[தமிழ் ஹிந்து தீபாவளி மலருக்காக ஷங்கர்ராமசுப்ரமணியன் எடுத்த பேட்டி]
படைப்பாளுமையும் செயலூக்கமும் இணைந்திருக்கும் அரிதான ஆளிமைகளில் ஒருவர் ஜெயமோகன். சிறுகதை, நாவல், விமர்சனம், தத்துவம், கேள்வி பதில், திரைக்கதை என அயராமல் எழுதிக் குவிக்கும் ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு விஷயத்திலும் தன் ஆளுமையை அழுத்தமாகப் பதிப்பவர். எழுத்துலகில் பலரும் நுழையத் தயங்கும் பிரதேசங்களுக்குள் இயல்பாகவும் அனாயாசமாகவும் நுழைந்து சஞ்சரிக்கும் இந்தக் கதைசொல்லி உலகின் மாபெரும் காவியமான மகாபாரதத்தைத் தன் பார்வையில் திருப்பி எழுதும் சாகசத்தில் இறங்கியுள்ளார். தினமும் ஒரு அத்தியாயம் என்னும் திட்டத்துடன் பத்தாண்டுக்காலக் கனவைச் செயலூக்கத்துடன் நனவாக்கிவருகிறார். இந்த மாபெரும் முயற்சி குறித்து கன்னியாகுமரியில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியபோது தன் எண்ணங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலிலிருந்து சில பகுதிகள்:
[மகாபாரதம் சுவடி]
தமிழில் ராஜாஜி முதல் சோவரை மகாபாரதத்தை வெகுஜனத் தளத்தில் எழுதியிருக்கிறார்கள். நவீன இலக்கியத்தைப் பொருத்தவரை பாரதியார், எம்.வி. வெங்கட்ராம் தொடங்கி எஸ். ராமகிருஷ்ணன் வரை மகாபாரதத்தை மறுபடைப்பு செய்திருக்கிறார்கள்…உங்கள் மகாபாரதம் இதிலிருந்து எப்படி மாறுபடுகிறது?
இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் மகாபாரதம் வேறு வேறு வடிவங்களில் எழுதப்பட்டிருக்கிறது. பெருந்தேவனார் புராதனத்தில் எழுதியிருக்கிறார். கொங்கு நாட்டில் நல்லாப் பிள்ளை பாரதம் இருக்கிறது. வில்லிபுத்தூரார் ஓரளவு தழுவி எழுதியுள்ளார். இவை எல்லாம் தழுவல்களே. அந்தத் தழுவல்களில் நல்லாப்பிள்ளை பாரதம்தான் முழுமையானது.
நவீன காலத்தைப் பொருத்தவரை முழுமையான பாரத நூல் ராமானுஜாச்சாரியார் பதிப்பித்த கும்பகோணம் பதிப்புதான். மகாபாரதத்தை அப்படியே மொழிபெயர்த்தவர் அவர்தான்.
புனைவு இலக்கியத்தில் மகாபாரதத்தை சுதந்திரமான புனைவாக எழுதிய முதல் தமிழ் உதாரணம் என்றால் பாரதியார். அடுத்து எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னி. அடுத்து உப பாண்டவம் எழுதிய எஸ். ராமகிருஷ்ணன்.
நவீன காலகட்டத்தில் மகாபாரதத்தை உரைநடையில் திரும்பிச் சொல்ல வேண்டிய அவசியம் வருகிறது. அவர்களிடம் பொது அம்சம் உண்டு. ராஜாஜியைப் பொருத்தவரை குழந்தைகளை உத்தேசித்துக் கதைகளைச் சுருக்கிச் சொன்னார். சோ எழுதிய மகாபாரதம் தர்ம, சாஸ்திர விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. கதைகள் அதிகம் கிடையாது. கதாபாத்திரங்களின் நுட்பங்களுக்கு அங்கே இடம் கிடையாது. இவையெல்லாம் மகாபாரதத்தைத் தெரிந்துகொள்வதற்கு உபயோகமாக இருக்கிறது.
நித்யகன்னி, உப பாண்டவம், மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய இரண்டாம் இடம், கன்னடத்தில் வெளியான பருவம் எல்லாமே மகாபாரதத்தில் ஒரு பகுதியையோ ஒரு கதாபாத்திரத்தையோ எடுத்து எழுதப்பட்ட படைப்புகள். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.
மகாபாரதத்திலிருந்து மறுபுனைவு செய்யப்பட்ட கதாபாத்திரங்களில் இந்தியாவில் அதிகமாக எழுதப்பட்ட கதாபாத்திரம் கர்ணன்தான். நவீன மனிதனின் இக்கட்டைப் பெருமளவு பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கர்ணன்தான். அவனுக்கு எல்லா தகுதிகளும் இருந்தன. ஆனால் அவன் எங்கேயும் ஜெயிக்க முடியவில்லை. அவன் புழங்கிய பிரமாண்டமான இடத்தில் அவன் தொடர்ந்து அந்நியனாகவே இருக்கிறான். இப்படியாக மகாபாரதக் கதையின் ஒரு பகுதி அல்லது கதாபாத்திரத்தின் மூலமாக சமகாலத்தின் சிக்கல்களை நவீன எழுத்தாளர்கள் எழுதிப்பார்த்தார்கள்.
என்னுடைய மகாபாரதம் என்பது ஒருவகையில் மொத்த மகாபாரதத்தை எழுதும் முயற்சி. நல்லாப்பிள்ளை பாரதம் மாதிரியோ, வில்லிபுத்தூர் பாரதம் மாதிரியான முயற்சி அது. அதேநேரத்தில் மகாபாரதத்தை அப்படியே எழுதக்கூடியதும் அல்ல. மறுவிளக்கம் மற்றும் மறுஆக்கம் கொடுத்து விரிவுபடுத்தும் முயற்சி இது.
மகாபாரதத்தில் துரோணரை மட்டும் ஒரு கதாபாத்திரமாக்கி எழுதும்போது மற்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் இருக்காது. கர்ணனை நாயகனாக்கி எழுதும்போது அர்ஜுனனைச் சிறிய கதாபாத்திமாக்கிவிடுவார்கள். இந்தப் பிழை நிகழாமல் மொத்த மகாபாரதத்தை எழுத வேண்டும் என்பதே எனது சவாலாக உள்ளது. வியாசன் எந்தக் கதாபாத்திரத்தையும் கீழே விடவில்லை. ஒருவனுக்கு நியாயம் சொல்லும்போது, இன்னொருவனை அநீதியாகக் காட்டாமல் சொல்வது என்பது பெரிய சவால்.
இந்தியா முழுவதும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட புனைவுகளில் உங்களைக் கவர்ந்தவை எவை?
இந்தியா முழுவதும் மகாபாரதத்தை தழுவி எழுதப்பட்ட படைப்புகளே 300க்கும் மேற்பட்டு இருக்கும். மலையாளத்திலேயே 60-க்கும் மேல் இருக்கும். என்னைக் கவர்ந்தவை என்று சொன்னால் பைரப்பாவின் பருவத்தையும், பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ‘இனி நான் உறங்கட்டும்’-ம் சொல்லலாம். பருவம் நாவல் ஒரு வரலாற்றுத்தன்மையை உருவாக்கி மிகவும் யதார்த்தமாகக் கதையைச் சொல்லும் படைப்பு. இனி நான் உறங்கட்டும் ஒரு பெரிய ஓலம் அல்லது நினைவுக் கொந்தளிப்பைக் கொடுப்பதாக இருந்தது. வரலாற்றுத்தன்மை குறித்து அந்தப் படைப்பில் கவனமே இல்லை. இரண்டுமே என்னை பாதித்த படைப்புகள். 28 வயதிலேயே முழுமையாக மகாபாரதத்தை என்றாவது எழுதிப்பார்க்க என்னைத் தூண்டிய படைப்புகள் அவை.
மகாபாரதத்தின் மூலக்கதையில் கர்ணனது மனைவி குறித்துச் செய்தியே இல்லை. பல்வேறு இடைவெளிகள் உள்ளன. விசித்திர வீர்யனுக்கு குழந்தை இன்மைக் குறைபாடு இருக்கிறது. ஆனால் அவன் தன் மனைவியரோடு சுகிக்கிறான் என்று வருகிறது. அந்த இடைவெளிகளை எப்படி வியாக்கியானம் பண்ணுகிறீர்கள்?
இந்தியாவில் உள்ள அவ்வளவு தரப்புகளும், இனக் குழுக்களும் தங்கள் கதையை ஒரு பொது இடத்தில் கொண்டுவந்து போட்டால் எப்படி இருக்கும்? மகாபாரதத்தில் எல்லாருடைய கதைகளும் உள்ளன. மகாபாரதத்தில் ஒரு கதை பலவீனமாக இருந்தால், அது சுருக்கப்பட்டிருக்கிறது என்று சந்தேகம் வந்தால், மொத்த மகாபாரதத்தில் தேடுங்கள் இன்னொரு இடத்தில் கிடைக்கும் என்று அம்பேத்கர் சொல்கிறார். கர்ணனின் கதை நான்கு இடத்தில் திரும்பத் திரும்ப வருகிறது. ஆதி பர்வத்தில் கர்ணன் எங்கே படித்தான் என்ற குறிப்பு கிடையாது. வன பர்வத்தில் துரோணரிடம் படித்ததாக வரும்.
இதற்குக் காரணம் என்னவெனில் வேறு வேறு தரப்பினரால் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு பாடங்களாகப் பேணப்பட்டுள்ளது. தட்சிணாத்திய பாடம் கேரளாவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. விரிஜ மகாபாரதம் வங்காளத்தில் புழக்கத்தில் இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் பாடத்தைத் திருத்தியுள்ளனர். வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான் அது முழுமையாகத் தொகுக்கப்படுகிறது.
ஐநூறு ஆண்டுகளாக நிலவிய பக்தி மரபு மகாபாரதப் படைப்பைச் சமநிலையில்லாமல் ஆக்கிவிட்டது. மூல மகாபாரதத்தில் அசுரர்களை எதிர்மறையாகச் சொல்லவே இல்லை.
இந்தியாவின் உணர்ச்சி நிலைகள், உறவுநிலைகள், தர்மசங்கடங்களின் படிமங்கள் முழுவதும் மகாபாரதத்தில் இருக்கிறது. அந்தப் படிமங்களுக்காகவே மகாபாரதத்தை நோக்கிப் போகிறேன். இன்றைய அரசியலிலும் ஒரு கர்ணன் இருக்கிறான். இந்தியாவின் இன்றைய வாழ்க்கையைச் சொல்லக்கூடிய படிமங்கள் மகாபாரதத்தில் இருக்கின்றன. மகாபாரதம் வழியாக இன்றைய வாழ்க்கையைத்தான் நான் சொல்ல முயற்சிக்கிறேன்.
மகாபாரதம் மேலோட்டமாகக் கதைகளின் தொகுப்பாக இருக்கிறது. அதில் வரலாறு மறைந்திருக்கிறது. இன்றைக்குரிய வரலாற்றுப் பார்வையில் பார்த்தால் வரலாற்றை யூகிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மொத்த மகாபாரதமே க்ஷத்திரியர்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே நடந்த போர்தான். கங்கா வர்த்தம் என்று சொல்லப்படும் பகுதி 16 ஜனபதங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த ஜனபதங்களிலிருந்த வேடர்கள், மீன் பிடிப்பவர்கள் எல்லாரும் க்ஷத்திரியர்களாக மாறிவிட்டார்கள். இப்படியாக 16 ஜனபதங்கள் 56 ஆக மாறியது. இனி மேற்கொண்டு யாரும் க்ஷத்திரியர்களாக மாறக் கூடாது என்று மாறியவர்கள் நினைக்கிறார்கள்.
கங்கா வர்த்தத்துக்கு வெளியே பெரும் நிலப்பகுதி உள்ளது. அங்கே ஆடு,மாடு மேய்த்தல் பெரும் தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்துக்கு அதிக ஆட்கள் தேவை. ஆனால் மேய்ச்சல் தொழிலிலோ ஆயிரம் மாடுகளை மேய்க்கச் சில ஆட்களே போதும். இதனால் மேய்ச்சல் தொழில் லாபமானதாக இருந்தது. வருவாய் அதிகரிக்கும்போது யாதவ அரசுகள் உருவாகத் தொடங்கின. யாதவ அரசுகள் உருவாவதை க்ஷத்திரியர்கள் அனுமதிக்காதபோது, அந்தச் சண்டை முற்றித்தான் மகாபாரதப் போர் ஏற்படுகிறது. யாதவன்தானே ஜெயிக்கிறான். அவர்கள் மேலே வருகிறார்கள்.
யாதவ அரசியான குந்தியின் குழந்தைகள்தானே ஜெயிக்கிறார்கள். குந்தியின் மருமகனான கிருஷ்ணன்தானே போரை நடத்தினான். அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு கிருஷ்ணன் தெய்வமாக்கப்படுகிறான்.
மார்க்சிய அறிஞர் டி.டி.கோசாம்பியையும், அம்பேத்கரையும் படித்த பின்புதான் இது வரலாற்றுச் சித்திரமாக எனக்குக் கிடைத்தது.
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரிக்கு நூறு குழந்தைகள் பிறந்தது தொடர்பாக இன்றைக்கு மாயப் புனைவாக ஒரு பாடமும், இன்னொரு இடத்தில் யதார்த்தமான ஒரு பாடமும் இருக்கிறது. இது முந்தின அத்தியாயத்திலேயே இருக்கிறது. வேறு வேறு சூதர்கள் பாடியது பின்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. நான் சில இடங்களில் யதார்த்தப் பாடத்தை எடுத்துக்கொள்கிறேன். சில இடங்களில் படிமங்களாக மாற்றக்கூடிய இடத்தில் கவித்துவமாகவும், படிமங்களாகவும் விரிவாக்கும் சாத்தியத்திற்காக எடுக்கிறேன்.
சித்திராங்கன் ஒரு பேரழகன். அவனைப் போன்றே அழகாக ஒரு கந்தர்வனைப் பார்க்கிறான். அவன் தன்னைப் போல இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காகச் சண்டைக்கு அழைக்கிறான். செத்தும் போய்விடுகிறான். மகாபாரத மூலத்தில் மொத்தமே மூன்று வரிதான் இருக்கிறது. சித்திராங்கன் தன் ஆடி பிம்பத்தோடு தானே போரிடுவதாக நான் வளர்த்தேன். நான் எழுதும் மகாபாரதம் காப்ரியல் கார்சியா மார்கவேசிற்குப் பிறகு எழுதப்படும் மகாபாரதம். அதனால் நான் அதை மேலும் மேலும் நவீனமான புனைவாக மாற்ற வேண்டும்.
மகாபாரதம் தமிழ்நாட்டின் வடபகுதிகளில் கூத்து நிகழ்வாகக் காலம்காலமாக நடிக்கப்பட்டுவருகிறது.. செவ்வியல் மகாபாரதத்திற்கும் நாட்டுப்புறவியல் மகாபாரதக் கதைக்கும் எப்படியான பரிமாற்றங்கள் நடந்துள்ளன?
இந்தியாவைப் பொருத்தவரை நாட்டுப்புற வடிவத்திலிருந்து செவ்வியல் பிரதிக்குள் சில விஷயங்களைச் சேர்த்துக்கொண்ட கதைப் பிரதி மகாபாரதம் மட்டும்தான். நல்லாப்பிள்ளை பாரதம் தெருக்கூத்து உருவாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்படுகிறது. தெருக்கூத்து சோழர் காலத்திலிருந்து நடந்துவருகிறது. ஆனால் அவர்களுக்கு எழுத்துப் பிரதி கிடையாது. பாரதத்தை வாய்மொழியாகவே கடத்தினார்கள். ரொம்ப வருஷமா ஆடி, ஆடி அதை அடிப்படையாக வைத்து நல்லாப்பிள்ளை பாரதம் என்ற செவ்வியல் பிரதி உருவாகிறது.
கேரளத்தில் எழுத்தச்சனின் மகாபாரதம், கதகளி நிகழ்வு வடிவத்திலிருந்து பல பகுதிகளை எடுத்துக்கொண்டது.
ஆந்திராவில் மகாபாரதத்தை முழுமையாகக் கேலிசெய்து நிகழ்த்தக்கூடிய ஒரு தெருக்கூத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் நாட்டுப்புற வடிவங்களில் தெருக்கூத்தைத்தான் சக்தி வாய்ந்த வடிவமாகப் பார்க்கிறேன். ஒரு ஊரே ஹஸ்தினாபுரமாக மாறும் பிரமாண்டத்தை அதில் அவர்கள் சாதிப்பார்கள்.
மகாபாரதத்தில் திரௌபதை துகிலுறியப்படும் காட்சியைப் பொருத்தவரை எல்லா கதாபாத்திரங்களும் விதிக்குக் கட்டுப்பட்டவர்கள் போலவே இருக்கிறார்கள். சில இடங்களில் விதியை மீறுபவர்களாக இருக்கிறார்கள்…
திருதராஷ்டிரனுக்குப் பார்வை இல்லை. அவன் மேல் பீஷ்மருக்கு இயல்பாகவே கூடுதல் பிரியம் இருக்கிறது. மகாபாரதத்தின் ஆரம்பத்திலிருந்தே வியாசன் இப்படியான பிணைப்புகளை உருவாக்கிக்கொண்டபடி போகிறான். துரோணரைப் பொருத்தவரை பீஷ்மர் சொல்வதே வேதம். கர்ணன் துரியோதனனிடம் இப்படித்தான் பிணைக்கப்படுகிறான். இன்றும்கூட மனிதவாழ்க்கையைப் பார்த்தோமானால், நமது தரப்பு செய்யக்கூடிய தவறுகள் நமக்குத் தெரிவதேயில்லை. அந்த உறவுப் பிணைப்பின் வழியாக எதையும் நியாயப்படுத்தவே முயற்சிக்கிறோம்.
மகாபாரதத்தைப் பொருத்தவரை திரௌபதி துகிலுரியப்படும் நிகழ்ச்சி ஒரு முக்கியமான புள்ளி. அது ஒரு திருப்புமுனை. ஆற்றில் ஒரு குச்சி ஒரு சுழியை நோக்கிப் பயணிப்பது போன்றது அது. அந்தப் புள்ளியை நோக்கி சாபங்கள், வன்மங்கள், ஏமாற்றங்கள், உணர்ச்சிகரமான வாக்குறுதிகள் எல்லாவற்றின் வழியாகவும் அங்கே போய்ச் சேருகின்றனர்.
இப்படித்தான் வாழ்க்கை இப்போதும் இருக்கிறது. எல்லாக் காலத்திலும் மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
[நடுகல் வடிவில்]
மகாபாரதம் போன்ற காப்பியத்தை எழுதி முடித்தபிறகும் ஏதோ ஒரு நிறைவின்மை இருந்ததாகவும், நாரதர் வந்து நீதி சொல்லும் படைப்பை எழுதச் சொன்னதாகவும் அதற்குப்பின் தான் ஸ்ரீமத் பாகவதம் படைக்கப்பட்டதாகவும் ஒரு கதை இருக்கிறது…உங்களைப் போன்ற எழுத்தாளனுக்கு இத்தனை கதைகளை எழுதிய பிறகும் நீதி சொல்வதற்கான அவா இப்படித்தான் எழுகிறதா? இந்திய எழுத்தாளர்களுக்கே இது உரித்தானதா?
டால்ஸ்டாயிடம் அந்தத் தேடல் இருக்கிறது. ஒரு எழுத்தாளனின் பயணம் ஆரம்பத்தில் அந்தரங்கமான சுயவாழ்க்கை சார்ந்த போராட்டம், மோதல்களில் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு மனித குலம் அனைத்துக்கான நீதி உண்டா என்று அவனது கேள்வி விரியும். முடிவில் அடிப்படை அறத்திற்கும், நீதிக்கும் அவன் வந்து சேர்வான். உலகத்தில் செவ்வியல் படைப்புகளை எழுதிய பெரும் எழுத்தாளர்கள் எல்லாருமே இந்த இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். நீதியின் மடியில் இளைப்பாறுவது என்று அதைச் சொல்லலாம். அங்கே அவர்கள் கனிந்துபோகிறார்கள்.
மகாபாரதத்தைப் படிக்கும்போது, வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மனித குலத்தின் எதிர்மறையான அம்சத்தைப் பார்த்துவிடுகிறோம். மனிதனைப் பற்றி எனக்குப் பயமே இருக்கிறது.
நான் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு அமைதியான மாவட்டம்தான். ஆனால் பத்து நாட்களில் ஒரு நூறு பேர் மெனக்கெட்டால் ஒவ்வொருவரும் இன்னொருவரை வெட்டிச் சாய்க்கக்கூடிய இடமாக இதை மாற்றிவிட முடியும். அவ்வளவு நொறுங்கக்கூடிய நிலையில்தான் நாம் இருக்கிறோம். அதைத்தான் நாகரிகம் என்றும் வைத்திருக்கிறோம்.
அதை ஒரு எழுத்தாளன் உணரும் அளவுக்கு வேறு யாரும் உணர முடியாது. மனிதனின் குரோதம், சுயநலம், அதிகாரத்துக்காக வரலாறு முழுவதும் சம்பந்தமேயில்லாத எளிய மக்கள் பலியாவது இதையெல்லாம் பார்த்த அனுபவத்தில் அவன் அந்த இடத்திற்குப் போகிறான். பயத்தில்தான் அவன் அடிப்படை அறத்தைப் பிடித்துத் தொங்க ஆரம்பிக்கிறான்.
வன்முறை அரசியலின் மிகப் பெரிய வேடிக்கை என்னவெனில், ஒருவன் அறுவடை செய்கிறான். ஆனால் சாதாரண மனிதர்கள்தான் விலை கொடுக்கிறார்கள். மகாபாரதத்தைப் பொருத்தவரை ஐந்து பேர் அதிகாரத்திற்கு வருவதற்காக எத்தனை உயிர்கள் பலிகொடுக்கப்படுகின்றன..
[சுவரோவியம்]
மனிதன் இன்னும் உணர்ச்சிவயமானவனாகத்தான் இருக்கிறான் என்கிறீர்களா?
மனிதன் ஒரு தீவிரமான முடிவை எடுக்கும்போது அதை நிச்சயமாக அவன் தர்க்கப்பூர்வமாக எடுப்பதில்லை. சட்டென்று எடுக்கப்பட்ட முடிவுகள் வரலாற்றையே தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இப்படித்தான் உலகம் உருவாகியிருக்கிறது. சின்ன நிகழ்ச்சி போதும். அவனைக் கொந்தளிக்க வைக்க. உணர்ச்சிகரமாகத்தான் எல்லாமே நடந்திருக்கிறது. தர்க்கபூர்வமான புள்ளிகளைக் கொண்டு எழுதப்படும் அரசியல் கட்டுரைகளைப் படிக்கும்போது அதனால்தான் எனக்கு சிரிப்பு வரும். ஏனெனில் எந்த விஷயமும் அத்தனை தர்க்கபூர்வமாய் நிகழ்வதில்லை. நெருக்கடியான நேரத்தில் இதற்கு எந்த வேலையும் இல்லை. சமாதான காலத்தில் இந்தக் கட்டுரைகளை இளைப்பாறுதலுக்காகப் படிக்கலாம். இங்கே முடிவுகள் எல்லாமே உணர்ச்சிகரமாகவே எடுக்கப்படுகின்றன. அதனால்தான் மனித குலத்தின் மேல் அவநம்பிக்கை வந்துவிடுகிறது. ஐம்பது வயதுக்கு மேல் ஆகிற எழுத்தாளர்கள் விவேகத்தை நோக்கி, அறத்தை நோக்கி, கடவுளை நோக்கி இந்தப் புள்ளியில்தான் போகிறான்.
ஆழமாக எழுதக்கூடிய எந்த எழுத்தாளனும் எதிர்மறையான இடத்துக்குத்தான் போவான். எனது இளம்வயதில் இருந்த நம்பிக்கை அனைத்தும் என்னைக் கைவிட்ட பிறகு நான் அறம் வாயிலாகத்தான் என்னை மீட்டுக்கொண்டேன். இல்லையெனில் தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன்.
[தெருக்கூத்து]
மகாபாரதத்தில் உள்ள இடைவெளிகளை நீங்கள் பெரிய புனைவாக மாற்றுகிறீர்கள்…அப்படியானால் அது உங்களுடைய கதையாக மாறிவிடுகிறது இல்லையா?
நல்லாப்பிள்ளை எழுதும்போது அது நல்லாப்பிள்ளை பாரதம். நான் எழுதும்போது அது ஜெயமோகனுடைய பாரதம். கிருஷ்ண துவைபாய வியாசன் அச்சில் அறுநூறு, 700 பக்கங்கள் வரக்கூடிய கதையாக மகாபாரதத்தை மிகச் சிறியதாகத்தான் எழுதியிருக்கிறான். அதன் பெயர் ஜெய. பாண்டவர்களின் வெற்றியைப் பாடக்கூடிய பிரதி அது. அவரது நான்கு மாணவர்கள் அந்தப் பிரதியை மேம்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் வம்சாவளியைப் பற்றிய கதைகளைச் சேர்க்கிறார்கள். முன்னால் ஜனமேஜயன் கதையைச் சேர்க்கிறார்கள். சூதர்களின் கதைகளை ஆங்காங்கே சேர்க்கிறார்கள். இதுதான் மகாபாரதம்.
இது உருவாகி ஆயிரம் வருடங்களில் நிறைய பேர் தத்தமது கதைகளைச் சேர்த்துக்கொண்டே போய் அது விரிவடைகிறது. எல்லா ராஜாக்களின் வம்சாவளிக் கதைகளாகவும் ஆகிறது. ஒரு கட்டத்தில் அது இந்தியாவின் கதையாக மாறுகிறது. பல்வேறு துண்டு துண்டுக் கதைகளாக இருக்கும் மகாபாரதத்தை ஒற்றைப் பெருங்கதையாக நான் மாற்றுகிறேன். ஒருமையைக் கொண்டுவர முயற்சிக்கிறேன்.
கர்ணனையும் சூதன் மகன் என்று சொல்கிறார்கள்.. பாணர்களையும் சூதர்களாகச் சொல்கிறார்கள்..
சூதர்களின் தொழில் மூன்று. குதிரை ஓட்டுதல், சமையல், பாட்டுகளைப் பாடி அலைதல் மூன்றும். குதிரை ஓட்டுதல் கீழான தொழிலாக அக்காலத்தில் கருதப்பட்டது. அதனால்தான் கர்ணன் அவமானப்படுத்தப்படுகிறான். பாணர்களாக இருந்த சூதர்களுக்குப் பெரும் மரியாதை இருந்தது. அவர்கள் சுதந்திரமான வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்கள். ஒரு அரசனைப் பாணன் ஒருவன் பாடவில்லையெனில் அவன் அழிந்தான். அவ்வளவு பெரிய அதிகாரத்தோடு இருந்துள்ளனர்.
கர்ணன் இந்திய எழுத்தாளர்களை ஈர்த்துள்ளான் என்று சொன்னீர்கள்..ஆனால் அர்ஜுனன் ஏன் அவர்களை ஈர்க்கவில்லை?
ஒரு நவீனத்துவ எழுத்தாளனுக்கு கர்ணனைப் பிடிக்கும். ஆனால் பின் நவீனத்துவ எழுத்தாளனுக்கு அர்ஜுனன் கதாபாத்திரம் தான் வசீகரமாக இருக்கும். அர்ஜுனன் பொறுப்பில்லாத ஆள். பெண்களை அடைகிறான். விட்டு விட்டுப் போய்விடுகிறான். போருக்காகப் போர் செய்கிறான். அதிகாரத்துக்காக அல்ல. போரில் அர்த்தமின்மையையும் உணர்கிறான். மகாபாரதம் கதையில் தொடர்ந்து அலைந்துகொண்டிருப்பவன் அர்ஜுனன்.
கர்ணனைப் பொறுத்தவரை ஒரு கொடையாளி. எல்லாராலும் அவமதிக்கப்படுபவன். அங்கே மையம் உருவாகிவிடுகிறது. அர்ஜுனனுக்கு அந்த மையம் இல்லை. அதனால் என்னைப் போன்ற எழுத்தாளர்களை அவன் ஈர்க்கிறான்.
உதாரணமாக ஏகலைவன் கதையையே எடுத்துக்கொள்வோம். ஏகலைவன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் என்பது மட்டும்தான் நமக்குச் செய்தி. ஏன் அவனிடம் கட்டை விரல் கேட்கப்பட்டதென்றால் அவன் தளபதியாக அங்கம் வகிக்கும் மகதநாடு ஹஸ்தினாபுரத்துக்கு எதிரி நாடு. கட்டை விரலை வாங்கிய பிறகு என்ன செய்தான் ஏகலைவன்? மகதத்தின் சிற்றரசனாகப் போய் மதுராவை அழித்து கிருஷ்ணனை ஓட ஓட விரட்டியவன் ஏகலைவன். கிருஷ்ணனின் அறிமுகமே அவர் உதவி கேட்டு வரும்போதுதான் நடக்கிறது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணன் தன் கையால் கொல்லும் ஒரே ஒரு கதாபாத்திரம் ஏகலைவன்தான். அவன் காட்டுவாசியின் மகன். அவனது தந்தையின் பெயர் ஹிரண்ய தனுசு. அசுரம் என்று மகாபாரதத்தில் சொல்லக்கூடிய பகுதிதான் இப்போது வடநாட்டில் பஸ்தராக இருக்கிறது. அங்கே இருக்கும் பழங்குடிகள் இன்றும் ஏகலைவ வம்சம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான்கு விரல்களைப் பயன்படுத்தி இன்றைக்கும் அம்புவிடுகிறார்கள். ஏகலைவ சேனா என்ற பெயரில் மத்திய அரசோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். பழைய வரலாறா, இது புதிய வரலாறா என்று குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. பழைய வரலாற்றின் உருவகங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் உருவகங்கள் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
உருவகங்கள் எல்லாமே ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் இருக்கக்கூடிய நினைவுப் படிமங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றன. ஒரு மரபு ஒட்டுமொத்தமாக இலக்கியம் வழியாக உருவாக்குவதே உருவகங்களைத்தான். ஏகலைவன் என்பவன் ஒரு உருவகம். கண்ணகியின் சிலம்பு ஒரு உருவகம். சீதையின் கணையாழி ஒரு உருவகம். அனுமனின் வால் ஒரு உருவகம். ஜப்பானில் மூங்கில் இலை.
[காமிக்ஸ்]
உலக அளவில் எழுதப்பட்ட காவியங்களில் மகாபாரதம் தலையாயதாக இருப்பதன் காரணம் என்ன?
காம, குரோத,மோகம் எந்தப் படைப்பில் உச்சபட்சமாகச் செயல்படுகிறதோ அவைதான் பெரும் காப்பியங்களாக மதிக்கப்படுகின்றன. இன்னொரு வகையில் சொல்லப்போனால் மனிதனின் எதிர்மறை அம்சங்கள் தீவிரமாக வெளிப்படும் படைப்புகளைக் காவியங்களாகச் சொல்கிறார்கள். இலியட், ஒடிசி, மகாபாரதம் போன்ற படைப்புகளில்தான் இந்தப் பண்பு அதிகமாக இருக்கிறது. மகாபாரதத்தைப் பொருத்தவரை பாரத யுத்தத்தில் குரூரமாகக் கொன்று குவிக்கிறார்கள். இந்தப் போர் நியாயம்தான் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக அதற்கான கதைகள் பின்னால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் சினிமாவுக்குக் கதை யோசிப்பது போல. அதி குரூரமான உச்சகட்டக் காட்சிக்கு முன்காட்சிகள் யோசிப்பதைப் போல.
இந்தியா போன்ற நாடுகளின் படைப்புகள் மேற்கே அறிமுகமாகும்போது அங்குள்ள மக்கள் அடையாளம் காண்பதற்கேற்ற வகையில் மகாபாரதம் இருந்தது. இரண்டு உலக யுத்தங்களைப் பார்த்தபிறகு, அவர்கள் மகாபாரதத்தை வேறு விதமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். இரண்டு மகா யுத்தங்களின் அழிவால் அதிர்ச்சியடைந்த அவர்களுக்கு உலகத்தில் எப்போதும் போர்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன என்பதை பாரதப் போர்க் காட்சிகள் நினைவூட்டின. அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்கள் ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டியது.
[புத்தகம்]
இப்போதைய சூழ்நிலையில் மகாபாரதத்தைத் திரும்ப எழுத வேண்டிய அவசியம் என்ன?
நான் எழுதிய மகாபாரதக் கதைக்குள்ளேயே ஒரு வரி வரும். அதில் ஒரு பழங்குடி சொல்வார். நமது மகாபலி சக்கரவர்த்தி மண்ணுக்கடியில் ஒரு சேனைக்கிழங்காக இருக்கிறார் என்று சொல்வார். நமது பண்பாட்டுக்கடியில் ஒற்றைக் கிழங்காக மகாபாரதம் இருக்கிறது. இன்று உள்ள அரசியல் மகாபாரதத்தில் இருந்து முளைத்ததுதான். நாம் அத்தனை பேருக்கும் தெரிந்த கதையாகவும், நமது விழுமியங்களை நிர்ணயிப்பதாகவும் மகாபாரதம்தான் இருக்கிறது.
இந்த நூற்றாண்டில் மகாபாரதத்தைத் திரும்பச் சொல்வதன் மூலம் அந்த மரபை மறுகதையாக்கம் செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை இலக்கியமாக ஆக்கிய மண்டோ வரலாற்றாசிரியனைவிட மேலாக மதிக்கப்படுகிறான். எழுத்தாளன் வரலாற்றை உருவாக்குபவன். நான் வெண்முரசு நாவல் வழியாக மொத்த இந்தியக் கலாசாரத்தையும், வரலாற்றையும் திரும்பி எழுத நினைக்கிறேன். மகாபாரதத்தைத் திருப்பி எழுதுவது வழியாக இந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்.
சமகால யதார்த்தத்தை எழுதுவதில் விருப்பத்தை இழந்துவிட்டீர்களா?
எனக்கு ஆர்வம் இல்லை. ஐம்பது வயதுக்கு மேல் அன்றாட மனிதர்களை எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது. அப்படியான கதைகளை எனக்கு தினசரி ஐந்து எழுத முடியும். எனக்கு வரலாற்று உருவகங்கள் மீதுதான் ஈர்ப்பு. ஏகலைவனின் கட்டை விரல் எனக்கு மிகப் பெரிய உருவகமாகத் தெரிகிறது. வண்ணக்கடல் நாவலில் பார்த்தீர்கள் எனில் இந்தியாவின் தத்துவ வரிசையையே திரும்பிச் சொல்லியிருக்கிறேன். சாங்கியத்தில் ஆரம்பித்து, சைவம், தார்க்கிகம், வைசேஷிகம், சாக்தம் அப்புறம் வேதாந்தம் என்று சுருக்கிச் சொல்லியிருக்கிறேன். இது நேரடித் தத்துவம் கிடையாது. அதைக் கவித்துவமாகச் சொல்வது எனக்கு சவால்.
பகுத்தறிவு இயக்கம், நவீனத்துவச் சிந்தனைகளின் தாக்கம் சார்ந்து மரபை எதிர்மறையாகப் பார்க்கும் ஒரு போக்கு சென்ற நூற்றாண்டில் இருந்தது. 90களுக்குப் பிறகு மரபையும், இந்திய ஆன்மிக மரபையும் சாதகமாகப் பார்க்கும் அவசியத்தை உங்கள் படைப்புகள் வழியாக முன்வைக்கத் தொடங்கினீர்கள்… ஆனால் வரலாற்று நினைவுகளைத் திரும்ப மறுநிர்மாணம் செய்வதன் மூலம் பழைய பகைமைகளை ஒரு தரப்பினர் புதுப்பிக்க சாத்தியம் இருக்கிறதே?
ஒன்றை நிராகரிப்பதற்கு அதைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டும். மரபை வழிபடுவதையோ, மரபைத் திரும்ப பின்பற்றுவதையோ நான் ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. மரபை விமர்சனபூர்வமாக இக்காலகட்டத்தில் பரிசீலனை செய்வது குறித்துதான் பேசுகிறேன். மரபு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மகாபாரதத்தில் சொல்லப்பட்ட நகரங்கள் அனைத்தும் இன்றும் வெவ்வேறு பெயர்களில் இருக்கத்தான் செய்கின்றன. அப்போதைய மோதல்கள் இன்னும் அப்படியே தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மரபு இன்னும் நமது வாழ்க்கையை நிர்ணயித்துக்கொண்டுதான் இருக்கிறது. மரபை மீட்டெடுக்கும் போக்கு இங்கே இருக்கத்தான் செய்கிறது. சோவின் மகாபாரதம் முழுமையாக வைதீக அம்சங்களைக் கொண்டது. எனது மகாபாரதம் அதற்கு நேர் எதிரானது. எனது மகாபாரதத்தை யாரும் தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாது.
எனது படைப்புகளைப் பொருத்தவரை அதிகபட்சமாக தர்க்க முறையைத்தான் முதலில் உருவாக்குகிறேன். அந்த தர்க்க முறையைப் பின்பற்றுபவர்கள் எளிமையான அரசியல் நடவடிக்கைகளுக்குப் போக முடியாது.
[பீட்டர் புரூக்ஸ் நாடகம்]
தமிழ்நாட்டு வாசகர்களிடையே மரபை நோக்கிய பரிசீலனைக்கு உங்களது விஷ்ணுபுரம் நாவல் பெரிய பங்களிப்பு இல்லையா?
விஷ்ணுபுரம் வந்தபோது புதிதாக வாசகர்கள் படித்தனர். ஒவ்வொரு ஊரிலும் மக்களின் தலைமேலே பெரிய கோவிலும் சாமிகளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதன்மீது அவர்களது பார்வையைத் திருப்பியது எனது நாவல். ஒரு ஊரிலிருந்து தையல்காரர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இத்தனை சாமிகள் கோபுரத்தில் இருந்து பார்க்கும் இந்த ஊரில் இனி எப்படி வாழ முடியும் என்று கேட்டிருந்தார்.
[தொலைக்காட்சித்திதொடர்]
மகாபாரதத்தை ஒட்டுமொத்தமாகச் சொல்வது என்பது பெரிய சவால் இல்லையா?
ஆம். அதற்காக இருபது வருஷங்களுக்கு மேலா ஆராய்ச்சி செய்திருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் தரவுகள்தான். எழுத அரம்பித்தபோது மகாபாரதம் என்னுடைய அந்தரங்க வாழ்க்கையாக மாறிவிடுகிறது. எனக்குத் தெரிந்த அத்தை, சித்தி எல்லாரும் மகாபாரதக் கதாபாத்திரங்களாக ஆவதைப் பார்க்கமுடிகிறது. ஒருவகையில் நான் பார்த்த வாழ்க்கையைத்தான் மகாபாரதமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.