நான் அலுவலகத்தில் இரும்பு நாற்காலியில் அமர்ந்து விகடன் வாசித்துக்கொண்டிருந்தேன். பையன்கள் இருவர் உளவுக்குப் போயிருந்தார்கள். ஒருவன் மட்டும் உள்ளறைக்குள் தூங்கிக்கொண்டிருந்தான். மற்றவர்கள் வழக்கம்போல வெளியே சுற்றச் சென்றிருந்தார்கள். விகடனின் எல்லா பக்கங்களையும் வாசித்து முடித்ததும் நான் சோம்பலுடன் எழுந்து கைகால்களை நெட்டி முறித்தேன். மணி இரவு பன்னிரண்டு தாண்டியிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பையன்கள் இரண்டாவது ஆட்டம் முடித்து வந்துவிடுவார்கள். சலிப்பாக இருந்தது, அத்துடன் நான் என் ரகசிய செல்போனைப் பார்க்க விரும்பினேன். எழுந்து சென்று கழிப்பறைக்குச் சென்று தகரக்கதவை மூடிக்கொண்டேன். உள்ளிருந்து உறையை எடுத்து செல்போனை எடுத்துப்பார்த்தேன். அதில் எந்தச்செய்தியும் இல்லை.
அதை சார்ஜ் போட்டு கழிப்பறை சோப்பு பரண்மேல் வைத்தேன், அருகிலேயே இங்கே உள்ள செல்போனையும் வைத்தேன். மலம் கழித்துக்கொண்டிருக்கும்போது செல் மெல்ல அதிரும் ஒலி கேட்டது. அரைக்கணம் என் மேலிட அழைப்பு என்று எண்ணி என் அகம் பதற்றம் கொண்டது. ஆனால் இங்கே உள்ள செல்தான் அழைத்தது. எடுத்து செய்தியைப் பார்த்தேன். ஜோர்ஜ் கொல்லப்பட்டுவிட்டான். மீண்டும் ரகசிய செல்லை உள்ளே வைத்து விட்டு வெளியே வந்து ஸ்டவ்வை பற்றவைத்தேன். தமிழ்நாட்டில் பாலில்லாத டீ போட எவருக்குமே தெரியாது, ஆகவே சூசைமாஸ்டர் அவரே போட்டுக்கொள்வார். அந்த ஸ்டவ்வை அவர் போனபின் நான் பயன்படுத்தினேன்.
டீ டம்ளருடன் வந்து அமர்ந்து அந்த விகடனையே மீண்டும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். சலிப்புடன் தூக்கிப்போட்டுக்கொண்டு கைகளைக் கட்டிக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தேன். தெருவில் ஒரு நாய் நடந்து போயிற்று. தூரத்தில் ஏதோ கடையில் சினிமாப்பாட்டு ஒன்று ஒலிக்க ஒரு ஆட்டோ அதிக ஓசையுடன் கடந்து சென்றது. அலுவலகத்தின் கடிகாரம் டிக் டிக் டிக் என்று ஓடிக்கொண்டிருக்க பக்கத்து வீட்டில் யாரோ பாத்ரூம்போனபின் நீரை வேகமாக கொட்டினார்கள். கமறும் ஒலியும் தகரடப்பா விழும் ஒலியும் கேட்டது. இங்கே அமைதியான இரவென்பதே இல்லை.
பைக் வந்து நிற்க அதிலிருந்து அலெக்ஸ் இறங்கி பரபரப்பாக உள்ளே வந்தான். நான் ஏறிட்டுப்பார்த்ததும் “ஜோர்ஜை போட்டுட்டாங்க மாஸ்டர்” என்றான். நான் மேலே சொல்லு என்பதுபோலப் பார்த்தேன். அவனுக்குக் கொஞ்சம் மூச்சிரைத்தது. இந்த மண்ணில் கொலைகள் மிகவும் அபூர்வம் என்று எண்ணிக்கொண்டேன், ஒருவேளை இது இவன் பார்த்த முதல்கொலையாக இருக்கலாம். அலெக்ஸ் உள்ளே போய் கூஜாவில் இருந்து தண்ணீரைக் குடித்துக்கொண்டு பெஞ்சில் அமர்ந்து சட்டையை பித்தான் கழற்றி மேலேற்றிவிட்டுக்கொண்டான். “சொல்லு” என்றேன். “கொன்னவன் அவங்கட ஆளு மாஸ்டர்… நம்ம ஊருதான்… அவனை இவன் நேராபோயி தோளிலே பிடிச்சு கூப்பிட்டவன்” என்று அலெக்ஸ் சொல்ல ஆரம்பித்தான்.
அலெக்ஸ் ஒரு டீக்கடைமுன்னால் நின்றிருந்தபோது அதைப்பார்த்தான். அந்த ஆள் சாலைதிரும்பி வந்துகொண்டிருந்தபோது ஜோர்ஜ் வேகமாக பின்னால் வந்தான். அவன் சுதாரிப்பதற்குள் ஜோர்ஜ் அவன் தோளில் கையை வைத்து குனிந்து எதையோ சொன்னான். அவன் இவனது கையை எடுத்துவிட்டு கடுமையாக ஒரு வார்த்தை பேசி விலக முயல ஜோர்ஜ் தன் பாண்ட் பைக்குள் கையை விட்டான். அந்தக்கணமே அவன் தன் கத்தியை எடுத்து அதே வேகத்தில் ஜோர்ஜின் இதயத்தில் குத்திவிட்டான். இரு விலா எலும்புகள் நடுவே கத்தி கச்சிதமாக சென்றிருந்தது. ஜோர்ஜ் திகைத்துப்போய் கைநீட்டியபடி ஏதோ குழறி சாலையில் பக்கவாட்டில் விழுந்து பரபரவென்று கைகால்களை உதறிக்கொண்டு துடித்து சிலநிமிடங்களில் இழுத்து இழுத்து அடங்கினான்.
அப்போது சாலையில் பத்துப்பதினைந்து பேர் இருந்தார்கள். அத்தனைபேரும் பலதிசைகளிலாகக் கூச்சலிட்டபடி கலைந்தோட உடனடியாக சாலையே காலியாகியது. திறந்திருந்த எல்லா கடைகளும் சரசடவென்று மூடப்பட்டன. குத்தியவன் கத்தியுடன் நின்று தெருவை சுற்றி கண்ணோட்டி பார்த்துவிட்டு கத்தியை ஒரு கைக்குட்டையில் சுற்றி பாண்ட் பைக்குள் போட்டுவிட்டு நிதானமான வேகத்தில் நடந்து பக்கவாட்டின் சிறிய சந்துக்குள் நுழைந்து மறைந்தான். சாலையில் ஜோர்ஜ் துடித்த துடிப்பில் குப்புறக் கவிழ்ந்து கிடந்தான். தார்ப்பரப்பில் ரத்தம் வழிந்தோடியது. “சர்ரியான குத்து மாஸ்டர்… அவன் நல்ல டிரெயினிங் எடுத்திருக்கிறன்.”
நான் “உன்னை அவன் பார்த்தானா?” என்றேன். “பார்த்திருக்க சான்ஸ் இல்லை… நான் பாய்லருக்குப் பின்னாலே நிண்டேன்” என்றான் அலெக்ஸ். கண்டிப்பாக அவன் பார்த்திருப்பான் என்று எனக்குத் தெரியும். “சரி, நல்ல விஷயம்… பாப்பம்…” என்றேன். “இந்த விசரன் எதுக்கு அவனைபோயி பிடிச்சவன்..? அவன் கத்தி வச்சிருப்பான் எண்டு தெரியாதோ?” அலெக்ஸ் மேலும் பேச விரும்பினான். நான் “பெடியனுங்க வந்ததும் மேலே வரச்சொல்லு… ஜோர்ஜு நம்மாளுன்னு அவனுக்கு தெரியுமாண்ணு பாக்கணும்” என்ற பின் மாடிக்குச் சென்றேன். பாயை விரித்து படுத்துக்கொண்டு ஓட்டுக்கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் யாரோ நன்றாகக் குறட்டைவிடும் ஒலி. அதையே கேட்டுக்கொண்டிருந்துவிட்டு சில கணங்களில் நன்றாகவே தூங்கிவிட்டேன்.
பையன்கள் வந்ததும் அந்த ஒலிகேட்டு எழுந்துகொண்டேன். அவர்கள் அறைவாசலில் கூடி நின்றார்கள். நான் பாயிலேயே அமர்ந்துகொண்டு ஒரு பீடி பற்ற வைத்தேன். மெதுவாக புகைவிட்டபின் “தற்செயலாத்தான் நடந்திருக்கு என்ன?” என்றேன். அலெக்ஸ் “இந்த விசரன்…” என்று ஆரம்பிக்க நான் ஏறிட்டுப்பார்த்ததும் அவன் அடங்கினான். மற்றவர்கள் நான் பேசட்டும் என்று காத்திருந்தார்கள். நான் இன்னும் இருமுறை புகை இழுத்தபிறகு “நாம அவங்களிலே ஒருத்தனையாவது போடணும்… அப்டி விட்டிரக்கூடாதே…” என்றேன். பையன்களில் ஒரு திணறல் ஏற்படுவதை உணர முடிந்தது. “இல்லேன்னா சுளுவா கைய வைக்க ஆரம்பிச்சிருவானுங்க… கைய வச்சா நாமளும் அடிப்போம்னுதான் எப்பவுமே இருக்கணும்…” என்றேன். “சரி மாஸ்டர்” என்றான் தில்லை. “உக்காருங்க” என்றேன். தயக்கமாக ஆங்காங்கே அமர்ந்தார்கள்.
நான் என் திட்டத்தை விளக்கினேன். சாலைகளில் சந்திக்கக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் மூன்றுபேர். அவர்களின் படங்களைக் காட்டினேன். என் செல்போன் அவர்களிடம் சுழன்று வந்தது. “முகத்தைப் பாத்துக்கங்க… போலீஸ் ஒண்ணும் பயமில்லை. நம்மாளுங்கதான். மூணுபேரையுமே ஃபாலோ பண்ணுங்க. யாரு வாய்க்கிறானோ அவனை போட்டுருங்க…” அவர்களை நான் மூன்று குழுக்களாக பிரித்தேன். அவர்கள் சேர்ந்து செயல்படுவதற்கான திட்டங்களை விளக்கினேன். அவர்கள் ஒரு சொல் பேசாமல் கேட்டுக்கொண்டார்கள். ஆரம்பத்தில் இருந்த அச்சம் விலகி ஒரு தீவிரமான நடவடிக்கை கொடுக்கும் கிளர்ச்சியை அவர்கள் அடைவதைக் கவனித்தேன். என்ன இருந்தாலும் இளைஞர்கள். நான் பேசப்பேச அவர்கள் அந்த காட்சியை மனக்கண்ணில் காண ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் வேட்டைநாய்களின் கண்கள் அவர்களுக்கு வந்துவிட்டிருந்தன. “சரி, மணி ரெண்டாச்சு… ஒரு மூணுமணித்தியாலம் தூங்கிட்டு கெளம்புங்க…” என்றேன். அவர்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்தபின் நான் படுத்துக்கொண்டேன்.
தூங்கி எழுந்தபோது மதியமாகியிருந்தது. எழுந்து பல்தேய்த்துக் குளித்துவிட்டு ஆறடுக்கு கேரியரில் காத்திருந்த மீன்குழம்பு சாப்பாட்டை சாப்பிட்டேன். புதிய வார இதழ்கள் அனைத்தையும் வாசித்தேன். மாலையில் மார்க்கு வந்து பையன்கள் பின்தொடர்வதாகவும் அவர்கள் மிகவும் கவனமாக இருவர் மூவராகவே வெளியே நடமாடுவதாகவும் சொன்னான். நான் மாலையில் கிளம்பி ஒரு சினிமாவுக்குப் போனேன். இப்போது சினிமாவை என்னால் கடைசிவரைக்கும் பார்க்க முடிந்தது. ஒரு அடிதடிப்படம். வானத்தில் பறந்து பறந்து சண்டை போட்டார்கள். சண்டைக்கு முன்னால் சொடக்கு போட்டு வசனம் பேசினார்கள். டேய் ஏய் என்றெல்லாம் கத்தினார்கள். கதாநாயகன் ஒல்லியாக ஒரு பையன்… அவன் பேரென்ன என்று கேட்டால் ஜோர்ஜ் அவன் சரித்திரத்தையே சொல்லியிருப்பான்.
இரவு திரும்பி வந்து நெடுநேரம் வானொலியில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு விடியும்போதுதான் தூங்கினேன். அன்றும் பன்னிரண்டு மணிக்கு எழுந்து மதிய உணவையே சாப்பிட்டேன். நாளிதழ்களையும் வார இதழ்களையும் வாசித்தேன். அன்றும் ஒரு சினிமாவுக்குச் சென்றேன். அந்த நகரத்தில் நான்கு சினிமாக்கொட்டகைகள்தான். ஒன்றில் ஆங்கிலப்படம் போட்டிருந்தார்கள். பிரம்மாண்டமான ஒரு பாம்பு. பொம்மை என்று நன்றாகவே தெரிந்தது. அது மனிதர்களை மொத்தமாக விழுங்கிவிட்டு அப்படியே திரும்பக் கக்கியது. அதை இயந்திரத்துப்பாக்கிகளால் சடசடவென்று சுட்டார்கள். அலறினார்கள். காட்டுக்குள் ஓடினார்கள். அது எதிர்பாராத இடங்களில் தோன்றி தாக்கியது. மனிதர்களுக்குப் போராடுவதற்கு விதவிதமான எதிரிகள் தேவைப்படுகிறார்கள்.
பத்துநாள் ஒன்றுமே நடக்கவில்லை. என்னுடைய அன்றாடச்செயல்பாடுகள் ஒரேபோல ஆயின. அந்த ஒல்லிப்பையனின் சினிமாவையே நான் மூன்றாம் முறையும் பார்க்க நேர்ந்தது. பையன்கள் என்னை ஏமாற்றுகிறார்களா இல்லை அச்சப்படுகிறார்களா என்று சந்தேகப்பட்டேன். ஆனால் அவர்களின் தீவிரம் உண்மையானது என என் ஆழ்மனம் அறிந்திருந்தது. பத்தாம்நாள் காலையில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது மார்க்கு வந்து என்னை எழுப்பினான். “மாஸ்டர்… மாஸ்டர்” என்றான். நான் எழுந்து கைலியை நன்றாகச் சுற்றிக்கொண்டு பாயிலேயே அமர்ந்து கொண்டு வாயைத்துடைத்தேன். “மாஸ்டர்… ஒருத்தனை போட்டுட்டோம்” நான் “எப்ப?” என்றேன். “கொஞ்சநேரம் முன்னாடி… எட்டரை மணிக்கு” என்றான் மார்க்கு. “ம்ம்” என்றேன். எழுந்து மோர்க்குபல் முறித்தபின் “நம்ம பெடியன்களை எல்லாம் ஆபீஸ¤க்கு வந்துடச்சொல்லு… யாரும் நான் சொல்லாம எங்கியும் போகக்கூடாது” என்றேன்.
ஒருமணிநேரத்தில் எல்லா பையன்களும் வந்து விட்டார்கள். முயல்மணம் கிடைத்து கிளர்ச்சியடைந்த வேட்டைநாய்களைப்போல ததும்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எவருமே பேசவில்லை. ரஹீம் கடையில் இருந்து பிரியாணி வந்திருந்தது. பிளாஸ்டிக் தட்டுகளில் வைத்துக்கொண்டு சாப்பிட்டார்கள். நான் நாற்காலியில் அமர்ந்து நாளிதழ்களை மீண்டும் வாசித்தேன். “நான் மேலே சொல்லுறது வரை வெளியே போக வேண்டாம்… என்ன ஏதுன்னு பாத்திருவோம்” என்றேன். “சரி மாஸ்டர்” என்றான் அலெக்ஸ். நான் அன்று வெளியே கிளம்பவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னால் அறைக்குள் இருக்க முடியவில்லை. மேலும் நான் கிளம்பினால் பையன்கள் புளூஃபிலிம் பார்ப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களின் இப்போதைய கிளர்ச்சியை வெல்ல அவர்களுக்கு அதுதான் தேவை.
எல்லா படங்களையும் பார்த்துவிட்டிருந்தேன். பகலில் நகரம் அதீதமான வெளிச்சத்தால் மூடப்பட்டிருந்தது. வெயிலில் தூசியும் புகையும் கலந்து பார்வையை திரையிட்டன. இரும்புக்கடைகள் இருந்த தெருவழியாகச் சென்றேன். திடீரென்று ஓர் எண்ணம் ஏற்பட்டு ஆட்டோ ஒன்றை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டு ஜோர்ஜின் வீட்டுக்குச் சென்றேன். மதியவெயிலில் அந்தப்பகுதியே வெந்த தூசியும் சாக்கடை ஆவியும் கலந்த வாசனையுடன் தூங்கிக்கொண்டிருந்தது. சாலையில் எவருமே இல்லை. வீட்டைக் கண்டுபிடித்து ஆட்டோவை அனுப்பிய பின் அரைநிமிடம் தயங்கினேன். பின்பு சிறிய இரும்பு கேட்டை திறந்து குழாய் இருந்த பள்ளத்தை தாண்டி படிகளில் ஏறி வீட்டு முன் நின்றேன். கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது.
நான் சில நிமிடங்கள் அங்கேயே நின்றேன். உள்ளே ஏதோ பேச்சுக்குரல் கேட்பது போல் இருந்தது. தீர்மானித்துவிட்டு கதவை மெல்ல தட்டினேன். உள்ளே மேலும் ஒலிகள், சற்று அவசரமான பேச்சொலிகள். கதவைத் திறந்த ரெஜினா என்னைப் பார்த்ததும் ஒருகணம் பிரமித்தபின் நிலைமீண்டு “உள்ள வாங்க” என்றாள். நான் உள்ளே சென்றேன். ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்டிருந்ததனால் அறைக்குள் சூடான காற்று நிறைந்திருந்தது. ரெஜினா ஜன்னல்களை திறந்தாள். “தூங்கிட்டிருந்தியோ?” என்றேன். “ம்ம்” என்று புன்னகை செய்தபடி அவள் சுவர் சாய்ந்து நின்றாள். “பிள்ளை எங்க?” “தூங்குறவள்” என்றாள். அவள் கன்னங்களில் ஒரு குழி விழுவதை கவனித்தேன். கனமான மார்புகள் நைட்டிக்குள் அசைந்தன.
உள்ளறையில் இருந்து வீரராகவன் வெளியே வந்தார். “என்ன சார்லஸ்…?” என்றபின் இரும்பு நாற்காலியில் வந்து அமர்ந்துகொண்டார். நான் “நியூஸ் அனுப்பினேனே…” என்றேன். “ஆமா… பாத்தேன். அதைச் சொல்லிட்டுப்போகலாம்னுதான் வந்தேன்” என்றார். “ஆமா, நாம அப்டி விடக்கூடாதுல்ல?” என்று நான் ரெஜினாவைப் பார்த்துச் சொன்னேன். அவள் பேசாமல் நின்றாள். “அப்றம்?” என்றார் வீரராகவன். “நீங்கதான் சொல்லணும்… பெடியங்கள ஆபீஸ விட்டு போகப்படாதுன்னு சொல்லியிருக்கு…” வீரராகவன் “ஒரு டீய போடுடி” என்றார் ரெஜினாவிடம். ரெஜினா என்னிடம் “மாஸ்டருக்கு டீ வேணுமா?” என்றாள். நான் “ம்ம்” என்றேன்.
ரெஜினா இரு டம்ளர்களில் டீ கொண்டு வந்து வைப்பதற்கு டீபாய் இல்லாததனால் இன்னொரு நாற்காலியில் வைத்தாள். நான் டீயைக்குடித்தபடி வீரராகவனைப் பார்த்தேன். அவர் டீயை குடித்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு சட்டென்று எழுந்து “அப்ப சரி, எனக்கு ஒரு வேலை இருக்கு. நான் பேசறேன்” என்றபின் ரெஜினாவிடம் திரும்பி “பாத்துக்கலாம்… ஒண்ணும் கவலைப்படாதே” என்றார். அவள் அதற்கும் அந்த காலியான முகபாவனையைக் காட்டினாள். வீரராகவன் கிளம்பி வெளியே சென்று செருப்பைப் போட்டுக்கொண்டு படிகளில் இறங்கினார். இவர் எப்படி வந்தார் என்று நான் நினைத்தேன். அதற்குள் வெள்ளை வேன் வந்து அவர் அருகே நிற்க அதில் அவர் ஏறிக்கொண்டார். தெருவில் அந்த சினிமாவின் பத்தாவது நாள் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஒல்லிப்பையன் நடித்தபடம்.
ரெஜினா என் முன்னால் நாற்காலியில் வந்து அமர்ந்துகொண்டாள் “வீரராகவன் பணம் குடுத்தாரா?” என்றேன். “ம்ம்” என்றாள். அவள் கண்கள் என் கண்களை தயக்கமில்லாமல் சந்தித்தன. அவள் சற்றே முன்னகர்ந்து அமர்ந்தபோது மார்பின் பிளவு தெரிந்தது. நான் அவளது அந்த அப்பட்டத்தை உள்வாங்கமுடியாதவனாக அமர்ந்திருந்தேன். அவள் மெல்லிய குரலில் “சாப்பிடுறியளோ?” என்றாள். நான் திடுக்கிட்டு “இல்ல, கெளம்பறேன்” என்றேன். அவள் சரசமாகப் புன்னகை செய்து “இருங்க, போயி அங்க என்ன செய்யப்போறீங்க?” என்றாள். நான் அவளையே பார்த்தேன். என் கண்கள் அவள் மார்பிடுக்கைப் பார்த்தபோது அவள் கையை தூக்கி முடியை கோத மார்புகள் மெல்ல அசைந்தன.
நான் சட்டென்று எழுந்துவிட்டேன். நேராக வாசலை நோக்கிச் செல்ல எண்ணி ஆனால் அந்த எண்ணம் உடலுக்கு வராமல் நின்றேன். அவள் சாதாரணமாக எழுந்து “போலீஸ்காரரு இனிமே வரமாட்டார்” என்றாள். அதற்குள் உள்ளே அவள் குழந்தை சிணுங்க ஆரம்பித்தது “ஓ ஓ ஓ“ என்றாள் ரெஜினா. அது வீரிட்டு தொட்டில் மணிகள் அசைய கால்களை உதைக்க ஆரம்பித்ததும் உள்ளே போய் அதை தூக்கி “ஜோ ஜோ ஜோ“ என்றபடி அசைத்துக்கொண்டு மார்போடணைத்து முத்தமிட்டாள். அதன் தலைமுடி இன்னும் அடர்த்தியாகவும் சுருளாகவும் இருப்பது போல தோன்றியது. ஜோர்ஜின் தலைமுடிதான் அப்படி நுரை போல இருக்கும். குழந்தை அவள் தோளில் முகத்தை புதைத்துக்கொண்டு கண்ணீர் துளி இருந்த இமைகளுடன் என்னை உற்று பார்த்தது.
நான் மெல்ல முன்னால் சென்று குழந்தையை நோக்கி கைநீட்டினேன். சட்டென்று ரெஜினா காட்டு மிருகங்கள் சீறித்திரும்புவது போல ”ம்ம்…” என்று உறுமியபடி குழந்தையை விலக்கி என்னை பார்த்தாள். அந்த கண்களில் இருந்த உக்கிரத்தால் நான் நீட்டிய கைகளுடன் அப்படியே நின்றேன். அவள் குழந்தையுடன் சுவர் ஓரமாக நகர்ந்து நின்று மூச்சிரைத்தாள். நான் அவளையே பார்த்தேன். அவள் முகமும் கழுத்தும் வியர்த்து பளபளவென்றாயின. அப்போது அவள் உண்மையிலேயே கவர்ச்சியான பெண்ணாகத்தோன்றினாள். முதல்முறையாக அவள் மேல் தாளமுடியாத காம எழுச்சி எனக்கு ஏற்பட்டது. ஆனால் நான் சட்டென்று திரும்பி கதவை நோக்கி நடந்து தாழை திறந்து வெளியே இறங்கினேன்.
வெளியே வெயில் விரிந்த தெருவில் ஒரு ஆட்டோ ஆபாசமான மஞ்சள் ஒளியுடன் சென்றது. அதன் ஒலி என் மண்டையை அறைந்தது. எனக்கு அப்போது தெருவில் ஓடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எல்லாம் சாலைக்கு வரும் வரைதான். தார்ச்சாலையில் நின்று கொண்டு சுற்றிலும் பார்த்தபோது சட்டென்று நான் ஒரு மெல்லிய வலியை உணர்ந்தேன். என் எலும்புக்குள் அந்த உலோகத்தில். நான் இறுக்கமாக உடலை வைத்திருந்திருக்க வேண்டும். நேராக அருகே இருந்த பெட்டிக்கடைக்குச் சென்று ஒரு கட்டு செய்யது பீடி வாங்கினேன். அங்கேயே உரித்து திறந்து பற்றவைத்து இருமுறை இழுத்தபோது என் முகம் மெல்லமெல்ல தளர்ந்தது. நான் இலகுவானேன்.
அப்போது ஓர் எண்ணம் வந்தது. அந்நேரத்தில் ரெஜினா அறைக்கதவை மூடிக்கொண்டு அந்தக்குழந்தையை அணைத்தபடி தேம்பி அழுதுகொண்டிருக்கக் கூடும் என்று. அந்த எண்ணம் என்னை மேலும் இலகுவாக ஆக்கியது. புன்னகையுடன் பீடியை இழுத்துக்கொண்டு எதிர்திசை நோக்கி நடந்தேன்.
[மேலும்]