இளையராஜா,ஷாஜி…கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இளையராஜாவைப்பற்றிய உங்கள் கட்டுரை கொஞ்சம் ஓவராக இருக்கிறது என்று நினைக்கிறேன். சில சில்லறை தவறுகளும் இருக்கின்றன. இளையராஜாவைப்பற்றி நீங்கள் சொன்னவற்றை யோசிக்கலாம். ஆனால் அவரே எல்லாம் என்று சொல்வதுபோல இருக்கிறது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ராமச்சந்திரா

பெங்களூர்

அன்புள்ள ராமச்சந்திரா,

உண்மைதான். பல சொற்றொடர்களில் மிகைவேகம் இருக்கிறது என்பது உண்மை — ஆனால் அது ஓர் எதிர்வினையாக உருவானது. இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கும் இளையராஜா பற்றிய ‘நஸ்டால்ஜியா’ உண்டு. நான் ‘அறிவுபூர்வமாக’ அணுகவுமில்லை.

என் கட்டுரையில் சங்கீதமல்லாத விஷயங்களை நான் சொல்லும் இடங்களே முக்கியமானவை என்பது என் எண்ணம் – அவையே என் கருத்துக்கள்.

மேலும் நான் பலமுறை சொல்வதுபோல எனக்கு இசை குறித்த கவனமும் ஆர்வமும் பெரிதாக இல்லை. என்னுடைய மனதில் உள்ள தகவல்கள் பல பலசமயம் தப்பாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் திரையிசையை அல்லது வேறு ஏதேனும் இசையைக் கூர்ந்து கவனித்தவனல்ல. சொல்லப்போனால் 80களில்தான் நான் தமிழ்ச் சினிமாவையே கூர்ந்து பார்த்திருக்கிறேன். அதெல்லாம்கூட நினைவிலேயே உள்ளன.

என்னுடைய எதிர்வினை இந்த எல்லைக்குள்தான். நான் கேட்டு அறிந்த நிபுணர்களின் கருத்துக்களையே சொல்லியிருக்கிறேன். எனக்குப்புரிந்தவரை சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான். பாதிவிஷயங்கள் விட்டுப்போயிருக்கின்றன என்று தெரிகிறது. ஒன்றும்செய்யமுடியாது.

ஜெ

*

அன்புள்ள ஜெ

இளையராஜாவைப்பற்றிய இந்த விவாதத்தில் சில முக்கியமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். 1. இளையராஜா தமிழில் யதார்த்த சினிமா வருவதற்கு ஆற்றிய பங்களிப்பு. 2 இளையராஜாவின் சங்கீதம் தமிழில் சினிமாமொழி மேம்படுவதற்கு அளித்த பங்களிப்பு. இதைப்பற்றிய விவாதம் நிகழும் என்று நினைக்கிறேன். நன்றி

சிவராம்

அன்புள்ள சிவராம்,

அப்படி ஏதும் நிகழும் என நான் நினைக்கவில்லை. இது முற்றிலும் ‘ஈகோ’ சம்பந்தமான விஷயம். ஆகவே மட்டம்தட்டும் முயற்சிகள் மட்டுமே நிகழும். நான் என் தரப்பை பதிவுசெய்து வைக்கிறேன், அவ்வளவுதான். கொஞ்சநாள் திட்டி மட்டம்தட்டி எதையாவது எழுதி ஓய்வார்கள். இதுவும் சிலர் மனதில் இருக்கட்டுமே.

ஜெ

*

அன்புள்ள ஜெமமோகன்

ஷாஜியுடன் சண்டையா? செய்தி படித்தேன்

ஜெயலட்சுமி

அன்புள்ள ஜெயலட்சுமி

நள்ளிரவில் சேட்டில் வந்து என்ன கேள்வி? ‘செய்தி’ எங்கே படித்தீர்கள்?

காலையில்தான் ஷாஜியிடம் இக்கட்டுரை பற்றி பேசினேன். மும்பையில் ஒரு ரிக்கார்டிங்கில் இருக்கிறார். அவரிடம் பலர் போனிலே ஜெயமோகன் உங்களை போட்டுத்தாக்கிவிட்டாரே என்று துக்கம் கேட்டிருக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பது சரி. இதுவே ஒரு தமிழக நண்பர் என்றால் உறவு முறிந்ததுமாதிரித்தான். ‘மலையாளத்தான்’களுக்கு நடுவே எல்லாமே ‘நேரம்போக்கு’தான். ஷாஜிக்கு நன்றாகவே சிரிக்கத் தெரியும்.

ஜெ

*

ஜெ,

ஷாஜிக்கு இசை தெரியாது என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அப்படியானால் அவர் கட்டுரைகளை ஏன் நீங்கள் மொழியாக்கம் செய்தீர்கள்?

கணேசன் மாம்பாடி

அன்புள்ள கணேசன்

சுத்தம். என்ன ஒரு தெளிவான புரிதல்!

தனக்கு கர்நாடகசங்கீதத்தின் ராகநுட்பங்கள் அல்லது மேலைச்செவ்வியலின் அமைப்புநுட்பங்கள் தெரியும் என ஷாஜி எங்குமே சொல்லமாட்டார்.அந்த அளவுக்கு நேர்மை அவருக்கு உண்டு.

ஷாஜியின் இசையறிதல் இரு தளங்களைச் சேர்ந்தது. ஒன்று, மேலைநாட்டு பாப் இசை. அந்த தளத்தில் அவரளவுக்கு விஷயமறிந்தவர்கள் இங்கே மிகமிகச் சொற்பம். 2. இந்தியதிரையிசை.  ஆறு இந்திய மொழிகள் அறிந்தவர் என்ற முறையில் இந்திய திரையிசையின் எல்லா முகங்களையும் அவர் பலகாலமாகக் கூர்ந்து கவனித்து வருகிறார்

இதற்கு அப்பால் , மக்னா சவுண்ட் நிறுவனத்தின் இசைவெளியீட்டாளராக இருந்தவர் என்ற முறையில் ஒலிப்பதிவு, இசைக்கோர்ப்பு, குரல்சேர்ப்பு,சுருதி முதலிய தொழில்நுட்பங்களைப்பற்றிய துல்லியமான ஞானம் அவரிடம் உண்டு. 

இந்த தளங்களில் அவருடன் சாதாரணமாக ஒப்பிடக்கூட தமிழில் எழுதும் எவரும் இல்லை. அதற்கு முன்பு தமிழில் மேலைநாட்டு பாப் இசை பற்றி வந்த கட்டுரைகள் எல்லாம் குப்பை என்று அதிக ஞானமில்லாத என்னாலேயே  உணர முடிந்தது. ஆகவே நான் தான் அவரை கேட்டுக்கொண்டு எழுதச் செய்தேன்

அவரது எழுத்து இசைவிமரிசனம் என்றால் என்ன என்று தமிழுக்குக் காட்டியது என்றுதான் நினைக்கிறேன். அதில் எனக்கு பங்குண்டு என்பதில்  எனக்கு மகிழ்ச்சி.

இளையராஜாவைப்பற்றி அவர் விமரிசனம் செய்வதிலும் என்னால் எந்தப் பிழையும் காணமுடியவில்லை. அது விமரிசகனின் சுதந்திரம். அதற்கான தகுதியும் அவருக்குண்டு. ஆனால் அந்த விமரிசனம் அவர் இதுவரை தன் கட்டுரைகளில் கட்டிக்காத்துவந்த தரத்துடன் இல்லை. அதுவே என் குறை.

இசை விமரிசனத்தின் எல்லையை மீறிச்சென்று தனிப்பட்ட உணர்ச்சிகளைக் கலந்துகொண்டு கையில் கிடைத்தவற்றை எல்லாம் எடுத்து வீசுவதுபோல் உள்ளது அது என்றும், அவர் இளையராஜாவின் வரலாற்றுப் பங்களிப்பை கணக்கில் கொள்ளவில்லை என்றும் சொல்கிறேன். அவ்வளவுதான்.

ஒரு கட்டுரை எழுதினால் அதை விளக்கிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது இங்கே. ஆகவே இனிமேல்  ஆளை விடுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைமலை ஆசியா – 2
அடுத்த கட்டுரைமலை ஆசியா – 3