இன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன் என்று உங்களுக்கே அறிவுரை சொன்ன நானும் இனி மேல் என்ன செய்வது? இப்படி எங்கள் காலை வாரிவிட்டுவிட்டீர்களே!
அன்புடன்
ஆர்வி
அன்புள்ள ஆர்வி
அசோகமித்திரன் வெண்முரசை வாசிக்கும் நிலையில் இல்லை. முதுமை காரணமாக வரும் நினைவுச்சிக்கல். உடல்நிலைக்குறைவு. மிகப்பெரிய நூல்கள் தனக்கு மலைப்பை அளிக்கின்றன என்று அவர் சொன்னார். ஆனால் இம்முயற்சி அவரை பெரிதும் மகிழவும் நிறைவடையவும் வைத்தது என்பதே உண்மை.
குங்குமத்தில் வெண்முரசு நாவல் வரிசையை மிகவும் பாராட்டி அவர் எழுதியிருந்தார். அதன்பின் பலநண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.விழாவுக்கு வாழ்த்துரை வழங்கியபோதும் இதையே சொல்லியிருக்கிறார். இந்நூல் வரிசைக்கு அவர் வாசகராக அல்ல மூத்த எழுத்தாளராக, ஆசி வழங்குபவராகவே இருக்கிறார். அவ்வகையிலேயே விழாவில் பங்கு கொண்டார்
அசோகமித்திரன் இந்நாவல் முயற்சியை தொடக்கம் முதலே ஒரு ஐயத்துடன் மட்டுமே நோக்கிவருகிறார். முதலில் அது அவரது இயல்பு. என் ஆரம்பகாலக் கதைகள் பெரும்பாலானவற்றை அவர்தான் வெளியிட்டிருக்கிறார், ஊக்குவித்திருக்கிறார். ஆனால் விஷ்ணுபுரம் வெளிவரும்வரை எவற்றைப்பற்றியும் சாதகமாக ஏதும் சொல்லவில்லை. அவர் காத்திருந்தார் என்றே எடுத்துக்கொள்கிறேன்.
இம்முயற்சி குறித்த அவரது ஐயம் சில அடிப்படைகள் கொண்டது. ஒன்று, மகாபாரதம் உருவான காலகட்டத்தின் உச்சகட்ட மனநிலைகளை இன்று மீட்டெடுக்க முடியுமா என்றும் அந்த உச்சகட்ட மனநிலைகள் உருவாக்கிய கலையொருமை நவீன இலக்கியத்தில் சாத்தியமா என்றும் அவர் ஐயப்படுகிறார். இன்றைய சூழலில் அதற்காக ஒருபோதும் அவர் முயலத்துணியமாட்டார் என்றுதான் விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வெண்முரசு வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலும் சொன்னார்.
அதற்காக அவர் குறிப்பிட்ட உதாரணமும் முக்கியமானது. பீஷ்மர் மகாபாரதத்தின் தொடக்கம் முதல் வரும் கதாபாத்திரம். அது மெல்லமெல்ல மாறுதலடைகிறது. பெருந்தியாகம் முதல் அநீதிக்கு முன் அமைதியாக இருப்பது வரை அதன் ஆளுமை பற்பல வண்ணங்கள் கொண்டதாக விரிகிறது. அவையெல்லாமே ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவை. இறுதியில் அது ஒரு முழுமையை அடைகிறது. அசோகமித்திரனின் சொற்களில் சொல்லப்போனால் ‘ஓரளவேனும் தன்னை அறிந்து’ அது நிறைவுறுகிறது.
அந்தக்கதாபாத்திரத்தை நாம் இன்று நவீன இலக்கியமாக எழுதும்போது இன்றைய வாழ்க்கையின் சாயல் அதன்மேல் படிகிறது. இன்றைய இக்கட்டுகளுடன், இன்றைய அழகியலுடன் அதை முழுமை நோக்கிக் கொண்டுசெல்வதென்பது எளிய சவால் அல்ல. காரணம் நவீன இலக்கியத்தின் விதிகளும் இயல்புகளும் வேறு. இதற்குள் நின்றுகொண்டு நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கி இயல்பான பரிணாமத்தை அடைந்து முழுமைகொள்ளவேண்டும். கண்ணுக்குத்தெரியாமல் ஒரு வாழ்க்கை வழிந்தோடி முடியவேண்டும்
செவ்வியலின் காவியத்தன்மை என்பது ஒரு பிரம்மாண்டமான பண்பாட்டு பரிணாமத்தின் உருவாக்கம். மகாபாரதத்தின் ஒருமையேகூட பலரால் பலமுறைகளில் சொல்லப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை நவீனப்புனைகதைப்பாணியில் மீண்டும் இலக்காக்கும் பெருமுயற்சியின் ஊக்கத்தை அவர் வாழ்த்தும்போதே அது எவ்வகையில் சாத்தியம் என்ற ஐயத்தையும் வெளியிடுகிறார். தன்னால் முடியாது, துணிய மாட்டேன் என்று அவர் சொல்வதும் அதனடிப்படையிலேயே.
மேலும் அவருக்கு வியாசர் ஒரு ரிஷி. மானுடருக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் கொண்டவர். அவரால் மட்டுமே அது சாத்தியம். அவரை விமர்சனம் செய்தோ, மீறிச்சென்றோ புனைவது அசாத்தியம் மட்டுமல்ல ஏற்கத்தக்கதும் அல்ல. அது ஒரு மரபார்ந்த மனநிலை.ஆகவே அவரைப்பொறுத்தவரை இது வாழ்த்துவதற்குரிய ஒரு தொடக்கம் மட்டுமே.விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார். மீண்டும் மீண்டும் அவர் சொல்லும் இந்த ஐயம் மகாபாரதத்தின் விரிவை உணர்ந்தவர்களால் எளிதில் புரிந்துகொள்ளத்தக்கதே,
பி.ஏ.கிருஷ்ணனும் இதையே சொன்னார். இம்முயற்சியை வரவேற்கப்போவதில்லை என்றும் பண்டைய இலக்கியங்களை மறு ஆக்கம் செய்யவேண்டியதில்லை என்றும் எனக்கு எழுதினார். ஆனால் பின்னர் பீஷ்மர் அம்பை சந்திப்பு காட்சியை முதற்கனலில் வாசித்துவிட்டு என் முயற்சி குறித்த ஐயம் நீடிக்கிறதென்றாலும் அதன் விளைவுகள் சிறப்பானவையாக இருக்கின்றன என்றும் நான் என் படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கிறேன் என்றும் கூறி வாழ்த்தியிருந்தார்
வெண்முரசு நாவல் வரிசையை வாசிக்காமல் அதேசமயம் மகாபாரதத்தின் வீச்சையும் உணர்ந்த எவரும் சொல்லக்கூடிய ஐயம்தான் அது. அதை வாசித்துவருபவர்களில் கணிசமானவர்கள் இன்று அந்த ஐயத்தை முழுமையாகக் கடந்தவர்கள் என நான் அறிவேன். ஆகவே வாசிக்காத ஒருவரின் கருத்து வெறும் ஐயமாக அவர்களுக்குத் தோன்றக்கூடும்
உண்மையில் எனக்கே அந்த ஐயம் உள்ளது. எழுத எழுத தன்னம்பிக்கையும் நிறைவும் உருவாகிக்கொண்டிருக்கிறது என்றாலும் ஒட்டுமொத்தமாக இது காவிய ஒருமையுடன் அமையும் என்ற உறுதிப்பாட்டை நான் அடைய இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டும். பாதியையாவது நெருங்கிச்சென்றபின்னரே நான் முழுநம்பிக்கை கொள்ள முடியும். அது வரை நானும் அசோகமித்திரன் சொன்னதுபோல கைத்தட்டல்களை கொஞ்சம் ஒத்திப்போடவே விழைவேன்.
அசோகமித்திரனோ பி.ஏ.கிருஷ்ணனோ சொல்லிவரும் இந்த நுட்பமான ஐயத்தை நவீன இலக்கியத்தின் எல்லைகளையும் செவ்வியலின் வீச்சையும் புரிந்துகொள்ளாதவர்கள் உள்வாங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் இதை மீண்டும் ஒரு வம்பாக ஆக்கி மென்றுகொண்டிருக்கவே முயல்வார்கள். அந்தச்சிறுமைகளுக்கு அப்பால் செல்பவர்கள் இது ஒரு முக்கியமான வினா என்பதை அறியலாம். அதை எப்படி சென்று தொடுகிறேன், அல்லது சரிகிறேன் என வெண்முரசை வாசித்து மதிப்பிடலாம்.
ஜெ
வெண்முரசு மறுபிரசுரம் Nov 11, 2014