மலை ஆசியா – 1

மரபின்மைந்தன் முத்தையாவை எனக்கு நாஞ்சில்நாடன் வழியாகத்தான் தெரியும். பத்து வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை நாஞ்சில் சொன்னார் ”முத்தையான்னு ஒரு நல்ல பையன் இருக்கான்.. நல்லா வாசிப்பான்”. பையனுக்கு நான் பார்க்கும்போதே முன்தலையில் முடி ஏதும் இல்லை. அறிஞர்க்குரிய அழகிய வழுக்கை.

அதன்பின்னர் அவ்வப்போது சிறிய சந்திப்புகள். 2004 செப்டெம்பரில் நாஞ்சில்நாடனும், அவர் நண்பர் ரவீந்திரனும், நாவலாசிரியர் சுதேசமித்திரனும், மரபின்மைந்தனுடன் சேர்ந்து குற்றாலம் வந்தார்கள். ரசிகமணி டி.கெ.சியின் பிறந்தநாள் விழாவுக்கு தென்காசி போவதாக திட்டம். அதற்கு முன்பு இருநாட்கள் குற்றாலம். நானும் சென்று சேர்ந்துகொண்டேன். அந்த சந்திப்பில்தான் முத்தையா நெருக்கமாக ஆனார்.

முத்தையாவுக்கு இலக்கியம் மூச்சுபோல. ஆனால் வழக்கமான இலக்கியவாசகர்களைப் போல நவீன இலக்கியத்தில் நுழைந்து நவீன இலக்கியம் வழியாக செல்பவரல்ல.அவரது முதல் ஈடுபாடு மரபிலக்கியமே. முறைப்படி தமிழ் கற்றவர். சைவ இலக்கியங்களில் விரிவான பயிற்சி உடையவர். யாப்பை சரளமாக கையாளத்தெரிந்தவர். நவீன இலக்கியச்சூழலில் மரபிலக்கியம் பேசப்படாமைகண்டு ஒருவகை வீம்புடன் ‘மரபின்மைந்தன்’ என்று பெயர்சூட்டிக்கொண்டார்.

ஆனால் மரபறிஞர்களைப்போலன்றி நவீன இலக்கியத்திலும் முத்தையாவுக்கு தீவிரமான ஈடுபாடுண்டு. தமிழில் வெளிவரும் முக்கியமான நூல்களை வெளிவந்த முதல் மாதத்திலேயே வாசிக்கும் எட்டுபேரில் ஒருவர் அவர் என்று ‘தமிழினி’ வசந்தகுமார் சொன்னார். என்னுடைய காடு, கொற்றவை நாவல்கள் வெளிவந்த ஒருவாரத்திலேயே முத்தையா வாசித்துவிட்டு விரிவாக கருத்துச் சொன்னார்.

அந்த மூன்றுநாட்களில் நான் முத்தையாவிடம் ரசித்தது கேட்டபோதெல்லாம் தங்குதடையில்லாமல் அவர் சொன்ன செய்யுட்கள். என்னதான் வாசித்து ரசித்தாலும் மரபுத்தமிழை முழுதும் சுவைக்க அதைச் சொல்லிக் கேட்கவேண்டும். சொற்களின் இணைப்பில் தமிழ் அடைந்துள்ள இசைநுண்மையை அப்போதுதான் உணர முடியும்.

அதன்பின்னர் 2005ல் முத்தையாவை நான் சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். அந்த அபாரமான முன்வழுக்கை கற்பனையை தூண்டியது. அப்போது ‘கஸ்தூரிமான்’ படத்துக்காக நடிகர்தேடல் நடந்துகொண்டிருந்தது. பாதிரியார் வேடத்துக்கு அவர் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. லோகிக்கும் பிடித்துவிட்டது. மீசையை எடுத்து, பக்கவாட்டில் நரை தடவி, முத்தையா பாதிரியார் ஆனார். அவரது வாழ்க்கையில் சங்கடம் மிக்க, இனிமை மிக்க ஒரு தருணம் அந்தப்படத்தில் நடித்தது.

மீரா ஜாஸ்மின் முத்தையாவுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தார். மீராவே ஆனாலும் ஒன்றும் நிகழாது என்பது உறுதியாயிற்று. முத்தையா பேச்சாளர் மாதிரியே நடித்தார். லோகி முத்தையாவை நடனமாட வைத்திருந்தார். நடனமும் பேச்சாளர் ஆடும் நடனம் மாதிரியோதான் இருந்தது. இந்தக்காலத்தில் என்றால் லோகி ஜீவ வதை செய்தார் என்று படத்துக்கு சென்ஸார் அனுமதி மறுத்திருப்பார்கள். 

அதன் பின் எப்போதும் எங்களுக்குள் ஒரு குறிஞ்செய்திப்பரிமாற்றம் ஓடிக்கொண்டிருக்கும். என் பிறநண்பர்களான சுகா போன்றவர்களுடனும் முத்தையாவுக்கு நெருக்கமுண்டு. சுகாவுக்கு பெண்பார்த்ததே இவர்தான் என்று ஒரு வதந்தி உலவுகிறது. சுகா அதற்காக இவரை விரும்பினாலும் திருமதி சுகா மன்னிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

முத்தையா என்னை திடீரென்று தொலைபேசியில் கூப்பிட்டு ”ஒருவாரம் மலேசியா போலாம். வரீங்களா?” என்றார். ”எதுக்கு?” என்றேன். ”சும்மாதான்” என்றார். ”சும்மாவா போவாங்க…” என்று குழம்பினேன்.ஒருவேளை குருவியாக ஆள் தேவைப்படுகிறதா என்ன? என் பையில் பேனா இருப்பதே என் முகத்தில் தெளிவாக தெரியுமே. ”சரி அப்டீன்னா பத்துமலை தைப்பூசத்துக்குப் போறோம்னு வைச்சுங்கங்க… நாஞ்சில்நாடன் கூட வர்ரார்” எனக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. கூட இருக்கும் ஒவ்வொரு தருணமும் முக்கியம் என நான் நினைக்கும் சிலரில் ஒருவர் நாஞ்சில். ”சரி கண்டிப்பா” என்றேன். எந்தப்பயணமும் நன்றே என்பதே என்னுடைய எண்ணம்.

தொடர்ச்சியான வெளிநாட்டுப்பயணங்கள் இந்த இரு வருடங்களில். ஆகவே வெளிநாட்டுப்பயணத்திற்குரிய பதற்றங்கள் இருக்கவில்லை. [சி சு செல்லப்பா ஒரு நண்பர் வீட்டில் சாப்பிட்டபின் அளிக்கப்பட்ட பச்சைப்பழத்தை கையில் வைத்துக்கொண்டு சொன்னாராம், ‘ஹ¥ம்,மலைப்பழம் தின்ன வாய்க்கு இதெல்லாம் என்ன?’ என்று] ஆனால் அது நானே நினைத்துக்கொண்டது.  அடுத்த நாள் முதல் மலேசியப்பயணம் பற்றி நினைக்கும்போதெல்லாம் ஜிலீர் என்றது.

 

நாஞ்சில்நாடனுக்கு முதல்பயணம். ஏகப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவர் ஒண்டிப்புதூர் போவதற்கே வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்பவர். முழுக்க முழுக்க தொலைந்துபோவதை மட்டுமே மனதில்கொண்டு செய்யப்படும் ஏற்பாடுகள் அவை. ஜனவரி 26 அன்று மாலை ரயிலில் கிளம்பினேன். ரயிலில் இடம் கிடைக்கவில்லை என்பதனால் கெபிஎன் பஸ்ஸில் சென்னை. நீங்கள் நினைப்பது சரிதான், சிம்பு படமேதான். ஆமாம், மன்மதன். நல்லவேளை, காளை போடவில்லை என்று மன ஆறுதல் அடைந்தேன்.

அதிகாலையில் சென்னை. நண்பர் தனசேகரன் கார் அனுப்பி என்னை ‘தூக்கி – போட’ சொல்லியிருந்தார். ஆனால் பேஎருந்தில் இருந்து என்னை நடுத்தெருவில் இறக்கி விட்டிருந்ததனால்  என்னை கண்டுபிடிக்க ஓட்டுநர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் இருவரும் நூறடி தூரத்திற்குள்தான் நின்றிருந்தோம். எங்கள் நடுவே இருபது பெரும்பேருந்துகள் பின்பக்கம் முன்பக்கம் முட்டி நின்றன.

காலைவேளையில் சென்னை பனியால் மூடியிருப்பதைக் காண அழகாக இருந்தது. வாகனப்புகை இல்லையே என்று சந்தேகமும் வந்தது. பொதுவாக நான் சென்னையை நம்புவதில்லை. சென்னை செண்டிரல் ரயில்நிலையம் அருகே செண்டிரல்டவர்ஸ் விடுதிஅறையில் தங்கினேன். நாஞ்சில்நாடன், முத்தையா மற்றும் பேச்சாளர்,இதழாளர் கனகலட்சுமி ஆகியோர் கோவையில் இருந்து காலையில் கிளம்பி ரயிலில் வருவதாகச் சொன்னார்கள்.

நான் குளித்துக்கொண்டிருக்கும்போதே ரவி சுப்ரமணியம் வந்தார். [ஜெயகாந்தன் ஆவணப்படம் எடுத்தவர். கும்பகோணத்துக்காரர். இசைநிபுணர். அனைத்தையும்விட மேலாக அருண்மொழிக்கு தூரத்துச் சொந்தம்] அவருடைய படத்துக்கான கதையைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது கெ.பி.வினோத் வந்தார்.

மதியம் நான் கொஞ்சநேரம் தூங்கிக்கொண்டிருந்தபோது நாஞ்சில்நாடன் வந்தார். அப்போது அறைக்குள் நண்பர் தனசேகரன் இருந்தார். என்னுடைய நண்பர் என்று அறிமுகமானபோது நாஞ்சில் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் கண்விழித்தபோது மலேசியாவில் பாஸ்போர்ட் தொலைந்து போனால் என்னென்ன செய்வது என்று கேட்டுக்கொண்டிருந்தார் நாஞ்சில். ‘வீட்டுவேலைக்கு நிப்பாட்டி தரைய தொடைக்கச் சொல்லுவானுகளா?’ என்றார். பொதுவாக இக்கட்டுகளில் எங்கே எப்படிச் சென்று சரணடைவதென்று விரிவாக கேட்டுக்கொண்டிருந்தார். ‘நான் வெளிநாடே போனதில்லை சார்’ என்றார் தனசேகர். ‘அதுக்கென்ன சும்மா சொல்லுங்க’

நேரம்செல்லச் செல்ல நாஞ்சிலின் பதற்றம் அதிகரித்தது. ‘ஏர்போர்ட்டிலே என்ன கேப்பானுக?’ என்று நாற்பத்தெட்டாமுறையாகக் கேட்டார். ‘ஒண்ணுமே கேக்க மாட்டாங்க’ என்றேன். ‘ஒண்ணுமே கேக்கல்லன்னா கஷ்டமா இருக்குமே’ என்றார் நாஞ்சில். ‘சும்மா, எதுக்கு போறேன்னு ஏதாவது கேப்பாங்க’ என்றேன். உச்சகட்ட பீதியுடன் ‘எதுக்கு போறேன்னா கேப்பானுக?’ என்றார். நான் புன்னகைசெய்தேன். நான் முதல்முறையாக கனடாசென்றபோது பாஸ்போர்ட்டில் இருப்பது நான்தானா என எனக்கே சந்தேகம் வலுத்து விமானநிலையம் செல்லும்போது நான் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமாக ஆவதற்கான உக்கிரமான முயற்சியில் இருந்தேன்.

கல்கி இதழின் செய்தியாளர் சந்திரமௌலி வந்தார். வழக்கறிஞரும் பேச்சாளருமான த.ராமலிங்கம் வந்தார். சந்திரமௌலி டூத்பேஸ் விளம்பரங்களில் வரும் சந்தோஷமான குடும்பத்தலைவர் போல இருந்தார். த.ராமலிங்கம் தேவதேவனுக்கு தம்பிமாதிரி. அறிமுகங்கள், புன்னகைகள்.கனகலட்சுமி குள்ளமான, கருப்பான, அழகான சின்னப்பெண். நமதுநம்பிக்கை இதழாசிரியர். பட்டிமன்றப் பேச்சாளர்.

விமானநிலையத்தில் நான் அரைத்தூக்கத்தில் நடமாடினேன். நாஞ்சிலும் முத்தையாவும் பிறரும் சென்று இரவுணவை முடித்திருந்தார்கள். நான் இரவுக்குப் பழ உணவுக்குச் சென்றேன். செண்டிரல் முன் பழங்களே இல்லை. ஆகவே சாப்பிடவில்லை. விமானநிலையத்தில் நியூயார்க் விலையில் ஒரு காபி சாப்பிட்டோம். ஒரு வெஜிடபிள் சான்விச்சுடன். சான்விச்சுக்கான சாஸை நான் காபியில் பிழிந்துகொண்டேன். சீனி சிவப்பாக இருப்பதை கொஞ்ச நேரம் கழித்து கவனித்து பீதியுடன் நிறுத்திக்கொண்டேன்.

முத்தையா ‘அடடா” என்றார். கனகா ”நான் அப்பவே கவனிச்சேன்” என்றார். ”சொல்ல வேண்டியதுதானே?” ”இல்ல, இதுக்கு முன்னாடி ரைட்டர்ஸை எல்லாம் பாத்தது இல்லதானே… அதான் அவங்கள்லாம் இப்டியெல்லாம் சாப்பிடுவாங்க போலன்னு நெனைச்சுகிட்டேன்” என்னுடைய விமரிசனங்களின் காரத்துக்கு சாஸ் காரணம் என்று நினைத்துக்கொண்டாராம்.

விமானநிலையச் சோதனைகள் வழக்கம்போல. நாஞ்சில் அடிக்கடி கைக்குட்டையால் முகத்தை துடைத்தார். வரிசையில் நின்றபோது என்னிடம் திரும்பி ”என்ன கேப்பானுவோ?” என்றார். ”ஒண்ணுமே கேக்க மாட்டானுக” என்றேன். ”அப்டியா? ஏதாவது கேட்டா?” என்றார் ”சும்மா பேர கேப்பாங்க” ”பேரைக் கேப்பானுகளா?” என்றார் பேயறைந்தது மாதிரி.

துரதிருஷ்டவசமாக நாஞ்சிலிடம் எதையுமே கேட்கவில்லை. அவர் முகத்தைப் பார்த்ததுமே சேல்ஸ் ஆபீசர் என்று முடிவுகட்டியிருப்பார்போல. அவரை சோதனையும் போடவில்லை. ”இப்டீன்னு தெரிஞ்சா கால்கிலோ கஞ்சாகூட கொண்டாந்திருக்கலாம்போல” என்றார் ஆசுவாசமாகச் சிரித்தபடி. உள்ளே செல்லும்போது அங்கிருந்த மாபெரும் குத்துவிளக்குகளைப் பார்த்து ”இப்ப இதை ஒருத்தன் எடுத்துக்கிட்டு உள்ள போயி இதவச்சு பைலட்ட அடிச்சுப்போட்டுட்டு விமானத்தைக் கடத்தினான்னா என்ன செய்ய?” என்றார். பூலிங்கத்தின் [எட்டுத்திக்கும் மதயானை] குணச்சித்திரம் பற்றி நான் எழுதும்போது அவனிடம் உள்ளுறைந்து ஒரு குற்றவிருப்பு இருப்பதைப்பற்றி எழுதியதை நினைத்துக்கொண்டேன்.

விமானம் மேலெழுந்தது. மிதக்க ஆரம்பித்ததும் நாஞ்சில் ”இனிமே ஒண்ணும் நம்ம கையிலே இல்லை” என்றார் , அதுவரை அவரே அவரைக் கவனித்துக்கொண்ட பொறுப்பிலிருந்து விடுபட்ட ஆசுவாசத்துடன்.  கடவுளை நம்புவதற்கு ஒரு வலுவான காரணம் கிடைத்துவிட்டது. கோவைக்கும் அகமதாபாத்துக்கும் டவுன்பஸ் மாதிரி விமானப்பயணம் செய்பவர். ஆனால் முதல்பயணத்திற்குரிய ‘வெப்புராள’த்துடன் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக நிதானமடைந்து பெருமூச்சு விட்டு பயணத்தகவல்களைப் பார்க்க ஆரம்பித்தார்.

அப்படி விடக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. அவர் நிதானமாக இருந்தால் நான் நிதானமாக இருப்பதன் மாற்று குறைவதுபோல ஓர் எண்ணம். ”இல்ல நாஞ்சில், ஒண்ணு யோசிச்சா ஆச்சரியம்தான் இல்லை? கடவுளை நம்ப மாட்டேங்கோம். அரசாங்கத்த நம்ப மாட்டேங்கோம். ஏன் பெத்த புள்ளைய நம்பமாட்டேங்கோம். வெறும் ஒரு மிஷினை நம்பி இந்த உசரத்திலே வந்தாச்சு…அதிலே ஒரு ஸ்க்ரூ தப்பா போனா என்ன ஆகும்?” சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன். நாஞ்சில் முப்பது வருடங்களை நெசவு எந்திரங்களுடன் செலவிட்டவர். எந்திரம் என்றால் அது மக்கர்செய்யும் என்ற கொள்கை கொண்டவர்.

கண்விழித்தபோது ஒரு செக்கச்சிவந்த பையன் என்னருகே தள்ளுவண்டியை நிறுத்தி பானம் வினியோகித்துக்கொண்டிருந்தான். இதற்கெல்லாம் பெண்கள்தான் சூட்டிகை. பையன் படு நிதானம். நாஞ்சிலின் முகத்தளவு உயரத்தில் தளுக்கான ஆப்ரிக்காக்கார பெண் மாதிரி கருமையாக ஒர் உயர்தர விஸ்கிப்புட்டி. நீளக்க்கழுத்து. ”நல்ல ஸ்டேண்டேர்ட் ஐட்டம்” என்றார் நாஞ்சில் திருப்தியுடன். ”பழைய நாஞ்சில்நாடன்னா ஒரு லார்ஜ் சொல்லியிருக்கலாம்”

ஆனால் விஸ்கி நகரவில்லை. ”எதுக்கு இங்கிண கொண்டாந்து நிப்பாட்டியிருக்கான்” என்றார் நாஞ்சில். மூன்றாமிருக்கையில் இருந்த மலாய்க்குடிமகன் என்னிடம் ”வாங்கி குடியுங்கள். நல்ல தூக்கம் வரும்” என்றார். ”குடிப்பதில்லை” என்றேன். அடப்பாவமே என்பது போல பார்த்தார். நாஞ்சிலிடம் ”நீங்கள் குடியுங்கள்” என்றார். என்னிடம் ”நல்ல தூக்கம் வரும்” என்றார். நாஞ்சில் ”ரொம்ப சொல்லுதானே” என்றபின் ”பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்னுல்லா குறள்” என்றபடி பையனிடம் ”ஒரு லார்ஜ்” என்றார். அவன் தண்ணீர் என்றபோது ”நோ ஆன் த ராக்ஸ்” என்றார்.

எங்களூரில் சுவர்முட்டி என்பார்கள். குடித்தால் ஏதேனும் சுவரில் முட்டித்தான் பயணம் நிற்க முடியும். இது பாறைமுட்டி என்று எண்ணிக்கொண்டேன். பனிக்கட்டிகளைத்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்றார் நாஞ்சில். உறிஞ்சியபின் ”நயம் சரக்கு” என்றார். மலாய்பயணி இரண்டாவது கோப்பையை வாங்கிக்கொண்டு கண்களைச் சிமிட்டி ”’நல்ல தூக்கம் வரும்” என்றார்.

நான் தூங்கிவிட்டேன். கொலாலம்பூருக்கு மேலே விமானம் வட்டமிட்டபோது நாஞ்சில் என்னை எழுப்பினார். வெளியே ஆழந்த்தில் ஒளிரும் செம்மணிவிரிப்பு. மலாய்பயணி உற்சாகமாக ”மலேசியா…மை கண்ட்ரி” என்றார். நாஞ்சிலிடம் ”தூங்கினீங்களா?” என்றேன். ”எங்க தூங்க? இந்தாள் வேற முழிச்சிருந்து கடமையா குடிச்சிட்டே இருக்கானே” ”அப்ப இவன் தூங்கலியா?” ”தூக்கமா… தூங்கினா அப்றம் எப்டி குடிக்கிறது?” அவர் நல்ல தூக்கம் வரும் என்று சொன்னது வீட்டுக்குப் போனபின் என்று புரிந்துகொண்டேன்.

கொலாலம்பூரில் விமானம் இறங்கியது. நான் மலேசியாவுக்கு வருவது அது இரண்டாவது முறை. முதல் முறை சிங்கப்பூர் வந்து அங்கிருந்து பேருந்து வழியாக கொலாலம்பூர் வந்தேன். அருண்மொழியும் துணையிருந்தாள். நம் கணக்குக்கு அதிகாலை, அங்கே ஆறுமணி. விமானநிலையத்துக்கு மனோவும் சிவாவும் வந்திருந்தார்கள். எங்களை அழைத்திருந்த அமைச்சர் டத்தோ சரவணனின் ஊழியர்கள். முத்தையாவுக்கு நண்பர்கள்.

மலாய்பயணி நாஞ்சில்நாடனிடம் மேலும் உற்சாகமாக ”வெல்கம் டு மலேசியா…” என்று சொல்லி ஆரத்தழுவி கைகுலுக்கினார். ”என்ன ஒரு பாசத்தோட இருக்கான் ஊர்மேலே” என்றார் நாஞ்சில். ”போய் இறங்கறப்ப ஒருமணிநேரம் வரை நமக்கும் இந்தியா ரொம்ப பிடிச்சிருக்கும்.” என்றேன்

விமானநிலையத்தில் இருந்து கொலாலம்பூர் நோக்கிக் கிளம்பினோம்

[மேலும்]

முந்தைய கட்டுரைஈராறுகால் கொண்டெழும் புரவி – 6
அடுத்த கட்டுரைபசும்பொன் – கடிதம்