உலோகம் – 5

நான் அந்தக்குழுவிற்கு தலைமை ஏற்று கிட்டத்தட்ட மூன்றுமாதம் கழித்து அந்த அதிகாரியை நான் சந்தித்தேன். ஒருநாள் காலையில் வழக்கமான செல்போனில் வந்த ஆணை என்னை மட்டும் பக்கத்து நகரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றின் வாசலில் நிற்கச் சொன்னது. நான் கையில் ஒரு மஞ்சள்பையும் குடையுமாக சாதாரணமான தோற்றத்தில் நின்றிருந்தேன். இந்தகாலகட்டத்திற்குள் என்னுடைய இலங்கை உச்சரிப்பை முற்றாக அழித்துக்கோண்டிருந்தேன். சில குறிப்பிட்ட சொற்களை மட்டும் முதலில் பழகிக்கொண்டால் இலங்கை வாசனை மறைந்துவிடுகிறது. ஆறேன் போறேன் என்பது போல. மெல்லமெல்ல அச்சொற்களை அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டியதுதான். என்னை எவரும் பொதுக்கும்பலில் இருந்து பிரித்தறிய முடியாது. ஏனென்றால் நான் மானசீகமாக அவர்களில் ஒருவராக ஆகிவிட்டிருந்தேன்.

வெளியே செல்வதென்றால் தனியாக கோயிலுக்குச் சென்று எங்காவது அமர்ந்துகொண்டு அங்கே வருபவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னால் மனிதர்களை எத்தனை நேரம் வேண்டுமானாலும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். மனிதர்கள் நெரிசலிட்டு பிதுங்கும் இடங்களில்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடிந்தது. கூச்சல்கள், தூசு, வாகனச்சத்தங்கள் நடுவே நிற்கும்போது என்மனம் சமநிலை கொண்டிருக்கும்.  எங்கானாலும் தனிமையில் அமரும்போது என் சிந்தனையானது படகின் காந்தமுள் அலைபாய்வது போலிருக்கும். நான் தனிமையில் அமர்ந்திருப்பதை தூரத்தில் இருந்து எவரேனும் பார்த்தால் ஆழமான மனக்கவலையில் அல்லது உடல்வலியில் தொய்ந்துபோய் ஒருவன் அமர்ந்திருப்பதுபோலத் தோன்றக்கூடும்.

மனச்சிக்கல் கொண்டவர்களுக்குத்தான் தனிமையில் இருக்கும்போது நிலைகொள்ளாமை இருக்கும் என்றும் கூட்டத்தை விரும்புவார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு மனச்சிக்கல் ஏதும் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டேன். சில தருணங்களிலேனும் எனக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு ஏற்படும். என் மனம் சீராகத்தான் இருந்தது. என்னை மீறி என்னிடம் எந்த உணர்ச்சிகளும் இல்லை. ஆனால் சட்டென்று என் காதுகளுக்குள் ஒரு பலத்த ’கிராக்’ ஒலி கேட்டு உடம்பு விதிர்விதிர்க்கும். சிலசமயம் புருவத்தில் ஒரு ஒளிப்பொட்டு வெடித்து சிவப்பு சிதறல்களாக கண்களுக்குள் பரவி மறையும். அது நரம்புப்பதற்றத்தின் அறிகுறி என்றும், மனப்பிறழ்வின் தொடக்கம் என்பதே இல்லாத ஒலிகளும் ஒளிகளும் தெரிவதுதான் என்றும் வாசித்தேன். ஆனால் அதைவிட கடினமானவை நினைவுகள். தூக்கப்படுக்கையில் மனம் மயங்கி வரும்போது எறும்புகள்போல சத்தமில்லாமல் வந்து பிரக்ஞையை மொய்ப்பவை அவை.

தலைக்குள் இந்தப்போராளி வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒன்று என்னவென்றால் பழைய நினைவுகளை தேவையற்றபோது வெட்டிவிடுவதுதான். விழித்திருக்கும்போது நினைவுகளை தவிர்ப்பது மிக எளிமையானது. நினைவுகளை வெட்டிவிட ஏதேனும் ஒரு உடலசைவை பழகிக்கொண்டால்போதும். இல்லை என்பது போல நான் தலையை அசைப்பேன். அப்படி அசைத்தால் நினைவுகளை அறுக்கிறேன் என நான் எனக்கே பழக்கி கொண்டிருந்தேன். அவை அறுபட்டுவிடும். இதோ நான் இருக்கிறேன், இங்கே இப்போது இருக்கிறேன், எத்தனையோபேர் இறந்து மறக்கப்பட்டார்கள், நான் இருக்கிறேன், இன்னும் சாகாமலிருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வேன். அதுவே மனதை நிகழ்காலத்தில் நிறுத்தும் மந்திரம்.

இந்த வாழ்க்கையில் இறந்த ஒவ்வொருவரும் நாம் உயிருடனிருப்பதன் முக்கியத்துவத்தை அதிகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். இன்னும் எனக்கு நாளிருக்கிறது, நாளை நான் இருப்பேன். நாளை நான் மீண்டும் இங்கே வருவேன். மீண்டும் இந்த உணவகத்தில் என்னால் உணவருந்த முடியும்… அச்சிந்தனைகள் மெல்லமெல்ல  என்னை மலரச்செய்துவிடும். என்னுடைய மனம் மீது தென்றல் வீசுவதுபோலிருக்கும். மூச்சை உள்ளிழுத்து அந்தசூழலை அப்படியே உள்வாங்கிக்கொள்வேன். அந்த காட்சிகளையும் ஒலிகளையும் கண்களாலும் காதுகளாலும் உள்ளே இழுத்து நிறைத்துக்கொள்வேன். இருப்பு என்பதே பேரானந்தமாக ஆகும் கணங்கள் அவை.

ஆனால் தனிமையில் இருக்கையில்  இருப்புணர்ச்சி பெருகி என் எல்லா தசைகள் மேலும் ஏறிக் கனக்கும். உடலே கனத்து நாற்காலிகளில் அழுத்தும். என்னால் எழுந்து நடக்கவே முடியாது என்று தோன்றிவிடும். சிலசமயம் அபூர்வமாக என்னுடைய உடலுக்குள் அந்த உலோகத்தை உணர்வேன். என் தொடை எலும்புக்குள் அந்த குண்டுச்சிதறலை என்னால் தொட்டுணர முடியும். அழுத்தினால் அது கட்டிபோல நகரும். நெடுநேரம் அழுத்தினால் ஒரு ஊமை வலி வரும். அதை நான் தொடுவதேயில்லை. ஆனால் தொட்டேன் என்றால் என்னால் கைகளை விலக்கவே முடியாது. அழுத்தி அழுத்தி ஒருகட்டத்தில் அந்த இடம் கடுக்க ஆரம்பித்துவிடும். எழுந்து வெளியே மக்கள் நுரைத்துக்கொண்டிருக்கும் தெருவுக்கு வந்து விடவேண்டும். ஆம், எனக்கு ஏதோ உளச்சிக்கல் கண்டிப்பாக இருக்கிறது.

சற்று அசைந்து பெருமூச்சு விட்டேன். என் சிந்தனை ஏன் கலைந்தது என உடனே உணர்ந்தேன், நான் கவனிக்கப்படுகிறேன். என் உளவு வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த நுண்ணுணர்ச்சி அது.  கண்களை மட்டும் சுழற்றி தெருவைப்பார்த்தேன். வெண்ணிறமான மாருதி வேன் ஒன்று  மெல்ல என்னை நெருங்கி பக்கவாட்டில் திறந்தது. உள்ளே இந்த புதிய இயக்கத்தில் எனக்கான குறிச்சொல்லை ஒருவர் சொன்னார். கட்டையான மீசையும் சவரம்செய்யப்பட்டு முரடாக ஆன கன்னங்களும் தூக்கமின்மை மற்றும் அஜீரணத்தின் நிழல் படிந்த கண்களுமாக அவர் ஒரு கடைநிலை காவல் அதிகாரி போலிருந்தார். நான் ஏறிக்கொண்டதும் அந்த வேன் சத்தமில்லாமல் கிளம்பியது.

மேலும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்தோம். இருபக்கமும் சோளக்கதிர்களை காயப்போட்டிருந்த தார்ச்சாலை வந்துகொண்டே இருந்தது. வண்டியை ஓட்டியவர் காவலர் என்பது அவரது இறுக்கத்தால் தெரிந்தது. எருமைகள் கடந்துசென்றன. நாலைந்து வைக்கோல் வண்டிகளை நாங்கள் தாண்டிச்சென்றோம். பின்னர் மீண்டும் செல்போன் விளம்பரத்தட்டிகள், சினிமா தட்டிகள். கார் இன்னொரு நகரத்துக்குச் சென்றது. அங்கே ஏழெட்டு சாலைகளைத் தாண்டி ஒரு பழைய உணவகத்துடன்கூடிய தங்கும்விடுதிக்கு நான் கொண்டுசெல்லப்பட்டேன். என்னை இறக்கிவிட்டு நூற்றிநான்காம் அறைக்குச் செல்லும்படிச் சொன்னார் அவர். நான் பேசாமல் இறங்கி உள்ளே சென்று படி ஏறி மேலே சென்றேன்.

பெரிய விடுதி, ஆனால் மிகவும் பழையது. சுண்ணாம்புக்குமேல் பூசப்பட்ட டிஸ்டெம்பர் பல இடங்களில் உரிந்திருந்தது. ஜன்னல்கம்பிகள் மிகப்பெரிதாக செங்குத்தாக இருந்தன. யாழ்ப்பாணத்தின் பிரிட்டிஷ்காலத்துக் கட்டிடங்கள் அப்படி இருக்கும், இருந்தன. கூரையில் பனைமரத்தாலான வரிசையாக உத்தரங்கள். நடுவே சீலிங் பூச்சு உதிர்ந்து கம்பி தெரிந்தது சில இடங்களில். தேக்குமரத்தாலான பெரிய கதவுகள் கொண்ட அறை. விசாலமான நடைபாதை. பல அறைகளுக்கு வெளியே எச்சில்பாத்திரங்களும் ரம், பீர் புட்டிகளும் காத்திருந்தன. அறைகளுக்குள் பெரிய மின்விசிறிகள் பரக் பரக் என்று சுழன்றுகொண்டிருப்பதை ஜன்னல்களின் மேலே உள்ள காற்றுபோக்கி வழியாக காணமுடிந்தது. அத்தகைய ஒரு சந்திப்புக்கு மிகச்சிறந்த இடம் அதுவே. எவரும் எவரையும் கவனிக்காத இடம்.

நான் அறையை மெல்லத் தட்டினேன். கதவை திறந்த அந்த அதிகாரி சட்டை இல்லாமல் வேட்டியும் கைவைத்த பனியனும் அணிந்திருந்தார். ”உள்ள வா” என்று சொல்லி நான் நுழைந்ததும் கதவைச் சாத்தி தாழிட்டார். உள்ளே பழைய மின்விசிறியின் பரக் பரக். அவர் குமுதம் வாசித்துக்கொண்டிருந்தார். மேஜைமேல் ஒரு புட்டி பிராந்தியும் இரு கண்ணாடி டம்ளர்களும் கொறிப்பதற்கு வேர்க்கடலைப்பக்கோடாவும் இருந்தன. அவரது சட்டை சுவரில் தொங்கி காற்றில் நெளிந்துகொண்டிருந்தது. பாத்ரூமில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அவர் கட்டில் மீது மெத்தையில் அமர்ந்து தலையணையை மடிமீது வைத்துக்கொண்டார். என்னை இரும்பு நாற்காலியில் அமரச்சொன்னார். நான் அமர்ந்ததும் ”குடிக்கிறாயா?” என்றார். நான் குடிப்பதில்லை என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் தனக்கு மேலும்  ஒரு இஞ்ச் பிராந்தி விட்டுக்கொண்டு கொஞ்சம் நீர் சேர்த்தார். அதை கையில் உருட்டியபடி என்னைக் கூர்ந்து பார்த்தார்.

அவர் பெயர் வீரராகவன். அதை நான் பின்னர் அறிந்துகொண்டேன். இந்திய உளவமைப்பான ’ரா’வின் இரண்டாம் நிலை அதிகாரிகளில் ஒருவர் அவர். நான் வேலைசெய்திருந்த அமைப்பை அவர்தான் கிட்டத்தட்ட நடத்திக்கொண்டிருந்தார். உண்மையில் அது ஒரு தலைமறைவு அமைப்பே அல்ல. அந்த அமைப்பு இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதன் எல்லா தலைமறைவுச்செயல்பாடுகளும் நாடகங்கள்தான்.  அதில் ஈடுபடும் எவருக்கும் அது எதற்காக என்றே தெரியாது. ஒருவேளை அபத்தமான டம்மிச்செயல்பாடுகளாகக்கூட அது இருக்கலாம். அது இந்திய அரசின் கைப்பாவை என்று எனக்கு முன்னரே தெரியும் என்றாலும் அத்தனை நேரடியாக அது உளவுத்துறையால் நடத்தப்படும் என எண்ணியிருக்கவில்லை.

வீரராகவன் கொஞ்ச நேரம் பொதுவாகப்பேசிக்கொண்டிருந்தார். எங்கள் கடைசி நடவடிக்கையைப்பற்றியும் பையன்களின் நடத்தையைப் பற்றியும் பேசிவிட்டு மெல்ல விஷயத்துக்கு வந்தார் “பெரிய விசயம் ஒண்ணு வந்திருக்கு” என்றார். நான் அவரையே பார்த்தேன். அவர் என் கண்களை அரைநிமிடம் பார்த்துவிட்டு தன் செல்போனை நீட்டி “பார்” என்றார். நான் அதைவாங்கிப் பார்த்தேன். அதில் சிறி மாஸ்டரின் படம் இருந்தது.  “இவரு அந்தப்பக்கத்து ஆளு… பெரிய கை…” என்றார் வீரராகவன். என் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரிந்திருக்காது. முன்பற்களை ஒன்றின்மீது ஒன்று வைத்து இறுக்கி கொண்டால் முகம் சிலை போல ஆகிவிடும். முகச்சதைகளை அசைக்காமல் கண்களால் கண்களைச் சந்திக்காமல் இருந்தால் நம் உணர்ச்சிகளை பிறர் எளிதில் வாசிக்க முடியாது. ஆனால் சில கணங்களுக்குள் சுதாரித்துக்கொண்டு கண்களைச் சந்திக்கவும் வேண்டும். முழுமையாக கண்களை மறுத்தால் அதுவே ஐயத்தை உருவாக்கும்.

“அந்த ஆளை நாங்க நாலு வருசமா ஃபாலோ பண்றோம்… பெரிசா எதுவும் பிடி கிடைக்கலை… பிரயோசனமும் இல்லை. சரி, போட்டுடுன்னாங்க…” என்னை ஆழம் பார்க்கிறார்கள் என்று முதலில் தோன்றியது. ஆனால் அவரது பேச்சு அந்த ஐயத்தை விலக்கியது “எப்டி செய்றதுன்னே தெரியல்லை. சாதாரணமா போறான் வாரான்… ரியல் எஸ்டேட் செய்றான்னு ஒரு பாவ்லா… அப்பதானே செக்யூரிட்டி வச்சுக்கறது கண்ண உறுத்தாது… வெளியெ தெரியறதவிட கண்டிப்பா செக்யூரிட்டி கடுமையா இருக்கும்…“ நான் தலையசைத்தேன். “உன்னைப்பாத்தா நல்லாவே தெரியும், முன்னாடி பலபேரை போட்ட ஆளுதான்” என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. “செய்ற வேலையோட கனம் தெரியும்ல? அவங்களோட ரொம்ப முக்கியமான ஆளு… அந்தாளைப் போட்டவனை அவங்க பிடிக்க நெனைச்சா உன்னால ஈஸியா தப்பிர முடியாது… அவங்க ஒரு சர்க்கார் மாதிரி.”

நான் “பாப்பம்” என்றேன். அவர் முகம் மலர்ந்தது “நெனைச்சேன், நீ பயப்படமாட்டேன்னு…” குரலைத்தாழ்த்தி “இது ரொம்ப சந்தடியான ஊரு… பொது எடத்துலே செய்ய முடியாது. அப்றம் சர்க்காருக்கு பிரச்சினை. அவங்க அமைப்புக்கு உள்ள போக எங்களுக்கு இன்னும் முடியலை. உனக்குத்தெரியும்ல, அவங்களில ஓட்டை போடுறதுங்கிறது அனேகமா நடக்காத விசயம்…”  நான் “ஆமா” என்றேன். “அந்தாளை எப்டியும் போட்டுடணும்… ஆனால் எப்டீன்னு புரியல்லை. ஜனங்களை கலைக்கப்படாது. ஒரு ஆர்டினரி கொலையா இருக்கணும். கன் கூட வேண்டாம். அரிவாளாலே வெட்டுறது கத்திக்குத்து… இந்தமாதிரி… ரியல் எஸ்டேட் தகராறிலே கொலை, அவ்ளவுதான் கதை முடிஞ்சிரணும்… என்ன?” நான் தலையசைத்தேன். “முடிஞ்சளவுக்குப் பாரு… எங்களாலயும்  ஆனத பாக்கிறோம்…”

நான் பேசாமல் அமர்ந்திருந்தேன். “பிரியாணி சாப்புடறியா? இது பாய்கடை, தம் பிரியாணி நல்லா இருக்கும்…” நான் வேண்டாம் என்ற பின் எழுந்தேன். அவர் “பாப்பம்” என்றார். நான் திரும்ப சாலைக்கு வந்தபோது வெள்ளை வேன் மௌனமாக நெருங்கி வந்து கதவு திறந்தது. என்னை மீண்டும் சந்தை அருகே கொண்டு வந்து விடும்போது நான் இறங்குவதற்குள் அந்த அதிகாரி என்னிடம் ஒரு சிறிய தோல்பையை நீட்டினார். அதற்குள் சிறிய கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதை நான் உணர்ந்தேன். குண்டுகள் தனியாக உள்ளே போடப்பட்டிருந்தன. இறங்கிக்கொண்டு மெல்ல நடந்தேன். அன்று எனக்கு ஒரு சினிமா பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அரங்குக்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். ஏதோ அடிதடி கொலைப்படம். ரவுடிகள் துரத்திக்கொண்டே இருந்தார்கள். எனக்கு அந்த நடிப்பில் இருந்த அபத்தம் ஏனோ அப்போது ஆறுதலாக இருந்தது.

நான் என்னசெய்யவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். எனக்கு சிறிமாஸ்டரின் வீடு, கார் எண் மற்ற தகவல்கள் அனைத்தையும் அனுப்பினார்கள். அவரது காவலர்கள் அனைவருடைய புகைப்படங்களும் அவர்கள் புழங்கும் இடத்தின் படங்களும் வந்தன. நான் முதலில் சிறிமாஸ்டரைக் கண்காணிக்க பையன்களை ஏற்பாடுசெய்தேன். அவர்கள் அதெல்லாம் நன்றாகத்தெரிந்தவர்கள். தினம் செல்லச்செல்ல நுட்பமான தகவல்கள் வந்தபடியே இருந்தன. கண்காணிக்கப்படுவது சிறிமாஸ்டருக்கு தெரியவரும் என்றும் அதன் விளைவாக எனக்கு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று என் மேலிடத்துத் தகவல்வரும் என்றும் நினைத்தேன். ஒவ்வொருநாளும் என் கழிப்பறையில் ரகசிய செல்போனை எடுத்துப்பார்த்தேன். அது மௌனமாகவே இருந்தது.

எட்டாவது நாள் இரவு ஏழு மணிக்கு வீரராகவனை நான் மிக அருகே இருந்த ஓர் ஓட்டலில் சந்தித்தேன். எனக்கு வந்த தகவலின்படி நான் அந்த அசைவ ஓட்டலின் உள்ளறைக்குள் சென்று அமர்ந்ததும் என்னை தூரத்தில் இருந்து கண்காணித்தபின் அவர் வந்து என் முன்னால் அமர்ந்தார். காபிக்கு ஆர்டர் போட்டதும் நாங்கள் இருவரும் மட்டும் ஆனோம். வீரராகவன் “ஒரு பிளான் போட்டிருக்கோம்…” என்றார். நான் அவரையே பார்த்தேன். அவர் சற்று சலிப்பான குரலில் சொல்வதுபோல “ஒரு மோதல் நடக்கட்டும்… அதாவது தற்செயலா நடந்தது மாதிரி… சந்தேகத்திலே அவங்க நம்மாள் ஒருத்தனை போட்டுடறாங்க… அவங்காள் ஒருத்தனை நாம போட்டுத்தள்ளுவோம்… அப்ப அவன் சமரசப்பேச்சுக்குக் கூப்பிடுவான்…” நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும் “சமரசத்துக்கு நீ போனாப்போரும்” என்று வீரராகவன் சொன்னது என் மனதில் சிறிய சலனத்தை உருவாக்கியது. தூங்கும் மிருகங்கள் சத்தம்கேட்கையில் காதுகள் மட்டும் விழித்து அசைவதுபோல.

இருவரும் காபியைக் குடித்தோம். அவர் காபியை உறிஞ்சும் ஒலி உரக்கவே கேட்டது. வெளியே டபராக்களும் தட்டுகளும் உரசும் ஒலி. மல்ல மல்ல மல்லே மல்லே என்று பாடல் ஒலி. யாரோ இருமும் ஒலி. சட்டென்று எனக்கு அவரது எல்லா திட்டமும் புரிந்து போய் ஓர் ஆயாசம் ஏற்பட்டது. ஆகவே அவர் செல்போனை அழுத்தியதும் ஜோர்ஜ் அரைக்கதவை திறந்து உள்ளே வந்தது எனக்கு சற்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஜோர்ஜ் கொஞ்சம் குண்டடித்து தெளிந்த முகத்துடன் இருந்தான். வீரராகவன் ஜோர்ஜை அமரும்படிச் சொன்னார். அவன் பக்கத்து மேஜை நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான். வீரராகவன் “காபி சாப்பிடறியா?” என்றார். “இல்ல, அங்காலை குடிச்சுட்டுட்டுதான் இருந்தனான்” என்ற ஜோர்ஜ் என்னை நோக்கி அரைப்புன்னகை புரிந்தான். “ஒரு வேலை இருக்கு ஜோர்ஜ்” என்றார் வீரராகவன். ஜோர்ஜ் உற்சாகமாக “சரி” என்றான்.

வீரராகவன் செல்போனில் ஒரு படத்தை ஜோர்ஜுக்கு அனுப்பினார். செல்போன் அதிர்ந்ததும் ஜோர்ஜ் எடுத்து படத்தைப்பார்த்தான். “ஆளைப்பாத்துக்கோ… மத்த தகவல்களையும் நான் அனுப்பறேன்”. ஜோர்ஜ் “ஆளு யாரு?” என்றான். அந்த அபத்தமான கேள்வியே அவன் ஏன் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறான் என்பதற்கான சாட்சி என எண்ணி நான் புன்னகைசெய்தேன். “நம்ம கிட்ட வேலைபாத்தவன்… இப்ப வெளிய போய்ட்டான்… போலீஸுக்கு எதுனா தகவல்சொல்றானோன்னு டவுட்டா இருக்கு… அவனை கூட்டிட்டு வரணும். வரமாட்டான். கொஞ்சம் பயமுறுத்தினா வந்திருவான். சும்மா கூலி ஆளுதான். நம்மளை மாதிரி ஆட்களை பாத்தாலே பேதியாயிருவான்…” ஜோர்ஜ் தன்னம்பிக்கையுடன் புன்னகை செய்து “சரி… பாத்திருவோம்” என்றான். “முரண்டுபிடிச்சான்னா கத்திய காட்டி இழுத்திட்டு வந்திரு… எப்டியும் இண்ணைக்கு ராத்திரிக்குள்ள ஆளு நம்ம கைக்கு வந்திரணும்” “நான் கொண்டு வந்திடுறன்” என்றான் ஜோர்ஜ். “அப்ப சரி” என்றபின் வீரராகவன்  ஒருவாய் தண்ணீர் குடித்து வாயின் காப்பிப்பிசுபிசுப்பை நீக்கிய பின் எழுந்தார். என்னைப்பார்த்து தலையசைத்தபின் வெளியே சென்றார்.

ஜோர்ஜ் நாற்காலியை சரியாக இழுத்துப்போட்டுக்கொண்டு “அண்ணை நல்லா இருக்கியளோ? பாத்து கனகாலமாச்சு.. ஆப்பீஸிலே நான் வரக்கூடாதுன்னு சொல்லிபோட்டினம். அதனாலே வரையில்லை” என்றான். நான் “நீ எப்டி இருக்கே?” என்றேன். “நல்லா இருக்கன் அண்ணை, மகிழ்ச்சியா இருக்கிறன். ரெஜினாவுக்கு பிள்ளை பிறந்திருக்கு அண்ணை… பெட்டை. ரெண்டுமாசமாச்சு. இன்னும் பேரு வைக்கயில்லை. இப்பம் சும்மா ஜென்சின்னு வச்சிருக்கோம்.. அடுத்தமாசம் அந்தோனியார் கோயிலுக்குக் கொண்டுபோயி பேரு வைக்கணும்ணு இருக்கம்” என்றான். நான் புன்னகையுடன் “குடும்பம் ஆயாச்சு…” என்றேன். ஜோர்ஜ் உற்சாகமாகச் சிரித்து “பின்ன? அதும் வேணுமே… அண்ணை இப்பம் நான் நல்ல சந்தோசமாட்டு இருக்கிறன்… ஒரு குறையும் இல்லை. நல்ல சாப்பாடு நல்ல வீடு… பிள்ளைக்கு ஞானஸ்நானம் குடுக்கிறப்ப அண்ணனை தலைதொட்டப்பனா நிக்கவைக்கணும்ணு நான் சொன்னனான். ரெஜினாவுக்கும் சம்மதம்… அண்ணை ஒருக்கா வீட்டுக்கு வாருங்க. பிள்ளையை பாத்துட்டு போங்க.”

அவன் கட்டாயப்படுத்தியதனால் நான் அவனுடன் ஆட்டோவில் அவன் வீட்டுக்குச் சென்றேன். போகும்வழியெல்லாம் ஜோர்ஜ் எப்படியாவது ஒருவருஷத்தில் சென்னைக்குப் போய்விடவேண்டும் என்ற அவனுடைய கனவைச் சொன்னான். ஜோர்ஜைப் பொறுத்தவரை சென்னையில் சினிமாதான் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். “அண்ணை கில்லி பாத்தியளோ? சூப்பர் படம்… நான் நாலு தடவை பாத்தனான்” என்றான். அவன் இருந்த புதிய வீடு சாலையோரமாக எவர்சில்வர் கடை ஒன்றை ஒட்டியே இருந்தது. நல்ல சிமிண்ட் வீடு. சாலைக்கு மேலேயே பால்கனி துருத்தி நின்றது. முற்றத்திலேயே ஒரு குழிக்குள் தண்ணீர் வரும் குழாய். அதற்குள் பிளாஸ்டிக் குடங்கள் காத்திருந்தன. ஓரமாக ஒரே ஒரு வேப்பமரம். பக்கவாட்டில் சென்று குறுகலான மாடிப்படிகளை ஏறினால் மொசைக் போட்ட வராண்டா. திரைச்சீலை அசைந்த வாசலுக்கு அப்பால் ஒரு பெரிய கூடம். இருபக்கமும் படுக்கையறை சமையலறை. படுக்கையறையில் தரையில் ஒரு கர்ல்-ஆன் மெத்தை கிடந்தது. சமையலறை முழுக்க எவர்சில்வர் பாத்திரங்கள். மின்விசிறி சுழல சுவரில் காலண்டர் தாள்கள் படபடத்தன. “பிள்ளைய விட்டுட்டு போயிருக்கிறவள்” என்றான் ஜோர்ஜ்.

குழந்தை கூடத்தில் ஒரு பிளாஸ்டிக் பாய் மீது பழைய நீலப்புடவையில் கிடந்து கைகால்கள உதைத்துக்கொண்டிருந்தது. பக்கவாட்டில் டிவியில் ஏதோ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. “குட்டிக்கு டிவி இருந்தா போரும்… நல்ல வெளையாடிட்டு கிடப்பவள்” ஜோர்ஜின் மொழியிலும் இப்போது கொஞ்சமாகத்தான் யாழ்ப்பாணம் இருந்தது. குழந்தை கருமையாக குட்டித்தலை நிறைய நிறைய முடியுடன் மடிப்புகள் கொண்ட தொடையும் மென்மையான பாதங்களுமாக ஜோர்ஜின் குரல் கேட்டு எம்பி எம்பி சிரித்தது. அதன் கைகளின் மெல்லிய விரல்கள் பாதி முஷ்டி பிடித்திருந்தன. சிவப்பு நிறத்தில் ஒரு மேல்சட்டை மட்டும் போட்டிருந்தது. அதன் வாயில் இருந்த நிப்பிள் அருகே விழுந்து கிடந்தது. அருகே கிலுகிலுப்பைகள் குழந்தையால் மிதித்து விலக்கப்பட்ட ஒரு பனியன்துணிப் போர்வை.

ஜோர்ஜ் குழந்தையை அள்ளி எடுத்தான். அதன் கண்கள் நீர்ப்படலம் படர்ந்தவைபோலிருந்தன. மலர்ந்த சிறு உதடுகளில் இருந்து எச்சில் வழிந்து அதன் சட்டை நனைந்திருந்தது. “மூத்திரம் விட்டிருக்கிறவள்” என்று ஜோர்ஜ் தன் சட்டையாலேயே அதன் புட்டத்தை துடைத்து இடுப்பைப்பற்றி மேலே தூக்கி “கள்ளப்பெட்டை… களவாணிப்பெட்டை… எங்க உங்க அம்மா? உங்க அம்மா எங்க?” என்று ஆட்டினான். அது தன் இடது கையைமடித்து வாய்க்குள் போட்டுக்கொண்டு கண்கள் சொக்க கால்களை உதறி உதறிச் சிரித்தது. அதன் கழுத்தில் மெல்லிதாக ஒரு தங்கச்சங்கிலி மின்னியது. “மாமா வந்திருக்கிறார் பாருங்க… என் செல்லக்குட்டி பாருங்க…”

வாசல்வழியாக ரெஜினா உள்ளே வந்து “வாங்கண்ணா” என்றபின் நாற்காலி மேல் கிடந்த துண்டை எடுத்து நைட்டியின் மீது மார்பில் போட்டுக்கொண்டாள். நன்றாக கொழுத்து கன்னங்கள் உப்பி அவள் முற்றிலும் புதியவளாக இருந்தாள். சாம்பல்பாய்ந்து காய்ந்த கருமைகொண்டதாக இருந்த அவளுடைய சருமம் பளபளப்பாக ஆகி கொஞ்சம் அழகியாகக்கூட தோன்றினாள். “உக்காருங்கண்ணா…” என்றாள். ”மாவு அரைக்க குடுத்திருந்தனான்…” என்றபடி எவர்சில்வர் வாளியுடன் உள்ளே போனாள். ஜோர்ஜ் இரும்பு மடக்கு நாற்காலியை நீக்கி போட்டு என்னை அமரும்படிச் சொன்னான். நான் அமர்ந்ததும் அவனே குழந்தையை என் மடிமீது வைத்தான்.

என்னால் அதை பிடித்துக்கொள்ள முடியவில்லை. கால்களை உதறியபடியே இருந்தது.  அதன் தலை கொளகொளவென முன்னும் பின்னும் ஆடியது. அது என்னையே நீர்க்கண்களால் பார்த்த பின் சட்டென்று எம்பி எம்பிக் குதித்து கைகளை ஆட்டியது. என் பையில் ரூபாய் இருந்ததை நினைவுகூர்ந்தேன். சட்டைக்குள் கைவிட்டு ஒரு நூறு ரூபாய்த்தாளை எடுத்து அதன் கைகளில் வைத்தேன். அது ரூபாயை கீழே நழுவவிட மலர்ந்த முகத்துடன் ஜோர்ஜ் ரூபாயை எடுத்தான். “பிள்ளையை ஆசீர்வாதம் பண்ணணும் அண்ணை” என்றான். நான் அதன் தலைமேல் கையை வைத்தேன்.

ரெஜினா வாசலில் நின்று “தேத்தண்ணி குடுக்கிறியளோ?” என்றாள். “இல்ல… இப்பதான் காபி குடிச்சம்… பிறவு” என்றேன். “அண்ணை காலம்பற வச்ச கோழிக்குழம்பு இருக்கு… தோசை சாப்பிடுதியளோ?” “இல்லை… இப்ப ஒண்ணும் ஏறாது… நான் வாறன்” என்றேன். ரெஜினா என்னிடம் “இஞ்ச நல்ல பெட்டையள் உண்டாண்ணு பாருங்க… தனியா எவ்ளவு நாள் இருக்கிறது?” என்றாள். அவள் என்னிடம் நேரடியாகப் பேசியதை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. பார்வையை ஜோர்ஜுக்கு திருப்பி “பாப்பம்… வயசும் ஆச்சே” என்றேன். ரெஜினா ”இஞ்ச பக்கத்திலே மரியா எண்டு ஒரு பெட்டை இருக்கிறவள். நல்ல பெட்டை… அவட புருஷன் ஆமி செல்லடிச்சு செத்துப்போயிட்டனான்” என்றாள். நான் “பாப்பம்” என்றபின் எழுந்துகொண்டேன்.

விடைபெற்று படிகளில் இறங்கும்போது ஒன்பதரை தாண்டியிருந்தது. ரெஜினா குழந்தையுடன் பின்னால் வந்தாள். ஜோர்ஜிடம் நான் மெல்ல “பணம் குடுத்தாங்களா?” என்றேன். அவனும் மெல்ல “குடுத்தவை…” என்றான். நான் வெளியே இறங்கி ஆட்டோ பிடித்தேன். ஜோர்ஜ் ஆட்டோ அருகே குனிந்து “அண்ணை எனக்க செல்நம்பர் வச்சுகிடுங்க” என்றான். “இல்ல… அது தப்பு” என்றேன். “ஓம்” என அவன் புரிந்துகொண்டான். ஆட்டோ நகரும்போது அவன் கைவீசுவதை கண்டேன். எதிர்ச்சுவரில் மறுநாள் போடப்போகும் புதுப்படத்துக்கான போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். ஜோர்ஜ் சாலையைத்தாண்டி அந்த போஸ்டரைப் பார்ப்பதற்காகச் செல்வதைக் கவனித்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைபயணம்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன்-சென்னையில்