«

»


Print this Post

ஐந்தாவது மருந்து [சிறுகதை]


எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத் தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான்.

ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்குக் கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிப் பாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூடப் பார்த்தேன்.

‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப்பாக்கிறப்ப வரவேண்டிய ஊர்தான்னு படுது ‘என்றேன்.

‘தளவாய் கிராக்கு மட்டுமில்லை. அவனோட நல்ல கட்டுரைகள் முக்கிய ஜேர்னல்களில வந்திருக்கு ‘ என்றான் பிரதாப் மேனன்.

‘எயிட்ஸுக்கு மருந்தா ? அடுத்த மருத்துவ நோபல் பரிசு வாங்குறவனை  இந்த கிராமத்தில் பாக்கப் போறமா ? சினிமாக்கதை மாதிரில்லா இருக்கு ?

‘பாக்கலாம் ‘ என்றான் பிரதாப்.

அச்சன் குளம் வசதியான வேளாள வீடுகள் கொண்டது.அழி இறக்கிய இரண்டுதட்டு ஓட்டு வீடுகள் .சிமிண்ட் களமுற்றங்கள். பெரிய வைக்கோல்போர்கள். களங்கள்தோறும் ஏதாவது பொருட்கள் உலர, பெண்கள் காவலிருந்தனர்.

ஆறுமுக பவனம் ஊரிலேயே பெரிய வீடு. களமுற்றத்தில் கார் சென்று நிற்க திண்ணை பெரிதாகியபடியே வந்தது. ஐம்பதுபேர் வரிசையாகப் படுக்கலாம். முற்றத்தில் உளுந்து காயப்போட்டிருந்தது. திண்ணையிலிருந்த கிழவர் கண் மீது கைவைத்துப் பார்த்தார்.

‘வணக்கம் ‘

‘வாங்க தம்பி … உக்காருங்க…ராஜப்பாவ பாக்க வந்தியளா ? ‘ ‘

‘ஆமா. திருவனந்தபுரத்திலேருந்து வாறம் ‘

‘ஒக்காருங்க . பார்வதீ ‘

ஒரு தடித்த அம்மாள் மோர் கொண்டுவந்தாள் .டம்ளர்களிலல்ல, பெரிய செம்பில் . விட்டுக்குடிக்க சிறு பித்தளைப் போணிகள்.

‘நீங்க அவனோட கூட்டுக்கரம்மாரா தம்பி ? ‘

‘ஆமா, அவன்கூட சேந்து படிச்சோம் ‘

‘கோட்டும் சூட்டுமா காரில வாறீங்க. இவனும் நல்லாத்தானே படிச்சான். எப்பிடி இருக்கான் பாருங்க. பண்டாரம் பரதேசி மாதிரி. எப்பிடி இருக்கவேண்டிய பய… ‘

அதற்குள் மாடியிலிருந்து தளவாய் ராஜா இறங்கி வந்தான் . ‘ வாடே வாடே ‘ என்று சிரித்தபடி . நரைத்தாடி. காவிவேட்டி, துண்டு. ‘வாடே மேல போலாம் ‘

‘என்னடே சாமியாராயிட்டியா ? ‘

‘எங்க ? ஆனா ஊரிலே இந்தவேசம் பெரிய செளரியம். கிராக்குத்தனமா இருக்கலாம். கல்யாணம் காட்சிக்குப் போகாட்டி பிரச்சினையில்லை. இதக் கட்டாம கிராமத்தில சுதந்திரமா இருக்க முடியாது. என்ன , அப்பப்ப சிலர் திருநீறு பூசிக்கணும்ணு வருவாவ. சரி வா ‘

அவன் அறை ஒரு பெரிய ஆய்வகமும் ஒரு நூலகமும் குரங்குகளால் இரண்டறக் கலக்கப்பட்டது போல இருந்தது.

‘எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டேன்னு எழுதியிருந்தே … ‘

‘ஆமா. அதப்பத்தி இன்னும் யாருட்டயும் சொல்லல. உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும். பேசாட்டி எனக்கு தல வெடிச்சுடும்போல இருந்தது… அதான் எழுதினேன்…. ‘

‘வெளையாடறியா ? ‘

”ஒரு அசல் கண்டுபிடிப்பு இந்தியாவிலே நடக்கவே முடியாதுண்ணு நீ நம்பறதுதான் பிரச்சினை. காரணம் இங்க நவீன மருத்துவம் வெறும் நுகர்பொருளாத்தான் இருக்கு. ஆராய்ச்சியே நடக்கலை. நவீன மருத்துவமே வெள்ளைக்காரனுக்குரியதுண்ணு நாம நம்பறோம் .. ‘

‘அதான் உண்மை ‘

‘ஆனா நமக்குண்ணு அதைவிட பழசான ஒரு மருத்துவ மரபு இருக்கு.. உதாரணமா சித்த மருத்துவம்… ‘

‘இருக்கு. ஆனா இப்ப சொன்னியெ அதான் சரி. அது பழசு. அதில ஆராய்ச்சியே நடக்கலை. அறிவியல் ரீதியான அணுகுமுறையே கெடையாது. எல்லாருக்கும் பொதுவான எந்த நிரூபணமுறையும் இல்லை. முக்காப்பங்கு வெறும் மோசடி . அதிலயும் இண்ணைக்கு சித்த மருத்துவம்ங்கிறது ஸ்டாராய்டுகளால ஆடற ஆட்டம் . ஏகப்பட்ட உலோகங்கள் வேற . பாதி மருந்துகள் சிறுநீரகத்த சீரழிச்சுடும். ‘என்றான் பிரதாப்

‘நான் மறுக்கல்லை. இப்ப அது என் வேலை இல்லை. இண்ணைக்கு நீ பாக்கிற சித்த மருத்துவம் உண்மைல அதிக பட்சம் பதினாறாம் நூற்றாண்டிலே உண்டாகி வந்தது. ஆனா அது உண்மைல குமரிக்கண்டத்தோட காலம் முதல் இருந்துட்டு வார ஒரு வைத்திய மரபு . உலகத்திலேயே பழைய மரபு இது. அந்தக்காலத்த வச்சு பாத்தா உலகத்திலேயே முன்னேறிய மரபும் இதுதான். ஆனா படிப்படியா அது அழிஞ்சுட்டு வந்தது .ஏன்னா வரலாற்ற எடுத்துப் பார்த்தா ஒண்ணு தெரியும், தமிழ் நாகரீகம் அழிய ஆரம்பிச்சபிறகுள்ள காலம்தான் நம் கவனத்துக்கே வந்திருக்கு. தொல்காப்பியமே கூட அழிஞ்சுபோன ஏராளமான நூல்களோட சாரத்தை சுருக்கி எதிர்காலத்துக்காக சேத்து வச்ச நூல்தான். எல்லாப் பாட்டும் ‘என்மனார் புலவர் ‘னுதான் முடியுது. தமிழ் வைத்தியமுறையும் அழிய ஆரம்பிச்ச காலம்தான் நாம அறியக்கூடிய தொல்பழங்காலம். அதுக்கு முன்னால பல ஆயிரம் நூல்கள் இருந்திருக்கு. ‘

தளவாய் தொடர்ந்தான் ‘ ‘ மழை விட்ட பிறகு தூவானம் மாதிரி சில ஏட்டுச்சுவடிகள் கிடைக்க அதை வச்சு பிற்காலத்தில உருவாக்கின ஒரு மருத்துவமுறைதான் சித்த மருத்துவம். நாம இப்ப பாக்கிற சித்த வைத்தியம் அத நவீன மருத்துவ முறைப்படி பதினெட்டாம் நூற்றாண்டில சிலர் மாற்றி அமைச்சது…. ‘

‘அரைகுறை அறிவு அறியாமையவிட ஆபத்தானது… ‘

‘ஆமா. கண்டிப்பா. எனக்கு தற்செயலா எங்க தாத்தாவொட அண்ணா வச்சிருந்த சுவடிகள் சிலது மச்சிலே கிடைச்சது. பிராமி லிபியிலே எழுதின சுவடிகள் கூட சிலது அதிலே இருந்தது. அதப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு கிறுக்கு பிடிச்சுதூண்ணு அம்மை சொல்வா.அது சரிதான் . ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் நடுவிலே கிடைக்காம போன ஆயிரம் நூல் இருக்கு. அது என் கற்பனையத் தூண்டிவிடுது . விடவே முடியலை. தூக்கமே இல்லைண்ணு வச்சுக்கோ ‘

‘நீ உன் வாழ்க்கையை வீணடிக்கிறே. அவ்வளவுதான் சொல்வேன் ‘என்றான் பிரதாப்.

‘எல்லாருமே ஏதாவது ஒரு விதத்திலே வீணடிச்சுட்டுதான் இருக்கோம்ங்கிறது என் எண்ணம் . ‘என்று தளவாய் சிரித்தான். ‘இண்ணைக்குள்ள சித்த வைத்தியத்தொபொட  முக்கியப் பிரச்சினை அது அலோப்பதி முறைகளை மறைமுகமா ஏத்துக்கிட்டு அதுக்கேத்தாப்பிலே மாத்தப்பட்டிருங்கிறதுதான். இரண்டு முறைகளுக்கும் அடிப்படையே வேற. நேர் மாறுண்ணு கூட சொல்லலாம். அலோப்பதி நோய்க்குக் காரணத்தை மனித உடலுக்கு வெளியே தேடுது. கிருமிகள் , பூச்சிகள் இந்தமாதிரி. சித்த மருத்துவத்தப் பொறுத்தவரை நோய்ங்கிறது மனித உடலிலேயே இருக்கு. மனித உடல் அதோட சமநிலையை இழக்கிறதுதான் நோய். அதாவது நோய்க்கு எதிரா உடலை தயாரிக்கிறதுதான் சித்த மருத்துவம், கிருமியக் கொல்றது இல்லை. நோயில்லாதபடி வாழ்க்கையை அமைச்சுக்கறதப்பத்தித்தான் அது பேசுது.’

‘நான் சித்த வைத்தியத்த இப்ப நியாயப்படுத்த மாட்டேன் ‘ என்று அவன் தொடர்ந்தான். ‘ இண்ணைக்கு நவீனமருத்துவத்தில்தான் புது ஆராய்ச்சிகள் இருக்கு. மத்த அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தறதும் அங்கதான் அதிகம். உலகம் முழுக்க பொதுவான நிரூபணமுறைகள் அவங்களுக்கு இருக்கு . ஆனா ஆராய்ச்சிக்கு கண்டிப்பா சித்த வைத்தியம் மாதிரியான மாற்று வழிகளை பயன்படுத்திப் பாக்கணும் . நான் செஞ்சது அதுதான் ‘

‘உன் மருந்து சித்த மருந்தா ? ‘

‘அப்டி சொல்ல முடியாது. என் கொள்கை அங்கேருந்து முளைச்சது, அவ்வளவுதான் ‘ என்றான் தளவாய்.

‘எய்ட்ஸுக்கு மருந்துண்ணு இதுவரை அம்பது சித்தவைத்தியனுங்க அறிவிச்சாச்சு .எல்லாமே போலி ‘ என்றான் பிரதாப்.

‘அவங்கள்லாம் பண்ணிய தப்பு ஒண்ணுதான். சித்த வைத்தியச் சுவடிகளிலே எய்ட்ஸ் மாதிரியான ஒரு நோயோட இலக்கணம் இருக்கு. அதுக்கான மருந்தை இவங்க அப்டியே சொல்றாங்க. அதெல்லாம் பிரயோசனப் படறதில்லை ‘

‘ஏன் ? ‘

‘ஏன்னா நோய் அதுதான். கிருமி வேற ‘ என்றான் தளவாய் . ‘பரிணாமக் கொள்கைப்படி ஒவ்வொரு உயிரும் அது சார்ந்து வாழக்கூடிய சூழலுக்கு ஏற்ப மாறிட்டே இருக்கு. இப்ப மனித உடல் ரொம்ப மாறிட்டது. பலவகையான மருந்துகளை நாம பயன்படுத்தறோம். அதுக்கேற்ப அந்த வைரஸ் தன் மொத்த அமைப்பையும் மாத்தி இன்னொண்ணா மாறிட்டே இருக்கு . இப்ப உள்ள ஹெச்.ஐ .வி கிருமி அப்டி புதிசா உருவாகி வந்தது… அதோட மரபணு அமைப்பே வேற . அதுக்கு புது மருந்துதான் வேணும். சித்த மருத்துவத்தில் தாவர மருந்துக்களை அஜீவம்னு சொல்றாங்க. பறவைகள் மிருகங்களிலேருந்து எடுக்கிற மருந்துக்கள் ஜீவம் . மத்த ரசாயனங்களும் உப்புக்களும் உலோகங்களும் ரசாயனம் . மூணுமருந்துமே இதுக்குப் பயன்படாது… ‘

‘குழப்பாம சொல்லு. உன்னோட மருந்தோட கொள்கை என்ன ? ‘

‘ அதை ஒரு கதையாத்தான் சொல்லணும். ‘ என்று அவன் ஆரம்பித்தான் ‘ தென்காசீல ஒரு ராஜ குடும்பம் இருந்தது கேட்டிருக்கியா ? பாண்டிய வம்சத்தோட ஒரு கிளை அது . அவங்க குடும்பமே மர்மமான ஒரு நோயால அழிஞ்சுபோச்சுண்ணு சரித்திரத்தகவல் இருக்கு . இது நடந்து ஐநூறு வருஷம் இருக்கும் . அப்ப அந்த நோயால கிட்டத்தட்ட அம்பதாயிரம்பேர் செத்திருக்காங்க. அண்ணைக்கு இது பெரிய எண்ணிக்கை இல்ல . அம்மை நோயால லட்சக்கணக்கானபேர் செத்திட்டிருந்த காலம் அது . தென்காசி ராஜகுடும்பம் மட்டுமில்ல அவங்களுக்கு சிகிழ்ச்சை செய்த வைத்தியங்க எல்லாருமே செத்துட்டாங்க. அவங்களில ஒரு வைத்தியர் எழுதிவச்ச நோய்க்குறிப்புகள் அதிருஷ்டவசமா கிடைச்சிருக்கு . அந்த சுவடிகள் எங்க தாத்தா கைக்கு வந்து இப்ப என் கையிலே இருக்கு. நோயின் லட்சணங்களைக் கேட்டா அசந்துடுவீங்க. காரணமில்லாத காய்ச்சல் . எடை குறையிறது. நோய் எதிர்ப்புசக்தி இல்லாம ஆகி காசம் முதலான நோய்கள் தாக்கி மெல்லமெல்ல உசிர் போயிடுது . ‘

‘எய்ட்ஸா ? உண்மையான ஆதாரமா இது ? ‘ என்றான் பிரதாப் சற்று பரபரப்புடன் .

‘அசல் சுவடியே இருக்கு . நீ பரிசோதனை செய்யலாம் ‘ என்றான் தளவாய் ‘ ராஜகுடும்பத்திலே ஒரு இளவரசனுக்கு நோய் வந்திட்டது. அவன் மனம் வெறுத்து குற்றாலம் காட்டுக்குள்ளார போனான். தற்கொலை செய்றதுக்காகத்தான். அங்க அதிகாலைல தேனருவீல குளிச்சிட்டிருந்த ஒரு சித்தரைக் கண்டான். காலில விழுந்து அவன் அழுதப்ப மனமிரங்கிய சித்தர் அவனோட ஊருக்கு வந்தார்.அவர் பேர் மாம்பழச்சித்தர். பெரும்பாலும் மாம்பழத்தையே உணவா சாப்பிடுவார்ணு கதை. அவர் முதலிலே நோயாளிகளை ஆராய்ச்சி பண்ணினார். அப்ப இருந்த எந்த மருந்துமே அந்த நோயை ஒண்ணும் பண்ணமுடியல்லை .அவரால நோயை அடையாளம்காணவே முடியலை. வாதம், பித்தம் ,கபம் அப்டாங்கிற மூணு ஆதார சக்திகளிலே உண்டாகிற சமநிலைக் குலைவினாலேதான் நோய்கள் வருதுங்கிறதுதான் இந்திய வைத்தியமுறைகளிலே பொதுவா இருக்கிற சித்தாந்தம். புராதன தரிசனமரபான சாங்கியத்திலேருந்து வந்த பார்வை அது. ஆனா இந்த மர்ம நோய் கண்ட நோயாளிகளிலே சிலருக்கு வாதம் கோபிச்சிட்டிருந்தது . சிலருக்கு பித்தம் தாறுமாறா இருந்தது. சிலருக்கு கபம் உச்சம் . என்ன காரணம்னே அவரால சொல்லமுடியல. மூன்று ஆதார சக்திகளையும் இயக்கக் கூடியது உடலில் இருக்ககூடிய மூலாதார அக்னி. அந்த தீ வலுவிழந்து அணையிறதுதான் இந்த நோய் என்று கண்டுபிடிச்சார். சித்த வைத்தியத்தோட மொழியிலே இருக்கே ஒழிய அந்த கணிப்பு சரிதான். ‘

‘ஆமாம் ‘என்றான் பிரதாப். எனக்கு அவன் அப்படி சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

‘எப்படி ? ‘ என்றேன்

‘நோய் எதிர்ப்பு சக்தீங்கிறது என்ன ? உயிர் வாழணும்னு உயிர்களுக்கு இருக்கிற அடிப்படையான துடிப்பு. செல்களிலே அதுக்கான இச்சை இருக்கு.அது இல்லண்ணா உயிர்சக்தி அழிஞ்சுபோயிட்டுதுண்ணுதானே அர்த்தம் ? ‘ என்றான் பிரதாப்

‘ சித்தர் பழைய ஆதாரங்களைத் தேடிப்பிடிச்சு பரிசீலிச்சார். அப்ப அந்த ஆதாரங்களெல்லாம் சித்தர்கள்ங்கிற நாடோடி அறிஞர்கள் மத்தியிலே வாய்மொழி மரபா இருந்திருக்கணும் . அப்ப அவருக்கு ஒரு விஷயம் தெரிஞ்சது ஆயிரம் வருஷம் முன்னாடி இதேநோய் பாண்டிய ராஜகுடும்பத்த தாக்கியிருக்கு. அப்ப போகர் இருந்தார். இவர் எந்த போகர், எத்தனையாம் போகர்ணு தெரியலை. ஆனா அவர் பேரும் போகர். அவர் ஒரு மருந்து கண்டுபிடிச்சு நோயை விரட்டினார் … கருங்குரங்கோட ரத்தம் ,சிறுநீர் ரெண்டயும் கலந்து அவர் ஒரு மருந்து செஞ்சார். அதுதான் சித்த வைத்தியத்தில முதல் ஜீவ மருந்து. அதுவரைக்கும் சித்தமருத்துவம் அஜீவமருந்துக்களை மட்டும்தான் பயன்படுத்திட்டிருந்தது. அது ஒரு பெரிய புரட்சியோட தொடக்கம்… ‘

‘ அந்த மருந்து இப்ப இருக்கா ? ‘ என்றேன்

‘இப்ப சித்தமருத்துவம் ஏராளமான ஜீவ மருந்துக்களைப் பயன்படுத்துது. சிட்டுக்குருவி லேகியம் உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சதுதான். ஆனா ஜீவ மருந்துக்களால இந்த நோயை ஒண்ணுமே செய்ய முடியல்ல. அதனாலே மாம்பழச்சித்தர் ரெண்டு வருஷம் ஆராய்ச்சி செய்து ஒரு மருந்து கண்டுபிடிச்சார். ஈயத்தையும் தங்கத்தையும் கலந்து ஒரு புது மருந்துக் கலவை . சித்த மருத்துவத்திலே ரசாயனங்களை பயன்படுத்தறது அதுதான் முதல் தடவை. இது இரண்டாவது பெரும் புரட்சி. ‘

தளவாய் தொடர்ந்தான். ‘உலோகங்களையும் ரசாயனங்களையும் சித்த மருத்துவத்தில் பஸ்பம் பண்ணியும் , ஸ்புடம் போட்டும் ,பாஷாணமா ஆக்கியும் பல வகையில இப்ப பயன்படுத்தறாங்க. அதுக்குத் தொடக்கம் மாம்பழச் சித்தர்தான். அந்த நோய் அவர் செய்ஞ்ச பஞ்ச பாஷாணத்தாலே குணமாயிட்டது. அவரோட சீடர்கள் அந்த ரசாயனவைத்தியத்தை சித்தவைத்தியத்துக்குள்ள தனி மரபா வளர்த்துப் பரப்பினாங்க ‘

‘இப்ப அந்த மருந்துகளினால பயன் இருக்கா ? ‘ என்றேன்

‘பலவிதமான நோய்களுக்கு அந்த மருந்துக்கள் இப்பவும் பயன்படுது. ஆனா எய்ட்ஸுக்கு அதனால பயன் இல்லை. ‘

‘ஏன் ? ‘

‘நவீன மருத்துவம் நோயைக் கிருமிகளோட தாக்குதலா பாக்குது. அந்தக் கோணத்திலே யோசிச்சுப்பாருங்க ‘

‘அப்ப எய்ட்ஸ் கிருமி சரித்திர ஆரம்ப காலம் முதல் இருக்கா ? ‘

‘இருந்திருக்கணும். அது மனுஷ உடலிலே சாதாரணமா இருக்கக் கூடிய ஏதோ வைரஸ் தான் . இப்பக்கூட அதன் வேறு வகை வடிவம் ஆப்ரிக்கக் குரங்குகளிலே இருக்கிறதா கண்டுபிடிச்சிருக்காங்க . அந்தக் குரங்குகளை இந்த வைரஸ் ஒண்ணும் செய்யறதில்லை. ஆப்ரிக்காவிலே தான் மனிதன் குரங்குக்கு சமானமான ஏதோ உயிரிலேருந்து பரிணாமம் அடைஞ்சு வந்தான்னு சொல்றாங்க. அப்ப இந்த வைரஸ் அப்பவே நம்ம உடம்போட சேந்து இருந்திட்டிருக்கு. அத நம் உடம்பிலேருந்து பிரிக்க முடியாது. அதன் முதல் தாக்குதல் எப்ப ?ஏன் அது நோயா ஆச்சு ? நான் நினைக்கிறேன், எப்ப மனிதன் கலச்சாரம் அடைஞ்சானோ , எப்ப குரங்கு அல்லாம ஆனானோ அப்பத்தான். சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சவா ? சீசன் பாக்காம உடலுறவு கொள்ள ஆரம்பிச்சவா ? குடும்பமா ஆனப்பவா ? தெரியலை. ஆனா குரங்குகளுக்கு இந்த வைரஸால அபாயமே இல்ல. அது தாக்குறது மனுஷனைத்தான் ‘

‘இல்லாட்டி மனுஷக் கலாச்சாரத்தைத்தான் ‘ என்றான் பிரதாப்

‘ஆமா. மனுஷக் கலாச்சாரம் இந்த வைரஸை எதுத்துப் போராடிட்டிருக்கு . மனுஷன் முதலில் பச்சிலைகள் மூலம் மருத்துவம் செய்ய ஆரம்பிச்சப்ப இந்த வைரஸ் பலமிழந்தது. ஆனா அது மெதுவா தன் உயிரியல் அடிப்படைகளை மாத்தி அமைச்சுக்கிட்டு மறுபடி தாக்கியிருக்கு. அப்பத்தான் போகர் ஜீவ மருந்துக்களைக் கண்டுபிடிச்சார் . அது இந்த வைரஸைக் கட்டுப்படுத்திட்டது. ஆனா மெல்ல ஜீவமருந்துக்களுக்கும் எதிரா அது தன்னை மாத்திக்கிட்டது. அப்பத்தான் மாம்பழச்சித்தர் ரசாயன மருந்தைக் கண்டுபிடிச்சார். அந்தமருந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்திட்டது. அதன் பிறகு ரசாயன மருந்துக்களைத் தாண்டி இப்ப புதுவடிவிலே பலமடங்கு சக்தியோட திரும்ப வந்திருக்கு. இப்ப உள்ள எந்த மருந்தும் அதைக் கட்டுப்படுத்தாது… ‘

‘ஒரு நிமிஷம் தளவாய். நீ எல்லாத்தயும் சித்த வைத்தியத்தோட நிறுத்திட்டே. இது உலகளாவிய ஒரு பிரச்சினை… ‘என்றேன்

‘இதோபார் , உலகத்திலேயே பழைய வைத்திய முறை சித்த வைத்தியம்தான். இங்கேயிருந்துதான் இந்த மருந்துக்கள் சீனாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் அரேபியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் போயிருக்கு. அந்தநாட்டு மக்கள் எல்லாருமே தமிழ்நாட்டைத் தேடிவந்த காலம் ஐநூறு வருஷம் முன்னாடிகூட இருந்திருக்கு. காலகட்டத்த வச்சு ஒப்பிட்டுப்பாத்தா சித்தவைத்தியம் தாத்தாமாதிரி. மத்த வைத்தியமுறைகள் பேரப்பிள்ளைகள் இல்லாட்டி கொள்ளுப்பேரனுங்க . எல்லாமே இங்கேருந்து போய் வளந்ததுதான். அப்பிடி இல்லைண்ணாக்கூட ஒண்ணு பாத்தாதெரியும் மருத்துவமுறைகள் அதிசீக்கிரமா உலகம் முழுக்க பரவிடுது. ஏறத்தாழ எல்லா இடத்திலேயும் புது மருந்துகள் ஒரே காலத்திலேதான் உபயோகத்துக்கு வருது… ‘ தளவாய் தொடர்ந்தான் ‘இண்ணைக்கு நவீன மருத்துவம் பயன்படுத்தற மருந்துகள்கூட மூணு வகைதான். பென்சிலின் மாதிரி தாவர மருந்துக்கள்லாம் அஜீவம். வாக்சின்கள் எல்லாம் ஜீவம். மத்ததெல்லாம் ரசாயனங்கள் . மூணுமே எய்ட்ஸை குணப்படுத்தாது. ஏன்னா இந்த வைரஸ் மூணையுமே தாண்டிப்போகக் கூடிய உயிரியல் அமைப்பை வளத்து எடுத்திட்டிருக்கு… ‘

‘அப்ப ? ‘

‘நாலாவது மருந்தைத்தான் பரிசோதனை பண்ணிப் பாக்கணும். ‘என்றான் தளவாய்.

‘என்ன அது ? ‘

‘யோசிச்சுப் பார். பூமியிலே என்னென்ன இருக்கு ? தாவரம், பிற உயிர்கள், ரசாயனங்கள் . அப்புறம் ? ஆமா, கதிர்கள்…. பல நூறு நுண்கதிர்கள்…இப்பவே நாம கதிர்வீச்சை கான்சருக்கெல்லாம் மருந்தா பயன்படுத்தறோம்.. ‘

‘நீ என்ன பண்ணினே ? கதிர் வீச்சினாலே லாபத்த விட நஷ்டம்தான் அதிகம். அதைக் கட்டுப்படுத்தவே முடியாது… ‘ என்றான் பிரதாப்

‘ஏற்கனவே கதிரியக்கம் சித்த வைத்தியத்திலே இருக்கும் . சித்த வைத்தியர்கள் ரசக்கட்டு அப்டான்னு ஒரு உத்தி இருக்கு. பாதரசத்த திடமான கட்டியா ஆக்கறாங்க. அதாவது அதன் மூலக்கூறு அமைப்பையே மாத்திடறாங்க. அது மென்மையான கதிரியக்கத்தை உருவாக்குது. நான் அந்த வழிகளைப் பயன்படுத்தி பழைய ஜீவ, அஜீவ , ரசாயன மருந்துகளிலே மென்மையான கதிர்வீச்சை செலுத்தினேன். இந்த மருந்து கிடைச்சது ‘ என்று அவன் ஒரு சீசாவைக் காட்டினான். ‘கட்டப்பட்ட ரசத்தின் அடியில் ஆறுமாசம் வைச்ச ஒரு ஜீவரசாயனக் கலவை இது . இது உடம்பிலே உள்ள செல்களுக்கு மிக மிகக் குறைவான கதிரியக்க சக்தியைக் குடுத்திடுது . கதிரியக்கத்துக்கான சக்தியை அது நம்ம உடல்வெப்பத்திலேருந்து எடுத்துக்கிடும். அந்த கதிரியக்கம் நம்ம உடல்செல்களை பாதிக்காது. பாக்டீரியாவைக்கூட ஒண்ணும் செய்யாது. வைரஸ்களைமட்டும்தான் அழிக்கும்… ‘

‘இதால பயன் இருக்கா ? ‘

‘காட்டறேன். ஓமனக்குட்டியையும் தாமஸையும் ஞாபகமிருக்கா ? ‘ ‘

‘ஆமா. எய்ட்ஸ் நோயாளிகள். என் ஆஸ்பத்திரியிலேருந்து விட்டுட்டு போனவங்க ‘

‘இங்கதான் இருக்காங்க ‘ என்ற தளவாய் கீழே எட்டிப்பார்த்தான். ‘ வரச்சொல்லியிருந்தேன். வந்திருக்காங்க . ‘ சிறு சாளரம் வழியாக எட்டிப்பார்த்து ‘ மேலே வாங்க ‘

மட்கிய குச்சி போல படுக்கையில் எழ முடியாமல் கிடந்த இருவரும் ஆரோக்கியமான உடலுடன் சிரித்தபடி வந்து நின்றதைக் கண்டு பிரதாப் பிரமித்துவிட்டான்.

‘எப்படி இருக்கே ஓமனா ? ‘

‘நல்லா இருக்கேன் சார். இங்க இன்னும் ஒரு மாசம் இருந்தா போயிடலாம்னு சார் சொல்றார் ‘

‘இவங்களை நீ நல்லா சோதனை பண்ணிப் பாக்கலாம்… இப்ப இவங்க கிட்டே எய்ட்ஸ் வைரஸ் இல்லை ‘ என்றான் தளவாய்.

பிரதாப் அவர்களையே வெறித்துப் பார்த்தபடி வெகுநேரம் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். சட்டென்று எழுந்து தளவாயை ஆரத்தழுவிக் கொண்டான். ‘டேய்… பித்துக்குளி மாதிரி இருந்துட்டு.. டேய்.. நீ பெரிய ஆளுடா… .. ‘

‘நம்ம நாட்டுக்கு அடுத்த நோபல் பரிசுய்யா! ‘என்றபடி நானும் தளவாயைக் கட்டிக் கோண்டேன்.

‘ஆனா இந்தமருந்தோட மறுபக்கம் ஒண்ணு இருக்கு… ‘ என்றான் தளவாய் விடுவித்தபடி .

‘என்ன ? ‘

‘இந்த வைரஸ் முதலிலே தாக்கிய பிறகு பல ஆயிரம் வருஷம் தாவர மருந்துக்களோட கட்டுக்குள்ள இருந்திருக்கு. ஆனா ஜீவ மருந்து கண்டுபிடிச்ச பிறகு ஆயிரம் வருஷத்திலே மறுபடி தாக்கியிருக்கு. உலோகரசாயன மருந்துக்களை ஐநூறு வருஷங்களிலே தாண்டி வந்திருக்கு. அதாவது அதன் பரிணாமவேகம் அதிகமாயிட்டே இருக்கு. இப்ப மனுஷங்க மருந்துக்களை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்க சுத்திட்டே இருக்காங்க. அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாமவளர்ச்சியை அடைஞ்சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறுவருஷத்துக்குள்ள இருக்கலாம்… ‘

என் மனம் அச்சம் கொண்டது

‘அப்ப கதிரியக்க மருந்தையும் இந்த வைரஸ் தாண்டிடும். பூமியிலே வேற என்ன இருக்கு மருந்தாக ? எதுவுமில்லை! அஞ்சாவது மருந்தை மனிதன் கண்டுபிடிப்பான்னு என்ன உத்தரவாதம் இருக்கு ? இந்த வைரஸ் அப்ப மனிதகுலத்தையே அழிச்சிடுமா ? ‘என்றான் தளவாய்.

‘என்னடா உளறுறே ? ‘

‘இல்லடா . தத்துவார்த்தமா யோசிச்சுப்பாரு. மனுஷ இனமே இயற்கையை எதுத்து போராடி வளந்ததுதான். நம்ம கலாச்சாரமே இயற்கைக்கு எதிரானதுதான். காடுகளை அழிச்சிட்டோம். தண்ணீரை வீணடிச்சிட்டோம். இப்ப இயற்கை நம்மைத் திருப்பி அடிக்குதா என்ன ? நம்ம இடுப்பில கயிறு கட்டி மறுநுனியை கைல பிடிச்சுட்டு போறவரைக்கும் போ அப்டாண்ணு விட்டிருக்கா ? கயிறு முடிஞ்சதும் என்ன ஆகும் ? ‘

‘என்னடா ஆச்சு உனக்கு ? அற்புதமான மருந்தைக் கண்டுபிடிச்சுட்டு… ‘

‘இல்லடா . இப்ப என் மருந்து பலலட்சம் பேரைக் காப்பாத்தும் . ஆனா இதே மருந்துதான் நூறு வருஷம் கழிச்சு பலகோடி பேர் சாகவும் காரணமா அமையும். மாம்பழச்சித்தர் கண்டுபிடிச்ச மருந்துதான் இண்ணைக்குள்ள எயிட்ஸ் கிருமிய உருவாக்கிச்சு. நான் எந்த மாதிரி பயங்கரமான கிருமிய உருவாக்கப் போறேன் ? ‘

நாங்களும் கிட்டத்தட்ட வாயடைந்து போனோம்.

‘மருந்து கண்டுபிடிக்கிறதுக்குப் பதில் நாம ஏன் இயற்கையோட சமரசம் பண்ணிக்க கூடாது ? இந்த எய்ட்ஸோட ஒத்துப்போய் வாழ முயற்சி செய்யலாமே ? இயற்கையான முறையில் இதைத் தவிர்த்துட்டு வாழலாமே ? இந்த வைரஸ் நம்மை விடாது. ஏதோ வடிவிலே நம்மகூட இருக்கும் . அதை எதுக்க எதுக்க அது விசுவரூபம்தான் எடுக்குது ! ஏன் அதை அப்டியே விட்டுடக் கூடாது ? அது நம்மைக் கட்டுப்படுத்தற ஒரு இயற்கைச் சக்தீண்ணு ஏன் நினைக்கக் கூடாது ? நமக்கும் ஏதாவது ஒரு கட்டுப்பாடு வேணும். இப்ப போற போக்கிலே நாம் சீக்கிரமே பூமியையும் அழிச்சு நாமும் அழிஞ்சிடுவோம்… ‘ தளவாய் சொன்னான். ‘ ஐந்தாவது மருந்து ஒண்ணு இருக்குண்ணா அது நிரந்தரமான மருந்தாத்தான் இருக்க முடியும்… ‘

‘நீ இந்தமருந்தை இப்ப வெளியிடு .மத்த பிரச்சினைகளை மெல்ல பேசிக்கலாம் ‘என்றான் பிரதாப்

‘இல்லடா. நான் நூறுவருஷம் கழிச்சு மனுஷகுலமே அழியக் காரணமா இருக்க விரும்பலை. இந்த விஷயத்துக்கு ஒரு தெளிவான விடை கிடைக்காமல் நான் இந்த மருந்தை வெளியிட மாட்டேன். ‘ என்றான் தளவாய்.

எங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை. வருத்தமாகவே கிளம்பிவந்தோம்.

சோலைச்சித்தரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தளவாயைத்தான் காலப்போக்கில் அப்படி அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டுப் பக்கத்து சோலைக்குக் குடிவந்து இப்போது எட்டு வருடங்கள் ஆகின்றன.

****

 

மறுபிரசுரம். முதற்பிரசுரம் 2000. விசும்பு அறிவியல்புனைகதைகள்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/65

2 comments

 1. arunbharath

  எய்ட்ஸ் நோயை இத்தனை கோணங்களில் நான் யோசித்து பார்த்தது இல்லை.. மிகவும் அறிவுபூர்வமான சிந்தையை தூண்டும் விஞ்ஞான சிறுகதை அய்யா.. நான் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பரம விசிறி.. அவரது விஞ்ஞான சிறுகதைகள் அனைத்தையும் படித்திருக்கிறேன்.. அவரின் மறைவுக்கு பிறகு அந்த genre தமிழில் அழிந்து விடுமோ என்ற ஐயப்பாடு எனக்கு எழுந்தது.. அதை நிவர்த்தி செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்..

  நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படைப்பை படித்த திருப்தியை அளித்த தங்களுக்கு மீண்டும் நன்றி அய்யா..

 2. sj kabilan

  oru science fiction padam patha alavu arpudhamana kadhai. idha kadhainu solradha vida unmai kadhai alavu romba sirapa udharanangal scientific terms use pani ippadi oru unnadhamana padaipa alitha ungaluku en nandri…
  aangilathil mattum daan ippadipatta kadhaigal varudhunu kavala pattutruka enna madiri makkaluku kidaitha oru pokkisam indha kadhai.
  idha oru serialavo alla cinemavo edutha innum nalla makkaluku reach agum. kadhal, rowdism, kamamnu pathu pathu alinjutu iruka namma samoohathuku thevai ana oru nalla scientific padaipu indha kadhai…

  indha madhiri niraya padaipugal tharaveandum neenga endru arvamudan edhirparthu kathu kondirupaen….

Comments have been disabled.