‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 17

பகுதி நான்கு : அனல்விதை – 1

நிமித்திகரான பத்ரர் அரண்மனைக்குச் சென்றபோது துருபதனின் அறையில் மருத்துவர் கிரீஷ்மர் இருப்பதாக சேவகன் சொன்னான். அவர் பெருமூச்சுடன் கூடத்திலேயே அமர்ந்துகொண்டார். தலைமைச்சேவகன் அஜன் வந்து வணங்கி நின்றான். அவர் விழிதூக்கியதும் “அனைத்தும் அமைந்துவிட்டன நிமித்திகரே” என்றான். பத்ரர் தலையை மெல்ல அசைத்தார். “அரசர் பயணத்துக்குரிய நிலையில் இருக்கிறாரா என்று பார்க்கவேண்டும் என்றார் மருத்துவர்” என்றான் அஜன்.

பத்ரரால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. துருபதன் உடல்நிலை நகரமே அறிந்த செய்தி. ஆனால் வைத்தியர்கள் ஒவ்வொருநாளும் அச்செய்தியை அவர்களே சொல்லவேண்டுமென நினைக்கிறார்கள். அனைத்து விடைகளும் இறந்தகாலத்தில் உள்ளன என்ற பாவனை நிமித்திகர்களுக்கு. அனைத்து விடைகளும் உடலிலேயே உள்ளன என்பது மருத்துவர்களின் பாவனை. நிமித்தியமும் மருத்துவமும் ஞானங்கள். பாவனைகள் வழியாகவே அவற்றை தொழில்களாக ஆக்கமுடியும்.

கிரீஷ்மர் வெளியே வந்தார். கவலை தோய்ந்த முகத்துடன் பத்ரரை நோக்கி வணங்கி “மன்னர் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் உள்ளது. அவரால் நான்குநாழிகை நேரம் வரை அமர்ந்திருக்கமுடியும்” என்றார். பத்ரர் தலையசைத்தார். “அவருடன் எப்போதும் ஒரு மருத்துவரும் இருந்தாகவேண்டும். இரவில் அகிபீனா கொடுப்பதை மருத்துவர்தான் செய்தாகவேண்டும்” என்றார் கிரீஷ்மர். “ஆம், அதற்கான முறைமைகளை செய்துவிட்டேன்” என்றார் பத்ரர்.

“இந்தப்பயணம் இன்றியமையாததா நிமித்திகரே?” என்றார் கிரீஷ்மர். ”நான் சில புதியமூலிகைகளை தென்னகத்தில் இருந்து வரவழைத்திருக்கிறேன். தொடர்ந்த மருத்துவத்தில் விரைவிலேயே மன்னரை குணப்படுத்திவிடமுடியுமென நினைக்கிறேன். நீங்கள் சற்று பொறுக்கலாம்.” பத்ரர் “ஆம், தங்கள் மருத்துவம்தான் மன்னரை மீட்கவேண்டும் கிரீஷ்மரே. ஆனால் துர்வாசமுனிவர் பாஞ்சாலத்தின் ஐங்குலங்களுக்கும் மூத்த முதல்வர். அவர் குளிர்காலம் முடிந்ததும் மலையேறிச் சென்றுவிடுவார். அதற்குள் ரிஷ்யசிருங்க மலையடிவாரம் சென்று அவரைச் சந்திக்கவேண்டுமென்பதே என் திட்டம்” என்றார். “அவ்வண்ணமே ஆகட்டும்” என தலைவணங்கி கிரீஷ்மர் நடந்தார்.

பத்ரர் இடைநாழியில் நடந்து துருபதனின் படுக்கை அறைக்குள் சென்றார். காவலன் வணங்கி கதவைத்திறக்க மூலிகைவாசனை அவரை தாக்கியது. வாசனையை தூசிபோல ஒரு பருப்பொருளாகவே அறியமுடிந்தது. மரக்கூரை கொண்ட விரிந்த அறைக்குள் மூலிகைகள் புகைந்த தூபக்கலம் ஓரமாக இருந்தது. அறைமுழுக்க பல்வேறு வேர்களும் வாடிய செடிகளும் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. சாளரங்கள் நன்றாக மூடப்பட்டு மெல்லிய இருள் நிறைந்திருந்தது.

பத்ரர் சாளரத்தை திறந்தார். “சாளரங்களை திறக்கவேண்டாம், மூலிகைக்காற்று அவருக்குள் நிறையவேண்டும் என்றார் மருத்துவர்” என்றான் காவலன். “அவரது மூலிகைக்காற்றைவிட உயிர்நிறைந்தது வெளிக்காற்று” என்றார் பத்ரர். ஒளி அறைக்குள் நிறைந்தது. புகையை வெளிக்காற்று அள்ளி திறந்த கதவின் வழியாக வெளியே கொண்டுசென்றது. மஞ்சத்தில் சுருண்டு படுத்து வாய்திறந்து துயின்ற துருபதனை பத்ரர் பார்த்தார். ஒளிபட்டு அவர் விழிகள் சுருங்கி அதிர்ந்தன. முனகியபடி திரும்பிப்படுத்தார். பத்ரர் மார்பின்மேல் கட்டிய கைகளுடன் தன் சதுரங்கத்தோழனான மன்னனை நோக்கியபடி நின்றார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

ஆறுமாதங்களில் துருபதன் தொடர்ந்து உடல்மெலிந்து ஒடுங்கி குறுகி சிறுவனைப்போல ஆகிவிட்டிருந்தார். கன்னங்கள் குழிவிழுந்து பற்களுடன் வாய் தனியாக முன்னகர்ந்திருந்தது. கண்கள் சேற்றில் குளம்புகள் பதிந்த குழிக்குள் நீர்தேங்கியதுபோல தெரியும். ஒருகணம்கூட நில்லாமல் விழிகள் தத்தளிக்கும். கைவிரல்கள் எப்போதும் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டு காற்றை பின்னிக்கொண்டே இருக்கும். கண்ணுக்குத்தெரியாத ஏதோ சரடை நெய்வதுபோல. உதடுகள் ஒலியற்ற சொல் ஒன்றை உச்சரித்துக்கொண்டே இருக்கும். உதடுகளைச்சுற்றி அழுத்தமான கோடுகள் விழுந்திருந்தன. முடி முழுமையாகவே நரைத்து கலைந்து தோள்களில் விழுந்து காற்றிலாடியது.

அவர் துயில்கையிலும் மூடிய இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருக்கும். துயிலிலும் விரல்கள் பின்னி விலகிக்கொண்டிருக்கும். உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும். துயில் கலைந்து அமையும் இடைவெளியில் புரண்டுபடுக்கும்போது வெளிப்படும் அந்த மிகமெல்லிய முனகலைக்கேட்டு அவர் நெஞ்சைப்பொத்திக்கொண்டு கண்ணீர் மல்கியிருக்கிறார். எங்கிருந்து வருகிறது அந்த வலிமிக்க ஒலி என எண்ணிக்கொள்வார். அவரது உணர்ச்சியற்ற விழிகளை நோக்கும்போது அவற்றின் ஒலி அது என்று தோன்றும்.

துருபதன் அனேகமாக உணவுண்பதே இல்லை. ஆகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் அவருக்கு பால்கஞ்சியை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமென பத்ரர் சொல்லியிருந்தார். முதலிரு மிடறுகளுக்கு அப்பால் அவர் அருந்துவதில்லை. சிலசமயம் கையில் கோப்பையுடன் நாழிகைக்கணக்கில் அசையாது அமர்ந்திருப்பார். உணவுண்டதையோ உண்ணாததையோ அவர் அறிவதில்லை. கடும் காய்ச்சல் போல அவரது உதடுகள் உலர்ந்து கருகியிருந்தன. தொண்டை உலர்ந்திருப்பதுபோல எச்சிலை விழுங்கிக்கொண்டிருப்பார். மெலிந்து அடுக்கடுக்காக ஆகிவிட்டிருந்த கழுத்தில் குரல்வளை ஏறியமையும்.

எப்போதாவது அவர் உணவு விக்கியதுபோல ஒலியெழுப்பி மூச்சுத்திணறி கைகால்கள் உதற பக்கவாட்டில் விழுந்துவிடுவார். இருகைகளும் இழுத்து அசைய பாதங்கள் இழுபட்டு விரைத்து அதிரும். எச்சில்நுரை கடைவாயில் வழியும். சற்று நேரம் கழித்து மெல்ல தசையின் இறுக்கங்கள் அவிழ உடல் தொய்ந்து கைகள் இருபக்கங்களிலும் மல்லாந்து சரியும். மூச்சு சீரானதும் கண்களைத் திறந்து செவ்விழிகளால் நோக்குகையில் அவர் அக்கணத்தில் எங்கிருந்தோ முற்றிலும் அறியாத அவ்வுலகில் வந்து விழுந்திருப்பதாகத் தோன்றும்.

அவர் விழுந்ததுமே பத்ரர் கையில் வைத்திருக்கும் தோல்பட்டையை அவர் வாய்க்குள் செலுத்தி பற்களுக்கிடையே வைப்பார். இருமுறை உதட்டைக்கடித்து அதில் வழிந்த குருதியை மூச்சாக உறிஞ்சி உள்ளிழுத்து அது நெஞ்சில் சிக்கி மூச்சடைத்துப்போயிருக்கிறார். வலிப்புவந்து துடிப்பவரின் தலையை மேலே ஏற்றிப்பிடித்தபடி பத்ரர் “தெய்வங்களே தேவர்களே” என்று கூவிக்கொண்டிருப்பார். பின்னர் கண்விழித்து பேதையாக கிடப்பவர் அக்னிவேசரிடமிருந்து அம்புகளைப்பெற்றுக்கொண்ட பெருவீரன் அல்ல என்று தோன்றும். மழையில் கைவிடப்பட்டு மானுடரின் வாசம் தேடி தள்ளாடி நடந்துசெல்லும் கண் திறக்காத நாய்க்குட்டி.

துரோணரின் முன்னாலிருந்து தளபதிகளால் தூக்கப்பட்டு ரதத்தில் ஏறுகையில் துருபதன் விம்மியழுதுகொண்டிருந்தார். “என்னைக் கொன்றுவிடுங்கள்… இது என் ஆணை! என்னைக் கொல்லுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். தளபதிகள் கண்களில் நீர் வழிய ஒரு சொல்லும் சொல்லாமல் ரதத்தில் ஏற்றினர். ரதப்படிகளில் அவரால் ஏறமுடியவில்லை. கைகளை ஊன்றி தொற்றி ஏறி ரதத்தட்டில் படுத்துவிட்டார். அவரைத் தூக்கி அமரச்செய்து தோல்கம்பளத்தால் போர்த்தியபின் ரதம் செல்ல ஆணையிட்டான் தளபதி ரிஷபன்.

ரதம் காம்பில்ய நகரை அடைவதுவரை அந்தப்போர்வைக்குள் குவிந்து சுருண்டு கிடந்தார் துருபதன். கடும் வலி கொண்ட நோயாளி போல மெல்லிய முனகலுடன் அழுதுகொண்டே வந்தார். அவ்வப்போது தாளமுடியாத விசும்பலோ கேவலோ எழுந்தபோது ரிஷபன் போர்வையை சரிசெய்யும் பாவனையில் அவரைத் தொட்டான். இருபக்கம் ஓடிக்கூடி நின்ற குடிகள் கொடியுடன் ரதம் திரும்புவதைக்கண்டு கூவி அழுதபடியும் சினத்துடன் வாழ்த்தொலி எழுப்பியபடியும் பின்னால் ஓடிவந்தனர். புல்மேட்டில் ரதம் எழுந்ததைக் கண்டதும் பாஞ்சால வீரகள் படைக்கலங்களை தூக்கி ஆட்டியபடி பேரொலி எழுப்பி மன்னரை வாழ்த்தினர். சிலர் தாளமுடியாமல் அணிகளை விட்டுவிட்டு ஓடி அருகணைந்தனர்.

காம்பில்யத்தின் கோட்டைவாயிலிலேயே காவல்படைகளும் குடிமக்களும் செய்தியறிந்து கூடி நின்றனர். அலையோசை போல முழங்கி கொந்தளித்த அவர்களை படைவீரர் வேல்களால் வேலியமைத்து தள்ளித்தள்ளி விலக்க நடுவே ஊர்ந்து சென்ற ரதம் அரண்மனையை அடைந்ததும் நின்றது. அதிலிருந்து போர்வையுடன் துருபதனை தூக்கி கொண்டுசென்றனர். அரண்மனைப்பெண்கள் அலறியழுதபடி பின்னால் ஓடிவர ரிஷபன் “பின்னால் எவரும் வரலாகாது… மன்னரைப்பார்க்க எவருக்கும் அனுமதி இல்லை…” என்று கூவினான்.

படுக்கையறைக்கு துருபதனை தூக்கிக் கொண்டுசென்று மஞ்சத்தில் படுக்கவைத்தார்கள். அவர் தன்னுணர்வு கொண்டு நீர் வழியும் சிவந்த கண்களால் ஏறிட்டு நோக்கி “எங்கே? என் மைந்தர் எங்கே?” என்றார். “எவரும் உயிர்நீக்கவில்லை அரசே” என்றான் ரிஷபன். “ஆதுரசாலைக்கு கொண்டுசெல்லுங்கள். சீழ்கட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அமைதிகொண்டு கண்களை மூடிய கணமே அனைத்தையும் நினைவுகூர்ந்து அதிர்ந்து எழுந்தமர்ந்தார். கைகால்கள் உதற அவருக்கு முதல்முறையாக வலிப்பு வந்து உடல் இழுத்துக்கொண்டது.

ரிஷபன் கிரீஷ்மரை வரச்சொன்னான். கிரீஷ்மர் வந்து நாடிபற்றி நோக்கியதுமே அவருக்கு அகிபீனா கொடுக்கச் சொன்னார். அதற்குள் பத்ரர் வந்துவிட்டார். “நரம்புகள் இறுகி விட்டன. சுதிமீட்டப்பட்ட வீணைத்தந்திகளை தொட்டதுபோல இருக்கிறது” என்றார் கிரீஷ்மர். சற்றுநேரத்தில் துருபதனின் குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியதும் பத்ரர் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

கிரீஷ்மர் தலைமையில் ஏழு வைத்தியர்கள் கூடி அவர் உடலை தூய்மைசெய்தனர். தோல் உரிந்து தசைதெரிந்த இடங்களில் மூலிகைத்தைலமிட்டு பச்சிலை காப்பு ஒட்டினர். வெளியே வந்த கிரீஷ்மர் “தோல் உரிந்துவிட்டது பத்ரரே… பன்னிருநாட்களாவது ஆகும் தோல் மீள்வதற்கு” என்றார். “அதுவரைக்கும் அரசர் அகிபீனத்தின் மயக்கத்திலேயே இருக்கட்டும். அதுவே உகந்தது. தோல் உரிந்த வலியை தாள இயலாது.” பத்ரர் கசப்பு படிந்த புன்னகையுடன் திரும்பிக்கொண்டார்.

கண்விழிக்கையில் துருபதனுக்கு என்னதான் ஆறுதலும் விளக்கமும் சொல்வது என்று பத்ரருக்குப் புரியவில்லை. துருபதனின் உளமறிந்த தோழர் அவர்தான். பதினெட்டுவயதில் இளம் நிமித்திகராக அரண்மனைக்கு வந்தவர். துருபதனின் இளமை முழுக்க துணையாக இருந்தவர். விழித்ததும் அவர் தேடும் முதல் முகம் அவருடையதாகவே இருக்கும். “நான் என்னசெய்வேன்? என்ன ஆறுதல் சொல்வேன்?” என்று நெஞ்சில் கைவைத்து புலம்பினார்.

“என்ன ஆறுதல்? படைகொண்டுசென்று அஸ்தினபுரியைத் தாக்குவோம். ஆம், நாம் சிறிய நாடு. நம்மை அழிப்பார்கள். மானத்துடன் அவர் கோட்டைவாயிலில் செத்துவிழுவோம்…” என்றான் ரிஷபன். “நான் சொல்வது இதையே. மன்னர் ஆணையிடவேண்டியதில்லை. இளையமன்னர் சத்யஜித் ஆணையிடட்டும்” என்று கூவினான். பத்ரர் “பொறுங்கள்” என்றார். “பொறுப்பதென்ன… இதற்காக ஆயிரம் பாஞ்சாலர் உயிர்விடாவிட்டால் நம் குலம் அழிந்ததென்றே பொருள்” என்றான் ரிஷபன்.

ஆனால் பேரமைச்சரான தேவசன்மர் “மன்னன் மக்களின் நலனுக்காகவே போரிடவேண்டும். தன் வஞ்சத்துக்காக போரிடுபவன் அதமன் எனப்படுவான். பாஞ்சாலமக்கள் வாழவேண்டும். அவர்கள் இதை நினைவில் நிறுத்தட்டும். அவர்களின் வழித்தோன்றல்கள் என்றாவது இதற்கு வஞ்சம் தீர்க்கட்டும்” என்றார். “இன்று வாளாவிருப்பவர்களா நாளை வஞ்சம் தீர்க்கப்போகிறார்கள்? அமைச்சரே, கழிவிரக்கம் குடியேறிவிட்டால் பின்னர் அந்நெஞ்சங்களில் வீரம் விளையாது” என்றான் ரிஷபன். “நான் என் மக்களை கொலைக்களம் நோக்கி செலுத்தமாட்டேன்” என்றார் தேவசன்மர். சட்டென்று உடைந்து ரிஷபன் விம்மி அழுதான்.

பதினாறுநாட்கள் அகிபீனாவின் மயக்கத்தில் இருந்தார் துருபதன். அன்றுமுதல் அகிபீனா நிறுத்தப்படும் என்றும் தோல் திடமாகிவிட்டதென்றும் கிரீஷ்மர் சொன்னார். அமைச்சரும் பத்ரரும் பதற்றத்துடன் அவையில் காத்திருந்தனர். தேவசன்மர் “உண்மையான வலியை இனிமேல்தான் அளிக்கப்போகிறோம் பத்ரரே” என்றார்.

காலையில் ஒளி எழுந்தபின்னர் துருபதன் கண்விழித்தார். எழுந்ததுமே தன்னை குளிப்பாட்டும்படி ஆணையிட்டதாக அணுக்கச்சேவகன் வந்து சொன்னான். அவர்கள் எழுந்து பதற்றத்துடன் காத்து நின்றனர். சற்றுநேரத்தில் முழு அரச உடையுடன் துருபதன் மந்திரஅவைக்கு வந்தார். முகத்தில் கலக்கமோ துயரோ இருக்கவில்லை. உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்ததே ஒழிய விழிகளும் மொழியும் தெளிந்தே இருந்தன. வந்து அமர்ந்து முகமன்களைச் சொல்லி வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டதுமே அன்றைய சந்திப்புகளைப்பற்றித்தான் கேட்டார். ரிஷபன் திகைத்து தேவசன்மரை நோக்கினான். தேவசன்மர் ஒருகணம் குழம்பியபின் தன்னை மீட்டுக்கொண்டு இயல்பாக பணிகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார்.

அன்று மதியத்திற்குள் அலுவல்களை முடித்துக்கொண்டு உணவருந்தச்சென்றார் துருபதன். மது அருந்திவிட்டு அவர் துயிலறைக்குச் சென்றதாக சேவகன் சொன்னான். மாலையில் மீண்டும் நீராடி அரங்கத்துக்கான ஆடைகளை அணிந்து வந்தார். அன்றைய நடனத்தையும் நாடகத்தையும் பார்த்தார். புலவர் ஒருவர் கொண்டுவந்த நான்கு நீண்ட செய்யுட்களைக் கேட்டு பரிசில் அளித்தார். வழக்கம்போல பின்னிரவில் மதுவருந்திவிட்டு துயிலறைக்குச் சென்றார்.

தேவசன்மரும் மருத்துவர்களும் நிமித்திகரும் கூடி பேசிக்கொண்டனர். “என்ன நிகழ்கிறது? நடிக்கிறாரா?” என்று பத்ரர் கேட்டார். “இல்லை அவர் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தேன். நடிக்கவில்லை” என்றார் மருத்துவரான தீர்க்கர். “அவர் அகத்திலிருந்து அந்நிகழ்வு முழுமையாகவே மறைந்துவிட்டது. இலைகளின் அமைப்பில் உள்ள ஒரு தனித்தன்மை போன்றது அது. எல்லா இலைகளும் அவற்றின் எல்லைவரை எடைதாங்கும். அதன்பின் எடையை சரித்து விழச்செய்துவிடும். ஆகவே எடைமிகுந்து எந்த இலையும் உதிர்வதில்லை. அதைப்போன்றதே மானுட உள்ளமும். மன்னரால் தாளமுடியாத எடைகொண்டது அந்நிகழ்ச்சி. அதை அவர் உதிர்த்துவிட்டார்.”

கிரீஷ்மர் “தீர்க்கரே, எடையை சரித்து உதிர்த்துவிட்டது உண்மை. ஆனால் அந்த எடை எப்பக்கம் விழுந்தது என்பது முதன்மையான வினா. முன்பக்கம் விழுந்தால் நாமெல்லாம் வாழும் இந்த ஜாக்ரத்தின் உலகில் அது வெடித்துச் சிதறியிருக்கும். அது விழுந்திருப்பது பின்பக்கம் ஓடும் ஸ்வப்னத்தின் உலகில் என்றால் அங்கே அது வளர்ந்துகொண்டே இருக்கும். ஜாக்ரத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஸ்வப்னத்தில் நூறுமடங்கு எடை கொள்கின்றன. ஆயிரம் மடங்கு உருசிறுக்கின்றன. அவர் நாமறிய உடைந்து சிதறவில்லை. அப்படியென்ரால் அவர் நெஞ்சில் விழுந்த அப்பாறாங்கல் சிறிய கடுகென அவர் ஸ்வப்னத்தில் எங்கோ விழுந்து கிடக்கிறது.”

“ஆம்” என்றார் தீர்க்கர் “ஆனால் நாம் செய்யக்கூடுவதொன்றுமில்லை. இப்போது நிகழ்ந்திருப்பதை ஆயுர்வேதம் ஆஸ்லேஷணம் என்கிறது. அனைத்தும் உள்ளே செறிவாகின்றன. அவை வெளிப்படும் கணம் வரவேண்டும். அதை நாங்கள் விஸ்லேஷணம் என்கிறோம். அதற்காகக் காத்திருப்போம். ஸ்வப்னத்தில் உள்ளவை இலைநுனியில் ததும்பும் நீர்த்துளிபோல திரண்டுகொண்டே இருப்பவை என்கிறார்கள். ஒருகட்டத்தில் அவை உதிர்ந்து சிதறவேண்டும். மேலும் சிலநாட்களாகலாம்.” கிரீஷ்மர் “ஸ்வப்னத்தில் இருந்து ஒரு கூழாங்கல் விழுந்தால் ஜாக்ரத்தின் மாளிகைகள் நொறுங்கிச்சரியும் என்கிறார்கள்” என்றார்.

ஆனால் துருபதன் அப்படியேதான் இருந்தார். அந்த ஒருநாள் அவரது எண்ணங்களில் இருந்து உதிர்ந்துவிட்டிருந்தது. இயல்பான அன்றாட அலுவல்களும் கேளிக்கைகளுமாக வாழ்க்கை நீடித்தது. நடுவே உத்தரபாஞ்சாலத்தை அஸ்தினபுரியின் படைகளுடன் வந்து அஸ்வத்தாமன் கைப்பற்றி சத்ராவதியில் முடிசூட்டிக்கொண்டான். அதற்கு அஸ்தினபுரியின் அனைத்து நட்பு மற்றும் துணைநாடுகளும் தூதர்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்தன. தட்சிணபாஞ்சாலத்தில் இருந்து துருபதனின் இளையோன் சத்யஜித்தும் மைந்தர்கள் சித்திரகேதுவும் சுமித்திரனும் விழாவுக்குச் சென்றனர். பிரியதர்சனும் துவஜசேனனும் களப்புண் ஆறி ஆதுரசாலையில் இருந்து மீளவில்லை. பாஞ்சாலம் பிளவுண்ட செய்தியை அமைச்சர்கள் துருபதனிடம் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஒவ்வொருநாளும் துருபதர் மெலிந்தபடியே வருவதை மருத்துவர் கண்டனர். அவர் உணவுண்பதில்லை என்பதை சேவகர்கள் சொன்னார்கள். பின்னர் அவரது தேவியர் அவர் உறங்குவதுமில்லை என்றனர். அவரது பேச்சும் நடத்தையும் மாறத்தொடங்கின. கைகளில் அந்த ஓயாத அசைவும் இதழ்களில் ஒலியற்ற சொல்லும் குடியேறியது. அவரது உடல் பதுங்கியிருக்கும் காட்டுமிருகத்தைப்போல எந்நேரமும் எச்சரிக்கைகொண்டு சிலிர்த்து நின்றது. “அணங்கு கூடியவர் போலிருக்கிறார்” என்றார் எல்லைக்காவல் அமைச்சரான சப்தமர். “சப்தமரே, அணங்காவது ஒன்றாவது. அவரது நோய் என்னவென்று நாம் அறிவோம்” என்றார் பத்ரர்.

ஆனால் அவர் மற்றபடி தன்னினைவுடன்தான் இருந்தார். அரசப்பணிகளை முழுமையான விழிப்புணர்வுடன் ஆற்றினார். செய்திகளை நினைவில் அடுக்கி மீட்டெடுத்தார். அனைத்துக் கோணங்களிலும் சிந்தித்து முடிவுகளை எடுத்தார். அவரது நிலைபற்றி அவரிடம் சொல்லவேண்டியதில்லை என்றனர் மருத்துவர். “நாம் காத்திருப்போம், வேறுவழியில்லை” என்றார் கிரீஷ்மர். “எதற்காகக் காத்திருக்கிறோம்? எந்தை மடிவதற்காகவா?” என்று சித்ரகேது கூவினான். “இளவரசே, உடலில் பட்ட நோய்க்கு மருந்துண்டு. உளம் அடைந்த நோய்க்கும் மருந்துண்டு. ஆன்மாவில் பட்ட புண்ணுக்கு விதியே மருந்தாகி வரவேண்டும். அது இறப்பென்றால் அதுவும் விதியே” என்றார் நிமித்திகர் தலைவர் ஹரிதர்.

ஏதோ ஒன்று நிகழுமென அனைவரும் காத்திருந்தனர். எங்கோ ஒரு இலை உதிரும். அந்த ஒலியில் எங்கோ ஒரு மலைச்சிகரம் இடிந்து சரியும். ஆனால் ஆறுமாதகாலம் ஒவ்வொரு நாளும் மறுநாளே என நீண்டது. அஸ்வத்தாமன் சத்ராவதியில் நிலைகொண்டுவிட்டதாக செய்திகள் வந்தன. அங்கிருந்த பாஞ்சாலக்குடிகள் அனைவரும் தங்கள் கால்நடைகளுடன் எல்லை தாண்டி தட்சிணபாஞ்சாலத்துக்கு வந்தனர். ஆனால் அஸ்வத்தாமன் அஸ்தினபுரியின் வெளியே வடபுலக்காட்டில் நெருக்கியடித்து வாழ்ந்திருந்த காந்தார மலைக்குடிகளை கொண்டுவந்து உத்தர பாஞ்சாலத்தில் குடிவைத்தான்.

பாலைநிலமக்கள் புராணகங்கையின் காட்டில் வாழ நன்றாகவே பழகிவிட்டிருந்தனர். அவர்களுக்கு வேட்டைநிலமும் மேய்ச்சல்நிலங்களும் வழங்கப்பட்டன. சத்ராவதிக்கு வணிகத்திற்கு வரும் வணிகர்களுக்கு பத்து வருடங்களுக்கு முழுமையாகவே சுங்கவிலக்கு அளிக்கப்பட்டது. கருவூலத்துக்கான செல்வத்தை காந்தார இளவரசரே அளித்துவிட்டதாக சொன்னார்கள். சிலமாதங்களிலேயே சத்ராவதி வணிகர்படகுகளால் நிறைந்தது. சித்ரகேது “அவன் ஆட்சி செய்யத்தெரிந்தவன்” என்றான். அவன் தம்பி சுமித்ரன் “மூத்தவரே, அவர் ஆளவில்லை. நாடாள்வது அஸ்தினபுரியின் அமைச்சர் விதுரர்” என்றான்.

நாட்கள் செல்லச்செல்ல துருபதனின் நினைவு பிறழத் தொடங்கியது. பிறர் சொல்லும் சொற்கள் அவரை சென்றடையவில்லை. அவர் சொல்லிக்கொண்டிருந்த ஓசையற்ற சொல்லே அவர் சித்தத்துக்கான வழியை அடைத்துவிட்டதென்று தோன்றியது. அரியணையில் நிழல்போல அமர்ந்து மெல்லிய கைகால்களை சுருட்டி ஒடுக்கிக்கொண்டு சரியும் இமைகளுடன் துயில்கிறாரா என்ற ஐயமெழும்படி அமர்ந்திருந்தார். இன்னொருவரால் எழுப்பப் படாதவரை எங்கு அமர்ந்திருக்கிறாரோ அங்கேயே நாளும் இரவும் இருந்துகொண்டிருந்தார். உதிரிச்சொற்களில் பேசினார். அப்போது அவர் எங்கிருக்கிறார் என்பதை அச்சொற்கள் வழியாக கணிக்கமுடியவில்லை.

அவர் உடல் உருகத்தொடங்கியது. சேற்றுப்பரப்பில் மூழ்கி மறையும் மரம்போல அவர் தெரிவதாக பத்ரர் நினைத்தார். ஒவ்வொருநாளும் அவர் மேலும் ஆழத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அவரது பின்னும் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு அருகே அமர்ந்திருந்தார் பத்ரர். தன் பார்வையும் குரல்களும் அரசருக்குள் செல்லவில்லை என்றாலும் அத்தொடுகையை உள்ளே எங்கோ இருந்து அவரது ஆன்மா அறிகிறது என்று எண்ணிக்கொண்டார். என்ன சொல் அது என்று அவ்வுதடுகளை நோக்கிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் ஒரு சொல் எனத் தோன்றியது. ஒரே சொல்லே என்றும் தோன்றியது. ஒருவேளை பாதாளதெய்வங்களில் ஒன்றுதான் வந்து குடியேறிவிட்டதா? இருண்ட ஆழங்களில் வாழும் மொழியின் சொல்லா அது?

கண்ணெதிரே மட்கிக்கொண்டிருந்த துருபதனைக் கண்டு மைந்தர்கள் தென்திசை மருத்துவர்களையும் தாம்ரலிப்தியில் இருந்து யவன மருத்துவர்களையும் வரவழைத்து நோக்கினர். அவர்கள் அவரது உடலில் எந்தக் குறையும் இல்லை, வாதமும் பித்தமும் கபமும் சமநிலையை பேணுகின்றன என்றனர். நிமித்திகர்களை வரவழைத்து குறிதேர்ந்தனர். அவர்கள் முன்வினையும் நிகழ்வினையும் வருவினையும் தெளிந்துள்ளன என்றனர். பூசைகள் செய்யப்பட்டன. நோன்புகள் ஆற்றப்பட்டன. ஒவ்வொரு கணமும் அவர் இறந்துகொண்டிருந்தார்.

ரிஷ்யசிருங்கத்தின் அடிவாரத்தில் கணாதரின் குருகுலத்தில் துருவாசகுலத்து மூத்த முனிவர் துர்வாசர் வந்திருப்பதாக பத்ரர் அறிந்தார். துருபதனை துர்வாசரிடம் அழைத்துச்சென்றாலென்ன என்று அவையில் சொன்னார்.ஆனால் உத்தரபாஞ்சாலம் வழியாக செல்லவேண்டும் என்று சொல்லி சித்ரகேது தயங்கினான். நான் அனுமதி கேட்கிறேன் என்றார் அமைச்சர் தேவசன்மர். கொந்தளிப்புடன் “அமைச்சரே, எந்தை மீண்டும் அவமதிக்கப்பட்டாரென்றால் அதன்பின்னர் பாஞ்சாலம் அழிவதைக்கூட நான் எண்ணப்போவதில்லை” என்றான் சித்ரகேது. பத்ரர் “பயணத்துக்கான வழியை எதிரிக்கும் அளிக்க வேண்டுமென்பதே முறை” என்றார். “ஆம், ஆனால் முறைமைகள் இன்று பாரதவர்ஷத்தில் வாழ்கின்றனவா என்ன? பீஷ்ம பிதாமகரின் கண்முன்னால் நிகழ்ந்த அறக்கொலையை நாம் கண்டோமே?” என்றான் சித்ரகேது.

தேவசன்மரின் ஓலைக்கு பதிலாக உத்தர பாஞ்சாலத்தில் இருந்து அமைச்சர் பூர்ணர் தலைமையில் ஒரு தூதுக்குழுவே வந்தது. துருபதனை அனைத்து முறைமைகளுடனும் வரவேற்று அழைத்துச்செல்லவேண்டுமென அஸ்வத்தாமன் ஆணையிட்டிருப்பதாக சொன்னார்கள். “துருபத மாமன்னரை பணிந்து சத்ராவதியின் அரசன் எழுதிக்கொண்ட திருமுகம்” என்று தொடங்கிய ஓலையைக் கண்டு சித்ரகேது “இதில் ஏதேனும் சூதிருக்குமோ அமைச்சரே?” என்றான். தேவசன்மர் “நானும் அவ்வாறே ஐயுறுகிறேன்” என்றார். பத்ரர் “அவ்வாறு நிகழுமென நான் எண்ணவில்லை. இது அவர்கள் தங்களின் நேர்மையை அறிவித்துக்கொள்ளும் ஒரு வழிமுறை மட்டுமே” என்றார்.

காம்பில்யத்தில் இருந்து கிளம்பும்போது எங்கே செல்கிறோம் என்று துருபதன் அறிந்திருக்கவில்லை. அவரை பல்லக்கில் வைத்து கங்கைக்கு கொண்டுசென்று படகில் ஏற்றியபோது அகிபீனாவின் மயக்கத்தில் இருந்தார். கங்கைவழியாக படகில் வடபுலம் நோக்கிச் சென்றபோது அமரத்தில் அமர்ந்து நீர்வெளியை வெறித்துக்கொண்டு அசைவிழந்து அமர்ந்திருந்தார். மெலிவு கூடிக்கூடி கன்ன எலும்புகள் தோலைக்கிழிப்பவை போல உந்தி ஒளியுடன் தெரிந்தன. கைகளிலும் விரல்களிலும் முட்டுகள் பெரிதாக வீங்கியவை போலிருந்தன. தான் இருக்குமிடத்தையும் அறியாதவராகிவிட்டிருந்தார் என்று பத்ரருக்கு தோன்றியது.

மறுநாள் சத்ராவதியில் படகுகள் அணைந்தபோது கோட்டையில் பெருமுரசம் முழங்கியது. தட்சிணபாஞ்சாலத்தின் கொடி கோட்டைக்கொடிமரம் மீது ஏறியது. அமைச்சர்குழாமுடன் அஸ்வத்தாமனே சத்ரமும் சாமரமுமாக வந்திருந்தான். அதை எதிர்பாராத காம்பில்யத்தின் வீரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி தடுமாறினர்.

அஸ்தினபுரியில் இருந்து வந்திருந்த அமைச்சர்களும் வீரர்களும் முன்னரே துருபதன் நிலையைப்பற்றியும் அவரது வருகையின் நோக்கம் பற்றியும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் துருபதனின் அந்தத் தோற்றத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அவரைக் கண்டதும் வினாவுடன் அஸ்வத்தாமனின் புருவங்கள் சுருங்கின. அருகே நின்றிருந்த அமைச்சரிடம் அவன் ஏதோ கேட்பதும் அமைச்சர் பதிலிறுப்பதும் தெரிந்தது. திகைப்புண்ட அஸ்வத்தாமனின் வாய் திறந்தது. கைகள் அறியாமல் கூப்பி மார்பில் படிந்தன.

கூப்பிய கைகளுடன் வந்து மணிமுடி தாழ்த்தி வணங்கிய அஸ்வத்தாமனை யாரென்றே துருபதன் அறிந்திருக்கவில்லை. திகைத்த விழிகளுடன் நோக்கியபின் திரும்பி பத்ரரை நோக்கினார். “அரசே வாழ்த்துங்கள்” என்று பத்ரர் சொன்னதும் “ம்?” என்றார். “அரசே, வாழ்த்துங்கள்…” என்றார் பத்ரர். துருபதன் கைதூக்கி உரக்க “முடியும் கொடியும் வாழ்க! மூதாதையர் பெருமைகொள்க!” என்றார். அதன்பின் மெலிவு காரணமாக ஈறுகளிலிருந்து எழுந்து தெரிந்த பெரிய பற்கள் தோன்ற புன்னகைசெய்தார்.

அஸ்வத்தாமன் அக்கணத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்தான். கண்ணீர்பெருக மீண்டும் அவர் பாதங்களைத் தொட்டு “இப்பிறவி முழுமையும் இருக்கிறது எனக்கு அரசே” என்றான். அவன் என்ன சொன்னானென்று பத்ரருக்கும் பிறருக்கும் புரியவில்லை. அரண்மனை நோக்கிச்செல்கையில் அஸ்வத்தாமன் தலைகுனிந்து முகம்பொத்தி ரதத்தில் அமர்ந்திருப்பதை பத்ரர் கண்டார். அஸ்தினபுரியின் அமைச்சர்களும் சிலர் கண்ணீருடன் இருந்தனர். பத்ரர் நீள்மூச்சுடன் “ஆன்மாவில் சுமைகளை தூக்கி வைத்துக்கொள்வதுதான் எத்தனை எளிது” என்று சொல்லிக்கொண்டார்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைவிழா-பாவண்ணன் வாழ்த்து
அடுத்த கட்டுரைவெண்முரசு- மிஷ்கின் பேட்டி