நான் காலையில் எழுந்தபோதே எனக்கு அன்றைய நாள் முக்கியமானது என்ற உள்ளுணர்வு ஏற்பட்டுவிட்டது. அந்தமாதிரியான உள்ளுணர்வுகள் தவறுவதேயில்லை என்பது என் அனுபவம். அது வேட்டையாடப்படும் அல்லது வேட்டையாடும் மிருகங்களுக்கு உள்ள நுண்ணுணர்வு மட்டும்தான். அதை பற்பல நூற்றாண்டுகளாக விலங்குகள் உருவாக்கி எடுத்திருக்கின்றன.
நான் கழிப்பறைக்குச் சென்று என் செல்போனைப் பார்த்தேன். அதை ஆன் செய்ததுமே அதிர்ந்து செய்தியைப் பெற்றுக்கொண்டது. அதை வாசித்தேன். நான் எதிர்பார்த்திருந்த செய்திதான். “ரிமூவ் ஸ்ரீ” என்ற எழுத்துக்களுக்குப் பின் எனக்குக் கட்டளைகொடுப்பவரின் குறிப்பெயர். ‘பாப்’. பெருமூச்சுடன் அரைநிமிடம் கண்மூடி அமர்ந்திருந்தேன். மெதுவாகச் சிந்தனைகள் ஊறி வர ஆரம்பித்தன. சிறி மாஸ்டர் ஏற்கனவே களையெடுப்புப் பட்டியலில் இருந்தாரா இல்லை எனக்கு வழியை உருவாக்குவதற்காக அவரை பலியிடுகிறார்களா?
ஒரு கணம் பெரும் திகைப்பு ஏற்பட்டது. எந்த ஒரு கேள்விகளுக்கும் பதிலே இல்லாமல் இப்படி ஒரு பிரம்மாண்டமான தொடர்நிகழ்வை எந்த ஒரு பெரும் புனைகதையிலும் கற்பனைசெய்துவிடமுடியாது. என்றாவது ஒருநாள் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் வரலாறாக ஆகி சீராகப்பதிவுசெய்யப்பட்டு ஆராயப்பட்டு எல்லா கேள்விகளுக்கும் பதில் எழும் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் எல்லாம் எதிர்மறையாக ஆகி, இதெல்லாம் அப்படியே புதைந்து, கேள்விகளும் கேட்கும் மனிதர்களும் சேர்ந்து மண்ணுக்குள்ளும் மறதிக்குள்ளும் சென்றுவிடுவார்களா என்ற எண்ணம் அடிக்கடி எழுகிறது. அப்படியானால் அக்கேள்விகளை கேட்டுக்கொள்வதிலேயே பொருள் இல்லை.
நான் ஆப்பமும் பாயாவும் சாப்பிட்டுவிட்டு ரேடியோவை காதருகே வைத்து பிபிசி கேட்டுக்கொண்டிருந்தபோது என்னை வீரராகவன் அழைத்தார். நான் என் பெயரைச் சொல்லிவிட்டு மௌனமாகக் கவனித்தேன். “அவங்க நம்ம மேலிடத்திலே தொடர்பு கொண்டிருக்காங்க… உக்காந்து பேசலாம்கிறாங்க..” என்றார் வீரராகவன். “அனேகமா அவங்களிலே யாரையாவது நீ சந்திக்கவேண்டியிருக்கும்… இடம் நேரம் எல்லாம் குறிச்சுக்கிடு… கூடுமானவரை அந்தாள் வீட்டிலேயோ ஆபீஸிலேயோ சந்திக்கிற மாதிரி இருக்கட்டும்…” நான் “சரி” என்றேன். “அதோட இந்த சிம்கார்டை மாத்திரு… “ என்ற பின் அவர் விடுபட்டார்.
நான் அன்று பகல் முழுக்க காத்திருந்தேன். எனக்கு எப்படி அழைப்பு அல்லது தொடர்பு வரும் என்று தெரியவில்லை. அவர்கள் நேரடியாகவே தொடர்புகொள்வார்கள், அதுதான் அவர்களின் வழிமுறை. நான் அன்றும் சினிமாவுக்குச் சென்றேன். அதன் பின் சந்தைக்கு முன்னால் நின்று நெரிசலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மறுநாள் மாலை நான் வெற்றிலைபாக்குக் கடையில் பீடி வாங்கும்போது அருகே வந்து நின்ற இளைஞன் “அண்ணை பேசணுமே” என்றான். அதன்பின் ஒரு சிகரெட் வாங்கிக்கொண்டு நடந்து சென்று ஒரு டாஸ்மாக் சாராயக்கடையில் நுழைந்தான்.
நான் பீடியை ஆழ இழுத்தபடி சென்று அந்த சாராயக்கடைக்குள் சென்றேன். அதன் பின்பக்கம் சிறிய தனியறைகள் இருந்தன. நான்குபேர் அமரும் பிளாஸ்டிக் நாற்காலிகளும் சன்மைக்கா தேய்ந்த கால் தளர்ந்த மேஜையுமாக வழக்கமான அறை. அதற்குள் சிந்திய விஸ்கி பிராந்தி ரம்மின் வாசனை, மெல்லிய எச்சில் வாடை. சுவரெங்கும் பலர் பலமுறை துப்பிய தடங்கள். நான் அமர்ந்துகொண்டதும் அவனும் உள்ளே வந்து அமர்ந்துகொண்டான். பெரிய ரம் புட்டியும் சுண்டலும் அவனே வாங்கி வந்திருந்தான். மேஜைமேல் அவற்றை பரப்பிவிட்டு திரும்பிச் சென்று பிளாஸ்டிக் கோப்பைகளும் தண்ணீர்பாக்கெட்டும் வாங்கி வந்தான்.
அவன் அமர்ந்துகொண்டதும் நான் அவனைப்பார்த்து புன்னகை செய்தேன். அவன் மெல்ல உதடுகளை வளைத்தபின் புட்டியை உடைத்து இரு பிளாஸ்டிக் கோப்பைகளில் சிறிதளவு ஊற்றி அதில் அளவு பார்த்து தண்ணீரை விட்டான். “இல்லை, குடிக்கிறதில்லை” என்றேன். அவன் ஏறிட்டுப் பார்த்துவிட்டு “இருக்கட்டும்” என்றான். தன்னுடைய டம்ளரை எடுத்து ஒரே விழுங்கில் குடித்தபின் மீண்டும் கலந்துகொண்டான். சுண்டலை எடுத்து வாயில் போட்டு மென்றபடி என்னையே பார்த்தான். நான் அவன் பேசப்போவதற்காக காத்திருந்தேன்.
“விக்கியை உங்காளுங்கதான் கொன்னீங்கன்னு தெரியும்…” என்றான். அவனிடம் யாழ்ப்பாண உச்சரிப்பு அதிகம் இருக்கவில்லை. அவன் இந்த ஊரைச்சேர்ந்தவனாகக் கூட இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். “…பேசலாம்னு மாஸ்டர் சொன்னவர்..” என்றபின் மீண்டும் ரம் ஊற்றிக் குடித்தான். அவன் பெருங்குடிகாரனாக இருக்கவேண்டும், அல்லது பதற்றம் அடைந்திருக்கிறான். மெல்லிய தாடி முகத்தில் பாறைமீது கடற்பாசி போல படர்ந்திருந்தது. அவனுடைய கரங்கள் மெல்ல நடுங்குவதைக் கண்டேன்.
நான் “பேசறதுக்கு ஒண்ணுமில்லை. பேசலாம். எப்ப வேணுமானாலும் பேசலாம். யாரு செத்தாலும் சாவு சாவு தானே? அவளோட கையிலே தானே நாமெல்லாம் இருந்திட்டிருக்கோம்” என்றேன். அவன் நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கவனித்து லேசாக தலையைச் சரித்தான். பொதுவாக இம்மாதிரி பேச்சுவார்த்தைகளில் கொஞ்சம் புரியாத தத்துவார்த்தமான சொற்றொடர்கள் எதிரியை குழப்புகின்றன என்பது என் அனுபவம். நாம் சொல்வதில் நுண்ணிய அர்த்தங்கள் கண்டுபிடிக்க முனையும்போது அவன் நம்முடைய பல நோக்கங்களை தவறவிட்டுவிடுவான்.
“எங்கன்னு கேக்கச்சொன்னவர்” என்றான். “மனம்விட்டுப் பேசறதுன்னா எல்லா எடமும் நல்ல எடம்தானே… மனமிருந்தா ஏன் இந்த ரோட்டிலே நின்னுகூட பேசலாம்…” என்றேன். “இல்லை… அது” என்றபின் “எங்க?” என்று என்னிடம் கேட்டான். தீர்மானிக்கும் உரிமை என்னிடம் வந்துவிட்டது. “அவர் இருக்கிற எடத்திலேயே பாத்திருவோமே…” என்றேன். என் மனதுக்குள் புன்னகைசெய்தேன். பேசுவதற்கு மது தேவையாகும் ஒருவனை என்னிடம் அனுப்பியிருக்கிறார் சிறி மாஸ்டர் என்றால் அவர் இதை ஒரு சாதாரணமான நாடகமாகவே நினைக்கிறார். என்னை முழுமையாக நம்புகிறார்.
அவன் கண்கள் சுருங்கின “அது…” என்றான். நான் “பேச்சு ஆத்மார்த்தமா இருக்கணும்ல… மனசு பேசினாத்தான் அது பேச்சு. நாக்கு பேசினா அது வெளையாட்டு..” என்ற பின் அவனை கூர்ந்து பார்த்தேன். “சரிதான்…” என்றான். நான் அதற்குமேல் பேசக்கூடாது என்று முடிவுசெய்து சட்டென்று எழுந்துகொண்டேன். “போயி சொல்லு… அவரை அவரோட எடத்திலே சந்திக்கிறன்…” அவன் “அதுக்கு…” என்று ஆரம்பிக்கவும் “என்ன கண்டிசன் உண்டோ அதைச் சொல்லியனுப்பினாப்போரும்… பாப்பம்” என்றபின் வெளியே வந்துவிட்டேன்.
சினிமாவுக்குப் போய்விட்டு நான் திரும்பி வரும்போது ஒரு இளைஞன் என்னை பின் தொடர்ந்து வந்து “அண்ணை ஒரு லெட்டர் இருக்கு” என்றான். நான் கைநீட்டியதும் ஒரு மணிலா கவரை தந்துவிட்டு கூட்டத்தில் மறைந்தான். நான் அலுவலகத்துக்கு வந்ததும் வீரராகவன் செல் போனில் அழைத்தார். “லெட்டர்ல என்ன எழுதியிருக்கான்?” என்றார். “படிக்கலை” அவர் “அனேகமா தனியா வரணும்னு எழுதியிருப்பான். ஆயுதங்கள் இருக்கக் கூடாது. யாரும் ஃபாலோ பண்ணக்கூடாது அதான் கண்டிஷன்ஸ்” என்றார். நான் அதற்குள் கடிதத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தபடி “அதேதான்” என்றேன்.
வீரராகவன் அரைக்கணம் தயங்கினார். மறுமுனையில் அவர் என் முகத்தை ஊகிப்பதை நான் கண்டேன். “என்ன, வேற வழி இல்லல்ல?” என்றார். “ஆமா, ஆனா ரிஸ்கு இருக்கு..” என்றேன். “ரிஸ்கு இல்லாம இருக்குமா… பெரிய இயக்கம். நொட்டோரியஸ்… ஆனா என்ன பண்றது?” என்றார். நான் “பாப்பம்” என்றேன். “நீ தைரியமா போ… நாங்க கண்டிப்பா உன்னை ஃபாலோ பண்ணுவோம்… எப்டி என்னங்கிறத பாத்துட்டு பேச்சுவார்த்தைய முறிச்சிட்டு வந்திரு… எல்லாத்தையும் பாத்துட்டு வந்தபிற்பாடு மெதுவா பேசி பிளான் பண்ணுவோம்” நான் சரி என்றேன்.
வீரராகவன் என்னை அளக்க விரும்புகிறார் என்று புரிந்தது. நான் தயாராகக் கிளம்பினால் அந்த இயக்கத்துடன் எனக்கு ஏதோ ஒரு ரகசிய உடன்பாடு இருக்கலாமென்றாகும். தயங்கினாலும் அதுவே பொருளாகும். நான் மிக நடுத்தரமான ஒரு நிலைபாடு எடுத்தாலும் தொலைபேசியில் அதை சரியாக தொடர்புபடுத்திவிட்டேனா என்று சந்தேகப்பட்டேன். ஆனால் அந்த வகையான ஐயம் எழுந்து அதற்காக மேலும்பேசுவது ஆபத்தானது. ஒருவிஷயத்தை சரிசெய்வதற்காக பேசும்போதே நாம் நம்மைக் காட்டிக்கொடுக்க ஆரம்பிக்கிறோம். நான் “அப்ப பாப்பம்…” என்றபின் செல்லை அணைத்தேன். அது ஒளி மங்கி உயிரிழந்தது.
நான் செல்போனை திறந்து அதன் சிம்கார்டை எடுத்து ஒடித்தேன். எழுந்து சென்று இன்னொரு கறுப்பு டீ போட்டுக்கொண்டேன். ஸ்டவ்வின் தீயில் சிம்கார்டை கொளுத்தி அந்த பிளாஸ்டிக் உருகுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த திட்டம் ஒரு பொறியா இல்லை சோதனையா என்று இந்நிலையில் எவராலும் சொல்லிவிடமுடியாது. இது எனக்கு வீரராகவன் வைக்கும் சோதனையாக இருக்கலாம். அல்லது அவருக்கே வேறு எவரேனும் வைக்கும் சோதனையாக இருக்கலாம். சட்டென்று எனக்கு ஒரு எண்ணம் எழுந்தது, வீராராகவன் கூட எங்கள் இயக்கத்தில்தான் இருக்கிறாரா? சிறி மாஸ்டரை கொல்லும் திட்டம் அவருக்கும் எனக்கும் எங்கள் இயக்கத்தால் தான் அளிக்கப்பட்டிருக்கிறதா? இல்லையேல் எப்படி அவர்களுக்குத் தெரிந்தது?
என் உடம்பு கொஞ்சம் சோர்ந்தது. காலை நீட்டியபடி நாற்காலியில் அமர்ந்துகொண்டு முகவாயை வருடிக்கொண்டிருந்தேன். பின்பு சட்டென்று எழுந்து என் துப்பாக்கியை எடுத்து அதன் ஆறு கேரியர்களிலும் குண்டுகளைப் போட்டேன். கொஞ்சநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். மிகச்சிறிய — பாயின்ட் 22 துப்பாக்கி. ஒரு சின்னப்பொம்மை. அதன் மெல்லிய உலோகப்பளபளப்பு மனக்கிளர்ச்சியை அளித்தது. சின்னவயதில் நான் ஒரு பொன்வண்டை தீப்பெட்டியில் வளர்த்து வந்திருந்தேன். ஒவ்வொரு நாளும் அந்த பெட்டியை திறந்து அதைப்பார்ப்பேன். அதன் பளபளப்பு என்னை கிளரச் செய்யும். அபூர்வமான ஒரு கல் மாதிரி அது என எண்ணிக் கொள்வேன். அது செத்துபோனதை நான் அறியவில்லை. நாலைந்துநாள் அந்த ஓட்டையே அதுவாக எண்ணி பார்த்துக்கொண்டிருந்தேன்.
துப்பாக்கியுடன் கிளம்பி வெளியே சென்றேன். முனிசிப்பல் பார்க்குக்குச் சென்று அங்கே நின்றபடியே செய்தித்தாள்களை வாசித்தேன். சோம்பேறிகள் அங்கே திண்ணைகளிலும் பெஞ்சுகளிலும் அமர்ந்திருந்தார்கள். என்னைப்பார்த்தால் அவர்களில் ஒருவன் என அவர்கள் எண்ணக்கூடும். எதிலுமே அக்கறை இல்லாமல் எதையோ யோசித்தபடி எதையாவது அர்த்தமில்லாமல் செய்தபடி அமர்ந்திருக்கும் ஆட்களில் இருபது முதல் எழுபது வரை எல்லா வயதினரும் இருந்தார்கள். வேலை இல்லாதவர்கள், வேலைசெய்து ஓய்வுபெற்றவர்கள். அவர்களின் முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அனைத்திலும் ஒரு பொது அம்சம் இருந்தது. அது என்ன என்று ஊகிக்க முடியவில்லை.
பார்க்கில் திடீரென்று டிவியை போட்டுவிட்டார்கள். அபத்தமான ஏதோ நடனம் ஆரம்பித்தது. சத்தம் என்னை தொந்தரவுசெய்தது. நான் சாலையில் இறங்கி மக்களைப் பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றேன். என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் இத்தனை பேரும்? கைகளில் பைகளை கொண்டு நடந்து செல்கிறார்கள். சைக்கிள் மிதிக்கிறார்கள். கடைகள் முன் அமர்ந்திருக்கிறார்கள். ஏதேதோ வேலைகள் செய்கிறார்கள். என்னென்ன பொருட்கள். இரும்புகுழாய்கள், பிளாஸ்டிக் பாய்கள், தண்ணீர் குழாய்கள், வெட்டி உருவம் மாற்றப்பட்ட தகரடப்பாக்கள், கயிறுகள், நைலான் நார்கள்… என்னென்ன தேவைப்படுகிறது மனிதனுக்கு…
ஆட்டோவைப்பிடித்து நேராக ஜோர்ஜின் வீடு இருக்கும் தெருவுக்குச் சென்றேன். ஆட்டோ ஓடும்போது நன்றாக குனிந்து அமர்ந்து சாலையையே பார்த்துக் கொண்டு வந்தேன். சாலையைப் பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது என்பதைப்போல. ஆட்டோவை பணம் கொடுத்து அனுப்பிவிட்டு இறங்கி தெருவில் நின்று மேலே ஜோர்ஜின் வீட்டையே பார்த்தேன். திறந்து கிடந்த வாசலின் திரைச்சீலை உள்ளே சுழலும் மின்விசிறியின் காற்றால் அலைபாய்ந்தபடியே இருந்தது. அதைப்பார்த்துக்கொண்டு சற்று நேரம் நின்றேன். பின்பு நடந்துசென்று அந்த பெட்டிக்கடையில் ஒரு பீடிக்கட்டு வாங்கிக்கொண்டேன். ஒன்றை பற்றவைத்தபடி அந்த வீட்டைத்தாண்டி அதைப்பார்ககமல் நடந்து சென்றேன்.
கொஞ்ச தூரம் வந்து விட்டேன் என்று உணர்ந்ததும் நின்று இன்னொரு பீடி பற்றவைத்தேன். ஆழமாக இழுத்தபடி திரும்பி நடந்து அந்த வீட்டை தாண்டி வந்தேன். விளக்குத்தூண் அருகே நின்று அந்த நெளியும் திரைச்சீலையையே பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் நடந்து அந்த சாலையை தாண்டிச் சென்று விட்டு திரும்பிவந்து அந்த தூணருகே நின்றேன். பீடிக்காக துழாவியபோதுதான் பீடி முடிந்துவிட்டிருப்பதை கண்டேன். மீண்டும் பெட்டிக்கடைக்குச் சென்று இரண்டு கட்டு பீடி வாங்கினேன். கடைக்காரன் என்னையே நெடுநேரமாகக் கவனித்துக்கொண்டிருந்ததை அவன் முகக்குறி காட்டியது. நான் என் பையில் இருந்து பணத்தை எடுக்கும்போது அரைக்கணம் துப்பாக்கியை எடுத்து உள்ளே போட்டேன்.
கடைக்காரன் முகத்தை அரைக்கண்ணால் பார்த்தபோது எனக்கு அவன் மனம் புரிந்துவிட்டது. இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு துப்பாக்கியைப் பார்த்தால் பாம்பைக்கண்ட பாவனை கண்களில் தெரியும். சொல்லிழந்து போய்விடுவார்கள். அதனால்தான் சினிமாவில் சலிக்காமல் துப்பாக்கியைப் பார்க்கிறார்கள் போல. நான் மீண்டும் அந்த போஸ்டர் அருகே சென்று நின்றேன். ஜோர்ஜ் கடைசியாக பார்த்த படமாக அது இருக்கலாம் என்று தோன்றியது. வெண்ணிறமான குண்டான பெண்கள் மேல் அவன் அடக்கமுடியாத காமம் கொண்டிருந்தான் என்று அப்போது தோன்றியது.
கையில் ஒரு பாலிதீன்பொட்டலத்துடன் ரெஜினா வெளியே வந்தாள். என் மனத்தின் ஒலியை காதுகள் முழுக்க கேட்டேன். நானே ஒரு பெரிய முரசாக மாறி விட்டதுபோல. அவள் கண்கள் அக்கறையில்லாமல் தெருவைப்பார்த்தன. ஒருவேளை என்னைக்கூட தொட்டுச்சென்றிருக்கலாம். நான் ஒரு முள்முனையில் அதிநுட்பமான சமநிலையில் நின்ற கணம் அது. அவள் சாதாரணமாக அந்த பொட்டலத்தை கீழே ஏதோ குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு தலைமயிரை கையால் ஒதுக்கிவிட்டு உள்ளே சென்றாள். நீர்ப்பரப்பு போல திரை விலகி கூடி அவளை உள்ளே விட்டது.
நான் மெல்ல பதற்றம் தணிந்து என் உடம்பெங்கும் சூடாக ஓடிய குருதி குளிர்ந்து சொட்டுச் சொட்டாக திரும்பி வருவதை உணர்ந்தேன். எத்தனை வியர்த்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். பீடி தீர்ந்திருந்தது. கைவிரல்கள் நடுநடுங்கின. சட்டைப்பைக்குள் கைவிட்டு துப்பாக்கியின் உலோகத்தை தொட்டேன். அந்த குளுமை என் பதற்றத்தை சட்டென்று குறைத்தது. மன அமைதிக்கான மாத்திரை ஒன்றை விழுங்கியது போல இருந்தது. தூக்கம் வருவது போலவும் உடம்பே களைத்து தளர்ந்துவிட்டது போலவும் உணர்ந்தேன்.
நான் எனக்குள் ஒரு கூண்டை வைத்திருக்கிறேன். நானும் ஒரு துப்பாக்கிதான் போல. குண்டு ஏற்றப்பட்டு டிரிக்கர் அழுத்தப்படுவதற்காக காத்திருக்கும் குளிர்ந்த கனத்த கரிய துப்பாக்கி. அந்த எண்ணமே எனக்கு ஆறுதல் அளித்தது. எனக்கென எந்த வஞ்சமும் பகையும் நோக்கமும் இல்லை. எனக்கென எந்த இலக்கும் இல்லை.
நீண்டதூரம் நடந்தபின் ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு ஆட்டோ ஏறி மீண்டும் அலுவலகம் வந்தேன். அலுவலகத்தில் நுழைவதற்கு முன்பாக வழக்கம்போல செருப்பை நன்றாக படிகளில் தேய்த்தேன். பையன்கள் எதை எதையோ ஒளிக்கும் ஒலிகள் கேட்டன. நான் பேசாமல் உள்ளே சென்று என் அறைக்குள் போய் பாயை எடுத்துப்போட்டு கண்மூடிப் படுத்துக்கொண்டேன். மின் விசிறியின் ஒலியையே கேட்டுக்கொண்டு கிடந்தபோது என் அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது. கரிய வட்டமுகம். பெரிய பொட்டு. அம்மாவின் சிரிப்பு சின்னக்குழந்தை சிரிப்பது போல அத்தனை கள்ளமற்ற மலர்வு என்று அப்போது பட்டது. எந்தவிதமான அறிவுச்சிக்கல்களும் உணர்ச்சிக்குழப்பங்களும் இல்லாத எளிமையான பெண்ணாக அவள் இருந்திருக்க வேண்டும்.
நான் தூங்கிக் கொண்டிருந்தபோது என்னை யாரோ அழைத்தார்கள். ஆனால் அது யாழ்ப்பாணத்தில் என் வீட்டில். மறு அழைப்பைத்தான் அலுவலகத்தில் கேட்டு எழுந்துகொண்டேன். “மாஸ்டர், லெட்டர் வந்திருக்கு” என்றபடி ஆண்டனி என் காலை மெல்ல சுண்டிக் கொண்டிருந்தான். என் தோளையோ கைகளையோ தொடுவது ஆபத்து என நான் அவனுக்குச் சொல்லியிருந்தேன். சட்டென்று நான் எழுந்ததுமே அவன் எழுந்து விலகி கதவருகே நின்றான். கையில் துப்பாக்கியுடன் நான் விழித்து எழுந்து அமர்ந்து லுங்கியை அவிழ்த்துக்கட்டியபடி “என்ன?” என்றேன்.
“ஒரு பெடியன் லெட்டர் கொண்டுவந்து குடுத்துட்டு போனவன்..” என்றபடி நீட்டினான். அதே மணிலா கவர். உள்ளே ஒரே வரி. ‘இன்று மாலை ஏழரை மணிக்கு’ நான் பெருமூச்சுடன் கண்களை மூடியபின் அண்டனியிடம் “சரி” என்றேன். அவன் சென்றபின் இன்னொருமுறை அந்த எழுத்துக்களை வாசித்தேன். ஆங்கிலத்தில் அந்த எழுத்துமுறை ஐம்பது வயதைத்தாண்டியவர்களுக்கு உரியது. அப்படியானால் சிறி மாஸ்டர் அதை எழுதியிருக்க வேண்டும். அவரே அவருக்கு நேரம் குறித்திருக்கிறார்.
நான் எழுந்து பொட்டலத்தில் இருந்த இளம்சூடான வெங்காய பக்கோடாவை தின்று பாலில்லாத டீ குடித்தேன். அதன்பின் சென்று குளித்துவிட்டு ஜீன்ஸும் வெள்ளை காட்டன் சட்டையும் அணிந்துகொண்டேன். என் துப்பாக்கியில் குண்டுகளை சரிபார்த்தபின் ஒரே ஒரு கார்ட் ரிட்ஜை மட்டும் என் புஜங்களுக்கு அடியில் அக்குளுக்குக் கீழே பசைநாடாவால் ஒட்டி வைத்துக்கொண்டேன். ஸ்போர்ட்ஸ் ஷுக்களை அணிந்து கொண்டு கிளம்பியபோது நான் செல்லும் நோக்கம் அறிந்தவர்களாக பையன்கள் வந்து நின்றார்கள். “பாத்துக்கிடுங்க… என்ன ஆர்டர் வருதோ அதைச் செய்யுங்க…“ அரைக்கணம் தயங்கி “ஆண்டனி நீ பாத்துக்க” என்றேன். ஆண்டனி தலையசைத்தான். அவர்கள் எதிர்பார்த்தது சொல்லப்பட்டுவிட்டது போல அவர்களின் உடல்கள் மெல்ல தளர்ந்தன.
நான் சந்தை அருகே வந்து நின்றுகொண்டேன். சற்று அதிகமாக வியர்க்கிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. இத்தகைய தருணங்களில் பதற்றத்தை வெல்ல ஏதாவது ஒரு விஷயத்தை வரிசைப்படுத்தி நினைத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம் என்பது ஒரு நல்ல பயிற்சி. நான் வவுனியாவில் இருந்து கிளம்பியது முதல் உள்ள நிகழ்ச்சிகளை வரிசையாக அமைக்க ஆரம்பித்தேன். ஒரு சிறிய தகவல் கூட தவறாமல் நினைத்தேன். நான் முதலில் வந்த வாகனத்தின் பதிவு எண். வந்து இறங்கியபோது முதலில் பார்த்த நபர் அணிந்திருந்த சட்டையின் நிறம். பேசிய ஒவ்வொரு சொற்களும். அங்கிருந்து நாங்கள் யாழ்ப்பாண நகருக்குள் நுழைந்தது. என்னை சோதனையிட்ட ராணுவ அதிகாரியின் மார்பில் இருந்த பெயர்…
மெதுவாக அது வேறு யாருடைய கதையாகவோ ஆகியது. நான் ஒரு நாவல் போல அதை வாசித்துக்கொண்டிருந்தேன். இந்தப்பயிற்சி எல்லா விஷயங்களையும் திட்டவட்டமாக நினைவில் நிறுத்திக்கொள்ள உதவுகிறது. சில சமயம் நாம் கவனிக்காது விட்டவை தெளிவாக எழுந்து வரும். என்னை யாழ்ப்பாணத்தில் வந்து சந்தித்து உள்ளே கூட்டிச்சென்றவனுக்கு எதுவுமே தெரியாது என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் அவன் என்னிடம் விடைபெற்று சென்றபோது அவனில் இருந்த முகவெளிப்பாடு நினைவில் மீண்டபோது அவன் கண்களில் அவனுக்கு என்னை நன்றாகவே தெரியும் என்ற செய்தி இருந்ததை அப்போது அறிந்தேன். அவன் யார் என்று யோசித்தேன். நானறிந்த பலநூறு முகங்கள் வழியாக அவனைத் தேடிச் சலித்து மீண்டும் நிகழ்ச்சிகளின் வரிசைக்கே வந்தேன்.
படகில் ஏறிக்கொண்ட தருணத்தை அடைந்தபோது ஒரு ஆட்டோ என்னருகே வந்து நின்றது. அந்த குடிகார இளைஞன் என்னை நோக்கி தலையசைத்தான். நான் ஏறிக்கொண்டேன். ஆட்டோ அதிகம் சுற்றாமல் நேராக அந்த இடத்துக்கு வந்தது. குறுகலான படிகளில் ஏறுமிடத்திலேயே ஏதோ குழந்தை மலம் கழித்து வைத்திருந்தது. கொடிகளில் இரு சேலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. உள்ளே டிவியில் ஏதோ சீரியல் ஓடும் ஒலி. ஒரு மெலிந்த கரிய பெண் கொலுசு ஒலிக்க கையில் பிளாஸ்டிக் வாளியுடன் தெருவில் சென்றாள். மந்தமான சாதாரணமான பகல். எல்லாவற்றையும் வெளிறசெய்யும் வெயில் தெருமீது படர்ந்து கிடந்தது.
நான் அறைக்குள் நுழைந்தபோது வழக்கம்போல உள்ளே யாருமில்லை. நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். என்னுடைய துப்பாக்கியை எவரும் சோதனை போடவில்லை. ஆனால் அந்தக் குடிகார இளைஞன் என்னருகிலேயே நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து நினைவுகூர்ந்து சென்று மின்விசிறியை போட்டான். அது ரீ ரீ என்று தயங்கி சுழல ஆரம்பித்தபோது ஜன்னலின் திரைச்சீலைகள் நிம்மதியிழந்தன. கூரையில் அதன் நிழல் பதற்றமாகச் சுழன்றது. அறைக்குள் கொஞ்சம் தூசு வாசனை இருந்தது. அருகே உள்ள கழிப்பறை அப்போதுதான் கழுவப்பட்ட ஃபினாயில் வாடை எழுந்தது.
படிகளில் ஒலிகள் கேட்டபோது இளைஞன் விரைப்பாக நின்றான். முதலில் அறைக்குள் இரு தாட்டியான இளைஞர்கள் நுழைந்தார்கள். மெல்லிய தாடி வைத்த இளைஞனுக்கு ஒரு கண் குழியாக இருந்தது. அவன் என்னிடம் “வணக்கமண்ணை” என்றபின்னர் என்னை நெருங்கி “ஆயுதங்கள் இருக்கா அண்ணை?” என்றான். “சும்மா வரமுடியுமா…” என்றேன். அவன் “அதை எங்க கிட்ட குடுத்திருங்க” என்று கைநீட்டினான்.
“ஆயுதத்தை குடுக்க முடியாது…” என்றேன் திடமாக. “அதைப்பத்தி நாம பேசலை…” அவன் சற்றே திகைப்புடன் “என்னண்ணை பேசுறியள்? ஆயுதத்தோடையா பேச்சுவார்த்தை?” என்றான். “சரி, அப்ப உங்காளுகிட்டே ஆயுதமிருக்கா இல்லியா எண்டு ஆர் பாக்கிறது?” என்றேன் “இது எங்க இடம்” என்று அவன் கொஞ்சம் எரிச்சலுடன் சொன்னான். “அப்ப நான் போறேன்… ஆயுதமில்லாமல் உங்களை எப்டி நம்புறது?” அவன் இமைக்காமல் என்னைப்பார்த்தான். நான் “ஆயுதத்தோடை பேசுவம்… நீங்களும் ஆயுதங்கள் வச்சிருக்கிறியள் தானே?” என்றேன்.
அவன் “அண்ணை விளையாடாதீர்கள்.. ஆயுதத்தை வாங்க மாஸ்டர் சொன்னவர்” என்றான். அவனுக்கு என்னை தெரியும் என்று நான் ஏற்கனவே ஊகித்திருந்தேன். “ஆயுதத்தை குடுக்க முடியாது“ என்று நான் உறுதியாகச் சொன்னபடி எழுந்தேன். அவன் தத்தளித்தபின்னர் சட்டென்று முன்னால் நகர்ந்து என் கைகளைப் பிடித்தான். நான் என் துப்பாக்கியை எடுப்பதற்குள் அதை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டான். மோட்டா இளைஞன் பின்னால் சென்று என் தோள்களைப் பிடிக்க குடிகாரன் உதவிக்கு வந்தான். மூவருமாக என்னை இறுகப்பற்றி நாற்காலியுடன் சேர்த்து அமரச்செய்தார்கள்.
ஒற்றைக்கண்ணன் என் இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்த பின் இடுப்பையும் சட்டைப்பைகளையும் பின்பக்கத்தையும் இரு கால்களையும் கைகளால் மேலோட்டமாக தடவிப்பார்த்தான். துப்பாக்கியை திறந்து ஆறு குண்டுகளையும் கைகளில் கொட்டி அரைக்கணம் பார்த்தான். கொஞ்சம் பெரிய காப்ஸ்யூல் மாத்திரைகள் போலிருந்தன அவை. அவன் அந்த மாத்திரைகளை தன் சட்டைப்பைக்குள் கொட்டிக்கொண்டு துப்பாக்கியை மூடி என்னிடம் நீட்டினான். நான் அதை வாங்காமல் அவனையே கோபத்துடன் பார்த்தேன். “வாங்கிக்குங்க மாஸ்டர்” என்றான் இன்னொரு இளைஞன். நான் பற்களைக் கடித்தபடி அதை வாங்கி என் இடுப்பில் செருகிக் கொண்டேன். அவர்கள் விலகி சுவரோரமாகவும் கதவருகிலும் நின்றார்கள். அறைக்குள் அவர்களின் நிழல்களால் வெளிச்சம் மங்கியது.
சிறி மாஸ்டர் வரும் ஒலியை கேட்டேன். ஐயமில்லாமல் அது அவர்தான் என காலடியோசையிலேயே உணர்ந்தன என் நுண்புலன்கள். வாசலில் வந்து நின்றபடி “வணக்கம் தம்பி” என்றார், அவர் வெளிச்சத்தை மறைத்ததனால் நான் அவரது நிழலுருவையே கண்டேன். “மாஸ்டர் நீங்கள் ஆயுதம் வச்சிருக்கிறியளோ?” என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் உள்ளே வந்து அவர்களைப்பார்த்து லேசாக தலையை அசைத்தார். அவர்கள் மெல்ல வெளியேறினார்கள். மாஸ்டர் கதவைச் சாத்தி உள்ளே தாழிட்டார். அதன் பின் என் எதிரே நாற்காலியில் அமர்ந்தார்.
நான் மெல்ல உடல் தளர்ந்தேன். அந்த நாடகத்தை நானே நம்பி நடித்தமையால் என் உணர்ச்சிகள் எல்லாமே உண்மையாக இருந்தன. நிஜவாழ்க்கையில் எதையுமே நடிக்க முடியாது. நடிக்க நேர்வதை உண்மையென நம்புவதே நடிப்பதற்குச் சிறந்த வழி. மாஸ்டர் என்னிடம் “வீரராகவனுக்கு உன்மேலே சந்தேகம் இருக்கு…” என்றார். நான் தலையசைத்தேன். “பெரிசா இல்லை… கொஞ்சம். அந்த சந்தேகம் தீர்ந்தாச்சுன்னா உன்னை மேலே கொண்டு போவாங்க… அவங்களுக்கு வேற ஆள் இல்லை” அவர் மெல்லிய குரலில் பேசுவது வெளியே கேட்கலாகாது என்பதற்காக. அப்படியானால் அவரது காவலர்களிலேயே அவர் நம்பாத யாரோ இருக்கிறார்கள்.
நான் மெல்ல “அதுக்கு முன்னாடி நம்ம தரப்பு என்னை நம்பணும்” என்றேன். மாஸ்டர் திகைப்புடன் என்னை நிமிர்ந்து பார்த்தார். அவரது கண்களில் மிகக் கொஞ்சம்தான் அந்த திகைப்பு தெரிந்தது, ஊசியால் தொட்டு எடுத்த தங்க பஸ்பம் மாதிரி. ஆனால் அதுவே அவர் உள்ளூர குழம்பிவிட்டார் என்பதைக் காட்டியது. அந்தக்குழப்பத்தில் அவர் மனம் துழாவிக்கொண்டிருக்கும்தோறும் அவர் கவனமற்றவராக ஆவார். அதுவே என் இலக்கு. “என்ன சொல்றே?” என்றார். “ஒண்ணுமில்லை…” என்றேன். “உன்னை யார் நம்பலை?” என்றார் மாஸ்டர். நான் ஒன்றும் சொல்லவில்லை. “வேலைசெய்றவன் குழப்பமா இருக்கக்கூடாது…” என்றபின் மாஸ்டர் “டீ குடிக்கிறியா?” என்றார். நான் “வேண்டாம்” என்றேன். மாஸ்டர் “துப்பாக்கியை வேண்டினதைச் சொல்றியோ? அது இங்கே ஒரு நடைமுறை…”
நான் மெல்ல உடலை இலகுவாக்கினேன். “வீரராகவனுக்கு எவ்வளவு தெரியும்னு ஒண்ணும் தெரியேயில்லை” என்றேன். “அவனுக்கு உங்க பேரு தெரிஞ்சிருக்கு” சிறி மாஸ்டரின் கண்களில் சட்டென்று பாப்பாக்கள் விரிந்தன “எந்த பேரு?” என்றார். நான் அவரை பார்க்காமல் கண்களை கீழ்நோக்கிச் சரித்து “கமலநாதன் எண்டு” என்றேன். சிறி மாஸ்டர் இருந்த நாற்காலி மெல்ல கிரீச்சிட்டது. அவர் அரைநிமிடம் கழித்து “அந்தப்பேரு என்னுடையது எண்டு உனக்கெப்படி தெரியும்?” என்றார். “வீரராகவன் சொன்னவர்” சிறிமாஸ்டர் மோவாயை வருடினார். நெற்றியை நீவி தலைமேல் இழுத்துவிட்டுக்கொண்டு “வீரராகவன் கனக்கப் பேசுவாரோ?” என்றார். “கனக்க எண்டா… பேசுவார்” என்றேன்.
சட்டென்று சிறிமாஸ்டர் தன் இருகைகளையும் மடிமீது வைத்துக்கொண்டார். என் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து “அங்க பெடியங்க எப்டி?” என்றார். “நல்ல பெடியங்கதான்…” நான் புன்னகை செய்து “புளூஃபிலிம் பாக்கினம்” என்றேன். சிறிமாஸ்டரும் புன்னகைசெய்து “இஞ்சையும் எல்லா பெடியங்களும் அதுதான் பாக்கினம்..” என்றார். அவர் கைகளையே என் எல்லா நுண்புலன்களும் கவனித்தன. ஆனால் கண்கள் அவர் கண்களையே பார்த்தன. அவரது கைகள், அவை என்ன நினைக்கின்றன? அவை உறுதியாக தொடை மீது கிடந்தன. தூங்கும் பாம்பு போல. சட்டென்று படமெடுத்து…. “அங்க பெடியங்களுக்கு பணமெண்டு கனக்க குடுக்கினமோ?” என்றார் மாஸ்டர். நான் “பணம் குடுப்பினம் எண்டுதான் நினைக்கிறன். நான் கேக்கிறதில்லை” என்றேன்.
“நான் உனக்கு ஒண்டு காட்டுறன்…” என்றபடி மாஸ்டர் எழுந்தார். “அதிலே ஒருத்தன் உன்னைப்பத்தி என்னெண்டு சொல்றான்னு பாரு” அவர் நாற்காலியிலிருந்து எழுந்து சுவரில் பதிக்கப்பட்டிருந்த சிறிய அலமாரியை நோக்கிச் சென்று அதைத் திறக்கும் சில கணங்களுக்குள் நான் இடக்கையால் என் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து அதே கணம் வலக்கையால் புஜத்தில் ஒட்டியிருந்த கார்ட்ரிட்ஜை பிய்த்து திறந்த துப்பாக்கிக்குள் போட்டு அவரை முதுகில் இதயத்துக்குப் பின்னால் சுட்டேன். ட்ட்டுய்ய் என்று சீறியபடி ஒரு சிறிய புறா கையிலிருந்து எம்ப முனைவது போல துப்பாக்கி அதிர்ந்தது. மாஸ்டர் அதிர்ந்து திரும்பி பின்னால் தள்ளாடி வலக்கையால் அலமாரிக்கதவை பிடித்தபடி கீழே சரிந்தார். மரண அவஸ்தையில் அவரது கால்கள் இழுபட்டு கைகள் விரிந்தபோது அவரது இடதுகையில் ஒரு பாயின்ட் 22 சிறுதுப்பாக்கி இருந்தது.
என்னுடைய குண்டு சரியாக அவரது இதயத்தை துளைத்து சுவரில் பட்டு சுவரும் பெயர்ந்திருந்தது. சுவர் காரைபெயர்ந்து உள்ளே இருந்த சுடாத செங்கல்லால் ஆன சுவரின் செம்மண்ணைக் காட்டியது. தரையின் பழுதடைந்த சிமிண்ட் பரப்பில் ரத்தம் சிவப்புப் பாலிதீன் தாள் போல பரவியது. சிறி மாஸ்டரின் வலதுகாலின் கட்டை விரல் மட்டும் ஏதோ நூலில் மாட்டிக்கொண்டு இழுபடுவது விரைத்து போல அதிர்ந்தது. ஒருகண் மூடியிருக்க இன்னொரு கண் பாதி திறந்து உள்ளே இருந்த வெள்ளையைக் காட்டியது. பெருமூச்சுடன் நான் மூடிய கதவைப் பார்த்தேன். யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. மெல்லக் குனிந்து அவரது உடலை துழாவினேன். சட்டைப்பைகளை பார்த்தேன். கொஞ்சம் ரூபாய், வில்ஸ் ஃபில்டர் சிகரெட் ஒரு பாக்கெட். ஒரு சாவிக்கொத்து. ஒரு சிறிய பாக்கெட்…
நான் அதை கையில் எடுத்துப்பார்த்தேன். ஒரு கோகினூர் ஆணுறை. அது ஆச்சரியமாக இருந்தது. மலக்குடலுக்குள் எதையாவது வைத்திருக்கிறாரா? அதை என் சட்டைக்குள் போட்டுக்கொண்டேன். அவரது செல்போனை தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. சட்டென்று ஓர் எண்ணம் வந்து அவரது உள்ஜட்டிக்குள் பை இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தது, அதற்குள் நான் வைத்திருந்தது போலவே மெல்லிய சிறிய செல்போன் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தேன். கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘Talk’ என்ற ஒரே சொல். வேறெந்த பதிவும் இல்லை. அதை என் கைரேகைகள் இல்லாமல் சட்டையிலேயே நன்றாகத்துடைத்துவிட்டு திரும்ப வைத்துவிட்டேன்.
மாஸ்டரின் குருதி பெரிய பூ இதழ்விரிவது போல விரிந்தது. அதன் விளிம்புகள் தரையின் தூசியைப் பற்றிக்கொண்டு சுருண்டு வளைந்து முன்னால் நகர்ந்தன. அது நகர்வதன் பொருபொரு ஒலியைக்கூட கேட்கமுடியுமென ஒரு மனப்பிரமை ஏற்பட்டது. ஒரு நிமிடம் நான் அந்த ரத்தப்பரவலையே பார்த்துக் கொண்டிருந்தேன். மு.தளையசிங்கம் எழுதிய ‘ரத்தம்’ என்ற கதை நினைவுக்கு வந்தது. அதுவே உயிருள்ள ஒரு இருப்பு போல கைகால்கள் இல்லாமலேயே தரையை அள்ளி தன்னுள் சுருட்டிக்கொண்டு நகர்ந்தது. அந்த வசீகரமான செந்நிறம். ஒருவகையான பிளாஸ்டிக் பளபளப்பு. சட்டென்று என் மனம் விழித்துக்கொண்டது. குருதி வீச்சம் அவர்களுக்கு உடனே தெரிந்துவிடும். அதை நன்கறிந்தவர்களாகவே இருப்பார்கள்.
நான் பின்பக்கம் வெளியேற வழி இருக்கிறதா என்று பார்த்தேன். அந்தக்கூடத்தை ஒட்டி ஒரு அறை, ஒரு கழிப்பறை. கழிப்பறையின் சாளரம் உயரமானதாகவும் சிறிதாகவும் இருந்தது. அறைக்கு சன்னலே இல்லை. அதற்குள் கொடியில் ஏழுட்டு சாரன்கள், சுவர்மூலையில் சாய்த்துவைக்கப்பட்ட கோரைப்பாய்கள், சில டிரங்குபெட்டிகள். வேறு வழியே இல்லை. நான் சிறி மாஸ்டரின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கதவைத்திறந்தேன். திறந்த கணமே வெளியே பாய்ந்து படிகளின் நடுவில் குனிந்து நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஒற்றைக்கண்ணனை அவன் திகைத்துமேலே பார்த்தபார்வையுடன் சேர்த்து தோளில் சுட்டு வீழ்த்தினேன். படியில் அமர்ந்திருந்த இன்னொரு குண்டன் எழுது படபடப்பாக குறியே வைக்காமல் சுட ஆரம்பித்தான். என்னைத்தாண்டி விஷ் விஷ் என்று குண்டுகள் சென்ற ஒலியில் நான் என்றோ மறந்த அந்த ஆதிக்குதூகலம் மீண்டு வந்தது. என் கண்கள் காதுகள் மூக்கு என் உடலின் ஒவ்வொரு செல்லும் உயிர்த்துடிப்புடன் இருந்தன. என் மூளை நூறு மூளைகளின் கூர்மை கொண்டிருந்தது.
அவன் என்னிடமிருந்து தப்ப படிகளின் நுழைவாயிலுக்கு அப்பால் சென்று பக்கவாட்டில் நகர்ந்து சுவருக்குள் ஒண்டிக்கொண்டு சுட்டான். நான் திகைத்து செயலற்று நின்றிருந்த அந்த குடிகாரனை நெற்றிப்பொட்டில் சுட்டு அவன் முன் வீழ்த்தினேன். கண்முன் ஒருவன் சடலமாக விழுவதென்பது பெரும்பாலானவர்களை சில நிமிடங்கள் செயலிழக்கச் செய்துவிடும். அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு நான் நேராக அதே திசைக்கு ஓடி சடலத்தை மிதித்து வெளியே பாய்ந்தேன். அதற்குள் தெருவெங்கும் பலர் திகைப்பும் ஆர்வமுமாக வேடிக்கை பார்த்தார்கள். குண்டன் திரும்பி என்னை நோக்கி சுட்டான். குண்டு எதிர்கட்டிடத்தின் கூரையின் ஓடுகளை சிதறடித்தது. நான் அவனை வயிற்றில் சுட்டு மடங்கி விழச்செய்தேன். தெருவில் பாய்ந்து வேடிக்கை பார்த்தவவர்களை தோளால் இடித்து தள்ளிவிட்டு ஓடினேன்.
தெருவெங்கும் முகங்கள். கடைகளில் இருந்துகூட பரபரப்புடன் எட்டிப்பார்த்தார்கள். ஆட்டோக்கள் நின்று தயங்க உள்ளிருந்து தலைகள் நீண்டன. கையில் ஒயர்கூடையுடன் ஒரு தடித்த அம்மாள் இடுப்பில் இருந்த குழந்தை பெரிய கண்களுடன் விழித்துப்பார்க்க தெருநடுவே நின்றிருந்தாள். அந்த மக்கள் எவருக்கும் துப்பாக்கியால் சுடுவதென்பதன் தீவிரம் புரியவில்லை. ஒரு கத்தி அவர்களை அஞ்ச வைக்குமளவுக்கு துப்பாக்கி அஞ்ச வைக்கவில்லை. அவர்கள் என்ன நடக்கிறதென்றே புரிந்துகொள்ளவில்லை என்று பட்டது. யாரோ ஏதோ செய்துவிட்டு ஓடுகிறார்கள் பட்டாசு போல சத்தம் கேட்கிறது அவ்வளவுதான் அவர்களுக்குப் புரிந்திருக்கும். நான் பக்கவாட்டில் ஒரு சந்தில் திரும்பி இரு முறை மீண்டும் திரும்பி சாலைக்கு வந்தேன். அவ்வழியாகச் சென்ற ஓர் ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டேன்.
[மேலும்]