என் பெயர் சார்லஸ். இது என் பெயரல்ல. உங்கள் பதிவேடுகளில் என்பெயர் சாந்தன் என்றிருக்கிறது. அதுவும் என் பெயரல்ல. அதற்கும் பின்னால் சென்றால் நீங்கள் இன்னொரு பெயரைத்தான் கண்டடைய முடியும்.
வெகுகாலம் முன்பு எனக்கு ஒரு பெயர் இருந்தது. அந்தப்பெயருடன் இருந்த அந்த இளைஞனுடன் இன்று எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவனுக்கு எஞ்சினீயர் ஆக ஆசை இருந்தது. அவன் கணிதத்தில் நிபுணனாக இருந்தான், யூனிவர்சிட்டி தேர்வில் நூற்றுக்குநூறு வாங்கினான். அவனால் நல்ல கோட்டோவியங்கள் வரைய முடியும். கரியை மட்டுமே பயன்படுத்தி அவன் வரைந்த இருபது ஓவியங்கள் அவனுடைய கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவன் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறான். இளநீலநிறமான கோடுபோட்ட ஒரு நோட்டு நிறைய கவிதைகள் எழுதி நிரப்பி தன் டிரங்குப்பெட்டிக்கு அடியில் பழைய சால்வைக்குள் வைத்திருந்தான். அவ்வப்போது சிறுகதைகளும் எழுதுவான். கதைகளை அவன் வீரகேசரிக்கும் ஈழமுரசுக்கும் அனுப்பியிருக்கிறான், அவை பிரசுரமானதில்லை. ஆனால் கவிதைகளை அவன் எவரிடமும் காட்டியதில்லை. என்றாவது ஒருநாள் அவன் ஓர் எழுத்தாளனாக அறியப்படுவான் என்று நம்பியிருந்தான். இந்தியாவுக்கு வரவேண்டுமென அவன் நினைத்ததே சுந்தர ராமசாமியைப் பார்க்கத்தான்.
இனிய இளைஞன் அவன். பெரிய தலையைத்தாங்கும் ஒல்லியான உடலும், வெட்கமும் தயக்கமும் கொண்ட பாவனைகளும், ஆவல் நிறைந்த விரிந்த கண்களும் கொண்டவன். புகைபோன்ற மெல்லியதாடியும் மென்மையான உதடுகளும் சிறிய பருக்கள் இருந்த கன்னங்களும் உடையவன். பெண்களை நேருக்கு நேர் பார்க்க அஞ்சுபவன், ஆனால் எல்லாப்பெண்களையும் பேரழகிகளாக எண்ணி மனதுக்குள் வழிபட்டவன். ஒருபெண்ணை காமத்துடன் நினைப்பதேகூட அவள் அழகுக்கு அவமரியாதை என்று நினைப்பவன். எந்நேரமும் பகற்கனவுகள் நுரைத்துத் ததும்பும் அகம் கொண்டவன். காமமும் எதிர்காலத்திட்டங்களும் கலந்த திகட்டும் பகற்கனவுகள். இளமையை அர்த்தமுள்ளதாக்கும் அந்தரங்கம். புறத்தைவிடப் பெரிய அகம்.
அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். எல்லா அசைவுகளும் பேரழகையே உருவாக்கும் ஒரு மகத்தான கலைநிகழ்வு என அவன் அவளைப்பற்றி எண்ணினான். கல்லூரியில் அவன் சகமாணவி அவள். அவளிருக்கும் இடத்தில் தூரத்தில் எங்கோ அவன் எப்போதுமிருப்பான். அவள் மீதிருந்து கண்களை எடுக்காமல், கண்களே அவனாக தியானத்தில் ஆழ்ந்திருப்பான். அவன் அவளுடன் பேசியதேயில்லை. அவனுடைய இருப்பையே அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவளுடைய சுடிதார் துப்பட்டாவின் நுனி மட்டும் ஒரே ஒருமுறை அவன் முழங்கையில் மிகமென்மையாக மிக ரகசியமாகத் தொட்டுச்சென்றிருக்கிறது. ஒன்பதாண்டுகளாக அந்த தீண்டல் அவன் கைகளில் இருந்துகொண்டிருக்கிறது.
சார்லஸ் என்றே என்னை அழையுங்கள். இந்த பெயர் எனக்கு அளிக்கும் அடையாளத்துடன் என்னை பிணைத்துக்கொண்டால் என்னால் திடமாகப்பேச முடியும். என் நாக்கு தழுதழுக்காமல் கண்கள் ஈரமாகாமல் இருக்கும். என்னை நீங்கள் எப்படி நினைத்திருக்கிறீர்களோ அப்படி இருப்பேன். அதுவே உங்களுக்கும் எனக்கும் எளியது. இந்தச் சந்திப்பை விரைவாக முழுமையானதோர் முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென்றே நாமிருவரும் விரும்புகிறோம் இல்லையா?
ஆம், கொலையாளி நான்தான். மிக அண்மையில் இருந்து ஒரு தானியங்கி கைத்துப்பாக்கியால் நான் செல்வராஜா அம்பலவாணர் என்ற பொன்னம்பலத்தாரை நோக்கி நான்குசுற்றுகள் சுட்டேன். இதோ இந்த மேஜைமீதிருக்கும் இந்தத் துப்பாக்கிதான். ஐவர் ஜான்ஸன், பாயின்ட் முப்பத்தெட்டு. மூன்று குண்டுகள் அவர் உடலில் பட்டன. தவறிய குண்டு அவர் இருந்த சோஃபாவில் பட்டு நுரைப்பஞ்சை எரித்து சென்று சுவரில் பட்டு பிளாஸ்டரை சிதறடித்தது. ஒன்று நுரையீரல் வழியாகச் சென்று கம்பளத்தை சிதைத்து தரையை உடைத்தது. ஒன்று இடுப்பெலும்பிலேயே புதைந்து நின்றுவிட்டது. எஞ்சிய மூன்று குண்டுகளும் உங்களிடம் இருக்கக்கூடும்.
துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கும் ஒருவர் எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை பலர் அறிந்திருக்கமாட்டர்கள். குண்டுகள் நம்மீது படும்போது மெல்லிய ஆனால் கூரிய ஓர் உதை பட்டதுபோலிருக்கும். சிறிய ஒரு எரிச்சல், ஷேவ் செய்யும்போது வெட்டிக்கொண்டால் ஏற்படும் அளவுக்கே. எனக்கு பலாலி போர்முனையில் தொடையில் குண்டுபட்டிருக்கிறது. உதையால் நிலைதடுமாறி சமாளித்து நின்றபோது நல்லவேளை பெரிதாக ஒன்றும் ஆகவில்லை என்ற எண்ணமே எனக்குள் வந்தது. என் மீது குண்டுபடவில்லை என்றே நினைத்தேன். என்னருகே நின்ற என் தோழன், உண்மை தெரியுமா அவனுடைய பெயரும் எனக்குத்தெரியாது, கீழே விழுந்திருந்தான். அவன் கன்னம் வழியாக குண்டு சென்று முகம் சிதைந்திருந்தது. என் தோழர்கள்தான் திகைத்து நின்றிருந்த என்னை தோளில் பற்றி அமுக்கி அமரச்செய்து என் காலில் குண்டுபட்டிருப்பதைச் சொன்னார்கள். நான் குனிந்து என் காலைப் பார்த்தேன். என் சீருடை சதையுடன் ஒரு குழியாகப் புதைந்திருந்தது. அதைப்பார்த்தக் கணம் என் நெஞ்சு திக்கென்றது, என் தலை சுழன்றது.
இப்போதும் அந்த குண்டு எனக்குள் இருக்கிறது. மிகமென்மையான குளிரான உலோகம். உலோகம் உங்களுக்குள் இருப்பதைப்பற்றி யோசித்துப்பாருங்கள். அது இதயம்போல, நுரையீரல் போல, மூளை போல ஓர் உறுப்பாக ஆகிவிடுகிறது. அதுவும் சுரக்கிறது. மிகவும் கசப்பான ஒன்றை. அதன் பின் நீங்கள் பழைய ஆளல்ல. உங்களுக்குள் இருக்கும் உலோகத்தை உங்களால் மறக்கவே முடியாது. நீங்கள் அதை விரும்பலாம் வெறுக்கலாம். பெரும்பாலானவர்கள் அறிமுகமான நாலாவது வரியில் அதைப்பற்றிச் சொல்லிவிடுவார்கள். தனிமையில் இருக்கையில் தொட்டுப்பார்ப்பார்கள். அப்போது இதோ உயிருடன் இருக்கிறேன் என்ற எண்ணம் எழுந்து உருவாகும் மனக்கிளர்ச்சி இருக்கிறதே அதை எப்படி வர்ணிக்க முடியும்? கடுமையான காம எழுச்சி திடீரென உருவாகுமே அதைப்போன்ற ஓர் உடல் அனுபவம் அது. ஆனால் கனவுகளில் அந்த உலோகம் மௌனமாக சில்லென்று தோன்றும்போது நாம் முதுகு சிலிர்த்து கடும் தாகத்துடன் விழித்துக்கொண்டு நடுநடுங்குகிறோம்.
நான் சுட்டதும் துப்பாக்கி ஒலிகேட்டு பொன்னம்பலத்தார் திடுக்கிட்டு என்னைப்பார்த்து தலை வெடவெடவென நடுங்க ”என்னப்பா இது? வேண்டாம்” என்று தடுப்பது போல கைநீட்டினார். அவருக்குள் தோட்டாக்கள் புகுந்துவிட்டதை அவர் அக்கணங்களில் உணரவில்லை. அவரது கண்ணில் சுட்டுவிடுவேன் என்ற அச்சமும், அது எப்படிச் சுடுவான் என்ற நம்பிக்கையும் ஒரே கணத்தில் மாறிமாறித்தெரிந்தன. கையை மார்பில் வைத்து மேலே தூக்கி விரல்களில் ஒட்டிய செம்பிசின் போன்ற ரத்தத்தைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கமறலாக இருமுறை இருமியபோது வலியுடன் உடல் அதிர நுரையீரலில் இருந்து கொழுமையானகுருதியும் சளியும் வாய்வழியாகவும் மூக்குவழியாகவும் வெளியே வந்தன. அப்படியே பக்கவாட்டில் சரிந்துவிட்டார். ரத்தம் சூடாக வீச்சத்துடன் சோஃபாவிலும் டீபாயிலும் தரையிலுமெல்லாம் சிதறிப் பரவியது.
நான் என் புகையும் துப்பாக்கியுடன் உள்ளே பாய்வதற்குள் வாசலில் நின்ற இந்திய கமாண்டோ கதவை உடைத்துத் திறந்து அதேகணத்தில் என்னை நோக்கிச் சுட்டான். வேகமான கையசைவிலும் குறிதவறாத திறமையான குண்டு. நான் தோளில் பட்ட காயத்துடன் நிலை தடுமாறி மறுதோளால் சுவரை மோதி படிகளில் பாய்ந்தேறுவதற்குள் என்னை மீண்டும் கணுக்காலில் சுட்டுவிட்டு சூழ்ந்துகொண்டார்கள். மயக்கமடைந்து மீண்டபோது மருத்துவமனையில் இருந்தேன். கடும் காவலுடன். ஒன்றரை மாதங்கள். மீண்டும் மீண்டும் நினைத்துக்கொள்ள நிறைய நேரம். ஆனால் நினைக்க விரும்பாத விஷயங்களால் ஆனதாக ஒருவனின் வாழ்க்கை இருந்தது என்றால்… அப்படியும் சொல்லிவிடமுடியாது. அனைவருக்கும் இளமைப்பருவம் இருக்கிறது. அது மகத்தானது. பட்டினியும் துன்பமும் தனிமையும் மட்டுமே இருந்தால்கூட இளமைப்பருவம் இனிமையானது. நான் இளமைப்பருவத்தில் மீண்டும் வாழ்ந்தேன். கண்மூடி புன்னகை நிறைந்த முகத்துடன் நீர்கொழும்பின் மீன்மணம் நிறைந்த கடற்கரையில் அலைந்துகொண்டிருப்பேன்.
இந்த நாட்களில் நான் என்னால் மீண்டும் ஒரு கவிதையை எழுதிவிடமுடியுமா என்று பார்த்தேன். சொற்களை அர்த்தமில்லாமல் இணைக்கத்தான் முடிந்தது. கவிதை எழுதும்போது வரிகளில் இருப்பதைவிட பலமடங்கு உக்கிரமான ஒரு மனஎழுச்சி நம்மில் இருக்க வேண்டும். எழுத எழுத இன்னும் எழுதவில்லையே என்று மனம் பொங்கிக்கொண்டிருக்கவேண்டும். மேற்கொண்டு எழுத ஒன்றுமில்லை என்றான பின்னர் ஒரு தனிமையும் ஏக்கமும் எஞ்ச வேண்டும். ஒன்றும் நிகழவில்லை. வார்த்தைகள் வேறெங்கோ நின்றன. நான் தூரத்தில் நின்றுகொண்டிருந்தேன். கவிதைகளை நான் நிரந்தரமாக இழந்துவிட்டேன் என உணர்ந்தேன். ஆனால் அந்த நினைப்பு எனக்கு துயரத்தை அளிக்கவில்லை. கொஞ்சம் ஆறுதல்கூட அடைந்தேன். என்னுள் கவிதையின் மலர் அல்ல குளிர்ந்த மௌனமான ஒரு உலோகம்தான் இருக்கிறது. என்னுடைய மிகப்பெரிய ஆயுதம் அதுதான். அது என்னையே ஓர் அபாயமான ஆயுதமாக ஆக்குகிறது.
ஆம், என்னிடம் சயனைட் குப்பி இருந்தது. அதை நான் உடனடியாக கடித்திருக்கவேண்டும், அதுவே எனக்குள்ள பயிற்சியும் உத்தரவும். ஆனால் அக்கணங்களில் அது எனக்கு நினைவுக்கே வரவில்லை. சயனைட் கடிப்பதே நோக்கம் என்பதனால் சுட்டபின் எப்படி திரும்பிச்செல்வது என்று திட்டமே போட்டிருக்கவில்லை. ஆனால் சுட்டமறுகணமே என் மனதில் தப்பி ஓடுவதற்கான ஒரு வழி தெளிந்தது. மாடிக்குச் சென்று கார்ஷெட் மீது குதித்து சிறிய சுற்றுமதிலைத்தாண்டினால் பரபரப்பான சாலைக்குச் சென்றுவிடமுடியும். அங்கே எனக்குத்தெரிந்த சண்முகவேல் ஒரு சர்வீஸ் ஸ்டேஷன் நடத்துகிறான். கண்டிப்பாக சாவியுடன் பைக்குகள் நிற்கும். அங்கிருந்து பெங்களூர் நேபாளம்… எனக்கு தொடர்புகள் இருந்தன. அந்த திட்டம் எனக்குள் என்னையறியாமலேயே முன்னரே உருவாகியிருந்தது என இப்போது அறிகிறேன். ஆனால் நான் அந்த கூர்க்கா கமாண்டோவை மதிப்பிடத் தவறிவிட்டேன். அவன் உயிரை துச்சமாக எண்ணி அத்தனை வேகமாக உள்ளே வருவான் என்று நினைக்கவில்லை. அவன் கதவை உடைக்க கனமான டீபாயை பயன்படுத்தலாமென முன்னரே திட்டமிட்டிருந்திருந்ததனால் கணநேரத்தில் செய்துவிட்டான்.
பொன்னம்பலத்தாரின் கொலை என்னென்ன விளைவுகளை உருவாக்கியதென நான் அறிவேன். ஒருமாதத்துக்கும் மேலாக நாளிதழ்கள் அதையே கொண்டாடிக்கொண்டிருந்தன. அந்தக்கொலை எத்தனை கச்சிதமாக திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டன. எளிமையான இதழாளர்கள் எழுதிய கற்பனைகள் அவை. ஆங்கில குற்றத்திகில் கதைகளை வாசிக்கும் இளைஞர்களால் புனையப்பட்டவை. உண்மையில் அதைவிட பலமடங்கு நுட்பமாக அது திட்டமிடப்பட்டது, நிகழ்த்தப்பட்டது. ஒரு இயந்திரம் ஆயிரக்கணக்கான உறுப்புகளாலான நூற்றுக்கணக்கான தனிக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டு ஒரு தருணத்தில் ஒன்றிணைக்கப்பட்டு மின்சாரம் அளிக்கப்பட்டதும் சரசரவென செயல்பட ஆரம்பிப்பதைப்போல எத்தனையோபேர் என்ன நடக்கிறதென்றே அறியாமல் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆணைகளை நிறைவேற்ற ஒவ்வொன்றும் அதற்குரிய பங்களிப்பாற்ற அது நிகழ்ந்தது. என்ன நடந்தது என்று அறிந்தவர்கள் அதை வடிவமைத்தவர்கள் மட்டுமே.
பொன்னம்பலத்தாரின் கொலைத்தண்டனை எங்கள் அமைப்பால் பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே விதிக்கப்பட்டுவிட்டது. அப்போதே கொலை இயந்திரம் வடிவமைக்கப்பட்டு வார்க்கப்பட்டு உதிரிக்கருவிகளாக அனுப்பப்பட்டுவிட்டது. அவருக்கும் அது தெரியும். அதிலிருந்து தப்புவதே கடந்த பத்தாண்டுகளாக அவரது ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நொடியுமாக இருந்தது. துரோகம் மூலம் அவர் பெற்ற தண்டனையை துரோகம் மூலமே வெல்ல அவர் முயன்றார். எல்லா தரப்புக்கும் அவர் துரோகம் செய்தார். இன்று துரோகத்திற்காக அவர் கொல்லப்பட்டாரா துரோகங்கள் பயனளிக்காததனால் கொல்லப்பட்டாரா என்று சொல்வதே கடினம். அவ்வளவுதான், அவரது வாழ்க்கை முடிந்தது. அடுத்த கொலை வரைக்கும்கூட அவர் நினைக்கப்பட மாட்டார். கொலைகள் மீது கொலைகள் விழுந்து மறைத்துக்கொண்டே இருக்கின்றன. எவரும் எதையும் நினைவில் நிறுத்தப்போவதில்லை. நினைத்துக்கொள்ள உகந்தவை அல்ல எவையும். மண்ணும் காற்றும் வானமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பொன்னம்பலத்தாரின் குடும்பமே கூட இப்போது அவரை மறந்துவிட்டிருக்கும். அவரது துரோகங்களின் லாபங்களை அனுபவித்தவர்கள் அவர்கள். அதன் விளைவுகளில் இருந்து தப்பவும் விரும்புகிறார்கள். இப்போது அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த மிருகத்திற்கு வேண்டிய பலியைக் கொடுத்து அவர்கள் தப்பிவிட்டிருக்கிறார்கள்.
நானும் மறைந்துபோவேன். எனக்கும் எந்தத் தடயமும் இருக்காது. துரோகங்களும் தீரங்களும் தியாகங்களும் எல்லாம் மறக்கப்பட்டு விடும். எதுவுமே எஞ்சாது. எஞ்சுவதென்ன என்றால் சில கதைகள், சில தொன்மங்கள் மட்டுமே. நான் எதற்காகவும் வருந்தவில்லை. நான் வருந்துவேன் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அந்த வழியாக நீங்கள் தவறான இடத்துக்குச் செல்வீர்கள். நான் அப்படிப்பட்டவனே அல்ல. பொன்னம்பலத்தாரின் கடைசிப்பார்வை என் கண்ணில் இருந்துகொண்டிருக்கிறது. அதிலிருந்தது அதிர்ச்சிதான், ‘அட இவனா?’ என்ற பாவனை. அது ஆச்சரியமல்ல. அவருக்கு தெரியும், இதில் எதுவுமே ஆச்சரியமல்ல என்று. எப்படித்தவறவிட்டோம் என்று நினைத்திருக்கலாம். அந்தக்கணம் அவரை அப்படி ஆச்சரியப்பட வைத்தது குறித்து ஒரு மெல்லிய நகைப்பு எனக்குள் ஓடிச்சென்றது. மற்றபடி எந்த உணர்ச்சியும் இல்லை. என் கையோ காலோ நடுங்கவில்லை. நெஞ்சு பதறவில்லை. கொலை எனக்கு கழிவிரக்கத்தையோ வேறெந்த அறச்சிக்கல்களையோ அளிப்பதில்லை. முதற்கொலையின்போதுகூட நான் அப்படித்தான் இருந்தேன். ஒரு கொலைக்குப்பின் அந்தப்பிணத்தை திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து விரைவில் அகன்றுவிடவேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். கடலோரம் அமர்ந்து மலம் கழித்தபின் எழுந்ததுமே விலகிச்செல்கிறோமே அதைப்போல. ஆனால் நம்மால் நம் மலத்தை அரைக்கணம் பார்க்காமல் இருக்க முடிவதில்லை.
ஆம், நான் பொன்னம்பலத்தாரைக் கொன்றேன். இது என்னுடைய வாக்குமூலம். இதை நீங்கள் பதிவு செய்வதிலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. நீதிமன்றத்தில் இந்த வாக்குமூலம் முதலாதாரமாகக் கொள்ளப்படாது என்பதனால் இதை முற்றிலும் வெளிப்படையாகவே முன்வைக்கிறேன். நம்முடைய உறவாடல் இந்த வாக்குமூலத்துடன் முடிவடைந்து நீங்கள் என்னை விட்டுவிடவேண்டுமென்பதே என்னுடைய எண்ணம். என்னை நீங்கள் தூக்கிலிட மாட்டீர்கள். நீங்கள் இதுவரை எவரையுமே தூக்கிலிட்டதில்லை. தனிமைச்சிறைகளைப்பற்றி எனக்குப் பயமில்லை. நான் பத்தாண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் தனிமையானவன். எனக்குள் இருக்கும் இந்த உலோகம் எவருக்கும் தெரியாமல் வெதுவெதுப்பான சதைக்குள் குளிர்ந்து முற்றிலும் தனித்திருக்கிறது.