எரிதல்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

எரிதல் பதிவை படித்தேன். உண்மை தான். என்ன தான் அபிமானமும் பெரு மதிப்பும் இருந்தாலும் உள்ளில் ஏதோ ஒன்று அந்த தருணத்தை கேட்கிறது. அந்த சாத்தான் நீங்கள் லேசாக இடரும் போது ஒரு சிறு உவகை கொள்கிறது. சில நாட்களுக்கு முன் ஞாநி அவர்களின் கடிதத்திற்கு நீங்கள் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டபோது என்னுள் அந்த சாத்தான் புன்னகைத்தது. அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்த சாத்தானின் புன்னகையை முகப்பரு முளைக்கையிலேயே கசக்கி எறிவது போல் கசக்கி தள்ளிவிட்டேன். ஆனால் அது நாளை நீங்கள் சிறு பின்னடைவை அடைந்தாளும் என் முன் வந்து நிற்கும். அதை தான்டி தான் நான் செல்ல வேண்டியிருக்கும்.

ஆனால் அதை நான் பெரிதாக நினைப்பதில்லை. அது மனித இயல்பு. நீங்கள் எங்கோ சொன்ன டால்ஸ்டாய் நாவலின் ஒரு காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. மகள் ஒப்பனை செய்து ஆடை அணிகள் அணிந்து படிகளில் இறங்கி அன்னையை பார்த்து விடை பெறும் போது அந்த அன்னைக்குள் ஒரு சிறு பொறாமை நொடி பொழுது வந்து விட்டு போகும். அவளுக்கு இல்லாத அந்த இளமை அவள் மகளிடம் இருக்கிறதே என்று. அது போல் மனித மனதுக்குள் உணர்வுகள் தோன்றுவதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லை. அந்த உணர்வை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது தான் முக்கியம். கீழ்மையான எண்ணங்களை அப்பொழுதே நசுக்கி அழித்து விட வேண்டும் அவ்வளவு தான்.

அந்த எரிதலுக்கு காரணம், உங்கள் அளுமையின் முன் ஒரு சாதாரன வாசகன் மிக எளிமையானவானாக தெரிவது. Common Man’s Grudge என்று சொல்வீர்களே அது தான். அதனுடன் உங்களுக்கு அமைய பெற்ற அறிவு சார்ந்த வாய்ப்புகள் அமைய பெறாதவர்கள் அல்லது அதை தேர்ந்தெடுக்காதவர்கள் தான் ஏராளமாக இருக்கிறோம். பள்ளி பருவத்திலேயே நீங்கள் இலக்கியத்திற்குள் வந்து விட்டீர்கள் என்று எண்ணுகிறேன், நான் 28 வயதில் தான் இலக்கியத்தை வாசிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். உங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்கள் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைப்பது அரிது. நீங்கள் சொல்வது போல் வளையம் தான்ட பழக்கப்படுத்தப்பட்ட சர்க்கஸ் விலங்குகள். அப்படி இருக்கும் போது நாங்கள் அடைய முடியா உயரத்தில் நிற்கிறீர்கள். ஆனால் இதே எண்ணம் உயரத்தில் இருக்கும் பிற ஆளுமைகளிடம் தோன்றுவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த உயரத்திலேயே நிற்கிறார்கள், நீங்கள் இறங்கிவந்து எங்களிடம் நாளும் உரையாடுகிறீர்கள். புல்லை தலை குனிந்து வருடும் ஒட்டக சிவிங்கி போல. எங்களுள் ஒருவராய் இருக்கிறீர்கள் இருந்தும் எங்கோ இருக்கிறீர்கள். இந்த முரணை ஏற்று கொள்ள முடியாமலேயே உங்களுக்கு அப்படிபட்ட எதிர் வினைகள் வருகிறது.

ஆனால் எனக்கு என்று நான் வகுத்த விதி ஒன்றிருக்கிறது. இந்த மாதிரி உங்கள் நேர்மையை சந்தேகித்தோ, அல்லது ஒரு அற்ப தவறை சுட்டிக்காட்டியோ உங்களுக்கு கடிதம் எழுத கூடாதென்று. படித்து முடிக்க முடியாமல் ஆயிர கணக்கில் பதிவுகள் உங்கள் தளத்தில் இருக்கிறது. அதை தவிர புத்தகமாய் எவ்வளவோ இருக்கிறது. உங்களை எழுத்தை தவிர படிக்க வேண்டிய மற்றவர்கள் ஏராளமாய் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஒரு அற்ப விஷயத்தை சுட்டி காட்டி கடிதம் எழுதுவது போல் நேர விரயம் ஏதும் இருக்கமுடியாது. இதையும் தான்டி ஒருவர் வசை பாடுகிறார் என்றால் அவர் அவருக்குள் எழும் அந்த சாத்தானின் குரலை அடக்க வல்லமையற்றவராக தான் இருக்க வேண்டும்.

ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வைப்பது நல்லது. எனக்கே பல நேரம் தோன்றும் என்ன நீங்கள் எழுதுவது அனைத்தையும் ஏற்று கொள்ளும் வகையில் உள்ளது போல் இருக்கிறதே என்று. அப்படி இருக்கலாகாது. ஆனால் ஒரு மாற்று தரப்பை எடுத்து உங்களிடம் பொருட்படுத்தும் படியான ஒரு வாதத்தை வைக்கும் அளவுக்கு எனக்கு இப்போது இருக்கும் வாசிப்பும், சிந்தனை முறையும் போதவில்லை.

இதுவரை நான் கண்ட ஆளுமைகளை எல்லாம் சில மாதங்களிலேயே கடந்து வர முடிந்திருக்கிறது. அவர்கள் எழுதியதை முழுதும் படிக்காவிட்டாலும் அவர்களை சில நாட்கள் தொடர்ந்து கவனித்ததிலேயே அவர்களின் எல்லை இவ்வளவு தான் என்று தெரிந்துவிட்டது. ஆனால் உங்கள் விஷயத்தில் அறிய இயலவில்லை. அதுவே தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் நான் முயற்சிப்பது உங்களை கடந்து செல்வதற்கு. யானையின் முதுகில் ஏறி பயணம் செய்யும் எறும்பல்ல நான் அதை எதிர் கொண்டு கடந்து செல்ல நினைக்கும் சுண்டெலி. ஆனால் அது பெரும் சவாலாக நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நான் உங்களை கடந்து செல்ல எட்டு வைக்கும் தோறும் நீங்கள் யார் யாரையோ கடந்து ஓடி கொண்டே இருக்கிறீர்கள். அதனால் இடைவெளி பெரிதாகி கொண்டே செல்கிறது. இருப்பினும் விடாமல் துரத்துவேன். அதில் தான் இன்பம்.

நன்றி
ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்,

உங்கள் கடிதம் கண்டதும் ‘வாய்ப்புகள்’ என்பதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன். சாதாரணமான ஓர் ஆங்கில எழுத்தாளனுக்குரிய வாய்ப்புகள் எனக்கில்லை. ஆனால் தமிழ்ச்சூழலுடன் ஒப்பிட்டால் அசாதாரணமான வாய்ப்புகள் கிடைத்தன என்றுதான் சொல்லவேண்டும்

இலக்கியவாசகியான அன்னைதான் முதல் நல்வாய்ப்பு. ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, எம்.கங்காதரன், பி.கெ.பாலகிருஷ்ணன், ஞானி, நித்யசைதன்ய யதி என அமைந்த ஆசிரியர்கள் இன்னொரு வாய்ப்பு.

வாழ்க்கையின் இதுநாள்வரையிலான ஒவ்வொரு தருணத்திலும் என் முழு உலகியல் பொறுப்பையும் தன்னிடம் எடுத்து என்னை தன் சிறகுக்கு அடியிலேயே வைத்திருக்கும் என் அண்ணன். அவர் இருக்கிறார் என்ற உணர்வு எனக்களித்த சுதந்திரமும் தன்னம்பிக்கையும் சாதாரணமானதல்ல. நம் குடும்பச்சூழலே அதை அளிக்கிறது. பிறிதொரு நாட்டில் ஓர் அண்ணன் தம்பியை ஐம்பத்திரண்டு ஆண்டுகளாக கவனித்துக்கொள்வார் என்பதை எண்ணிப்பார்க்கவேமுடியாது

என் மனைவியும் ஒரு நல்வாய்ப்பே. வாசகியைக் காதலியாகவும் மனைவியாகவும் அடைவதென்பது ஒரு பெரிய நல்லூழ். இத்தனை நாட்களில் அவள் அன்றி பிற பெண்கள் எல்லாருமே சலிப்பூட்டுபவர்களாகவே தெரிகிறார்கள். அந்த மோகம் என்னை பல்வேறு உணர்ச்சி அலைக்கழிப்புகளில் இருந்து காத்திருக்கிறது என நினைக்கிறேன்

கடைசியாக என் பிள்ளைகள். இருவருமே மிகச்சிறந்த இலக்கியவாசகர்களாக, அறிவார்ந்த ஈடுபாடுகள் கொண்டவர்களாக, என் மேல் பெருமதிப்புள்ளவர்களகா இருப்பதும் ஒரு பெரும் வாய்ப்புதான்.

அனைத்தையும் விட நல்ல விஷயம் எப்போதும் பொருளியல் நெருக்கடி, அலுவலக நெருக்கடிகள் இல்லாதிருந்தது. உண்மையில் இன்றைய சூழலில் எழுதுபவர்களுக்குரிய மிகப்பெரிய அறைகூவலே இதுதான். மிகக்குறைவான ஊதியத்தில் கடும் உழைப்பைச் செலுத்துவதனாலேயே எழுதமுடியாத நிலை இன்றுள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 14
அடுத்த கட்டுரைவெண்முரசு பற்றி முருகபூபதி