உலோகம் – 2

‘கிளம்பு’ என்ற ஒற்றை வார்த்தை ஆணை எனக்குக் கிடைத்தது. நான் அப்போது பருத்தித்துறையில் ஒரு வீட்டில் கிட்டத்தட்ட எட்டுமாதமாகத் தலைமறைவாகத் தங்கியிருந்தேன். அவர்கள் என்னை இயக்கத்தில் இருந்து தப்பி புகலிடம் தேடிவந்தவனாக நம்பியிருந்தார்கள். சார்லஸ் என எனக்குப் பெயரிட்டவர்கள் அவர்களே. அவர்கள் கத்தோலிக்கர்கள். அவர்களில் மூத்தவர் கத்தோலிக்க மதகுருவாக இருந்தார்.

அங்கிருந்து  நள்ளிரவில் கிளம்பிய அகதிக்குழு ஒன்றுடன் இணைந்து கொண்டேன். அந்தக்குடும்பத்து தலைவர் கூறியதனால் மட்டுமே என்னை அவர்கள் சேர்த்துக்கொண்டார்கள். எட்டரை மணிக்கு கடலோரப்புதர்கள் மண்டிய மணல்தேரியில் இருந்து கட்டுமரங்களில் ஏறி சத்தமில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சென்று அங்கே நின்றிருந்த மீன்பிடிப்படகில் ஏறிக்கொண்டோம். அதில் நின்றிருந்தவன் மெல்லியகுரலில் ”சீக்கிரம்… சீக்கிரம்” என்றான். கடலின் உள்வெளிச்சத்தில் நீர்ப்பரப்பு பளபளத்துக்கொண்டிருந்தது. அனைவரும் ஏறிக்கொண்டதும் அவன் கைகாட்ட அதன் யமகா மோட்டார் திப்திப்திப் என்று அதிர பின்பக்கம் நீர் அலையடித்து விலகும் ஒளியசைவை காணமுடிந்தது. நான்கு பக்கமும் கடல் அலைகள் பெரிய கரும்பாறைக்கூட்டங்களாகவும் இருண்ட பள்ளங்களாகவும் மாறி மாறித்தோற்றம் தர இருட்டுக்குள் பயணம் செய்தோம். என்னுடன் படகில் நாற்பத்திரண்டுபேர் இருந்தார்கள். பெரும்பாலும் குழந்தைகள் பெண்கள். ஆண்களில் ஏறத்தாழ எல்லாருமே முதியவர்கள். இளைஞனாக மூவர், நான்.

எவரும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் ஒண்டி குழந்தைகளை அணைத்தபடி குளிருக்கு பழைய துணிகளை போர்த்திக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தோம். சுற்றிலும் இரையும் கடலுக்கு அப்பால் ஏதாவது படகோசை கேட்கிறதா என்று காதுகள் கூர்ந்திருந்தன. இருளுக்குள் ஒளி தெரிந்தால் அனேகமாக அது சிங்களக் காவல்படைதான். அல்லது இயக்கத்தினர். இரு தரப்புமே எங்களுக்கு ஆபத்தானவர்கள். வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். நட்சத்திரங்கள் பின்னால் நகர்வது போலத் தோன்றியது. படகில் கட்டப்பட்டிருந்த கயிற்றுச்சுருள் காற்றில் அதிர்ந்து டடம் டடம் என்று தகரப்பரப்பில் மோதிக்கொண்டே இருந்தது. மண்ணெண்ணையும் டீசலும் கலந்த வாசனை.  மீன் வாசனை. படகில் இருந்தவர்கள் எங்களிடம் எதுவும் பேசவில்லை. அவர்களில் ஒருவன் என்னருகே வந்தபோது மலிவான நாட்டுச்சாராயத்தின் வீச்சம் எழுந்தது.

நெடுந்தூரம் என்று தோன்றும் பயணம். நொடிநொடியாக ஓர் இரவு. இதயம் காலத்தைவிட வேகமாக ஓடும் அனுபவம். நான் என்ன எண்ணிக்கொண்டிருந்தேன் என்று சொல்வது கஷ்டம். தொடர்பற்ற உதிரி நினைவுகள். அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து கொண்டிருந்தது அத்துடன் சம்பந்தமில்லாமல் எங்கள் வீட்டுக் கிணறு. அதனுள் ஒரு மாபெரும் மீனின் கண்போல மின்னும் குளிர்ந்த நீர்வட்டம். ஒருவேளை நான் இந்த மண்ணுக்கு மீளவே போவதில்லை. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணை விட்டுவிட்டுப் போவது ஓர் அந்தரங்க கனவு. விரிந்த வெளியுலகம் எங்கோ இருக்கிறது என்றும் அங்கே சென்று சேர்ந்துவிடவேண்டும் என்றும் இங்குள்ள ஒவ்வொரு இளம் மனதும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. இது ஒரு சிறிய தீவாக இருப்பதனால் இருக்கலாம். தீவுகளில் பிறந்தவர்களுக்கெல்லாம் இந்த மனநிலை உண்டா என்ன? இருக்கலாம், பிரிட்டன், ஜப்பான் என சிறிய தீவினரே உலகை வெல்ல கனவு கண்டிருக்கிறார்கள்.  துணிந்து தங்கள் மண்ணை உதறிவிட்டுக் கிளம்பி கடலோடியிருக்கிறார்கள்.

இங்கிருந்து இப்போது கிளம்பும் ஒவ்வொருவரும் எண்ணிக்கொள்ளும் அதே நினைப்புதான், இப்படி கிளம்ப நான் எண்ணவில்லை, இதுவல்ல என் கனவு. இதுவல்ல அந்த அனுபவம்… நான் இந்தியாவுக்குச் சென்றிறங்குவதைப்பற்றி எத்தனையோ முறை எண்ணியதுண்டு. இளமையில் தூத்துக்குடி அல்லது ராமேஸ்வரத்துக்கு கப்பல் வழியாகச் செல்வதைப்பற்றிய திட்டமாக அது இருந்தது. ரயில் வழியாக சிதம்பரம். அதன் பிறகு சென்னை. சென்னையை கண்டவர்கள் என் சகாக்களில் எவருமே இல்லை. ஆனால் அத்தனை பேருக்கும் சென்னையை தெரியும். புரசைவாக்கம், வில்லிவாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, லஸ்… குமுதம் பத்திரிகையைப்போல ஓயாமல் சென்னையை முன்வைத்த இன்னொரு இதழ் இல்லை. அதை வாசிக்கிறவர்கள் மானசீகமாக சென்னையில் வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள். என் இளமைப்பருவத்தில் நான் குமுதத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். சாண்டில்யன் தொடர்கதைகள். சுஜாதாவின் துப்பறியும் கதைகள்.

நான் சென்னைக்குச் சென்று பார்க்க விரும்பியதெல்லாம் எழுத்தாளர்களைத்தான். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன். அவர்களெல்லாம் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் இருப்பவர்களாக எண்ணியிருந்தேன். அவர்களிடம் சொல்வதற்கு நான் நிறைய சொற்களை தயாரித்திருந்தேன். கண்காணாத மண் ஒன்றில் பிறந்தும் அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் நான் வாசித்திருந்தேன். அப்போது எனக்கு ஒன்று தெரிந்திருந்தது என இப்போது எண்ணுகிறேன். நான் திரும்பி வரப்போவதேயில்லை. இந்த மண்ணை நான் மிதிப்பதற்கான வாய்ப்பென்பது அனேகமாக இல்லை. அந்த உண்மைக்கு மேலேதான் நினைப்புகளை அள்ளி போட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன். விடிகாலையில் படகு எங்களை ஒரு மணல்தேரியில் கொண்டு வந்து விட்டது. படகு இடுப்பளவு நீரில் நிற்க ”எறங்குங்க… ஏ  எறங்கு… என்னா?” என்று மீனவர்கள் எங்களை அதட்டினார்கள். ஒருவன் தொலைநோக்கியால் கடலை சுற்றிச்சுற்றிப்பார்த்தான். ”ஆம்பிளைங்கள்லாம் மூட்டைகளை எடுத்துக்கிடுங்க” என்றான் சுக்கான் பிடித்திருந்தவன்.

குழந்தைகள் டிரங்குப்பெட்டிகள் தோல்பைகள் சூட்கேஸ்களுடன் மக்கள் இடுப்பளவு நீரில் குதித்து ஒருவரை ஒருவர் பற்றியபடி அலைகளில் தள்ளாடிக்கொண்டு மணற்கரை நோக்கிச் சென்றார்கள். நான்கு சூட்கேஸ்களுடன் நான் இறங்கி மணலில் சுமைகளை இறக்கிவிட்டு நின்றேன். நிலைத்த காலடிமண்ணை அப்போது அசைவை உணர்ந்துகொண்டிருந்த மூளை புரிந்துகொள்ளாமையால் தலைசுற்றியது. அப்படியே அமர்ந்துகொண்டேன். மணலில் எவருமே நிற்கவில்லை. அத்தனைபேரும் படுத்துக்கொண்டார்கள். தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் அழ ஆரம்பிக்க தாய்மார்கள் அவற்றை ஆறுதல் ஒலிகளால் சமாதானம் செய்தார்கள். எங்களை விட்டுவிட்டு படகு நீர் மீது  ஏறி இறங்கி விலகிச் சென்றது. முந்திய நாள் இரவில் எங்கள் மண்ணில் இருந்து படகேறும்போது அந்தப் பதற்றத்தில் எதுவும் தோன்றவில்லை.  ஆனால் இப்போது விலகிச்செல்லும் படகு எங்களை நிராதரவாகக் கைவிட்டுவிட்டு விலகிச்செல்லும் எங்கள் தாய்நாடு என்றே தோன்றியது. முட்டை விரிந்து வந்த குஞ்சுகளை விட்டுவிட்டுச் செல்லும் ஆமை போல கடலுக்குள் சென்று மறைந்தது படகு. நான் நினைத்ததையே பிறரும் நினைத்திருக்கலாம், பலர் மனம் ஏங்கி அழுவதைக் கண்டேன்.

வானம் வெளிறி சிவந்து ஒளியாகி சட்டென்று வெயிலாகியது. வானத்தில் வெண்பறவைகள் நீந்தி சுழன்று கொண்டிருந்தன. வெகுதூரத்தில் மிதக்கும் கொக்குகள் போல பாய்மரம் விரித்த நாட்டுப்படகுகளைக் கண்டேன். அலைகள் ஓயாமல் சர்ர்ரீஇல் சர்ர்ரீல் என்று மணலைக் கழ்விக்கொண்டே இருந்தன. அரை ஏக்கர் விரிவுள்ள சிறிய மணல்மேடு. அடியில் பெரும்பாறை இருக்கலாம், நாணல்கள் அன்றி ஒரு புதர்ச்செடிகூட இல்லை. கடல் ஒளியாக ஆனபோது கண்கள் கூச திரும்பி அமர்ந்தோம். உலர் உணவும் நீரும் வைத்திருந்தோம். அவற்றை பகிர்ந்து உண்டோம். விழுங்கத்தெரியாத குழந்தைகளுக்கு தாய்மார்கள் வாயில் பாதிமென்று துப்பி ஊட்டிவிட்டதைக் கண்டேன். விசித்திரமான பெரிய கடற்பறவைகள் நாங்கள் என்று எண்ணிக்கொண்டேன். காலை ஏழரை மணிக்கே வெயில் தகிக்க ஆரம்பித்தது. மணலில் அமர முடியவில்லை. சிறிய அலுமினியச் சட்டிகளால் கடல் நீரை அள்ளி அள்ளி விட்டு அந்த ஈர மணல் மீதுதான் அமர்ந்திருந்தோம். புடவைகளையும் துணிகளையும் தலைக்குமேல் கூடாரம் போல பிடித்து வெயிலை மறைத்தோம்.  மணலில் உலரப்போட்ட கருவாடுகள் நாங்கள் என்று ஒருவர் சொன்னபோது சிலர் சிரித்தார்கள். பெண்கள் சிரிக்காமல் வெறித்துப்பார்த்தார்கள்.

 

படகுக்காரர்கள் கொடுத்துவிட்டுப்போன பெரிய மூங்கிலில் ஒரு சட்டையை கட்டி கொடியாக ஆக்கி நட்டு வைத்திருந்தோம். மீன்பிடிபடகுகள் ஏதேனும் எங்களை கண்டுபிடிக்க வேண்டும்.  தலைக்குமேல் எங்கள் மனதைப்போல அந்தக்கொடி படபடத்து கைநீட்டிஅ ழைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அன்று பகலும் இரவும் எவரும் எங்களைப்பார்க்கவில்லை. பொதுவாக இரண்டு நாட்களுக்குள் பார்த்துவிடுவார்கள். ஆனால் ஏழுநாட்கள் வரை பார்க்கபப்டாமலிருந்து குழந்தைகள் உயிர்துறந்த நிகழ்ச்சிகளும் உண்டு.  நான்குநாட்களுக்குரிய உலர் உணவும் நீரும் எடுத்திருந்தோம். வறுத்து பொடித்து நெத்திலிக் கருவாடுடன் சேர்த்து இடித்து உருட்டிய உணவு. பிளாஸ்டிக் கேன்களில் குடிநீர். ஆனால் எரிக்கும் வெயிலில் நீர் இரண்டாவது நாளே தீர்ந்துவிடும்போல் இருந்தது. குழுத்தலைவர் போல் இருந்த யோகம் என்ற பெரியவர் ஒருநாளைக்கு ஒருவருக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் மட்டுமே அளிக்கப்படும் என்றும் குழந்தைகளுக்கு நான்கு டம்ளர் என்றும்  ஆணையிட்டார்.

 

அந்தி சிவந்து வந்தது. அந்த சூரியப்பிழம்பை பார்த்தபடி அமர்ந்திருந்தபோது எங்களைச் சுற்றி இருந்த மொத்த உலகநிலமே அழிந்துவிட்டது என்றும் கையளவுநீருடன் நாங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பது போலவும் எண்ணம் எழுந்தது. அந்தக் கடலுக்கு அப்பால் கரையே இல்லை. மெல்லமெல்ல அந்த தீவே நீரில் மூழ்கிக்கொண்டிருப்பது போல இன்னொரு கற்பனை. அந்த நேரத்தில் தன்னிரக்கக் கற்பனைகள் மட்டுமே எழுந்துகொண்டிருந்தன. அவை குரூரமான ஓர் இன்பத்தை அளித்தன. மெல்ல இருட்டியது. சூழ்ந்திருந்த மக்களின் கண்கள் மட்டும் அரையிருளில் கடலொளியை ஏற்று மின்னிக்கொண்டிருந்தன. முற்றிலும் இருண்டு தொடுவான்கோடு அழிந்தபோது ஒருவர் ”யா அல்லா!” என்றார். அப்போதுதான் அவர் முஸ்லீம் என்று உணர்ந்தேன்.  அவரை திரும்பிப்பார்க்க எண்ணி ஆனால் தலையைத் திருப்பாமலேயே அமர்ந்திருந்தேன்.

 

இரவில் வான்வெளியெங்கும் பரவிக்கிடந்த நட்சத்திரங்கள் அச்சமூட்டின. மணலில் சூடு இருந்தது. அந்தச்சூடு கடலில் இருந்து வந்த குளிர்ந்த காற்றுக்கு இதமாக இருந்தது. மல்லாந்து படுத்து பார்த்துக்கொண்டிருந்தபோது மணல்தேரி ஒரு படகு போல மெல்ல நகர்வதாக பிரமை எழுந்தது. இருளுக்குள் எங்கள் கொடி விர்ர் என்று ஒலித்தது. ஆடைகளின் சடசடப்பு கேட்டுக்கொண்டிருந்தது. நான்கு கிலோமீட்டருக்கு அப்பால் பெருங்கரை. அங்கே உறுதியான வீடுகளில் கொசுவத்திகள் ஏற்றிவைத்து உணவுண்டு நீர் அருந்திய மக்கள் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்கிறார்கள். காலைமுதல் மாலை வரை அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தாலும் இரவில் அவர்களால் தூங்க முடிகிறது. நல்ல கனவுகள் காண முடிகிறது. அவர்களின் வீடுகளை இனிய விளக்கொளியும் கதகதப்பான போர்வையும் கொண்டவையாக எண்ணிக்கொண்டேன். நானே சட்டென்று என்னை அங்கே தூங்கிக்கொண்டிருப்பவனாக கண்டேன். வானில் மின்னி மின்னி அணையும் விளக்குகளுடன் ஒரு விமானம் சென்றபோது என் சுரப்பிகளில் ஜிவ்வென்று அமிலம் ஏறி தசைகள் இறுகின. மறுகணம் இது வேறு நிலம் இங்கே விமானங்களுக்கு வேறு பொருள் என்று ஆறுதல் கொண்டேன். அந்தக்குழு முழுக்க உடல்தசைகள் தளரும் அசைவுகள் தெரிந்தன. ஆம், அத்தனைபேரும் வேட்டையாடப்பட்ட உயிர்கள்தான்.

 

மறுநாள் மதியம்தான் எங்களை நோக்கி ஒரு கடற்படை படகு வந்தது. அந்த கரிய புகை தூரத்தில் தெரியும்போதே நாங்கள் உற்சாகமடைந்து எழுந்து விட்டோம். கைகளை தூக்கி வீசியும் சட்டைகளை சுழற்றியும் அவர்களை அழைத்தோம். பெரிய படகு என்று அருகே வர வர தெளிவாகியது. சீருடையுடன் முகப்பில் நின்ற மீசை இல்லாத  வட இந்திய அதிகாரி மெகபோனில் ”நீங்கள் யார்? யார் நீங்கள்” என்றார். யோகம் கையை அசைத்தபடி ”நாங்கள் ஸ்ரீலங்கா குடிமக்கள்” என்று கூவினார். படகு வேகம் குறைந்து நின்றது. படகிலிருந்து இருவர் சிறிய ·பைபர்  படகுகளை கம்பிகள் வழியாக நீரில் இறக்கி குதிரைமீது ஏறுவது போல அவற்றில் ஏறி அலைகளில் எம்பி இறங்கி எங்களை நோக்கி வந்தார்கள். படகிலிருந்து ஒரு நூலேணி தொங்கி ஆடியது.  ·பைபர் படகுகள் நெருங்கியதும் அவற்றில் இருந்த இரு வீரர்கள் எங்களை நெருங்கினர். ஒருவர் ”இங்க யாருப்பா பஞ்சாயத்து ஆளு? பெரிசு நீயா?” என்றார். யோகம் ”நாந்தான் ஐயா” என்று கைகூப்பியபடி முன்னால்சென்றார் ”எத்தினிபேரு?” ”நாப்பத்திரண்டு..  இருபத்திமூணு பெடிகள். பெட்டைகள் பதினெட்டு…” என்றார். அவர்கள் படகில் ஐந்துபேராக ஏறி பெரிய படகை நோக்கிச் செல்ல ஆணையிட்டார்கள். ஒருவர் சிறிய துப்பாக்கி வைத்திருந்ததை கவனித்தேன்.

 

அவர்களின் கண்கள் இளைஞர்களைக் கூர்ந்து கவனித்தன. நான் அருகே சென்றதும் என் உடைகளையும் உடலையும் பரிசோதனை செய்தார்கள். வாயைக்கூட திறந்து உள்ளே பார்த்தபின் படகில் ஏறும்படி சைகை காட்டினார்கள். நான் ஏறிக்கொண்டதும் எனக்குப்பின்னால் வந்த மெல்லிய தாடி வைத்த இளைஞனையும் சோதனைசெய்தனர். நூலேணியில் ஏறி படகுக்குள் குதித்ததும் எங்கள்படகில் இருந்த நான்கு இளைஞர்களையும் தனியாக பிரித்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். தனித்தனியாக அறைக்குள் கொண்டுபோய் நிர்வாணமாக ஆக்கி பரிசோதனை செய்தார்கள். என் அடிவயிற்றை அழுத்தியும் வாயின் இடுக்குகளை கைவிட்டு துழாவியும் சோதனை செய்தார்கள். ஒரு பேசினில் என்னை அமரச்செய்து முக்கச்செய்து நான் மலக்குடலுக்குள் எதையாவது வைத்திருக்கிறேனா என்று சோதனை செய்தார்கள். என்னுடைய முழங்கைகளையும் முழங்கால்களையும் சோதனைசெய்தார்கள். அவை பயிற்சியினால் காய்த்து கருப்பாக இருந்தன. தமிழ் அதிகாரி ”இயக்கத்திலே இருந்தியாடா?” என்றார். ”ஆமா…” என்றேன். அவர் என் கண்களை கொஞ்ச நேரம் கூர்ந்து பார்த்தபின் ”ம்ம்” என்றார். ”பேரென்ன?” ”சார்லஸ்” ”வயசு?” ”முப்பத்தேழு” என்னை நிமிர்ந்து பார்த்தார். எனக்கு அவ்வளவு வயது தெரியாது. போகும்படி கைகாட்டி என் பின்னால் நின்ற தாடிக்கார இளைஞனைக் கூப்பிட்டார்.

 

ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே வந்தேன். படகுக்குள் அலைகளின் ஒளி அலையடித்தது. மீசையில்லாத உயரதிகாரி ”தண்ணீர் குடிக்கிறாயா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். ”ஆமாம்” என்றேன். அவர் நீட்டிய தண்ணீர் குப்பியை வாங்கி மொத்த நீரையும் குடித்து முடித்து மிச்சத்தை முகத்தில் ஊற்றிக்கொண்டேன். ”சிக்ரேட்?” என்றார் அதிகாரி பெட்டியை எடுத்தபடி. நான் புன்னகைசெய்தேன். அவர் ஒரு சிகரெட் பாக்கெட்டை திறந்து நீட்டினார். நான் சிகரெட்டைப்பார்த்து நான்கு வருடங்களாகின்றன. அதன் வாசனையே மறந்து விட்டது. ஒன்றை உருவி என் பழைய பழக்கத்தின்படி மெல்ல கசக்கிவிட்டு புகையிலையின் இனிய மணத்தை முகர்ந்தேன். சிகரெட்டை வாயில் பொருத்தியதும் அவர் லைட்டரால் பற்ற வைத்தார். ”ஆங்கிலம் தெரியுமா?” ”ஆமாம்…” என்றேன். ”அங்கே கடுமையான போர் நடக்கிறதா?” என்றார் ஆங்கிலத்தில். ”மிகத்தீவிரமான போர்” என்றேன். அவர் ”·பூல்ஸ்” என்றபடி ஆழமாக புகை இழுத்து ஊதி விட்டார். ஒருபோர்முனைக்குக் கூட போகாமல் ஓய்வுபெற்றுவிடலாம் என்று நம்பி ராணுவத்தில் சேரும் படித்த இளைஞன் என நினைத்தேன். ”உன் பேரென்ன?” ”சார்லஸ்” ”கிறிஸ்டியனா?” ”ஆமாம்” ”நான் ஜோஷி…புனாவைச்சேர்ந்தவன். நீ என்ன படித்திருக்கிறாய்?” ”பிஎஸ்ஸி, கணிதம்…முடிக்கவில்லை” ”ஓ” என்றபின் இருமுறை மௌனமாக புகை விட்டார். கடலில் ஒளி அலையடித்தது. சட்டென்று என்னிடம் ‘தென்,ஓக்கே” என்று கைகொடுத்துவிட்டு சென்றார்.

 

படகிலேயே வரிசையாக  அத்தனைபேரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் பெயர்களைக் கேட்டு குறித்துக்கொண்டு கைரேகைகள் பதிவுசெய்துகொண்டார்கள். எல்லாம் வழக்கமான ஒரு அலுவலக நடைமுறைபோல நடைபெற்றன. எல்லாருமே நிறைய தண்ணீர் குடித்த தளர்ச்சியுடன் இருந்தார்கள். சிறு குழந்தைகள் நீரை கக்கின. படகின் விளிம்பில் ஒரு கடற்காக்கை வந்து அமர்ந்து ஆடிய பின் எழுந்து பறந்து பாய்மரக்கயிறில் சென்றமர்ந்தது. அந்த தாடி இளைஞன் சட்டைக்கைகளைச் சுருட்டியபடி என்னருகே வந்து மெல்ல ”என்ன கேட்டான்?” என்றான். ”சும்மா, பேரைக்கேட்டார்” ”பாத்து பேசணும்”என்றான் அவன். எங்கள் கண்கள் சந்தித்தன, அவன் புன்னகை செய்தான். பின்னர் என்னுடைய சிகரெட்டுக்காக கைநீட்டினான். அவன் உதடுகள் கறுத்திருந்தன. ஒல்லியான சுருட்டை முடிகொண்ட இளைஞன். அவன் ஆப்ரிக்கன் என்றால் எவரும் நம்புவார்கள். நான் நல்ல சிவப்பு. உயரமானவன், என் மீசைகூட கொஞ்சம் செம்பட்டையடித்திருக்கும்.    எத்தனை ரத்தங்கள் கலந்தது நாம் பேசிக்கொண்டிருக்கும் இனம் என்று நினைத்துக்கொண்டேன். அவன் என் சிகரெட்டை வாங்கி ஆழமாக இழுத்து இழுத்து விட்டான் ”சிகரெட் இளுத்து பத்து வருஷம் ஆச்சு அண்ணை” என்றான். அவ்வாறுதான் ஜோர்ஜ் எனக்கு அறிமுகமானான்.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைஉலோகம் – 1
அடுத்த கட்டுரைஉலோகம் – 3