பசும்பொன் – கடிதம்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் பசும்பொன் பயணம் பற்றிய நிகழ்வுகளை கட்டுரையாய் படித்தேன்.  ஒரு இலக்கியவாதியாக, ஒரு பயணாளியாக தங்கள்  கருத்துக்கள் மிகவும் சரியாகத் தோன்றியது.  கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அங்கு சென்று வருகிறேன். இந்த தமிழ் மண்ணின் வீரிய மைந்தனைப் பற்றிய தேடுதலோடு அவரைப் பற்றிய நூல்களை,  செய்திகளை கடந்த பதினோரு ஆண்டுகளாக சேகரித்தும் வருகிறேன்.  சாதி பார்ப்பது அரசியலுக்கும் இல்லை ஆன்மீகத்திற்கும் இல்லை என்ற தேசியமும் தெய்வீகமும் பேசி அதை செயலில் காட்டிய மிகப் பெரிய தேசியவாதி அவர்.  இரண்டையும் சரியாகப் பொருத்தி அதில் வெற்றியும் பெற்றவர். வெறும் அரசியல் பிழைப்புவாதிகளால் ஜாதிச் சாயம்  பூசப்பட்டார்.  இருப்பினும் வேறெவருக்கும் இல்லாத தனித்தன்மையுடன் அனைவராலும், இலட்சக்கணக்கில் மக்களாலும் அஞ்சலி செலுத்தப்படுவது இன்று  இவருக்கு மட்டுமே.  ஜாதி வோட்டுக்கு எற  சொல்லப்படுவதெல்லாம் வெறும் பேச்சு மட்டும் தான்.  யார் வந்தாலும் வராவிட்டாலும் காசு கிடைத்தால் தான் ஓட்டு என்பது வெளிப்படை….

உங்களின்  சில புரிதல்களில் ‘‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்’ என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது.’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.  தேசியம் வெறும் குப்பை, தனி தமிழ் என்பதே எங்கள் குறிக்கோள் என்று ‘இன்று’ வரை புலம்பும் அரசியல் கூத்தாடிகளுக்கும், அறிவிற்கும் பகுத்தறிவிற்கும் இவர்கள் தான் மொத்தக் குத்தகை எடுத்தது போல நாத்திகம் பேசும் நேற்று முளைத்த காளான் குடைகளின் கீழ் இருப்போர்க்கும், ஏக  போக விளம்பரமும் பரப்புரையும் உள்ள இன்றைய தமிழத்தில், அதன் ஆட்சியின் தலைமை பொறுப்பினை இழந்த இக்குடியினர் எவ்வாறு இதை (புரிந்திருப்பினும்) வெளிக்கொணர்வர்(!!!). நீங்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும்படி அவர்கள் செயல்புரிவதும் உண்மையில் ஐயமே.

மேலும் ‘இன்றும் தமிழகக் காடுகளைக் காப்பது சீமைக்கருவேலமே’ என்று சொல்லி இருந்தீர்கள். உங்களுக்கு மேலும் ஒரு உண்மை தெரிந்திருக்க வேண்டும். அது என்னவென்றால் இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இக்காடுகள் அதிகம் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான். அருகிலுள்ள விருது(பட்டி)நகரில் இது அதிகமில்லை. மேலும் நீரின்றி விளையும் மரம் இது, காற்றின் ஈரப்பதம் கூட இதற்குப் போதும் தளைப்பதற்கு வாழை போல்(!?) பெருகுவதற்கு, இது இருக்கும் இடத்தில வேறெதுவும் விளையாது, விளைய விடாது. காலம் காலமாய் வீரத்தை பறைசாற்றி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, தமிழத்தில் மிகப் பெரிய கண்மாய்களையும், மடைகளையும், புதிய நீர் வழிகளையும் ஏற்படுத்தி விவசாயம் செய்த இன்றைய முகவை பற்றி அங்கே இருப்போர்க்கும், சென்று ஆய்வுக் கண் கொண்டு நுகர்வோர்க்கும் மட்டுமே புரியும். ஏனையோர்க்கு வெறும் வாய�   வழ
ிப் பேச்சு தான் முக்கிய கூறு, வேறு திக்கில்லை.

நான் முகவை மாவட்டத்தை சேர்ந்தவன்.  இருபது வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் வீட்டில் அறுபது மாடுகள் இரண்டு மாட்டுவண்டி ஜோடிகள் என ஒரு பெரிய மந்தைக் கூட்டமே இருந்தது. ஆனால் இன்று மருந்துக்கு ஒரே ஒரு பசு மாடு மட்டும் இருக்கிது..  இதற்கு மேய்ச்சல் நிலம் அழிந்து போனதும் அதற்கு இக்கருவேல் மரங்கள் பெருகியதும் தான் மிக முக்கியக் காரணம். திட்டமிடப்பட்ட அரசியல் காரணங்களும் பல உள்ளன.  இராமேஸ்வரத்திலிருந்து இராமநாதபுரம் கீழக்கரை வேம்பார் வழியாக குறுக்கு சாலை மற்றும் தூத்துக்குடி வழியாக செல்ல வேண்டிய இருப்புப்பாதை தடை செய்யப்பட்டு, எவ்வித அடிப்படை பொதுப்பயன் இன்றி மானாமதுரையில் இருந்து அருப்புகோட்டை சென்று அங்கிருந்து விருதுநகருக்கு இருப்புப்பாதை போடப்பட்டது. தமிழத்தில் எல்லா ஊர்களிலும் தீண்டாமை அழிந்து போய் முதுகுளத்தூரில் மட்டும் அது கும்மி அடிதது
ஆடுவது போல அங்கு மட்டும் (கவனிக்க: அங்கு மட்டும்) மண்ணின் மைந்தர்களாம் மறவர்களுக்கும் பள்ளர்,பறையர்களுக்கும் சண்டை மூட்டப்பட்டது.  இன்றும் வெளிநாட்டிற்கு செல்வோர் அதிகம் இம்மாவட்டத்தில் தான். வேறு மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி செல்வதிலும் இம்மாவட்டதினர் தான் முதலிடம். உயர்ந்தது  தாளும் என்பதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு இன்றைய முகவை மாவட்டம் என்று சொல்வது சாலப் பொருத்தமாகும்.

மேலும் ‘அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை’ என்று குறிப்பிட்டுருந்தீர்கள்.  நீங்கள் நினைவ்டத்தின் உள்ளே செல்லவில்லை என்று நினைக்கிறேன். அங்கு தமிழக அரசின் சார்பில் பசும்பொன் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் புகைப்படக் கண்காட்சி உள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் அய்யாவினை பற்றிய குறைந்தது மூன்று நூல்களாவது அங்கே எனக்கு கிடைக்கும். இம்முறை சுமார் அறுபது தலைப்புகளில் பசும்பொன் அய்யா மற்றும் முக்குலத்தோரின் விடுதலைப் போருக்கான தலைமை பங்களிப்பு பற்றிய நூல்களை விற்பனைக்கு நாங்கள் எடுத்து சென்றோம். குறைந்த நேரத்ல் சில ஆயிரத்திற்கு மேல் நூல்கள் விற்பனை ஆயிற்று.  இத்தனைக்கும் சில நூல்கள் எல்லாம் நானூறு ஐநூறு ரூபாய் விலை உள்ளவை.

எல்லாவற்றிக்கும் மேல் உங்களின் பார்வையிலிருந்து நாங்கள் தெரிந்து கொள்வது இம்முயற்சிகள் பெரிய அளவில் இன்னும் சிறப்பாக செய்யப் படவேண்டும் என்பதே.

நல்லவை நடக்கும் நன்றாய் என்றைக்கும்.

உங்கள் பயணக் கட்டுரையின் தெளிவு எங்களுக்கு பயன்படும். அடுத்த பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்லவை நடக்க எங்களுக்கு மேலும் உணர்வூட்டும். நன்றிகள் பல உங்களுக்கு. இலக்கியவாதிகளை போற்றும் தமிழ் முறைப்படி உங்களை வரவேற்ப்பதிலும், வணங்குவதிலும் வாழ்த்துவதிலும் பெருமிதம் கொள்கிறோம்.

தனியன் பாண்டியன்.

அன்புள்ள பாண்டியன்

தங்கள் கடிதத்துக்கு நன்றி. பொதுவாக ஒரு சமூகம் தன்னைப்பற்றி என்ன மனப்பிம்பம் கொண்டிருக்கிறது என்பது அதன் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பது என் எண்ணம். கல்வி சார்ந்து வணிகம் சார்ந்து சுய அடையாளம் கொண்ட சாதிகளுக்குரிய யுகம் இது. வீரம் என்றபேரில்  முன்வைக்கப்படும் வன்முறை இக்காலத்தில் காலாவதியான ஒன்று. காலில் இரும்புக்குண்டுபோலக் கனப்பது. நவீன இந்தியாவில் டாக்கூர் ,நாயர்,ரெட்டி போல அத்தகைய பின்புலம் கொண்டிருந்த பலசாதிகள் அவ்வடையாளாத்தை உதறியதன் மூலமே அடுத்த கட்டத்துக்கு வந்தன. இன்று தேவர்களை வீரம் கொண்டவர்கள் என்று சொல்லிச் சொல்லி உசுப்பேற்றும் அரசியல் கட்சிகள் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அச்சாதியின் தலைமையை அவர்களில் உள்ள சான்றோர்கள், அறிஞர்களிடமிருந்து கேடிகள் கைகளுக்கு மாற்றுகிறார்கள். இந்தநிலைக்கு ஒரு மாற்று இன்று மிக அவசியமானது. இதையே நீங்களும் சொல்கிறீர்கள். மகிழ்ச்சி

ஜெ

முந்தைய கட்டுரைமலை ஆசியா – 1
அடுத்த கட்டுரைஇளையராஜா மீதான விமர்சனங்கள்..