உலோகம் – 4

ஜோர்ஜ் இரண்டுவாரம் கழித்து அந்த ·போன் நம்பருக்கு கூப்பிட்டுப்பார்த்தான். நானும் அவனும் வழக்கம்போல சந்தையில் உலவிவிட்டு சினிமா பார்க்கப்போவதற்கு முன்னதாக. ஜோர்ஜ் மறுபக்கம் ஆள் எடுத்ததும் என்னைப் பார்த்தான். நான் வெளியே அவ்ந்து நின்று ஒரு பீடியைப் பற்றவைத்தேன். ஜோர்ஜ் பதற்றத்துடன் தன் சட்டைப்பித்தானை திருகியபடி திக்கி திக்கிப் பேசுவதைக் கேட்டேன். அனேகமாக இந்த முயற்சி வெல்லாது என்றுதான் நினைத்திருந்தேன். ·போன் மாறியிருக்கலாம். அவர்களின் இயக்கமே இல்லாமலாகியிருக்கலாம். அவர்களுக்கு இனிமே இவனைப்போன்றவர்களின் தேவை இல்லாமலிருக்கலாம்.

.

 

 

ஆனால் சட்டென்று ஜோர்ஜின் முகம் மலர்வதை நான் கண்டேன். எனக்கு சிறிய ஆர்வம் ஏற்பட்டது. அவன் உடலசைவுகளையே பார்த்தேன். சாப்பாடு கண்ட நாய்க்குட்டி மாதிரி இருந்தான். வெளியே வந்தபோது வியர்வை வழிய மலர்ந்து சிரித்தபடி ”அண்ணை வரச்சொல்லியிருக்கினம்” என்றான். நான் லேசாக தலையசைத்தேன்.

நாங்கள் சந்தைக்கு முன்னால் இருந்த டீக்கடையில் இருந்து டீயும் வடையும் சாப்பிட்டோம். ஜோர்ஜ் உற்சாகமாக சீட்டி அடித்தான். அவனுக்கு கண்டிப்பாக ஒரு வேலை கொடுபபர்கள் என்றும் சீக்கிரமே முகாமை விட்டு வெளியே போய் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்தை அங்கே அமைத்துவிடலாம் என்றும் சொன்னான். ”மெட்ராஸ¤க்கு போயி கமலஹாசனை பாத்துடணும் அண்ணை” என்றான். நான் சிரித்தேன். அவர்கள் ஜோர்ஜை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறார்கள்? அந்த அளவுக்கா ஆளில்லாமல் ஆகிவிட்டிருக்கிறது அவர்களுக்கு?

ஜோர்ஜும் நானும் அடுத்த முறை வெளியே வந்தபோது சந்தைக்கு முன்னால் என்னிடம் விடைபெற்று ஒரு ஆட்டோவில் கிளம்பிச்சென்றான். நான் மட்டும் சினிமாவுக்குச் சென்றேன். சினிமா பார்க்காமல் நன்றாக கால்நீட்டி தூங்கிவிட்டேன். படம் முடிந்து லேசான தலைவலியுடன் வெளியே வந்தபோது டீக்கடைமுன்னாலிருந்து ஜோர்ஜ் என்னை நோக்கி ஓடிவந்தான்.”அண்ணை போன காரியம் பலிச்சுப்போட்டுது” என்றான். என் தோள்களைப் பற்றிக்கொண்டான். என்ன நடந்தது என்று நான் கேட்கவில்லை. ஆனால் பஸ் இறங்கி நடக்கும்போது அவனே சொல்ல ஆரம்பித்தான். அவனை ஒரு பேன்ஸி ஸ்டோருக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். அங்கே ஒருவர் வந்து அவனைச் சந்தித்தார். ஈழத்தவர்தான் ஆனால் நல்ல தமிழ்நாட்டுத்தமிழ்தான் பேசினார். தன்னை அருணாச்சலம் என்று அறிமுகம் செய்துகொண்டார். ஜோர்ஜின் எல்லா அடையாளங்களையும் அவர் விசாரித்தபின்னர் மறுமுறை வரும்போது சந்திக்கலாமென்று சொல்லி கிளம்பினார்.

மறுமுறை ஜோர்ஜ் அவர்களின் அலுவலகத்துக்கே போய்விட்டான். அங்கே அவனை அறிந்த முன்னாள் இயக்கத்தோழன் ஒருவனும் இருந்திருக்கிறான். அவர்கள் ஜோர்ஜை நன்றாக விசாரித்திருக்கிறார்கள். டீகுடித்து பேசிக்கொண்டிருந்தபின் திருப்பி அனுப்பிவிட்டார்கள். கிளம்பும்போது கொஞ்சம் பணம் கொடுத்தார்கள். அதன் பின் ஜோர்ஜ் தன்னம்பிக்கை மிக்கவனாக ஆனான். அவனுடைய குரலில் எப்போதும் மகிழ்ச்சி இருந்தது. அவன் மனைவியின் முகம்கூட தெளிந்திருந்தது. அடிக்கடி ஜோர்ஜ் முகாமைவிட்டு வெளியே கிளம்பிச்செல்ல ஆரம்பித்தான். காவலனுக்கு அதற்கான பணத்தைக் கொடுத்துவிடுவான். பெரும்பாலான நாட்களில் அவன் அந்த அலுவலகத்தில் சென்று சும்மா பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் திரும்பினான். ஆனால் ‘பிளான் பண்ணினோம் அண்ணை’ என்று சொன்னான்.

இரண்டுமாதம் கழித்து ஜோர்ஜ் அவனுடைய முதல் வேலைக்குச் சென்று விட்டு திரும்பினான். மாலையில் சென்றவன் மறுநாள் அதிகாலையில்தான் திரும்பி வந்தான். வந்ததுமே படுத்து பின்மதியம் வரை தூங்கினான். நான் பழைய விகடனை வாசித்துக்கொண்டிருந்தபோது தூங்கி எழுந்து கைகால்முகம் கழுவி கையில் கண்ணாடி டம்ளரில் கறுப்புடீயுடன் வந்த ஜோர்ஜ் என்னருகே சிரித்தபடி அமர்ந்துகொண்டு ”என்ன புதினம் அண்ணை?” என்றான். ”நீதான் சொல்லணும்” என்றேன். முகம் மலர ”நேத்து ஓப்பரேசன்.. ”என்றான். அவன் அவர்கள் தன்னை நம்பவில்லையோ என்று மனசஞ்சலம் கொண்டிருந்தான். அன்றைய நடவடிக்கை அந்த அச்சத்தைப் போக்கியது. அவன் அவர்களுடன் கடலுக்குள் பிளாஸ்டிக் படகில் சென்று நடுக்கடலில் நின்ற தாய்லாந்துக் கப்பலில் இருந்து எட்டு கனமான பெட்டிகளை எடுத்து படகில் ஏற்றி கரைக்குக் கொண்டுவந்து அங்கே இருந்த ஒரு பழைய வீட்டுக்குள் கொண்டுசென்று சேர்த்துவிட்டு திரும்பியிருந்தான். ”அண்ணை, இனிமே உங்க விசயத்தைச் சொல்லுறன்” என்றான் ஜோர்ஜ்

மறுமுறை நானும் அவனும் சினிமாவுக்குச் சென்று அமர்ந்திருந்தபோது ஜோர்ஜ் சிறுநீர் கழிக்க எழுந்து சென்ற இடைவெளியில் என்னருகே அமர்ந்திருந்தவன் சட்டென்று என்னை நோக்கி திரும்பாமலேயே எனக்கான அடையாளச் சொல்லைச் சொன்னான். என் நரம்புகள் சில்லிட்டு இறுகின. ”நாளைக்கு சந்தைக்குள்ள இருக்கிற அன்பு தேங்காக்கடைக்கு வா.. சிறீ மாஸ்டர் உன்னை சந்திப்பார். சாம் வந்தாரான்னு கேளு” என்றான். நான் பேசாமல் திரையில் ஓடிய சிலைடுகளையே பார்துக்கொண்டிருந்தேன். கையில் முறுக்குடன் ஜோர்ஜ் முழங்கால்கள் நடுவே நெளிந்து நெளிந்து வந்துகொண்டிருந்தான். படம்போட்டபோது நான் திரும்பி என்னருகே அமர்ந்திருந்தவனைப் பார்த்தேன். ஈழத்து முகம் அல்ல. ஆனால் அப்படி உறுதியாகவும் சொல்லிவிட முடியாது.

மறுநாள் ஜோர்ஜ் அவனுடைய வேலைக்குச் சென்றபோது நான் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் நுழைந்தேன். படம் போட்டதும் மெல்ல எழுந்து இருட்டுக்குள் நடந்து மறுபக்க கதவு வழியாக வெளியேறி மூத்திர அறையை அடைந்தேன். என்னை எவரும் பார்க்கவில்லை. மூத்திர அறையின் தடுப்புச்சுவர் மீது ஏறி சுவரை தாண்டி மறுபக்கம் சாலையில் குதித்தேன். சாலையில் ஒரே ஒரு பிச்சைக்காரன் மட்டும் தான். அவன் என்னை பொருட்படுத்தவில்லை. நெரிசல் வழியாக சென்று சந்தைக்குள் நுழைந்தேன். சற்று தேடியதும் அன்பு தேங்காய்க்கடை தெரிந்தது.

கடை வாசலில் ஒரு டிவிஎஸ் மொபெட் நின்றிருந்தது. நான் கடைக்குள் சென்று ”சாம் வந்தாரா?” என்றேன். ”வார நேரம்தான்..நீங்க கஸ்டமரா?” என்றான் கல்லாவில் இருந்த குண்டன். ”ம்ம்” ”நம்மகிட்டயும் அயன் வண்டி கிடக்கு சார்… எம்பத்தஞ்சுமாடல் டாட்டா எட்டு கைவசம் இருக்கு… ஒண்ணுகூட அம்பதாயிரம் கிலோமீட்டர் ஓடல்லை” நான் ”பாக்கிறேன்” என்றேன். ”சாம் காட்டுறத பாருங்க…புடிக்கலைன்னாக்க நம்ம கிட்ட சொல்லுங்க…நாம இங்கதான் கடை வச்சிருக்கோம்..எங்கியும் ஓடிப்போறதில்லை…நாளைக்குப்பின்ன ஏதுனா ஒண்ணுண்ணா நீங்க வந்து தகிரியமா கேக்கலாம் …இன்னாடா அன்பு இன்னா விசயம்னுட்டு..அதுக்கா சொன்னேன்”

அரைமணி நேரம் அங்கேயே நின்றேன். அன்பு என்னிடம் மானசீகமாக பல மினிலாரிகளை  அதற்குள் விற்றுவிட்டிருந்தான். என்னை எவரேனும் பின் தொடர்கிறார்களா என்று எங்கிருந்தோ கவனிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். பின்பு ஆட்டோவில் ஒரு கரிய மனிதர் இறங்கி வந்தார். அவர்தான் சாம் என்று ஊகித்தேன். என்னை நோக்கி சிரித்தபடி வந்து ”நாந்தான் சாம்…ஐட்டத்த பாத்திரலாமா?” என்றார். நான் ”சரி” என்றேன். ”ஏறுங்க” என்று என்னிடம் ஆட்டோவை காட்டினார். ஏறிக்கொண்டதும் அவரும் ஏறிக்கொண்டு பேசாமல் இருந்தார். ஆட்டோ சிறிய சந்துகள் வழியாகச் சென்று ஒரு சந்தின் முனையில் நின்றது. இறங்கி பணம் கொடுத்து அனுப்பிவிட்டு இடுங்கலான சந்து வழியாக சாக்கடையைத் தாண்டித்தாண்டிச் சென்று ஒரு குறுகிய மாடிபப்டியை அடைந்தோம். அது ட போல மடிந்து மேலேறியது. மாடிக்குக் கீழே உள்ள வீட்டுக்குள் குழந்தைகளும் பெண்களும் போடும் ஓசைகள், ஒரு டிவி ஓடும் ஒலி ஒரு கிரைண்டரின் ஒலி எல்லாம் கேட்டன.

மாடியில் நான் நினைத்ததை விட பெரிய அறை. நான் அங்கே மர நாற்காலியில் அமர்ந்தேன். கால்களைச் சேர்த்துக்கொண்டு மௌனமாக காத்திருந்தேன். எந்த அல்லலும் இல்லாமல் எத்தனை நேரம்  வேண்டுமானாலும்  என்னால் மௌனமாகக் காத்திருக்க முடியும் – வேட்டையாடும் மிருகங்களைப்போல. நான் பெற்ற பயிற்சிகளில் முக்கியமானதே அதுதான். மாடிக்குக் கீழே ஒரு பாத்திரம் விழுந்தது. நான் நினைத்திருந்ததற்கு மாறாக வீட்டுக்குள் இருந்து வராமல் கீழிருந்து ஒருவர் படி ஏறி வந்தார். அவருடன் வந்த இருவர் வெளியே நின்றார்கள். அவர் உள்ளே வந்து பேசாமல் என் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். நான் எழுந்து பணிவாக நின்றேன். என்னை அமரும்படி கைகாட்டினார். நான் அமர்ந்துகொண்டேன். என்னை சிலகணங்கள் கூர்ந்து பார்த்தார்

சிறி மாஸ்டர்ருக்கு அறுபது வயதிருக்கும். நல்ல சிவப்பு நிறம். நெற்றியில் அகலமாக விபூதிப்பட்டை அணிந்து மேலே சந்தனப்பொட்டு போட்டிருந்தார், முடமுடப்பாக கஞ்சிபோட்டு சலவைசெய்யப்பட்ட கதர் சட்டையும் வேட்டியும் அணிந்து கையில் பெரிய வாட்ச் கட்டியிருந்தார். ”சே·பா வந்தேளா?” என்றார். அவரது பிராமண உச்சரிப்பு எனக்கு சற்று ஆச்சரியமளித்தாலும் நான் அதை வெளிக்காட்டவில்லை. ”ம்ம்” என்றேன். ”பாத்து வரணும் போகணும்… இப்ப முன்னமாதிரி இல்ல… பி.எம் மர்டருக்குப் பின்னாலே அவாள்லாம் ரொம்ப ஜாக்ரதையா இருக்கா…எல்லாரையும் யாராச்சும் ·பாலோ பண்ணிண்டிருக்கா… தெரியுதோன்னோ?” நான் தலையசைத்தேன். ”நாம நெனைக்கிறத விட அவாளொட நெட்வர்க் பெரிசு.. திருடன் முன்னாடி போறதனால அவன் தன்னை ஜாஸ்தி புத்திசாலீன்னு நெனைச்சுப்பான். ஆனா போலீஸ் எப்பவும் பின்னாடித்தானே வந்தாகணும்…என்னிக்காவது வந்து சேந்திருவா… இந்தூர் போலீஸ்லே ரொம்ப புத்திசாலிகள்லாம் இருக்கா. அவாளை ஒருநாளைக்கும் அண்டர்எஸ்டிமேட் பண்ணிரப்படாது..”

இரு டம்ளர்களில் காபி வந்தது. ”சாப்பிடு” என்றார் சிறி மாஸ்டர். நான் மெல்ல எடுத்து உறிஞ்சினேன். கொழுமையான கசப்பான காபி. சிறி மாஸ்டர் ‘எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோ…பேசாம இருந்துண்டிரு…உனக்கு வர்ர ஆர்டரை செஞ்சுடு…போரும்…நான் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை”என்றார். அதற்குள் அவர் ஒரு தமிழகத்து அய்யர் என்று என் மனமே நம்ப ஆரம்பித்திருந்த விந்தையை எண்ணிக்கொண்டேன். சிறி மாஸ்டர் தன் பர்ஸைத்திறந்து ஒரு சிறிய செல் ·போனை எடுத்தார். அதை ஒருமுறை திருப்பிப்பார்த்துவிட்டு என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கிக்கொண்டேன். ஒரு சிறிய தீப்பெட்டி அளவுக்கே இருந்தது. அவ்வளவுதான் கனம். ஓவல் வடிவத்தில் மழுங்கிய முனைகளுடன் குளித்து கரைந்த சோப் போல இருந்தது.”இருநூறு மணிநேரம் சார்ஜ் நிக்கும்…” என்றார் சிறி மாஸ்டர் ”எப்பவும் எதுக்கும் இதை யூஸ் பண்ணப்படாது. இது ஆர்டர்ஸ் வாங்கிக்கிறதுக்கு மட்டும்தான். ஆ·ப்லயே வச்சுக்கோ… தெனம் ஒரு வாட்டியாச்சும் மெசேஜ் பாத்துடு… மெஸேஜ் மட்டும்தான் வரும்”

நான் ”சார்ஜர்?” என்றேன். ”தனியா வேணாம்…தோ அந்த பின்னை இழுத்து அப்டியே செருகினாப்போரும்..” நான் அந்த பின்னை இழுத்துப்பார்த்துக்கொண்டேன். அத்தனை சிறிய ஒரு செல்போனை நான் பார்த்ததே இல்லை. அவர் ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியை நீட்டினார். அதற்குள் மெல்லிய ஜவ்வாலான உறை இருந்தது. நான் அதை கையில் எடுத்துக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தேன். சிறி மாஸ்டர் ”சரி ” என்றார். நான் எழுந்து அறை மூலைக்குச் சென்று அந்த செல்போனை ஜவ்வுப்பைக்குள் போட்டு அதன் வாயை இறுக்கமாகக் கட்டினேன். என் வாயிலிருந்து எச்சிலை அதன் மீது துப்பி அதை வழவழப்பாக்கியபின் கால் மடக்கி குந்தி அமர்ந்து என்னுடைய மலதுவாரத்திற்குள் அதை நுழைத்துக்கொண்டேன். மூச்சை இழுத்து வயிற்றை எக்கி அதை உள்ளிழுத்தேன். எந்தவிதமான அசௌகரியமும் இல்லாமல் உள்ளே சென்று அமர்ந்துகொண்டது. அதன் வடிவம் இதற்கெனவே உள்ளது என்று பட்டது. சிறி மாஸ்டர் தலையசைத்து எனக்கு விடைகொடுத்தார்.

நான் சிறி மாஸ்டர் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் அவரது தோரணையும் அவருக்கிருந்த காவலுமே அவர் யார் என்று எனக்குக் காட்டின. முகாமுக்குச் செல்லும்போது சாதாரணமாக இருந்தேன். ஒருபோதும் அவர்கள் ஐயப்படப்போவதில்லை. ஜோர்ஜ் அன்றிரவு உற்சாகமாக திரும்பிவந்தான். ”அண்ணை உங்களைப்பற்றி சொன்னனான்…பாப்பம் எண்டு சொன்னவங்கள்” என்றான். நான் ”பாப்பம்…”என்றேன். ”அண்ணனுக்கு ஒரு விசயத்திலேயும் ஆர்வம் கெடையாது. எப்பமும் ஒரு மூடியா இருக்கிறியள்” என்றான் ஜோர்ஜ். அன்றைய சாகசத்தைச் சொல்ல ஆரம்பித்தான். அவர்கள் மாலத்தீவுக்கு எதையோ அனுப்பியிருக்கிறார்கள். மொத்த ஆபரேஷனிலும் எவரும் எந்தச் சொல்லும் பேசவில்லை என்பதனால் அதற்கு மேல் ஜோர்ஜ்க்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அன்றிரவு ஜோர்ஜ் எனக்கு அவன் வாங்கித்தரப்போகும் வாய்ப்புகளைப் பற்றிச் சொன்னான். என்னுடைய எதிர்காலம் பற்றி பேசினான். ”இங்க நல்ல பெட்டையள் இருக்கினம் அண்ணை…வடிவான பெட்டையள்…ஒண்ணு பாத்து செஞ்சுபோடுவம்” நான் புன்னகையுடன் வானத்தைப் பார்த்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன்.

பதினெட்டுநாள் கழித்து அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி ஜோர்ஜ் என்னை ஒரு டீக்கடையில் அவர்களின் தலைவர் ஒருவருக்கு அறிமுகம் செய்தான். அவர் என்னை கூர்ந்து பார்ப்பதிலேயே அதிக நேரம்செலவிட்டார். கேள்விகள் பொதுவாக சாதாரணமானவை. சட்டென்று எனக்கு ஒன்று உறைத்தது, அவர் என்னுடைய இயக்கத்தில் இருந்திருக்கக்கூடும். ஆகவேதான் அவரை அனுப்பியிருக்கிறார்கள். என்னுடைய முகத்தை அவர் நினைவுகூர்கிறார். ஆனால் என் முகத்தை அறிந்தவர்கள் என மிகமிகச் சிலரே இருப்பார்கள். தலைமைக்குக்கூட என் முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் பன்னிரண்டு வருடம் முன்னரே முற்றிலும் நிழலுக்குள் சென்று விட்டவன். மறுமுறை ஓர் இளைஞனைச் சந்தித்தேன். அவனும் என் முகத்தை அடையாளம் காணவே முயன்றான்.

மூன்றாவது முறை வந்தவர் இந்திய அதிகாரி போல் இருந்தார். மீசை இல்லாத முறைப்பான முகத்தில் கன்னங்கள் தொங்கின. குடியின் கனம் கொண்ட கண்ரப்பைகள். ஒரு ஓட்டலின் உள் அறை அது. மேலே மின்விசிறி சுழல்வதை மேஜையின் ஈரத்தின் மீது பிரதிபலிப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். இருவரும் காபி சாப்பிட்டோம். அவர் பில் கொடுத்தபின் என்னிடம் சில ஆவணங்களை நிரப்பி கையெழுத்திட்டு தரும்படி கோரினார். அது என் கைரேகையை பரிசோதிக்க என்று நான் அறிந்திருந்தேன். என்னுடைய ரேகைகள் எங்கும் இருக்கவில்லை.  அவர் அதிகம் பேசவில்லை. நான் கையெழுத்திடும்போது என்மீது அவரது கண்களை உணர்ந்தேன். ”சரி…பாப்போம்” என்று அவர் கைகுலுக்கியபோது அவரது கைகள் ஈரமாக இருப்பதை உணர்ந்தேன். ஜோர்ஜிடம் தலையசைத்தபின் அவர் ஒரு அம்பாசிடர் காரில் ஏறிச் சென்றார். ஜோர்ஜ் ”என்ன சொன்னவர்?” என்றான். ”ஒண்ணுமில்லை…” என்றேன். ”நல்லமா முடியும் அண்ணை” என்றான் ஜோர்ஜ்

அதன்பின்னர்தான் நான் அவர்களின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே சிலநாள் வெறுமே சென்று வந்துகொண்டிருந்தேன். இந்திய உளவுத்துறைக்கு மிக நெருக்கமான அமைப்பு அது என்பது அந்த அமைப்பில் ஒரு உதாசீனத்தை உருவாக்கியிருந்தது. அங்கே ஒருமுறைகூட என் குடலை எவரும் சோதனையிடவில்லை. ஆகவே அதன்பின்னர் நான் என் செல்போனுடனேயே செல்ல ஆரம்பித்தேன். ஒருமாதம் கழித்தபின்னர் என்னை கடலுக்குக் கூட்டிச்சென்றார்கள். கடலில் இரவெல்லாம் அலைந்தபின் திரும்பி வந்தோம். என்ன தேடினோம் என்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களுக்குள் நான் நுழைந்துவிட்டேன் என்று உறுதியாயிற்று. அவர்களில் சிலர் என்னிடம் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தார்கள். சார்லஸ் என் பெயரல்ல என்பதை அவர்கள் ஆரம்பத்திலேயே ஊகித்துவிட்டிருந்தார்கள். நான் சைவன் என்று அவர்களில் ஒருவர் பேசும்போது சட்டென்று சொன்னதை நான் கவனித்து பேசாமல் இருந்தேன்.

மொத்தம் ஏழுமாதம் ஆறுநாட்கள் நான் அவர்களுக்காக வேலைசெய்தேன். முப்பது முறைக்கும் மேலாக நான் அவர்களின் செயல்பாடுகளில் பங்கெடுத்தேன். கடலுக்குள் படகுகளில் சென்று கப்பல்களில் இருந்து பெட்டிகளை இறக்கிக் கொண்டுவந்து கடலோர வீடுகளில் பதுக்கினோம். அவற்றை மாலத்தீவு படகுகளுக்கு கொண்டு சென்று ஏற்றி விட்டோம். மாலத்தீவுபடகுகளில் இருந்து வந்த சிலரை ரகசியமாக ஊருக்குள் கொண்டுசென்று சேர்த்தோம். என் செல்போனுடன் நான் எப்போதும் இருந்தேன். அது என்னை மறந்தது போலிருந்தது மலம் கழிக்கும்போது அதை எடுத்துப்பார்த்து சார்ஜ் இல்லையென்றால் பல்ப் ஹோல்டரில் இருந்தே சார்ஜ் கொடுத்துவிட்டு திரும்ப வைத்துவிடுவேன்.

நான்கு மாதங்களுக்குள் ஜோர்ஜ் முகாமிலிருந்து வெளியே வந்து நகருக்குள் ஒரு வீடு எடுத்துக்கொண்டான். பால்காய்ச்சும் சடங்குக்கு என்னைக் கூப்பிட்டிருந்தான். இரண்டே அறைகள். ஒன்று சமையலறை, ஒன்று படுக்கையறை , வரவேற்பறை எல்லாமே. புதியதாக பாய் தலையணை சாமிபடங்கள் எல்லாம் வாங்கியிருந்தான். சிறிய சமையலறை முழுக்க ஏராளமான புதிய அலுமினியப் பாத்திரங்களும் பிளாஸ்டிக் பாத்திரங்களும் கண்ணை கூச வைத்தன. ஜோர்ஜின் மனைவியின் முகம் பொலிவுடன் இருந்தது. ஒடுங்கிய கன்னம்கூட சற்றே உப்பியதாக தோன்றியது. ஜோர்ஜ் அந்தோனியார் படத்தின் முன் ஊதுவத்தி ஏற்றி வைத்து குடும்பத்துடன் ஜெபம் செய்தான். நான் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து முள்தாடி வழியாக சொட்டிக்கொண்டிருந்தது. உதடுகளை இறுகக் கடித்து அழு¨கையை அடக்கினான். அவன் மனைவியும் அழுவதைப்போல இருந்தாள்.

ஜோர்ஜ் ஜெபம் முடிந்து எழுந்தபோது உற்சாகமாக இருந்தான். ”இனிப்பு சாப்பிடுங்க அண்ணை”என்று ஒரு பொட்டலம் லட்டு எடுத்து என்னிடம் நீட்டினான். நான் ஒன்று எடுத்துக்கொண்டேன். ”புள்ளை வந்த சமயம் நல்ல சமயம் அண்ணை” என்றான் ஜோர்ஜ். ”எந்த பிள்ளை?” என்றேன். ஜோர்ஜ் வெட்கத்துடன் அவன் மனைவிக்கு நான்குமாத கர்ப்பம் என்று சொன்னான். நான் அவனை வாழ்த்தினேன். அவன் மனைவி பாலைக் காய்ச்சி சீனி போட்டு இரு டம்ளர்களில் கொண்டுவந்து தந்தாள். ஜோர்ஜ் ஒரு புதிய முழுக்கை சட்டையும் பாண்டும் எடுத்திருந்தான். அதைப்போட்டுக்கொண்டு அவன் வெளியே செல்ல ஆயத்தமானான். சினிமாவுக்குத்தான் போகிறார்கள் என்று தெரிந்து ”நான் கிளம்புகிறேன்” என்றேன். ”நல்ல சினிமா அண்ணை…திருப்பாச்சி..” என்றான் ஜோர்ஜ். ”பரவாயில்லை” என்று நான் கிளம்பினேன்.

மறுமாதமே என்னையும் முகாமிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். நான் அலுவலகத்திலேயே தங்கிக்கொள்கிறேன் என்றேன். அலுவலகத்தில் என்னைவிட மூத்தவராக இருந்தவர் நாற்பது வயதான சூசை மாஸ்டர். நான் அவருடன் ஒரே அறையில் தங்கிக்கொண்டேன். அவர் எதுவுமே பேசக்கூடியவர் அல்ல. ஒஎரு பெரிய டிரங்குப்பெட்டி வைத்திருந்தார். அதற்குள் திருசொரூபங்கள் மூடியின் அடிப்பகுதியில் இருக்கும். அதிகாலையில் குளித்துவிட்டு வந்து அதன் முன் அமர்ந்து ஒருமணிநேரம் வரை ஜெபம் செய்வார். பின்னர் காலையுணவு. அவருக்கு சர்க்கரை நோய் இருந்தமையால் காலையில் கேழ்வரகுக் கஞ்சிதான். அதன்பின்னர் எல்லா நாளிதழ்களையும் ஒருவரிகூட விடாமல் வாசிப்பார். விளம்பரங்களைக்கூட வாசிப்ப்பார். சிறிய நோட்டு புத்தகம் ஒன்றில் குறிப்புகள் எடுத்துக்கொள்வார். அலுவலகத்தில் குமுதம் விகடன் கல்கி முதல் பெண்கள் மாத இதழ்கள் வரை எல்லா பிரசுரங்களும் வாங்கப்படும். அவை சூசை மாஸ்டருக்காகத்தான் வாங்கப்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்படும்

அலுவலகத்தில் ஆறு இளைஞர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு கீழே  இரு பெரிய அறைகள் இருந்தன. அவர்களின் உலகம் தனியானது. எங்களை மரியாதையுடன் அதற்கு வெளியே நிறுத்தினார்கள். எங்களைப் பார்த்ததுமே அவர்களின் உற்சாகப் பேச்சு நின்றுவிடும். பணிவுடன் எழுந்து நிற்பார்கள். சொன்ன வேலைகளை மறுபேச்சில்லாமல் செய்வார்கள். அத்தனைபேருக்கும் பக்கத்தில் ஒரு மெஸ்ஸில் இருந்து தினமும் அசைவ சாப்பாடு வந்துவிடும். மீன் கறி எல்லாம் இருக்கும். ஆனாலும் வேலை இல்லாத நாட்களில் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கும்பலாகக் கிளம்பிச் சென்று பரோட்டா சாப்பிட்டு சினிமாவும் பார்த்துவிட்டு வருவார்கள். அவர்களின் அறை வழியாக வெளியே கடந்துசெல்லும்போதெல்லாம் எப்போதும் அவர்கள் சினிமாவைப்பற்றியே பேசுவதைக் கேட்டிருக்கிறேன். வேறு எதிலுமே அவர்களுக்கு ஆர்வமில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமாக இருந்த இலட்சியக் கனவு சினிமாதான் என்று எனக்கு தெரியும்.

அவர்களின் அறைக்குள் சிறிய போர்ட்டபிள் டிவி ஒன்று வைத்திருந்து இரவு நெடுநேரம் வரை அதில் சினிமா பார்ப்பார்கள். நானும் மாஸ்டரும் மேலே சென்று விளக்கை அணைத்தபின் சட்டென்று கீழே ஆழமான அமைதி ஏற்பட்டது என்றால் அவர்கள் நீலப்படம் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். மெல்லிய ஒலிகளைச் செவிகூர்ந்தால் கேட்க முடியும். இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதேனும் ஓர் இயக்கத்தில் இருந்தவர்கள். இன்றுகூட ஒரு ரகசிய அமைப்பு அவர்களை நம்பி இயங்குகிறது. அந்த ஆச்சரியம் சில சமயம் என்னை சொல்லிழக்கச் செய்துவிடும். ஆனால் ஒரு நெருக்கடியின்போது அவர்கள் சட்டென்று பயிற்சி பெற்றவர்களாக வெளிப்படுவார்கள். என்பதையும் கண்டிருக்கிறேன்.

ஒருமுறை கடலில் இயக்கத்தின் படகு ஒன்றைக் கண்டபோது நாங்கள் திரும்பி தப்பினோம். அவர்கள் அதிவேகப் படகால் எங்களைத் துரத்தியபடி சுட்டார்கள். தூரத்தில் டப்டப்டப் என்று சிறிய ஏ.கே.நாற்பத்தேழு வெடித்ததன் நீலச்சுடரதிர்வைக் கண்டேன். குண்டுகள் எங்களை நெருங்காதென்றாலும் அட்ரினலின் கொப்பளித்து தலைக்கேறியது. அந்தப்போதையை அனுபவித்த ஒருவன் மனதுக்குள் அதற்காக ஏங்கியபடியேதான் இருப்பான். மனிதர்களின் ஆதிக் குதூலகம் அது. காமம் போல, பசியடங்குதல் போல. நான் என் முழு மனமும் செயல்படும் தருணத்தை மீண்டும் அடைந்தேன். வேண்டுமென்றே என் படகின் பின்பக்கம் சென்று நின்றுகொண்டேன். இந்திய எல்லைக்குள் வந்ததும் அவர்களின் படகு விலகிச் சென்றது. பையன்கள் ‘ஹோ!’ என்று கூவினார்கள். என் உடல் மெல்ல முறுக்கவிழ்ந்தது. ஓர் உடலுறவு முடிந்து மீள்வதுபோல. இரண்டரைமணிநேரம் நீண்ட ஒரு உடலுறவு. அந்தப்போதையை அறிந்தவர்கள்தான் அவர்கல் ஒவ்வொருவரும்.

அந்த அமைப்பின் முக்கியமான மூத்த உறுப்பினர்களில் ஒருவராக நான் இயல்பாகவே மாறிக்கொண்டிருந்தேன். ஜோர்ஜை அடிக்கடி பார்க்க முடியவில்லை. அவன் வேறு எங்கோ நியமிக்கப்பட்டிருந்தான். ஒரே ஒருமுறை அவனை சாலையில் பார்த்தபோது மெல்லிய புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டுச் சென்றான். அலுவலகத்திற்கு சூசை மாஸ்டரின் செல்போனில் ஆணைகள் வந்தன.  அவற்றை நாங்கள் நிறைவேற்றினோம். மிக அபூர்வமாக மட்டும் நான் ஏற்கனவே பார்த்தவர்கள் வந்தார்கள். அந்த இந்திய அதிகாரியை நான் மீண்டும் பார்க்கவேயில்லை.

நான்குமாதங்கள் தாண்டியபின்னர் சூசை மாஸ்டர் ஒருநாள் விடைபெறாமலேயே கிளம்பிச் சென்றார். அந்த விசித்திரமான மனிதருடன் ஒரே அறையில் அத்தனை மாதங்கள் தங்கியிருந்தும்கூட நான் அவரிடம் மொத்தம் இருபது சொற்றொடர்களுக்கு மேல் பேசியதில்லை.  அவரது பலவகையான பழக்கங்களை மட்டும் கூர்ந்து கவனித்திருந்தேன். அவர் பொடிபோடும் வழக்கம் உள்ளவர். முழங்கையில் பொடியை தீற்றி மூக்கை அதில் தேய்த்து உறிஞ்சுவது அவரது வழக்கம். இரவு போர்வையால் தன்னை போர்த்திக்கொண்டு சுய இன்பம் செய்தபின் கழிப்பறைக்குச் சென்று மீண்டு வந்து இன்னொருமுறை ஜெபம்செய்துவிட்டு படுப்பார். சற்றே முன்பற்கள் எத்திய கரிய மனிதர். தலைகுனிந்து அவர் அமர்ந்திருப்பதைப்பார்க்க சிறகுகளை தொய்ய விட்டு அமர்ந்திருக்கும் கழுகு போல் இருக்கும். அவர் போகும்போது அந்த செல்போனை என்னிடம் தரச்சொல்லி ஆணை இருப்பதாகக் குறிப்பிட்டுக் கொடுத்தார். அன்றுமுதல் நான் அந்த அலுவலகத்துக்கும் அந்தச் சிறிய குழுவுக்கும் தலைவனாக ஆனேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஞாநி
அடுத்த கட்டுரைபயணம்