90 வயது பாட்டியின் அயரா நடைப் பயணம். பயணங்களை மேற்கொள்வதில், அதிலும் நீண்ட பயணங்கள் மேற்கொள்வதில் சில உற்சாகமூட்டும் குறிப்புகள்.
1999 இல் டோரிஸ் ஹட்டோக் (Doris Haddock) என்கிற 90 வயது பெண்மணி, அமெரிக்காவில், தேர்தல் சீர்திருத்தம் குறித்து (தனியாக தனியாரிடமிருந்து ஏராளமான பண உதவி பெறுவதை தடுத்து நிறுத்த), அமெரிக்காவின் குறுக்கே 3200 கி. மீ. நடைப்பயணம் மேற்கொண்டு முடித்தார். செய்திகளுக்கு: http://www.grannyd.com/about-grannyd.html
ஒரு நாளுக்கு 10 மெயில் வீதம் 14 மாதங்கள் நடந்துள்ளார்.
பா க்ஸ்யான் (fa xian) என்கிற புத்த பிக்ஷு கி.மு 412 லிருந்து கி மு 399 வரை சீனா விலிருந்து இந்தியா, ஸ்ரீலங்கா விற்கு நடந்தே சென்றிருக்கிறார்
ஜப்பானில் புத்த பிக்ஷுக்கள் வெவ்வேறு விரதங்களை மேற்கொள்கிறார்கள். க்யோடோ நகரில் ஒரு பிக்ஷு ஒன்பது நாட்கள் உணவு, தூக்கமின்றி, வெறும் நீரை மட்டும் உட்கொண்டு உலக அமைதிக்கு தபஸ். மற்றொருவர் ஒருவருடம் செல்லுமிடமெல்லாம் நடந்தே.
இடங்களை நடந்து செல்வதில் ஒரு romantic idea வாக படுகிறது. சென்னைலிருந்து காஞ்சிபுரம், திருப்பதி என்று முயற்சி செய்து இருக்கிறோம். ஒரு நாளுக்கு 30 லிருந்து 40 கி மீ வரை செல்லலாம் – ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மேல் நடப்பது நல்லதல்ல. நான்கு நாட்களுக்கு மேல் நடக்க பயிற்சி தேவை. ஐந்திற்கு மேற்பட்ட குழுவை சமாளிப்பது சிரமம்.
இந்தியாவை நடந்து பார்க்க ஆசை உண்டு
அன்புடன் முரளி
********************
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் பயணக்கட்டுரைகள் படங்களுடன் விளக்கமாக வருகிறது. அதன் தொடர்புடைய செய்தியுடன். படிக்க நன்றாக இருக்கிறது. பயணம் முடிந்ததும் மொத்தத்தையும் இணைத்து ஒரு முழு நீள கட்டுரையாக் வெளியிடுங்கள்.
சுகமாய் அமையட்டும் உங்கள் பயணம்.
ஜெயக்குமார்
**********************
அன்புள்ள ஜெயமோகன்,
பயணம் செய்ய்துகொண்டிருக்கும்போதே பயணம் பற்றிய கட்டுரைகளையும் எழுதி அளிப்பது அற்புதம். சில வருடங்களுக்கு முன் வானில் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் ISS (International Space Station) இல் பயணம் செய்துகொண்டிருந்தவர் அங்கிருந்தபடியே தன் அநுபவங்களையும் கண்களால் தான் அங்கிருந்து காண்பவற்றைப் பற்றியும் இணையதளத்தில் தனது Blog இல் நேரடியாக பதிவு செய்து அனைவருடன் பகிர்ந்துகொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. சிற்பங்களின் புகைப்படங்களும் அருமை.
வாழ்த்துக்கள்
ஆனந்த்
………..888888888888888
“கடவுள், மதம், குழந்தைகள்” – அன்பு ஜெயமோகன். மதத்தை மறுப்பவர்கள் வாழ்வு சற்று வறண்டதே என்பது சரியே. மதக்கட்டுப்பாடின் காரணமாய் நெற்றியில் பொட்டு, கண்ணில் மை, கை கழுத்தில் (மெல்லியதாகவேனும்) வளையல், செயின் இல்லாத இளம்பெண்களைப்பார்க்கும்போது ஒரு வறட்சி தோன்றும். அழகியலில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். அலங்காரம் இல்லாத பெண்களை, குழந்தைகளை, கடவுளரை ரசிக்க முடியுமா?. மதங்களின் தேவை பற்றி உங்கள் கருத்து அருமை. மதம் வேன்டாம் என்று ஓஷோ சொன்னாரா என்ன? இருக்கும் மதங்களே போதாது என்றார். எத்தனை மனிதர்களோ அத்தனை மதம் இருந்தாலும் தவறில்லை என்றார். நாரத முனியின் பக்தி சூத்திரம் பற்றிய ஓஷோவின் புத்தகம் (தமிழில் படித்தேன்) பக்திக்கு புதிய வழி காட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு, ஜக்கி சொல்வார் “இருக்கிறார் என்று நம்புவதாலோ, இல்லை என்று வாதிப்பதாலோ உங்கள் வாழ்வில் என்ன மாற்றம் வந்து விடும்? ‘தெரியாது’ என்று உண்மையை ஒத்துக்கொண்டு தேடலை ஆரம்பித்தீர்களனால்தானே எதாவது தெரிய வர வாய்ப்பு வரும்?” இது என்னைக்கவர்ந்த கருத்து. வாழ்த்துக்கள்.
***************
திரு ஜெயமோகன், உங்கள் வலைப் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் கட்டுரையிலேயே எனக்கு மிகவும் பிடித்தது தொப்பி, (இதிலிருந்துதான் நான் உங்கள் வலைப் பதிவை ரசித்து படிக்க ஆரம்பித்தேன்) தேர்வு, எஸ்ரா வின் கடிதமும் மற்றும் புகைபடங்களும், இந்தியப் பயணம் சில சுயவிதிகள், வாசகி, அன்னை, கடைசியாக கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா.
உங்கள் கடவுள், மதம், குழந்தைகள் குறித்த கட்டுரை மிகவும் அருமை. தெளிவான சிந்தனை. இதை படித்த பின்தான் உங்களை பாலா நான் கடவுள் படத்துக்கு எழுத அழைத்ததற்கான காரணம் புரிந்தது. கடவுள், மதம், குறித்த தெளிவான சிந்தனை உள்ளவர்களை இந்த சமூகம் நாத்திகன் என்றும் கர்வமானவன் என்றும் சொல்கிறதே! உங்களை பற்றியும் இப்படியொரு விமர்சனம் உண்டு. இதற்க்கு உங்கள் பதில் ? காரணம் கடவுள், மதம், பற்றிய என்னுடைய அபிப்ராயமும் நீங்கள் சொல்வது போலத்தான். இதனாலேயே என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தப்பான விமர்சனங்கள் என் மீது வீசப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சிந்தனை கொண்டவர்களை இந்த சமூகம் ஏன் சற்று தள்ளி வைத்தே உறவாடுகிறது. நீங்கள் சொல்லி இருக்கும் சிந்தனை ஒரு பெண் எழுத்தாளரிடம் இருந்து வந்திருக்குமானால் அதற்கு வேறு மாதிரியான சாயம் பூசப்படும் என்றே நான் நினைக்கிறேன். ( கமலா தாஸ், அருந்ததி ராய், சல்மா). ஒரே பக்திதான், ஒரே மதம்தான். ஆனால், ஆண் பெண் என்ற வேறுபாடு இருப்பதை போல, கடவுள், மதம் பற்றிய சிந்தனையிலும் ஆண் வேறு மாதிரியும் பெண் வேறு மாதிரியும் சிந்தனை கொண்டவர்களாக ஏன் இருக்கின்றனர் ? இன்னும் ஒருபடி மேலே போய் பெண் என்றால் அவள் பழைய பஞ்சாங்கமாக இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்ப்பார்க்கின்றதே ! கலாச்சாரம், கடவுள், மதம் இது மூன்றும் இந்த அளவுக்கு இந்த சமூகத்தை ஆக்ரமித்து இருப்பதில் பெண்களின் பங்கு அதிகம் என்று நான் நினைக்கிறேன். உங்கள் கட்டுரை உங்கள் அபிப்ராயத்தை சொல்கிறது. ஆனால் இந்த சமூகத்தின் நிலைப்பாடு ஏன் காலம் காலமாக வேறு மாதிரி இருந்து வந்துள்ளது. உங்களை போன்ற தனித்த சிந்தனையோ, நிலைப்பாடோ கொண்ட எழுத்தாளர்கள் அப்போது இல்லாமல் இருந்தார்களா ? அல்லது இருந்தும் வெளிப்படையாக சொல்ல தைரியம் அற்றவர்களாக இருந்தார்களா ?
குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மட்டும் ஆணோ பெண்ணோ எத்தனை படித்திருந்தாலும், கலாச்சாரத்தில், பொருளாதாரத்தில் எத்தனை முன்னேறி இருந்தாலும் கடவுள், மதம் குறித்த மடமை மட்டும் இன்னும் போக வில்லையே ? இதற்கு என்ன காரணமாக இருக்கும் ?
திரு கோகுல் அவர்களுக்கு நீங்கள் அளித்த பதில் கடவுள், மதம் பற்றிய உங்கள் பார்வை. இந்த சமூகத்தின் பார்வை வேறு மாதிரி இருப்பதற்கான காரணம் என்ன ? எழுத்தாளனுக்கு சமூகத்தை நல்வழிப்படுத்தும் மிக முக்கியமான பொறுப்பும் இருப்பதால் உங்களிடம் இந்த கேள்வியை கேட்கிறேன். இதற்க்கு உங்கள் பதில் என்ன ?
விளக்கமான (வில்லங்கமான) கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
vg