அன்புள்ள
ஜெயமோகன்;
கோகுலுக்கான
உங்கள் பதிலைப் படித்தபோது எனக்குள் இன்னும் சில சந்தேகங்கள் உதிக்கின்றன.
<<<<<நம்முடைய சிந்தனைகள், கலைகள், வாழ்க்கைமுறைகள் அனைத்தும் மதம் என்ற வடிவிலேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன. >>>>>>
பிரான்ஸிலும்
ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் இருக்கும் இந்துக்கோவில்களின் தினசரிப்பூஜைக்கு கரும்பும், வெத்திலையும், அருகம்புல்லும், வாழையிலையும், இளனியும் விமானத்தில் வந்து இறங்குகின்றன. இன்னும் இப்புலம்பெயர்ந்த நாடுகளில் இங்கே சூரன்போர்கூட ஆட்டுகிறார்கள். இது ஒரு absolute waste என்று ஏன் உங்களுக்குத்தெரியுதில்லை, மூடநம்பிக்கையையும் சேர்த்தல்லவா இறக்குமதி செய்கிறீர்கள் என்று கேட்கும் எங்கள் பிள்ளைகளுக்கு என்னபதில் சொல்லுவது? இவையெல்லாம் மதமென்கிறபெயரால் அறியாமை செய்யும் பேய்க்கூத்து என்று ஏன் அவர்களுக்குச்சொல்லப்படாது?
.<<<<< பௌத்தம் மற்றும் அத்வைதத்தின்படி [நான்X அது] என்ற பேதபுத்தியே அறியாமை. அறியாமையே நரகம். அதிலிருந்து விடுபடுதலே முக்தி. அதை ‘ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்’ என்கிறார் நாராயணகுரு. அவ்வாறு ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணுவதையே நான் செய்துவருகிறேன் என்று சொல்லலாம்.>>>>
ஒவ்வொன்றாய்
தொட்டு ஒடுங்கும் பொருள் அதாவது சடம் ஒடுங்கும்போது பரம் தெளியும் என்று சொல்லப்படுகிறது. ஸ்தூலபிண்டங்கள் அனைத்துமே மாயை என்பதல்லவா பௌத்தம்? சடம் எப்போதுதான் ஒடுங்கும் மரணத்திலா? சடத்தை உணரமுடியாத நிலை மரணத்தில்தானே ஊண்டாகும். இன்னும் முக்திபற்றி பௌத்தம் எங்காவது பேசுகிறதா?
குருவோ
, சிஷ்யனோ, சாமானியனோ ஞானம் என்பது மானுஷப்பிறவிக்குத்தானேயுண்டு? ஸ்தூலம் எல்லாம் மாயை என்றாகும்போது ஞானம் என்பதுவும் ஒரு நிலையில் மாயை என்றுதானே ஆகிறது. மனிதனின் மரணபயம்தான் ஆன்மீக சிந்தனையை தேடலை உண்டுபணுகிறதோ என்பதும் என் சந்தேகம். இவ்விடத்தில் விளக்கம் போதவில்லை.
மற்றும்படி
பதில் பூராவும் நிறைந்த தந்தைமையை உணர்ந்தேன்.
நன்றி.
அன்பு
.
P.Karunaharamoorthy
****
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
தாங்கள் நண்பர் கோகுலுக்கு அளித்த பதிலை படித்தேன் என்னுடைய எண்ணத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தமிழக பிராமணக் குடும்பங்களை உதாரணம் காட்டிஇருந்தீர்கள் அனால் உண்மை என்னவென்றால் குழைந்தைகளுக்கான சுதந்திரம் எங்கும் இல்லை என்பதே மற்ற சாதியினர் வெளிப்படையாக வெறுப்பை கக்கும் போது இவர்கள் மிக நுணுக்கமாக தங்கள் வக்கிரத்தை வெளிப்படுகிறார்கள் என்பதே நான் கண்ட உண்மை.அந்த குழந்தைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட துறைகள் குறைவு வணிகம், மருத்துவம் பொறியியல் அவ்வளவே.பெற்றோரை விட சமுதாயம் அவர்களை அடையாளப்படுதியிருக்கும் விதம் கொடுரமானது.பிராமணர் ஒருவருக்கு இன்றைக்கு தமிழார்வம் இருப்பின் அதை விட பெரிய துயரம் அவருக்கு இருக்க முடியாது. எழுத்தாளர் வாஸந்தி ஒரு முறை சொன்னார் தான் ஒரு முறை சு.சமுத்திரம் அவர்களோடு விவாதம் புரிந்து கொண்டிருந்த போது கண்ணகியை தன்னால் ஒரு ஆதர்ச உதாரணமாக தமிழ் எழுத்தாளர்கள் உதாரணப்படுத்துவதை ஏற்க முடியவல்லை என்று இதற்க்கு சமுத்திரம் சொன்ன பதில் உங்களால் கண்டிப்பாக முடியாது. என்று! இதன் மூலம் வாசந்தியையும் அவரது சாதியையும் சுட்டிக்காட்டவும் அவரை தனிமைப்படுத்தவும் முயலும் அவருடைய எண்ணம் குறிப்பாக எழுத்தாளர்கள் சிந்திப்பவர்கள் கூட இப்படி நடந்துகொள்ளும் விந்தை எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இப்படி குடும்பமும் சமுதாயமும் கொடுப்பட்ட அடையாளத்தை மீறி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள அவர்களுக்கு அனுமதி கிடையாது. நான் மத நம்பிக்கை அற்றவன் அனால் என் சாதிக்கேற்ப எனக்கு மதநம்பிக்கை இருந்தே தீர வேண்டும் அதிலிருந்து எனக்கு விலக்கு கிடையாது. என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை என்னிடமிருந்து பறிக்கப்படும் துயரம் மிகவும் கொடிது இது எல்லா சாதியனருக்கும் நடக்கிறது என்றாலும் பிராமணர்களிடம் சமுதாயம் மிகவும் கறார் தன்மையோடு நடந்து கொள்கிறதே. பெற்றோர்களை விடவும் நம்முடைய கல்விகொள்கை மிகவும் முட்டாள்தனமானது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. கல்வி சார்ந்தே வேலை என்றாகிப்போன இந்த சூழலில் கற்பிக்கப்படும் கல்வி மிகுந்த மனக்காயத்தையும் தேவையில்லாத தாழ்வு மனப்பான்மையும் அல்லது உயர்வு மனப்பன்மையுயும் ஏற்படுத்துவதை தாண்டி அது சாதிப்பது வேறொன்றுமில்லை.தவறாக நினைக்காதீர்கள் ஜெயமோகன் உங்கள் மகனை பற்றி எழுதும் போது அவரை எப்படியாவது சயின்ஸ் குரூப்பில் சேர்க்க வேண்டும் என்று தங்கள் மனைவியார் விரும்பியதாக எழுதி இருந்தீர்கள் அவர் ஒரு தமிழ் எழுத்தாளரின் மனைவி அதை தாண்டி ஒரு நல்ல வாசகி என்பதாக உங்கள் மூலமாக அவரைப்பற்றி எங்களுக்கு அறிமுகம். அவரால் கூட தன் மகன் தமிழ் படிப்பதையோ அல்லது தன் விருப்பம் சார்ந்து இயங்குவதையோ அனுமதிக்க முடியவில்லை அப்படி இருக்கும் போது சராசரியான பெற்றோர்கள் இன்றைய சூழலில் தங்கள் பிள்ளைகளை வதைக்காமல் விட்டுவைக்க முடியாது அவர்கள் சூழல் அப்படி. இந்த கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிற நான் முதுகலை பட்டம் பெற்றவன் அதிலே எனக்கு கொஞ்சம் கூட பெருமை கிடையாது. என்னுடைய நேரத்தை இந்த முட்டாள்தனமான பட்டத்தை பெறுவதற்காக செலவு செய்திருக்கிறேன். எனக்கு தத்துவ ஆர்வமும் இலக்கிய ஆர்வமும் உண்டு நிர்ப்பந்தம் காரணமாகவே முதுகலை வணிகம் படிக்க நேரிட்டது.
இன்றைக்கு ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் நான் ஐந்திலக்க சம்பளம் பெறுவது என் பெற்றோக்கு மிக பெருமிதமான ஒரு விஷயம் ஆனால் இப்படி வெறி பிடுத்து உழைப்பதில் பணம் வந்து விடுகறது. அது மட்டுமே எனக்கு போதுமென்றால் நான் இந்த கடிதத்தை எழுதுவதில் அர்த்தமில்லை.
சந்தோஷ்
****
அன்புள்ள ஜெயமோஹன்,
அஹோபிலம் குறித்த தங்கள் கட்டுரை படித்தேன். சென்ற ஆண்டு நவம்பரில் இத்தலத்திற்குச் சென்றிருந்தேன். நவநரசிம்மரையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கலையும் ஆன்மிகமும் இணைந்த அற்புதத்தளம்.அதிர்வுகள் நிறைந்த பகுதி.நிச்சயம் ஒரு நாளில் காண இயலாது.ஒவ்வொரு நரசிம்மரையும் விவரித்துச்சொல்லலாம்.வாய்ப்பிருப்பின் பகிர்ந்துகொள்ளலாம்.
நன்றி
கந்தசுப்ரமணியம்
***
ரொம்ப நாளா நானும் அஹோபிலம் போணும் போணும்னு நெனப்பன் சார் ஆனா அதுக்கு இது வரைக்கும் ப்ராப்தம் அமையல. நீங்க போயிட்டு வந்து அந்த experience அ பகிர்ந்துக்கும் போது, நானே போயட்டுவந்தா மாதிரி இருந்துது. அது போக அடுத்து போறவங்களுக்கு ஒரு guide மாதிரி இருக்கு உங்க கட்டுரை. அதுவும் அந்த மழை scene ம் அந்த பாறை பிளந்துகொண்டு வர்றா மாதிரி இருக்குற falls ம் அருமையோ அருமை. அதுவும் photo போட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
—
Shankar
**
அன்பின் ஜெயமோஹன் ஐயா,
உண்மையில் இந்தக் கட்டுரை படிக்கும் போது பல நினைவுகளில் கண்களில் நீர் வழிய படித்து முடித்தேன்.
அலுவலக நண்பர்கள் என் உடல் நிலைக்கு என்ன என்று கேட்கும் அளவிற்கு கண்களில் நீர்வழிய
ஒரு 10 முறையாவது படித்திருப்பேன். சிறுவயது நினைவுகளைக் கிளறிவிட்டது.
அஜீதன் உங்களுக்கும் உங்களுக்கு அஜீதனும் இருவரின் தவப்பயணால் கிடைத்த உறவென்றே நம்புகிறேன்.
இந்தக் கட்டுரையைத் தேடக் காரணமாயிருந்தது ஒரு கேவலமான மனிதரின் கட்டுரையைப் படிக்க நேர்ந்த போது தான்.
கடவுளும் காலமும் அவருக்கு பதில் சொல்லட்டும்.
உங்களின் இந்தக் கட்டுரையை பிரதி எடுத்து என் மனைவிக்கு படிக்கக் கொடுக்கப் போகிறேன்.
மிக்க நன்றி ஐயா
—
*ஜீவ்ஸ்*
http://photography-in-tamil.blogspot.com
***