பகுதி நான்கு : அனல்விதை – 3
பாகீரதி அளகநந்தையை சந்திக்கும் தேவப்பிரயாகையின் கரையில் அமைந்த குடிலின் முன் எழுந்து நின்ற பாறையின் விளிம்பில் துருபதன் நின்றிருப்பதை பத்ரர் கண்டார். நெஞ்சுநடுங்க ஓடி அருகே வந்து கையெட்டும் தொலைவில் நின்றுகொண்டார். துருபதன் கைகளைக் கட்டி நின்றபடி இருபது வாரை ஆழத்தில் தெரிந்த நதிகளை நோக்கிக்கொண்டிருந்தார். சருகு ஒன்று பாறைமேல் ஒட்டியிருப்பது போலிருந்தார். இளங்காற்றில் கீழே விழுந்துவிடுபவர் போல.
பாகீரதியின் பெருக்கு அருவியொன்றை கிடைமட்டமாக பார்ப்பதுபோலிருந்தது. பேரோசையுடன் பாறைக்கரைகளில் அலையறைந்து உருளைப்பாறைகளில் ஏறிக்குதித்து நுரையெழுப்பி வந்தாள். பொன்னிற இளந்தோளில் சரிந்த நீலக்குழல்கற்றை போலிருந்தாள் அளகநந்தை. ஒளிவிட்ட சிற்றலைகளுடன் பாறைகளில் ஏறிவளைந்து ஓசையின்றி வந்து மெல்லிய நாணத்துடன் வளைந்தாள். பாகீரதி வெறிகொண்டவள் போல வந்து அளகநந்தையை அள்ளித்தழுவி இறுக்கிச் சுழன்று ஆர்ப்பரித்தாள். இரு நதிகளும் கலக்கும் நெளிகோடு மேலிருந்து நோக்கியபோது தெளிவாகத் தெரிந்தது. நெடுந்தூரத்துக்கு நீர்ச்சரடுகள் ஒன்றுடன் ஒன்று தோளுரசி முட்டி மோதி முன் சென்றன.
அந்தியின் செவ்வொளியில் பாறைகள் மின்னிக்கொண்டிருந்தன. நதி நோக்கி மடிந்த செங்குத்தான கரைவிளிம்பின் உடைந்த பாறைப்பரப்புகள் வாள்முனைகள் போல சுடர்ந்தன. பகலில் எழுந்த நீராவி குளிர்ந்து வழிந்து ஈரமாகிவிட்டிருந்த பாறைகளில் இருந்து சிறிய பறவைகள் மலர்கள் உதிர்ந்தது போல கூட்டமாக சரிந்திறங்கி நீர்மீது விரிந்து வளைந்து கீழே பாறைவிரிசல்களில் மறைந்தன. வடகிழக்கிலிருந்து குளிர்ந்த காற்று பெருகிவந்து சூழ்ந்து சுழன்று கீழிறங்கிச் சென்றது. மங்கலடைந்துகொண்டிருந்த வானில் தொலைவில் நீலமலையடுக்குகள் மயிற்பீலிக்கற்றையை தூக்கி வைத்ததுபோல தெரிந்தன.
பின்பக்கம் பாஞ்சாலப்படையினர் கூடாரங்களை கட்டிக்கொண்டிருந்தனர். தறிகளை அறையும் ஒலியும் யானைத்தோலை இழுத்துக்கட்டுபவர்கள் சேர்ந்து எழுப்பிய கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. கழுதைகள் பொதிகளை இறக்கிவிட்டு குளம்புகள் சரளைகற்களில் பட்டு ஒலிக்க நடந்து விலகிச்சென்று முட்செடிகளின் இலைகளைக் கவ்வி மெல்லத் தொடங்கின. குதிரைகள் செருக்கடித்து கால்களால் நிலத்தை உதைத்தன. விறகுக்காக மரங்களைவெட்ட சிலர் கிளம்பி மலைச்சரிவில் ஏறிச்சென்றனர்.
ரிஷிகேசத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு முன் கழுதைகளில் சுமைகளுடன் கிளம்பி மலையேறி மதியம்தான் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். ரிஷிகேசத்தில் இருந்து கிளம்பிய மலைப்பாதை செம்மண் கரைந்து சுழன்றுவழிந்து வந்த நீரோடை போலத் தெரிந்தது. அப்பால் இமயத்தின் முடிகளுக்குமேல் ஆவணிமாத வெண்மேகங்கள் அசையாது நின்றன. நெடுந்தொலைவில் எங்கோ. வாழ்க்கையின் அலைகளுக்கு அப்பால். புவனத்தை ஆளும் அமைதியின்மைக்குமேலே எழுந்த நீலநிறப் பேரமைதிக்குவைகள். துருபதன் பாதைக்குக் கீழே மிக ஆழத்தில் அலைகொந்தளித்துச் சென்றுகொண்டிருந்த கங்கையை நோக்கிக்கொண்டு குதிரைமேல் குளிருக்குச் சுருண்டவர் போல அமர்ந்திருந்தார்.
உருளைக்கற்களாலான சிறிய கழுதைப்பாதை அது. ஒருபக்கம் செங்குத்தாக மேலெழுந்த மலைச்சரிவு. அங்கே மலையுச்சியில் இருந்து உருண்டுவந்த பெரும்பாறைகள் பல்வேறு நிலைகளில் தொக்கி நின்றிருந்தன. உடைந்து சரிந்த பாறைநொறுங்கல் குவியலாக மாறி பாதையை மறித்தது. பாறைத்துண்டுகளாலான அருவி சில இடங்களில் பொழிந்து கூம்பாக மாறிக்கொண்டிருந்தது. மறுபக்கம் செங்குத்தாக வெட்டுண்டு பல மடிப்புகளாக இறங்கிச்சென்று நுரை எழுந்த கங்கையில் முடிந்தது மலைச்சரிவு. அங்கே கங்கை ஓசையின்றி நெளிந்தது. மறுபக்கம் எழுந்து சரிந்தும் உருண்டும் நின்ற பாறைகளாலான மலைகளில் இருந்து அதன் ஓசை அலையலையாக காற்றில் ஏறி வந்தது.
ஒரு கூழாங்கல் புரண்டால்கூட நிலைவழுக்கி கீழே விழுந்து கங்கையில் சிதறிப்பரக்கவேண்டியதுதான். அவ்வப்போது அவர்களின் கால்களில் தட்டுப்பட்ட சில கற்கள் உருண்டு சென்று சரிவிறங்கி ஆழத்தை நோக்கி சென்றன. ரிஷிகேசத்தில் இருந்து கிளம்பிய இரண்டாம்நாழிகையிலேயே ஒரு வீரன் அலறியபடி விழுந்து விழுந்து சென்றுகொண்டே இருந்தான். அவர்கள் வாய்திறந்து விழிபிதுங்கி நின்று அவன் கீழே சென்று தலையுடைந்து துடித்து ஒய்வதை நோக்கினர். மணலில் குருதி ஊறி நனைந்து பரவுவதை காணமுடிந்தது.
வழிகாட்டிவந்த மலைவேடர் “கழுதையின் கால்களில் உங்கள் கண்கள் இருக்கட்டும். பிற காட்சிகளை சிந்தையில் வாங்காதீர். கழுதை மட்டுமே இங்குள்ள மண்ணை அறியும்” என்று கூவினார். மீண்டும் காலெடுத்து வைத்தபோது வீரர்களின் கால்கள் நடுங்குவதை பத்ரர் கண்டார். மலைவேடர் “இங்குள்ள பாறைகள் உறுதியானவை அல்ல. ஆயிரம் மகாயுகங்களுக்கு முன் விண்ணிலிருந்து இமயம் பெரும் மண்மழையாகப் பெய்து மலையாகக் குவிந்தது என்கிறார்கள். இன்னும் அது உறுதிப்படவில்லை. அதன் பாறைகளனைத்தும் சரிந்துகொண்டேதான் இருக்கின்றன. எத்தனை பெரிய பாறையானாலும் சரியக்கூடுமென்பதை மறக்கவேண்டாம்” என்றார்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே பெரிய பாறை ஒன்றை உந்தி ஏறிய ஒருவன் அப்பாறையுடன் உருண்டு கீழிறங்கினான். அவன் அலறல்கூட ஒலிக்கவில்லை. இரண்டாம் முறை உருண்ட பாறையில் அவன் ஒரு குருதிப்பூச்சாக படிந்திருந்தான். யானை போல மெல்ல நடந்து சென்ற கரும்பாறை கீழே ஒரு பாறையில் முட்டி அதிர்ந்தது. பின் இருபாறைகளும் முனகல் ஒலியுடன் கீழிறங்கின. மிக ஆழத்தில் அவை பல பாறைகளாகப் பெருகி ஓர் அருவி போல சென்று கங்கையில் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்து வெண்மலர்போல அலை எழுப்பின. பெரிய பாறை மணல்கரையிலேயே உருண்டு சிக்கி நின்றுவிட்டது.
மலைச்சரிவின் மேலிருந்து விழுந்த கற்களால் மூன்றுநாட்களிலேயே ஏழுபேர் இறந்தனர். சடலங்களை உருட்டி சரிவில் விட்டுவிட்டுச் செல்லும்போது அங்கே சிதறிக்கிடந்த மண்டை ஓடுகளை வீரர்கள் கண்டனர். “தேவப்பிரயாகைக்குச் செல்லும் வழியில் உயிர்துறந்தாலும் அது முழுமையை அளிக்கும் என்பது நம்பிக்கை” என்றார் பத்ரர். இரவில் மலைச்சரிவில் கூடாரம் கட்டி தங்கியிருக்கையில் தொலைவில் நரிகளின் ஊளையோசையைக் கேட்டனர். “அவை இப்பாதையை நம்பியே வாழ்பவை” என்றார் வேடர். மறுநாள் தொலைதூரத்தில் பாறைகளில் ஒளிந்தபடி அவை அவர்களைத் தொடர்ந்து வருவதை காணமுடிந்தது.
தேவப்பிரயாகையை குதிரைமீதிருந்த துருபதன் முதலிலேயே கண்டுவிட்டார். இருநதிகளும் இணைந்த இடத்தில் நீர்த்துளிகள் மதிய வெயிலில் கண்கூசும் ஒளியுடன் எழுந்து தெறித்தன. “அதுதானா?” என்றார். “ஆம்” என்றார் வேடர். பத்ரர் கண்மேல் கைவைத்து நோக்கியபடி “அங்குதான்… அதோ பாறைகளுக்கு அப்பால் தெரிவதுதான் ரகுநாதர் ஆலயம். அயோத்திராமனுக்காக அவனுடைய இக்ஷுவாகு வம்சத்து இறுதி அரசன் அக்னிவர்ணன் கட்டியது அது.” துருபதன் அதன்பின்னர்தான் அந்தக்கோயிலை பாறைகளிலிருந்து பிரித்தறிந்தார். பத்தாள் உயரத்தில் கூம்புவடிவ கோபுரத்துடன் இரும்புநிறமான பாறையால் கட்டப்பட்டிருந்தது. அதன்மேல் ஒரு வாடிய மலரிதழ் போல காவிநிறக்கொடி துவண்டு நின்றது.
“தேவப்பிரயாகை ஹிமவானின் பாதங்களில் அமைந்த ஐந்து பிரயாகைகளில் முதன்மையானது. அனைத்துப் பாவங்களையும் கழுவும் புண்ணிய நதிமுனை அது” என்றார் பத்ரர். நதிமுனையை நோக்கி நின்றிருந்த துருபதனை மேலும் நெருங்கிவந்தவராக “ராவணமகாப்பிரபுவைக் கொன்ற பாவத்தை வசிட்டரின் ஆணைப்படி அயோத்திராமன் இங்கு வந்து முறைப்படி நோன்பிருந்து கழுவாய்ப்பூசை செய்து தீர்த்ததாக நூல்கள் சொல்கின்றன” என்றார். மேலும் நெருங்கி அவர் அரசனின் அருகே நின்றுகொண்டார்.
“ஐந்து பிரயாகைகளும் ஊழ்கத்தின் ஐந்து நிலைகள் என்று சொல்கின்றன யோகநூல்கள்” பத்ரர் தொடர்ந்தார். “தேவப்பிரயாகை முதல்நிலை. இங்கே கொந்தளிக்கும் ஜாக்ரத் வந்து அமைதியாக ஓடும் ஸ்வப்னத்தை சந்திக்கிறது. பாகீரதியை ஜாக்ரதி என்றும் நூல்கள் சொல்கின்றன. அளகநந்தை ஸ்வப்னை எனப்படுகிறது.” கீழே நோக்கியபோது அவருக்கு நெஞ்சு நடுங்கியது. அத்தனை விளிம்பில் துருபதன் நின்றிருந்தார். அவரது காலுக்கு இரண்டு அங்குலம் கீழே செங்குத்தாக பாறைவிளிம்பு இறங்கிச்சென்றது. அந்தப்பாறை அவரது எடையைத் தாங்குமா என பத்ரர் ஐயப்பட்டார். ஆனால் அரசனைத் தொட்டு பின்னுக்கு இழுக்க அவர் துணியவில்லை.
“அரசே, சடங்குகள் தெளிவாகவே வகுக்கப்பட்டுள்ளன. பாபநாசத்துக்கு வருபவர்கள் பாகீரதியின் கரையில்தான் தங்கவேண்டும். பாகீரதியில் நீராடி ஈரத்துடன் மேலேறிச்சென்று ரகுநாதனை வணங்கவேண்டும். சமஸ்தாபராதபூசையும் பிராயச்சித்தபூசையும் பித்ருசாந்தி பூசையும் இறுதியாக ஆத்மசாந்தி பூசையும் செய்யவேண்டும். பலிபிண்டத்தையும் மலரையும் எடுத்துக்கொண்டு நீரில் இறங்கி மீண்டும் பாகீரதியில் இறங்கவேண்டும். பாகீரதியின் கொந்தளிக்கும் நீர்வழியாகவே சென்று ஆழத்தில் ஓடும் அளகநந்தையின் அமைதியான நதியை தொட்டறியவேண்டும்.”
“பாகீரதியின் நீர் வெம்மை கொண்டிருக்கும். அளகநந்தையின் நீர் குளிர்ந்து கனமாக இருக்கும். அந்த வேறுபாட்டை உடல் உணரமுடியும்” என்று பத்ரர் தொடர்ந்தார். “அளகநந்தைக்குள் சென்று முழுமையாக மூழ்கி திரும்ப பாகீரதிக்குள் வந்தால் அனைத்து அலைகளும் அடங்கி அகம் நீலவானம் போலிருக்கும். கொந்தளிக்கும் பாகீரதி அமைதியான அளகநந்தையின் ஒரு தோற்றமே என்று தோன்றிவிடும். அவை ஒன்றை ஒன்று தழுவிச்செல்லும் பெருக்குகள். பிரியமுடியாத தோழிகள். கீழே கங்கையெனச் செல்வது அவையிரண்டும் கொண்ட முயக்கமேயாகும் என்று உணர்வதே துயரங்களில் இருந்தும் பாவத்தில் இருந்தும் விடுபடுதலாகும்.”
அவர் பேசுவதை துருபதன் கேட்கவில்லை என்று தோன்றியது. பத்ரர் “அரசே” என மெல்ல அழைத்தார். துருபதன் அதை அறியவில்லை. “அரசே” என்று அவர் உரக்க அழைத்ததும் திடுக்கிட்டு விழித்து அந்த அதிர்ச்சியில் கைகால்கள் நடுங்க “என்ன? என்ன?” என்றார். “குளிர் ஏறிவருகிறது. கூடாரமும் அமைந்துவிட்டது. தாங்கள் சென்று படுத்துக்கொள்ளலாமே?” என்றார் பத்ரர். “ம்” என்றபின் துருபதன் உடலை குறுக்கிக் கொண்டார். பத்ரர் அரசனின் அருகிலேயே நின்றிருந்தார்.
காற்றின் குளிர் ஏறிஏறி வந்தது. விரைவிலேயே வானொளி அவியத் தொடங்கியது. “வெயில்மறைந்த பின்னர் வெளியே நிற்கலாகாது அரசே” என்றார் பத்ரர். துருபதன் அதை கேட்டதாகத் தோன்றவில்லை. அந்தி மேலும் மேலும் செம்மைகொண்டு பின் இருண்டு நதியின் ஓசைமட்டுமாக ஆகியது. அந்த இரைச்சல் எழுந்து வந்து சூழ்ந்தது. கணம்தோறும் பெருகியது. தெளிந்த வானில் விண்மீன்கள் எழத்தொடங்கின. வடக்கே துருவ விண்மீன் தெரிகிறதா என்று பத்ரர் நோக்கினார். கண்டுபிடிக்கமுடியவில்லை. அலையடிக்கும் நெஞ்சுக்கு துருவன் நிலையை அளிப்பான் என்பார்கள். ஆனால் அலையடிக்கும் நெஞ்சு கண்களை அலையடிக்கச் செய்கிறது. எதையும் நிலையாக பார்க்கவிடாமலாக்குகிறது.
துருபதன் திரும்பி கூடாரத்தை நோக்கி நடந்து அங்கே போடப்பட்டிருந்த மூங்கில் பீடம் மீது அமர்ந்து உடலை குறுக்கிக் கொண்டார். “அரசே, தாங்கள் ஓய்வெடுக்கலாமே” என்றார் பத்ரர். துருபதன் அசைவற்று அமர்ந்திருந்தார். பத்ரர் சற்றுநேரம் நின்றபின் சென்று கம்பளிமீது மான்தோல்களைச் சேர்த்துத் தைத்த பெருங்கம்பளத்தைக் கொண்டுவந்து மெல்ல துருபதனைப் போர்த்தினார். அவர் அதையும் அறிந்ததுபோலத் தெரியவில்லை. அவர் நெஞ்சுக்குள் என்னதான் செல்கிறது என்று பத்ரர் எண்ணியதுமே அழுகையின் முடிவில் எழுவதுபோன்ற ஒரு நீள்மூச்சு துருபதன் நெஞ்சில் இருந்து வந்தது. அவர் அதைக்கேட்டு ஒவ்வொருமுறையும் உடல் விதிர்ப்பது வழக்கம். பெருமூச்சுடன் துருபதன் அசைந்து அமர்ந்தார்.
சேவகர் விறகுகளை அடுக்கி அதன்மேல் விலங்குக் கொழுப்புக்கட்டிகளைப்போட்டு நெருப்பெழுப்பியிருந்தனர். துருபதன் நெருப்பருகே அமர்ந்து தழலாட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரர் அருகே நின்றுகொண்டார். வானில் சிறியபறவைகள் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவை கங்கையின் மேல் இருளில் பறந்து பூச்சிபிடிப்பவை என அவர் அறிந்திருந்தார். இந்நேரம் அங்கே கங்கை எனும் ஒலிப்பெருக்கே இருக்கும் என்று தோன்றியது. பாகீரதியின் ஒலி பிளிறும். அளகநந்தை அகவும். அவர் அந்நேரம் கங்கைக்கரைக்குச் சென்று தனித்திருக்க விழைந்தார்.
சேவகர்கள் முயலிறைச்சியும் கீரையும் நொறுக்கிய கோதுமையும் சேர்த்து காய்ச்சிய ஊன்கஞ்சியை மரக்கோப்பையில் அள்ளி கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தனர். கடும் பசி இருந்தமையால் அவர் அதை வாங்கி ஆவலுடன் அருந்தத் தொடங்கினார். சில மிடறுகளுக்குப்பின்னர் மேலே குடிக்கமுடியவில்லை. திருப்பி நீட்டினார். சேவகன் அதை வாங்காமல் அசையாமல் நின்றான். அவர் தலையைத் தூக்கி அவனை தன் பழுத்த விழிகளால் நோக்கி “ம்” என்றார். அவன் பெருமூச்சுடன் வாங்கிக்கொண்டான். அவர் மீண்டும் தலைகுனிந்து நெருப்பை நோக்கத் தொடங்கினார். அவரது தலை நடுங்கிக்கொண்டே இருந்தது.
அவரது விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி அசைகின்றனவா, உதடுகள் உச்சரிக்கின்றனவா என்று பத்ரர் நோக்கினார். இல்லை. ஆனால் அந்த செயலற்ற நிலை மேலும் அச்சத்தை அளித்தது. அறிந்த ஒன்றில் இருந்து அறியாத ஒன்றை நோக்கி சென்றுவிட்டதைப்போல. மேலும் ஆழமும் இருளும் கொண்டவராக துருபதன் ஆகிவிட்டதைப்போல.
நெருப்பு அணையப்போனது. பத்ரர் கையசைக்க சேவகர்கள் சென்று விறகும் கொழுப்பும் கொண்டுவந்து போட்டு தழல் மூட்டினர். துருபதன் “மேலே” என்றார். பத்ரர் “அரசே” என்று கேட்க “இன்னும் மேலே” என்றார் துருபதன். மேலும் விறகும் கொழுப்பும் இட பத்ரர் சொன்னார். தீ ஆளுயரத்துக்கு எழுந்தது. “இன்னும்… இன்னும் பெரிய தீ” என்று துருபதன் கைகளை நீட்டி உறுமுவதுபோல சொன்னார். “அரசே” என்று பத்ரர் ஏதோ சொல்லப்போக “இன்னும் தீ… மேலும்” என்று துருபதன் கூவினார்.
பத்ரர் கைகாட்ட வீரர்கள் மேலும் விறகைக்கொண்டுவந்து குவித்து நெருப்பை எழுப்பினர். நெருப்பு தலைக்குமேல் எழுந்து கரிப்புகை சுழற்றி நடமாடியது. “மேலும் பெரிய நெருப்பு…” என்று துருபதன் ஆணையிட்டார். பத்ரர் துயின்றுகொண்டிருப்பவர்கள் அனைவரையும் எழுப்ப ஆணையிட்டார். அவர்கள் எழுந்து சிறிய அணிகளாக மாறி மலைச்சரிவில் ஏறி அங்கே நின்ற தைலமரங்களை முறித்து சுமந்துகொண்டுவந்து அடுக்கி நெருப்பெழுப்பினர். மேலும் மேலும் என்று துருபதன் சொல்லிக்கொண்டே இருந்தார்.
நெருப்பு எழுந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் செந்தழலால் ஆன கோபுரம் போல அதன் அடிவிரிவு விறகடுக்குமேல் எழுந்து நின்றது. அதன் தழல்நுனிகள் இருளுக்குள் நெளிந்து துடித்தன. அருகே இரு கைகளையும் விரித்து மெல்ல ஆடியபடி துருபதன் நின்றார். நெருப்பருகே அவர் உடலும் செந்நிறமாகச் சுடர்விட அவரும் தழல்போல தெரிந்தார். வீரர்கள் அனைவருமே சற்று அஞ்சிவிட்டது அவர்களின் விழிகளில் தெரிந்தது. தலைமைச்சேவகன் சக்ரசேனர் பத்ரரிடம் “நிமித்திகரே இது என்ன?” என்றார். பார்ப்போம் என அவர் கையசைத்தார்.
இரவெல்லாம் அவர்கள் நெருப்பிட்டுக்கொண்டே இருந்தனர். நெருப்பு சற்று தழைந்தபோதுகூட துருபதன் கைகளைத் தூக்கி ஆவேசமாக கூச்சலிட்டார். வீரர்கள் களைத்துச் சோர்ந்தபின்னரும் அவரது வெறி தளரவில்லை. சக்ரசேனர் பத்ரரை நோக்க அவர் கையசைத்து நெருப்பிட்டுக்கொண்டே இருக்கும்படி சொன்னார். அதிகாலையில் கிழக்கே செம்மை எழுந்தது. நெருப்பின் ஒளி குறைந்து வந்தது. ஒரு கணம் சாதாரணமாகத் திரும்பி நோக்கிய துருபதன் கீழ்த்திசை சிவப்பை நோக்கி திகைத்து மீண்டும் நெருப்பை நோக்கினார்.
பத்ரர் அருகே வந்து “அரசே, நாம் சடங்குகளைச் செய்ய கங்கைக்கு செல்லவேண்டும்” என்றார். துருபதன் சிவந்த வரியோடிய கண்களால் சற்று நேரம் நோக்கிவிட்டு “ஆம்…” என்றார். கைகளால் முகத்தை பலமுறை உரசிவிட்டு “சமஸ்தாபராத பூசை அல்லவா? அனைத்து பிழைகளையும் நான் கங்கைக்கு அறிக்கையிடவேண்டும், இல்லையா?” பத்ரர் “ஆம்” என்றார். “பாவங்களை எல்லாம்… ஆம்” என்று துருபதன் சொல்லிக்கொண்டார். பின்னர் எழுந்து “செல்வோம்” என்றார்.
பாறையை வெட்டி உருவாக்கப்பட்டிருந்த செங்குத்தான படிக்கட்டுகளில் மேலிருந்து தொங்கவிடப்பட்ட கனத்த வடத்தைப்பற்றிக்கொண்டு இறங்கவேண்டியிருந்தது. துருபதனால் இறங்க முடியவில்லை. இருவீரர்கள் முன்னும் பின்னும் நின்று அவரை ஒவ்வொரு படியாக கொண்டுசென்றனர். “என்ன செய்யவேண்டும் பத்ரரே?” என்றார் துருபதன். “அரசே கங்கையில் நீராடிவிட்டு குடத்தில் நீரள்ளி மேலே கொண்டுவரவேண்டும். ராமனின் ஆலயமுகப்பில் அமர்ந்து சமஸ்தாபராத பூசை. பின்னர் மலர்களுடன் சென்று நீராடி பாவங்களை முழுதும் அழித்து மீளவேண்டும்.” துருபதன் புன்னகையுடன் “இப்படிகளில் ஏறி இறங்கினால் நான் உயிரையும் சேர்த்தே விடவேண்டியிருக்கும்” என்றபின் “இறங்குவோம்” என்றார்.
அவரது சமநிலை பத்ரரை ஆறுதல் படுத்துவதற்குப்பதில் மேலும் அச்சமூட்டியது. மூச்சிரைக்க நதிக்கரையை அடைந்ததும் துருபதன் நின்றார். உருளைக்கற்களால் ஆன படுகையில் கால்கள் தடுமாற நடந்தார். அருகே சேவகர்கள் மெல்ல அவரை பிடித்துக்கொண்டுசென்றனர். பாறைகள் பரவிய அடித்தட்டு மேலே துல்லியமாக தெரிந்தது. பாறைகளின் வளைவுகளில் காலையின் வெளிச்சம் அலையடித்தது. “குளிருமா?” என்றபடி துருபதன் நின்றார். “கங்கை எப்போதும் குளிரானவள். ஆனால் பாகீரதியின் நீரில் குளிர் குறைவு” என்றார் பத்ரர்.
துருபதரின் ஆடைகளை சேவகர்கள் கழற்றினர். அவர் ஒரு சேவகனைப்பற்றிக்கொண்டு நீரில் இறங்கினார். குளிருக்கு உடல் குறுக்கியபடி முழங்காலளவு நீரில் நின்றபின் சட்டென்று சில எட்டுகள் முன்னால் சென்று அப்படியே மூழ்கி நடுங்கியபடி எழுந்தார். “போதும் அரசே…” என்றார் பத்ரர். சிறிய மண்குடத்தில் நீர் அள்ளி தோளிலேற்றிக்கொண்டு துருபதன் நடந்தார். ஒவ்வொருபடிகளிலாக நின்று நின்று மேலே வரவேண்டியிருந்தது.
ரகுநாதனின் ஆலயத்தின் முன் சமஸ்தாபராத பூசைக்கான களம் வரையப்பட்டிருந்தது. ஒன்றையொன்று சுற்றி வளைந்த நாகங்களின் உடல்களின் பரப்பு. அதன்மேல் ஏழு அகல்விளக்குகள் நெய்யிட்டு ஏற்றப்பட்டிருந்தன. மலர்களும் அரிசிப்பொரியும் மஞ்சள்பொடியும் தாலங்களில் இருந்தன. துருபதன் அந்தக்களத்தின் முன் போடப்பட்டிருந்த தர்ப்பைப்புல் தடுக்கில் கால்களை மடித்து அமர்ந்துகொண்டு கங்கைநீர் நிறைந்த குடத்தை களத்தில் வைத்தார். அவரது உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. தலைமயிரில் இருந்து நீர் சொட்டியது. ஏறிவந்த வெப்பத்தில் உடல் நன்றாகவே காய்ந்துவிட்டிருந்தது.
வைதிகர் அதர்வ மந்திரத்தைச் சொல்லி சடங்குகளை நடத்திவைத்தார். அவர் சொன்ன சொற்களை திருப்பிச் சொன்னபடி துருபதன் மஞ்சள் பொடியையும் மலர்களையும் அள்ளி நீர்க்குடத்துக்குள் போட்டார். மந்திரம் முடிந்ததும் பொரியை ஏழு குவைகளாக பிரித்து வைத்தார். வைதிகர் வழிகாட்ட துருபதன் முதல் குவையைத் தொட்டபடி “விண்ணில் வாழும் தெய்வங்களே உங்களுக்கு நான் செய்தபிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க. உங்கள் முன் பணிகிறேன். என் பிழை. என் பிழை. என் பெரிய பிழை” என்றார். இரண்டாவது குவையைத் தொட்டு “விண்நிறைந்த தேவர்களே உங்களுக்கு நான் செய்தபிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க. உங்கள் முன் பணிகிறேன். என் பிழை. என் பிழை. என் பெரிய பிழை” என்றார்.
மூன்றாவது குவை பாதாளமூர்த்திகளுக்கு. நான்காவது குவை மண்மறைந்த மூதாதையருக்கு. ஐந்தாவது குவை கண்ணுக்குத்தெரியாத உயிர்க்குலங்களுக்கு. ஆறாது குவை அறியாது அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு. ஏழாவது குவையைத் தொட்டு வைதிகர் சொன்னார் “அரசே, நீங்கள் அறியாமையாலும் ஆணவத்தாலும் ஆசையாலும் இழைத்த பாவங்களுக்காக பிழை சொல்லி வணங்குங்கள். வெறும் சொற்களால் அல்ல. அந்தப்பாவத்தை நீங்கள் இழைத்த கணத்தை நினைவில் நிறையுங்கள். அப்போது இருந்த அவர்களின் முகத்தை அகக்கண்ணில் விரியுங்கள். அந்த முகத்தை நோக்கி மனம் உருகி கண்ணீர் மல்கி பொறுத்தருளும்படி சொல்லுங்கள். அவர்கள் பொறுத்துவிட்டனர் என்று உங்கள் அகம் அறிந்தாகவேண்டும்” என்றார்.
துருபதன் கையில் மலருடன் அந்த பொரிக்குவையை நோக்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தார். பிறகு மெல்ல “துரோணரே, உங்கள் துயரை அறிகிறேன். உங்கள் அனல் அவியவேண்டுமென்று பாதங்களைப் பணிந்து கோருகிறேன். உங்களுக்கு நான் இழைத்த அவமதிப்புக்காக என்னை பொறுத்தருளுங்கள். என் மீதிருக்கும் எஞ்சிய வெறுப்பையும் விலக்கி என்னை வாழ்த்துங்கள்” என்றார். “என் பிழை என் பிழை என் பெரிய பிழை” என்று சொன்னபோது குரல் இடறி கண்ணீர் வடித்தார். வைதிகர் மலரை போடும்படி சொன்னார். துருபதன் அதைக் கேட்கவில்லை. வைதிகரே மலரைப் பற்றி பொரிக்குவையில் போட்டார்.
மீண்டும் கலத்து நீரை எடுத்துக்கொண்டு கங்கை நோக்கிச் சென்றனர். பெருமூச்சுடன் திரும்பி ரகுநாதனின் ஆலயத்தை நோக்கிய துருபதன் கேட்டார் “பத்ரரே, ராமன் ஏன் பாவ உணர்வை அடைந்தான்? ராவணனைக் கொன்றது அவன் அவதார நோக்கம் அல்லவா? அவனை பரம்பொருள் மண்ணில் வந்த வடிவம் என்று சொல்கிறார்கள். அவனுக்கேது பாவம்?”
பத்ரர் “இதெல்லாம் ரிஷிகளின் கூற்று. நாமென்ன அறிந்தோம்? விண்ணாளும் கதிரவன் மண்ணில் பளிங்குத்துண்டுகளில் தெரிவதுபோல பரம்பொருள் மானுடனில் எழுந்ததுதான் ராமனின் பிறப்பு என்கிறார்கள். பளிங்கும் சூரியனே. ஆனாலும் அது மண்ணில் அல்லவா கிடக்கிறது. அழுக்கும் பாசியும் அதன்மேலும் படியும் அல்லவா? பாவத்தின் மாபெரும் வல்லமையைச் சுட்ட இந்தக்கதையை உருவாக்கியிருப்பார்களோ என ஐயுறுகிறேன்” என்றார்.
“ராமன் இங்கு வந்திருக்கிறானா?” என்றார் துருபதன். “வந்திருக்கலாம். அயோத்தியில் இருந்து கங்கைக் கரைக்கு வந்து அவர் பலகாலம் தங்கியிருந்தார் என்று நூல்கள் சொல்கின்றன, கதையாகவே இருந்தாலும் அவர் வராமல் அதை உருவாக்கியிருக்க முடியாது” என்றார் பத்ரர். “அவர் ஏன் பாவ உணர்வுகொண்டார் என்று சித்ரகரின் ராமசதகம் என்னும் நூல் சொல்கிறது. ராவணமகாப்பிரபுவை நேரில் கண்டதும் அவரது பத்து தலைகளின் நிமிர்வையும் இருபது கைகளின் வீரத்தையும் கண்டு ராமன் வியந்தாராம். “பத்து தலைகளில் ஒன்றுகூட பிறர் முன் தாழவில்லை. தன்னை எண்ணி குனியவுமில்லை. இருபது கரங்களில் ஒன்றில்கூட தன்னிரக்கத்தையோ தாழ்வையோ சுட்டும் விரல்குறி எழவில்லை. முழுமனிதன் இப்படித்தான் இருக்கமுடியும்” என அவர் தம்பியிடம் சொன்னாராம்.”
“ராவண மகாபிரபுவைக் கொன்றபின்னர் அயோத்தி மீண்டு அரியணை ஏறி தனிமையில் இருக்கையில் ராமர் தன் உடலின் சமநிலை அழிந்திருப்பதை உணர்ந்தார். இளமையில் அவரது தோள்மேல் அணிந்த உத்தரீயம் ஒருமுறைகூட நழுவாது. ஆனால் முடிசூடியபின் அது நழுவிக்கொண்டே இருந்தது. அது ஏன் என பலவாறாக எண்ணிக்கொண்டார். அவரது அணுக்கமருத்துவன் உடலின் சமநிலை உள்ளத்தால் காக்கப்படுவது என்றார். அவர் உள்ளக்குறி தேர்பவனை வரவழைத்து வினவியபோது அவன் ராமனிடம் கண்களை மூடிக்கொண்டு என்ன தெரிகிறது என்று சொல்லச்சொன்னான். கண்களுக்குள் சிவந்த வானில் இரு பருந்துகள் வட்டமிடுவதைக் கண்டதாக ராமன் சொன்னார். உங்கள் ஆயுதசாலையை சோதனையிடுக. அங்கே நிரபராதியின் குருதிபட்ட ஒரு படைக்கலம் உள்ளது என்று குறிதேர்வோன் உரைத்தான்.”
“தன் படைக்கலங்கள் அனைத்தையும் எடுத்து ராமர் குறிசொல்வோன் முன் வைத்தார். அவன் ஒவ்வொன்றாக வாங்கி நோக்கி நெற்றிமேல் வைத்தபின் இது அல்ல என்று திரும்பக்கொடுத்தான். அனைத்துப்படைக்கலங்களும் முடிந்தன. பின் ஒன்றுதான் எஞ்சியது. முன்பு ராவணமகாப்பிரபுவின் நெஞ்சைத் துளைத்த அந்த அம்பை அயோத்திப்படைகள் எடுத்து வந்திருந்தனர். அது அயோத்தியின் குலதெய்வக் கோயிலில் இருந்தது. ராமர் அந்த அம்பை எடுத்துவரச்சொன்னாராம். அதன் கூர்மை மழுங்கவில்லை. ஒளி குறையவில்லை. ஆனால் அதன் பரப்பில் ஒரு சிறிய பொட்டுபோல துரு தெரிந்தது. குறிசொல்வோன் அதைக் கண்டதுமே பாவத்தின் கறைகொண்ட படைக்கலம் என்று கூவினான்.”
“பன்னிருவர் கொண்ட நிமித்திகர் குழாம் அதை நோக்கி கணித்துச் சொன்னது. இந்த அம்பு மாவீரன் ஒருவனால் அவனுக்கு நிகரான மாவீரன் மேல் விடப்பட்டிருக்கிறது. ஆகவே ஒருநாளும் இதன் ஒளியும் கூர்மையும் அழியாது. ஆனால் இதை தொடுத்தபோது நாணை காதளவு இழுத்த கணத்தில் கொல்லப்பட்டவன் மேல் ஒரு துளி பொறமை வென்ற மாவீரன் நெஞ்சில் எழுந்து உடனே மறைந்தது. ஆகவே தேவர்களுக்கு உணவளிக்கும் வேள்விக்கு நிகரான போர் என்னும் செயல் மாசடைந்தது என்றார்கள்.”
“ராமன் அது உண்மை என்று உணர்ந்தார். மாசடைந்த அகத்துடன் ஆற்றும் எச்செயலும் பாவமே. அது குற்றவுணர்வையே உருவாக்கும். அப்பாவத்தைக் கழுவ என்ன செய்யவேண்டுமென வசிட்டரிடம் கேட்டார். அவரும் வசிட்டரும் தம்பியருடன் மலையேறி தேவப்பிரயாகைக்கு வந்தனர். இங்கே நாற்பத்தொருநாட்கள் தங்கி பூசைகள் செய்து பாவத்திலிருந்து விடுபட்டனர். அதன்பின் அவரது உத்தரீயம் தோளிலிருந்து நழுவவேயில்லை” என்றார் பத்ரர். துருபதன் பெருமூச்சுவிட்டான். பின்னர் “இறைவனே பாவத்தையும் குற்றவுணர்ச்சியையும் அடைந்தானென்றால்…” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். “அதிலிருந்து எவருமே தப்பமுடியாது அரசே” என்றார் பத்ரர்.
துருபதன் தலையை அசைத்தார். தனக்குள் மூழ்கியவராக படிகளில் நின்று நின்று இறங்கினார். பாகீரதியின் உருளைக்கல்பரப்பில் சென்றதும் “இம்முறை இருநதிகளும் சந்திக்கும் முனையில் நீராடவேண்டும் அரசே” என்றார். “ஆம்” என்று துருபதன் சொன்னார். அவரை அவர்கள் பற்றி அழைத்துச்சென்றனர். பாகீரதி பாறைகளில் நுரைததும்ப பேரோசையுடன் சென்றது. “நெருப்பு போல ஓசையிடுகிறாள்” என்றார் துருபதன். அச்சொற்களைக் கேட்டதும் நதி வெண்ணிற ஒளி கொண்ட பெருந்தழலாக பத்ரருக்கும் தெரியத் தொடங்கியது.
“அரசே, முறைப்படி நீங்கள் பாகீரதியில் மும்முறை மூழ்கி எழவேண்டும். பாகீரதி வழியாகச் சென்று அளகநந்தையின் குளிர்நீரை உங்கள் உடல் தீண்டவேண்டும்” என்றார் பத்ரர். “ஆம்” என்றபடி துருபதன் நீரில் இறங்கி இடையளவு ஆழத்திற்குச் சென்றார். “அரசே, ‘அனைத்து வஞ்சங்களும் என்னைக் கைவிடுக. அனைத்து வஞ்சங்களையும் நானும் கைவிடுவேனாக’ என்றபடி மூழ்குங்கள்” என்றார் வைதிகர். “அந்தக் கலத்தை அப்படியே நீரில் விட்டுவிடுங்கள். அளகநந்தையில் நீராடியதும் ஆடையையும் நீர்ப்பெருக்கில் விட்டுவிட்டு மீண்டும் பிறந்தவராக மேலெழுந்து வாருங்கள்.”
மெல்ல முணுமுணுத்தபடி துருபதன் மூழ்கினார். மண்கலம் நீரில் விழுந்து பாகீரதியின் கொந்தளிப்பில் மறைந்தது. நீர் வழியும் முகத்துடன் எழுந்து மீண்டும் அதைச் சொன்னபடி மூழ்கினார். மூன்றாம் முறை எழுந்ததும் திரும்பி கரை நோக்கி வரத்தொடங்கினார். “அரசே, அப்படியே அளகநந்தை நோக்கிச் செல்லுங்கள்” என்று பத்ரர் கூவினார். “இல்லை, என்னால் முடியவில்லை. என்னால் வஞ்சத்தை கரைக்க முடியவில்லை” என்று கிட்டித்த தாடை இறுகி அசைய துருபதன் சொன்னார். “என்னுள் நெருப்பே எழுகிறது…. என் அகத்தில் பாகீரதி மட்டுமே உள்ளது.”
நீர் வழியும் உடல் நடுங்க துருபதன் கரையேறி நடக்க பின்னால் சென்ற பத்ரர் “அரசே” என்றார். துருபதன் திரும்பி “கொழுந்துவிட்டெழும் நெருப்பு, என் அகத்தில் உள்ளது அதுவே. அதை அணைக்கமுடியாது பத்ரரே” என்றார்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்