வெண்முரசு விழா ஏன்?

வெண்முரசு விழாவைப்பற்றி நான்கு கடிதங்களில் வசையும் ஏகத்தாளமுமாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது ஒரு விற்பனை- சுயமுன்வைத்தல் ‘ஷோ’ என்பதுதான் அது.

சாராம்சத்தில் அது சரிதான். இவ்விழாவின் நோக்கம் வெண்முரசு நாவல் வரிசையை மேலும் அதிகமாக விற்க வைப்பதே.அதன் பொருட்டு இம்முயற்சியையும் இதன் முக்கியத்துவத்தையும் பொதுவாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதே. ஆகவேதான் பொதுவாசகர்கள் கவனிக்கும் ஆளுமைகளுடன் பெரிய அளவில் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. என்னுடைய பிறநூல்களுக்கு இது தேவைப்பட்டதில்லை.

வெண்முரசு நூல்கள் அளவில் பெரியவை. தொடர்ச்சியாக வருடம் நாலைந்து நூல்கள் என வந்துகொண்டே இருக்கப்போகின்றவை. நம் வாசகர்களின் வாசிப்புப் பழக்கமும் நூல்களை வாங்கும் மனநிலையும் நாமறிந்ததே. என் நூல்கள் எவையும் பல்லாண்டுகளாக நூலகங்களுக்கு வாங்கப்படுவதில்லை. இடதுசாரிகளின் கையில் இருக்கும் கல்லூரி நூலகச்சூழலிலும் அவற்றை வாங்கலாகாது என்ற ரகசியப்புரிதல் உள்ளது. ஆகவே முழுக்கமுழுக்க வாசகர்களை நம்பியே இந்நூல்கள் வெளியாகின்றன

1

இந்தநூல்கள் தொடர்ந்து வெளியாகும்போது ஒன்று நிகழும். முதல் ஏழெட்டு நூல்களுக்குப்பின் அவற்றை வாங்காதவர்கள் அடுத்தடுத்த நூல்களை வாங்குவதைத் தவிர்ப்பார்கள். ஆகவே விற்பனை குறையவே செய்யும். ஆரம்பத்திலேயே கணிசமான வாசகர்களை சென்றடைவதே இவ்வரிசை முழுமையடைய அவசியமானது.

நம் வாசகர்களுக்கு விலை ஒரு பெரிய பிரச்சினை என்பதனால் வெண்முரசு நூல்கள் அடக்கவிலைக்கு மிக அருகே விலைவைக்கப்படுகின்றன. ஆகவே அவற்றின் லாபம் மிகக்குறைவு. முன்விலை வெளியிட்டின் மூலம் வரும் பணம் முதலீட்டின் ஒருபகுதியாக இருப்பதனால்தான் நூல்கள் வெளியாகவே முடிகிறது. முன்விலைவெளியீட்டில் நூல்களை வாங்குபவர்கள் மட்டுமே உண்மையில் இந்நூலின் புரவலர்கள்

ஆகவே நற்றிணைப் பதிப்பகம் அனேகமாக லாபமே இல்லாமல்தான் இதுவரை இந்நூல்வரிசையை வெளியிட்டுவருகிறது. இதன் பதிப்புரிமைத்தொகை ஓவியருக்குச் செல்கிறது. [அவரது உழைப்புக்கு அதுவே மிகச்சிறிய தொகைதான்] ஆகவே எனக்கு இந்நூல்களில் இருந்து ஒரு பைசாகூட வருவதில்லை. இவ்வுழைப்பு என்னைப்பொறுத்தவரை முழுக்கமுழுக்க மனநிறைவுக்கு மட்டுமானது.

இச்சூழலில் பதிப்பகம் சோர்ந்துவிடலாகாது என்பது முக்கியமானது. என்னதான் நற்றிணை யுகன் என் வாசகரும் நண்பருமாக இருந்தாலும் தொடர்ந்து நஷ்டம் வருமென்றால் அவரிடம் நூல்களை வெளியிடும்படி சொல்ல முடியாத நிலை வரும். அது நிகழலாகாது

ஆகவே இந்நூல்களை குறைந்தபட்சப் பிரதிகளாவது விற்றாகவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதிகபட்ச விற்பனை என்பதெல்லாம் இலக்கு அல்ல, அது இங்கே சாத்தியமும் அல்ல. காரணம், இந்நூல்களின் அடர்த்தி மற்றும் நுட்பம் காரணமாகவே பரவலான பொதுவாசகர்கள் இதை வாங்கி வாசிக்க முன்வரமாட்டார்கள்.

இவ்விழா அதற்காகவே திட்டமிடப்பட்டது. இது பதிப்பாளர் நிகழ்த்தும் விழா அல்ல. நான் என் கையில் இருந்து பணம்செலவழிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். விழாவை முன்னெடுத்து நடத்துபவர்கள் என் நண்பர்களான பாலா, சிறில் அலெக்ஸ், கே.பி.வினோத், செல்வேந்திரன், பரத் பிக்காஜி, சீனிவாசன், சுதா, செந்தில்குமார் தேவன் போன்ற நண்பர்கள். முழுக்கமுழுக்க நண்பர்களின் சொந்தப்பணத்தில் இது நிகழ்கிறது.பல்லாயிரம் ரூபாய் இதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் செலவழித்திருக்கிறார்கள்.

தமிழில் பெருமுயற்சிகளின் பொதுவிதி ஒன்றுண்டு. அவை தமிழ்ப்பண்பாட்டுச்சூழலால் உதாசீனப்படுத்தப்பட்டு பாதியிலேயே நின்றுவிடும். சோர்வும் தனிமையுமே அவற்றை செய்தவர்களுக்கு எஞ்சும். மகாபாரத மொழியாக்க முயற்சிகள்கூட முழுமைபெறாத சூழல் இது. அரசு உதவி கொண்ட கலைக்களஞ்சிய முயற்சிகள்கூட பாதியிலேயே நின்றுவிட்ட வரலாறு உண்டு நமக்கு.

காரணம், நம் வாசகர்களும் சரி ஊடகங்களும் சரி இயல்பாக இத்தகைய பெருமுயற்சிகளை கவனிப்பவர்கள் அல்ல, ஆதரிப்பவர்களும் அல்ல என்பதே. இத்தகைய முயற்சிகளைக் காணும்போது அவநம்பிக்கையேயும் தாழ்வுணர்ச்சியுமே பெரும்பாலானவர்களில் எழுகிறது. பெரியவை பலரை அச்சுறுத்துகின்றன. பெரிய அறிவுச்செயல்பாடுகளில் இருந்து விலகி நிற்கவே பலர் முயல்கிறார்கள். அதற்குரிய மூளைத்திராணி இங்கு அபூர்வம் என்பதே காரணம். அதற்கு பல பண்பாட்டுக்காரணங்கள் நமக்குள்ளன.

2

அத்துடன் கணிசமானவர்களில் பொறாமையும் எழுகிறது.குறைந்தபட்சம் அதைக் காட்டிக்கொள்ளமாலிருக்க வேண்டும் என்று கூட நம்மவர் அறிவதில்லை. ஆகவே ஏதேனும் கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் நிலைப்பாடுகளை பாவனை செய்து வசைபாடித்தள்ளுகிறார்கள். கேலியும் கிண்டலுமாக பொருமுகிறார்கள். சில்லறை வம்புகளையும் ஒற்றைவரி விமர்சனங்களையும் உருவாக்கி பரப்புகிறார்கள்.

இதைத் தொடங்கும்போது இச்சிறுமைகளைத்தான் பெரும்பாலும் சந்திக்கவேண்டியிருக்கும் என்று நான் அறிவேன். பாரதியோ, உ.வே.சாமிநாதய்யரோ, சிங்காரவேலு முதலியாரோ வையாபுரிப்பிள்ளையோ பெ.தூரனோ வேறுவகை அனுபவங்களைப் பெற்றதில்லை. கம்பன் பெற்ற அனுபவமும் அதுவே என பதிவாகியிருக்கிறது.

ஆகவே ஒரு பெரிய முயற்சி வெற்றிபெறவேண்டுமென்றால் ஆரம்பத்திலேயே பலமடங்கு ஊக்கம் தேவைப்படுகிறது. அந்த செயல்பாடு அழுத்தமும் வேகமும் கொண்டதாக முதலிலேயே தன்னை முன்வைத்தாக வேண்டியிருக்கிறது. அந்த விசையால்தான் அது முன்னகரும்.

இங்கே சோர்வூட்டும் விஷயங்களே ஒவ்வொருநாளும் கண்ணில்படும்.ஏளனங்களும், வசைகளும், அவதூறுகளும், சோர்வூட்டவென்றே திட்டமிட்டு எழுதப்படும் கடிதங்களும் மின்னஞ்சல்களாக வந்து சேராத ஒருநாள் கூட இந்த ஒருவருடத்தில் கடந்துசென்றதில்லை. எந்தெந்த வகையில் எல்லாம் இம்முயற்சியைச் சிறுமைசெய்ய முடியும் என்று அவை காட்டுகின்றன.

தமிழில் பெரும்கனவுகளுடன் இயங்குகிற, நாளை மேலும் பெரிய செயல்களைச் செய்யப்போகிற ஒவ்வொருவருக்கும் இதே அனுபவம்தான் இருக்கும். அவர்களும் இதே உத்வேகத்துடன் அவற்றைக் கடந்துசெல்லவேண்டும் என்று இத்தருணத்தில் சொல்லவிழைகிறேன். அவர்களுக்கு முன்னரே என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

3

இம்முயற்சியைத் தொடங்கும்போது எனக்கு தன்னம்பிக்கை ஒருபக்கம் அச்சம் இன்னொருபக்கமும் அலைக்கழித்தன. அச்சம் என்பது என் ஆற்றல்மேல் அல்ல. இன்னதென்றறியாத ஒன்றின்மேல். அந்த அச்சமே பணிவாக ஆகியது

நான் வணங்கும் ,மதிக்கும் ஒவ்வொருவரிடமும் இம்முயற்சிக்கான ஆசிகளையும் வாழ்த்துக்களையும் எதிர்பார்த்தேன். அவற்றைக் கேட்டுப்பெற்றுக்கொண்டேன் என்றுகூடச் சொல்லலாம். இளையராஜா எனக்கு ஒரு இசைமேதை மட்டும் அல்ல. இந்துஞானமரபின் ஒட்டுமொத்தம் என்று நான் நம்பும் ஒரு நூலின் முதல் தொகுதியை அவரது பாதங்களுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.அவரை நேரில் சந்தித்து வணங்கி ஆசிபெற்றேன்.

ஆற்றூர் ரவிவர்மா,ஜெயகாந்தன், அசோகமித்திரன்,கோவை ஞானி, பி.ஏ.கிருஷ்ணன், அ.முத்துலிங்கம், மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர்,நாஞ்சில்நாடன்,கல்பற்றா நாராயணன், திரைக்கதையாசிரியர் ஜான் பால், தேவதேவன் ,தமிழினி வசந்தகுமார், நண்பர் சுகா என வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டேன். வேதசகாயகுமாரையும், அ.கா.பெருமாளையும், பேரா. பெர்னாட் சந்திராவையும் வீடுதேடிச்சென்று சொல்லி வாழ்த்துபெற்றேன்.

என் நண்பர்கள் வாசகர்கள் அனைவரிடமும் அதைப்பற்றி பேசியிருக்கிறேன். இம்முயற்சியில் ஏதோ ஒருகட்டத்தில் முழுமையான தனிமையில் சென்று சிக்கிக்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் அப்போது அவர்கள் என்னுடன் இருக்கவேண்டும் என்றும் கோரினேன். அவர்கள் என்னுடன் தொடர்ந்து வருவது பெரும் ஊக்கத்தை அளிக்கிறது

இந்த விழா என்பது அந்த வாழ்த்த்துக்களின் தொகுப்பு வடிவம். இந்த மேடையிலும் அரங்கிலும் நான் நேசிக்கும் மதிக்கும் ஆளுமைகள் வருவதும் இம்முயற்சியை வாழ்த்துவதும் எனக்கு உண்மையில் பெரும் நிறைவை அளிப்பது. இது வெறும் சம்பிரதாயமோ, விளம்பரமோ தான் என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளுங்கள். என்னைப்பொறுத்தவரை இதன் பொருள் உணர்வுபூர்வமானது, ஆழமானது.

எழுதத் தொடங்கியபின் இருவகை நம்பிக்கைகள் எழுந்தன. ஒன்று எங்கே தொடங்கினாலும் என்னால் என் அக எழுச்சியைத் துல்லியமாக பின்தொடர முடிந்தது. புனைவு அதுவே என்னை அள்ளிக்கொண்டுசென்றது. அதுவே என்னை கொண்டுசென்று சேர்த்துவிடுமென்ற நம்பிக்கை எழுந்தது. அடுத்தபடியாக இணையத்தில் வந்துசேர்ந்த வாசகர்களின் எண்ணிக்கை பெரும் நம்பிக்கையை அளித்தது.

4

சில மனக்குறைகள் இருந்தன. ஒன்று மனுஷ்யபுத்திரனிடம் நான் இதைப்பற்றிப் பேசவில்லை என்பது. காரணம் சில மனவிலகல்கள். ஆனால் இத்தகைய முயற்சியின் முன் அவை சிறிதாகிவிடவேண்டும் என்று தோன்றியது. அவரிடம் மின்னஞ்சல் மூலம் பேசியதும் அவரது வாழ்த்தும் எனக்கு மிக முக்கியமானது.

நெடுநாள் கனவாக இருந்த முயற்சி இது. தொடங்கிவிட்டேன், இனி வெற்றிகரமாக முடிக்காமலிருக்க முடியாது. சோர்ந்து பின்வாங்கி கழிவிரக்கம் கொள்வதோ சூழலையோ பிறரையோ குற்றம் சாட்டி வசைபாடுவதோ என் இயல்பல்ல. நான் செய்துமுடிப்பவன். முன்னால் மட்டுமே என்னால் செல்லமுடியும்.

இம்முயற்சிகள் வழியாக தமிழ்மக்கள் இந்நூல்வரிசை பற்றி சற்று அறியநேரும் என்றும் அவர்களில் ஒருசிறு சாரார் இதற்கு ஆதரவளித்து இந்நூல்களை வாங்குவார்கள் என்றும் அதனூடாக இம்முயற்சி முழுமையைச் சென்றடைய உதவுவார்கள் என்றும் நினைக்கிறேன்.

அப்படி நிகழாவிட்டால் என் சொந்தச்செலவில் இவற்றை வெளியிட்டு முடிப்பேன் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. என் கடமை முதல்பதிப்பை முழுமையாகக் கொண்டுவருவது மட்டுமே. அதன்பின் இதற்கும் எனக்கும் தொடர்பில்லை.

இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டியிருக்கிறது. அதற்கு இந்தத் தருணத்தின் ஆசிகளும் வாழ்த்துக்களும் உதவும் என நினைக்கிறேன். நண்பர்களை விழாவுக்கு அழைக்கிறேன்

ஜெ

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைவெண்முரசு விழா -கமல்ஹாசன் வாழ்த்து
அடுத்த கட்டுரைவிழா-பாவண்ணன் வாழ்த்து