எடுத்தேன். அதில் முழுமையான சார்ஜ் இருந்தது. ஆன்செய்து காத்திருந்தேன், எந்தச் செய்தியும் இல்லை. பின்னர் செய்திவந்த எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்பினேன். ’வீரா சந்தேகப்படுகிறார்’ அது போகிறதா என்று பார்த்தேன். சென்றது. நான் கைகளைக் கழுவி கொண்டிருந்தபோது செய்திவந்தது “டன்” நான் புன்னகையுடன் அதை அணைத்து எனக்குள் செலுத்திக்கொண்டேன்.

வெளியே வந்தபோது நைட்டியுடன் ரெஜினா நின்றிருந்தாள். முகம் கொஞ்சம் வீங்கியது போல் இருந்தது. நான் அவளை முரட்டுத்தனமாக கையாண்டதன் கீறல்கள் புஜங்களிலும் கழுத்திலும் தெரிந்தன. கீழுதடு தடித்து சிவந்து தொங்கியது. “டீ குடிக்கிறியளோ?” என்றாள். என் மனம் ஒரு கணம் பதறியது “வேண்டாம்” அந்த பயத்தை கச்சிதமாக வாசித்து அவள் கண்களில் ஒரு புன்னகை பரவியது. நான் கூசி கண்களை விலக்கிக் கொண்டேன். “டீ போடு…” என்றேன். அவள் உள்ளே சென்றாள். உடைகளை அணிந்துகொண்டு இரும்பு நாற்காலியில் அமர்ந்து கைகளைக் கட்டிக்கொண்டேன்.

அவள் டீயுடன் வந்தாள். நான் அதை வாங்கி சூடாக ஊதிக்குடித்தபின் எழுந்தேன். என் பையைத் திறந்து ஐம்பதாயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தேன். “இதில அம்பதாயிரம் ரூபா இருக்கு” அவள் பேசாமல் வாங்கிக்கொண்டாள். என் டெபிட் கார்டையும் அவளிடம் தந்தேன். “இந்த அக்கவுண்டிலே நாலு லட்சம் இருக்கு… ஒருவாரத்திலே கொஞ்சம் கொஞ்சமாட்டு எடுத்து உனக்க அக்கவுண்டிலே போட்டுடு” அவள் பேசாமல் வாங்கிக் கொண்டாள். அவள் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை. சற்றே தொங்கிய கொழுத்த கன்னங்கள் அசைவில்லாது இருந்தன. “பாத்து நடந்துக்க… இந்த இதெல்லாம் வேண்டாம்… இந்த ஊரு போலிசுக்காரங்க அயோக்கியனுங்க… மதுரைப்பக்கமா போயி நம்மூரு பெடியன் எவனையாவது சேத்துக்க” அதற்கு மேல் என்ன சொல்வதென தெரியவில்லை. நான் அவளைத் தொட விரும்பினேன். அவள் கூந்தலை நீவி மெல்ல அணைத்து மென்மையாக ஏதாவது சொல்ல விழைந்தேன். ஆனால் அவளை மேற்கொண்டு என்னால் நெருங்கவே முடியாது என்று பட்டது.

அவள் பேசாமல் நின்றாள். நான் மேலும் ஏதோ சொல்ல விரும்பி ஒருகணம் தத்தளித்தபின்னர் கதவைத்திறந்து இருண்ட படிகளில் இறங்கி சாலைக்கு வந்து புழுதியும் சாக்கடையும் வாசமடித்த காற்றில் கைகளை ஜீன்ஸ் பைக்குள் போட்டபடி நடந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகடற்கேரளம் – 1
அடுத்த கட்டுரைகேணி, கடிதங்கள்