ஷாஜியின் விளக்கம்

மும்பையிலிருந்து ஷாஜி கூப்பிட்டார். என்னுடைய கட்டுரையில் சிலவிஷயங்களுக்கு வலுவான கண்டனத்தையும் சில விஷயங்களுக்கு மறுப்பையும் சிலவிஷயங்களுக்கு விளக்கத்தையும் தெரிவித்தார். எழுத நேரமில்லை என்பதனால் நானே அவற்றை எழுதிப் பதிவுசெய்யவேண்டுமென்று சொன்னார். ஆகவே இப்பதிவு.

1. கல்யாணியின் தந்தையின் நண்பர் என்ற முறையிலும், அவரது பாடல்களைக் கேட்டிருப்பவர் என்ற முறையிலும், புதியகுரல்கள் தேவை என லோகிததாஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க கல்யாணியின் பெயரையும் மேலும் ஒரு கேரளப் பாடகியின் பெயரையும் தான் அடையாளம் காட்டியதாகவும் யாருக்காகவும் சிபாரிசு செய்வதில்லை என்று கொள்கை கொண்டிருப்பதாகவும் ஷாஜி சொன்னார்.

2. சலீல் சௌதுரிக்காக ஷாஜி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நான் குறிப்பிட்டதுபோல சிறிய நிகழ்ச்சி அல்ல என்று ஷாஜி சொல்கிறார். அது பெரிய நிகழ்ச்சி. ஆனால் இளையராஜாவுக்காக ஆறுமணிக்கே கூட்டத்தை ஆரம்பித்தமையால் கூட்டம் குறைவாக இருந்தது. அதைசு சுட்டிக்காட்டி ராஜா பேசினார். அன்று சலீல் சௌதிரி பற்றி ராஜா பேசியது நிறைவாகவும் உருக்கமானதாகவும் இருந்தது என்றும் சொன்னார்.

3. இளையராஜாமீது தனக்கு எவ்வகையிலான வருத்தமும் கோபமும் இல்லை என்றும்,  எக்காலமும் இளையராஜாவின் சிறந்தபாடல்களின் ரசிகன் என்றே உணர்வதாகவும் சொன்ன ஷாஜி தொண்ணூறுகளுக்குப் பின்னர் ராஜா மிகக்குறைவாகவே நல்ல பாடல்களை அமைத்திருக்கிறார், அதற்கு அவர் இமேஜ் வலையில் விழுந்து தன் எல்லைகளை தானே குறுக்கிக் கொண்டது தான் காரணம் என்றும் மட்டுமே தான் சொல்லியிருப்பதாகவும் சொன்னார். ராஜாவின் தனிப்பட்ட விஷயங்களுக்குள் சென்றது இந்த சிக்கலை விளக்குவதற்காக மட்டுமே என்றார்

4. தன்னுடைய கட்டுரையில் இளையராஜாவை சமகாலத்தைச் சேர்ந்த எந்த இந்திய இசையமைப்பாளருடனும் ஒப்பிடவில்லை, உலக இசைமேதைகளுடன் மட்டுமே ஒப்பிட்டு; அவர்களுக்கு நிகரானவரான இளையராஜா ஏன் அந்த சாதனைகளை நிகழ்த்தமுடியாமல் போயிற்று, அதற்கான சமூக உளவியல் காரணங்கள் என்ன என்பதைப்பற்றியே பேசியிருப்பதாக ஷாஜி குறிப்பிட்டார்.

5. கர்நாடகசங்கீதம் அல்லது மேலைசங்கீதத்தை முறையாகக் கற்றவர்களே அதன் இலக்கணங்களைப்பற்றி பேசமுடியும், தான் கற்கவில்லை என்று சொன்ன ஷாஜி ஆனால் இசையை ரசிக்கவோ மதிப்பிடவோ அந்த இலக்கண அறிவு தேவையில்லை என்று உணர்வதாகவும், சிலசமயம் தடையாகவேகூட அமையும் என்று நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

6. இளையராஜாவின் பாடல்கள் திருட்டு அல்லது நகல் என்று குற்றம்சாட்டுமளவுக்கு தான் இசையறியாதவனல்ல என்று மறுத்த ஷாஜி பல்லாயிரம் பாடல்கள் செய்த ராஜாவின் இசையில் பலநூறு மகத்தான பாடல்களை அமைத்த அவரது சாதனையில், சில பாடல்களில் சாயல்கள் அல்லது செல்வாக்குகள் அல்லது கடன்பெறுதல்கள் இருப்பதை குறையாகக் காணவில்லை என்றும் அப்படி இல்லாத மேதைகளே இல்லை என்றும் சொன்னார். இசையில் பிறரது செல்வாக்கு என்பது மேதைகளால்கூட தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்க, சாதாரணமாக சிலரது இசையில் தன்பாதிப்பு இருப்பதை கடுமையாக கண்டிக்கும் இளையராஜாவின் மனநிலையின் சமநிலையின்மையைச் சுட்டுவதற்கே தான்  அக்கட்டுரையில் முயன்றிருப்பதாக ஷாஜி சொல்கிறார்.

7. சலீல் சௌதுரியின் பாடல்களில் நாட்டுப்புற மெட்டுகள் பல்வேறு சர்வதேச மெட்டுக்களின் சாயல் உண்டு. அவற்றை அவரே தன் மூலமென்ன என்று குறிப்பிட்டுதான் இசையமைத்திருக்கிறார் என்றார் ஷாஜி. சலீல் சௌதிரி இந்திய திரையிசையில் கலப்பிசை [·ப்யூஷன்] யின் முன்னோடி. அந்த இடத்தை அவருக்களித்தவை அந்த மூலங்களே என்றார்.

8. சலீல் சௌதிரியையும் விமரிசனத்துடன் மட்டுமே அணுகியிருப்பதாகச் சொல்லும் ஷாஜி முகேஷ் போன்ற சாதாரண பாடகர்களை சலீல் ஊக்குவித்ததை விமரிசித்திருப்பதாகச் சொல்கிறார். சலீல் சௌதுரியின் மீதான ஈடுபாடு என்பது வெறும் இளமைக்காலத்து மனப்பழக்கம் அல்ல; அவரது இசையை இன்று, விரிவான இசையறிவுடன் , அணுகும்போதுகூட அவரது ஆளுமை வளர்ந்துகொண்டே செல்கிறது என்றார்

9. என்னுடைய கட்டுரையில் தனிப்பட்ட காரணங்களால் இசையை அவர் அணுகுவதாக சொல்லியிருப்பதைக் கண்டித்த ஷாஜி அப்படி ஒரு தனிப்பட்ட உணர்வுகள் ஏதும் இதில் இல்லை சொன்னார். அதில் சொல்லப்பட்ட தகவல்களை கூடுமானவரை நம்பகமான மூலங்களில் இருந்தே பெற்றுக்கொண்டதாகவும் சொன்னார்.

10. கலைஞனின் சமூகப்பொறுப்பு, தன்னுடைய கலைவடிவத்தை தன் அகங்காரத்தைவிட மேலாக நினைக்கும் நோக்கு ஆகியவை எந்த கலைஞனுக்கும் தேவை என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், ஆகவே தன்னுடைய கட்டுரையை இப்போதும் சார்ந்து நிற்பதாகவும் ஷாஜி சொன்னார்.

என்னுடைய விளக்கங்களை நான் குறிப்பிட்டேன்.

1. ஷாஜியின் கட்டுரைகள் தமிழில் வெளிவர வேண்டுமென நான் விரும்பி முயன்றமைக்குக் காரணம் தமிழில் திரையிசை விமரிசனம் என்பது எந்தவகையான தொழில்நுட்ப, இசையறிதலும் இல்லாமல் வெறும் கிசுகிசு பாணியிலேயே செய்யப்பட்டு வந்ததை உணர்ந்த கசப்பினால்தான். சினிமாக்கிசுகிசுக்களில் வளர்ந்தது சராசரித் தமிழ்மனம்.

ஷாஜியின் முந்தைய கட்டுரைகள் கறாரான இசைவிமரிசன சட்டகத்திற்குள் நிற்கக்கூடியவை. இசை என்ற அகவயமான அனுபவத்தை முடிந்தவரை புறவயமாக பேசக்கூடியவை. உதாரணமாக பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களைப்பற்றிய அவரது விமரிசனத்தைச் சொல்லலாம்.

சுசீலாவின் மணிக்குரல் அழகாக இருக்கும்போதே பலவகையிலும் உணர்ச்சித்தொடர்புறுத்தலை விட்டுவிடுகிறது என்று ஷாஜி சொல்லி அதற்கான காரணங்களையும் உதாரணங்களையும் சொன்னார். கோவிந்தராஜன் தேவையற்ற பிர்காக்களுடன், சுருதி மீறி ஒலிக்கும் ஆலாபனையுடன், அவரோகணங்களில் ஏராளமான பிழைகளுடன்தான் பாடியிருக்கிறார் என்றும் எல்லா பாட்டுக்கும் ஒரே பாவம் கொடுக்கிறார் என்றும் சொல்லி விளக்கியிருக்கிறார்

இவை இசை சார்ந்த விமரிசனங்கள். இசையின் எல்லைக்குள் நிற்பவை. இவற்றை மறுக்கலாம் ஆனால்  அந்த விவாதம் இசை விவாதமாகவே இருக்கும். ஆனால் இந்தக் கட்டுரை முதல் முறையாக ஷாஜியின் வழக்கமான கறாரான இசை நோக்குக்கு வெளியே செல்கிறது. இசைக்கு அப்பாலுள்ள விஷயங்களை பயன்படுத்துகிறது. கிசுகிசுக்களை நம்பி செயல்படுகிறது

இதுதான் ஷாஜியின் வழிமுறை என்றால் அவரது வருகையே  அர்த்தமில்லாததாக ஆகிவிடும். அவர் இங்கே வம்பளக்கும் கும்பலில் ஒருவராக தானும் ஆகிவிடுவார். இதை மட்டுமே நான் சுட்டிக்காட்ட விரும்புவதாக சொன்னேன். எதிர்காலத்தில் ஷாஜி எழுதும் கட்டுரைகள் முந்தைய தரமான கட்டுரைகளின் வழியையே தொடரவேண்டும் என்பதே என் விருப்பம் என்றேன்.

‘எனக்கு எவ்ளவு வெல்விஷர்ஸ் தெரியுமா…·போன்கால்களா வருது’ என்று சொல்லிச் சிரித்தார். எனக்கும்தான் என்றேன்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைமலை ஆசியா – 3
அடுத்த கட்டுரைகேணி கூட்டம்