இந்தியப் பயணம் 9 – நல்கொண்டா

செப்டம்பர் ஏழாம்தேதி மதியம் சாப்பிட்டபின் ஸ்ரீசைலத்தில் இருந்து கிளம்பினோம். ஒரு ஊரில் மாலையையும் அதிகாலையையும் கழித்தால் அந்த ஊரில் குறைந்தபட்ச வாழ்க்கை ஒன்றைக் கழித்திருக்கிறோம் என்று பொருள். அதிலும் குறிப்பாக கோயில்நகரங்கள் காலையில்தான் முழுமையுடன் இருக்கின்றன. பெரும்கோயில்களுக்கே உரித்தான பூஜைப்பொருள் கடைவரிசைகள் அதிகாலையிலேயே ஒளியுடனும் பக்திப்பாடல் இசையுடனும் விழித்துக் கொள்கின்றன. குளித்துவிட்டு தெருவுக்கு வரும்போது நகரமே புதிதாகப் பிறந்ததுபோலிருக்கும். பக்தி இல்லாதவருக்குக் கூட புனிதத்தலங்கள் மிக ழமான மன எழுச்சியை அளிக்கக் கூடியவை.

ஏனென்றால் தெருவில் எதிர்படும் முகங்கள்தான். அன்றாட லௌகீக வாழ்க்கையை உதிர்த்துவிட்டு அங்கே அப்போது புதிதாக விழித்தெழுந்தவை போல ஒருவகை புத்துணர்ச்சி அவற்றில் பெருகித் ததும்புவதைக் காணலாம். குறிப்பாகப் பெண்களின் முகங்கள், அவை ஜொலித்துக்கொண்டிருக்கும். இந்தியப் பெண்களை இத்தகைய கோயில் நகரங்களிலன்றி வேறெங்கும் அகஅழகு முழுமையாக வெளிபப்டும் முகங்களுடன் காண முடியாது. அவர்களை கட்டிவைத்திருந்த தளைகள் அனைத்துமே அங்கே சிதறிவிடுகின்றன. அசைவுகளில் சுதந்தற்றம் உருவாக்கும் எல்லா நளினங்களும் கைகூடுகின்றன. அந்தச் சூழலின் புத்துணர்ச்சி நம்மிலும் ஊறுகிறது.

அதிலும் ஸ்ரீசைலம் நகரில் மிக அழகான பெண்களை பார்த்தபடியே இருந்தோம். எங்கும் எப்போதும் அழகிகள் எதிர்பட்டுக்கொண்டிருப்பது ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கிறது. பெண்மையின் அழகு என்பது ஆண் மனத்துக்கு அவனுக்கு அளிக்கபட்டுள்ள ஆதி உவகை ஒன்றை அளிப்பது. சிறுமி முதல் முதுமை வரை பெண்களின் பல்வேறு பரிணாம நிலைகளைக் காண்பது பிரபஞ்சலீலையொன்றுக்குச் சாட்சியாக இருப்பது போன்றது.

சாப்பிடச்சென்ற போடு ரெட்டிகளின் சத்திரத்தில் வைத்திருந்த கணபதி பூஜைக்கு ஆடுவதற்காக வந்த லம்பாடிப்பெண்களைக் கண்டோம். பெரிய வெண்ணிற வளையல்களை தோள் வரை அடுக்கி காதில் அலுமினிய தொங்கட்டான்களும் நெற்றிச்சுட்டியும் அணிந்து கண்ணாடி பதித்த ஜாக்கெட்டும் பறக்கும் பாலிஸ்டர் பாவாடையுமாக அவர்கள் சுழன்று சுழன்று ஆடியது நளினமாக இருந்தது. அவர்கள் தேர்ந்த நடனக்காரிகளைப் போல ஆடினார்கள். அசைவுகளில் சினிமா நடனத்தின் பாதிப்பும் இல்லை. அதிக யாசம் தராத சீரான ஒத்திசைவுள்ள நடனம். நடுவே சிரிப்பு , உற்சாகக் கூக்குரல். அவர்களின் புராதனமான வாழ்க்கைமுறையில் அவர்கள் அடையும் ஆனந்தம் ஒவ்வொரு முகபாவனையிலும் வெளிப்பட்டது. எல்லா வயதினரிலும் லம்பாடிப் பெண்கள் இருந்தார்கள். இரண்டு பெண்கள் பேரழகிகள்.

பெரிய பந்தி. கரிய கல்போட்ட மேஜையில் தையல் இலைகள் விரித்து சோறும் சாம்பாரும் காரச்சட்டினியும் மோரும் பரிமாறினார்கள். நல்ல உணவுதான். காரம் தொண்டையை சுகமாக எரித்தது. பரிமாறிய ஒரு பெண்கூட சற்றேஆண்மை கலந்த அழகுடன் இருந்தார். சாப்பாடு இலவசம். அப்படிப் பார்த்தால் அறைவாடகை மிகமிகக் குறைவுதான். நாங்கள் சாப்பிட்டு முடித்து வெள்யே வந்தபோது லம்பாடிப்பெண்கள் சாப்பிட வந்தார்கள்.

இந்த மிகப்பிரம்மாண்டமான சத்திரமே ஏராளமான நன்கொடைகளினால் கட்டியிருக்கிறார்கள். நன்கொடை கொடுத்த பலநூறு ரெட்டிகளின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. பலர் இறந்துவிட்டவர்கள். அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. ஒரு இறந்துபோன சிறுவனின் கண்மூடிய புகைப்படம்கூட இருந்தது. அகாலம் மரணமடைந்த சிறுவர் சிறுமிகள் நினைவாகவே கணிசமான நன்கொடைகள் அளிக்கப்பட்டிருந்தன. கல்யாணத் தம்பதிகளின் நன்கொடைகளும் உண்டு. அறுபது எழுபது வயதான ஜோடிகளின் படங்களும் நிறைய இருந்தன. ஒவ்வொரு அறையிலும் அந்த அறையைக் கட்ட உதவிய  ரெட்டிகளின் படங்கள் இருந்தன.

இந்திய சாதியமைப்பைப் பற்றிய மனநிலைகளை இன்னும் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டிய காலம் வந்து விட்டது என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதை பிராமணர் உருவாக்கிய சதிவேலை என்று நம்பும் வெறுப்புவாத மூடநம்பிக்கையை படித்தவர்களாவது கைவிட வேண்டும். அது இந்தியப்பழங்குடி வாழ்க்கையில் இருந்து பலநூற்றாண்டுகளாக உருவாகி வந்த ஒரு பேரமைப்பு. முரண்பாடுகள் பரஸ்பர ஆதிக்கம் ஆகியவை ஒருபக்கம். அது எந்த சமூகப்பிரிவினையும் தவிர்க்க முடியாமல் உருவாக்கும் விளைவுதான். ஆனால் மறுபக்கம் கலைகளையும் தொழில்களையும் சார்ந்த உள்ளார்ந்த ஞானத்தையும் அனுபவ அறிவையும் பாரம்பரியமாகக் கொண்டுசெல்லுதல்; போரிடும் தன்மை, வணிகப்புத்தி போன்ற பிறவிப்பண்புகளை முன்னெடுத்துச் செல்லுதல், ஒருங்கிணைந்து பெரும் அமைப்புகளில் உருவாக்குவதற்கானவை இயல்பான பொது அடையாளமாக அமைதல் என ஜாதிக்கு பல சாதக அம்சங்களும் உண்டு.

சாதிக்குள் இருந்தபடி சாதியை உருவாக்கியமைக்காக பிராமணனை வைதுகொண்டிருக்கும் அபத்தத்தை விட்டு விலகி ஜாதியின் பேதபுத்தியை ஜனநாயகப்படுத்துவதும் ஜாதியின் சாதக அம்சங்களை பயன்படுத்த முடியுமா என்று பார்ப்பதுமே இப்போது செய்யக்கூடியதாக இருக்கும். நம்முடைய மரபில் சாதி மாபெரும் கூட்டு முயற்சிகள் அறக்காரியங்கள் கியவற்றுகான அடிபப்டை சக்தியாகவும் இருந்துள்ளது

நல்கோண்டா சாலையை எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் விசாரித்தபடி சென்றோம். கடுமையான காடு. பெரும் மலையிறக்கம். இருபக்கமும் பாளம் பாளமாக அடுக்கப்பட்ட பாறைகள் எழுந்து திசைகளை மறைத்தன. கிருஷ்ணாவின் மாபெரும் நீர் விரிவை மேலே இருந்து பார்த்தபடி இறங்கிச் சென்றோம். நீர் மின்சாரத்துக்கான அணைக்கு முன் நீல நீர் அலைபாய மெல்ல நெளிந்து சென்றது நதி. குளிக்கலாமா என்றேன்.  இல்லை நேரமில்லை என்றார் கமாண்டர் கிருஷ்ணன். ஒரு ஐந்து நிமிடம், கால்களை மட்டும் நனைத்துவிட்டு வருகிறோம் என்று கெஞ்சினோம். கிருஷ்ணாவை பார்த்துவிட்டு குளிக்காமல் போவதாவது. நேராக நதி நோக்கி ஓடும்போதே ‘கமாண்டர் கிடகிறார், குளிப்போம்’ என்றார் செந்தில். நானும் சிவாவும் செந்திலும் நேராக சட்டையை கழட்டிவிட்டு நீரில் பாய்ந்தோம். நீந்தி திளைத்து அரைமணி நேரம் குளித்தபின்புதான் மேலேறினோம்

மேலேறி சென்றுகொண்டே ஸ்ரீசைலத்தை நெருங்கும்போதே தென்பட ஆரம்பித்த பசுமை மேலும் மேலும் அழுத்தம் பெற்றபடியே வந்தது. கிருஷ்ணா தென்னிந்தியாவின் மாபெரும் நதி. வற்றாத நீர்வளம் கோண்டது. ஆந்திராவிற்கு இயற்கையின் ஆசி அது. ஆந்திராவின் கிருஷ்ணா படுகை தென்னகத்தின் நெற்களஞ்சியம். நம்முடைய தஞ்சைப்படுகைபோல மும்மடங்கு பெரியது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரைக்கும் பச்சைக்கடல் போல நெல்வயல்கள் அலையடித்தன. ராயலசீமாவின் வறட்சியைக் கண்ட கண்கள் அந்தப் பசுமையை தாகம் தீராமல் அள்ளிப்பருகின. இந்தப் பசுமைநிலத்து மக்களை ராயலசீமாவின் மக்கள்தான் ஆண்டார்கள் என்ற வரலாற்றையும் எண்ணிக் கொண்டேன்.

போகும் வழியெங்கும் நிறைய லம்பாடிகள் கண்ணுக்குப் பட்டார்கள். இப்பகுதியில் சென்ற ஐம்பது வருடங்களில் நாடோடிகளான லம்பாடிகள் மெல்லமெல்ல நிலையாக தங்கி மாடு மேய்க்கும் தொழிலில் ஊன்றிவிட்டிருக்கிறார்கள். காரணம் மேய்ச்சல் நில மக்கள் புதிய பாசன வசதி காரணமாக வேளாண் சமூகங்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். லம்பாடிகளின் பூர்வீகம் ராஜஸ்தான். ராஜாஸ்தானிய பாணி உடைகள் வாழ்க்கைமுறைகள் கொண்டவர்கள். அவற்றை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. சாலையில் விரைகையில் ஒரு லம்பாடி இளம்பெண் சாலையோரம் சிறுநீர் கழிக்க அமர்ந்தபோது மெல்லிய பாவாடை காற்றில் அபப்டியே முழுமையாக தூக்க இடுப்புக்குக் கீழே நிர்வாணமாக நின்று ”கூ” என்று கூவியபடி ஓடினாள். சத்தம்தான் நான் கேட்டேன். செந்திலும் ர·பீகும் அதிர்ந்து போய் மிரள மிரள விழித்தார்கள். ”என்ன சார் இது!” என்றார் செந்தில் பீதியுடன்.

தேவரலகொண்டா என்ற ஊரில் மலை மீது பிரம்மாண்டமான ஒரு கோட்டை தெரிந்தது. பல குன்றுகளை உள்ள்டக்கி அது வளைந்து சென்றது. அந்தியில் அதன் மீது துயரமான ஒரு மௌனம். அங்கே மனித நடமாட்டமே இருக்காது. வரலாறு என்பது மரணத்தின் பரப்பும் கூட. எளிய மக்கள் அதை அஞ்சுகிறார்கள். உயரமான குன்றுகள். நாயைக்கண்டு மரத்தில் ஏறிக்கொள்வதுபோலத்தான் அக்கால ஆட்சியாளர்கள் குன்றுகளில் ஏறி கொண்டிருக்கிறார்கள்.

ராயலசீமாவைப்போலவே பிரம்மாண்டமான உருளைப்பாறைகள் சிதறிக்கிடக்கும் நிலக்காட்சி வரத்தொடங்கியது. இருட்டிக் கொண்டே வந்தது. நல்கொண்டாவிலேயே தங்கிவிடவேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டோம். திட்டத்தில் ஒருநாள் தாமதமாகியபடியே செல்கிறது. சாலை சிறப்பாக இருந்தது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செய்த சாதனைகளில் முக்கியமானது கிராமங்களில் கூட உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியது. ஆந்திரா தன் நெடுங்கால தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டது அவர் காலகட்டத்தில் செய்யப்பட்ட சிறப்பான அடிப்படை பணிகளினால்தான். அவரை ஆந்திராவின் ஆங்கில நாளிதழ்கள் தொடர்ச்சியான எதிர்பிரச்சாரம் மூலம் வீழ்த்திவிட்டன. ஆனால் ஆந்திராவில் அவரது பணிகளை எவரும் காணலாம். அவரை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்த ராஜசேகர ரெட்டியின் காங்கிரஸ் அரசு முற்றிலும் செயலற்ற ஆட்சி ஒன்றை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறது என்று அறியமுடிந்தது. 

தேவரலகொண்டாவில் ஒரு பாறைமேல் குகைக்கோயில் ஒன்றைக் கண்டு ஏறிச்சென்றோம். நான்குபக்கமும் பாறைமலைகள் சூழ்ந்த அபூர்வமான நிலம். பெரும்பாறை ஒன்று ஏழெட்டு சிறு பாறைகள் மேல் அமர்ந்திருக்க்கிறது. அதனடியில் குகைபோல உருவாக்கி காளியை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஒரு முக்கியமான புண்ணிய தலம் உருவாகி வருகிறது. மபாரமான தனிமையும் அமைதியும் கொண்ட இடம். அருகே நீர் உள்ள குளம். அங்கேயே இரவு தங்கினால் என்ன என்றார் கிருஷ்ணன். நானும் ஏற்றேன். ஆனால் சிவா தயங்கிவிட்டார்.

இரவில் நல்கொண்டா வந்துசேர்ந்தோம். நல்கோண்டா பழங்காலத்தில் நீலகிரி என்றழைக்கப்பட்ட ஊர். தெலுங்கானாவின் தெற்குபகுதியில் உள்ள முக்கியமான நகரம் இது. கிருஷ்ணா பெக்காவாடு, கனகல், டிண்டி, லாயர், ஹாலியா என்று று நதிகள் இந்த மாவட்டத்தில் ஓடுவதனால் மிகவும் வளம் கொழிக்கும் மாவட்டம். இரவு விடுதியில் அறை எடுத்தபின் நான் இணையமையம் சென்றுஎழுதியவற்றை அனுப்ப முயன்றேன். இணையத்தின் வேகம் தொண்ணூறுகளை நினைவுறுத்தியது. இரண்டுமணிநேர உழைப்பு அதற்கு தேவைப்பட்டது.

நகரத்தில் பல இடங்களில் மார்பளவுச் சிலையாக என்.டி. ராமராவ் தென்பட்டார். ராமராவ் ஆந்திராவில் இன்றும் வாழும் வரலாற்றுமனிதர். அவரது படங்களின் பாடல்காட்சிகள்தான் ஓட்டல்களில் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தன. ராமராவ் பெற்ற வெற்றிக்கு அவரது படங்களில் உள்ள இனிய பாடல்கள் ஒரு முக்கியமான காரணம் என்று பட்டது.

நல்கொண்டாவில் இரு அறைகளை வாடகைக்கு எடுத்தோம். முந்நூறு ரூபாய் வீதம் வாடகை. ஓர் அறையில் நான் வசந்தகுமார் கல்பற்றா நாராயணன் மூவரும். மற்ற அறையில் நால்வர். ஒருவர் தரையில் படுத்துக்கொள்ளவேண்டும். இரவில் நான் என் உடைகளை துவைத்துக் காயப்போட்ட்டேன். அதன்பின் தூங்கிவிட்டேன். இரவில் நல்ல மழை. ஆனாலும் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தமையால் என் உடைகள் காலையில் காய்ந்துவிட்டன.

காலையில் எழுந்து டீ குடித்தால்தான் எனக்கு காலைக்கடன்களைக் கழிக்க முடியும். ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு நாங்கள் தங்கும் சாதாரண விடுதிகளில் டீ கிடைக்காது. அறைச்சேவை முற்றிலும் இல்லாத இடங்கள். ஆகவே பச்சைத்தண்ணீரைக் குடிக்க பழகிக் கொண்டேன். காலையில் மழை விழுந்துகொண்டிருந்தது. மழையில் சற்று நனைந்தபடி பைகளை காரின் மீது வைத்து கட்டினோம். ஏழுமணி ஆகிவிட்டது கிளம்ப. நான் காகதீய பேரரசைப்பற்றி கல்பற்றா நாராயணனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

நிறைய படிக்கக் கூடியவர் கல்பற்றா நாராயணன், ஆனால் அவருக்கே தென்னிந்திய வரலாறு பற்றி எதுவுமே தெரியாது. ஹொய்ச்சள காகதீய விஜயநகர பேரரசுகளைப்பற்றி விரிவாக நான் சொன்னபோது அவருக்கு எல்லாமே புதிய தகவல்கள். இதை நான் கவனித்திருக்கிறேன். சராசரி மலையாளிக்கு கேரளத்துக்கு வெளியேயுள்ள வரலாறு பற்றி எதுவுமே தெரிந்திருப்பதில்லை. அக்கறையே இல்லை. ஏன் சேரர் வரலாறுகூட தெரிந்திருப்பதில்லை.

காரணம் கேரளத்தின் பண்டைய வரலாறு கேரளத்தின் மலையாளதேசிய தனித்தன்மைக்கு எதிராக இருப்பது. அது தமிழக வரலாற்றின் ஒரு சிறு பகுதிதான். ஆகவே அவர்கள் வரலாற்றை பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறார்கள். கேரளம் இருநூறு வருடங்களுக்கு மேலாக விஜயநகர ஆட்சிக்குக் கீழே இருந்திருக்கிறது. கேரளத்தில் உள்ள பெரிய கோட்டைகளான கண்ணனூர் பேக்கல் கோட்டைகள் நாயக்கர்களால் கட்டபப்ட்டவை. ஆனால் அவை பற்றி ஏதும் சராசரி மலையாளி வாசகனுக்கு அறிவிருப்பதில்லை. ஆனால் சின்னச்சின்ன அரசர்களான கோழிக்கோடு சாமூதிரி கொல்லம் அரசர்கள் போன்றவர்களை பெரிய மன்னர்களாக கற்பனைசெய்து வைத்திருப்பார்கள். வங்காளிகள் மலையாளிகள் இரு சாராரும்தான் இந்தியாவில் அசிங்கமான பிராந்திய உணர்வு கொண்டவர்கள். அதற்குக் காரணம் இடதுசாரி அரசியல் என்பது ஒரு வேடிக்கை.

இந்துத்துவர்கள் வரலாற்றை திருத்துகிறார்கள் என்று ஓயாது கூச்சலிடுகிறார்கள் இடதுசாரிகள். கேரள வரலாற்றில் மட்டும் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் செய்துள்ள திரிபுகள் பலமடங்கு என்றார் கல்பற்றா நாராயணன். ஒருவகை தேசிய பெருமிதத்தை உருவாக்கி அதன் மேலேயே இடதுசாரி அரசியல் கேரளத்தில் கட்டப்பட்டுள்ளது. சராசரி மலையாளி தன்னைப்பற்றி கொண்டுள்ள மிகையான பிம்பம் இவ்வாறு உருவானதே.

ஏழரை மணிக்கு நல்கொண்டா அருகே உள்ள பனகல் என்ற சிற்றூருக்குச் சென்று சேர்ந்தோம். காகதீய பாணியிலான அழகிய கோயில் ஒன்று இங்கிருக்கிறது. பச்சால சோமேஸ்வரர் ஆலயம் . மேலே கோபுரம் இடிந்து கிடக்கிறது. மொத்த கோயிலே இடிபாடுக்குவியலாகக் கிடந்து சற்றே மீட்கப்பட்டிருக்கிறது. கோயிலுக்குள் மண்டபம் உடைந்து உள்ளே நீர் சொட்டிக்கொண்டிருந்தது. சிறிய லிங்கம். கோயில் முன்னாலிருந்த நந்தி கன்னங்கரிய கல்லில் அழகிய நகைகளுடன் கம்பீரமாக படுத்திருந்தது. 

காகதீய கட்டிடக்கலையின் பொதுவான அம்சம் என்று சிலவற்றைச் சொல்லலாம். பல அடுக்குகள் கொண்ட உயரமான அடித்தானம் [அடித்தளம்]. அதில் ஏராளமான சிற்பங்கள். அதன் மீது கோயில் கருவறை முகமண்டபம் ஆகிய இரண்டும் ஒரே கட்டிடமாக இருக்கும். முகமண்டபத்தில் மிக அழகான உருளைவடிவ அல்லது எண்பட்டை அவ்டிவ அல்லது சதுரமும் உருளைவடிவமும் கலந்த தூண்கள். தூண்களில் வட்டமான கபோதமும் மலரும். சதுரத்துக்குள் கோணவடிவிலான சதுரங்களாகச் செல்லும் மேல்கூரை. பொதுவாக இந்த மண்டபம்தான் காகதீய கோயிலின் உச்சகட்ட கலைநுட்பத்துடன் இருக்கும். காகதீய கட்டிடக்கலை என்பது ஆரம்பகால சாளுக்கிய கட்டிடக்கலையின் முழுமைகொண்ட வடிவம் என்பார்கள்.

காகதீய கட்டிடங்களின் இன்னொரு சிறப்பம்சம் கரிய மார்பிள் கல்போன்ற ஒருவகை கருங்கல்லால் அவை செதுக்கப்பட்டிருப்பதுதான். இரும்பால் செய்யப்பட்டு நன்றாக பளபளப்பாக்கப்பட்டவைபோல இருக்கும் அவை. சிற்பங்களின் அணிகள் கன்னங்கள் உடல்வளைவுகள் எல்லாம் மின்னும். தாட்பத்ரியில் கரிய கடப்பைக்கல்லால் செய்யபப்ட்ட சிலைகள் உண்டு. அவையும் கருமையும் பளபளப்பும் கொண்டவை, ஆனால் அவற்றில் குழைவை கொண்டுவர முடியாது. தூண்களின் பட்டைகளும் நுட்பமான பூவேலைகளும் கொண்ட செறிவான அமைப்புதான் மனதைக் கவரும். இங்குள்ள கரியகல் கிட்டத்தட்ட மெழுகு போல சிற்பிக்கு ஈடுகொடுக்கிறது.

பனகலில் பச்சன சோமேஸ்வரர் ஆலயத்தின் உடைந்து சிதிலமான அடித்தானத்தின் விளிம்பில் அரையடி அகலத்தில் விளிம்பு முழுக்க யானைகளால் ஆனது. புடைப்புச் சிற்பமாக மிக தத்ரூபமான யானைகள். பலநூறு யானைகள். யானையின் அசைவின் பலநூறு கோணங்கள். உடைந்த சிற்பங்களின் உடைகளும் நகைகளும் கூர்ந்து நோக்க நோக்க நுட்பங்கள் விரியுமளவுக்கு செறிவான அழகு கொண்டவை. மழை நீரில் அவை கருமையாக மிளிர்ந்தன. ‘மாசறக் கழீயிய யானை போல’ என்று வையாரின் வரி நினைவுக்கு வந்தது.

கோயிலுக்கு அருகே இன்னொரு சன்னிதி இருந்து அழிந்திருக்கிறது. உடைந்த நந்தி மட்டும் அதற்கே உரிய ஆழ்ந்த கவனத்துடன் இல்லாத கோயிலை பார்த்துக்கொண்டு படுத்திருந்தது. கோயிலுக்குப் பின்னால் ஆந்திர அரசின் சிறிய அருங்காட்சியகம் ஒன்று. அதில் அந்தக் காலையில் ஒரு வாட்ச்மேன் மட்டுமே இருந்தார். அதன் முன்னால் இருந்த முற்றத்தில் உடைந்த சிற்பங்களை ஏராளமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு காலபைரவர் சிலைகள் அற்புதமானவை. தன் கழுத்தில் தானே வாளை வைத்த நிலையில் நிற்கும் நடுகல் சிலைகள் பல இருந்தன. அவையெல்லாம் போரில் தன்னையே களப்பலியாக கொடுத்தவர்களின் சிலைகள். அதில் ஒரு பெண்ணும் இருப்பது மிக வியப்புக்குரியதாக இருந்தது. அத்தகைய ஒரு சிலை வேறு எங்காவது இருக்குமா தெரியவில்லை

அங்கிருந்து சற்று தள்ளி  மழையில் நனைந்த கிராமச்சாலையில் சென்று திரும்பி சாயல சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். பச்சன சோமேஸ்வரர் ஆலயத்தின் அதே பாணியிலான கோயில். அழகிய முகமண்டபம். கம்பீரமான நந்தி. உள்ளே லிங்கத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அது நான்கடி ஆழமான கருவறைக்குள் உள்ளது. அதை வெளியே நிற்கும் பக்தர்கள் காண முடியாது. அதன் நிழல் பின்னால் உள்ள சுவரில் விழும், அதை மட்டுமே தரிசிக்க முடியும். [சாயா என்றால் நிழல்] அந்த நிழலுக்குதான் பூஜை.

சாயல சோமேஸ்வரர் கோயில் இடிந்து கைவிடப்பட்டு கிடக்கிறது. அப்பகுதியிலேயே மனித நடமாட்டம் இல்லை. கோயிலுக்குள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பன்னஹல்க அஜய்குமார் சைக்கிளில் வந்து பூஜைசெய்து கொண்டிருந்தான். கடும் வறுமை தெரியும் முகம். மெலிந்த உடல். நன்றாகவே மந்திரம் சொல்லி ஸ்தல வரலாற்றையும் சொன்னான்.

கோரை மண்டிய கோயில் குளத்தைப் பார்த்துவிட்டு சூரியபெட் கிளம்பினோம்.

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம்
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் 10 – பாணகிரி