«

»


Print this Post

கலைஞர்களை வழிபடலாமா?


 

அன்புள்ள ஜெ,

கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்குமானால், நீங்களே அந்தக் கட்டுரையை ஆரம்பித்து வையுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் நிலைமை என்னவென்று? இது இணைய விவாதங்களில் நான் கண்ட உண்மை

வெங்கிராம்

 

அன்புள்ள வெங்கிராம்

நீங்கள் சொல்வது உண்மை, இளையராஜாவுக்கு ரசிகர்களும் உண்டு, பக்தர்களும் உண்டு. ஆனால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது உலகம் முழுக்க உள்ள ஒரு நிகழ்வு. ஒரு கலைமேதை  அத்தகைய ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டால் மட்டுமே அது ஆச்சரியம். அந்த உணர்வுத்தீவிரங்களை  அந்தக்கலைமேதை பற்றிய விவாதத்தின் இயல்பான ஒரு தரப்பாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்களையும் உள்ளிட்டே விவாதங்கள் நிகழமுடியும்.  அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. எந்த விவாதமும் ஒரு முரணியக்கமாகத்தானே இருக்க முடியும்?

இளையராஜாவைப்பற்றி இத்தனை சொல்லும் ஷாஜி சலீல் சௌதுரியை சலில்தா என்றே சொல்வார். எந்த சிறு விமரிசனமும் இல்லாத பெரும் பற்று, கண்மூடித்தனமான பக்தி அவருடையது. அவர் சலீல் குறித்த மெல்லிய விமரிசனங்களைக்கூட ஏற்க மாட்டார். சலீல் அவர்களை சாதாரணமாக விமரிசனம் செய்தால்கூட அவர்களை அவர் தீவிரமாக வெறுப்பார். அந்தப்பற்று மிக இளம் வயதிலேயே உருவாகி ஆளுமையின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட ஒன்று.

பெரும் ஆக்கங்களை உருவாக்கிய கலைஞர்களுக்கு அப்படிப்பட்ட ரசிகர்கள் உருவாவது அந்தக்கலையின் வல்லமைக்கே சான்று. சிலசமயம் எனக்குத் தோன்றுவதுண்டு, இருவகை நோக்குக்குமே அதற்கான சாத்தியங்கள் உண்டு என.  கொஞ்சம் விலக்கம் கொண்டு ஆய்வுமனநிலையுடன் ஓரு கலைமேதையை அணுகும்பார்வை நல்லது. அது நமக்கு அவரை புறவயமான ஓரு தளத்தில் வைத்து அணுகி தெளிவாக மதிப்பிட உதவக்கூடியது.  எல்லாரும் இதைத்தான் உயர்வானது என்றும் சொல்வார்கள்

ஆனால் அதிதீவிரமான பற்றுடன் ஒரு கலைஞனை அணுகுபவர்கள் நிதானமாக அணுகுபவர்களைவிட ஆழமான அறிதல்களை அடைகிறார்கள் என்ற எண்ணம் சமீப காலமாக ஏற்பட்டு வருகிறது. எனக்கு தல்ஸ்தோய் அளவுக்கு எவர் மேலும் பற்று இல்லை. அவரை அறிந்த அளவுக்கு எவரையும் அறிந்ததில்லை.

ஏனென்றால் கலை அறிவார்ந்தது அல்ல, ஆழ்மனம் சார்ந்தது என்பதே. பற்றின்றி ‘நடுநிலையுடன்’ கலைப்படைப்புக்குள் செல்பவன், கலைஞனை அணுகுபவன் தன் தர்க்கபுத்தியை அக்கலைஞனைநோக்கி திறந்து வைக்கிறான். பெரும்பற்றுடன் செல்பவன் தன் ஆழ்மனதை திறந்து வைக்கிறான். அக்கலைஞனின் ஒவ்வொரு மன அசைவும் தெரியும் இடத்துக்குச் சென்றுவிடுகிறான். அது ஒரு சிறந்த வழிதான் என்று நினைத்துக்கொள்கிறேன்

இங்கே குரு என்ற நிலையில் அந்தக் கலைஞன் வந்து விடுகிறான். குருவை களங்கமில்லா பெரும் பக்தியுடன் வழிபட்டாலொழிய கலை கைவராது என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. காரணம் அந்தப் பெரும் ஈடுபாடு காரணமாகவே நாம் குருவை அதிகவனத்துடன் ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனிக்க முடியும்

நித்யாபற்றி என்னிடம் விமரிசன அணுகுமுறை இருக்கிறதா பக்தி இருக்கிறதா என்றுகேட்டால் பக்தி என்றே என்னால் சொல்ல முடியும். உக்கிரமான காதலன் போல அவரை ஒவ்வொரு நாளும் , நாள்முழுக்க நினைத்துக்கொண்டிருந்திருக்கிறேன். இன்றும் அவரை நினைக்காமல் ஒருநாள் கூட தாண்டிப்போனதில்லை. என் கனவில் மிக அதிகமாக வந்த மனிதர் அவரே.

அந்தப்பெரும் காதல் இருந்தமையால்தான் மிகச்சிக்கலான அவரது தத்துவ நூல்களைக்கூட மிக எளிதாக என்னால் கடந்து செல்ல முடிந்தது. அவர் அளித்தவற்றை சிந்தாமல் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 11, 2010

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6480/

6 comments

Skip to comment form

 1. Arangasamy.K.V

  //பெரும்பற்றுடன் செல்பவன் தன் ஆழ்மனதை திறந்து வைக்கிறான். அக்கலைஞனின் ஒவ்வொரு மன அசைவும் தெரியும் இடத்துக்குச் சென்றுவிடுகிறான்.//

  //அந்தப்பெரும் காதல் இருந்தமையால்தான் மிகச்சிக்கலான அவரது தத்துவ நூல்களைக்கூட மிக எலிதாக என்னால் கடந்து செல்ல முடிந்தது.//

  ஒரு சாதாரண வாசகனாக ஈராறு கால் கொண்ட புரவியை வேறு யார் எழுதி இருந்தாலும் படிக்க முயற்ச்சி கூட செய்ய மாட்டோம் ,

  இப்போது நகைச்சுவை தாண்டி தத்துவத்தை தேடி புரிந்து கொள்ள முயல்கிறோம் , பெரும்பாலான நேரங்களில் உங்கள் தீவிர வாசகர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்கள் படைப்புகளை மற்றவர்களை அவ்வளவு ஆழமாக தொடுகிறதா என்பது கேள்வியே ,

 2. Rajendran

  அன்புள்ள ஜெ,

  தயவு செய்து கோபிக்காதீர்கள். இது வெறும் புத்திசாலித்தனமான பதிலாக தான் தெரிகிறது. தங்களுக்கு நித்யா மேல் உள்ள ஈடுபாடும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு இளையராஜா மீது இருக்கும் ஈடுபாடும் ஒரே தளத்தில் இயங்குவதாக உண்மையில் நம்புகிறீர்களா? இதே ரீதியில் குஷ்புவுக்கு கோவில் கட்டுவதையும் விஜய்க்காக விரலை வெட்டி கொள்வதையும் நியாயப்படுத்தி விடலாமா? அல்லது நீங்கள் சொல்ல வந்ததை நான் புரிந்து கொள்ளவில்லையா?

 3. Ramachandra Sarma

  ராஜேந்த்ரன், என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். இங்கே பேச்சு உண்மையான ஒரு கலைஞனைப்பற்றி. அதே துறையில் இருப்பதனால் குஷ்புவோடும், விஜய்யுடனும், இளையராஜாவை , அவரது ரசிகர்களை சேர்த்துவைத்து விமரிசிப்பதுபோல இருக்கிறது நீங்கள் சொல்வது. ஆட்டிய (நடனம்) மற்றும் காட்டிய (முகத்தை) காரணத்தால் குஷ்புவிற்கு கோவில். விஜய் கதை பைத்தியக்காரத்தனம் என்று சொல்வதைத்தவிர வேறு என்ன சொல்வது? இவர்கள் கலைஞர்கள் அல்ல. அவர்கள் பாஷையிலேயே சொல்வதென்றால் அவர்களுக்கு அது கலையல்ல. கோடிகள் புரளும் வியாபாரம். அவர்களது கலைஞர்கள் அல்ல என்பதைக்கூடவா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை?

 4. Rajendran

  ராமச்சந்திர சர்மா,
  நீங்கள் சொல்வது உண்மை. இளையராஜாவின் ரசிகர்கள் முழுக்க முழுக்க அவரது கலையை ரசிக்கிறார்கள். குஷ்பு, விஜய் ரசிகர்கள் அவர்களது நடிப்பு திறமைக்காக அவர்கள் மேல் பக்தி கொள்வதில்லை. எனவே என்னுடைய ஒப்பீடு தவறானது தான். இதை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
  இருந்தாலும் குருவின் மேல் மாணவன் பக்தி செலுத்துவதும், தான் ரசிக்கும் அபிமான கலைஞன் மீது ரசிகன் கண்மூடித்தனமான பக்தி செலுத்துவதும் ஒன்றே என்பது போல் ஜெ எழுதியிருப்பது சரியா என்று தெரியவில்லை.

 5. Ramachandra Sarma

  ராஜேந்திரன் சார்,

  நாம் அக்கலைஞனை எந்த இடத்தில் வைத்துப்பார்க்கிறோம் என்பதில் இருக்கிறது வித்யாசம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் எனும் பட்சத்தில் அவரை குரு ஸ்தானத்தில் தான் வைத்துப்பார்க்க இயலும்.

  ஜெயமோகன் அவர்களை எத்தனைபேர் மானசீக குருவாக கொண்டுள்ளார்கள் என்னையும் சேர்த்து என்று நிச்சயம் உங்களுக்கு தெரிந்தே இருக்கும். அதற்கு காரணம் அவர் வெறும் கதை சொல்லி அல்ல, வாழ்க்கையை, மனிதர்களை, காலமெனும் பெருவெளியில் உலவிவிட்டு அவர்களின் மூலம் நம்மைப்போன்ற வாசகர்களுக்கு வாழ்க்கையை தீவிரமாக வாழ்வதும், பொருள்பட வாழ்வதும், வாழ்க்கையின் அற்புத, குரூர குணங்களையும் விளக்கிக்கொண்டே இருக்கிறார். அவரின் ஒவ்வொரு கட்டுரையும், அறத்தை உறக்கச்சொல்வதே அவரை குருவின் ஸ்தானத்தில் வைக்கக் காரணம்.

  இளையராஜாவைப் பொருத்தவரையில் அவர் வாழ்க்கையை வேறொரு பரிமாணத்திலும், இசையையும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார். எனவேதான் அவர் பெரும்பாலான மக்களுக்கு குருவினிடத்தில் இருக்கிறார். “செயற்கரிய செய்வர் பெரியர்” என்று சொல்வதுண்டல்லவா? அப்படி செயற்கரிய செய்பவர்கள் அனைவருமே நமக்கு குருதானே? இளையராஜாவிற்கு ரசிகர்களும் உண்டு, பக்தர்களும் உண்டு. மாணவர்களும் உண்டு. இங்கே பேசப்படுவது ரசிகனாக இருந்து மாணவரானவர்கள் குறித்தது. அடுத்த நிலையில் அவரது ஆளுமையை ஆராதிப்பதில் பக்தர்கள் ஆகிறோம்.

  யானை நடந்த தடத்தில் எறும்பு ஊரும் போது உணரும் அக வெறுமையை நாம் உணரும்போது அவரை நாம் குருவாக ஏற்றுக்கொள்கிறோம். அகம் “தான்”ஆல் நிறம்பி வழியும்போது ஒருவருக்கு குருவின் ஒளி தெரிவதில்லை. நமக்கான குரு யாராகவும் இருக்கலாம். அவர் நம்மில் ஏற்படுத்தும் மாற்றத்தில் அவரை நாம் நமது குருவாக ஏற்றுக்கொள்கிறோம். அவர் நம்மை சீடனாக வேண்டிக்கொள்வதில்லை.

  இந்திய சம்ஸ்காரங்களில், குருவின் மீது பக்தியும், மரியாதையும் எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. அவர் மீது நாம் எப்போதுமே பக்தியுடன் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்மைப்போல குருவை நையாண்டி செய்பவர்களும் அவருடன் சண்டைபோடுபவர்களும் உண்டு. அதன் முடிவு தெளிவை அடைவதில் இருந்தால் பக்தியைத் தவிர அவர் மீது நம்மால் என்ன ஆதிக்கத்தை செலுத்திவிடமுடியும்?

  இளையராஜா பலருக்கு குருவாக இருப்பதில் ஆச்சரியமில்லை. எனக்கு இளையராஜவும் ஒரு குருதான். அதில் என்ன பிரச்சனை இருக்கமுடியும்?

 6. elango

  கலைஞனை வழி படுவது தமிழில் புதிதல்ல. கலையை வழி படுவதும் கலைஞனை வழிபடுவதும் வேறு வேறு அல்ல. கோவிலில் இருக்கும் சிலை எல்லாமே கலைஞனின் செயல் மட்டும் தானே. கடவுளின் கதைகளை சொன்னவனும் அதை சிலையை வடித்தவனும் வழிபாட்டை மறைமுக கூலியாக பெற்று கொள்கிறார்கள். கலை ரசிகன் தன்னால் சொல்லப்பட வேண்டிய ஆனால் சொல்ல முடியாத மொழியை கண்டடைந்த கலைஞனை கடவுளாகவே பார்க்கிறான். ‘ஆம் இது தான்’ என்று மௌனிக்கச் செய்யும் கலை தான் அவனை வழி படச் செய்கிறது. அடியார்களை வழி பட்டவனும் அந்த கலைஞனின் வெளிப்பாட்டுக்காகத் தான் கடவுளைக் கூட பொருட் படுத்தியிருப்பான். சக மனிதன் கடவுளை அல்லது உண்மையை கண்டடைந்ததை கொண்டாடவே வழிபாடு.

Comments have been disabled.